‘தானே’ புயல் வீசிய நாளில் நான் புதுச்சேரியில் இருந்தேன். அது வீசப் போகிறது எனத் தெரியாமலேயே, அதற்கு முதல்நாள் மாலையில் சிலுசிலுவென்று வீசிய காற்று உடலைத் தழுவியபடி இருக்க வழக்கமான நடைப்பயிற்சிக்காக மூலகுளத்திலிருந்து பெரம்பையை நோக்கிச் செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தேன்.

வழிநெடுக ஏராளமான முருங்கை மரங்களும் வேப்ப மரங்களும் பூவரச மரங்களும் நின்றிருந்தன. தாறுமாறாக கைகளை வீசி நடனமாடும் பெண்ணைப்போல காற்றின் வேகத்தில் மரக்கிளைகள் வளைந்து வளைந்து ஆடின. என்னைத் தொடர்ந்து குயிலோசை வருகிறதா அல்லது குயிலோசையைத் தொடர்ந்து நான் செல்கிறேனா எனப் பிரித்தறியமுடியாதபடி வழிமுழுதும் அந்த ஓசையைக் கேட்டு மனத்தை நிரப்பியபடி நடந்தேன். திரும்பும்போது ஐந்து அல்லது ஐந்தரை மணிதான் இருக்கும்.

ஆனால், அச்சமயத்தில் ஊரே இருளில் மூழ்குவதை ஆச்சரியத்தோடு கவனித்தேன். ஒருநாளும் பார்த்திராத அதிசயம். வேகமாக ஓடோடி வந்த ஒரு சிறுமி பளிச்சென்றிருந்த ஒரு வெள்ளைத்தாளில் கருப்பு வண்ணத்தை எடுத்து பூசிவிட்டதுபோல வானம் ஒரே கணத்தில் மாறிவிட்டது தெரு. இரவு எட்டு ஒன்பது மணி போல ஊரே இருண்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து, ம்ம் என்று ஒரு மேளத்தில் இழுப்பதுபோல காற்றின் ஒலி மாறியது. மறுகணமே அந்த ஓசை, சாமியாடும் பெண்கள் கூந்தலவிழ கண்கள் நிலை குத்தியிருக்க நாக்கைக் கடித்தபடிம்ம் என உறுமுவது போல மாற்றமுற்றது. பிறகு, கட்டுகளை அறுத்துக் கொள்ள தன் சக்தியையெல்லாம் திரட்டித் திமிறும் காளையின் சத்தமாக வீறுகொண்டெழுந்தது.  அதைத் தொடர்ந்து, எட்டுத்திசையிலும் பார்வையைச் சுழல விட்டு, வெறிகொண்டு அலையும் ஒரு வனமிருகத்தின் சீற்றம் மிகுந்த குரலாக எதிரொலித்தது.

tree wind 600வானத்தில் கூட்டம்கூட்டமாகச் செல்கிற யானைகளைப் போலவும் கரிய நிறக்குதிரைகளைப் போலவும் அடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்த மேகங்களைப் பார்த்த பரவசத்தில் வாசலிலேயே நிற்க ஆசையாக இருந்தது. ஆனால் நிற்கவே முடியாதபடி காற்றி தள்ளியது. ஒரு காகிதப்பந்தைப்போல அது என்னை கீழே தள்ளி உருட்டிச் சென்றுவிடும்போல இருந்தது. அக்கணத்தில் எதிர்பாராமல் மழை தொடங்கியது. முதலில் சில கணங்கள் ஊசித் தூறலாகவே இருந்தது மழை.

வேடிக்கையாக கையை நீட்டி உள்ளங்கையைக் குழித்து, மழை உதிர்த்த முத்துகளை ஏந்தினேன். கைக்குழி நிரம்புவதற்குள் மழை வலுத்துவிட்டது. சடசடவென எய்யப்பட்ட ஈட்டிகளைப்போல ஒவ்வொரு தாரையும் பாய்ந்து இறங்கியது. அதன் வலிமையும் அழுத்தமும் நம்ப முடியாதபடி இருந்தன. கூர்மையான வெட்டுக்கத்தி போல உடலைத் தாக்கியது மழை. அவசரமாக படியேறி வீட்டுக்குள் செல்வதற்குள் உடல்முழுதும் நனைந்து விட்டது. உடலைத் துவட்டிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு ஜன்னலருகே வந்து வேடிக்கை பார்ப்பதற்காக நின்றேன்.

