தளிச்சேரிப் பெண்கள் பற்றிப் பேசும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கல்வெட்டில் மொத்தம் 400 பெண்டுகளின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.  இவர்கள் ஐந்து தெருக்களில் வசித்து வந்துள்ளனர். ஒவ்வொரு தெருவும் சிறகு என்று குறிக்கப்பட்டுள்ளது. தெருவின் முதல் வீடு தலைவீடு என்றும், அடுத்தடுத்த வீடுகள் இரண்டாம் வீடு, மூன்றாம் வீடு என்றும் தொடர்ச்சியாகக் குறிக்கப்பட்டுள்ளன.  முதல் தெருவில் 92 பெண்களும், இரண்டாம் தெருவில் 92 பெண்களும், மூன்றாம் தெருவில் 95 பெண்களும், நான்காம் தெருவில் 92 பெண்களும், ஐந்தாம் தெருவில் 26 பெண்களும் வசித்துள்ளனர்1.  அப்பெண்களின் பெயர்களை ஆய்வதன் மூலம் அவர்களின் - சமூக நிலையினை அறிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

tanjore temple 640சோழர் கல்வெட்டுக்களில் உள்ள ஆண்களின் பெயர்களின் அடிப்படையில் சோழர் கால சமூக, பொருளாதார நிலை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது2. பொதுவாக ஆண் பெயர்கள் ஐந்து கூறுகளைக் கொண்டனவாக அறியப்பட்டுள்ளன.  சோழர் கல்வெட்டுக்களில் உள்ள பெண்களின் பெயர்களின் அடிப்படையிலும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.3 இங்கு தளிச்சேரிப் பெண்டுகளின் பெயர்கள் மட்டும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.  இப்பெண்கள் ஒவ்வொருவரும் நக்கன்4 என்ற பொதுப்பெயரில் (Generic noun) சுட்டப்பட்டுள்ளன.

இவர்களின் பெயர்கள் பொதுவாக இரு கூறுகளைக் கொண்டுள்ளன. நக்கன் என்பதை பொதுப்பெயராகவும் (Generic - noun) ராஜாஜி, திருவையாறு போன்றவற்றைத் தன் பெயராகவும் (Given name) கொண்டுள்ளனர்.  சில பெயர்கள் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளன. எ.கா. அரிகுலகேசரிஸ்வரத்கு நக்கன் வடவாயில்; காவிரிப்பூம்பட்டினத்து நக்கன் ஊதாரி. இவ்விரு பெயர்களின் முதற்கூறுகளின் அடிப்படையில் அந்தந்தப் பெண்களின் சொந்த ஊரினையும் எந்தெந்தக் கோயிலில் இருந்து வந்தனர் / கொண்டு வரப்பட்டனர் என்பதையும் அறியலாம், மூன்றாம் கூறு தன்பெயராக அமைந்துள்ளது.

இவர்கள் பெரும்பாலும் காவிரி பாயும் பகுதியிலுள்ள ஊர்களில் இருந்தும் அவ்வட்டாரத்திலுள்ள கோயில்களில் இருந்தும் தஞ்சைத் தளிச்சேரிக்கு வந்து வசித்துள்ளனர்.  அப்பெண்கள் சோழர் நிர்வாகத்தால் பிற தளிச்சேரிகளில் இருந்து அழைத்துவரப்பட்டனர் என்பதைச் “சோழ மண்டலத்துத் தளிச்சேரிகளில் நின்றுங் கொண்டு வந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகள்” என்ற தொடர் விளக்குகிறது. 

58 வெவ்வேறு ஊர்களிலிருந்து இப்பெண்டுகள் வந்துள்ளதாகத் தெரிகிறது. வெவேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பெயரின் முதல் கூறு உணர்த்துகிறது.  இங்கு மீண்டும் வலியுறுத்திச் சொல்லவேண்டிய கருத்து யாதெனில், இவ்வூர்கள் பெரும்பாலும் காவிரி பாயும் பகுதியில் மட்டும் அமைந்தன என்பதாகும்.  முதல் கூறு தரும் இன்னொரு செய்தி யாதெனில், ஏற்கனவே பல ஊர்களில் தளிச்சேரியும், தளிச்சேரிப் பெண்டுகளும் நடைமுறை வாழ்க்கையின் பகுதியாக இருந்தமையாகும்.  பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலப் பகுதிகளில் உள்ள ஊர்கள் இக்கல்வெட்டில் குறிக்கப்படவில்லை என்பதால் அவ்வட்டாரங்களில் இருந்து இவ்வகைப் பெண்கள் அழைத்து வரப்படவில்லை என்று தெரிகிறது.  அவ்வட்டாரங்களில் இவ்வகைப் பெண்கள் இருந்திருக்க மாட்டார்கள் எனும் கூற்றினை மேலாய்வுதான் முடிவு செய்ய வேண்டும்.

