‘யாப்பை அறுத்து உதறிப் புறப்பட்ட தமிழ்க் கவிதையின் பயணம் சாலை விதிகளைத் தள்ளித் தன் மனப்போக்கிற்கேற்ப இருக்கிறது’ என்று ஒப்புக்கொண்டு தன் மேற்செலவைச் செலுத்து கிறது. முனைவர் இரா.காமராசுவின் ‘காமிரா’, ‘கட்டற்ற கவிதை அத்து மீறும் பயணம்’ என்ற நூலிற்காகவே அது களத்தில் கண்சிமிட்டுகிறது.

ira kamarasuஇந்நூலில் 17 கவிஞர் படைப்புகளை 18 கட்டுரைகளில் நாடி பிடிக்கிறார். இவர்களது கவிதைகளின் சோதிப்பின் பதிவுகளை 130 பக்கங் கள் விளம்புகின்றன.

‘திசைகளை விழுங்கும் திகம்பர கவி’யாக வரும் சிற்பி பல்திறன் படைத்த படைப்பாளி; படைப்பிற்கும் மொழிபெயர்ப்பிற்குமாக இரு முறை சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர்; பாவேந்தரால் அடையாளம் காணப்பட்டவர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி. ஆழி யாற்றின் சலசலப்பில் கலகலத்த கவிதைகளின் தாய் இவர். கூலிக்காரி, அபலைப் பெண் முதலான கவிதைகளின் பகுதிகள் காட்டாகின்றன. ஓர் அபலைப் பெண்ணின் விற்பனைப் பட்டியலில் கடைசிப் பொருள் நெஞ்சில் ஊசி பாய்ச்சும். கவிஞரின் படைப்புச் செருக்கும் தம்மைத் துறத்தலும் ஆளுமைக்கு அடிப்படையாவன. இன்னும் சில உன்னதங்களை உரசிப் பார்த்திருக்கலாமே!

சிற்பி குழந்தைக் கவிஞராகப் பிறப்பெடுப் பதைத் தடம் ஒற்றுகிறது ஒரு கட்டுரை. குழந்தை களுக்கான படைப்புகள் இன்னும் மேலெடுக்க வேண்டிய கட்டாயம் காலத்தின் அழைப்பாகும். முன்னோர் மூவரை (ஒளவையார், பாரதியார், பாரதிதாசனார்) உள்வாங்கிய சிற்பி தாமும் ஆத்திசூடி ஒன்றை யாத்திருக்கிறார். குழந்தையின் எண்ணங்களை ஆக்க நடத்தைகளாக்கும் வீரிய மிக்க இருசீரடிகள் ஆத்திசூடியாக மலர்கின்றன. அழகியல் உணர்வையும் ஆளுமைப்பண்பையும் மேற்கொண்டு தலைமைத் தகுதியும் அல்லவை அழித்தலும் நல்லவை பேணலும் ஆகிய அற நெறிச் சட்டங்கள் குழந்தை மனத்தில் பதியச் செய்யும் உடன்பாட்டு அணுகுமுறை கொண்ட அடிகள் புதுமைப் போக்கும் நோக்குமாய் வாய்க் கின்றன. கால வளர்ச்சியின் தேவைக்கேற்ப பாரதி யும் பாவேந்தரும்போல் இவரும் ஆத்திசூடியின் புதுயுகக் கட்டளைகளை நயமாகவும் (எ-டு: ஈர நெஞ்சு கொள்) பயமாகவும் (எ-டு: மினுக்கித் திரி யேல்) இளநாற்றுகளுக்கு இயற்கை உரமாக்கு கிறார். சிற்பியின் ‘விண்ணப்பங்கள்’ என்ற குழந்தை இலக்கியமும் இங்கு நெட்டோட்டமாகப் புரட்டப்படுகிறது. மழைநேர வானக்கோலமும் செய்தித்தாளின் ‘அவதார’மும் வியப்பின் அணி வகுப்புகள். இவ்வரிசைப் பாடல்கள் குழந்தைப் பருவத்தில் மகிழ்வான வளர்ச்சியை நாற்றாக நடுவன. கதை கேட்கும் ஆவலில் காது தீட்டும் குழந்தைகளுக்குக் ‘கொசுக்கள் மாநாடு’ ‘கோழி முட்டை குப்புசாமி’ போன்ற கவிதைகள் மன வயலில் வேர் பிடிக்கத் தகுந்த சம்பாப் பயிர்கள் எனச் சுட்டுகிறார் ஆய்வாளர்.

