தமிழால் பொழுதளந்த இனிய தமிழ் வல்ல புலவர் அ.ப.பாலையன். அவரது அண்மைப் படைப்பு ‘பழந்தமிழகத்தில் நில உரிமை’ என்ற கட்டுரைத் தொகுப்பு. இதனுள் இடம் பெற்ற 15 கட்டுரைகளில் பெரும்பாலானவை சங்க இலக்கியப் பாக்களின் ஆழம் காணும் ஆராய்ச்சிப் பாங்குடையன.

paalaiyan bookமுதற் கட்டுரை, நூலின் தலைப்பாக அமைந்த ‘பழந்தமிழகத்தில் நில உரிமை’ என்பதாகும்.

நிலவுடைமை தலையெடுத்த காலம் அது. நிலத்தை மையமாக வைத்துப் பெருநிலக்கிழார்கள் என்ற உயர் பிரிவினர் தோன்றினர். இவர்கள் கிழார், வேளிர், குறுநிலமன்னர், அரசர் என வர்க்கப் படிநிலைகளால் அறியப்பட்டனர். சுரண்டல் வடிவம் கொடுமையானது. புண்ணுக்குப் புனுகு பூசுவதுபோல் அறச்செயலும் கொடையும் முன்னிறுத்தப்பட்டன. இவர்களுக்குப் பின்னால் உடலுழைப்பைப் பிழைப்பாதாரமாகக் கொண்ட வினைஞர், கடையர், மள்ளர் என்பவர்கள் வறுமையின் வடிவமாகப் பிரிக்கப்பட்டனர். இவர் களின் எளிய வசிப்பிடமும் உணவும் பெரும் பாணாற்றுப்படையில் சித்திரிக்கப்பட்டன. அதே நூல் கிழார்களின் உணவுச் செழுமையைப் பேசியது. இருவேறு வாழ்நிலையினரிடையில் முரண்பாடு தோன்றாமல் வள்ளன்மை புகழ்ப் பட்டால் போர்த்தப்பட்டு முன்வைக்கப்பட்டது. நிலத்தைப் புலவர்க்கும் வீரர்க்கும் பார்ப்பனர்க்கும் கொடையளித்த அரசர்களைப் பற்றிச் சங்க நூல்கள் பரவலாகப் பாடின.

ஐந்திணை பாடிய இனிய நூல் நற்றிணை. இந்நூலில் ஒரு பாங்கை உணர்த்துகிறது ‘நற்றிணையில் நன்னெறிகள்’ என்ற கட்டுரை. தீயவர்க்குத் திருந்த வாய்ப்பளித்துப் பொறுமை பூணுவதே மேலானது. இது ஒன்று. மற்றொன்று புரட்சி அணுகுமுறை பூண்டது. அரசர் பாராட்டும் யானை மீதும் குதிரை மீதும் ஊர்தலும் உண்மைச் செல்வமன்று. ஆதரவற்றவர்களைக் காப்பதும் உறவுக்கு உதவுவதுமே செல்வர் கடமை.

பெண்- ஆண் உறவில் காணப்பட்ட முரண் பட்ட நிலையை மையமாக்குவது, ‘மனையாளை மதித்த மணாளன்’ என்ற கட்டுரை. கற்பு நிலை பெண்ணுக்கு. பரத்தைமை, பலதாரம் என்ற பாலியல் ஒழுங்கின்மை ஆணுக்கு. அந்நிலையில் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கற்புக் கட்டுப் பாட்டைத் தாமும் மனமுவந்து அணிந்துகொண்ட ஆண்களும் அத்திபூத்தாற்போல் அன்று இருந் தார்கள். பூதப்பாண்டியன் போர்க்காரணம் கருதி உரைத்த சூளுரை ஒன்று அன்பு மனைவியைப் பிரியாமை. நலங்கிள்ளி போர்முனை புகுமுன் உரைத்த வஞ்சினம் ‘விலை மகளிரைச் சேருதல்’ இழிவெனப் புறந்தள்ளியது.

எல்லாச் செல்வத்தையும் கொடையாகக் கொடுத்த காரி மனையாளை மட்டும் தனக்கு உரிமையாகக் கொண்டான். (கபிலர்- புறம் 122) ‘ஈகை அரிய இழை அணி மகளிர்’ என்பது தமிழ் நெறி.

