தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் மலர்கிறது மகிழ்ச்சியுடன். தன் வீட்டுக் கொல்லையில் மாமரம் பூ பூக்கத் தொடங்கியதைக் கவனியாதிருந்துவிட்டு தற்செயலாகத் தோட்டம் பக்கம் சென்றவன் பூத்துக் குலுங்கிய மாமரத்தைக் கண்டு எல்லையில்லாக் கொள்ளை இன்பம் கொள்கிறான்; அது மிக உயர்ந்த வகை சப்போட்டா (விருதுநகர் மாவட்டம், சேத்தூர், இராசபாளையம் பகுதியைச் சேர்ந்த வகை மா). இரண்டு நாள் கழித்துத் தோட்டம் பக்கம் செல்கிறான், மகிழ்ச்சி கருகி மனம் கலங்க மா இலைகள் அங்கங்கு காய்ந்து கருகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மாம் பூக்கொத்துக்கள் பக்கம் நெருங்கிச் சென்று உற்றுப் பார்க்கிறான்.

அய்யகோ! பூக்களும் கருகி அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து துணுக்குற்றான். அந்தக் காய்ந்து கருகிய இலைக் கொம்புகளை, பூக்கொத்துக்களை அவசர, அவசரமாக ஆனால் உற்ற கவனத்துடன் பூக்கள் உதிர்ந்துவிடக் கூடாது என்ற கவலையுடனும் பூப் போன்று பிடுங்கி அகற்றுகிறான். எல்லா வற்றையும் நீக்கிட முயன்று கைக்கெட்டிய அளவுக்கு முயன்று முடிந்த வரை கருகிய பகுதிகளை நீக்கிவிடுகின்றான். கடைசி யில் பார்த்தால் அதிலொரு புழு நெளிந்து தன் கையிலேயே ஊறிவிடுகின்றதைப் பார்த்து சற்று அருவெறுப்படைந்து அதனைக் கொன்று விடுகின்றான். ஆனால் மரம் முழுவதும் எங்கெங்கு புழுக்கள் உள்ளனவோ அவை மாம் பூக்களுக்குப் பெரும் தீங்கல்லவா விளைவித்துவிடும் எனப் பதறி அவற்றை எவ்வாறு அழிப்பது, எப்படி மாம் பூக்களைக் காப்பது என்ற சிதைந்த சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைகிறான்.

தன் துணைவியாரிடம் புலம்புகின்றான். வேளாண்துறையை நாடலாம் என்ற எண்ணமே துளிர்க்கவில்லை. ஆனால் அவன் தம்பி இயற்கை வேளாண் தொடர்பாகச் சொன்னவை நினைவுக்கு வந்தவனாக வேப்பிலையை  அரைத்து கரைசலாக மாமரத்தில் தெளித்துப் பூக்களைக் காப்பாற்றிவிடலாம் என்ற மகிழ்ச்சி பொங்கச் சொன்னாள். அவரும் தன் தம்பியும் இதுகுறித்து சொல்லியுள்ளான் என்று மஞ்சள் பொடியையும் கரைசலுடன் கலந்து தெளித்தால் இன்னும் நல்லது என்றார்.

சரி தீர்வு கண்டுபிட்டோம். தொல்லை ஒழியும் என்ற மனத் துள்ளலுடன் மறுநாள் காலையிலேயே வேப்பிலை அரைத்த கரைசலுடன் மஞ்சள் பொடியையும் கலந்து எடுத்துச் சென்று மொட்டை மாடி வரை வளர்ந்து கவிழ்ந்து நிற்கும் அந்த மாமரத்தில் நிறை மனதுடன் அதைப் பரவலாகத் தெளித்தான். குறிப்பாகப் பூக் கொத்துக்களைக் குறிவைத்துக் கரைசலைச் செழிப்பாகத் தெளித்தான். அந்தப் பணியை அப்படியே அச்சுப் பிறழாமல் மறுநாளும் செய்து முடித்தான். ஆனால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை என்பதை உணர்ந் தான். அதாவது பூக்கள் கருகுவது அறவே நின்றுவிடவில்லை என்பது பூக்களை உற்றுப்பார்த்த போது தெரிந்தது. பரவா யில்லை, மூன்றாம் நாள் முயற்சிக்கலாமென்று மனதைத் தேற்றிக் கொண்டான். அதேபோல் மூன்றாம் நாளும் மும்முரமாக அப்பணியை மேற்கொண்டான். நான்காம் நாளும் வந்தது. இன்னலுக்குத் தீர்வு கிடைத்துவிட்டது என்று எண்ண முடியாதவாறு காம்புகளின் நுனியில் இருந்த பூக் கொத்துக்கள் இன்னும் கருகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மனம் துணுக்குற்றான். அன்று கரைசல் தெளிக்காமல் விட்டுவிட்டான். மாற்றுவழி என்ன? மருகினான்.

திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. முன்பொருமுறை அவன் துணைவியார் சொன்னது நினைவுக்கு வந்தது. அதாவது காலக்கெடு தாண்டி கெட்டிருந்த கோ-கோலாவை செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் போது கலந்து ஊற்றிவிட்டு மறுநாள் பார்த்தால் பூச்செடிகளிலிருந்த புழுக்கள் மடிந்து கிடந்ததைக் கண்டதையும். அதனால் கோ-கோலா நல்ல பூச்சிக் கொல்லி மருந்தாக உள்ளது என்று சொன்னாள். அவ்வாறே ஐந்தாம் நாள் ரூ.38 விலையுள்ள கோ-கோலாவை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து மாமரத்தில் பரவலாக மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் படுமாறும், குறிப்பாகப் பூக்கொத்துக்களில் படுமாறும் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு அந்தக் கரைசலைத் தெளித்து முடித்தான். நல்விளைவை வேண்டினான். மாமரத்தைப் பொறுத்தமட்டில் பொறுத்துத்தான் இருக்க வேண்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார், வள்ளலார். அது உயிர்கள் மேல் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றின் வெளிப்பாடு. துறவியான அவரின் உணர்வு இத்தன்மையதெனில் பல ஏக்கரில் தம் வாழ்வுக்காகத் தாம் பாடுபட்டுப் பயிரிட்ட பயிர்கள் கருகிடக் காணும் உழவர்களின் உள்ள வாட்டம், பதறல்களை என்னென்று சொல்வது? ஒரு மாமரம் பராமரிக்கப்படாத நிலையில் அதினின்று கிட்டும் பலன் தனக்குக் கிடைக்காது போகும் என வருந்தும் ஒரு வனின் நிலை இது எனில், அரும்பாடுபட்டு உழைத்துச் சாகுபடி செய்த உழவனின் பயிர்கள் வாடிடக் காணும் அவன் மனம் என்ன பாடுபடும்? அவன் உழைப்பின் பலன் பரந்துபட்ட மக்களுக்கானது என்ற எண்ணமே வேளாண் அறிவியலாளர்கள் வல்லுநர்களிடம் இருப்பதுடன் விளைவிக்கும் உழவனின் உரிய வாழ்வே மறுக்கப்படுவது பற்றி கிஞ்சித்தும் கரிசனமோ, கவலையோ அல்லாதவர்களாக அல்லவா உள்ளனர். பின் பொதுநிலை பொருளியல் வல்லுநர் எவரும் கவலை கொண்டு உழவனின் உய்வுக்கு எப்படிச் சிந்திப்பார். இதுதான் கயமையின் உச்சம். இந்நிலை சற்றேனும் அற்றுப் போகவேண்டுமெனில் வேளாண் விளைபொருள்கள்களுக்கு உரிய, உயரிய கொள்முதல் விலை நிர்ணயிப்பதுடன் நில்லாது அவ்விலை கொடுத்து உரிய காலத்தில் உழவர்களிடமிருந்து விளைபொருட் களையெல்லாம் கொள்முதல் செய்திட ஆவனவெல்லாம் செய்ய வேண்டுவது முதன்மையானதாகும்.

Pin It