பெயர்கள்

தளிச்சேரிப் பெண்டுகள் அரசகுடும்பத்துப் பெண்களின் பெயர்களைத் தாங்கி நிற்பது அப்பெண்களிடையே இருந்து வந்த அரசகுடும்பத்தின் செல்வாக்காகக் கருதலாம் அல்லது அரசகுடும்பத்துப் பெண்களின் மேல் தளிச்சேரிப் பெண்கள் கொண்டிருந்த மரியாதையின் வெளிப்பாடாக இருக்கலாம்.  செம்பியன்மாதேவி, திரிபுவனமாதேவி, வானவன்மாதேவி என்ற தளிச்சேரிப் பெண்டுகளின் பெயர்கள் மேற்சொன்ன கருத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன.  தென்னவன் மாதேவி, மீனவன்மாதேவி என்ற பெயர்களிலும் தளிச்சேரிப் பெண்டுகள் இருந்துள்ளனர்.

தென்னவன், மீனவன் என்ற முன்னடைகள் பாண்டியரைக் குறிப்பனவென்று யாவரும் அறிந்த ஒன்றே.5  இவ்விரு பெயர்களும் தஞ்சாவூர்த் தளிச்சேரிப் பெண்டுகளிடையே நிலவிவந்த பாண்டியரின் legacy எனக் கொள்ளலாம் அல்லது அவர்கள் பாண்டி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கலாம். குந்தவை என்ற பெயரில் ஒரு பெண்டு குறிக்கப்பட்டுள்ளார். 

வீரசோழி, சுந்தரசோழி, ராஜாஜி என்ற பெயர்களிலும் பெண்டுகள் இருந்துள்ளனர். இப்பெயர்கள் வீரசோழன், சுந்தரசோழன், ராஜராஜன் என்பவற்றின் பெண்பாற்பெயர்களே. சோழம், சோழமாதேவி, சோழர்குல சுந்தரி, சோழசூளாமணி, சோழதேவி, ராஜகேசரி என்ற தளிச்சேரிப் பெண்டுகளின் பெயர்கள் சோழர் பெருமையினை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.  உத்தமசுந்தரி, உத்தமதானி எனும் பெயர்கள் உத்தமசோழனை நினைவூட்டுகின்றன.  மேற்சொன்ன பெயர்களின் அடிப்படையில், அரசகுடும்பத்து நபர்கள் தங்கள் தங்கள் பெயர்களில் தளிச்சேரிப் பெண்டுகளைக் கோயில்களில் அமர்த்தி யிருக்கலாம் எனச் சொல்வதற்குச் சான்றுகள் தேவை.  கன்னரதேவி என்ற பெயரில் ஒரு பெண்டு இருந்திருக்கிறாள்.

சதுரி, கூத்தாடி என்ற இரு பெயர்கள் வெவ்வேறு நடனவகைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களை குறிக்கப் பயன்பட்டவனவாக இருக்கலாம்.  “சதுர்” வகை நடனத்தைப் புரிபவர் சதுரி என்றும் கூத்தினை நிகழ்த்துபவர் “கூத்தாடி” என்றும் குறிக்கப்பட்டிருக்கலாம்.