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, தன் மனைவி இறந்த பின்னும் இறவாதிருப்பதற் காகக் கண்ணீர் வடிக்கிறான். இப்படி இல்லாளை உள்ளத்தில் உயரத்தில் வைத்து மதித்த சிலர் அன்றைய சமுதாயத்தில் பாராட்டிற்குரியவராயினர்.

தவறு செய்யும் ஆணைத் தட்டிக் கேட்கும் அரிய செயல் புரிந்த பெண்ணை முன்னால் நிறுத்தும் கட்டுரை ‘கணவனைக் கடிந்த காரிகை.’ கணவனின் நிறைகுறை மதியாது, அவனே அடுத்தடுத்த பிறவியிலும் தம் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என வரங்கேட்ட பெண் களிடையில், ஒரு நற்றிணைத் தலைவி தன்னைப் பிரிந்து பரத்தையை நாடிப் போய்ப் பின்னொரு நாள் திரும்பிய தலைவனைக் கணவனாகக் கருதாமல், தீராப் பகைவனாக எண்ணினாள் என்பது அன்றைய சூழலில் புரட்சிப் போக்கே ஆகும்.

அக இலக்கியம் கூறும் வியத்தகு செய்திகளை அடுக்கும் ஒரு கட்டுரை. அன்று குடும்பத்தின் நலம் கருதிக் குழந்தையைப் பலியிடக் கொடுத்தது ஒரு செய்தி. தொண்டி நகர்ச் சேரமான் மூவன் என்ற குறுநில மன்னனை வென்று, அவன் பற்களைப் பிடுங்கித் தன் அரண்மனைக் கதவில் பதித்தான். வேட்டையாடி வலப்புறம் விழுந்த விலங்கை மட்டுமே புலி உண்ணும் என்பதும், அரவு மணியை உமிழும் என்பதும் சங்க நூற் செய்திகளே யாயினும் மூட நம்பிக்கை என்பதை ஆசிரியர் உறுதி செய்கிறார்.

‘பரத்தையர்’ பற்றிய விளக்கத்தில் ஆணா திக்கமும் பெண்ணடிமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் என்பது மெய்யாகிறது. பரத்தையர் குணங்களையும் செயலையும் பிரிவையும் சொல்கிற கட்டுரை ஆணின் பரத்தையர் பிரிவுக்குத் தொல்காப்பியர் சுட்டும் கட்டுப்பாட்டையும் உணர்த்துகிறது. சங்க நூல்கள் எங்கும் பேசப்படும் பரத்தை என்பதனை வள்ளுவர் புறக்கணித்தார். இது காலக் கடப்பில் விளைந்த மாற்றுச் சிந்தனை.

உணவுப் பொருள் விளைவிப்பவர் பேணும் உயர் நெறி ‘விதைநெல்லை உணவாக மாற்று வதைப் புறந்தள்ளுவது ஆகும். ஆயினும் விருந் தோம்பல் என்னும் உயர் பண்பு விதைத் தினையை உணவாக்கிட இடந்தந்தது. (புறம் 333) விதைத்த விதையே விருந்துணவாகியது.’ (பெரிய புராணம்) போர்க்காலத்தில் அரிய வித்துகளைக் காப்பதில் உயிர்த் தியாகம் புரிந்த சீன விஞ்ஞானிகளைச் சேர்த்து ஒப்பிடுகிறார் ஆசிரியர்.

நற்றிணையில் நான்கு காட்சிகளைக் காட்டுவது ஒரு கட்டுரை. வறுமையில் வாடும் மகள் குடும்பத்திற்குத் தந்தை வண்டியிலேற்றி உணவுப் பொருள்களை அனுப்ப, தலைவியோ அவற்றை அப்படியே திருப்பியனுப்புகிற காட்சி குடும்பப் பெருமை பேசுவதாகும்.

‘பறவையின் ஊடல்’ கையகலக் கண்ணாடியில் அகண்ட வானத்தையே காட்டியது. கூடுகட்டிக் குஞ்சுகளுடன் வசித்த பெண் குருவியைப் பிரிந்து போன ஆண் குருவி திரும்பி வந்தபோது, பெண் குருவியும் குஞ்சுகளும் அனுமதி மறுத்தன. மழையில் நனைந்து நடுங்கியது ஆண் குருவி. இரக்கத்தை முன்னிட்டு அதனை உள்ளே புக அனுமதித்தது பெண்குருவி.

