மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயராது தோழர்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியத் தலைவர்களுள் ஹிரனும் ஒருவர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நேரு உட்பட முக்கிய தலைவர்கள் அவரது உரையை கவனமாகக் கேட்டனர். அவரது சொற்செறிவும் ஆழமும் மிகுந்த ஆங்கிலம் நேருவை மிக அதிகமாகக் கவர்ந்தது. அவரது பெங்காலி, உருது மொழியாற்றலும் பிரமிக்கத் தகுந்தவை. நாடாளுமன்றத்தில்  இடதுசாரிகளின் மனசாட்சி என அவர் கருதப்பட்டார்.

ஹிரன்முகர்ஜி பார் அட் லா பாரிஸ்டர் பட்டம்பெற்று 1934இல் இந்தியா திரும்பினார். சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுரையை ஏற்று ஆந்திரா பல்கலைக்கழகத்தில் வரலாறு அரசியல் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பிறகு கல்கத்தா சுரேந்திரநாத் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியத்துவங்கினார். கல்கத்தா பல்கலைக்கழக இலாகாத்துறை தலைவராக 1940இல் உயர்ந்தார். 1936இல் தோழர் பி சி ஜோஷி பிற நண்பர்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சோவியத்நண்பர்கள் அமைப்புகளில் செயல்படுகிறார். கட்சியில் வங்க மாநில கமிட்டியில் ஆரம்பத்தில் செயல்பட்டுவந்தார். பின்னர் 1958-68களில் தேசிய கவுன்சிலில் செயல்பட்டார். முதல் நாடாளுமன்ற தேர்தல் துவங்கி  5வது லோக்சபா 1977வரை 25 ஆண்டுகள் ஹிரன் முகர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1990இல் பத்மவிபூஷனும் 1991இல் பத்மவிபூஷனும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஹிரனின் காந்திய ஆய்வும், இ.எம்.எஸ் அவர்களின் மகாத்மா இசம் என்கிற ஆக்கமும் வெளியாயின. இங்கு  இடம்பெற்றுள்ள கட்டுரையில் காந்தி குறித்த ஹிரன் முகர்ஜியின் ஆய்வு சுருக்கமாக விளக்கப்படுகிறது.

காந்தியின் பெருமிதமே அவரது அச்சமற்ற  தன்மையில்தான் இருக்கிறது. பேச சக்தியற்ற மக்களை நியாயம் கேட்கத்தெரிந்த மனிதர்களாக உயர்த்தினார் காந்தி. திரண்டு தங்களால் போராட இயலும் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். மற்ற மாபெரும் மனிதர்களைப்போலவே அவர் உலகிற்கு உரியவரானார்.

நாங்கள் புரட்சிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் எங்களில் பலர் மகாத்மா காந்தியின் நேரடியான அல்லது மறைமுக சீடர்களாகவே இருக்கிறோம் என ஏப்ரல் 7, 1958இல் வியத்நாமின் ஹோசிமின் கூறினார். மார்க்சிய அறிஞரும் இந்திய விடுதலைக்கால நிகழ்வுகளை உற்றுநோக்கி இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வழி காட்டியாக இருந்தவருமான ரஜனிபாமிதத், காந்தியை முதலாளிகளின் முகமூடி என 1939இல் குறிப்பிட்டது சற்றுக் கடுமையானது .

மற்ற எல்லோரையும்விட காந்தியால்தான் மக்களை போராட்டப் பாதைக்கு அழைத்துவரமுடிந்தது. அதேபோல் புரட்சி அளவிற்கு அது போய்விடாமல் தடுக்கவும் முடிந்தது. இந்த அபார சக்தியால் அவரால் பிரிட்டிஷாரை விவாதமேடைக்கு, கொணரமுடிந்தது என   ருஷ்ய அறிஞரும் இந்திய ஆய்வாளருமான உல்யாவ்னாஸ்கி 1970இல் எழுதினார்.