மனித உரிமைக்கான கவிமுரசு இக்பால். இவர் தனித்தன்மைமிக்க, சமரசமற்ற கவிஞர். இவரைப் பொறுத்தளவில் கவிதை மனித உரிமையின் எதிரி களைத் தேய்த்தழிக்கும் வாள்; அக்களத்தில் உரிமை காக்கும் கேடயம். வாளும் கேடயமும் ஏந்தியவர்களையே ‘நிராயுதபாணி’யாக்கி அவல முறச் செய்யும் சாதிவெறிச் சதிராட்டம் கொட்ட மடிக்கிற காலம் இது. இன்று ‘மனித விடுதலைக் கான பிரகடனம்’ பிறந்த அந்நாள்கள் பொற்காலம் எனப் போற்றத் தோன்றுகிறது. கண்மணி ராஜத் திற்காகப் பாஞ்சாலியை உயர்த்திவைத்துப் பெரு மூச்சுவிடும் கவிதையடிகள் சூரியச்சூட்டை அடை காப்பவை. வறுமைச் சித்திரிப்பு மட்டுமே புரட்சிச் சிந்தனைக்குப் போதுமானதன்று. அதன் ஆணி வேர்வரை அகழ்ந்து சுட்டுச் சாம்பலாக்கும் ஊழித் தீயாகவும் மாற வேண்டும். மாறியது இன்குலா பிடம். அப்பன் வெட்டிய கிணறானாலும் அது ஆண்டை உடைமை. அங்கே குளிக்கப்போன அந்த ஏழையின் குழந்தைகள் மின்சாரக் கழுகு களின் சிறகடிபட்டுச் சேதமான கதை இரும்புச் சுத்தியலால் சாதியத் தலையில் அடிக்கிற ஆங் காரத்தின் வெளிப்பாடாகிறது. வெண்மணிக் காள வாய்க் கனலில் உருக்கி வடித்த ‘மனிசங்கடா நாங்க மனிசங்கடா’ என்ற கவிதை மனித எதிரிகளை விரட்டி விரட்டிச் சிரச்சேதம் செய்கிறது. ‘சிறைச் சாலைக்குத் துடிப்பதற்கு இதயமில்லை’ என்ற முடிவும், போபால் யூனியன் கார்பைடு கல்லறையில் புதைந்த மனிதர்களை எண்ணிய குமுறலும்... இப்படிப் பல பாடுபொருள்கள் இக்பாலை வர்க்க முரசுக் கவிஞராய்க் கொண்டாட வைப்பவை.

கவிஞர் நீதிதாசனின் ஹைகூ கவிதைகள் ‘சாகாவரம்.’ ‘உழவனின் உணவகம் வரப்பு’ போல் வன விடுகதையாய் வெடிப்பவை. வாழ்க்கையிற் கண்டு, செரிக்கமுடியாத பல சிக்கல்கள் ‘ஹைகூ’ காமிராவில் பதிவாகின்றன. ‘திராவிடத் திமிர்’ ‘வெண்மணித் தீ’ - ‘உயிர்க்கும் சாம்பல்’, ‘புல்லாங் குழல் வாசித்தேன்” - ‘இரத்தம் கசிந்தது’ - ஈழத்து மூங்கில் போல்வன சான்றுகள்.