மழை பெருகியபடியே இருந்தது. காற்றும் மழையும் இணைந்து ஆடும் உக்கிரமான ஒரு நடனம் மண்மீது நிகழ்ந்துகொண்டிருந்தது. சிவனும் சக்தியும் ஆடும் நடனம் என ஒரு வரி நெஞ்சில் மிதந்தது. ஒரு முழவொலிபோல அதன் தாளம் ஆவேசமாக ஒலித்தது. காற்று கிழக்கிலிருந்து சீற்றத்தோடு பாய்ந்தோடும் காளையைப்போல மேற்குநோக்கிச் சென்றது. தெறித்துப் பாயும் மழைத்தாரைகள் அம்புகளென கட்டடங் களையும் மரங்களையும் செடிகளையும் வாகனங்களையும் பூமியையும் கால்வாய்களையும் தாக்கின.

அரைமணி நேரத்தில் தெருவே மழைவெள்ளத்தில் மூழ்கி, வீட்டுச் சுவர்களை மோதிக்கொண்டு ஓடியது தண்ணீர். மின்சாரம் நின்றுவிட, மழைநீர் ஒரு கரிய குளமென மின்னுவதைப் பார்த்தேன். காற்றின் வேகம் பெருகிய போது சாலையில் எங்கோ ஒரு மரம் முறிந்துவிழும் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். சாத்தப் பட்டிருந்த கதவுகள் ஒரு மிருகம் வந்து முட்டியதுபோல அதிர்ந்தன.

நள்ளிரவுக்குப் பிறகு, காற்றின்  வேகம் சிறுகச்சிறுக அதிகரித்தது. யானைகள் பிளிறுவதைப் போல அதன் ஓசையைக் கேட்டு வயிறு கலங்கியது. ஒருவித இயலாமையுடன் தூக்கத்தை மறந்து இருள்வெளியையே பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மரம் விழும் சத்தம் கேட்டது. இருட்டில் போய்ப் பார்க்கவேண்டாம் என எங்கள் அம்மா தடுத்து விட்டாள்.

இன்னும் சிறிதுநேரத்தில், எங்கிருந்தோ ஒரு கிளை பறந்துவந்து எங்கள் ஓட்டு வீட்டின் கூரைமீது விழுந்து தாக்கியதும், ஓடுகள் உடைந்து தரையில் விழுந்தன. கூரையின் ஓட்டை வழியாக கிளையின் ஒரு பகுதி இறங்கித் தாழ்ந்துவிட, ஒவ்வொரு இலையி லிருந்தும் மழைநீர் வீட்டுக்குள் சொட்டி, தரைமுழுதும் மூழ்கி ஒரு குளமே உருவானது. வீட்டிலிருந்த அனை வரும் ஒரே மூலையில் ஒடுங்கி உட்கார்ந்தோம். வேலியோரத்திலிருந்து இன்னொரு மரம் முறிந்துவிழும் சத்தம் கேட்டது.

தயங்கித்தயங்கி பொழுது புலர்ந்து, மெல்லமெல்ல வெளிச்சம் படர்ந்தது. அலறிஅலறி மயங்கி விழுந்த மிருகமென காற்றின் சத்தம் அடங்கியிருந்தது. வெள்ளத்தால் சூழப்பட்டதுபோல, ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் முட்டிக்கால் அளவு நீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு வீட்டின் கதவும் திறக்கப்பட்டு, ஆட்கள் வெளியே வந்து நின்று பார்த்தார்கள்.