கம்யூனிஸ்ட் கட்சி லைன் என காந்தியைப்பற்றி திட்டவட்டமான வரையறை ஏதும் இல்லை. அவரது பங்களிப்பு, பாத்திரம் குறித்த பொதுவான புரிதல் கட்சியிடம் இருந்தது. ஹிரனின் காந்தியை படித்தல் புத்தகம் வந்தநேரத்தில், பியாரிலாலில் காந்தி இறுதிக் கட்டமும், இ எம் எஸ் நம்பூதிரிபாடின்  மகாத்மா- இசம் என்கிற ஆக்கங்களும் வெளிவந்தன.

இந்தியாவைப்போலவே முரண்பாடுகள் கொண்ட மனிதராக காந்தி இருந்தார். அதே நேரத்தில் மற்ற அனைவரையும்விட உயர் பார்வை தீர்க்கம் கொண்டவராக அவர் விளங்கினார்.

இந்திய வேர்கள் என்பதிலிருந்து வந்தாலும் எங்களைப் போன்றவர்களை மார்க்சியம் ஈர்த்தது. காந்தியம் என்பது என்னிடம் காணப்படவில்லை என்பதை ஹிரன் ஏற்கிறார். காந்தியம் என்கிற ஒன்றுடன் தான் வேறுபட்டு இருந்தாலும் அது மகத்தான  சிந்தனையாக இருந்தது. விஞ்ஞான  சிந்தனை என்ற பெயரால் எல்லாம் அதை புறக்கணித்துவிட முடியவில்லை என்கிற உணர்தல் தம்மிடம் இருந்ததாகவும் ஹிரன் ஏற்கிறார்.

காந்தியை அவரின் புகழைக் குறைத்து மதிப்பிடாமலும், அதே நேரத்தில் அவரின் சிந்தனை செயல்பாட்டில் உணரப்பட்ட limitations குறித்து கண்ணை மூடிக்கொள்ளாமலும் ஆய்விட வேண்டும். நமது புராணங்களில் கடவுளை எதிராக நின்று விமர்சிக்கும் தன்மையும் பதிவாகியே இருக்கிறது. அத்தகைய விமர்சனப் பார்வையுடன் தன் ஆய்வை  ஹிரன் நடத்திச் செல்கிறார்.

காந்தி மிருதுவானவர். அதே நேரத்தில் பிடிவாதமானவரும்கூட. அப்பிடிவாதம் எழுந்து விட்டால் அவர் பின்வாங்குவதில்லை. தென்னாப் பிரிக்கா சோதனையில் அவரிடமிருந்த உட்டொபியனிசத்தை நாம் பார்க்கமுடிகிறது. அவரது குடியேற்ற முறைகளில்  சமத்துவத்தையும் சக மனிதர் என்கிற உணர்வையும் அவர் அடைந்தார். போராட்டம் என வந்தபோது அதன் உச்சிக்குச் சென்றார்.

மனிதர்களை மத சாதி ரீதியாக வேற்றுமை பாராட்டும் இந்திய முட்டாள்தனத்தை அவர் பொதுமேடையில் சாடினார். அப்படி எழுந்த முதல் பெருங்குரலாகவும் அவர் இருந்தார். Ôதாகத்தால் சாவேனே தவிர இஸ்லாமியர் ஒருவரிடம் தண்ணீர் வாங்கிப் பருக மாட்டேன்Õ என்பதைத்தான் அவர் முட்டாள்தனம் என்றார். கிலாபத் காலத்தில் இந்து - முஸ்லீம் என இரு சாராருக்கும் உரிய பொதுத்தலைவராக அவர் உணரப்பட்டார்.  அரசியலை ஆன்மீகப்படுத்துவது என்பதில் பெரும் நம்பிக்கையுடன் செயல்பட்டார்.  அரசியலில் மதம் என்பது குறித்து அவர் அச்சப்படவில்லை. மகாத்மா- சௌகத் அலி வாழ்க என்பதைவிட இந்து- முஸ்லீம் ஒற்றுமை வாழட்டும் எனப் பேசினார். இரு சாராரும் சேர்ந்து  அல்லாஹ¨ அக்பர், பாரத்மாதாகி ஜே, இந்து முசல்மான் கி ஜே என ஏன் முழக்கமிடக்கூடாது என வினவினார்.

