இனக்குழு சமூக அமைப்பு சங்ககாலத்திற்கு முந்தியது. சங்ககாலம் அரசு உருவாக்கம் வளர்ச்சி அடைந்து வரும் காலமாகும் (Transaction Period). இனக்குழுச் சமூகத்தின் எச்சங்கள் சங்ககால இலக்கியத்திலும் வழக்காறுகளிலும் பதிவாகி யுள்ளன. சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ள தொல்குடி மரபையும் அதன் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுக் காணவேண்டிய நிலையில் இவ்வகை யான ஆய்வுகள் தொடக்கநிலையில் உள்ளன. இது சமூக இயங்கியல் போக்கையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விருந்தோம்பல் (Hospitality) என்னும் பண்பாட்டுக்கூறு பண்டைய தமிழரின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம். 182:1-3) என்னும் புறநானூற்றுப் பனுவல் இதன் சிறப்பை எடுத்து இயம்புகிறது. தமிழ் இலக்கியத்தில் விருந்தோம்பல் பண்பாடு பரவலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பண்பாடு உலகம் முழு வதிலும் உள்ள வெவ்வேறு வகையான கலாச் சாரம் கொண்ட மக்களிடமும் காணப்படுகின்றது. இஃது ஓர் இனத்தின் மக்களுக்கு மட்டும் சொந்தம் என்று கூறுவது ஆய்வு நிலைகளில் பொருந்தாக் கூற்றாகும்.

தமிழர்கள் விருந்தோம்பல் பண்பாட் டினை உயர்வாகப் போற்றுதற்கான காரணங் களையும், நூலோர் தொகுத்தவற்றில் எல்லாம் தலை என்று இயம்புவதற்கான சமூகப் பின்னணி யையும் ஆய்ந்து வரலாற்று ஆய்வு முறையில் பதிவு செய்வது காலத்தின் தேவை ஆகும். சங்ககால இனக்குழுச் சமூகத்தை விவரிக்கும் வகையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் குறிப்பிடப்படவேண்டிய கட்டுரைகளாக, கா.சுப்பிரமணியன் அவர்களின் “சங்க இலக்கியத்தில் இனக்குழு வாழ்க்கை”.

கா.சிவத்தம்பி அவர்களின் “முல்லைத் திணைக்கான ஒழுக்கம் அந்நிலத்துக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய மானுடவியல் முக்கியத்துவம் குறித்த ஒரு பகுப்பாய்வு” ஆகிய இரு கட்டுரைகள் முக்கியத் துவம் வாய்ந்தவை. அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மேலும் ஆய்வு செய்ய வேண்டி யவை எனச் சுட்டிக்காட்டிய இடங்களில் புதிய தரவுகள் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆதிப் பொதுவுடைமைச் சமூகம்

ஆதிச் சமுதாய அமைப்பாக (Social Institution) உலகெங்கும் இனக்குழுக்கள் (Tribes) நிலவின. தமிழகத்தின் இனக்குழுக்கள் திணைகளின் அடிப் படையில் பாகுபடுத்தப்பட்டிருந்தன. இப்பாகு பாடு மானுடவியல் விளக்கத்திற்குப் பொருந்தி வருவதை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். (Srinivasa Iyengar 1929: 4-12.) வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை என்னும் இரு நிலைகளில் வாழ்ந்தனர். பின்னர் நாகரிக நிலை உருவாயிற்று. “தமிழகத்தில் சுமார் கி.மு. 300இல் வரலாற்றுக் காலம் தொடங்குகிறது. தென்னிந்தியாவில் மூன்று இலட்சம் ஆண்டு களுக்கு முன்பு மனித இனம் தோன்றியது(Nilakanda Sastri 1955: 50) இவற்றிற்கு இடைப்பட்ட காலமே தமிழகத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இனக்குழு வாழ்க்கை நிலவியது. இனக்குழு வாழ்க்கையின் காலத்தை உலோக முற்காலம், உலோகக் காலம் என்று இரண்டாகப் பிரிக்கலாம் என மார்கன், எங்கல்ஸ், கார்டன் சைல்டு ஆகியோர் குறிப்பிடுவர். பல நூற்றுக்கணக்கான ஆண்டு களாக மாந்தர்கள் உணவுகளைச் சேகரிக்க அலைந்து திரிந்து வாழ்ந்துள்ளனர். “கொடிய விலங்குகளைத் தாக்க பெரிய கூட்டமாகச் சென்றனர். வேட்டை உணவைப் பாதுகாத்து வைக்க முடியாததால், உபரியைப் பகிர்ந்து கொண்டனர்.

புராதன இனக்குழு இரத்த உறவு முறை கொண்டதாகும். உணவு சேகரிப்போர் குலக்குறிகளைக் (Totem) கொண்டிருந்தனர். பொதுமைப் பாலுறவும், குழுமணங்களும் அக் காலத்திய நியதிகளாக அமைந்தன. அதன் விளை வாகத் தந்தை வழியற்ற தாய்வழிச் சமூகமே முக்கியத் துவம் பெற்று இருந்தது. (சுப்பிரமணியன் 1993: 15). சங்க இலக்கியத்தில் வரும் கொற்றவை வழிபாட் டினைத் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாகக் கொள்ளலாம்.

