மென்மையாக உரசிச் சென்றது காற்று. கன்னக் கதுப்புகளில் பட்டுச் சென்றது காற்றா பட்டுத் துணியா என்று கேட்டால் முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போவான் அவன். அப்படியொரு மென்மை, தலைமுடிகளுக்குள் அந்த தென்றல் புகுந்து விளையாடும் பொழுது அவனுக்குத் தோன்றியது இதுதான். அது நிச்சயமாக தேவதையின் கைகளாகத்தான் இருக்க வேண்டும். அது மட்டும் அருவமாக இல்லாவிட்டால். அதனுடன் கைகோர்த்துக் கொண்டு விளையாடுவான். என்னவொரு இனிமையான மணம் அது. எங்கிருந்து வீசுகிறது அது. உலகின் அத்தனை மலர்களையும் சேர்த்து வைத்து, தேர்ந்த அறிஞனால் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியம் கூட இந்த இனிமையான வாசனைக்கு முன் இரண்டடி தள்ளிதான் நிற்க வேண்டும். அவனது சுவாசம் பெற்ற பேற்றுக்கு ஈடிணையேயில்லை. அவன் ஏதோ ஒரு நதிக்கரையோரமாக படுத்திருப்பதை உணர முடிந்தது. தண்ணீரின் சலசலப்பு இனிமையான சங்கீதத்தை பிறப்பித்துக் கொண்டிருந்தது. அதனுள் தனது ஒற்றைக்கையை ஏதேச்சையாக மூழ்க விட்டான். என்ன ஆச்சரியம், அந்த தண்ணீர் ஒரு உருவற்ற ஊடகமாக அவன் கையை உள்வாங்கியது. அது மின்னியது.

Chennai அந்த கடினமான கேள்வி அவன் உள்ளத்தில் திடீரென உருவெடுத்தது. இந்த ஆற்றில் உருண்டோடுவது தண்ணீரா? இல்லை உருக்கி ஊற்றப்பட்ட வெள்ளிக் குழம்பா? ஆனால் இதைப்பற்றி யோசிப்பதற்கெல்லாம் இப்பொழுது நேரமில்லை. அவள் வரும் நேரமாகிவிட்டது. அவன் பொறுப்பற்று இவ்வாறு விளையாடுவதை மட்டும் அவள் கண்டு விட்டால் செல்லமாக கோபித்துக் கொள்வாள். அந்த செல்ல முறுவலை காண இரண்டு கண்களை மட்டும் கொடுத்த அந்த கடவுளை சபித்தால் தான் என்ன? எனத் தோன்றுவது அவனுக்கு இயல்புதான்.

அவள் அந்த வெள்ளை நிற ஆடையில்தான் எவ்வளவு அழகாக இருப்பாள். அவள் வருவதைப் பார்க்கும் பொழுது நடந்து வருகிறாளா அல்லது மிதந்து வருகிறாளா என்று கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தால், மீண்டும் குழப்பம் தான் மிஞ்சுகிறது. ஆனால் நிச்சயமாக அவளுக்கு கால்கள் உண்டு. அதில் அவள் 2 தங்கக் காலணிகள் அணிந்திருப்பதை அவன் பலமுறை பார்த்திருக்கிறானே? அவளது இடையை பார்க்கும் பொழுது............ ஓ கடவுளே! அதைச்செய்த உன் கைகளுக்கு தங்க காப்புதான் வாங்கிப் போட வேண்டும் என சங்கேத மொழியில் தனக்குள் கூறிக்கொள்வான். அதென்ன அன்ன நடை, ஏ, அன்னங்களே தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். இனி அவள் நடைதான் உங்களுக்கு முன்னுதாரணம் என நதிக்கரையோரத்தில் முகாமிட்டிருந்த அன்னங்களைப் பார்த்து அவன் கூறியபொழுது, அந்த அன்னங்கள் தங்களது முகத்தை வெடுக்கொன திருப்பிக் கொண்டன பொறாமை மிகுதியால்.

அவள் சிரித்தாள். உலகில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் விடிவு காலம் பிறந்தவிட்ட நாள் அன்றுதான். ஆம், அவள் சிரிப்பில் இருந்து உதிர்ந்தது அத்தனையும் தங்கக் காசுகள், ஏழைகளின் கைகள் தான் எவ்வளவு சிறியது. அதை அவர்களால் அல்ல முடியவில்லை. அவர்களுக்குத் தேவை பைகள். அந்த தங்க காசுகளில் மூழ்கி அவர்களுக்கு மூச்சு முட்டியது. புத்தர் அவர்கள் முன் தோன்றி கூறிக் கொண்டிருந்தார்
‘அதிகமாக ஆசைப்படாதீர்கள் ஆளுக்கு ஒரு கை அள்ளிக் கொள்ளுங்கள் போதும்”

யார்தான் கேட்டார்கள்.