காந்தி முதலாளிகளின் கருவி என்கிற எண்ணமின்றி செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவரின் போராட்டமுறைகள் அதன் எல்லைகள் முதலாளிகளின் எண்ண ஓட்டத்திற்கு இசைவாக இருந்தது என ஹிரன் மதிப்பிடுகிறார்.

அந்நிய பொருட்களை எரியூட்டிய இயக்கம் விமர்சிக்கப்பட்டபோது எனது அவமானத்தை எரியூட்டுகிறேன் என்றார் காந்தி. மக்களின் கோபத்தை மனிதர்களிடமிருந்து பொருட்களுக்கு திருப்பியதாக  காந்தி தெரிவித்தார். ஹஸ்ரத் மொகானி பரிபூர்ண சுதந்திரம் என்கிற தீர்மானம் கொணர்ந்தபோது காந்தி அதற்கு உடன்படவில்லை. நமக்கு இன்றுள்ள எல்லைகளைப் புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றார் .

சம்பரான், அகமதாபாத் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம், சிவில் சட்டமறுப்பு- சௌரி சௌரா அனுபவம் வழியே . பர்தோலி கிராமத்தில் வரிகொடா இயக்கம் என மக்கள் போராட்டங்களுடன் மக்களின் பேரன்புக்குரிய தலைவராக அவர் உயர்ந்துவந்தார்.

சௌரி சௌரா நிகழ்வால் அவர் பிப் 12, 1922இல் சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். நூற்பு, தீண்டாமை ஒழிப்புத் திட்டங்கள் என இயங்கினார். அரசியல்ரீதியாக தன் முடிவு விமர்சிக்கப்பட்டாலும் சமயரீதியாக சரியான முடிவே என்றார். உண்மைக்கும் அகிம்சைக்கும் உடன் பாடில்லாமல் காங்கிரசில் இருக்க வேண்டியதில்லை என்றுகூட சற்று காரமாகப் பேசினார். காந்தியின் இவ்வகைப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறை அவரது தலைமையையே வரையறைக்கு உட்படுத்திவிட்டது என ஹிரன் தன் மதிப்பீடாகத் தருகிறார். எனவேதான் அவரால் சுரண்டலுக்கு எதிராகப் பேசமுடிந்தாலும் நடைமுறையில் சுரண்டுபவர் நலன்களை தடுக்க முடியவில்லை.

காந்தியின் கட்டுமான திட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் மக்களைத் திரட்ட உதவியது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பாதுகாப்பான எல்லைக்குள் எல்லாம் ஒன்றாக்கப்பட்டது. அவர் பூர்ஷ்வாக்களின் தலைவர் என நினைத்துக்கொள்ளாமல் காரியமாற்றி யிருந்தாலும், அதன் நலன்களுக்கு உட்பட்ட வகையில் மக்களைத் திரட்டிப் போராடவைக்கும் அவ்வர்க்க இயல்பிற்கு காந்தியின் போராட்டமுறை பொருத்தமாகப் போய்விட்டது. நேருவின் மூலம் இடதுசாரி இயக்கங் களையும் காந்தி தனது கட்டுக்குள் வைக்க விரும்பினார். நேருவும் அவரது மாஸ்டரின் அன்புசிறைக்குள் கட்டுண்டு நின்றார்.

பூர்ஷ்வாக்களின் உலகம் உண்மைக்கு அப்பாற்பட்ட ஏமாற்று உலகம். அவர்கள் வர்க்கம் என்கிற வகையில் ஒழுக்கசீர்கேடுகளைப் பற்றியோ வன்முறைகள் குறித்தோ எந்த பொருட்படுத்தலையும் செய்வதில்லை. காந்திக்கு இது ஒரு பெரும் முரண். காந்தி அவர்களின் விருப்பமான கருவியாக செயல்பட்டார் எனச் சொல்வது அற்பவாதமாக இருக்கும். காந்தி மக்களின் இதய கதவுகளைத் திறந்தவர். அவர்களின் மதிப்பை உயர்த்தியவர். நம்மை அடிமைப்படுத்தி வாழவைத்தவர்களிடம் அச்சமற்று இருக்கக் கற்றுத்தந்தவர். அதே நேரத்தில் அவரது தலைமையில் காணப்பட்ட சில  வித்தியாசமான தன்மைகள் (oddities) விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இல்லை என்கிறார் ஹிரன்.