வேட்டைச் சமூகம்

இனக்குழுச் சமூகத்தின் பிரதான தேவையாக உணவுப் பொருள் இருந்தது. வேட்டையின் மூலம் உணவினை உற்பத்தி செய்தனர். இனக்குழு மறு உற்பத்தியில் ஈடுபடுவதற்கு முன் உள்ள சமூக அமைப்பினை வேட்டைச் சமூகம் எனக் கொள்ளலாம். குறிஞ்சித் திணைப் பாடல்களே பெரும்பாலும் வேட்டைச் சமூகத்தின் கூறுகள் சிலவற்றைப் பதிவு செய்துள்ளன. பிற திணைகளிலும் வேட்டைத் தொழில்கள் சிறுபான்மையாகக் காணப்படுகின்றன. ஆதிச் சமூகத்தின் உற்பத்தி வேட்டையிலிருந்து கிடைத்தவை.

இவர்கள் மறுஉற்பத்தியில் ஈடுபடவில்லை என்ற கூற்றும் நிலவுகின்றது. ஆனால், முல்லைத் திணைப் பாடல்களில் வரும் தினைப்புனம் காத்தல் முதலானவற்றில் கிடைக்கும் சான்று களின் அடிப்படையில் இவர்கள் சங்ககாலத்திற்கு முன்பே மறுஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது. “முல்லைப் பொருளாதாரத் தைக் குறித்த முதல் கருத்துப் பதிவாக கா.சிவத்தம்பி கருதுவது அது கால்நடை மேய்ச்சலை முற்றிலுமாகச் சார்ந்து இருக்க வில்லை” (சிவத்தம்பி, 2003: 164).

நற்றிணை 121 ஆவது பாடலில் வரும் விதையர் மற்றும் முதையர் ஆகிய சொற்கள் மேய்ச்சல் பணியில் உள்ளவர்கள் உழவர்களாக விளங்கினார்கள். அவர்கள் முன்னரே பயிரிடப்பட்டிருந்த நிலங் களில் பயிரிட்டனர் என்பதைத் தெரிவிக்கின்றன. மருதத்திணைப் பாடல்களால் அந்நில மக்கள் மறுஉற்பத்தியில் ஈடுபட்டமை நன்கு அறிய முடிகின்றது. குறிப்பாக நெல் உற்பத்தி முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. நெய்தல் பகுதியில் இன்றும் மீன்கள் வலை வைத்துப் பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில் தனிவுடைமைக்கு இடமும் வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. அதனால், வேட்டையாடிய பொருள்கள் அந்த இனக்குழு முழுவதற்கும் பிரித்து அளிக்கப்பட்டன. ஏனெனின் வேட்டைக்குப் பயன்படுத்தப் படும் கருவி அந்தக் கூட்டம் முழுவதுக்கும் சொந்த மாகக் கருதப்பட்டது. அம்பு வில் போன்ற கருவிகள் பொது உரிமை பெற்றவையாக இருந்தன.

கருவியின் மூலம் பெறப்படும் பொருள்களும் பொது நிலையில் கொள்ளப்பட்டன. “கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை/ தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு/ காந்தளம் சிறுகுடி பகுக்கும்”. (நற்- 85:8-10) என்னும் பாடலில் கானவன் எய்த முள்ளம்பன்றியின் தசையை, கொடிச்சி, சிறு குடியினருக்கு மகிழ்ச்சியுடன் பகுத்துக் கொடுத் தாள் என்றும், “கானவன் வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை புனை இருங்கதுப்பின் மனை யோள் கெண்டி குடிமுறை பகுக்கும் நெடு மலை நாட” (நற். 336-3;6) என்னும் பாடலில் கானவர்கள் வேட்டையில் கொண்டு வந்த ஆண் பன்றியை அக் குறிஞ்சிநில மனையோள் தன் குடி முறைக்குப் பகுத்துக் கொடுத்தாள் என்பதாகவும் நற்றிணை பாடல்கள் குறிப்பிடுகின்றன.

தாய் வழிச் சமூக அமைப்பின் தலைவியாகக் கொடிச்சி, மனையோள், கொற்றவை ஆகியோர் இடம் பெற்றிருக்கலாம். பொதுமைப் பால் உறவுமுறை அவர்களிடம் இருப்பதால் கானவர்களிடம் இல்லறநெறி இருந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் அப்பாடலில் தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி- புனை இருங்கதுப்பின் மனையோள் என அடை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிச்சிக்கும் மனையோளுக்கும் வேட்டையின் மூலம் பெறப்பட்ட பொருளைப் பிரித்துக் கொடுக்கும் உரிமை அவர்களிடம் இருந்தது. அவர்கள் தாய்வழிச் சமூகத்தின் தாயாக (தலைவியாக) இருந் திருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. தாய் என்னும் சொல் உரிமை என்னும் பொருளில் மறக்குடித் தாயத்து (சிலம்பு. வேட்டுவவரி, 14-15) என்னும் சிலப்பதிகாரத் தொடர் மேலும் உறுதிப் படுத்துகின்றது.

