voc 350தமிழ் நூல்கள், குறிப்பாகச் சங்க இலக்கிய நூல்கள் அச்சுருவான வரலாற்றுப் பின்புலத்தை அறிந்துகொள்ள இரு அறிஞர்களின் உரையாடல் ஒன்று முக்கியத் தரவாக அமைகின்றது. உ.வே. சாமிநாதையர் - சேலம் இராமசுவாமி முதலியார் எனும் இரு ஆளுமைகளே அவ்விரு அறிஞர் களாவர். உ.வே. சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கும்பகோணத்தின்

புதிய முன்சீப்பாக வந்து பணியேற்றிருந்த சேலம் இராமசுவாமி முதலியாரைச் சுப்பிரமணிய தேசிகர் சந்திக்கச் சொல்லியதன் காரணமாக உ.வே.சா. சென்று சந்திக்கிறார். இருவரின் சந்திப்பும் நீண்ட புலமை மிகுந்த உரையாடலுடன் தொடங்கி முடிந்திருக்கின்றது. தமிழ் நூல்களின் அச்சுருவாக்க வரலாற்றில் இவ்வுரையாடல் கவனப்படுத்தப்பட வேண்டிய முக்கியத் தரவாக அமைகின்றது.

சேலம் இராமசுவாமி முதலியார் சந்திப்பு குறித்து உ.வே.சா. என் சரித்திரத்தில் இப்படிப் பதிவுசெய்கிறார்.

Òசேலம் இராமசுவாமி முதலியாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை. சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின் நான் சென்று பார்க்கலாமென்று ஒருநாள் புறப் பட்டேன். அன்று வியாழக்கிழமை. அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் காலேஜில் இருப்பதையும் மடத்தில் படித்தவ னென்பதையும் சொன்னேன்.

அவர் யாரோ அயலாரிடம் பாராமுகமாகப் பேசுவது போலவே பேசினார். என்னோடு மிக்க விருப்பத்துடன் பேசுவதாகப் புலப்படவில்லை. ‘அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறார். தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?’ என்று நான் எண்ணலானேன்.Ó

இந்தக் குறிப்பிற்குப் பின்னர் இருவரும் உரையாடியது குறித்த பதிவுகள் இப்படி வருகின்றன.

இராமசுவாமி முதலியார்: நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?

உ.வே.சாமிநாதையர்: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன். (பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை மதிக்கா விட்டாலும், பிள்ளையவர்களின் மாணாக்கனென்ற முறையிலாவது என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன்வரவில்லை. கணக்காகவே பேசினார்.

“பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடை பெயர்ச்சியே இல்லாத இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம் பொய்யாக இருக்கும்” என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன். அவரோ கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை)

இராம: என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

(இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி செய்துவிடலாம் என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புஸ்தகங்களின் வரிசையை ஒப்பிக்கலானேன்) 

உ.வே.சா: “குடந்தையந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்

தமிழ், அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை...Ó அந்தாதியில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் இருபது ...

(இப்படி நான் படித்த நூல்களை அடுக்கினேன். அவர் முகத்தில் கடுகளவு வியப்புக்கூடத் தோன்றவில்லை)

இராம.: இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்? (என்று திடீரென்று அவர் இடைமறித்துக் கூறினார்; நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன்; இவர் இங்கிலீஸ் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம். அதனால்தான் இப்படிச் சொல்லுகிறார் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன்)

உ.வே.சா.: திருவிளையாடற் புராணம், திருநாகைக் காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரியபுராணம், குற்றாலப் புராணம்... (அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார்) நைடதம், பிரலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தியார் உரை... (என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண நூல்களை எடுத்துக் கூறினேன். அப்பொழுதும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. அடடா! முக்கியமானவற்றையல்லவா மறந்து விட்டோம்? அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டு வந்திருக்கலாமே! என்ற உறுதியுடன்)

உ.வே.சா. : கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப் பாடம் கேட்டிருக்கிறேன் (என்றேன்).

இராம: சரி, அவ்வளவுதானே? (என்று கேட்டார், எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. கம்பராமாயணத்தில் கூடவா இவ்வளவு பாராமுகம்! இவ்வளவு அசட்டை! என்ற நினைவே அதற்குக் காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அவர் என்னை விடுவதாக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார்)

இராம: இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான், பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா? (எனக்கு அவர் எதைக் கருதிக் கேட்டாரென்று தெரியவில்லை. “பிள்ளையவர்கள் இயற்றிய நூல் களையே நான் படித்திருப்பதாக இவர் எண்ணிக்கொண் டாரோ? கந்தபுராணம், பெரியபுராணம் முதலியவை களெல்லாம் பழைய நூல்களல்லவோ? கம்பராமாயணம் பழைய நூல்தானே? பழைய நூலென்று இவர் வேறு எதைக் கருதுகிறார்?” என்று யோசிக்கலானேன்)

உ.வே.சா.: நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே?

இராம. : அவைகளுக்கெல்லாம் மூலமான நூல் களைப் படித்திருக்கிறீர்களா? (என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டா யிற்று)

உ.வே.சா.: தாங்கள் எந்த நூல்களைச் சொல்லு கிறீர்களென்று தெரியவில்லை? (என்றேன்)

இராம.: சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா? (அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை. என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும்  “இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல் வந்துவிட்டாரே!” என்ற நினைவோடு பெருமிதம் சேர்ந்து கொண்டது)

உ.வே.சா.: புஸ்தகம் கிடைக்கவில்லை கிடைத்தால் படிக்கும் தைரியமுண்டு (என்று கம்பீரமாகச் சொன்னேன். சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார்)

இராம.: நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?

உ.வே.சா.: அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்.

இராம: சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள். (என்று அவர் சொன்னார். நான் விடைபெற்றுக் கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்ல ரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவ ரென்றும் உணர்ந்தேன்) (என் சரித்திரம், ஏழாம் பதிப்பு, 2008 - ப. 528 - 533).

இந்த உரையாடல் நிகழ்ந்தது 21.10.1880 (வியாழக் கிழமை). அப்பொழுது உ.வே.சா. அவர்களுக்கு வயது இருபத்து ஐந்து (1855 - 1942).

இந்தப் பதிவிற்குப் பின்னர் உ.வே.சா. இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் “எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்த தாகவே தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கப் பெறவில்லை”

இராமசுவாமி முதலியார் அறிமுகமும் அவர் வழியாகப் பழந்தமிழ் நூல்களை அறிந்து கற்கும் வாய்ப்பும் உ.வே.சா. அவர்களுக்கு அமையப்பெறாமல் போயிருப்பின் சங்க இலக்கிய நூல்களின் அச்சுருவாக்க வரலாற்றை எப்படி எழுதியிருக்க முடியும் என்ற வியப்பு மனதுள் எழுகிறது. உ.வே.சா. கல்வி பெற்ற காலச் சூழல் என்பது பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால இலக்கண நூல்களை மட்டுமே போற்றிக் கொண்டாடிக் களித்த காலச் சூழலாகும். சேலம் இராமசுவாமி முதலியாரின் சந்திப்பு உ.வே.சா. வுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக மட்டும் அமையவில்லை, தமிழுலகத்திற்குக் கிடைத்த பெருவாய்ப்பு என்பதை இன்றைக்கு நம்மால் உணரமுடிகிறது.

Pin It