வீட்டுக்குள் தேங்கிவிட்ட தண்ணீரை எல்லோரும் இணைந்து வேலை செய்து வெளியேற்றி, இலை தழைகளை வாரிப் போட்டு, கூரையில் விழுந்துவிட்ட மரக்கிளையை கயிறுகட்டி இறக்கிவிட்டு, சரிசெய்த பிறகுதான் தோட்டத்தின் பக்கம் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு தென்னைமரத்தில் நாலுபக்கம் விரிந்து பரந்திருந்த கீற்றுகள் கொத்தோடு பிடுங்கப்பட்டு பறந்து போய் தொலைவில் விழுந்திருக்க, ஒரு கம்பம்போல மரம்மட்டும் நின்றிருந்தது. எலுமிச்சைமரம் வேரோடு சாய்ந்திருக்க, மாமரத்தில் ஒரு பக்கமாக இருந்த கிளைகளெல்லாம் பிடுங்கப்பட்டு பறந்துபோயிருந்தன. கனகாம்பரச் செடிகளும் ரோஜாச் செடிகளும் நிலை குலைந்து கூளமாகக் கிடந்தன. அவற்றை ஒழுங்குசெய்து முடிக்கவே மாலை நான்குமணியாகிவிட்டது. மின்சாரம் வரவில்லை. தொலைபேசி வேலைசெய்யவில்லை.

ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு வருவதற்காக வெளியே சென்றேன். வானிலிருந்து மீண்டும் மென்தூறலாக மழை மறுபடியும் தொடங்க, மேகங்களின் மெல்லிய உறுமலொலி கேட்டது. சற்றே அச்சம் அரும்பினாலும் நடக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு தெருவும் எதிரிகளால் சூறையாடப்பட்ட தேசம்போல இருந்தது. குடிசைகளின் கூரை பறந்து போயிருக்க, சுவர்கள் சரிந்து விழுந்திருந்தன. 

அங்கங்கே தண்ணீரின் தேக்கம். ஏராளமான மரங்கள் வேரோடு தரையில் விழுந்துகிடந்தன. நின்றுகொண்டிருந்த ஒரு சில மரங்கள் பாசிச வாயுவால் தாக்கப்பட்டவர்களின் உடல்போல, ஒருபக்கம் முறுக்கிக்கொண்டு நின்றன. மதில்கள் உடைந்திருந்தன. மின்கம்பிகளும் தொலை பேசிக் கம்பங்களும் வழிநெடுக விழுந்திருக்க, கம்பிகள் தாறுமாறாகத் தொங்கிக் கிடந்தன.

ஒருசில காகங்கள் திசையறியாது குழம்பியவை போல, கரைந்தபடி அலைந்தன. பலர் மழையிலேயே இறங்கி நின்று தத்தம் வீடுகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். வாகனங்கள் குளமென தேங்கியிருந்த நீரில் வாத்துகள் போல நீந்திக் கடந்தன.

என் வாழ்நாளிலேயே இப்படி ஒரு மழையையும் காற்றையும் பார்த்ததில்லை என சந்திக்க நேர்ந்த அனைவரும் சொன்னார்கள். அதைச் சொல்லும்போது அவர்கள் கண்களில் படிந்திருந்த பீதி, அழியாச் சித்திரமென நெஞ்சில் பதிந்துவிட்டது. என் அம்மாவும் அதையே சொன்னாள். அன்று இரவு படுக்கப் போகும் வரை நானும் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று எப்போதோ படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த

போது, இதே போல ஒரு மழையையும் புயலையும் அவர் பார்த்திருக்கிறார். அந்த மழையாலும் காற்றாலும் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர் ஓடியோடி வேலை செய்திருக்கிறார். கஞ்சித்தொட்டி திறந்து உணவை வழங்கியிருக்கிறார்.

