Maruthu-Pandiar 400இந்திய வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும் 1800 இல் நடைபெற்ற சிவகங்கைப் போரே இரத்தம் தோய்ந்த களமாக அறியப் படுகிறது.

1806 வேலூர் கலகம்.  1857 மீரட் கலகம் இவை களை விடவும் காலத்தால் முந்தியது மருது பாண்டியரின் ஜம்புத்தீவு மீட்புப்போர்.

வடக்கத்திய மக்களின் போராட்டங்களையே இந்திய விடுதலைப்போராக முன்னிலைப்படுத்துகிற இந்திய வரலாற்று ஆய்வுக்குழு  (Indian Council Historical Research)  தென்னிந்தியாவின் புரட்சி களே தேய்பிறை நிலவாக ஒதுக்கி வருவது பாரபட்சமான போக்காகும்.

வெள்ளையரை எதிர்த்து வாளேந்திச் செய்த தமிழ் மண்ணின் போர்களைப் பிற மாநில வரலாற்றுப் பாடங்களிலும் பதிவு செய்ய வேண்டு மென்ற வரலாற்று ஆய்வாளர் கே. இராஜய்யன் போன்றவர்களின் மடல்களை நடுவண் அரசு இதுவரை ஏற்கவில்லை; உண்மையில் வடநாடு மட்டும் வாளேந்திக் களம் காணவில்லை.  சுதந்திரக் கொடியை டெல்லியில் பறக்க விடுவதாலேயே வடநாட்டின் வாழ்வு ஓங்கிவிடாது.  காரணத்தை

“நானிலத்துப் போர் வந்து மூண்டதாலே-

நரிக்குள்ள வாலொடுங்கிப் போனதாலே

மானிகள் போல் இந்நாட்டை ஆங்கிலேயர்

வடக்கர் என்ற தருக்கரிடம் ஒப்படைத்தார்”

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறார்.

வணிக வளமும் விளைபொருள் பெருக்கமும் மிகுந்த பாரதத்தில் காலூன்றினால் கடைசிவரை பாலும் பாயசமும் சாப்பிடலாம் என்பது கிழக்கு இந்திய கம்பெனியின் முடிவு. இதற்கு ஏற்றாற்போல் இந்தியர்களும் தமக்குள் சாதிகளாலும், மதங்களாலும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளாலும் வேற்றுமை சுமந்து வந்திருந்தனர்.

பிரித்தாளும் தந்திரத்தில் கை தேர்ந்த பிரிட்டானியருக்கு இக்காரணங்களே கதவுகளைத் திறந்து வைத்துக் காலூன்ற அழைத்தது. ஈஸ்ட் இந்தியா கம்பெனி நடை உடை பாவனைகளும் ஆயுதபலமும் இந்தியரை மனதால் அடிமைப்படுத்தின. 1800-1801 போராட்டங்களால் இந்தியக் கலாச்சார மரபுகள் வீழ்த்தப்பட்டன. எல்டர் அண்டு கம்பெனியின் இராணுவ நினைவுகள் நூலில் ஆசிரியர் ஜேம்ஸ் வெல்ஸ் சிவகங்கைப் போர்களை பீதியுடன் விவரிக்கிறார்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரை அழிவுச் சரித்திரக் கும்மி பெருமிதத்துடன் விவரிக்கிறது என்றால் சீமை வெள்ளையரின் போர்குறித்து மருதிருவரின் தீரம் குறித்தும் சிவகங்கைச் சீமை நாட்டுப்பாடல் நவில்கிறது.

தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக் காரர் கட்ட பொம்மன் குறித்துப் பேசுகிற அளவிற்கு மருதிருவர் புகழ் சிவகங்கை தாண்டிப் பேசப்படவில்லை.  இதற்குத் திரைப்படமும் ஒரு காரணம் என்பது வேதனையான செய்தி.  கட்ட பொம்மன் படத்திற்குக் காட்டப்பட்ட வரவேற்பை சிவகெங்கைச் சீமை படத்திற்கு ஆட்சியாளர்கள் அன்று காட்டவில்லை.  கட்டபொம்மனுக்கு முன்பே வந்திருந்தால் ஒரு வேளை புகழ் கிடைத் திருக்குமோ?