பெண்டுகளில் சிலர் “மழலைச் சிலம்பு”  எனச் சுட்டப்பட்டுள்ளனர்.  சிறுவயதிலேயே சிலம்பணிந்து நடனம் பயிலும் சிறுமிகளைக் குறிக்க இப்பெயரினைப் பயன்படுத்தி இருப்பர் போலும்.  தஞ்சாவூர் தளிச்சேரியில் இப்பெயரில் ஒருவர் இருந்துள்ளார்.  அம்பர் எனும் ஊரில் உள்ள அவனிநாராயணவிண்ணகர் என்ற விஷ்ணுகோயிலில் இருந்து தஞ்சாவூர் தளிச்சேரிக்கு வந்திருந்த ஒருவரும் இதே பெயரில் குறிக்கப்பட்டுள்ளார்.  கஞ்சாநகரம் என்ற இடத்தில் இருந்து மேற்சொன்ன பெயரில் தஞ்சை தளிச்சேரிக்கு வந்து ஒருவர் இருந்துள்ளார்.  அவனிகேசரிஸ்வரம் எனும் கோயிலில் இருந்து மேற்சொன்ன பெயரிலேயே ஒரு பெண்டு தஞ்சைத் தளிச்சேரிக்கு வந்து வசித்திருக்கிறார்.

தளிச்சேரிப் பெண்டுகள் பெரும்பாலும் தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு நகரங்களில் இருந்து வந்திருப்பர்போலும், இம்மூன்று நகரங்களும் தளிச்சேரிப் பெண்களின் பெயரோடு சேர்த்து அடிக்கடி குறிக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு நகரங்களில் பெரிய தளிச்சேரிகள் இருந்துள்ளன.  திருவாரூர் பெரிய தளிச்சேரியினின்றும் தஞ்சாவூர்த் தளிச்சேரிக்கு வந்திருந்த ஒரு பெண்டு திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் மாதேவி எனக் குறிக்கப்பட்டுள்ளார். அந்நகரின் பெரிய தளிச்சேரியில் பிற ஊர்களில் இருந்து வந்த பெண்களும் இருந்துள்ளனர். எ.கா. இவ்வூர் (திருவாரூர்) பெரிய தளிச்சேரி நக்கன் கண்டியூர்.  இவ்வாறு பல பெண்டுகள் அவரவர் சொந்த ஊரின் பெயரால் குறிக்கப்பட்டுள்ளனர்.  திருவாரூர்த் தளிச்சேரிப் பெண்டுகள் பற்றிய குறிப்புகளும் இக்கல்வெட்டில் உள்ளன.  திருவாரூரிலுள்ள வெவ்வேறு கோயிலுக்குமான தளிச்சேரிப் பெண்டுகள் இருந்துள்ளனர். எ.கா. இவ்வூர் (திருவாரூர்) பரமீஸ்வரத்து நக்கன் ஆரூர்; இவ்வூர் (திருவாரூர்) உசீஸ்வரத்து நக்கன் ஆச்சம்.

தஞ்சாவூர் தளிச்சேரிக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து பெண்டுகள் வரவழைக்கப்பட்டனர் என்று முன்பே பார்த்தோம்.  அவர்களில் சிலர் ஊர்ப் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளனர்; தம் தம் பெயர்களால் அழைக்கப்படவில்லை என்பதையும் பார்த்தோம்.  அதாவது நக்கன் என்ற பொதுப் பெயரோடு (Generic noun) பின்னடையாக ஊர்ப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  எ.கா. நக்கன், மறைக்காடு, தில்லை, ஆரூர், திருவையாறு, வெண்காடு என்ற ஊர்ப் பெயர்கள் திரும்பத் திரும்பப் பெண்டுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவையனைத்தும் பாடல் பெற்ற தலங்களாகும்.  தம் சொந்த ஊரினின்றும் பிறிதோர் ஊருக்குச் சென்று அங்கிருந்து தஞ்சைத் தளிச்சேரிக்கு வந்திருந்த பெண்களும் உண்டு. இவ்வாறாகச் சிலர் தாம் பிறந்த இடத்தின் (ஊர்) பெயரால் குறிக்கப்பட்டுப் பிறிதோர் ஊரில் பணி நிமித்தமாக அமர்த்தப்பட்டு அங்கிருந்து தஞ்சைத் தளிச்சேரிக்கு வந்து சேர்ந்ததனை தலைநகரில் வசிக்கும் பெரும்பேறாகக் கருதியிருப்பர். காட்டாக, ஒரு பெண்ணின் பெயர் ராஜகேசரிநல்லூர் நக்கன் திருவையாறு. அதாவது, அவரது இயற்பெயர் திருவையாறு.  அதாவது, பிறப்பிடம் / பிறந்த ஊர்.  அவர் ராஜகேசரிநல்லூருக்கான தளிச்சேரி பெண்டு என்பது அவருடைய பெயரின் முன்னிரு கூறான ராஜகேசரிநல்லூர் நக்கன் என்பதால் விளங்கும்.  ஊரின் பெயராலேயே அதாவது, மண்ணின் பெயராலேயே அவர்கள் அழைக்கப்பட்டிருப்பது மண்ணைப் போன்றே இப்பெண்களும் தன்னுணர்வு அற்றவர்களாகக் கருதப்பட்டனர் என்பதால் ஆகும்.