இறந்து அங்கங்கே சவமாக விழுந்து கிடந்த காகங்களின் உடல்களைத் திரட்டி, குழிதோண்டி புதைத்திருக்கிறார். அன்றைய பேய்மழையைப்பற்றி பாரதியார் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்பதுகூட நினைவுக்கு வந்துவிட்டது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட என்று தொடங்கும் அப்பாட்டின் தாளம் கூட நினைவுக்கு வந்தது. சொல்லும்போதே அந்தத் தாளம் நெஞ்சில் மழையின் தாரைகள் விழுந்து அதிர்ந்தன.

மழையின் பொழிவை விசைமிகுந்த ஒரு நடனமாகவே மாற்றிவிடுகிறது அத்தாளம். வீட்டுக்குத் திரும்பும்வரைக்கும் அந்தத் தாளம் என் நரம்புகளில் அதிர்ந்தபடி இருந்தன.

மின்சாரம் இன்னும் திரும்பவில்லை. மெழுகு வர்த்தியை ஏற்றி, அந்த வெளிச்சத்தில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தைத் தேடியெடுத்து, பக்கங்களைப் பிரித்தேன். ‘மழை’ என்னும் தலைப்பில் அமைந்த அக்கவிதையின் வரிகளில் விழிகள் பதிந்தன.

திக்குகள் எட்டும் சிதறி- தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்

பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட

தக்கந் ததிங்கிடதித்தோம் - அண்டம்

சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு

தக்கையடிக்குது காற்று - தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

படிக்கப்படிக்க முதல் நாள் இரவு முழுதும் நான் கேட்ட காற்றின் ஓசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. நிச்சயமாக அது ஒரு தாண்டவமே. அந்தத் தாளம்.

அந்த வேகம். அந்த ஆர்ப்பாட்டம். அந்தச் சத்தம். தாண்டவத்தின் வேகத்தை பாரதியார் வரிகளாக மாற்றி வடித்திருக்கும் நுட்பத்தில் அவருடைய கவியாளுமை வெளிப்படுவதை உணரமுடிகிறது. மொத்தம் மூன்று பகுதிகளாக உள்ளது அப்பாடல். முதற்பகுதி காற்றின் உருவத்தை முன்வைக்கிறது. இரண்டாம் பகுதி காற்றின் செய்கைகளை முன்வைக்கிறது. மூன்றாம் பகுதி காற்றின் சக்தியை ஒரு தரிசனமாக மாற்றி முன்வைக்கிறது.  மூன்றும் இணைந்து காற்றின் தாண்டவமாகிறது.

பித்தேறிய மனநிலையில் அந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தபடியே இருந்தேன். ஆறேழுமுறை சொல்லிப் பார்த்ததும், அது மனப்பாடமாகவே மாறிவிட்டது. தீம்தரிகிட தீம்தரிகிட என எனக்குள் ஓர் உருவம் தாண்டவமாடத் தொடங்கியது. மாலை நடையில் பார்க்கநேர்ந்த கொடுமையான காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வரியின் தீவிரத்தை உணர்த்திய படியே இருந்தது.

உறங்கப் போகும் முன்பாக, மீண்டும் அந்தக் கவிதையைப் பிரித்துப் படித்தேன். அப்போது தான் அன்றைய பேய்மழையைப் பற்றி அவர் அடுத் தடுத்து மூன்று பாடல்களை எழுதியிருப்பதைக் கவனித் தேன். மழை பாடலைத் தொடர்ந்து, புயற்காற்று, பிழைத்த தென்னந்தோப்பு ஆகிய பாடலையும் அவர் எழுதியிருக்கிறார். இடைவிடாமல் பெய்த பெரு மழையிலும் காற்றிலும் புதுச்சேரியில் இருந்த தோப்புகளும் மரங்ளும் எல்லாம் அழிந்துவிட, ஒரே ஒரு தென்னந்தோப்பின் பெரும்பாலான பகுதி மட்டும் அதிர்ஷ்டவசமாக பிழைத்துவிட்டது.