இன்றும் கேரள மலைப்பகுதியில் வாழும் பழங்குடியிடம் ஆண், பெண் உறவு வீட்டில் நிகழ்த்தாமல் மறைவான காட்டுப்பகுதியில் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு அவர்கள் கூறும் காரணம், இல்லத்தில் வயதில் முதிர்ந்த தாய் தந்தை இருப்பதால் இது மறைவாக நடத்தப்படுகிறது என்பதாகும். சங்க இலக்கியத்தில் பதிவான மனையோள் என்னும் சொல் மனையிலிருந்து வாழும் தாய் என்று ஒப்புநோக்கிப் பார்க்கவும் வாய்ப்பு உள்ளது. கானவர்கள் வேட்டைக்கு நாயைப் பயன்படுத்தினர் (குறுந். 56-1), வேட்டை நாயை அழைப்பதற்குக் கொம்பு என்னும் இசைக் கருவியினைப் பயன்படுத்தியுள்ளனர். (அகம்.- 318- 13:15) கானவர் வேட்டையாடும் போது புதர்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கற்கள் வீசியும் சீழ்க்கை ஒலி எழுப்பியும் கண்டறிந்தனர்.

சங்க இலக்கியங்களில் பதிவான வேட்டைச் சமூக அமைப்பின் தொடர்ச்சி இன்றும் சில பழங்குடியிடம் நிலவுகின்றது. சான்றாக மலேயா வில் வாழும் சிமாய்ப் பழங்குடியின் வேட்டைக் குழுவானது பல நாட்கள் திரிந்து இறுதியாகப் பெரிய காட்டுப் பன்றியை வேட்டையாடும். அதனைக் குடியிருப்புப் பகுதிக்குக் கொண்டு வந்தவுடன் குழுவினர் அனைவரும் ஒன்று கூடுவர். கிடைத்த இறைச்சியை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுப்பர் (செல்வராசு 1997: 59). அதே போன்று இன்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாழும் சோளகர் சமூகத்தில் இது போன்ற பகிர்வுமுறை காணப்படுகிறது. தொட்டி (ஊர்) பகுதிக்குத் தண்ணீர் குடிக்க வரும் மான்களைச் சோளகர் வளர்க்கும் வேட்டை நாய்கள் வளைத்து ஊரின் உள் பகுதிக்கு விரட்டி வந்து நிறுத்தும்.

அதனைப் பார்க்கும் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அந்த மானை வீழ்த்துவர். அதன்பின் இறைச்சி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. முதல் பங்கு அச்சமூக விதவைகளுக்கு. அடுத்து ஊர் நாட்டாமைக்கு, கோள்காரனுக்கு, வேட்டை யாடியவர்களுக்கு, அதன்பின் மான் இறைச்சியை விரும்பும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது. கடைசியாக வேட்டையாடிய நாய் களுக்கும் ஒரு பங்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது (பாலமுருகன் 2004: 17-18). இது போன்று இனக் குழு வாழ்க்கைமுறை பெரிய மாற்றம் இல்லாமல் இன்றும் பல பழங்குடி மக்களிடம் காணப்படு கிறது. நாகரிகம் அடைந்ததாகக் கருதிக் கொள் ளும் மக்களிடம் இவ்வகையான இனக் குழுச் சமூகத்தின் தொடர்ச்சியும், பொதுமை நிலையும் பண்பாட்டுத்தளத்தில் இயங்குவதை அறியமுடி கிறது.

சங்க காலத்திலிருந்து இன்று பல நூறு ஆண்டுகள் கடந்து, பல்வேறு வகையான நாகரிக மாற்றம் அறிவியல் முன்னேற்றம் அடைந்த போதி லும் இனக்குழுச் சமூகத்தில் மேற் கொள்ளப்பட்ட பல கூறுகள் இன்று வெவ்வேறு தளத்தில் இயங்கு வதை அறியமுடிகிறது. அதன் தரவுகளை அறிந்து கொள்வதற்கு முன் வேட்டைப் பொருளைப் பகிர்ந்துகொண்டதன் விளைவாக விருந்து தோன்றிய நிலையினை இங்கு அறிந்து கொள்வது தேவையாகிறது.

II

விருந்தின் தோற்றம்

விருந்து என்னும் சொல் புதுமை என்னும் பொருளைத் தருவதாகும். தொல்காப்பியம் விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின்மேற்றே (தொல். செய்யுளியல்: 231) என்று குறிப்பிடுகிறது. (விருந்து - புதுமை) இது ஆகுபெயராக விருந் தினரை உணர்த்துகிறது. “விருந்து - புதுமை அன்று புத்தம் புதிதான பண்பு, குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் இவ்வாழ்வானோடு தொடர்பு படாமல் இன எல்லையிலிருந்து அவனை வந்து நாடும் இனவரவினரைக் குறிப்பது என்பன முதலிய தொடர்புடைய பல கருத்துகளை வழங்குவர்” (தண்டபாணி தேசிகர் 1951:) விருந்து என்னும் சொல் புதுமை என்ற பொருளில் சங்கப் பாடல்களில் பல இடங்களில் வந்துள்ளன.