சிறுமி ஊன்றிய புன்னை விதை முளைத்து மரமாக வளர்ந்தது. அவளும் தலைவியானாள். அந்த மரமோ அவளுக்குத் தங்கை முறையாம். அதனருகில் தலைவனுடன் சிரித்து மகிழ்வது முறையில்லையாம். எத்துணை அழுத்தமான உறவுணர்த்துதல்!

தலைவி தலைவனுடன் உடன் போக்கிற் செல்ல, தலைவி தாயோ தலைவனின் தாய்க்குச் சாபம் இடுவது விந்தையான செய்தி.

‘புறநானூறு காட்டும் நான்கு காட்சிகள்’ அடுத்து இடம் பெறும் கட்டுரை.

நீர் வளம் பெருக்கப் பாண்டியன் நெடுஞ் செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவது ஒரு புறப்பாவில். ‘தட்டோர் அம்ம இவண் தட்டோரே’ என்ற அடி நினைவில் நிற்பது ஆகும்.

குழந்தைகளின் குறும்புச் செயல்களைக் கவி நயத்துடன் பாடும் அறிவுடை நம்பி, ‘பிள்ளை பெறாத வீடு வீடே இல்லை’ என்று தெளிவாகக் கூறுகிறார்.

நம்பி நெடுஞ்செழியனின் உயர் பண்புகளும் வீரப் பெருமையும் கொடைக்குணமும் வரிசைப் படுத்தப்பட்டன. கடைசியாய் அவன் மறைந்தபின், ‘இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!’ என்ற முடிவுரை எத்துணை பீடார்ந்தது!

போரில் விழுப்புண் பட்டு இறுதிக் கட்டத்தில் கிடக்கும் வீரனைக் காட்டி, இரவலர்க்கு அவன் தலைவி கூறுதல் அவளது சமுதாயப் பண்பின் உச்சகட்டப் பெருமை!

 பொய்கையார் புறத்திலும் நற்றிணையிலும் பாடிய சங்ககாலப்புலவர். பிற்காலத்தில் களவழி நாற்பது பாடினார் பிறிதொரு பொய்கையார். சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்ற தாகப் புறப்பாடல் குறிப்பில் மட்டும் காணப் படுபவன் சோழன் செங்கணான். களவழி நாற்பது குறிப்பிடும் செங்கணான் சிவத்தொண்டியற்றியவன்; கி.பி.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். புலவர் பெயரிலும் சோழன் பெயரிலும் மோதிய காலக் குழப்பத்தை இக்கட்டுரை நேர்த்தியாகத் தெளிவிக் கின்றது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் பாடிய புலவர் மாங்குடி மருதனார். அவர் பாடிய புறப்பாக்களிலோ பாடியவர் பெயர் மாங்குடி கிழார் என்று மட்டிலும் காணப் படுகிறது. இருபெயரும் ஒருவரையே குறிக்கும் என்று ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை கூறுவார். இதே புலவர் மதுரைக் காஞ்சியையும் பாடினார். இப்பாடல்களை இயற்றிய புலவர் பெயரில் ஏற்படும் மயக்கங்களைத் தெளிவிக்கிறார் நூலாசிரியர்.

நூலில் பன்னிரண்டாவது கட்டுரை மதுரைக் காஞ்சியையும் பட்டினப் பாலையையும் நேர் தூக்கி மதிப்பிடுகிறது. மதுரைக்காஞ்சி பெருந் திணைக்குப் புறமான காஞ்சித் திணையில் தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மாங்குடி மருதனார் பாடியது. இது நிலையாமையை வலியுறுத்திய நூல்.

கரிகால் வளவன் மீது பாடிய பட்டினப் பாலையை யாத்தவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். வாகைத் திணையைப் பாடும்போதே பாலைத்திணை பயனாகும் வண்ணம் பாடப் பட்டது இது. மதுரை களமும் நெடுஞ்செழியன் தலைவனுமாக மதுரைக் காஞ்சி அமைய, பட்டினப்பாலை கரிகாலனைத் தலைவனாகக் கொண்டு பாலைத்திணை பயக்குமாறு பாடப் பட்டது. ஆய்வு நயம் மிளிரும் இப்பகுதி கற்பார்க்கு விருந்தாகும்.