அவள் தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில் தவழ்ந்து வந்து. அவனது கைகளை பற்றினாள். அவன் உடல் முழுவதும் ரத்தமானது இரு மடங்கு வேகத்துடன் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. அவளது கைகளை எடுத்து கன்னங்களில் வைத்துக் கொண்டான். திடீரென கண்கள் சொருகி சொர்க்கத்தின் வாசல் அவன் கண்களுக்கு தெரிந்தது. இருவரும் அதன் வழியாகச் சென்றார்கள். அவளுடன் பயணம் செய்ததால் தூரம், நேரம் இரண்டும் தெரியவில்லை. சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையோரமாக ஐன்ஸ்டீன் (ஆம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தான்) ஒரு குறிப்பு அட்டையை கையில் பிடித்தபடி நின்றிருந்தார். அதில் சார்பு விதி எழுதப்பட்டிருந்தது. அவன் கவனம் திசை திரும்புவதை கவனித்த அவள், இரண்டு விரல்களால் அவனது கன்னங்களை லேசாகக் கிள்ளினாள். அவ்வளவுதான், அவனது கண்களுக்கு இப்பொழுது சொர்க்கவாசலானது இன்னும் முரட்டுத் தெளிவுடன் தெரிய ஆரம்பித்தது. இதோ அவனது மாளிகை வந்துவிட்டது. இதென்ன கண்ணாடி மாளிகையா என்று அவன் கேட்ட பொழுது அவள் கூறினாள், அது வைரம் என்று. ஆச்சரியத்தில் அகல அகல விரிப்பதால் கண்கள் தன் அளவை பெரிதாக்கிக் கொள்ளுமா என்ன? அவள் சிரித்துக்கொண்டே அவள் தலையில் செல்லமாகத் தட்டினாள். மண்டையில் பட்டது திடப்பொருளா, திரவப்பொருளா என்ற சிந்தனை வேறு இப்பொழுது வந்து தொலைய வேண்டுமா என்று அவன் சலித்துக் கொண்டான்.

மாளிகைக்குள் அவன் நுழையும் முன் இடது காலை எடுத்து வைக்கச் சென்றவன் சற்று தடுமாறி பதறியபடி வலது காலை எடுத்து வைத்தான். அதை பார்த்துவிட்ட அவள் குறும்பாகச் சிரித்தாள். இப்படியே இன்னும் இரண்டு முறை அவள் சிரிப்பாளேயானால் அவனது இறப்பு நிச்சயிக்கப்பட்டதாக மாறிவிடும் என்பதில் எள் அளவும் அவனுக்கு சந்தேகமில்லை.

அவன் அந்த மாளிகையை பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தொல்லைபடுத்தும் சிந்தனை அவனுக்குள் இந்த சூழ்நிலைக்கு சம்பந்தமேயில்லாத கேள்வியை கேட்டது. அது ஏன் ஆச்சரியப்படும் பொழுதெல்லாம் நாம் லோ ஆங்கிளில் இருந்தபடி அண்ணாந்து பார்த்தக் கொண்டிருக்கிறோம். ஏன் கீழே குனிந்து பார்த்தால் ஆச்சரியம் தோன்றாதா? அவன் வெடுக்கொன்று தரையை குனிந்து பார்த்தான். அந்த தரையில் அவள் முகம் பிரதிபலித்தது. என்ன ஆச்சரியம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு. அவன் பிரமிப்பிலேயே இருந்தான். பிரமிப்பு உணர்விலேயே எவ்வளவு நேரம் ஒரு மனிதன் தாக்குபிடிப்பான். அதன் விளைவுகள் ஒரு மனித உடலில் எப்படிப்பட்ட் மாற்றங்களை ஏற்படுத்தும் போன்ற விஞ்ஞான குறிப்புக்களை எல்லாம் எழுதி வைத்து அதற்கு பேடண்ட் உரிமை வாங்கிக் கொள்ளலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

திடீரென அவனது கன்னங்களில் ஓங்கி ஒரு அரை விழுந்தது. அவனது கன்னங்களை அறைந்தது அவனது இடது கைதான். ‘ராஸ்கல் ஒரு அழகான பெண்ணை காக்க வைத்துவிட்டு அப்படி என்ன சிந்தனை வேண்டி கிடக்கிறது’ என்று அவன் உள் மனம் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் கூனி குறுகி நின்றிருந்தான்.