எட்டுத்தொகை பத்துப் பாட்டில் மட்டும் 81 இடங்களில் விருந்து என்னும் அடிச்சொல்லோடு தொடர்புடைய சொற்கள் காணப்படுகின்றன. (விருந்து (60) விருந்திற்கு (2) விருந்தின் (13) விருந்தினம் (1) விருந்தினன் (2) விருந்துற்ற (1) விருந்துறத்து (1) விருந்தொடு (1)) விருந்து என்பதற்கு புதுமை என்னும் பொருளே பெரும் பான்மை வழக்காக உள்ளது.

சான்றாக நற்றிணை யில் மட்டும் 18 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதனைக் கீழ்வரும் தரவுகளின் வழி அறியலாம். விருந்தின் தீ நீர் (நற். 53)- புதிய இனிய நீர், விருந்தின் வெங்காட்டு (நற். 103) புதிய காட்டுப்பகுதி, விருந்தின் வெண்குருகு (நற். 167) - புதிதாக வந்த வெண்குருகு, விருந்தின் பாணர்(நற்-172) புதிதாக வந்த பாணர் (இந்த உரைப்பகுதிகள் ஒளவை. துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் உள்ளவை.) போன்ற தொடர்கள் விருந்து என்னும் சொல் புதிய என்னும் பொருளை உணர்த்து வதாகச் சங்க இலக்கியத் தரவுகள் காட்டுகின்றன.

ஆனால், விருந்தின் தோற்றம் மிகவும் பழமையானது அச்செயல் மொழி உருவாக்கம் நிகழ்வதற்கு முன்பே நடைபெற்றிருக்கலாம். “தொல்காப்பியம் வெட்சித் திணைக்குரிய துறைகளாகக் கூறிய வற்றில் மூன்று துறைகள் விருந்தின் தோற்றத் தோடு நெருங்கிய தொடர்புடையதாக அமைகின் றன. பாதீடு, உண்டாட்டு, கொடை, (தொல், பொருள், புறத். 3)ஆகிய இவை ஆநிரைகளைக் கவர்ந்து வந்த சிறுகுடிக்குப் பகுத்துத் தரப்பட்டன. ஆநிரையைச் சொத்தாக உடைய ஓர் இனக்குழு வில் சொத்துப் பொது வுடைமையாக இருந்தது.

உணவுப் பொருள்கள் அனைவரின் தேவைக்கு ஏற்பப் பகிர்ந்து அளிக்கப்பெற்றன. வேட்டையின் மூலம் பெற்ற உணவுப் பொருள்கள் குழுவினர்க்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. எஞ்சியவை கொடை யாகவோ அல்லது விருந்தின் மூலமாகவோ தரப் பெற்றிருக்க வேண்டும்” (செல்வராசு 1997: 159.) வேட்டையில் கிடைத்த ஊன் உணவுகள் சேமிக்கத் தகுந்தவையும் அல்ல.

ஆகவே வேட்டைப் பொருள் களின் உபரி களைப் பிரித்துக் கொண்டனர். ஊன் பொருளைப் பிரித்துக்கொள்ளும் நிலையோ அல்லது சமைத்து விருந்தின் மூலமாகக் கொடுக்கும் நிலையோ விருந்தின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந் திருக்கலாம். இனக்குழுச் சமூகத்தில் இந் நிலை ஒரு புதிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இரு இனக்குழுவினருக்கு இடையே இந்நிலை ஓர் இணக்கமான போக்கை உருவாக்கி இருக்கலாம்.

விருந்தும் - பரிமாற்றக் கோட்பாடும்

பரிமாற்றக் கோட்பாடுகள் உணவுப் பகிர்தல் தொடர்பாக இரண்டு நிலைகள் இருந்துள்ளதை எடுத்து விளக்குகின்றன. அவை, 1. பொதுப்படை யான பரிமாற்றம், (இரத்த உறவுடைய கூட்டத் துக்குள் நிகழக்கூடியவை) 2. சமச்சீர் பரிமாற்றம் (இரு இனக்குழுவினர்களுக்குள் நிகழக்கூடியவை) புராதன இனக்குழு சமூகம் இரத்த உறவுமுறை கொண்டது (சுப்பிரமணியன் 1993: 15) எனினும் ஓர் இனக்குழு மற்றோர் இனக்குழுவுக்கு உணவினைப் பகிர்ந்து கொள்ளுதல் என்னும் சமூகச் செயற் பாடும் நடைபெற்றிருக்க வேண்டும். சங்கப் பாடல் களில் இரண்டு வகையான பரிமாற்றம் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. பொதுப்படை

யான பரிமாற்றத்திற்குச் சான்றாக, மேற்கண்ட நற்றிணையின் 85, 336 ஆகிய இரு பாடல்களைக் கொள்ளலாம். இவை குறிஞ்சித் திணையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். வேட்டையில் பெற்ற ஊன் உணவினை சிறுகுடி யினர் தம் குடிக்குப் பகுத்துக் கொடுக்கும் வழக்கம் நிலவியது. இவ்வழக்கம் புராதன ஆதிப் பொது வுடைமை சமூகப் பண்பாகும். இரு பாடல்களும் குறிஞ்சித் திணையைச் சார்ந்தவை என்பது குறிப் பிடத் தகுந்ததாகும். தற்காலத்திலும் இவ்வழக்கம் பழங்குடிகளிடம் நிலவுகிறது. மேல் காட்டப்பட்ட சிமாய்ப் பழங்குடியின் வேட்டை முறையையும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாழும் சோளகர் சமூகப் பகிர்வுமுறையையும் இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். சமச்சீர்ப் பரிமாற்றம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்ட இருவேறு பழங்குடி களுக்குள்ளும் நிகழ்கிறது. (பக்தவத்சல பாரதி 1990:476).