ஒழுக்க நெறிகளை வற்புறுத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுவது அடுத்த கட்டுரை. இவற்றுள் ஆறு நூல்கள் அகப்பொருளும் மற்ற பன்னிரு நூல்கள் அறப்பொருளும் கூறுவன. இந்நூல்களிற் காணப்படும் நுட்பமான செய்தி களை நிகழ்கால வளர்ச்சியுடன் வைத்து ஆசிரியர் விவாதத்திற்குட்படுத்துகிறார். இந்நூல்களுள் முதன்மையானவை குறளும் நாலடியாரும். ‘மனிதர் யாரும் சரிநிகர் சமானம்’ என்ற வாழும் நீதிக்கு முன்னால் பழைய ஒட்டடை நீதிகள் செல்லாதவை என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

பெருங்கதை என்ற பேரிலக்கியத்தின் சார்பு நூலில் சில காட்சிகளைக் கட்டுரை ஒன்று நம்மைக் கவனிக்கத் தூண்டுகிறது. வடமொழி உதயணன் கதையைத் தழுவி ஆக்கப்பட்டது பெருங்கதை. மணிமேகலையில் தொட்டுக் காட்டப்பட்ட உதயணன் கதை மேலும் சில நூல்களில் சுட்டப் பட்டது. உதயணனின் யவனமொழி அறிவு அவனுக்கு ஒரு காதலியைத் தந்தது. இந்நூல் உதயணன்- யூகி நட்பைச் சிறப்பித்துப் பேசுகிறது. விலங்குகளை நேசிக்கும் உயர்பண்பும் பெண் களுக்கெனக் கூறும் நீதிகளும் ஆய்வுக்குரியன. குறுங்கதைகளும் ஒன்பது சுவைகளும் பொதிந்த நூல் இது.

பத்தாம் நூற்றாண்டு ஒளவையும் இருபதாம் நூற்றாண்டுப் பாரதியும் நேர்கொண்டு மதிப்பிடப் படும் கட்டுரை தொகுப்பில் இறுதியிலுள்ளது. இருவரும் ஆத்திசூடி யாப்பினால் ஒரு தடத்தில் நடைபோட்டவர்கள். அகர வரிசைப்படி இரு சொல்லாலானது ஆத்திசூடி அடி. எனினும் நிலவுடைமைக்கால நீதியிலிருந்து சமதர்ம சமுதாய அறம் மாறுபடுவதை ஒளவையோடு பாரதியை ஒப்பிட இடந்தரும் அடிகள் புலப்படுத்துவன. பளிச்சென்று தெரிவன: ‘தையல் சொல் கேளேல்’ (ஒளவை). ‘தையலை உயர்வு செய்’ (பாரதி).

இப்படிப் பல அடிகள் முரண்பட்ட நூற்றாண்டுகளின் முகவரி காட்டுவன.

இலக்கியம், சமுதாயம், வரலாறு, பண்பாடு, காலவேறுபாடு எனக் கனமான ஆய்வுச் செய்தி களைப் பளிச்சென வெளிப்படுத்தும் ‘பழந் தமிழகத்தில் நிலஉரிமை’ என்னும் அ.ப. பாலை யனின் மூளை உழைப்பில் விளைந்த இந்நூல் தனித்தன்மை படைத்தது. இலக்கியங்கள் இண்டு இடுக்குகளில் பதுக்கி வைத்திருக்கிற பல உண்மை களையும் அறக்கூறுகளையும் வெளிப்படுத்துகிற இந்நூல் கால ஓட்டத்தில் காற்றில் கரைந்துபோன பல நடைமுறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. புலவரின் ஆய்வுத் திறத்தைப் பறைசாற்றும் நூல் இது.

பழந்தமிழகத்தில் நில உரிமை

ஆசிரியர்: புலவர் அ.ப. பாலையன்

வெளியீடு:

நாம் தமிழர் பதிப்பகம்,

4/7, ராஜா அனுமந்தா தெரு,

திருவல்லிக்கேணி, சென்னை - 5.

விலை - 50.00

Pin It