வெவ்வேறு ஊர்களில் உள்ள 125 கோயில்களில் ஏற்கனவே இருந்துவந்த தளிச்சேரிப் பெண்டுகள் தஞ்சைத் தளிச்சேரிக்குக் கொண்டுவரப் பட்டுள்ளனர்.  கிள்ளிக்குடி என்னும் ஊரில் இரு பெண்டுகள் இருந்துள்ளனர்: சிறியவர், கிள்ளிக்குடி நக்கன் சிறிய சீருடையாள் என்றும் மூத்தவர் இவ்வூர் பெரிய நக்கன் சீரூடையாள் என்றும் அதாவது, கிள்ளிக்குடிக்கான பெரிய நக்கன் சீருடையாள் என்றும் அழைக்கப் பட்டுள்னர். இங்குச் சீருடையாள் என்பது இருவர்க்கும் பொதுப் பெயராய் இருந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.  அதாவது, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள் எதிர்பார்க்கப்படவில்லை; இருவரிடமும் பொதுவான தன்மைகளே எதிர்பார்க்கப்பட்டுள்ளன.  அதேபோல் தளிச்சேரியின் தென்சிறகின் ஒன்பதாம் வீட்டிலிருந்த பெண்டு தேசிச்சி என்றும், பத்தாம் வீட்டிலிருந்தவர் பெரிய தேசிச்சி என்றும் சுட்டப்பட்டுள்ளனர். இதேபோல் கடம்பூரில் உள்ள திருவிளங்கோயிலில் இருந்து வந்த இரு பெண்டுகளில் ஒருவர் சிறிய நக்கன் நக்கம் என்றும், மற்றொருவர் பெரிய நக்கன் நக்கம் என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.  மேற்சொன்ன அறுவரில் ஒவ்வொரு ஜோடியும் அக்காள் - தங்கை சகோதர உறவு முறை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.

மறைக்காடு, திருவையாறு, திருவாலங்காடு, ஆரூர், வெண்காடு, (கண்டியூர்) என்ற பெயர்களில் சுட்டப்பட்டுள்ள பெண்டுகள் பாரம்பரியமாகப் பாடல்பெற்ற சைவத் தலங்களோடு இருந்திருப்பர் போலும்.  திருவேங்கடம் என்ற பெயரில் ஒரு பெண்டு இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தில்லை அழகி, தில்லைக் கூத்தி, தில்லைக்கரசு என்ற பெயர்கள் பெண்டுகளுக்கும் நடனத்திற்கும் உள்ள தொடர்பினை அழுத்திக் கூறுகின்றன.  தில்லைக்கரசு என்ற பெயரில் இருவரும், தில்லைக் கூத்தி என்ற பெயரில் இருவரும் இருந்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட ஊரிலிருந்து பெண்கள் பலர் கொத்தாகத் தஞ்சாவூர் தளிச்சேரிக்கு வந்துள்ளனர். திருவையாற்றிலிருந்து ஏழு பேரும், பழையாற்றிலிருந்து ஐந்து பேரும் வந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை ஊருக்கு ஊர் வேறுபட்டுள்ளது. வறண்ட பகுதியான புதுக்கோட்டை வட்டாரத்தில் மறவர் பூர்வகுடி ஊர்களில் ஒன்றான விரையாச்சிலை என்ற ஊரின் பெயரில் ஒரு பெண்டு இருந்திருக்கிறார்.6