சங்கப் பாடல்களில் ஓர் இனக்குழு மற்றோர் இனக்குழுவிற்கு விருந்து அளித்த செயற் பாடும் காணப்படுகிறது. அவை, குறிப்பாகப் புலப் படும்படியாகவே அமைந்துள்ளன. புதிதாக வந்த விருந்தினரை வரவேற்று நெய்யுடன் கூடிய இறைச்சி உணவினைச் சமைத்து அளித்துள்ளனர். எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு இழை அரிவை நெய்துழந்து அட்ட / விளர் ஊன் அம்புகை எறிந்த நெற்றி- (நற். 41:6-8) என்னும் பதிவுகள் காணப்படுகின்றன. இரவு நேரத்தில் வந்த விருந் தினருக்கு நெய் பெய்து அடுதலால் கொழுவிய தசையிடத்து எழும் நறிய புகை படிந்து, சிறிய நுண்ணிய பல வியர்வை நெற்றியில் உண்டாக்கும் என்னும், பதிவில் யாருக்கு உணவு அளித்தனர் என்னும் குறிப்பு இல்லை.

மேலும் தலைவி விருப்பத் துடன் விருந்தோம்புவாள் எனக் குறிப்பிட்டு உள்ளது. சங்கப் பாடல்களில் எந்த இடத்திலும் தலைவன் விருந்தோம்பியதாகக் குறிப்புகள் இல்லை. தலைவியின் விருந்தோம்பல் தோழி கூற்றில் அமைந் தவை மிகுதியாகக் காணமுடிகின்றன. தலைவி விருந்தோம்பிய நிலையை சங்கப் பதிவுகள் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றன. விருந்தயர் விருப்பொடு வருந்தினள் (நற். 81). எல்விருந்தயரும் மனையோள் (நற். 121).

விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் (நற். 221), வரு விருந்தயர்மார் பொற்றொடி மகளிர் (நற். 258). என்நல்மனை நனிவிருந்து அயரும் (நற். 280), விருந்து அயர் விருப்பினள் வருந்தும் திருந்திழை (நற். 374). விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே (நற். 361). ஆகிய பதிவுகள் தலைவி விருந்தோம்பிய நிலையை எடுத்துரைக்கின்றன. இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர்க்கு உவந்து உணவளித்ததாகப் பல இடங்களில் நேரடியாகவும் குறிப்பாகவும் காணப்படுகின்றன. மணல் பரப்பப்பட்ட அகலமான முன்றிலில் வரையறை இன்றிப் பெருகிய தமது பொருளைத் தம்மை நோக்கி வரும் விருந்தினர்க்குப் பகுத் துண்டு வாழும் சிறுகுடி (நற். 135) இது ஒரே இனக்குழுவைச் சேர்ந்தோர் அல்லாத புதிதாக வந்த வேறோர் இனக்குழுவிற்கு அல்லது விருந்தினருக்கும் உணவு அளித்துள்ளனர் என் பதைக் குறிக்கிறது. இதனை சமச்சீர்ப் பரிமாற்றம் என்னும் வரையறைக்குள் அடக்கலாம்.

மேலும், அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (நற். 142) என்னும் பாடல் இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர் வந்தால் உவக்கும் என்பதற்கு ஒளவை. துரைசாமிப்பிள்ளை இரவின் கண் விருந்தோம் பல் இனிதன்று என்னும் வழக்கு பற்றி அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்றார். விருந்தோம்புவது மனையறத்தின் மாண்புடைய நோக்கம் என்பதைத் தலைமகள் நன்கு அறிந்து ஒழுகும் இயல்பினள் என்றும் இப்பாடல் எடுத்தியம்புகின்றது (துரைசாமிப்பிள்ளை 1966: 555).

இரவில் விருந்தினர் வரும் வழக்கம் இல்லை என்னும் முடிவு இன்றைய சமூக நடைமுறையை ஒட்டியே அவரின் உரை அமைந்துள்ளது. பெரியபுராணத்தில் வரும் இளையான்குடிமாற நாயனார் புராணத்தில் இரவில் விருந்து அளித்த குறிப்பு காணப்படுகிறது. இவ்வகையான போக்கு சமூகம் நன்கு வளர்ச்சி அடைந்து உணவுப் பரிமாற்றம் என்பது சமூகப் பண்பாட்டுத் தளத்தில் தனிக் கூறாக இயங்குவதை உணர்த்துகிறது.