தங்க. செந்தில்குமாரின் கவிதை தரும் அரசியல் நெடியை ஒரு கட்டுரை சுட்டுகிறது. பதவிக்காகப் பணியும் அரசியல்வாதிகளை நிர்வாணப்படுத்தும் வரிகள் புன்னகைச் சீதனம் பெறுவன. போலி அரசியலுக்காகப் போராட்டம் செய்துவிட்டுச் சிறையில் ‘ஏ’ வகுப்பு கேட்டவர்கள் என்ற அளவில் நிறுத்தினார் கவிஞர். இப் பொழுது அவர்கள் மண்சோறு தின்னுகிறார்கள். ‘மந்திரி’ கனவில், புல்லட் புரூப்புக்குள்’ திணறும் அமைச்சர்க்கு ‘ஆகஸ்டு 15’ இடக்கரடக்கல் அல்லவா? கவியரசு கண்ணதாசனையும் காம ராசரையும் போற்றும் வரிகள் பொன்னாக மின்னுவன. ‘அரசியல்வாதிகள் நாற்காலிக்காகத் தாயையும் விற்பவர்கள்’ ‘ஒவ்வொரு தேர்தலும் நம் விரலை அசிங்கப்படுத்தும்.’ ‘Inked fingers” என்ற ஆங்கிலத் தொடர் நம் மனத்தில் புன்னகைக் கிறது.

நடேச மகரந்தனின் ‘மயில் பூத்த காடு’ எனும் தொகுப்பு தனித்தன்மை படைத்த கவிப் பெட்டகம். ‘என் மனக் கழனிகளில் நீயே நடைபழகுகிறாய்’ என்ற கவிதைப் படிமமும், ‘நாங்க நம்பின சாமி யார்... மயிராய்க் கெடப்பில் உதிர்ந்தோம்...’ என்ற பட்டிக்காட்டு மனக்குறையும் நளினமானவை.

பொன்.கண்ணகியின் சமூக அனுபவங்கள் வடிகாலாகின்றன. நடப்புலகக் கடப்புகளே கவிதைப் படைப்புகளாகின்றன. காதல் வெற்றியில் சாமி வேற்றுமை சர்க்கரைப் பொங்கலிற் கடிபடும் கல்லாக உறுத்துவது எவ்வளவு கொடுமை! சாவை யாசிக்கும் வேளையில் சமுதாயம் தரும் பரிசு ‘பட்டினி’ செத்தபின் விழாக்கோலம். இந்நகை முரணே வாழ்க்கையாகிவிட்டது. நம் புருவங்கள் நெற்றியை மறந்து அசைவற்ற கரிக்கோடாயின.

கண்மணி ராசாவின் அத்துமீறும் கவிதைகள் வாழ்க்கை அனுபவங்களை அசைபோடுகின்றன. மழலை மாறாத குழந்தைகள் இவரால் வர்க்கத் தழும்பு சுமந்த கவிப்பொருளாகின்றன. கட்டி வைத்து அடித்த சாதி வாழும் மேலத்தெரு வழி யாக பூட்ஸ் அணிந்த பிள்ளையை அனுப்பி வைக்கும் தாய் போடும் கணக்கு தலைகீழ் விகிதம். நெருப்பைப் பீச்சும் மார்பு ஏந்திய கண்ணகிக்குச் சுரண்டும் வர்க்கம் பதிலாகுமா? பலியாகுமா?

இராசேசுவரி கோதண்டம் இந்திக் கவிஞர் ஆசாவரி காகடேவின் கவிதைகளை மொழி யாக்கம் செய்திருப்பது மூலக் கவிதையை உள் வாங்கி ஆக்கிய சாதனை, மனப்பறவையின் சிற கடிப்பில் இந்திர வில் மேலும் வளைகிறது; மனக் கிளை பாடல் உலவும் பீடமாகிறது. புல் நோகாமல் அடிவைக்கும் இடம் தேடுவது நுட்பமான அன்பின் வெளிப்பாடு. முன்னோர் சுமந்து திரிந்த சுமை நம் இரத்தத்தில் ஓடிக்கொண்டிருப்பதைக் கனமாகப் புலப்படுத்துகிறது. மொழிபெயர்ப்பு முடியில் மெச்சுதல் என்ற வைரமாய்ப் பதிக்கத்தக்க சாதனை இந்நூல்.