ஒரு பெண்டின் பெயர் மதுரவாசகி.  இவருக்குப் படிக்கத் தெரியும் போலும், ஒரு பெண்ணின் பெயர் கரணவிச்சாதிரி.  இவர் நடன வகையின் கரணத்தில் சிறந்து விளங்கியிருப்பார்.  அரவம் என்ற பெயரில் மூன்று பெண்டுகள் இருந்துள்ளனர்.  சற்பதேவி என்ற பெயரிலும் ஒருவர் இருந்துள்ளார். ஒரு பெண்டு சிறிய அரவம் எனச் சுட்டப்பட்டுள்ளார்.  இவர் சிறுமியாய் இருந்திருப்பார். அறிவாட்டி என்ற பெயரில் ஒரு பெண்டு இருந்திருக்கிறார்.  இவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கலாம்.  ஆடவல்லான் என்று ஒருவர் இருந்திருக்கிறார்.  தாய்வழிச் சமூகத்தின் இறைவியான காடுகாள் என்ற பெயரிலும் ஒரு பெண்டு இருந்திருக்கிறார்.  கற்றளி, திருமூலட்டானம் என்ற பெயர்களும் அப்பெண்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன.

நயனவல்லி, மதனவல்லி, சித்திரவல்லி, குஞ்சரவல்லி என்ற பெயர்கள் இரசனைப்பூர்வமாக உள்ளன.  எடுத்தபாதம், சீருடைகழல் போன்ற பெயர்கள் நடனத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டுவன.  பெரும்பாலான பெயர்கள் இருவருக்கு இடப்பட்டுள்ளன.  அரங்கம், அம்பலம், பொன்னம்பலம் என்ற பெயர்களிலும் பெண்டுகள் இருந்துள்ளனர்.  இவர்கள் பொதுவிடமான அம்பலத்தில் கூத்தாடியிருப்பர்; அம்பலம் என்பது கோயிலையும் குறிக்கும்.  தில்லை கோயில் பொன்னம்பலம் என்று குறிக்கப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

வைப்புமுறை

தெற்குத் தளிச்சேரியின் தென்சிறகில் அதாவது, தெற்குத் தெருவில் வசித்த 92 பெண்டுகளும் தனித்தனி வீடுகளில் இருந்தாலும் அவர்கள் 32 குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு அலகாக (unit) வசித்துள்ளனர்.  எனத் தெரிகிறது.  காட்டாக, முதல் தெருவில் முதல் ஏழு பெண்டுகள் கொத்தாகத் திருவையாற்றில் இருந்த ஒலோகமாதேஸ்வரம் எனும் கோயிலிலிருந்து வந்தோராவர்.  எட்டு முதல் பதினாறு வரையில் உள்ளோர் நாகப்பட்டினத்து திருக்காரோணம் எனுமிடத்தில் இருந்து வந்துள்ளனர்.  ஒரே இடத்தில் இருந்து வந்தோர் ஒரே அலகாக வசித்ததில் ஆச்சர்யமில்லை.  இவ்வலகுகள் ஒரு தனி ஆய்வுக்குப் போதிய சான்று தருகின்றன.

இக்கல்வெட்டுத் தளிச்சேரிப் பெண்டுகள் ஒவ்வொருவருக்கும் அரசு வழங்கிய நிவந்தமான 100 கலம் நெல் பற்றியும் பேசுகிறது.  ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்காக ஆண்டொன்றுக்கு 100 கலம் நெல் குறிக்கப்பட்டுள்ள அதே வேளையில் கோயிலோடு இணைக்கப்பட்ட பிற பணியாளர்களான ஆண் இசைவாணர்கள்.  நடனப் பயிற்சியாளர்கள் போன்றோருக்கு இரண்டு பங்கு நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது.  நட்டுவக்காரர்கள் அதாவது, கொன்னக்கோல் ஜதி சொல்பவர் மூவர்க்கு முறையே இரண்டு பங்கு நிவந்தம் தரப்பட்டுள்ளது.  அவர்கள் நட்டுவம் என்றழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நித்தமாராயன், நிருத்தமாராயன் என்றழைக்கப்பட்டுள்ளனர். 