1800-1801இல் தமிழகத்தில் வெள்ளையருக்கு எதிராக வீரத்தைப் போலப் பல பகுதிகளில் ஆங்கிலேய ஆதரவு துரோகமும் பரவிக்கிடந்தது. திருவாங்கூர் மன்னர் தர்மராஜா, புதுக் கோட்டை தொண்டைமான் போன்றவரை உதாரண மாகக் கூறலாம்.

1799 மைசூர்ப் போரில் வெள்ளையருக்கு ஆதரவாக மைசூருக்குப் படை அனுப்பிய புதுக் கோட்டை தொண்டைமான் இராபர்ட் கிளைவுக்கு இப்படி எழுதுகிறார்.

“கம்பெனியார் என்னை எந்த விதத்தில் பணிசெய்ய ஏவுகிறார்களோ அதையெல்லாம் செய்து மகிழவேண்டும்.  அவர்களுடைய நல்ல பெயரைப் பெறுவதற்காக எனது உயிரைக்கூட அர்ப்பணிக்கத்தயாராக உள்ளேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுதியதாக ஆவணங்களில் காணப்படுகின்றன.

இவர்களைப் போலவே தமிழகத்தில் ஆட்சி யாளர்களான ஆற்காடு நவாப், தஞ்சாவூர் ராஜா துல் ஜாஜி, மைசூர் கிருஷ்ணராஜ உடையார், ஐதராபாத் நிஜாம்.  போன்றவர்கள் ஆங்கிலேயரின் பெருங் கோபத்துக்கு ஆளானதால் அவர்களை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அரை நூற்றாண்டுக்காலம் பாளையக்காரர் களுடன் கம்பெனிப் படை களத்தில் நின்றது.  1755இல் கர்னல் அலெக்சாண்டர் ஹெரான் தலைமையிலான படை மணப்பாறை, நத்தம் கோவிலாங்குடி கோட்டைகளைச் சிதைத்தது.  கள்ளர்களின் பேரெழுச்சி கம்பெனிப் படையின் கொடுமைகளை எதிர்த்து ஹெரான் படைக்கு இழப்புகளை ஏற்படுத்தியது. நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரும் போர் வீரர்களில் சிறந்தவருமான பூலித்தேவனின் எழுச்சி ஹெரானை திருச்சியை நோக்கி ஓடச் செய்தது.

ஏற்கனவே உழவடை செய்து வந்தவர்களின் நிலத்தைப் பறித்தல், விளைச்சலைக்காட்டிலும் அதிகமான வரிவிதிப்பு, இவைபோன்ற காரணங் களால் ஆடுமாடுகளோடு ஏர்க் கலப்பைகளையும் பறிகொடுத்து சொந்த மண்ணுக்குள்ளேயே மக்கள் அகதிகளாகிப் புலம் பெயர்ந்தனர்.

இதனை சிவகங்கை ஆட்சியாளர் மருது பாண்டியர் சென்னை அரசுக்கு எழுதிய கடிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டார். நாட்டின் மரபுப் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு மேற்கத்திய அதிகாரம் செலுத்தப்பட வேண்டும்.  நீதிநெறிக் கோட்பாடுகளுக்கும் மரபு களுக்கும் மாறான ஆங்கிலேயர் ஆட்சி மக்களை வேதனையில் ஆழ்த்துகின்றது என்று அவர் 24 சூலை 1801-இல் கடிதம் எழுதினார்.

ஆனால் வெள்ளையர்கள் காதுகள் செவி டாகவே இருந்தன. மண்டல அளவில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒரு அணியை ஏற்படுத்துவது மருது பாண்டியர்களுக்குத் தவிர்க்கவியலாத செயலானது.