கோ.சீனிவாசன் என்ற இதழாளரின் ‘மழை’ என்ற கவித்தொகுப்பு பக்தியிலிருந்து ஓசோன் வரை பலபடப் பாடுபொருள் கொண்டது. ‘மின்னல்-விளக்கு, மழை- ஈட்டி’ என்ற உருவகமும், நிலத்தடியில் நீரும் குளத்து மீனும் மரத்தடியில் நிழலும் இல்லாமற் போனதற்கு ஓசோன் அடுக்கில் விழுந்த ஓட்டையே காரணம் என்ற உண்மையும் நயமாகக் கவி வரிகளில் வெளிப்படுகின்றன. போலித்தனம், சமத்துவம், சர்க்கரை நோயின் அறிகுறி போன்ற நடப்புலகச் செய்திகள் இவரது கவிப்புனைவால் கலைப்படைப்பாகின்றன.

அகிலாவின் ‘நீ இல்லாத பொழுதுகள்’ பெண்மை நிகழ்காலத்தில் சந்திக்கும் புழுக்கம், வெம்மை, சூறை முதலியவற்றை முன்னிலைப் படுத்துவன. களவுக்காலத் தலைவியின் ஏக்கத்தை எதிர்நிறுத்தும் கவிதை வடிவம் சந்தப் பாடற் சாயலை உள்வாங்குகிறது. தீக்குச்சியைத் தீண்டு முன் பற்றுகிறது தீ. ஊதி அணைத்தாலும் அழிச் சாட்டியம் பண்ணுகிற காமத்தீயை வியந்து இழை பிரிக்கிறார். காதலன் எதிரில் இல்லாத நேரத்தில் நினைவு அறுவடையில் ஒன்றுகிறாள் தலைவி. கவிதையும் கவிப்பார்வையும் புதுமை பொதிந் தவை.

‘ஜீவாவின் கவிதைப் பயணம்’ என்ற கட்டுரை க.பொ.அகத்தியலிங்கத்தின் “கோடிக்கால் பூதமடா!” என்ற நூலை அறிமுகம் செய்கிறது. அவர் பாடல் களைப் புதிய நோக்கில் வகைப்படுத்தத் தொடங்கும் ஆய்வாளர் பெண் விடுதலை, மூட நம்பிக்கைப் புறக்கணிப்புப் போன்ற பகுதிகளை எடுத்துக் காட்டுடன் முன்வைக்கிறார். பணத்திமிர்க்குக் காட்டப்படும் அடையாளங்களும் தொழிலாளர் எழுச்சியை உருவகப்படுத்தும் ‘கோடிக்கால் பூதம்’ என்ற குறியீடும் பரவலாகப் பாடுபொருளாவன. ரஷியாவில் ‘கோடரியும் மண்வெட்டியும் ஆட்சி புரிகிறது’ என்ற கருவி கருத்தாவாகும் படைப்பு ஆழ்ந்த மார்க்சீய ஞானத்தின் புலப்பாடாகும்.

கொ.மா.கோ. இளங்கோவின் கவிதைகளில் குழந்தைகளின் மனப்பாங்கு கற்பனை வாழ்வாக வடிவெடுக்கிறது. அப்போது அப்பா அ, ஆ படிக் கிற பள்ளிச்சிறுவன். பிள்ளை அவர்க்கு வாத்தி யார், போட்டி நிறைந்த சூழலில், பரிசற்ற போட்டியில் பந்தயக் குதிரையே வாழ்க்கை என்ற உருவகம் அழுத்தமாக செய்திகளைப் பேசுகிறது. வாழ்க்கைக் கடிகாரத்தில் முட்கள் உடைந்ததாக இடம்பெறும் கற்பனை அதிரச் செய்யும் உவமை. காதல், முதுமை என அடுக்கப்படும் பாடுபொருள் களில் நடிப்பற்ற சித்திரிப்பும் மினுக்காத சொல் வீச்சும் கவிதைகளுக்குக் கனம் சேர்க்கின்றன.