நாடகக் கலைஞர்கள் நாடகமய்யன் என்றழைக்கப்பட்டுள்ளனர். நாடகமய்யன் ஒருவனுக்கு ஒன்றரைப் பங்குதான்.  அதாவது, 150 கலம் நெல் மட்டுமே தரப்பட்டுள்ளது.  சாக்கை வகை நடனம் புரியும் ஒருவருக்கு ஒன்றரைப் பங்கு மட்டும் தரப்பட்டுள்ளது.  இராஜஸ்ரியனான நித்தவினோதவாத்தியமாரயன் எனும் இசைவாணர்க்கு பங்கு இரண்டு வழங்கப்பட்டுள்ளது.  உடுக்கை வாசிக்கும் ஒருவருக்கு ஒன்றரைப் பங்கும், சுப்பிரமணியன் கூத்தனான செம்பியன் வீணை ஆதித்தனுக்கும் அவன் கீழ் உள்ள வீணை விற்பனர்கட்கும் மொத்தமாக மூன்றரைப் பங்கு தரப்பட்டுள்ளன.  ஆரியம் பாடுவார் மூவர்க்கு அதாவது, சமஸ்கிருத மொழியில் இசைப்போர்க்கு நாலரைப் பங்கும் தமிழ் பாட ஒருவருக்கு ஒன்றரைப் பங்கும் தரப்பட்டுள்ளன.  பக்க வாத்தியர்க்கோ முக்கால் பங்குதான் தரப்பட்டுள்ளன.  அதாவது 75 கலம் நெல் மட்டுமே.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தளிச்சேரிப் பெண்டுகள் தவிர, நடன நாடக ஆசிரியர்கள், தையற்காரர்கள், காவற்காரர்கள் எனப் பலர் இருந்துள்ளனர்.  இவர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட நிவந்தத்தின் அளவுகள் பற்றித் தனி ஆய்வு மேற்கொள்ள முடியும்.  தளிச்சேரிப் பெண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு தரப்பட்டுள்ள அதே வேளையில் பக்கவாத்தியக்காரர்களுக்கும் முக்கால் பங்கு அளிக்கப்பட்டதும், இசைவாணர்களுக்கும், நாடக, நடன ஆசிரியர்களுக்கு இரண்டு பங்கு அளிக்கப்பட்டதும் அவர்களிடையே நிலவிவந்த படிநிலையைக் காட்டுகின்றன.

குறிப்புகள்

1) S.I.I.Voil,. II : 3, 4 No.66.S.I.I.Voil,. II : 3, 4 No.66.

2) Noboru Karashima (et at), A Concordance of personal Names in the Chola inscriptions, Vols, Survodaya Ilakkiyappannai. Madurai, 1978. இவ்வாய்வில் சோழராட்சிக்குத் துணைநின்ற அலுவலர்கள், வட்டாரத் தலைவர்கள், ஊர்த்தலைவர்கள் போன்றோரின் பெயர்கள் (Given names) பட்டப் பெயர்கள் (Suffixes) சிறப்புறு பட்டப்பெயர்கள் (honorific suffixes) அடிப்படையில் சோழர் சமூகத்தின் போக்குகள் வெளிக்கொணரப்பட்டன.  இவ்வாய்வின் நீட்சியாக Noboru Karashima தன் நூலான South India History and Society: Studies from Inscriptions A.D. 800 to 1800 வடி 1800 - இல் ஆள்பெயராய்வு நிலப்பரிவர்த்தனைப் பற்றி அறிந்துகொள்ள துணை புரிந்திருப்பதை விளங்க வைத்திருப்பார்.  காலவாரியாகவும், வட்டார வாரியாகவும் செய்யப்பட்ட இவ்வாய்வில் வரலாற்று இயங்குதளத்தின் மேல் தட்டிலிருந்தோர் நிலப்பரிவர்த்தனை செய்திருப்பதை அறிய முடியும்.

3) Kl. Era. Sankaran. Era, Kalaicelvi, “some Aspects of the Social Positions of Women During the Chola Period” in Tamil Nadu Archaeology Perspective (ed) K. Damodaran, Dept.of Archeaology, Govt.of Tamil Nadu, Chennai, 1999 இக்கட்டுரை இரா.கலைச்செல்வியின் எம்.பில்., பட்ட ஆய்வின் சாரமாகும்.  ஆய்வேட்டின் கருத்துக்களைப் பிழிந்து ஆங்கிலத்தில் வடித்தது நான்; கட்டுரையாளி என்ற உரிமை கலைச்செல்விக்கே உண்டு.  தவறுதலாக என் பெயரும் குறிப்பிடப்பட்டது வருந்தத்தக்கதே.