அவள் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரிப்பைப் பார்த்த பொழுது, துணிக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் தான் ஞாபகத்திற்கு வந்தது. அவைகள் தங்களது புன்னகையை நிறுத்துவதேயில்லை. அவளும் அப்படிதான். அவள் அவனது கைகளை பிடித்து கொண்டு, அவனை இழுத்தபடி ஆவேசமாக ஓட ஆரம்பித்தாள். ஒட்டு மொத்த மாளிகையையும் அவன் ஓடிக்கொண்டே சுற்றிப் பார்த்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு தலை சுற்றியது. இருப்பினும் அதைக் கூறி அவள் மனதை அவன் புண்படுத்த விரும்பவில்லை.

வேகவேகமாக ஓடி, ஓடிபின் தொப்பொன்று ஒரு வெல்வெட் துணியால் நேர்த்தியாக தைக்கப்பட்ட, அழகிய பூ வேலைபாடுகளுடன் கூடிய இளவம் பஞ்சு பொதியில் விழுந்தான். நிதானித்துப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது அது அவளது படுக்கை அறை. அவனது உதடுகளுக்கிடையிலிருந்து வெளிப்பட்ட மெலிதான புன்னகையில் சிறிது காமம் தெரிந்தது. இருப்பினும் ஒரு இந்திய துணைவி, துணைவனுடன் கூடுவதற்கு முன் தனது காமத்தைப் பச்சையாக அறிவித்து விடாமல், தேக்கிக் கொண்டு, துணைவனுக்கு உணவளித்து திருப்தி செய்வாளே என்ற எண்ணம் லேசாக அவன் மனதில் உதித்தது. அதை எப்படி அவள் புரிந்து கொண்டாள்? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அவனை விட்டுவிலகி எங்கோ சென்றாள். பின் தன் கையில் ஒரு வெள்ளி கப்புடன் வந்தாள். அதில் வந்த வாசனை முகர்ந்து பார்த்தபின் நிச்சயித்துக் கொண்டான். அது நிச்சயமாக பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை அரைத்து கரைத்த பால் என்று. கடைசியாக அவன் பார்த்த தமிழ் படத்தில் சரோஜாதேவி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு இது போன்றதொரு பாலை கொடுத்ததாகத்தான் நியாபகம்.

பின் சௌகர்யமாக படுத்துக் கொண்டான் அந்த படுக்கையில். அந்த மாளிகை எந்த விதமான ஒளியால் நிரப்பப் பட்டிருக்கிறது என்பது புரியவில்லை. இவ்வளவு ரம்மியமான ஒளிக்கு சொந்தக்காரன் நிச்சயமாக நிலவாகத்தான் இருக்க வேண்டும். தனது நன்றியை நிலாவுக்கு சத்தம் போட்டுக் கூறினான்.

அவள் உள்ளறைக்குள்ளிருந்து, மெலிதான வெல்வெட் ஆடையால் போர்த்தப்பட்டு வெளிப்பட்டாள். அவளை பார்க்கும் பொழுது டைட்டானிக் படத்தில் வரும் நடிகை கேட் வின்ஸ்லெட்டை போல் இருந்தாள். திடீரென அந்த மாளிகை கடலில் மிதக்கும் கப்பலைப் போல் அப்படியும் இப்படியுமாக ஆட ஆரம்பித்தது. அவள் தனது வெல்வெட் ஆடையை நழுவவிட்டாள். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்த நிலையிலும், அவனது சூழ்நிலை சம்பந்தமற்ற சிந்தனையானது இப்படி ஒரு குறுஞ்சிரிப்பை அவனுக்குள் உதிர்த்தது. அது... நல்ல வேளை தான் படம் வரைந்து நேரத்தை வீணாக்கப் போவதில்லை என்பது தான். ஏனெனில் அவனது உள் மனதுக்கு நன்றாகத் தெரியும், தான் படம் வரைந்தால் பெண்ணானவள் பேயை போல் தெரிவாள் என்று.

அவள் அருகே வந்தாள். மேலும் அருகே, மேலும் மேலும் அருகே அவள் நாசித்துவாரத்திலிருந்து வெப்பமான மூச்சுக் காற்று வேகமாக வெளிவந்து கொண்டிருந்தது. அவன் அவளது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டான் குறுக்காக. அவள் திமிறினாள்.

லேசாக தனது ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தான்......... ஐயோ,....... அவளது பற்கள் ஏன் இவ்வளவு நீண்டு கோரமாக இருக்கின்றன. மேலும் அவள் உறுமிக் கொண்டு வேறு இருந்தாள். அவளுடைய காதுகள், அது ஒரு நாயின் காதுகளைப் போல நீண்டு இருந்தன. அவள் திடீரென திமிறியபடி குலைக்க ஆரம்பித்தாள். ஐயோ அது நாயே தான். அவன் படுக்கையிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தான்.