அந்தத் தோப்பைப் பற்றி அவர் எழுதிய பாடல், நன்றிசொல்லும் பரவசத் தோடு அமைந்திருந்தது. புயற்காற்று என்னும் பாடல் புயலைப்பற்றி ஒரு கணவனும் மனைவியும் உரையாடிக் கொள்ளும் முறையில் எழுதியிருக்கிறார்,  மூன்று பாடல்களையும் ஒருசேர ஒருமுறை படித்து முடித்தேன். அவற்றில் தீம்தரிகிட பாட்டு மட்டும் என் நெஞ்சில் ஆழமாக வேரூன்றிவிட்டது. ஒவ்வொரு சொல்லும் ஒரு நடனக்காரி கால்மாற்றி வைக்கும்போது எழும் சலங்கையலியாக ஒலித்தது.

இரவு உணவுக்குப் பிறகு, பாரதியாரின் பாட்டை மீண்டுமொருமுறை பிரித்துப் படித்தேன். ஒவ்வொரு வரியையும் அதையட்டி மனத்தில் விரிவடையும் காட்சியையும் இணைத்துப் பார்த்தபடி படித்தேன். திக்குகள் எட்டும் சிதறி என்ற முதல் வரியிலேயே காற்றின் வீச்சும் வேகமும் வந்துவிடுகின்றன. தீம்தரிகிட தீம்தரிகிட என அடுக்கும்போது, காற்றின் திசைமாறிச் சுழலும் ஆட்டம் சுட்டிக் காட்டப்பட்டுவிடுகிறது. பக்க மலைகள் உடைந்து என தொடரும்போது, காற்றின் வேகத்துடைய விளைவு இடம்பெற்றுவிடுகிறது.

வெள்ளம் பாயுது பாயுது என நகரும்போது காற்றுடன் விசைமிகுந்த மழையும் சேர்ந்துகொள்கிறது. காற்றின் சக்தியும் மழையின் சக்தியும் சேர்ந்த கூட்டுச்சக்தியின் விளைவை அதற்கடுத்த வரிகளில் காட்சிப்படுத்தப் படுகிறது. பேய்கொண்டு தக்கை அடிக்குது காற்று என்ற வரியை மனம் படித்ததுமே, விழி நிலைகுத்தி நின்று விட்டது.

அது காட்சியாக என் மனத்தில் விரியவில்லை. தூக்கி அடிக்குது காற்று என்பதையும் தக்கையாக இருப்பதையெல்லாம் தூக்கியடிக்குது காற்று என் பதையும் காட்சிப்படுத்திக்கொள்ள முடிந்த மனம் தக்கையடிக்குது காற்று என்பதைக் கண்டு திகைத்து ஒருகணம் ஒன்றும் புரியாமல் குழம்பிவிட்டது. என்ன என்ன என மனம் குடைந்தபடி இருந்தது. அதன் பொருளைப் புரிந்துகொள்ளாமல், என்னால் அடுத்த வரியை நோக்கி நகரமுடியவில்லை.

படித்த பாடல், புரிந்த பாடல் என நான் நினைத்துக்கொண்டிருந்த எட்டு வரிகளுக்கு நடுவே இப்படி ஒரு புதிரான சொல் இருக்குமென நான் எதிர் பார்க்கவில்லை. விடையைக் கண்டறிந்துவிடும் தவிப்பில் அந்தச் சொல்லை மீண்டும்மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தேன். நிலையில்லாமல் இங்குமங்கும் நடந்தபடி இருந்த என்னைப் பார்த்த என் அம்மா என்ன விஷயமென்று கேட்டாள்.

முதலில் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என சொல்ல மறுத்துவிட்டாலும், அவளுடைய வற்புறுத்தலுக்கு இணங்கி என் ஐயத்தைப் பகிர்ந்துகொண்டேன். அவள் சிறிதுநேரம் யோசித்து விட்டு, “அதுவும் ஒரு தாளம்தான்” என்று சொன்னாள்.

“அது எப்படி?” என்று கேட்டேன் நான்.

“மொதல்ல தீம்தரிகிடன்னு சொல்றாரு, அப்புறம் ததிங்கிடத்தோம்ன்னு சொல்றாரு. கடைசியா தாம்தரிகிடன்னும் சொல்றாரு. அந்தமாதிரி இதுவும் ஒரு தாளம்போடறமாதிரி ஒரு சொல்லு...” என்றாள் அம்மா.