காந்தி-இர்வின் உடன்பாடு பெரும் ஏமாற்றத்தையே தந்தது. உடன் நடந்த கராச்சி மாநாட்டில் இளைஞர்கள்  அதிருப்தியுடன் அவருக்கு எதிரான மனநிலையில் இருந்தனர் என்பதை சுபாஷ் சந்திரபோஸ் வெளிப்படுத்தினார். காந்தி 1932இல் தனது முழு கவனமும் அரிசன மக்கள் முன்னேற்றம் நோக்கி என அறிவித்து செயல்படலானார். அரிசன முன்னேற்றம் முக்கியப் பிரச்சினைதான். ஆனால் தேச விடுதலை இயக்கத்தை நிறுத்திவிட்டு செய்யவேண்டுமா  என்கிற விமர்சனம் காந்தியார் மீது வரத்துவங்கியது. தன்னைத் தியாகம் செய்துகொள்ள இப்படிப்பட்ட பக்கவாட்டு பிரச்சினைகளை அவர் ஏன் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார் என்று பலர் புதிராகப் பார்த்தனர். பெரும் தியாகங்களை மேற்கொண்ட நமது இயக்கம் சிறிய அவ்வளவாக முக்கியமில்லாத பிரச்சினைகளுடன் கட்டப்படவேண்டுமா என்கிற வேதனையை நேரு வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் உரிய உளவியல் தருணத்தை அவர்தான் சிறப்பாக அறிந்து வழிகாட்டுகிறார் என நேரு சமாதானமும் அடைந்தார்.

1934 மே மாதம் கூடிய காங்கிரஸ் ஒத்துழையாமையை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தது. சத்தியாக்கிரகத்தை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என வருந்தினார் காந்தி. Òஆன்மீக கருவிகளை ஆன்மீகமற்ற ஊடகங்களால் மேற்கொள்ளும்போது அவை வலுவிழக்கும்’’ என்றார்.

1928ல் சக்லத்வாலா காந்தி சந்திப்பும் உரையாடலும் நடந்தது. இந்தியாவின் பிரச்சனைகள் குறித்த சரியான புரிதல் சக்லத்வாலாவிற்கு இல்லை எனினும் அவரின் தியாகம் போற்றப்படவேண்டும் எனக் கருதினார் காந்தி.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அமைப்பு 1934இல் துவங்கப்பட்டது. காந்தி சோசலிசம் குறித்தோ தொழிலாளர் - விவசாயி அமைப்புகள் குறித்தோ விமர்சனங்களை அடுக்கி அரசியல் செய்யவில்லை. ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு தனது தராசில் அவைகளை எடை போட்டார். சி எஸ் பியின் முக்கிய தலைவரான நரேந்திரதேவாவிடம்  விஞ்ஞான சோசலிசம் என்றில்லாமல் ந்டைமுறை சோசலிசம் பற்றிய புரிதலுடன் வாருங்கள் என்றார் காந்தி. உங்கள் திட்ட நகலை எதார்த்த நடைமுறை வாழ்க்கையில் செயல் ஆற்றுபவர்களுடன் கலந்து பேசி மேம்படுத்துங்கள் என்றார்.

1940இல் பாகிஸ்தான் கோரிக்கை தீவிர வடிவம் எடுத்தது. தங்களின் நலன்களுக்கான மக்களின் எழுச்சிகர இயக்கம் மட்டுமே வகுப்புவாத சூழலுக்கு இறையாண்மைகொண்ட தீர்வாக இருக்க முடியும் என ரஜனி பாமிதத் எழுதினார். இதை காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர் என்பது அவரது விமர்சனமாக இருந்தது. எரியும் தீக்கு எண்ணெய்யாக அவர்கள் நடவடிக்கைகள் அமைந்துவிட்டன என்றார் தத்.

