ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான் போவான் ஐயோ வென்று போவான்!” என்று அறச்சீற்றம் கொண்டவன் பாரதி. அவனை அறச்சீற்றமடையவைத்த அறிவுச்சமூகம் இன்றளவும் அறம் பிறழ்ந்ததாகவே திகழ்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணங்கள்தான் கணபதியும், நிர்மலாதேவியும். அறிவுப்புல அடையாளங்களான துணைவேந்தர், பேராசிரியை முதலியன இன்று சூதிலும், பாவத்திலும் சிக்குண்டு கிடக்கின்றன.
2016-மார்ச்சில் கணபதி பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி ஏற்கிறார். பதவியேற்ற ஒரு மாதத்திலேயே, பல்கலையில் காலியாக உள்ள இணைப்பேராசிரியர், உதவிப்பேராசிரியர் உள்ளிட்ட 76 பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்கிறார். அப்போதிருந்தே உயர்கல்வித்துறைக்கும் துணை வேந்தருக்கும் சுமுகமான உறவு இல்லை. இடையில் பனிப்போர் உருவாகியது, அதனைத் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருந்தன. இறுதியாக உதவிப்பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டிருக் கிறார். அவரது கைதிலிருந்து இன்றுவரையான நடவடிக் கைகள் தமிழக கல்வித்துறையில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றனவா? உண்மையில் கணபதியின் கைது ஊழலுக்கும், முறைகேட்டிற்கும் எதிரானதுதானா?
தமிழகக் கல்வித்துறையில் (உயர்கல்வி, பள்ளிக் கல்வி) கடந்த பல ஆண்டுகளாக மிகக் கொடூரமான முறைகளில் லஞ்சம் வினையாற்றியிருக்கிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் பதவி வரை அனைத்தும் விலைபோயிருக்கின்றன. ஒவ்வொரு பணியையும் அதன் ஊதியத்திற்கு ஏற்ப விலை நிர்ணயித்து விற்றனர். ஆறாவது, ஏழாவது ஊதியக் குழுக்கள் நிர்ணயிக்கப்போகும் ஊதிய உயர்வை யெல்லாம் முன்கூட்டியே கணக்கிட்டு விலை நிர்ண யித்ததால், இன்று உதவிப்பேராசிரியர் பணிக்கு 30 லட்சம், இணைப்பேராசிரியர் பணிக்கு 40 லட்சம், பேராசிரியர் பணிக்கு 50-60 லட்சம் என விலை உச்சத்தைத் தொட்டு நிற்கிறது!
தமிழகக் கல்வித்துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சீரழிவுகளை நாம் எளிதில் புறந்தள்ள முடியாது. இவை தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவிற்குக் கொடூரமானவை.
பணம் கொடுத்தால்தான் பணி அல்லது பதவி என்ற சூதாட்டம், பணம் வைத்திருப்பவர்களையும், பணக்காரர்களையும் மென்மேலும் பணக்காரர்களாக மாற்றுகிறது; பணம் இல்லாதவர்களை கடன் வாங்க வைக்கிறது; அதற்கும் தகுதி இல்லாதவர்களை மனப்பிறழ்வுக்குத் தள்ளுகிறது. இது கல்வித்துறைக்கு மட்டுமல்ல, எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். பணக்கார வர்க்கம் - நடுத்தர வர்க்கம் - அடித்தட்டு வர்க்கம் என பொருளாதார அடிப்படையிலான பகுப்பில் பணக்கார வர்க்கம் எந்தச் சூழலிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. நடுத்தர வர்க்கம் எப் போதும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது. இவ்விரு வர்க்கங் களுக்கு ஈடுகொடுக்க முடியாத அடித்தட்டு வர்க்கம் அல்லல்படுகிறது. நம் சமூகத்தில் எப்போதும் அடித் தட்டு மக்களின் பிரச்சினையே பிரதானமாக இருக்கிறது, ஆனால் அதுதான் பிரதான மாகக் கண்டுகொள்ளப்படாததாகவும் இருக்கிறது. அந்த அலட்சியப்போக்கே தமிழகக் கல்வித்துறையை இந்த அளவிற்குச் சீரழித்திருக்கிறது.
20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளிலிருந்துதான் அடித்தட்டு மக்கள் உயர்கல்வியை நோக்கிப் பெருந்திரளாக வர ஆரம்பித்தார்கள். இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை முதலிய சமூகநீதித் திட்டங்கள் அவர்களை கல்விப்புலங்களை நோக்கி இழுத்து வந்தபோது, அவர்கள் எதிர்கொண்ட சமூகச் சீண்டல்கள், புறக்கணிப்புகள் ஏராளம். “இப்பல்லாம் குப்பனும் சுப்பனுமெல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டான்” போன்ற வன்மச்சீண்டல்கள் இந்திய/தமிழகக் கல்விப்புலங்களில் சர்வசாதாரணமாக எதிரொலித்தன.
கல்வி எல்லோருக்கும் பொதுவானதாக மாறிக் கொண்டிருந்த காலத்தில் பாடத்தைத் தேர்ந்தெடுப் பதில் வந்தது வர்க்கபேதம். மருத்துவமும், பொறி யியலும் ஏழைகளுக்கு எட்டாக்கனிகளாயின. மொழி, வணிகவியல் போன்ற குறைந்த செலவிலான படிப்பு களே அவர்களுக்குக் கிடைத்தன. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தமிழ்ப்பாடம். இன்று தமிழை யார் படிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் எடுத்தால், அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு வர்க்கம்தான் அதிகமாக இருக்கும். பணி வாய்ப்பு இல்லாத அல்லது குறைந்த ஊதியம் தரும் படிப்புகளை அவர்கள் தலையில் கட்டிவிட்டு எல்லோருக்கும் கல்வி கொடுக்கிறோம் என்று அரசாங்கம் வறட்டுச் சமத்துவம் பேசுகின்றது.
