periyarist chinnasamyகு. வரதராசன்            :               அய்யா வணக்கம்!

மே.ரா. சின்னசாமி                :               வணக்கம். வாங்க...

கு.வ.  :               அய்யா தங்கள் வயது என்ன?

மே.ரா. சி.       :               என் வயது 91 ஆகும். நான் 31-10-1924-இல் பிறந்தேன்.

கு.வ.  :               தாங்கள் எந்த ஆண்டிலிருந்து தந்தை பெரி யார் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டீர்கள்?

மே.ரா. சி.       :               சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கத்தில் ஈடுபட்டேன்.

கு.வ.  :               தங்களுக்குப் பெரம்பலூர் வட்டத்தில் பெரியார் இயக்கக் கொள்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் யார்?

மே.ரா. சி.       :               குன்னம் ந. கணபதி ஆசிரியர், இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட திராவிடர் கழக மாநாடு குன்னத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொண்டேன். தந்தை பெரியார், திருச்சி வே. ஆனைமுத்து மற்றும் பலர் கலந்துகொண்ட பெரிய மாநாடாகும். இம்மாநாட்டிலிருந்து குன்னம் ந. கணபதி ஆசிரியரும் நானும் நண்பர்களானோம்.

கு.வ.  :               சாதி ஒழிப்புப் போராட்டம் - சட்ட எரிப்பில் கலந்துகொண்டீர்களா?

மே.ரா. சி.       :               நான் கலந்துகொள்ளவில்லை. ஆயினும் என்னை முன்கூட்டியே கைது செய்துவிட்டார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்ட எரிப்பில் என் தம்பி மே.ரா. வெங்கடாசலம், கிருஷ்ணசாமி, அரும்பாவூர் ஏ.எஸ். முத்துசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். ஒன்றரையாண்டு கடுங்காவல். என்னை முன்கூட்டியே கைது செய்தனர். ஆயினும் அன்றே என்னை விடுவித்தனர்.

கு.வ.  :               அரும்பாவூர் மேட்டூருக்கு எந்த ஆண்டில் தந்தை பெரியாரை அழைத்து திராவிடர் கழகக் கூட்டம் நடத்தினீர்கள்?

மே.ரா. சி.       :               திருச்சி தோழர் ஃபிரான்ஸிஸ் அவர்களை அணுகி தந்தை பெரியார் அவர்களிடம் தேதி பெற்று 06-09-1962-இல் கூட்டம் நடத்தினோம். இக்கூட்டம் பெரம்பலூர் வட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றக் கூட்டமாகும். அரும்பாவூர் பாலக்கரையிலிருந்து அ. மேட்டுர் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவு சாலையின் இரு மருங்கிலும் ஒரு வாழை மரம் ஒரு பாக்கு மரம் என நட்டு மாவிலை தென்னைக்குருத்து ஓலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட வழியாக தந்தை பெரியாரை அழைத்து வந்தோம்.

                                ஈ.வெ.ரா. மணியம்மையார், தோழர் வே. ஆனைமுத்து, அரும்பாவூர் கி. அரிராமசாமி, அந்தூர் கி. ராமசாமி, இலந்தங்குழி தங்கவேலு ஆகிய கழக முன்னணியினர் கலந்துகொண்டனர். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து சிறை சென்று மீண்டவர்களைப் பாராட்டி அய்யா பேசினார்கள். கூட்டம் முடிந்ததும் தோழர்களும் மணியம்மையாரும் எங்கள் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டனர். அய்யாவுக்கு இட்லி, சட்னி, சாம்பார் கேரியரில் அனுப்பி வைத்தோம்.

கு.வ.  :               குன்னம் ந. கணபதி ஆசிரியர் பற்றி கூறுங்கள்.

மே.ரா. சி.       :               குன்னம் ந. கணபதி ஆசிரியர் வீரனந்த சோழபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தோழர் ஆனைமுத்துவின் ஆசிரியர் என்பதால் இவர்மீது எனக்குப் பாசம் அதிகம். குன்னத்தில் சிறப்பாக தி.க. மாநாடு இவர் நடத்தியதால் இவரை தந்தை பெரியார் அவர்கள் “வாங்க குன்னம்” என்றே அழைப்பார். அந்த காலத்தில் குன்னம் என்றால் கணபதி ஆசிரியர்தான் நினைவுக்கு வருவார்.

கு.வ.  :               கர்மவீரர் காமராசர் முதல் அமைச்சராக இருந்த காலத்தைப் பற்றிக் கூறுங்கள்.