காந்தி அரசியல் தலைவராகச் செயல்பட வேண்டியிருந்ததால் அவர் துறவி ஆசனத்திலிருந்து இறங்க வேண்டியிருந்தது. தனது கொள்கை நிலைகளில் உறுதிப்பாட்டைக்  கொண்டிருந்தாலும், மக்களுடன் தொடர்ந்து பயணித்தவர் என்ற முறையில் தனது நிலைகளை மாற்றிக்கொள்ள அவர் தயங்கவில்லை. அதே நேரத்தில் சில அடிப்படைகளை, கைவிடாமல் பயணித்தார்.

இரண்டாம் உலகப்போர் காலமான 1940இல் பிரிட்டிஷாரே தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் நம்மை எப்படிக் காப்பார்கள் என்றார்.  மௌலானா உட்பட்ட தலைவர்கள் மக்கள் இயக்கம் என்றபோது இப்போது சிவில் ஒத்துழையாமை கூடாது என்றார். ’காங்கிரசின் தேசியம்’ என ஜின்னா கேலியாக விமர்சிக்கலானார். இந்துக்கள் தேசியம் என சாவர்க்கர் பேசிவந்தார்.

கே. எம் முன்ஷி போன்றவர் அகண்ட இந்துஸ்தான் என்றனர். காந்தி தனக்கான எதிர்வினைகளை காணத்துவங்கினார் என இச்சூழல் பற்றி ஹிரன் விவரிக்கிறார்.

 எனது ராமராஜ்யத்தில் இளவரசருக்கும் ஆண்டிக்கும் ஒரே உரிமையே என காந்தி பேசினார். அவருக்கு ஏழைகள்பாற் நலன் என்பதில் பெரும் உறுதிப்பாடு இருந்தது. உயர்ந்தோர் பெறும் சமூக சலுகைகளும் பீடங்களும் ஏழைகளின் அவதிகளும் சில சரிகட்டல்களுடன் சமவாழ்வு நடத்தமுடியும் என அவர் நம்பினார். ஜனவரி 1940இல் அவர் தன்னிடம் சிவப்பு அழிவிற்குரிய (Red ruin) பாதையை எதிர்பார்க்க வேண்டாம் என்றார்.  எனது வாரிசு ராஜாஜி அல்ல, நேருதான். நேரு எனது மொழி புரியவில்லை என்கிறார். மொழி முக்கியமல்ல. இதயங்களின் ஒன்றிணைவுதான் முக்கியம். நான் மறைந்தபிறகு எனது மொழியை நேரு பேசுவார் என்றார் காந்தி.

1942 மே மாதம் இந்தியாவிற்கும் பிரிட்டிஷ் மக்களுக்கும் இதயபூர்வ ஒற்றுமை ஏற்பட வேண்டுமெனில் உடன் பிரிட்டிஷ் வெளியேற வேண்டும் என்றார். காங்கிரசிடம் விடக்கூட அவர் சொல்லவில்லை. இந்தியாவை இறைவனிடம் நம்பி விட்டுச் செல்லுங்கள் என்றார். இருக்கிற கட்சிகள் சண்டையிட்டுக்கொள்வார்கள். அவர்கள் சமாதானமும் அடைவர். தீர்வையும் எட்டிவிடுவார்கள். அனைத்து குழப்பமான நிலையிலும் அகிம்சை எழும் என்றே தான் நம்புவதாகக் காந்தி குறிப்பிட்டார்.

விவசாயிகள் வரிகொடா இயக்கத்தையும் நிலம் மீட்கும் போராட்டத்தையும் நடத்துவர். நிலப்பிரபுக்கள் ஓட்டம் பிடித்து ஒத்துழைக்கவேண்டும். அவசியம் என்றால் பொதுவேலைநிறுத்தம் கூட இறுதியில் தேவைப்படலாம் என லூயி பிஷ்ருடன், இக்கட்டத்தில் காந்தி தனது உரையாடல் மூலம் தெளிவுபடுத்தினார்.

1942 ஆகஸ்ட்டில், செய் அல்லது செத்துமடி உரையில் காந்தி நேரிடையாக விவசாயிகளுக்கோ, தொழிலாளர்க்கோ அறைகூவல் விடுக்கவில்லை. பத்திரிகையாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், வீரர்கள் உதவலாம் எனப் பேசினார். உடனடியாக விடிவதற்குள் விடுதலை எனவும் குறிப்பிட்டார். வெறும் அமைச்சரவைக்கான பேரமில்லை. முழுவிடுதலை என பிரகடனப்படுத்தினார். செய் அல்லது செத்துமடி மந்திரமான அறைகூவலில் இரகசியம் ஏதுமில்லை. சுதந்திரமனிதன் இரகசிய அமைப்புகளில் வேலை செய்யவேண்டியதில்லை என்பது அவரது நிலைப்பாடு.