காளாப்பூர் காடுகளில் பிடிக்கப்பட்ட மன்னர் கட்டபொம்மனையும் சௌந்திர பாண்டியனையும் தானாதிபதி சிவசுப்பிரமணியனையும் பானர்மென் கொடூரமாகத் தண்டித்தபின் புதுக்கோட்டைத் தொண்டைமானுக்கு உயர்ந்த ஜாதிக்குதிரையும் தங்கத்தாலான ஆடையும் பரிசளித்து எட்டய புரத்தாருக்கு மணியாச்சியை அளித்தது.  தென் இந்திய மக்களிடையே மேலும் ஆவேசத்தைத் தூண்டின, எனில் வியப்பில்லை.  (பானர்மென் வெளியிட்ட பிரகடனம் பாவாலி கோலவார்பட்டி அரண்மனைத் தூண்களில் உள்ளன)

திண்டுக்கல் பகுதி பாளையக்காரர் கோபால் நாயக்கர், மணப்பாறை லட்சுமி நாயக்கர்,  தனி யாதுல் நாயக்கர்,  மலபாரின் கோட்டயம் மன்னர் கேரளவர்மன்,  கர்நாடக மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர்,  மராட்டியத்தின் தூந்தாஜிவாக் போன்ற வர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டணியில் இணைந்தனர்.

இவர்களுடன் மருதுபாண்டியரும் இணைந்து ஒரு கூட்டணி வலுப்பெற்றது.  மராட்டியத் தலைவர் களிடம் பேசப் பல தூதுக் குழுக்களை ஏற்படுத்தினர்.

வடபுலப் போராட்ட சக்திகளைக் கண்டு பேசவும் நல்லுறவை நாட்டவும் தீரன் சின்னமலை முன்வந்தார்.  கொங்கு மண்டலப் பெருந்துறையின் கிராமத்தலைவரான இவர் சிறந்த ராஜதந்திரியும் கூட.  தீரன் சின்னமலையின் தீரம் வெள்ளையர் களாலேயே வியந்து பேசப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் 1050 போராளி கள் மாண்டனர்.  “சாமி” என்றும் தெய்வம் என்றும் மக்களால் போற்றப்பட்ட ஊமைத்துரை சிவகங்கையில் அடைக்கலமாக வந்தார்.  இராம நாதபுரத்தில் மைலப்பன் தலைமையிலான படை எதிரிகளை ஈட்டி முனையில் விரட்டியது; மைலப்பன் முகவை மண்ணின் பெரும் போராளியாவார்.

போராளிகளின் தீரமிக்க நடவடிக்கைகளால் ஆங்கிலேயர் படை திணறியது.  தேசிய உணர்வின் காரணமாக உள்நாட்டின் ஆங்கிலேயப் படைவீரர் தயக்கம் காட்டினர்.  தென் பகுதிக்கடற்கரை, போராளிகள் வசம் வந்ததால் ஆங்கிலேயர் படை கப்பல்கள் சுற்றுப்பாதை வழியாக சிலோன் செல்லும் நிலை ஏற்பட்டது.

வலிமைமிக்க எதிரிகளிடமிருந்து வளங்களை மீட்டெடுத்த போராளிகள் இதனை இறுதிவரை காக்க முடிவெடுத்தனர்.  பல்வேறு மக்கள் நலப் பணிகளை நிர்வாகத்தில் புகுத்தி மாற்றம் செய்தனர்.  சமயப் பொறையுடன் மதித்து நடந்தனர்.  மக்களுடைய மரபுவழி சார்ந்த உணர்வுகளை மதிக்கவும் போராட்ட நெறிகளை மேலாண்மை செய்து திருத்தியும் நிர்வாகச் சீரமைப்பு செய்தனர்.

மன்னர்களுக்கும் மக்களுக்கும் இடைவெளியே இல்லாத நேசம் நிலவியது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் 16-16-1801இல் மருது பாண்டியர் வெளியிட்ட போர் அறைகூவல் பிரகடனம் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப் படுகிறது.