மே.ரா. சி.       :               காமராசரின் காலம் பொற்காலம். கல்வி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம். ஏழை, எளிய மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. கல்வியில் மறுமலர்ச்சி காமராசர், பெரியாரால் ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றம், தீண்டாமையொழிப்பு, பெண்கல்வி, பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு, கருத்தடை ஆகியவை தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையாகும். தந்தை பெரியாரும், தவத்திரு. குன்றக்குடி அடிகளாரும் காலம் தவறாதவர்கள்.

கு.வ.  :               பெரம்பலூர் வட்டத்தில் தாங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அரசியல்வாதி யாரேனும் உண்டா?

மே.ரா. சி.       :               இலாடபுரம் தியாகி. மு. குருசாமி நாயுடு. இவர் எளிமையானவர். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர். 102 வயதில் இயற்கையடைந்தார். எங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், எனக்கு இவரிடம் மிகுந்த மரியாதை உண்டு. இதைப்போன்றே தோழர் வே. ஆனைமுத்து அவர்களிடமும் எனக்குப் பற்று அதிகம். அய்யாவின் மறைவிற்குப்பின் அய்யாவின் கொள்கையைப் பரப்புரை செய்பவர், பிற்பட்டோர் உரிய சலுகை பெற மண்டல் குழு அமையக் காரணமானவர். யானும் இவரும் ஒரே வயதினர் என்றாலும் இவரைப்போல் என்னால் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியாது; என்றாலும் இவரின் சேவையைப் பாராட்டக் கடமைப்பட்டவன், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற 3 பாகம் கொண்ட நூல்களைப் பதிப்பித்தார். பின்னர் இதனையே திருத்தம் செய்து மேலும் பல ஆவணங்களைச் சேர்த்து 20 நூல்களாகப் பதிப்பித்தார். இது பெரிய சாதனையாகும்.

கு.வ.  :               தாங்கள் சமுதாய இயக்கமான திராவிடர் கழக ஈடுபாட்டிற்குப்பின் அரசியலில் ஈடுபட்டீர்களா?

மே.ரா. சி.       :               ஆம். காட்டுரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் கலந்துகொண்டேன். தீவிர காங்கிரசு பக்தனா னேன். என்றாலும், காமராசர் காலத்திற்குப்பின் அவ்வளவு ஈடுபாடில்லை. கக்கன் எளிமையா னவர். இவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பராக இவரும் நானும் நெருங்கிப் பழகியுள்ளோம். இவரையொத்தவர் யாரும் இல்லை. காமராசர், அண்ணாவிற்குப் பின்னர் அரசியல் நிகழ்வுகள் முற்றிலும் சரியில்லை. சமுதாயம் மதுவினால் சீரழிந்து வருகிறது. மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். அய்யா உயிருடன் இருந்தால் பெண்கள் கல்வி குறித்து மகிழ்ச்சியடைவார்.

கு.வ.  :               தங்கள் தற்போதைய வாழ்க்கை குறித்துக் குறிப்பிடுங்கள்.

மே.ரா. சி.       :               யான் நிறைவான வாழ்க்கை வாழ்கின்றேன். என் துணைவியார் இல்லாத குறையைப் போக்கி என் மக்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். என் முயற்சியாலும் ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் ஒரு திருமண மண்டபம் அ.மேட்டுரில் கட்டப்பட்டு நன்றாக இயங்குகின்றது. எங்கள் குடும்பத்தார் ஒரு தொகையை இருப்பு செய்து இதில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்கிறோம். தமிழில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கும் பரிசு வழங்குகிறோம்.

கு.வ.  :               தாங்கள் இறுதியாகக் குறிப்பிடும் செய்தி யாது.

மே.ரா. சி.       :               மக்களிடம் பொது ஒழுக்கம் சிதைந்துவிட்டது,. மதமும் அரசியலும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். தற்காலத்திய மாணவர்கள் அய்யாவின் சமுதாயத் தொண்டை அறிந்துகொள்ளும் வகையில் பாடத் திட்டத்தில் - அய்யாவின் சமுதாயப் போராட்டங்கள் பற்றிய செய்தி இடம்பெறவேண்டும். தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூல்கள் பதிப்பித்தமை பாராட்டுக்கு உரியது. என் அன்பான வேண்டுகோள். பெரியார் கண்ட பேரறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் - “தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை” - முழுமையாக எழுதி வெளியிட வேண்டும். இதற்கான முழுத் தகுதியும் படைத்தவர் இவரே. என் ஆசை நிறைவேறத் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ஈடுபடவேண்டும் என “சிந்தனையாளன் 2015” பொங்கல் மலர் நேர்காணல் வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Pin It