“இதுல தாளம் எங்கம்மா வருது?”

“தக்காதக்கான்னு ஆடறான், தக்காபுக்கான்னு ஆடறான்னு சொல்றமில்ல, அதைத்தான் அவர் தக்கைன்னு சுருக்கி சொல்லியிருக்கணும்.”

“தக்காவுக்கும் தக்கைக்கும் வித்தியாசம் இல்லையா?”

“அதெல்லாம் ஒன்னும் வித்தியாசம் இல்லை. எதுகைக்கும் மோனைக்கும் பொருந்தறமாதிரி மாத்தி யிருக்கலாம்” அம்மா தீர்மானமாகச் சொன்னாள்.

ஒருசில நிமிஷங்கள் நானும் அந்தத் திசையில் யோசித்துவிட்டு அம்மாவை மீண்டும் அழைத்தேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

“தாளமா சொல்லவேண்டிய வரியில, அந்தத் தாளத்தயே அப்படியே வரியா மாத்திடறாரு. வேற ஒரு வார்த்தை அந்த வரியிலயே இல்லை. அதயும் நாம கவனிக்கணும். மூணுவிதமான தாளத்த மூணுவிதமான வரியில சொல்றவரு, தக்காதக்கா தாதக்காங்கற தாளத்தயும் வரியாவே தாராளமா சொல்லியிருக்கலாமே. அப்படி சொல்லாம வெறும் தக்கைன்னு ஒரு சொல்லா பயன்படுத்தறாருன்னா, அது தாளத்தை குறிக்கலைன்னு நெனைக்கறேன்...”

“அப்படின்னா, வேற எத குறிக்குது?” என்று கேட்டபடி அம்மா என்னை ஆழமாகப் பார்த்தாள்.

“தெரியலைம்மா, அததான் யோசிக்கணும்.”

“என்னமோப்பா, எனக்கு தெரிஞ்சத நான் சொன்னேன். இதுக்கு மேல நீயே யோசி” என்றபடி அம்மா தூங்குவதற்குச் சென்றுவிட்டாள். வெகுநேரம் அந்தச் சொல்லையே முணுமுணுத்தபடி, யோசனைக்குள் மூழ்கியிருந்தபடி, தூங்கியது எப்போது என அறியா மலேயே தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை நடையின்போதும் அந்தச் சொல் அடிக்கடி என் நினைவுக்கு வந்தபடி இருந்தது. விடையை நெருங்கவே முடியவில்லை. காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, நண்பர்களைச் சந்திக்கச் சென்ற இடத்தில், இந்த ஐயத்தை முன்வைத்து உரையாடலைத் தொடங்கினேன். அனைவரும் அன்றுதான் முதன் முதலாக அந்தச் சொல்லைக் கேட்டதுபோல குழம்பினார்கள்.

புருவத்தைச் சுருக்கியபடியும் நெற்றியைத் தேய்த்தபடியும் யோசித்துச் சொன்ன பதில்கள் எதுவும் மனமொப்பும்படியாக இல்லை. அவர்கள் வேறு சில நண்பர்களுடன் கைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டார்கள். அவர்களாலும் அதற்குத் தகுந்த பதிலைச் சொல்லமுடியவில்லை.

ஏறத்தாழ ஒரு வாரம் ஓடிவிட்டது. நான் ஊருக்குத் திரும்பவேண்டிய நாள் நெருங்கிவிட்டது. ஒரு நண்பரிடம் ஏற்கனவே சில புத்தகங்கள் கேட்டிருந் தேன். எதிர்பாராமல் அன்று காலையில் தொலை பேசியில் தொடர்புகொண்டு, அன்று சாயங்காலம் உஷ்டேரிக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வந்து சந்திக்கும்படி சொன்னார். சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, புத்தகங்களைப் பெற்றுச் செல்லலாம் என்றார்.

