(15-2-2013ஆம் நாள் வழங்கிய) பாராட்டுப் பாக்கள்

முகில்விடுத்த முழுமதியின் ஒரு புதிய ஒளிக்காடு

                முகிழ்த்ததிங்கே!

குகைவிடுத்துப் புறப்பட்ட அரிமாவின் பாவேட்டைக்

                கூட்டு நூலில்

அகில் விடுக்கும் நறுமணமும் அச்சமூட்டும் இடிஅதிர்வும்

                அணைந்திருக்கும்.

புகைவிடுக்கும் வஞ்சகத்துப் பார்ப்பனியம் புதைந்திடவே

                புழுதி போர்த்தும்.

புலர்ந்ததடா புதுவிடியல் புதுவரவின் இந்நூலால்

                புடைத்த புண்ணும்

உலர்ந்ததடா! ஒரு புரட்சிப் பெருவேட்கை

                கொண்டவர்கள் உலாவ இங்கே

மலர்ந்ததடா ஒரு நெருப்புப் பூந்தோட்டம்!

                மறத்தமிழர் மானத் தென்றல்

தவழ்ந்ததடா! புதுமூச்சு உள்வாங்கிப் புத்துணர்ச்சி

                தாங்குதற்கே!

நெருப்போடு கலந்த வெள்ளம் ஓடுகின்ற வியப்பாற்றைத்

                தேக்கும் இந்நூல்.

விருப்போடு படித்தாலும் வெறுப்போடு படித்தாலும்

                வெப்பம் ஏற்றும்.

எரிப்போடும் திமிரோடும் திரிகின்ற தமிழ்ப்பகைக்கு

                இடியாம் இந்நூல்.

கருப்புஓடும் நெஞ்சங்கள் நனிவெளுக்கக்

                கந்தகப் பாத்துறையே இந்நூல்.

பல்வகையில் பகுப்புண்டு; பல்வகையில் தலைப்புண்டு

                மலர்ந்த இந்நூல்

சொல்வகையில் அணுக்குண்டு; சீர்வகையில் கற்கண்டு

                சுருட்டும் கேடர்

கொல்வகையில் படையுண்டு; கோலோச்சும் தமிழுண்டு

                குறிக்கோள் கொண்டு

நல்வகையில் தமிழேந்தி படைத்த நூற்கு வெற்றியுண்டு

                நிலைபேறுண்டு!

Pin It