சிவகாசி பாண்டூ ‘பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம்’ செய்யப் புறப்பட்டவர். ‘என்னை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டு. முடிவில் உன்னை நான் புரட்டிப்போட்டிருப்பேன்!’ எவ்வளவு தன்னம் பிக்கை! சுற்றுச்சூழல் சீர்கேட்டைப் படம் பிடிக்கும் வரிகள் நடப்புக் காட்சிகள்; எளிதில் வசப்படாத புதிய இலக்கிலிருந்து எடுக்கப்பட்ட தற்படங்கள்(செல்ஃபி) ‘ரியல் எஸ்டேட்’ காவலரின் பழைய கதை, ஏழைகளும் சாலைகளும் சமக் குறியில் சந்திக்கும் கணக்கு, கைப்பேசி, முதியோர் இல்லம், பூக்காரி போன்ற துளிப்பாக்களின் நறுக்குத் தெறித்த நயம்- கவிஞரின் வீரியத்தை வெளிப்படுத்துவன இவை.

கவிஞர் அய்யாறு ச.புகழேந்தியின் படைப்பு ‘போன்சாய் பூக்கள்’ இவர் பாரதிபித்தனின் திருக்குமாரர்; ஹைகூ ஆய்வாளர். நூலில் இடம் பெறுவன ஹைகூ வடிவக் கவிதைகள். முரண்வேர் ஊன்றும்போது ஹைகூ மரமாகிறது. ‘சமத்துவ புரம்- தெரியாமல் பூத்தது- ஜாதிமல்லி- போன்ற நறுக்குக் கவிதைகள் சமுதாய முரண்களை நொறுக்குவன. ‘வானத்திலும்- ஆங்கிலத்தில் கையெழுத்து மின்னல்’. ஒருபக்க நகைச்சுவைக் கட்டுரையையும் புறங்காணும் மூன்று வரிகள். இவை வெறும் சிலம்பங்களாக இல்லை; சமுதாயச் சங்கடங்களை நயமாய் எள்ளுகிற இடித்துரைப் பாக்கள்.

அரசியலில் வெற்றி பெற்ற அறிஞர் அண்ணா சொல்வன்மையில் ஈடற்றவர். அவரது கவிதை களை மதிப்பிடுகிறது ஒரு பதினேழு பக்கக் கட்டுரை. இவை படைப்புத் திறனை வெளிப்படுத்துபவை என்பதினும் தேவை கருதி வரையப்பட்டவை. இவை வடிவத்தாலும் உள்ளீட்டாலும் வகை வேறுபட்டவை; மரபுச் சாயல் சார்ந்தவை; படிப்பவர்க்கு எளிதில் பொருளாகக் கூடியவை; காஞ்சி, திராவிட நாடு, குடியரசு, விடுதலை, தென்னகம் ஆகிய இதழ்களில் அச்சு ஊர்தி ஏறி, இளைஞர்கள் மனவீதியில் வலம் வந்தவை. சுரண்டல் எதிர்ப்பு, சுயமரியாதை, சமதர்மம் போன்ற புதிய நோக்கில் நெய்யப்பட்ட கவிதைகள் இவை. ஆரியம், முதலாளித்துவம், ஆதிக்கம், அடக்குமுறை போல்வனவற்றை எதிர்க்கும் பாடு பொருள் கொண்டவை அவை. அவர் எழுதிய எட்டுக் கதைப்பாடல்கள் அரசியலை ஆதார நாதமாகக் கொள்பவை; மனித மீட்சிக்குத் தேவையான உயர்பண்புகளை உட்பொதிவாக ஏற்பவை. இடையே விடுகதைப் பாங்கும் உடன் மிளிரும்.