இவற்றிற்கெல்லாம் முகங்கொடுத்து கல்வியில் அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பதவிக்குப் பணம் என்ற கலாச்சாரத்தை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தில் கைவைத்தனர். விரும்பிய பாடத்தைப் படிக்க வசதியில்லாமல், செலவு குறைந்த பாடத்தை எடுத்துப்படித்தவர்கள் படித்து முடித்து வேலைக்குப்போக முயலும் போது, லஞ்சம், சிபாரிசு போன்ற சமூக முறைகேடுகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இந்த நிலை மாறும் என்று ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் காத்திருந்தார்கள். பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு/நேர்காணல் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு என தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எதிரும் புதிருமாக அறிவித்துக்கொண்டிருந்த போது, என்றாவது அரசுப்பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், அதுவரை தனியார் அல்லது சுயநிதிக்கல்லூரிகளில் அன்றாடக் கூலிக்கு மாரடிப்போம் என்ற எண்ணத் தோடும், தனியார் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்த வர்கள், இன்று 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி அனுபவத்தோடு, வெறும் 10 ஆயிரத்திற்கும் 15 ஆயிரத் திற்கும் ஆசிரிய அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தான் பெற்ற பட்டம் தன்னை மேம்படுத்தும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களை, வயிற்றுப்பிழைப் பிற்கே வழியில்லாதவர்களாக மாற்றியது நம் அரசாங்கம்.
ஆசிரியப்பற்றாக்குறை, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஊழல் போன்ற பிரச்சினைகளில் அரசுக் கல்விநிறுவனங்கள் சிக்கி சிதைந்துகொண்டிருந்த கடந்த பதினைந்து ஆண்டுகளில்தான் தமிழ்நாட்டில் சுயநிதிக் கல்லூரிகள் பெருகின. சுயநிதிப்பிரிவில் கொட்டும் பணமழையைக் கண்டு, பாரம்பரியமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களும் சுயநிதிப்பிரிவை உருவாக்கி கோடிகளில் திளைக்கின்றன.
இந்த இடத்தில்தான் திமுக, அதிமுக முதலிய திராவிடக்கட்சிகள் கொள்கை ரீதியாகப் பெற்ற வெற்றியை மதிப்பிடவேண்டும். பிராமணரல்லாதாரை முதன்மைப்படுத்தித் தொடங்கிய பாரம்பரியத்தில் வளர்ந்த திராவிட கட்சிகள், இன்று பிராமணரல்லாத இடைநிலை சாதியினரான முதலியார், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கொங்கு வேளாளர், நாடார் உள்ளிட்டவர்களிடம் தனியார் கல்வியை ஒப்படைத் திருக்கிறன்றன. இந்தத் தனியார் கல்வி வணிகர்களே கல்வியின் தரத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் தனியார் கல்லூரி கூட்டமைப்பும், குறிப்பிட்ட பெருந்தனியார் கல்வி நிறுவனங்களுமே யாரைத் துணைவேந்தராக்குவது என்பதைத் தீர்மானிக்கின்றன. இதன் நீட்சியாகத்தான் அரசு நிறுவனங்களில் நிகழும் முறைகேடுகளை
அணுக வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பது போன்ற பல்வேறு அதிகாரங்கள் பல்கலைக் கழகத்தின் கையில் இருக்கின்றன. துணைவேந்தர் என்னும் பல்கலைக்கழக அதிகாரமையத்தை தனியார் கல்வி நிறுவனங்கள் கைப்பற்றி பல வருடங்கள் ஆகி விட்டன. பல்கலைக்கழக மானியக்குழுவின் கண்களில் மண்ணைத் தூவும் அளவிற்குக் கல்வித்துறையின் அதிகார மையங்கள் ஊழலில் புரையோடிக்கிடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்விக்குழுமம் ஆய்வுக்கு வந்த பல்கலைக்கழக மானியக்குழுவிடம் ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியப் பதிவேட்டில், ஆசிரியர்களுக்கு வழங்கும் உண்மை யான ஊதியத்தைக் குறிப்பிடாமல் மூன்று மடங்கு உயர்த்தி முறைகேடாக சமர்ப்பித்தது. பல்கலைக்கழக மானியக்குழுவும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது, அங்கு பணியாற்றிய ஆசிரியர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
கணபதி, நிர்மலாதேவி ஆகிய இருவரின் செயல் களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல. அவர்களை இச்செயல்களுக்கு ஆளாக்கியதில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் வரை பலருக்கும் பங்கிருப்பதுதான் அறிவுப் புலத்தின் அசிங்கம்.
அறிவுச்சமூகத்தின் கூட்டுச்சூதாட்டத்திலிருந்து தான் பாவம் தோன்றுகிறது. முதற்கட்ட விசாரணையில் நிர்மலாதேவி தெரிவித்த கருத்துக்களே இதற்கு சாட்சி. நிர்மலாதேவி செய்த பாவம், சகித்துக்கொள்ள முடியாதது, ஆசிரியப்பணியின் மாண்பைக் கெடுக்கிறது என்று பொதுச் சமூகம் தன் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது, பாரதியைப் போன்று. ஆனால் கற்றறிந்த அறிவுச்சமூகமோ தன் உண்மையான பண்புகளை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறது.