“எங்கும் நிறைந்திருப்பர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்” என்று சொல்லப்படும் கடவுளுக்கு உருவம் இல்லை என்று உலகின் முதல் இரண்டு பெரிய மதங்களாக இருக்கும் கிறித்துவமும், இசுலாமும் கூறுகின்றன. இவை கடவுள் ஒருவரே என்ற கோட்பாடு கொண்டவை. ஆனால் இந்து மதம் எனப்படும் கலவை மதத்திலோ எண்ணற்ற கடவுள்கள்; ஒவ்வொரு கடவுளுக்கும் பற்பல உருவங்கள் என்ற நிலை இருக்கிறது. உருவ வழி பாடே இந்து மதத்தின் உயிரான கூறாக இருந்து வருகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் பல தெய்வங்களும் அவற்றுக்கான சிலைகளும் இருந்தன. கிரேக்கர்களின் சிலை வடிவை யொட்டியே முதன் முதலில் புத்தருக்குச் சிலைகள் வடிக்கப்பட்டன. அதன் பிறகுதான்-1500 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்துக் கடவுள்களுக்குச் சிலைகளும் பெரிய கோயில்களும் உருவாக்கப்பட்டன. கல்லில் கடவுள் இருக்கிறார் என்கிற மூடநம்பிக்கை வலுப்பெற்றது. சிலை வழிபாடு என்பது இந்து மதத்தின் முதன்மையான அடையாளமாகிவிட்டது. சிலை வணக்க மறுப்பாளராக வாழ்ந்த அம்பேத்கருக்கும், கடவுள் சிலையை உடைத்த பெரியாருக்கும்கூட சிலை வைக்கும் அளவுக்குச் சிலை என்பது இந்திய சமூகத்தின் உள்ளார்ந்த அடையாளமாகிவிட்டது.

patel 600இந்தப் பின்னனியில் குசராத்தில் நருமதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் சர்தா வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே உயரமான சிலையைப் (182 மீட்டர் உயரம்) பிரதமர் நரேந்திர மோடி, பட்டேலின் 143ஆவது பிறந்த நாளான அக்டோபர் 31 அன்று திறந்து வைத்தார். 2014இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் பட்டே லுக்கு மாபெரும் சிலை அமைக்கப்படும் என்று மோடி கூறினார். கடந்த நவம்பர் மாதம் இந்துத்துவத்தின் இதயப் பகுதியாகக் கருதப்படும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மற்றும் தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்குப் பட்டேல் சிலை திறப்பதைத் திட்ட மிட்டுப் பயன்படுத்திக் கொண்டார், நரேந்திர மோடி.

பட்டேல் சிலைத் திறப்பு விழாவில் பேசிய குசராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, “சுதந்தரத் திற்குப்பின் 562 சிற்றரசுகளைப் பட்டேல் இந்தியா வுடன் இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக் கியது போல், பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். 2018 நவம்பர் மாதம் முழுவதும் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் தொலைக் காட்சிகளில், பட்டேல் சிலையும், சிலைத் திறப்பு விழா வில் மோடியின் பேச்சும் நடுவண் அரசின் விளம் பரமாக அடிக்கடி காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

உலகில் உள்ள உயரமான சிலைகள் :

  1. குசராத்தில் பட்டேல் சிலை 182 மீட்டர்
  2. சீனாவில் ஸ்பிரிங் கோயில் புத்தர் சிலை 153 மீட்டர்
  3. மியான்மரில் லேகுன் செக்கியா புத்தர் சிலை 116 மீட்டர்
  4. சப்பானில் உஷ்கு டேபட்சூ புத்தர் சிலை 110 மீட்டர்
  5. அமெரிக்காவில் சுதந்தரதேவி சிலை 97 மீட்டர்
  6. தாய்லாந்து தி கேரட் புத்தர் சிலை 91 மீட்டர்
  7. இரஷ்யாவில் ‘தாயகம் அழைக்கிறது’ சிலை 87 மீட்டர்

உலகிலேயே உயரமான சிலையை வைப்பதாக இருந்தால், குசராத்தின் மண்ணின் மைந்தரான - தேசத்தந்தை என்று போற்றப்படுகின்ற - உலகம் முழுவதும் மதிக்கப்படுகின்ற காந்தியாருக்கு அல்லவா வைத்திருக்க வேண்டும்; வல்லபாய் பட்டேலுக்கு உலகின் உயரமான சிலை வைத்ததன் நோக்கம் என்ன?

1948 சனவரி 30 அன்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமகா சபையில் இருந்த நாதுராம் கோட்சே காந்தி யாரைச் சுட்டுக் கொன்றதும் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்பு என்றும், அது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த உறுதிமொழியை ஏற்று, ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் பட்டேல். சுதந்தரப் போராட்டக் காலத்தில் காங்கிரசுக் கட்சியில் நேரு மதச்சார்பற்ற - சோசலிசக் கருத்தோட்டம் கொண்டவராக இருந்தார். பட்டேல் வலதுசாரிச் சிந்தனையாளராக இருந்தார். இதன் அடிப் படையில் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் மென் மையான இந்துத்துவப் போக்குடன் நடந்து கொண்டார் என்ற கருத்து நிலவுகிறது. காந்தியார் தன் வாழ்நாள் முழுவதும் இந்து-முசுலீம் ஒற்றுமைக்காகப் போராடினார். எனவேதான் நரேந்திர மோடி ஆட்சி காந்தியைத் தவிர்த்துவிட்டு, வல்லபாய் பட்டேலுக்குக் காவி வண்ணம் பூசி உயர்த்திப் பிடிக்கிறது.

மேலும் இன்றைய அரசியல் சூழலில் காங்கிரசுக் கட்சியை எதிர்ப்பதற்காக நேருவைக் குற்றஞ்சாட்டும் போக்கை பா.ச.க நீண்டகாலமாகப் பின்பற்றி வருகிறது. காஷ்மீர் பண்டிட்டான நேரு 1947இல் காஷ்மீர் சிக்கலைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளாமல், பட்டேலிடம் ஒப்படைத்திருந்தால் காஷ்மீரை முழுவது மாக இந்தியாவுடன் இணைத்து அச்சிக்கலை முடித்து வைத்திருப்பார் என்று பா.ச.க.வும் மற்ற சங்பரிவாரங் களும் நீண்டகாலமாகக் கூறிவருகின்றன.

24.11.2018 அன்று மத்தியப்பிரதேசத்தில் மண்ட்சவுர் என்ற இடத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “பல தலைமுறைகளாக உழவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்குக் காரணம் 55 ஆண்டுகள் காங்கிரசுக் கட்சி இந்தியாவை ஆட்சி செய்ததே ஆகும்; நாட்டின் முதலாவது பிரதமராக வல்லபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் இன்று உழவர்கள் துன்பப்படும் நிலை ஏற்பட்டிருக்காது. காங்கிரசு ஆட்சிக் காலத்தின் தவறுகளைச் சரிசெய்ய கடந்த நான்கரை ஆண்டுகளாக முயன்று வருகிறேன். ஆனால் இவற்றை முழுமையாகச் சரிசெய்வதற்குக் காங்கிரசு ஆண்ட காலத்தில் பாதி ஆண்டுகளேனும் எனக்குத் தேவை” என்று சொன்னார். நேரு குடும் பத்தின் தலைமையிலான காங்கிரசை எதிர்ப்பதற்குப் பட்டேலை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதே பா.ச.க.வின் நோக்கம். இதற்காகத்தான் பட்டேலுக்கு உலகின் உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பட்டேல் சிலை திறக்கப்பட்டதற்கு முன்பாக, பட்டேல் சிலையின் மாதிரியைத் தேரில் வைத்து, பர்தோலி யிருந்து ‘ஒற்றுமைப் பயணம்’ என்கிற பெயரில் பன்னி ரண்டு நாள்கள் குசராத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது. 1918இல் பிரித்தானிய ஆட்சி உழவர்கள் மீது அதிக வரி விதித்ததைக் கண்டித்து, உழவர்களைத் திரட்டி வல்லபாய் பட்டேல் போராட்டம் நடத்திய இடம்தான் பர்தோலி. பட்டேல் சிலை ஊர்வலம் குசராத்தில் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5000க்கு மேற்பட்ட ஊர்கள் வழியாகச் சென்றது. பட்டேல் சிலை தேரோட்டம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமே யாகும்.

உழவர்களுக்காகப் போராடிய - இந்தியாவின் இரும்பு மனிதரான பட்டேலுக்குச் சிலை அமைக்க உழவர்கள் தங்களிடம் பயன்படாமல் இருக்கும் இரும் பாலான உழவுக் கருவிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்ட எல்லா ஊர்களிலிருந்தும் செங்கல் அனுப்புவது என்ற பெயரால் இந்துத்துவ வெறி உணர்ச்சியை தூண்டியது போல், பட்டேல் சிலைக்காக இரும்பை அனுப்புவதன் மூலம் ஒரே தேசம் என்கிற உணர்ச்சியைத் தூண்டுவது என்பது இதன் நோக்கமாகும். இவ்வாறு 135 டன் இரும்பு அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த இரும்பைக் கொண்டு பட்டேல் சிலை அமைக்கப்படவில்லை. சிலையின் பீடம் அமைக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. நரேந்திர மோடி பிரதமரானதும் முன்வைத்த முழக்கம் “இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்பதாகும். ஆனால் 182 மீட்டர் சிலையை வடிப்பதற்கான தொழில் நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதால், இச்சிலை சீனாவில் செய்யப்பட்டது.

modi patel 600 copyபட்டேல் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ (Statue of Unity) என்று மோடியால் பெயரிடப்பட்டது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற இந்துத்துவப் பாசிசக் கோட்பாட்டை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக மோடி ஆட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஒற்றுமைச் சிலை என்பதும் ஆகும். ‘ஒற்றுமையின் சிலை’ என்பதை எட்டு மொழிகளில் ஒரு பலகையில் பொறித்து பட்டேல் சிலை வளாகத்தில் வைத்தார்கள். ஒற்றுமையின் சிலை என்பதற்குத் தமிழில் “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”என்று எழுதப் பட்டிருந்தது. இதற்குக் கடும் கண்டனம் எழுந்ததும், அதை அகற்றிவிட்டனர்.

பட்டேல் சிலையை அமைத்திட ரூ.2,980 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று இந்திய அரசு சொல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்தி, தம் இன்னல்களை உழவர்கள் வெளிப்படுத்திக் கொண்டி ருக்கும் நிலையில், உழவர்களுக்காகப் போராடிய பட்டேலுக்கு மூவாயிரம் கோடியில் சிலை வைப்பது, ரோமாபுரி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த போது நீரோ மன்னன் ‘பிடில்’ வாசித்துக் கொண்டிருந்தான் என் பதைப் போன்றதல்லவா?

பட்டேல் சிலையை அமைப்பதற்கான நிதி பொதுத் துறை நிறுவனங்கள் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர் முதலான சமூக மேம்பாட்டுக்கு என்று ஒதுக் கப்படும் நிதியிலிருந்தே தரப்பட்டுள்ளது. அதன் விவரம் :

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - ரூ.900 கோடி

ஓ.என்.ஜி.சி. (ONGC) - ரூ.500 கோடி

பாரத் bட்ரோலியம் - ரூ.250 கோடி

கேஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியா - ரூ.250 கோடி

பவர்கிரிட் - ரூ.125 கோடி

குசராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்  - ரூ.100 கோடி

இதுதவிர, நடுவண் அரசு 2014-15 நிதிநிலை அறிக்கையில் ரூ.309 கோடியில் சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து ரூ.146 கோடியும் பட்டேல் சிலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் உழவர்களும் பொது மக்களும் பெருந்துன்பத் திற்குள்ளாகியிருந்த போது, இவற்றின் விலையைக் குறைக்காமல் பெட்ரோலியப் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டேல் சிலைக்குக் பல கோடிக்கணக்கில் நிதி கொடுத்துக் கொண்டிருந்தன.

நருமதையை ஒட்டி வாழும் பழங்குடியினரின் பல ஊர்களை அழித்து, அவர்களின் நிலங்களைப் பறித்து பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் அளவுக்கு ஆடம் பரமான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடமாக மாற்றப்பட்டு வருகிறது.

பட்டேல் சிலை என்பது கார்ப்பரேட் இந்துத்துவ ஆதிக்கத்தின் சின்னம். மதச்சார்பற்ற - சனநாயக அமைப்புகளும் கட்சிகளும்-கார்ப்பரேட் இந்துத்துவப் பாசிசத்தின் இத்தகைய போக்குகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

Pin It