 அரசாங்கம் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைத்தது. போராட்டத்தை தீவிரமாக ஒடுக்கியது. அரசாங்கத்தின் மோசமான அடக்கு முறையால்தான் மக்கள் மேலும் வெகுண்டு எழுந்துள்ளனர். அழிவுகள் நேர்ந்திருந்தால் அதற்கு அரசே பொறுப்பு என காந்தி பேசினார். வைஸ்ராய்க்கு செப் 23, 1942இல் கடிதமும் எழுதினார். அடக்கி ஒடுக்குதல் கசப்பையே கூட்டும் - அதிருப்தியை அதிகரிக்கும் என்பது வைஸ்ராய்க்கு உணர்த்தப்பட்டது.

பாகிஸ்தான் எனும் தனி ஸ்டேட் பற்றிக்கூட புரிந்துகொள்ளலாம். ஆனால் தனி இறையாண்மை என்பதை ஏற்கமுடியவில்லை. பிரிவினை நாம் மட்டும் உணரும் ஒன்றாக இருக்கலாமே ஒழிய உலகத்திற்கு அதை காட்டவேண்டியதில்லை  என்கிற பொருள்பட அறிவுறுத்தினார்  இந்து பிரிவினைவாதிகளும் காங்கிரஸ் - லீக் மத்தியில் விரிசலை அதிகப்படுத்திவிட்டதாகக் காந்தி கருதினார்.

கப்பற்படை எழுச்சிக்கு சில நாட்கள் முன்னர் காந்தி நாட்டில் உலாவும் வெறுப்பு குறித்து  கவலையுடன் பேசினார். அது பொறுமை யிழந்தவர்களுக்கு வாய்ப்பாகிவிடும் என்றார். கப்பற்படை எழுச்சி ஏற்பட்டபோது அவரால் அதை மோசமான உதாரணமாகவே பார்க்கமுடிந்தது. சிந்திக்காமல் செயல்பட்டுவிட்டனர் என்பது அவரது அபிப்ராயமாக இருந்தது. பிரிட்டிஷ் வெளியேறுவதாக பேசிக்கொண்டிருக்கும் சூழலில்  இது மாதிரியான போராட்டங்கள் அந்நிலைப்பாட்டை தள்ளிப் போட்டுவிடும். அருணா ஆசப்அலிக்கு வேண்டுமானால் அரசியல் சட்ட வழியல்லாது போர்முனையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்கிற நம்பிக்கை இருக்கலாம். அகிம்சை வழி நம் மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பியதா இல்லையா என்பதை அருணாவும் அவரது தோழர்களும் மனசாட்சியை கேட்டுக்கொள்ளட்டும் என்றார் காந்தி. நேருவும் மெஷின் துப்பாக்கி காலத்தில் 18ஆம் நூற்றாண்டுவகை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கமுடியாது என்றார்.

விடுதலை நாளான ஆகஸ்ட் 15, 1947 அன்று தன்னிடம் எந்த செய்தியும் இல்லை என்றே காந்தி கூறினார். அவரை அணுகியவர்கள் ஜனவரி 26, 1948இல் கேட்டபோதுகூட தான் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். வகுப்புக் கலவரங்கள் அவரை பெரும் வேதனையில் ஆழ்த்தியிருந்தன. அமெரிக்க பேராசிரியர் ஒருவரிடம் அகிம்சா வழியில் இருப்பதாக இந்திய மக்கள் நடித்துக்கொண்டிருந்த தாகவும், சத்தியாக்கிரகம் ஆழமாக இறங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் காந்தி தெரிவித்தார். அகிம்சை போல் தோற்றம் கொண்டவை நொறுங்கிப் போயுள்ளதாகவும் அவர் விசனப்பட்டார்.