சாயங்காலம் அவர் குறித்த நேரத்தில் உஷ்டேரிக்குச் சென்றுவிட்டேன். மழையில் ஏரி நிரம்பி கடல்போல காணப்பட்டது. ஏரிக்கரையோரமாக ஒரு பாறைமீது அமர்ந்தபடி நீர்ப்பரப்பைப் பார்த்தேன். அவ்வளவு விரிந்த பரப்பளவில் நீர்ப்பரப்பைப் பார்த்தபோது மனம் பேதலிப்பதுபோல தத்தளித்தது. நிலைநிறுத்திப் பார்க்கமுடியாமல், சட்டென வானத்தை அண்ணாந்து பார்த்தேன்.

ஒரு பெரும்சேனைபோல கூட்டமாக பறவைகள் மேற்குநோக்கிப் பறந்துகொண்டிருந்தன. முதலில் சுருங்கி, நுனிப்பக்கம் விரிந்த அவற்றின் இறகமைப்பு விசித்திரமாகத் தோன்றியது. ஆறேழு சிறுவர்கள் காகிதத்தில் கப்பல் செய்து கரையோரம் மிதக்கவைத்தபடி இருந்தார்கள். கப்பல்கள் மிதந்தலையத் தொடங்கியதும் அவர்கள் உற்சாகமாகக் குரலெழுப்பிக் குதித்தார்கள். ஒரு சிறுவன் அங்கே நான் உட்கார்ந் திருப்பதை கண்ஜாடையாலேயே சுட்டிக் காட்டியதும், சிறுவர்களின் ஆரவாரம் சட்டென அடங்கியது.

உடனே நான் அவர்களைக் கவனிப்பதைத் தவிர்த்து, பார்வையை மீண்டும் நீர்ப்பரப்பின்மீது  திருப்பினேன். அப்போதுதான் அலைகளின் ஓசையை முதன்முதலாகக் கேட்பதுபோலக் கேட்டேன். அந்த ஓசை ஒருவித பரவச உணர்வைத் தூண்டுவதாக இருந்தது. பானையில் மோர் கடையும்போது எழும் ஓசையைப்போல சளக்சளக்கென அதன் சிற்றலைகள் கரையில் மோதியுடையும் அந்த ஓசையில் ஒருவித தாளமும் லயமும் இருப்பதைக் கவனித்தேன். பிறகு, மெல்லமெல்ல அந்த ஓசை ஏதோ ஒரு பறவை எழுப்பும் ஒலிபோலத் தோன்றியது. 

அப்போதும் அந்த லயத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை. உடனே அதில் ஆழ்ந்துவிட்ட நான், அந்த ஓசையை ஒரு வரிவடிவமாக மாற்றமுடியுமா என்னும் முயற்சியில் இறங்கினேன். எழுத்துகளின் சேர்க்கைக்கு அடங்காததாக இருந்தது அந்த ஓசை. அந்தக் கணத்தில் அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. நெஞ்சின் ஆழத்தில் ஓடும் அந்த வரியைத் துழாவி எடுக்க மனத்தைத் தூண்டியபடி இருந்தேன்.

“டேய் தனபாலு, அந்த தக்கை செடிய நவுத்தி உடுடா. கப்பல் போவற வழிய தடுக்குது பாரு” என என் அருகிலிருந்த சிறுவனின் கூச்சல் என்னைச் சட்டென கலைத்தது. நான் வேகமாக அவன் பக்கமாகத் திரும்பினேன்.

“போதாது, போதாது, தக்கை செடிய இன்னும் கொஞ்சம் எடய தள்ளி உடு. எல்லாருக்குமே வசதியா இருக்கும்.”

அவன் சொற்கள் மீண்டும் ஒலித்தன. அவன் சொன்ன தக்கை என்னும் சொல் கோயில் மணிபோல என் நெஞ்சில் மீண்டும் மீண்டும் அடித்தது. நான் அவன் அருகில் சென்று “என்னடா சொன்ன?” என்று மெது வாகக் கேட்டேன். அவன் உடனே பயந்தவனாக, “ஒன்னு மில்லைண்ணே, சும்மா ஏதோ சொன்னண்ணே...” என்றான். தக்கை அடிக்குது காற்று என்ற பாரதியாரின் வரி நெஞ்சில் ஒலிக்கத் தொடங்கியது.