ஈழத்துப் பெண் கவிஞர்கள் படைப்புகளை எடையிடுவன இறுதி இருகட்டுரைகள். ‘பெண் வெளி தாண்டி உலக அரங்கில் ஒலிக்கும் கவிதைகள்’ என்ற கட்டுரை ஈழத்துப் பெண் கவிஞர்கள் தான்யா, பிரதீபா, அனார்துர்கா, கௌசலா, கற்பகம், யசோதரா, றெஜி, ஜெயா, வசந்தி,

துர்கா, தர்சினி, நிவேதா, தமிழினி, சரண்யா, இந்திரா ஆகிய கவிஞர்களின் சிற்சில சுவடுகளைக் காட்டுவது. (இது முதற்கட்டுரை). ஆய்வாளர் கூற்றுப்படி, ‘உலக அரங்கின் நடுவே கொண்டு சென்ற ஒரே காரணத்திற்காக’ இவை பாராட்டிற் குரியன. இக்கவிஞர்கள் போர், போர்க்குழு, இன அழிப்பு, புலப்பெயர்வு, இராணுவ அழித்தொழிப்பு எனும் பல பாதிப்பைக் கண்ணெதிரிற் கண்ட வர்கள். அச்சமயங்களில் அவர்களது விழிநீரோ, நெருப்போ இக்கவிதைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கும். இவை ‘ஒலிக்காத இளவேனில்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றவை. அமைதி யற்ற சூழலில் உதிரும் சொற்களில் சூடு கொதி நிலை சுடும். அவ்வெப்பம் தாங்காமல் பல அளவு கருவிகள் உடைந்து போயின.

ஈழப் பெண் கவிஞர் ‘தான்யா’வின் ‘சாகசக் காரி பற்றியவை’ என்ற தொகுப்பைக் கையெடுக் கிறது இறுதிக் கட்டுரை. சுயமரியாதை, தனிமை, சலிப்பு என்ற ஊடுபொருள்களைத் தாங்கியவை. இவர் கவிதைகள். அரசியல் முகம் அண்மை ஈழக் கவிதைகளுக்குத் தவிராதது. இவர் கவிதைக்கும் அது பொருந்தும். தான்யா கவிதைக்கென்றுள்ள சில தனித்தன்மையும் அதை உள்வாங்கிய சில கவிதைப் பகுதியும் கட்டுரையில் காட்டாகின்றன. சுயநினைவு பல தனித்தும் கலந்தும் கவிதையாவது இவரது தனித்தன்மை. இதை ஆய்வாளர் பலபட விவரிக்கிறார். ‘தற்கொலைக்காக முயலும் ஒரு பெண் கடைசியாக... வாழ்க்கை அவளை வசீகரிக் கிறது...’ என வாழ்க்கையில் நம்பிக்கை மீளப் பெறுகிறார்.

கோபுரத்தின் உச்சியிலிருந்த கவிதையின் பாடுபொருள் கோவிலையும் கோமானையும் சுற்றி வந்தது. அந்தக் காலமும் முடிந்துவிட்டது. இன்றைய கவிதையின் பாடுபொருள் ஜனநாயகப் பண்பு பெற்றது; குடிசையிலும் அடர்ந்த இருளிலும் மானிடத்தைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறது. இதனைக் காமராசு இத்தொகுப்பில் தெளிவு படுத்துகிறார். ஆய்வுத் திறனைத் திறமாகவும் சுவை மிகவும் வெளிப்படுத்துகிறது இத்தொகுப் பாகிய ‘கட்டற்ற கவிதை அத்துமீறும் பயணம்’. இது ஆய்வாளரின் ஆழ்ந்த புலமைக்கு மேலான திறத்திற்கும் விரிந்த நோக்கிற்கும் சான்றாய் விளங்குகின்றது.

கட்டற்ற கவிதை அத்துமீறும் பயணம்

ஆசிரியர்: இரா.காமராசு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

 

விலை - 105/-

 
Pin It