S.R.K 300தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழி அறிஞர், கல்வியாளர், மார்க்சீய சிந்தனையாளர், மேடைப் பேச்சாளர், மொழி பெயர்ப்பாளர் - என்று பல பரிமாணங்களைக் கொண்டிருந்த எஸ்.ஆர்.கே., 1960-70களில் மதுரையின் அறிவுலகப் பிரதிநிதி களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். 

மதுரை வடக்கு மாசிவீதியில் செயல்பட்டு வந்த அவருடைய துணைவியார் டாக்டர் கமலா ராமகிருஷ்ணனின் மருத்துவமனையின் மேல் அறையில், அவர் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் கற்பித்த காலகட்டம், மதுரையின் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்த இடத்தை வரித்துக் கொள்ளக்கூடியது. 

பட்டம் பெறும் அவசரத்தில் இருந்தவர்களைத் தவிர, இலக்கியத் தேட்டம் உடைய பலரும் ‘கூடியிருந்து குளிர்ந்த’ அனுபவம் பெற்ற இடம், அந்த மருத்துவமனை மேல் அறை. 

ஷேக்ஸ்பியரின் ‘புயல்’ நாடகத்தில் பிராஸ்ப்பிரோ சிருஷ்டித்த மாயத்தீவின் தோற்றம், அந்த அறையின் மீது கவிந்திருந்தது. 

தன்னுடைய மந்திரச் சொல் ஆற்றலால் ஸ்பென்சர், ஷேக்ஸ்பியர், மார்லோ, ஜான்டண், வர்ட்ஸ்வர்த், கீட்ஸ், ஷெல்லி, ராபர்ட் ப்ரௌணிங், ஹாப்கின்ஸ், எமிலிடிக்கின்ஸன், ஜேன் ஆஸ்டின், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ்.இலியட் - என்று பல நூற்றாண்டுக் கால இலக்கியகர்த்தாக்களை அந்த அறையில் இயல்பாக உலவவிட்டவர் அறிஞர் எஸ்.ஆர்.கே. வாரம்தோறும் சனிக்கிழமை மாலை தொடங்கி, ஞாயிறு இரவு வரை இலக்கியக் கூடலாக அந்த அரங்கம் உருமாற்றம் அடைந் திருக்கிறது என்பதை மீள்பார்வையில் உணர முடிகிறது.

ஒற்றை மனிதரின் ஆட்டமாகவே அந்த வகுப்புகள் அமைந்தன என்ற போதிலும், சலிப்பின் நிழல் அவற்றில் படியாமல் பார்த்துக்கொண்டது, எஸ்.ஆர்.கே. என்ற ஆளுமையின் ஆழ்ந்த புலமையும், இயல்பான வெளிபாட்டுத் திறமையும் தான் என்று தோன்றுகிறது. 

‘அற்ப அறிவு பேரபாயம்’ என்ற அலெக்ஸாண்டர் போப்பின் வரியை அடிக்கடி மேற்கொள் காட்டும் எஸ்.ஆர்.கே., தன்னுடைய பரந்த இருமொழிப் புலமையை சரியான அளவில் கலந்து கொடுப்பதன் மூல மாகவும், கூர்மையான நடப்பு விமரிசனங்கள் வாயிலாகவும் மாணவர்களின் கவனத்தில் தொய்வு நேராமல் பார்த்துக் கொள்வார். 

மில்டன், கம்பன், ஷேக்ஸ்பியர், இளங்கோ, ஷெல்லி, பாரதி - என்று எல்லோரும் இயல்பாய்த் தோள் உரசி நிற்பார்கள் அவருடைய வகுப்பறையில். எந்தப் படைப்பையும் ஒட்டுமொத்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கப் பழக வேண்டும் (SURVEY THE WHOLE) என்பது எஸ்.ஆர்.கே.  அடிக்கடி வலியுறுத்திய கோட்பாடுகளில் ஒன்று. 

ஜான் மில்டனின் ‘துறக்க நீக்கம்’ காவியத்தில் புத்தகம் 4 அல்லது 9 தான் பெரும்பாலும் பாடப் பகுதியாக வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால் நேராகப் பிரதியினுள் நுழைய மாட்டார் எஸ்.ஆர்.கே.  காவியம் பற்றிய பொதுச் சித்திரத்தைப் பெரிய திரைச் சீலையில் வரைந்துகாட்டக்கூடிய வாசிப்பு அனுபவத் திறன் அவருக்கு இருந்தது. 