விருந்தோம்பல்

தமிழர்கள் விருந்தோம்பல் பண்பினை உயர் வாக மதிப்பதற்கான சமூகக் காரணங்களை நன்கு ஆராய்ந்தால் தமிழர்களின் வாழ்வியல் மதிப் பீடுகள் விளங்கும். விருந்தோம்பல் என்னும் சொல் விருந்து + ஓம்பல் என்று இரண்டு சொற்களால் ஆனது. விருந்தினரை (ஓம்புதல்) பசியிலிருந்து பாதுகாத்தல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. தமிழர்கள் பசியிலிருந்து காத்தல் என்பதை வாழ்வியலில் தலையாய அறங்களுள் ஒன்றாகக் கருதியுள்ளனர். அக்காலம் மனித ஆற்றல் மிகுதியாகத் தேவைப்படும் காலம் ஆதலால், பஞ்சத்தின் பொருட்டு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட வேண்டும் என்னும் அரசியல் பின்புலத்தோடு இக்கருத்து தோன்றி இருக்க வாய்ப்புள்ளது.

புறநானூற்றில் வரும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே/ உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறம்- 18: 19, 20), என்னும் பாடலால் அறியலாம். தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை (சிலம்பு. 13: 72-73) என்னும் சிலப்பதிகார வரிகளும், மணிமேகலையில் வரும் அமுதசுரபி என்னும் தொன்மக்கதையும் மண்டிணி ஞாலத்து வாழ் வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி. 11: 95- 96) என வரும் பகுதிகள் இதன் படிநிலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.

சங்கப் பாடல்களுக்கு முன் இனக்குழு வாழ்வில் நிலவிய உணவுப் பகிர்வும் புறநானுற்றுக் காலத்தில் நிலவிய உணவு கொடுக்கவேண்டும் என்னும் பதிவிற்கும் மிக நீண்ட இடைவெளியில் உருவான அரசியற் செயல்பாடுகளால் தேன்றிய கருத்து ஒரு புறம் இருக்க; சிலப்பதிகாரக் காலத்தில் விருந்து பண்பாட்டுத் தளத்தில் அமுத்தம் பெற்று, அதன் தொடர்ச்சியாக மணிமேகலையில் தொன்மக் கதைகள் உருவானதும் தொல்குடி மரபுகள் இடமும் காலமும் மாறுபடும் பொழுது அதன் இயக்கம் வெவ்வேறு தளத்தில் நகர்வதும் வரலாற்று நிலை யிலும் ஒப்பீட்டுநிலையிலும் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வள்ளலாரின் பசிப்பிணி போக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அமைந்துள்ளன. உணவு கொடுத்தல் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு வகை யான வடிவங்களில் இயங்கியுள்ளது. இது பின் வரும் அட்டவணையிலும் விளக்கப்பட்டுள்ளது.

         காலம்                                                   தளம்                                                                        பதிவுகள்

1. இனக்குழு நிலை                                   சமூக இயக்கம்                                                             பண்டமாற்றம்

2. சங்ககால நிலை                                        அரசியல்                                                         உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

3. சிலம்பு                                                     பண்பாடு                                                         தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல்

4. மணிமேகலை                                        தொன்மம்                                                                      அமுதசுரபி

5. பெரிய புராணம்                                    சமயப் பண்பாடு                                                              சைவப் பண்பாடு

6. வள்ளலார்                                             தனி மனிதர்                                                           பசிப்பிணிகளைக தத்துவம்

7. தற்காலம்                                   நாகரிகம்/உணவகங்கங்கள் அரசியல்                                        இரவு விருந்துகள்

விருந்தோம்பும் பண்பைச் சங்க அகப்பாடல் கள் உயர்வாகப் பாடுகின்றன. அதன் தொடர்ச்சி யாகவே திருக்குறளில் விருந்தோம்பல் வைக்கப் பட்டுள்ளது. அக்காலங்களில் விருந்தோம்பலுக்கு இருந்த சமூக மதிப்பும் சங்க காலத்திற்குப் பின் அது அடைந்த மாற்றத்தையும் பின்வரும் தரவுகள் விளக்குகின்றன. ஈதல் இசைபட வாழ்தல் என்னும் குறள் உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. விருந்தோம்புவதற்குச் சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும் எனப் பரிமேலழகர் குறிப்பிடுகிறார். அவை, இல்வாழ்வான் அன்புடையவனாக இருத்தல் வேண்டும்.

அதன் காரணமாகவே அன்புடைமைக்குப் பின் விருந்தோம்பல் பேசப்படுகிறது. இருந் தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி / வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 81) விருந்து கொடுக்கும்போது இன்முகத்துடன் வழங்க வேண்டும். இதன் தோற்றம் நற்றிணையில் இடம் பெற்றுள்ளது. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் (நற். 142), விருந்தயர் விருப்பினள் (நற். 361) என்ற பாடல்வரிகளால் அறியலாம்.

விருந்தோம்பலுக்குப் பின்னும் சில அடிப்படைப் பண்புகளைக் கடைபிடித்தல் வேண்டும் எனத் திருக்குறளில் வரையறுக்கப்பட்டுள்ளது. அவை இன்சொல் பேசுதல், நன்றி உணர்வோடு இருத்தல், நடுவு நிலைமை, அடக்கம், அன்பு, ஒழுக்கம், அறிவு, பண்பு ஆகியவை நிறைந்திருக்கின்ற மாந்தன் வீட்டிலேதான் உணவு உண்ணவும் விரும்புவார்கள். இவ்வகையான பகுப்புகள் பரிமேலழகரால் ஆக்கப் பட்டதாயினும் அவர் காலத்தில் இந்த நடைமுறை கள் தமிழ்ச் சமூகத்தில் பின்பற்றப்பட்டன. மேலும் இவை போன்ற நடைமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பது நிலவுடைமை சமூகச் சிந்தனையின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.