அரசியல் கோட்பாடுகளும் விவரங்களும் கொள்கை விவரிப்புகளும் நிறைந்த ஒரு போர் முழக்கம்.  தென் பாரத மக்களின் நலனை மட்டுமே முன்னிட்டு எழுதப்பட்ட இது ஆங்கிலேயரை அதிகாரத்திமிர்ப் போக்கிற்காகக் கண்டித் திருந்தது.  இதற்கு முன் இந்தியாவின் இம்மாதிரி முழக்கம் ஊரறிய எழுந்ததில்லை என்பது கவனிக்கத் தக்கது.

மக்களிடையே மரபுவழிப் பண்பாடுகளே நிறைந்திருந்ததால் இதனை இம் முழக்கம் சாராம்ச மாகக் கொண்டிருந்தது. திருச்சிராப்பள்ளி அரசியல் காரணங்களினாலும் அதன் காவிரிக் கரையின் அக்கரையிலிருந்த ஸ்ரீரங்கம் ஆன்மீகக் காரியங்களுக்காகவும் புகழ் பெற்றிருந்த இடங்களாகும்.

இக்கோவிலின் கோபுரங்கள் இம் மண்ணில் நடைபெற்ற போர்களுக்குச் சாட்சிகளாக நிற் பவை.  இந்த ஆன்மீக மையத்திலிருந்து வெளி யிடுவதன் மூலம் இது புனிதப் போராகவும் கருதப்பட்டது.

அக்காலத்தில் நிலவிய அரசியல் அவலங் களைச் சுட்டிக்காட்டி “இவ்வாட்சி தொடர்ந்தால் இந்ததேசம் அன்னிய ஆட்சியின் கீழ்வந்துவிடும்” என்ற எச்சரிக்கை முரசமும் அதில் ஒலித்தது.

இந்தப் போர் முழக்கச் சுவரொட்டிகள் திருச்சிராப்பள்ளிக் கோட்டையின் நவாப் மாளிகைச் சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவில் கோபுரச் சுவரிலும் ஒட்டப்பட்டிருந்தன. இதில் தென்னிந்தியா ஜம்புத்தீபாவினுடைய தீபகற்பம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மிகப்பெரிய ஆனால் மிகச் சுருக்கமான  இந்த முழக்கங்கள் தெளிவான தமிழில் எழுதப் பட்டிருந்தன. “இந்தச் சுவரொட்டியைக் காண்போர் யாராயினும் கவனமாகப் படியுங்கள்!” ஜம்புத்தீபா நாட்டிலும் அதன் தீபகற்பத்திலும் வாழுகின்ற அனைத்து இனைத்தவருக்கும், உள் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர சாதிகளாகப் பிளவு பட்டிருக்கும் மக்களுக்கும் முகமதியருக்கும், பொதுவான நலன்களைக் கருத்திற்கொண்டு இந்தப் போர் முழக்கம் வெளியிடப்படுகிறது.

மாட்சிமைப்பட்ட நவாப் முகமது அலி முட்டாள்தனமாக உங்களுக்கு மத்தியில் ஆங்கி லேயருக்கு இம்மண்ணில் இடமளித்ததால் இம் மண்ணில் கைம்மை நிலை உருவாகிவிட்டது.  ஆங்கிலேயர்கள் நேர்மைக்குப் புறம்பாக நவாப்பி னுடைய ஆட்சியுரிமையைக் கைப்பற்றிக் கொண்டனர்.  உள்நாட்டு மக்களை நாய்களாகக் கருதி அவ்வாறே நடத்துகின்றனர்.  மேலே சொல்லப்பட்டபடி பல்வேறு அடிப்படையில் பிரிந்திருக்கக்கூடிய நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையையும் நட்பையும் வளர்த்துக் கொள்ளாமல்.  ஆங்கிலேயர்கள் உங்கள் மத்தியில் ஆடுகின்ற இரட்டை நாடகத் தையும் புரிந்துகொள்ளாமல் உமக்குள் தீராப் பகைமையைப் பெருக்கிக் கொண்டதுடன் ஆட்சி யையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.

