ravaenum nallala 450கவிதை என்பதைப் பற்றி ஒவ்வொரு காலத் திலும் சூழலுக்குத் தகுந்தாற்போல் கூறப்படும் கருத்துக்கள் மாறிக் கொண்டேயிருக்கிறது. நான் கவிஞன் என்பது முக்கியமல்ல. எழுத்துக்களை மனிதனின் சேவைக்காகவே பயன்படுத்துகிறவன் நான். அதுதான் முக்கியமானது. முதன்மையானது... என்ற மாயகோவ்ஸ்கி என்ற கவிஞரின் கூற்றுகள் சில கவிதை நூல்களின் முன்னுரைகளில் படித் திருக்கிறேன்.

கவிதை என்றால் என்ன? என்பதற்கு குறிப் பெடுப்பதைவிட எழுதப்பட்ட கவிதைகள் எந்தப் பார்வைகளில் சொல்லப்படுகிறது. அதற்காக எடுத்துக்கொள்ளும் சூழல், பயன்படுத்தும் மொழி நடைகள், சொற்களின் செறிவு வாசகனுக்கு ஏற் படுத்தும் உணர்வுகளைத்தான் இன்றைய நவீன கவிதைச் சூழல் முக்கியமாகக் கருதுகிறது.

கவிஞர் பூர்ணா தொடர்ந்து கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எளியவர். ஆனால், அவரால் எழுதப்பட்டக் கவிதைகள் வாசகனுக்கு புதுத்தேடலை உருவாக்கித் தருகிறது. மாயகோவ்ஸ்கி போன்று சொல்வதென்றால் பூர்ணா கவிஞன் என்பது முக்கியமல்ல. எழுத்துக் களை மனிதனின் சேவைக்காகப் பயன்படுத்துகிற கவிதைகளை சமூகப் படைப்பாக எழுதுகிறவன். அவ்வளவே.

தன் கவிதைகளை வாசிக்கும் வாசகனுக்கு சிறு அவநம்பிக்கைகளை கொடுத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடும் எழுதுகிறவர். அவரின் முந்தைய கவிதை நூலில் (முளை கட்டிய சொற்கள்) முளைத்தல் என்ற கவிதையில், கிளை இடுக்கில், தொட்டியில், நிலத்தில், இப்படி எங்கே விழுந்தாலும் முளைத்து, கற்றுக் கொடுக்கின்றன, வாழ்க்கைத் தத்துவத்தை விதைகள் - என்று எழுதியிருக்கிறார்.

இரவென்னும் நல்லாள் தொகுப்பில் பகலென்னும் பட்டறை என்று ஓர் முன்னுரை தருகிறார். என் அகத்தை, புறத்தை, காயப்படுத்திய இரும்புத் துண்டுகளையும், பார்வையில் பட்ட இரும்புத் துண்டுகளையும், சிந்தனை நெருப்பு கொண்டு மூளைப்பட்டறையில், கவிதை வாளாக வடித்திருக்கிறேன். இதைக் கொண்டு நீங்கள் வெங்காயம் வெட்டலாம், போர்க்கருவியாகப் பயன்படுத்தலாம், என்னைக் கூட தாக்கலாம், தயவுசெய்து கீழே போட்டுவிடாதீர்கள், எதற்காவது பயன்படுத்துங்கள்... என்கிறார்.

ஒரு பகல் பொழுதில்

உற்றுப் பார்த்தேன் மரப் பொந்தை

ஒளிந்திருந்தது

கொஞ்சம் இரவு

இக்கவிதை இரண்டாண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியில் வாசித்தது. அதன் பிறகு பகலில் மரங்களைக் கடக்கும் போதெல்லாம், இக்கவிதை நினைவுக்கு வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. நம் வாழ்நாளில் எத்தனை இரவு களை ரசித்திருப்போம். இரவுதானே வானத்தை கண்கள் கூசாமல் பார்க்க விடுகிறது. இரவுதானே லட்சக்கணக்கான நட்சத்திரங்களை எண்ண விடுகின்றன. இரவுதானே பகலில் ஒளியற்றுக் கிடந்த நிலவை உலாப் போக வைக்கிறது. இரவு தானே சில தோல் மனிதர்களுக்கு சாலையோரங் களில் உறங்க இடம் கொடுக்கிறது.