நிலவுடைமைச் சமுதாயமாக மாறுகிறபோது விருந்தினர் வாராத வீடுகள், சமூகத்தில் மதிப்பற்ற தாகக் கருதப்பட்டிருக்கலாம். அவ்வகையான வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. இழிந்த வர்கள் அல்லது குற்றம் செய்தவர்களை பஞ்சாயத் தார் ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பர். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் அருந்துவதில்லை. இந்நிலை தனிமனித அறத் தையும் வலியுறுத்துகிறது. இனக்குழுச் சமூகத்தில் பொதுப் பண்பாட்டுக் கூறாக விளங்கிய நிலை, நிலவுடைமைச் சமுதாயத்தில் தனிப்பட்ட அல்லது குடும்பம் சார்ந்த கலாச்சாரப் பண்பாட்டு மரபாக மாறியுள்ளது. இந்திரர் அமிழ்தம் இயைவதா யினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம். 182: 1-3) எனச் சங்கப் பாடல் விளக்க, திருக் குறளில் பகுத்துக்கொடுத்தல் நூலோர் (அறிஞர் கள்) தொகுத்த அறங்களில் முதன்மையானது (குறள். 322) எனும் நிலைக்கு மாற்றம் நிகழ்ந் துள்ளது.

 விருந்தோம்பலோடு இணைந்த ஈகை, தனிப் பண்பாட்டுக் கூறாகவே மாற்றம் பெறுவது சங்க காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்துள்ளது. பசிப்பிணியைப் போக்குவது பெரிய அறமாகத் தமிழ் இலக்கியம் கருதியதை மணிமேகலையில் வரும் வரிகள்1 உணர்த்துகின்றன. பசி என்று வந்தவர்கள் அனைவருக்கும் சமயம், மதம், பாராமல் வள்ளலார் உணவளித்தார். தருமச் சாலை என்ற பெயரில் இன்றும் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பல ஊர்களில் சத்திரங்கள், (சாவடி என்னும் பெயரிலும்) இருந்தன. காளமேகப் புலவர்2 இயற்றிய ஒரு பாடலில் சத்திரத்தைப் பற்றி விளக்கியுள்ளார். தமிழகத்தில் இன்று இயங்கி வரும் சைவ மடங்கள் ஒரு காலகட்டத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு உணவளிக்கும் கூடமாக இயங்கியது. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு அப்பிராமண மடம் என்றே பெயர். இவ்வாறு தனித்த அடையாளங்களோடு திகழ்ந்த இறைநிறுவனங்கள் இன்று இந்து மதத்திற்குள் இயங்குவது பற்றிச் சமூகவியல் நோக்கோடு மேலும் ஆராயவேண்டும்.

III

பண்பாட்டுத் தளத்தில் தொல்குடி எச்சம்

தமிழ் நாட்டில் சில ஊர்களில் (பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் என்னும் ஊரில்) முயல் வேட்டைத் திருவிழா நடைபெறுகிறது. அதில், முயல்கறி அனைவர் வீட்டிற்கும் பிரித்து வழங்கப் படுகிறது. வேட்டைக்கு நாயைப் பயன்படுத்தி யுள்ளனர். வேட்டைக்கு நாயை அழைத்துச் செல்லும் வழக்கம் இனக்குழுக் காலம் தொடங்கி இன்றும் வழக்கில் உள்ளது. இவ்வழக்கம் இராம நாதபுரம், ராஜபாளையம் போன்ற இடங்களில் காணப்படுகிறது. “மொசப் புடிக்கிற நாய மூஞ்சப் பாத்தா தெரியாதா?” என்னும் பழமொழி இன்றும் வழக்காறுகளில் வழங்கக் காண்கிறோம். நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மாடன் கோயில் “பரண் வெட்டு” என்னும் சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 பரண் மேல் வைத்துக் கிடாய்கள், பன்றிகள் நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பலியிடும் போது, அறுத்தும் நெஞ்சைப் பிளந்தும் வெவ்வேறு முறைகளில் பலியிடுவர். கசமாடன், சுடலைமாடன் ஆகிய தெய்வங்களுக்குக் கழுத்தை அறுத்து நெஞ்சைக் கீறி, ஈரக்குலையைப் பிடுங்கி எடுத்துப் படைய லிடுவர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் என்னும் ஊரில் பன்றியை ஊர்வலமாகக் கொண்டு சென்று அதன்பின் நெருப்பில் இட்டு அக்கோயிலின் குடிபாடுகள் அனைவருக்கும் பகுத்து வழங்கப்படுகிறது. திருச்செந்தூரில் அம்பு போடும் விழா என்னும் சடங்கு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. தென்னிந்திய மரபிலிருந்து வடஇந்திய மரபாக மாறிய கோயில்களிலும் தமிழ் மரபுசார்ந்தே பலியிடுதல் நடைபெறுகிறது. அச்சடங்கில் பன்றியை பெரிய கூர்மையான மூங்கிலில் கட்டப்பட்ட அம்பால் குத்திப் படைக்கின்றனர்.