அத்தகைய இழி பிறவிகளுடைய கைகளில் சிக்கிக்கொண்ட பகுதிகளில் மக்களுடைய வாழ்க்கை ஏழ்மையடைந்து உண்ணும் உணவுகூட அரிதாகிப் போய்விட்டது.  மக்கள் பலவாறான துன்ப, துயரங்களுக்கு ஆட்பட்டபோதிலும் அவற்றி லிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளையும் அறியாதவர்களாக இருக்கின்றனர்.  பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட மனிதன் ஒருநாள் மடியப்போவது உறுதி.  அவர்கள் ஈட்டக்கூடிய அபுகழ் சந்திர சூரியர்கள் உள்ளவரை நிலைத் திருக்கும்.

ஆகவே இழந்துவிட்ட மரபு உரிமைகளை மீட்டெடுக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப் பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  அதாவது மாட்சிமைப்பட்ட நவாப்பிற்கும் விஜய ராமநாத திருமலை நாயக்கருக்கும் தஞ்சாவூர் ராஜாவுக்கும் ஏனைய மன்னர்களுக்கும் அவரவர்களுடைய அரசுரிமை முழுமையாக ஒப்படைக்கப்படும்.  அனைவருக்கும் அவரவர்களுக்கும் உரிய உரி மைகள் சமய நம்பிக்கைக்கும் மரபு வழிப்பட்ட பழக்கவழக்கங்களுக்கும் முரணற்ற விதத்தில் முறை யாக ஒப்படைக்கப்படவுள்ளன.  நவாப்பைச் சார்ந்து சேவையாற்றுவதுடன் ஆங்கிலேயர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு அதன்மூலம் அவர்களுடைய நிரந்தர மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழலாம்.

ஆங்கிலேயருடைய ஆட்சி முற்றாக அழித் தொழிக்கப்பட்டு விடுவதால் நவாப்பினுடைய ஆட்சியின் கீழ் நாமும் துயரங்களற்று நிம்மதியாக வாழலாம். ஆகவே இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு வரும் தாம் வாழுகின்ற ஊர்களிலும் பாளையங்களிலும் ஆயுதங்களை இறுகப் பற்றிக்கொண்டு ஒன்றிணைந்து அந்த இழிபிறவிகளுடைய பெயரைக் கூட இம்மண்ணில் இல்லாதபடி செய்ய உறுதி பூணவேண்டும். 

அப்போதுதான் ஏழை எளிய வர்கள் உயிர் வாழவே முடியும்.  எச்சில் வாழ்க்கை வாழுகின்ற நாய்களைப் போல அத்தகைய இழி பிறவிகளுக்குக் கீழ்ப்படிந்து உயிர் சுமந்து திரிய யாரேனும் ஆசைப்படுவார்களேயானால் அவர் களைக் கருவறுக்க வேண்டும்.  அந்த இழி பிறவிகள் எத்தகைய சூழ்ச்சிகளால் இங்குள்ளவர்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு இந்த மண்ணை அடிமைப் படுத்தியுள்ளனர் என்பதை அனைவரும் அறிவீர்கள். 

ஆகவே பிராமணர்கள், சத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள், முகமதியர்கள் என்றெல்லாம் பிளவுண்டு கிடக்கின்ற எம்மக்களே! திசை தவறிப் போய் இந்த இழி பிறவிகளுடைய படையில் சுபேதார்கள், ஹவில்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் என்று பட்டங்களைச் சுமந்தலுத்த, ஆயுதமேந்த வல்லவர் களே’.  உங்களுடைய வீரத்தையும் தீரத்தையும் இப்படி வெளிப்படுத்துங்கள்.