காந்தி வயதாகி நோய்ப்படுக்கையில் கிடந்து இறக்கவில்லை. தான் கொண்டிருந்த நம்பிக்கையின் பாற்பட்டே சுடப்பட்டு மரணித்தார். இருநாட்கள் முன்பாகக் கூட, தான் சுடப்பட்டு சாகலாம் என்கிற உள்ளுணர்வை அவர் வெளிப்படுத்தியிருந்தார். நேரு கூறியபடி தன் முழு கட்டுப்பாட்டில் அனைத்தும் நடந்துவந்த காலத்தில் அவர் மறைந்தார்.  வாழும் நாட்களிலேயே வழக்கற்றுப்போய் சாவு படுக்கையில் கிடந்த வந்த மரணமல்ல. அவரது வாழ்க்கையை அம்மரணம் மேலும் உயர்த்திவிட்டது.  ஒற்றுமைக்கான பெரும் தியாக மரணமது.

காந்தியால் தீண்டாமையை ஒழிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதை ஆட்டம் காணச் செய்தார். வறுமை நீக்கம் மற்றும் வளர்ச்சி குறித்த காந்தியக் கருத்துக்கள் மரியாதைக்குரியனவாக இருக்கலாம். நடைமுறையில் அவை வலுவற்றனவாக இருக்கின்றன. காந்தி மட்டுமே சுதந்திரம் பெற்றுத்தந்த கர்த்தா என்பது உண்மைக்கு நெருக்கமான ஒன்றல்ல என்பது ஹிரனின் மதிப்பீடு. சத்தியாக்கிரகம் மட்டுமே சுதந்திரத்தை பெற்றுத்தந்தது என்பதைத் தாண்டி வரலாற்று மாணவர்களால் செல்லமுடியும். ஆனால் மக்களைத் தட்டி எழுப்பிய பெரும் இயக்கமது.

காந்திக்கு இணையாக செயலாற்றியவர் எவரும் இல்லை என்றாலும் காந்தி தரிசு நிலத்தில் செயலாற்றிடவில்லை. அவர் மட்டுமே என்பதிலும் உண்மையில்லை. காந்தி பூர்ஷ்வா இயக்கத்திற்கு பெரும் அசைவைக் கொடுத்தார். மக்களைத் திரட்டி  எல்லைக்குள் கட்டுக்குள் போராடவேண்டும் என்கிற முயற்சியைச் செய்தார். அது சொத்துரிமை கொண்ட வர்க்க நலன்களுக்கு பாதுகாப்பாகவும் அமைந்தது.

எந்த நேரத்திலும் எதையும் சந்திக்க வேண்டிய நிலையில் நடைமுறை சார்ந்தவர்களாக சோசலிஸ்டுகள் இருக்க வேண்டியுள்ளது. சோசலிசம் என்பதே கூட moral objective கொண்டதுதான். நெறிகோட்பாடுகளை பின்பற்றவேண்டிய ஒன்றுதான். ஆனால் முன்கூட்டியே முடிந்த முடிவான  ஒன்றாக எதுவும் எப்போதும் இருக்கமுடியாது என்பதையும் புரிந்து செயலாற்ற வேண்டியுள்ளது.

உயர் இலட்சிய தாகம் கொண்ட நடைமுறை சார்ந்து இயங்கிய பழமையும் புரட்சிகரத் தன்மையும் கொண்ட கலவையாக இருந்தார் காந்தியடிகள். காந்தியத்தைவிட காந்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார். நான் உண்மைக்கான வழியைத்தான் காட்டுகிறேனே தவிர உண்மையையே காட்டவில்லை என அவர் தெளிவுபடுத்தினார். தனிநபர் ஒழுக்கம்-நன்னெறி மேம்பாடு என்பவற்றை அவர் வலியுறுத்திவந்தார். வாழ்ந்தும் காட்டினார். எந்த சமூக இயக்கமும் இவற்றை புறக்கணிக்கமுடியாது. அன்புநிறை செயல் - மனிதகுல அன்பின்பாற்பட்டு செயல் என்பதையும் எவரும் மறுக்கமுடியாது.

ஆதார நூல்:  Gandhi A study Hiren Mukerjee PPH July 1958 5th edition Ap 2010

Pin It