அதன்பின் இறைச்சியைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இன்றளவும் வழக்கில் நிலவுகின்றது. மேலே குறிப்பிட்ட முயல் வேட்டைத் திருவிழா, பரண்வெட்டு, அம்பு போடுதல் ஆகியவை வேட்டைச் சமூகத்தின் எச்சங்களாகும். அவை இன்று சடங்குகளுக்குள் சென்று மக்களின் பண்பாடாக மாறியுள்ளன. சங்ககாலத்தில் நிலவி வந்த இறைச்சியைப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம் பெண்ணிடம் இருந்து இன்று ஆண்கள் பிரித்துக்கொடுக்கும் வழக்கம் ஆனதை தரவுகள் வழி அறியமுடிகிறது. இத்தகைய போக்கு தாய்வழிச் சமூகம் மறைந்து தந்தை வழிச் சமூகம் நிலைபெற்றதை உறுதிப் படுத்துகிறது.

கல்          இனக்குழுக் காலம்

அன்பு       இனக்குழுக் காலம் / குறுநில மன்னர்களின் காலம்

வில்       இனக்குழுக் காலம் / நிலவுடைமைக் காலம்

வேல்     அரசு உருவாக்கம் நிலைபெற்ற காலம்

வில், வேல், வாள் போன்றவை இன்று விளை யாட்டுத் துறையின் கீழ் இயங்குகின்றன. அதற் கான அகில உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆதிகாலத்தில் மக்கள் உயிர் வாழத் தேவையான கருவிகள் இன்று கலையாகவும், பண்பாடாகவும் மாற்றம் பெற்று விளங்குகின்றன.

உலகம் முழுவதிலும் உள்ள, நாகரிகம் அடைந்த சமூகத்திடம் உணவுப் பகிர்வுமுறை காணப்படுகிறது. ஆரியர்கள் நாடோடிகளாக இருந்தபோது அவர்களிடமும் ஒருவகையான விருந்தோம்பல் முறை நிலவியது. இதை நிலம் சார்ந்த வாழ்வியல் முறையாகக் கொள்ளலாம். ஆதிப் பொதுவுடைமைக் காலத்திலிருந்து தமிழர் களிடையே விருந்தோம்பும் பண்பு தொடர்ச்சி யாக இருந்துள்ளது. சிலப்பதிகாரக் காலத்தில் ஒரு பண்பாட்டுக் கூறாகக் கருதப்பட்டது. இது தனி மனித அறமாகவும் சமுதாய அறமாகவும் செயல் படுகிறது. இன்று இது பண்பாடாகத் தமிழர் களிடையே நிலவுகிறது.

அடிக்குறிப்பு

1. அரும்பசி களைய ஆற்றுவது (மணி. பாத்திரம் பெற்ற காதை: வரி 86)

2. காளமேகப்புலவர் பாடல்

(கத்தும் கடல்சூழ் காத்தான் தன் சத்திரத்தில் / அஸ்தமிக்கும் போது அரிசி வரும் / குத்தி உலையில் இடஊர் அடங்கும் / ஓர் அகப்பை அன்னம் இலையில் இட வெள்ளி எழும்).

தகவலாளர்:             

1. கரகம் செந்தில் (முயல் வேட்டைத் திருவிழா)

2. சுரேஷ் பரமத்திவேலூர் (பன்றிக்கறி)

கதை: 1. எது பெரிய உண்மை

விருந்து (60) அக (10) 110-12; 187- 13; 203- 16; 205- 13; 300- 21; 314-20; 353-17; 374-18; 384- 14 ஐங் (5) 396-5; 419-2; 422-2 கலி (9) 8-21; 26-12; 29-16; 32-19; 66-4; 69-13; 75-17, 27; 92-68 குறி (1) 206; குறு (4) 155-6, 204-5; 210-6; 396-6 நற் (13) 81-8; 112-1; 120-10; 121-11, 135-3, 142-9, 221-8; 247-8; 258-4; 280-9; 353-6; 361-9; 374-8; பட் (1) 262; பதி (2) 21-9; 81-37; பரி (5) 6-40, 61; 10-129; 16-16; 17; புற (8) 42-17; 62-19; 213-24; 266-11; 306-5; 326-12; 374-15; 392-19; மலை (2) 319, 496.

விருந்தின் (13) அக (2) 54-1; 241-12; ஐங்(1) 451-2 குறு(1) 33-4; நற்(4) 53-8; 103-9; 167-2; 172-7 பதி(2) 43-5; 71-19; புற(2) 46-7; 369-20; மலை (1) 539

விருந்திற்கு (2)          நற்(1) 41-6; புற(1) 316-5

விருந்தினன் (2)        குறு(1) 292-7; புற(1) 376-12

விருந்தினம் (1)         அக 112-18

விருந்துற்ற (1)          புற 166-25

விருந்துறத்து (1)       புற 381-4

விருந்தொடு (1)        கலி 81-11

தாமஸ் லெமன் சொல்லடைவை அடிப்படையாகக் கொண்டு இத்தரவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

Pin It