அந்த இழிபிறவி இனத்தவரில் யாரையேனும் எங்கேனும் கண்டால் உடனே வெட்டி வீழ்த்துங்கள்; அவர்களுள் கடைசி ஆள் இருக்கும்வரை தொடருங்கள் அந்தத் திருப்பலியை.  அந்த இழி பிறவிகளுக்குச் சேவை புரியக்கூடிய எவனும் செத்தால் சொர்க்கத்திற்குச் செல்லப் போவதில்லை என்பதை நானறிவேன்.  அதனைச் சிந்தித்துச் செயல்படுத்துங்கள். 

இதனைக் கருத்திற் கொள்ளா தவர்கள் தமது தோள்களிலும் மார்புகளிலும் மாட்டிக்கொண்டு திரிகிற பட்டங்களும் பதக்கங் களும் எனது மறைவிட மயிருக்குச் சமம்.  அவன் உண்ணும் உணவு கழிக்கப்பட்ட பொருள்; அவனுடைய பெண்டும் பிள்ளைகளும் அவனுக் குரியவர்கள் அல்லர்.  அவன் கூட்டிக் கொடுத்த அந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவர்களாகக் கருதப் படுவர்.

 ஆகையால், நமது நாளங்களில் ஆங்கிலே யருடைய ரத்தத்தால் மாசு படாதோரெல்லாம் ஒன்றிணையுங்கள். இந்தச் சுவரொட்டியைப் படிப்போரும் கேட் போரும் தமது நண்பர்களுக்கும் ஏனையோருக்கும் பரப்புங்கள்.  இதே போன்ற சுவரொட்டிகளைத் தயாரித்துப் பரப்புரை செய்யுங்கள்.  அவ்வாறு இதில் கண்ட செய்திகளைப் பரப்புரை செய்யா தவன் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகி நரகத்தின் அத்தனை சித்திர வதைகளுக்கும் ஆட்படுவான்.  இந்தப் பணியை மேற்கொள்ளாத முஸ்லீம் பன்றியின் ரத்தத்தைக் குடித்த பாவத்திற்கு ஆளாவான்.

இந்தச் சுவரொட்டியை இந்தச் சுவரிலிருந்து நீக்க முற்படுபவன் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த பாவத்திற்கு ஆளாவான்.  ஒவ்வொருவரும் இதனைப் படித்து நகலெடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு

மருதுபாண்டியன்

பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய இழிபிறவிகளுக்குச் சென்ம எதிரி.

ஸ்ரீரங்கத்தின் வாழும் சமயகுருக்களுக்கும் பெரியோர்களுக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மருதுபாண்டியன் பாதம் பணிந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.  மகாராஜாக்கள் கோட்டை களைக் கட்டியெழுப்பிப் பாதுகாத்தார்கள்: களி மண்ணால் முன் முகப்புகளை வடிவமைத்தனர்.  கோட்டைக் கோவில்களையும் தேவாலயங்களையும் மசூதிகளையும் எழுப்பினர்.  அத்தகைய மகா ராஜாக்களும் மக்களும் இந்த இழிபிறவிகளுடைய ஆட்சியில் வறுமையில் வாடுகிறார்கள்.  எப்படி யெல்லாமோ வாழ்ந்த நீங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டீர்கள்.  எனக்கு உங்களுடைய நல்லாசிகளை வழங்குங்கள்.

இந்தப் போர் முழக்கம் தென்னிந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  வலிமைமிக்க போர்க் கருவிகளை திறமையாகக் கொண்ட தொழில் முறைப்போர் வீரர்களுடன் தன்மானமிக்க போராளிகள் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்டனர்.

இப்போரில் எதிர்பார்த்ததுதான் நடந்தது.  உலகத்திற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்ததாக, தற் பெருமை பேசியோர் உலகச் சரித்திரத்தில் அது வரை கண்டறியாத கொடுமைகளை அரங்கேற்றினர்.

பாஞ்சாலங்குறிச்சியில் மனிதமிருகமாக நடந்த பானர் மென் ஐ விடவும் சிவகங்கைப் போரில் ஆங்கிலேய அரக்கர்கள் கூடுதல் கொடுமைகளை அரங்கேற்றினர். முறையான போர்ப்பயிற்சி இல்லாதிருந்தும் கூட சிவகங்கையின் பாமர மக்கள் புலிக்குணம் வாய்க்கப் பெற்றவர்களாகப் போராடினர்.