இரவு என்பது இக்கவிதையின் இறுதி நான்கு வரிகளைப் போல் ஒற்றை ஆடையை, கசக்கி உடுத்த உதவியாய் இருக்கிறது. இவ்விரவு என் பதைப் போல இவ்வுலகில் தோன்றிய எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருக்கிறது இரவு. அதனால்தானே இரவை இரவென்னும் நல்லாளாக அவரால் உருவகிக்க முடிகிறது.

பூர்ணா என்ற கவிஞரின் முகவிழிப்புகள் கிராமங்கள் சார்ந்தும், தென்மங்கள் சார்ந்தும் அவற்றின் அடிநாதமாக விளங்கும் இயற்கை அமைப்புகள் சார்ந்த வாழ்வாக இருக்கிறது. அவரின் முகவிழிப்போடு அகவிழிப்பும் சேர்ந்து கொள்ள எளிய வாழ்விலிருக்கும் அன்பையும் வலிமையையும் கவிதையாகப் பேசவைக்க இயல் பாக முடிகிறது.

முட்டுப் பழக்கி விளையாண்ட

ஆட்டுக்குட்டி நிறத்தில்

அக்காவுக்குப் புடவை

ஆசையாய் வளர்த்த

கோழிக்குஞ்சு நிறத்தில்

எனக்குச் சட்டை

புத்தாடை அணிந்துகொண்டு தேடினோம்

காணவில்லை ஆட்டையும் கோழிக்குஞ்சையும்...

கிராமங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் போட்டு வளர்ப்பதை விட அதிகமாகப் பாசம் காட்டி வளர்ப்பதை எளிதில் காணமுடியும். அப்படி ஆசையாய் வளர்த்த ஜீவன்களை விலைக்கு விற்று, தங்களுடைய பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்க்கும் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வின் மேன்மையை இக்கவிதை நமக்கு உணர்த்துகிறது.

பெண் சிசுக்கொலைகளைப் பற்றி எழுதப் பட்ட எத்னையோ கவிதைகளில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் எழுதிய கவிதைதான் பெரும் கணத்தை மனதில் ஏற்றும்.

கள்ளிப்பால்

கொடுத்த போதும்,

சிரிக்கிறது குழந்தை,

அழுகிறாள் தாய்...

இன்று பெண்சிசுக்கொலைகள் குறைந்து வருகிற சூழ்நிலையிலும் பெண் என்ற சொல், பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களை ஆட்கொண்டு உதாசீனப் படுத்தும் நிலை இன்றும் குறையாமல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. ஆனால் பூர்ணா ஒரு கவிஞராக அல்லாமல் ஒரு தந்தையாக பெற் றெடுத்த தன் பெண் மகவை பிரசவக் குறிப்புகளாக நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

பொட்டப் புள்ளையா என்றார்கள்

வெகுசாதாரணமாக

தேவதை பிறந்திருப்பதை...

குழந்தையை யாரும்

குழந்தையாகப் பார்க்கவில்லை...

என்று தொடர்ந்து நீண்டு வருகிற கவிதையில்,

பிரசவக்குறிப்பில்

எல்லாம் எழுதியாயிற்று

தாயின் வலிகளைத் தவிர...

பொட்டப்புள்ளையா என்ற மலினப்பட்ட வார்த்தையை தேவதையாக மாற்றும் பூர்ணா இறுதியில் தாயின் வலிகளைக் குறிப்பிட முடியாத சூழ்நிலையை மிகச் கச்சிதமாக இந்தச் சமூகத்தின் மீது பொறுப்பாக்குகிறார்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் கபிலர் பாடிய 99 வகைப் பூக்களில் குவளை, ஆம்பல், தாமரை, காந்தள், நெய்தல், வேங்கை, கொன்றை, வேரல், அவரை, முல்லை, ஆவிரை, புழகு போன்ற பன்னிரண்டு பூக்களை எடுத்து நவீன கவிதை நாரில் தொடுத்திருக்கிறார். இந்தப் பூக்களுக்கு முன்னுரை எழுதுவதற்காக இவற்றை எழுதவில்லை; மாறாக சமகாலத்தின் அரசியலைக் கூறுகிறார்.

குவளை மாலையைத் தலைவிக்கு

கையுறையாக அளித்தலும் மரபு

இன்னும் இரட்டைக் குவளைமுறை

இருப்பதும் மரபு.

இரட்டைக் குவளைமுறையை என்றோ நடந்த துயர நினைவுகளாகக் கொள்ளமுடியாது. இன்றும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆதிக்கவெறித்தனம் அது. 2011ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நானே நேரடியாகப் பார்த்த நிகழ்வுகள் என்னை கண்ணீர் வடிக்கச் செய்தன என்றால் மிகை யாகாது. அதைக் கவிஞர் சங்க இலக்கியத் துணை கொண்டு குவளை மலரை ஒப்பிட்டுச் சாடுவது இங்குக் கவனிக்கத்தக்கதாகும். அப்படியே வர்ணப் பிரச்சனையோடு வர்க்கப் பிரச்சினையையும் ஆம்பல் மலரோடு ஒப்பிட்டு முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழிக்கிறார்.

பஞ்சாலையில் பணிபுரியும்

நைட்சிப்ட் பெண்ணைப் போல்

பொய்கையில் நூறு பூக்கள் பூத்தது

பஞ்சாலையில் பணிபுரியும் இளம்வயதுப் பெண்கள் ஏறக்குறைய குக்கிராமங்களிலிருந்து வருபவர்கள். குறிப்பாக அவர்கள் பள்ளிப் படிப்பை தொடர முடியாதவர்கள். அவர்களை 24 மணி நேரமும் பகல் இரவு சிப்ட்டுகளாகத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே, உழைப்பை உறிஞ்சிவிட்டு சக்கையாக நோயாளிகளாகவும், நோஞ்சான் களாகவும் வெளியே துப்புகிறார்கள். திரும்பவும் மீண்டும் புதிய பருவ வயதுப் பெண்களைத் துவைத்த பின்னும் முதலாளித்துவத்தின் கறை இன்னும் போகவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது கவிதை. தமிழ் மலர் களை வைத்து எழுதப்பட்ட கவிதைகளில் முல்லை மலர் பற்றிய கவிதை சிறப்பாக அமைந்துள்ளது.

பாறையின் மேல் படரும் கொடி

கார்காலத்தில் அரும்புகள் தோன்றும்

அவை கூர்மையாக

வயிற்றைப் பதம் பார்க்கும்

சோறு போன்று ஒரே அளவாக இருக்கும்

பூக்கள் பறிக்கப் பறிக்க

கொடிகள் தலைக்கும்

தொழிலாளியை நசுக்கிநசுக்கி

முதலாளி தழைப்பதைப் போல்...

எளிமையான வாழ்வைக் கொண்டாட்டமாக எழுதும் பலர் எளிமையை விரட்டி விடுபவர்களாக இருக்கிறார்கள். பூர்ணா எளிமையோடு வாழ் வதால்தானோ எளிய மனிதர்களின் வாழ்வின் மறுபக்கத்தை நாம் சட்டென்று கடந்து போய் விடாவண்ணம் அவரது கவிதைகளில் நம்மை நிலைக்க வைக்கிறார். மனதை வருடும் விதமாக கவிதைகள் நம்மிடம் கைகோக்கின்றன. ஒரு வாழ் நிலையின் குறுகிய பிரதியையாவது கண்டடைந்த திருப்தி இரவென்னும் நல்லாளை வாசிக்கும் போது நம்முள் உருவாகிறது.

இரவென்னும் நல்லாள்

ஆசிரியர்: பூர்ணா

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

41-B, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 98

விலை: ரூ 60.00

Pin It