அவன் விழுந்த பகுதி கருப்பான, அடர்த்தியான, மேலும் குடலை வயிற்றுக்குள்ளிருந்து வெளிக் கொண்டு வந்துவிடும் அளவிற்கு நாற்றமெடுத்த ஒரு வகை திரவம், அதை தமிழ் மொழியாம் நமது தாய் மொழியில் சாக்கடை என்று கூறுவார்கள். நிச்சயித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், நிச்சயமாக அவன் கட்டாயப்படுத்தி கற்பழிக்க முயன்றது ஒரு நாயைத்தான். மேலும் ஒரு தகவல் அவன் விழுந்த பகுதி சென்னைப் பட்டனத்தின் புகழ் பரப்பும் கூவம் நதிக்கரையோரம் என்பது. பின் அந்த கடைசித் தகவல்......... ஆம் அவன் கனவு கலைந்தது.

பின் குறிப்புகள்

 அவன் பெயர் பிரபு, வயது 24

 சென்னை பட்டனம் அவனைக் காண்பது இதுவே முதல் முறை. அவன் கிண்டி ரயில் நிலையத்தின் அருகில் நின்று கொண்டு, குறைவான உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானங்களை ஒரு 5 மணிநேரம் ஆச்சரியம் அகலாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விமானங்களை இவ்வளவு அருகில் பார்ப்பது இதுவே முதல் முறை. அதனால் அவன் சென்னை மக்களால் ஆச்சரியமாக பார்க்கப்பட்டான்.


 அவன் விமானங்களைப் பார்த்த ஆச்சரியம் நீங்காமல் கீழே குனிந்து பாhத்தபொழுது, யாரோ ஒரு சகோதரன் அவனது பெட்டியை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. வெகுநேர மன வேதனைக்குப் பின் இப்படியொரு முடிவுக்கு வந்தான். அடுத்த முறை ஊரிலிருந்து 3000 ரூபாய் திருடிக் கொண்டு வந்தால் அதை சத்தியமாக பெட்டிக்குள் மட்டும் வைக்கக் கூடாது என்று.

 நல்லவேளை பேருந்து கட்டணம் போக மீதி பணத்தை சட்டை பாக்கெட்டில்தான் வைத்திருந்தான். அதில் 120 ரூபாயும் சிறிது சில்லரையும் தேறும்.

 அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பாடு கிடைக்கும் இடம் தேடி 7 உணவகங்கள் ஏறி இறங்கினான். கடைசியாக அந்த எட்டாவது கடையில், அ;ங்கு அவன் தின்ற தீனி இருக்கிறதே, முழுதாக 50 நிமிடங்கள். கடைக்காரன் அவனை அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டான்.

 உண்டு முடித்ததும் அவன் நினைவுக்கு வந்தது மெரீனா பீச்தான். கிண்டியில் தொடங்கியது பாதயாத்திரை. உயரமான கட்டடங்களையும், அரைகுறை உடையுடன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக குறுக்கும், நெடுக்குமாக செல்லும் அழகான பெண்களையும் பார்த்தபடி அடுத்த 3 மணி நேரத்தில் விசாரித்தபடி வந்தடைந்தான் மெரீனாவை. வெகுநேரம் கடலில் இறங்கி குளித்தபின் சந்தோஷமாக தனது உடைகளை மாட்டிக் கொண்டு, தலை சீவியபடி அந்த வழியாக சென்ற ஒருவரை நிறுத்திக் கேட்டான்.

‘என்ன இந்த பகுதியில் ஏதோ கெட்ட வாடை அடிக்கிறது”

‘அது வேற ஒண்ணுமில்ல தம்பி, பக்கத்துலதான் கூவம் நதி வந்து கலக்குது”

ஆனால் இந்த கேள்வி ஏன் ஒரு 2 மணி நேரத்துக்கு முன் தனக்கு தோன்றவில்லை. நொந்து கொண்டுதான் என்ன பிரயோஜனம்.

 தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் சீப்பை வைத்த பொழுதுதான் தெரிந்தது. மீதி இருந்த 54 ரூபாய் 75 பைசாவையும் யாரோ ஒரு அன்பு சகோதரன் எடுத்து சென்றுவிட்டிருப்பது. அந்த அன்பு சகோதரர் தான் எவ்வளவு நல்லவர். அவர் அந்த சட்டையை வைத்துவிட்டு சென்றுவிட்டாரே. நல்லவேலை கூச்ச சுபாவத்தில் போட்டிருந்த கால்சட்டையை கழற்றாமல் குளித்ததுதான் எவ்வளவு பாதுகாப்பான விஷயம்.