ஹோமர், இளங்கோ, கம்பர், டாண்டே - என்று பல்வேறு காவியக் கலைஞர்களின் உலகத்தில் பயணம் செய்த பின்னர்தான் மில்டனிடம் வருவார் அவர்.  பரந்துபட்ட காவிய மரபில், ‘துறக்க நீக்க’த்தின் இடம் எது என்பதைத் தானாக நிர்ணயம் செய்து கொள்ள ஒரு இலக்கிய மாணவனுக்குப் பெரிதும் உதவக்கூடியது அந்த அனுபவம்.

‘நேர்மையான விமரிசனமும், உயிர்ப்பான ரசனையும் படைப்பாளியை நோக்கியது அல்ல; படைப்பை நோக்கியதே’ என்ற மாத்யூ ஆர்னால்டின் கருதுகோளையும் எஸ்.ஆர்.கே பெரிதும் மதித்தார்.  அதனால்தான் படைப்புகளை அணுகும் போது, அவருடைய சித்தாந்தச் சார்பு இடையில் நுழைந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.  இருண்மையும், கசப்பும் அவருக்கு உவப்பானவை அல்ல என்ற போதிலும், ‘பாழ்நிலம்’ கவிதை மீது அவர் செலுத்திய பல மணிநேர வகுப்பறை - கவனமும், அவர் அளித்த பல பக்க விளக்க உரைக் குறிப்பும், படைப்பின் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பை உணர்த்தின. 

இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் சில இலக்கிய ஆளுமைகள் மீது அவரது அபிமானம் சற்றுக் கூடுதலாக இருந்ததை யூகிக்க முடிகிறது.  மில்டன், வர்ட்ஸ் வர்த், கீட்ஸ், ராபர்ட் ப்ரௌணிங், யேட்ஸ் - முதலான கவிஞர்களும், சார்லஸ் லேம்(ப்), அடிஸன் - போன்ற கட்டுரையாளர்களும் அவருடைய மனத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கலாம். 

மழையும், சூரிய ஒளியும் மாறி மாறி வரும் லண்டன் நகர வானிலை போல, புன்முறுவலும் கண்ணீரும் அடுத்தடுத்துத் தருவிக்கக் கூடிய சார்லஸ் லேம்(ப்) கட்டுரைகளின் மீது அவருக்கு அலாதியான பிரியம் இருந்தது.  அந்தப் பிரியத்தை மாணவர்களுக்கும் கடத்திவிட முடிந்தது அவரால்.  ஒரு எஸ்.ஆர்.கே. மாணவன், வாழ்நாள் சார்லஸ் லேம் (ப்) ரசிகன் என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு.

தனிப்பட்ட முறையில் சொல்வதானால், 12-3-1978 என்னைப் பொறுத்தவரை மறக்க முடியாத வகுப்பு நாள்.  காலையில் தொடங்கி, இரவு நெடு நேரம் வரை எமிலி டிக்கின்ஸனின் கவிதைகளை எஸ்.ஆர்.கே. அறிமுகம் செய்த அந்த ஞாயிறு, ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு என்றே உணர்கிறேன்.

‘தன்னுடைய சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா.

பின் அடைத்து விடுகிறது கதவை’

என்ற எமிலியின் வரிகள் தாக்கிய கணம் நினைவில் உறைந்திருக்கிறது.  வலியின் புதிர் நிறைந்த எமிலியின் உலகிற்குள் எஸ்.ஆர்.கே. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.  உறவும், பிரிவும், மரணமும், அமரத்துவமும் மனக்கண்முன் விரிந்து கொண்டிருக்கின்றன. 

‘துறக்க நீக்க’த்தில் பான்டி மோனிய விவாதத்தில், வீழ்ந்த தேவன் பீலியாவைப் பற்றி மில்டன் குறிப்பிடுவது போல, அவர் நாவிலிருந்து அமுதம் என விழுந்து கொண்டிருக் கின்றன சொற்கள்.

‘அந்த விலைமதிப்பற்ற சொற்களை அவன் அள்ளி உண்டான்

வலிமை பெற்றது அவனது ஆன்மா

தான் ஏழை என்பதையோ

தனது வடிவம் புழுதி என்பதையோ

அதன்பின் அவன் அறிய மாட்டான்

இருள்அடைந்த நாட்களின் ஊடாய் அவன் நடமாடிச் சென்றான்’

- (எமிலி டிக்கின்ஸன்)

அஸ்தமன சூரியனைக் கடந்து இரவுக்குள் சென்று கொண்டிருக்கிறது வகுப்பு.  ஜெயகாந்தன் கதையில் வரும் சிந்தனைவயப்பட்ட ஆணைப் போல, முன் நெற்றியில் விழும் சிகையை இயல்பாக ஒதுக்கியவாறு, எமிலியின் உள்முக உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஆர்.கே. இரவில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது வடக்கு மாசி வீதி மருத்துவமனையின் மேல்அறை.

Pin It