அவன் அச்சத்தைப் போக்குவதற்காக முதலில் சில நிமிடங்கள் அவனிடம் பொதுவாகப் பேசினேன். அவன் ஊர், அவன் படிப்பு, அவன் விளையாட்டு என எப்படி எப்படியோ பேச்சை வளர்த்து அவனை இயல்பான நிலைக்குத் திருப்பினேன். அருகில் இருந்த ஒரு பெரிய தாளை எடுத்து, ஒரு பெரிய கப்பலைச் செய்து அவர் களிடம் நீட்டிய பிறகுதான் அவர்கள் என்னைப் பார்த்து நட்புடன் சிரிக்கத் தொடங்கினார்கள். நான் மெதுவாக உரையாடலை பழைய கேள்வியை நோக்கித் திருப்பினேன்.

“என்னமோ செடிய தள்ளுன்னு சொன்னியே, அது என்னடா?”

“அது ஒன்னுமில்லண்ணே, அதோ ஓரம் பூரா வளர்ந்து கெடக்குதே, அத தள்ளி உடுடான்னு சொன்னன். அப்பதான நம்ம கப்பல் நேரா போவும்.”

“அதுக்குப் பேர்தான் தக்கை செடியா?” நான் ஒரு பெரிய பச்சைப்போர்வைபோல பரவி வளர்ந்திருந்த நீர்த்தாவரத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன்.

“ஆமாண்ணே” எல்லோரும் ஒரே குரலில் சொல்லிவிட்டு “எனக்கும் ஒரு பெரிய கப்பல் செஞ்சி குடுங்கண்ணே” என ஆளுக்கொரு தாளை எடுத்து என்னிடம் நீட்டினார்கள்.

ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, அந்தச் செடிகளை ஒருமுறை பார்த்தேன். பிறகு புன்னகையோடு விரிந்த நீர்ப்பரப்பையும் வானத்தையும் பார்த்தேன். சிறுவர்களுக்குக் கப்பல்களைச் செய்தபடி பாரதியாரின் வரிகளை மீண்டும் மனத்தில் ஓடவிட்டேன்.

தக்கந் ததிங்கிடதித்தோம் - அண்டம்

சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு

தக்கையடிக்குது காற்று - தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

முதலில் காற்றின் விசை. பிறகு மழையின் விசை. அடுத்து காற்றும் மழையும் கலந்துவீசும் விசை. மழையால் நிறைந்த வெள்ளத்தில் மிதக்கும் தக்கைச் செடிகளை பேய்க்காற்றின் விசை தாக்கிக் கலைக்கிறது. செடிகளைக் கலைத்துத் தாண்டவமாடும் கால்களை என் மனத்தில் தீட்டிப் பார்க்கமுடிந்தது. அந்தக் கால்களில் கட்டப்பட்டிருந்த சலங்கைகளின் ஒலி அண்டம்முழுதும் பேரோசையாக ஒலிக்க, தாம்திரிகிட தாம்திரிகிட தாம்திரிகிட தாம்திரிகிட என விரையும் நடனக்காட்சியும் பொங்கியெழுவதை உணர்ந்து பரவசமுற்றேன். தண்ணீரையே பித்துப்பிடித்தது

போல பார்த்துக்கொண்டிருந்த என் தோள்களைத் தொட்டு அசைத்த நண்பன் “என்னடா, உலகத்தயே மறந்துட்டியா? அப்படி என்னடா சிந்தனை?” என்று சிரித்தபடி கேட்டான். தொடக்கத்திலிருந்து ஒவ் வொன்றாக எல்லாவற்றையும் அவனிடம் சொல்லத் தொடங்கினேன் நான்.

Pin It