 நடிகை அசின் வீட்டை தேடி அலைந்ததில் இரவாகிவிட்டது. ஆம் அவன் அசினை உயிருக்குயிராக காதலித்துக்கொண்டிருந்தான். அந்த விஷயத்தில் அவனுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அசினுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.

 அசின் வீட்டுக்கு அட்ரஸ் கேட்டு 10, 15 பேரிடம் வாங்கிய திட்டுக்களுடன் மனம் சோர்ந்தவனாய் அவன் வந்து சேர்ந்த இடம் சரவணா ஸ்டோர். அங்கு நுழைவு வாயிலில் ஒரு அழகான புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை தடவி பார்த்து ரசித்தான். சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்கைளப் பற்றி கேட்ட பொழுது ஏன் யாரும் சரவணா ஸ்டோரை பற்றி சொல்லவில்லை என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். அங்கு அவ்வளவு அழகான பெண்கள் இருக்க அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் பொம்மையை வெகு நேரமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான். அந்த பொம்மை பார்ப்பதற்கு அசினைப் போலவே இருந்தது. கடையை மூடும் நேரம் வந்துவிட்டதால் அவன் வெளியேற்றப்பட்டான்.

 பொடிநடையாக கிண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது நம்பிக்கையெல்லாம். ஒரு லாரி ஓட்டுநரின் கருணை மிகுந்த உள்ளம் தான். இந்த காலத்தில் மந்திரிகளே காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். தனக்கென்ன, ஒரு வயதான லாரி ஓட்டுநரின் காலில் விழுந்துவிட வேண்டியது தான். தன்னை ஊரில் சென்று சேர்த்துவிடும் படி கதறிவிட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்தான்.

 நாள் முழுவதும் அலைந்ததில், உடல் முழுவதும் சோர்வடைந்து தூக்க கலக்கத்தில் அவன் கடைசியாக வந்து சேர்ந்த இடம், காசி தியேட்டரை அடுத்த மேம்பாலத்தின் அடிப்பகுதி. அதன் வழியாகத்தான் கூவம் நதி ஓடிக்கொண்டிருந்தது. இல்லை அதை பார்க்கும் பொழுது ஓடிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றவில்லை. நாற்றத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு சுமாரான இடத்தை தேர்ந்தெடுத்து தூங்க ஆரம்பித்தான். அருகில் ஒரு நாய் படுத்துக் கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த கவனிப்பு அவன் தூக்கத்தைக் கெடுப்பது போல் உணரவே அந்த பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டான்.

 கனவில் வந்த அந்த பெண் கூட அசினைப் போலவே தோற்றமளித்தாள். இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்த பொழுது, நடிகை கஜோலை போலத் தெரிந்தாள். அவன் 2 வருடங்களுக்கு முன் நடிகை கஜோலைத்தான் காதலித்துக் கொண்டிருந்தான். பின் அந்த மின்சாரக் கனவு படத்தை 10 தடவைக்கு மேல் ஒருவனால் பார்க்க முடியுமானால் அதற்கு காரணம் கஜோலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

கொடுமை என்னவெனில், மிகக் கொடூரமாக சண்டையிட்டு வந்த தன் தந்தையின் முன் போய் அசிங்கமாக தலையை தொங்க விட்டபடி நிற்க வேண்டும். அவர்தான் எவ்வளவு சந்தோஷப்படுவார். சென்னையில்தான் நாயுடன் படுத்திருந்ததையும், கூவத்தில் தவறி விழுந்ததையும் மட்டும் மறந்தும் கூறிவிடக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் அவன் தந்தைக்கென்ன தெரியாமாலா போய்விடும். பின் அவன் திருடிச் சென்ற பணத்திற்கு லீமெரிடியன் ஹோட்டலிலா தங்க முடியும்? ஆனால் அவன் உள்மனம் நிஜமான நேர்மையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. அவள்........ அந்த பெண் அசின்........ ஐயோ ‘என்னை புரிந்து கொள் அசின்......... யாரையும் அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு விடாதே’. நானும் எத்தனை முறைதான் சபிப்பது. சென்ற முறை நான் சபித்ததை மட்டும் அந்த பாவி அஜய்தேவ்கான் கேட்டிருந்தால் என்னை துரத்தி துரத்தி அல்லவா சுட்டுக் கொன்றிருப்பான்.


- சூர்யா
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It