இப்பெயர் சோழர் ஆட்சியின் இரண்டாம் காலக்கட்டத்தில் குறைவாக கல்வெட்டுக்களில் பதியப்பட்டதை சைவத்தின் இறங்குமுகமாகக் கருதலாமா?  என்று இப்பெயர் பற்றிய தம் ஆய்வில் Noboru Karashima குறிப்பிடுகிறார்.  நக்கன் என்ற பெயர்ச்சொல் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் (Noboru Karashima. South Indian History and Society: Studies from the Iscriptions A.D. 800 to 1800, 1994. p.61)..  இவ்வாய்வில், நக்கன் ஆண்களுக்கான பெயராயுள்ளது.  நம் ஆய்விலோ இச்சொல் பெண்களுக்கான பெயராக உள்ளது.  நக்நா என்ற சொல்லியிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் Naked person அதாவது நிர்வாணி என்றும் தமிர் லெக்சிகனில் (2122) பொருள் உள்ளது.  அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையினாலே நக்கன் என்று பெயராய் என திருவாய்மொழியிலே குறிக்கப்படுவதால் நக்கன் என்ற சொல் சமணத் துறவியைக் குறிக்கும் சொல்லாகக் கருத இடமுண்டு. 

கட்டுரைக்குப் பயன்படுத்திய கல்வெட்டில் இச்சொல் தளிச்சேரிப் பெண்டுகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.  அவர்களில் பலர் நடன மாதர்களாய் இருந்தார்கள் என்பதும் அறிந்ததே.  நக்கனத்தோடு நடஞ் செய்வான் (Tamil Lexican, 2122) என்றத் தொடர் அம்மணமாய் நடனஞ்செய்தவரைக் குறிக்கிறது என்று ஏற்றுக்கொண்டால் தஞ்சைப் பெருவுடையார் கோவில் தளிச்சேரிப் பெண்டுகள் ஆடையின்றி கோயிலில் நடனமாடியுள்ளனர் எனக் கருத இடமுண்டு.  இக்கூற்று உண்மை என்பதைப்போல் அக்கோயிலில் உள்ள நடன மாதரின் பலநிற ஓவியங்கள் ஆடையின்றி உள்ளன (ஓர் இடைவார் தவிர) என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். பார்க்க.

 K.A. Nilakanta Sastri, The Colas, (Reprinted) University of Madras, Chennai, 1984 and A Histoty of South India: From Prehistoric Times to the fall of Vijayanagara (Eleventh Edition) OUP, Chennai, 1992; R.Champakalakshmi, “New Light on the Cola Frescoes of Tanjore” in Journal of Indian History - Golden Jubilee Volume. 1973. pp. 350-359. The Paintings “are found In the dark inner ambulatory Vimana of the temple.” This inner ambulatory is divided into 15 chamber. In the 7th chamber, the dancing girl (apsaras) is in the nude pose. But in chamber no.9, the attendants are shown in coat.

அகம், புறம் ஐங்குறுநூறு, கலித்தொகைப் பாடல்களிலும், சிலப்பதிகாரம், பட்டினப்பாலையிலும் தென்னவன் எனும் பெயர்ச்சொல் பாண்டியரைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது (N. Subrahamanian, Pre-Pallavan Index, (Second Edition) University of Madras, 1990, p.456).  தென்னவன் என்பதும் மீனவன் என்பதும் பாண்டியரின் பட்டப் பெயர் என்று ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (மொ.அ.துரை அரங்கசாமி, சங்ககாலச் சிறப்புப் பெயர்கள் (இரண்டாம் பதிப்பு) பாரி நிலையம், சென்னை, 1980. பக். 221. 222).

படைத்துறைப் பண்பு கொண்ட மறவர்குல ஊர்களில் ஒன்றான விரையாச்சிலை இடைக்கால வரலாற்றின் நிலைப்படைக் கொண்ட படைப்பற்று ஊராக இருந்துள்ளது.  புதுக்கோட்டைத் தொண்டைமான் கள்ளர்களின் எழுச்சிக்கும் ஆட்சிக்கும் துணைநின்ற இவ்வூர் மறவர்களின் அரசியல் நிலை இருபதாம் நூற்றாண்டு வரையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.  பார்க்க. Nicholas B.Dirks, The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom, Cambridge University Press in association with Orient Longman, Hyderabad, 1987.

Pin It