சிறுவயல், காளையார்கோவில், கமுதி, பிரான் மலை, சோழபுரம் வயல் வெளிகளெல்லாம் அன்று போராளிகளின் குருதியால் மண்ணைச் சிவப்பாக்கின. துரோகி முகமது கலில் என்பானின் வஞ்சத்தால் காளையார் கோவில் அரண் காட்டிக் கொடுக்கப் பட்டது.  மருது பாண்டியர் தலைக்கு தலா 1500 சுருள் சக்கரப் பொன்னும் பாஞ்சாலங்குறிச்சி ஊமை(த்துரை) குமாரசாமி தலைக்கு 1000 சுருள் சக்கரமும் தருவதாக தண்டோரா போடப் பட்டது.

மதுரை ஆட்சியாளராக இருந்த பிளாக்பர்ன், கர்னல் அக்நியூ.  ஆகியோரின் படைகள் துரோகி களின் துணையோடு 19-10-1801இல் மருதுபாண்டி யரைச் சோழபுரத்தில் (இது கவியோகி சுத்தானந்த பாரதியார் பிறந்த ஊர்) வைத்துப் பிடித்தனர். அக்டோபர் 24-இல் பெயரளவிலான விசாரணைக்குப்பின் போராளி மருதுபாண்டி யரும் போர்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத 10, 12, வயது சிறுவர்களும் திருப்பத்தூர் கோட்டை புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.  ஒரு கட்டத்தில் சிவகெங்கை மாவட்டத்தில் புளியமரங்களெல்லாம் பிணங்களைச் சுமந்து நின்றன.

மருதிருவர் தலைகள் துண்டிக்கப்பட்டு காளையார் கோவில் ஆலயம் எதிரேயும் உடல் திருப்பத்தூர் சுவிடீஷ் மருத்துவமனை வளாகத் திலும் புதைக்கப்பட்டன. தான்தோன்றித்தனமாகவும் தாங்களே நிரந்தரம் என்ற ஆணவத்திலும் வெள்ளையர்கள் பல கொடூரங்களைப் போருக்குப் பின்னரும் அரங்கேற்றம் செய்தனர்.

இந்தத் தண்டனைகளுக்கெல்லாம் கம் பெனியின் மேலிடம் பின்னர்தான் ஒப்புதல் கொடுக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.  சாட்சி விசாரணையும் புறம் தள்ளப் பட்டது. மருதிருவரைத் தூக்கிலிட்ட அதே தூக்கு மரத்தில் அவருடைய பேரன்களையும் தூக்கி லிட்ட கொடுமை சிவகங்கையில்தான் நிகழ்ந்தது. ஒரே மரத்தில் பல கிளைகளிலும் உடல்கள் தொங்கின.

இதைவிடப் பெருங்கொடுமையாக ஆங்கி லேயர்களால் திண்டுக்கல் பாளையக்காரர் எழு பத்து மூன்று வயது கோபால் நாயக்கர், பாஞ் சாலங்குறிச்சி செவத்தையா, ஊமை (துரை) குமாரசாமி ஆகியவர்களை விசாரணைக்கே இடம் கொடாமல் தூக்கிலிடப்பட்டதுதான். தூக்குத் தண்டனையிலிருந்து தப்பியோடிய எழுபத்து மூன்று போராளிகளை கடல்கடந்த வேல்ஸ் தீவு, பினாங்கு பூமிகளுக்கு நாடு கடத்தினர்.

மருதுபாண்டியரின் பதினைந்து வயது பாலகன் துரைசாமி 11-12-1802இல் தூத்துக்குடியி லிருந்து அட்மிரல் நெல்சன் கப்பலில் நாடு கடத்தப்பட்டவன் இறுதிவரை என்ன ஆனான் என்றே விவரம் தெரியவில்லை. இன்று சிங்கள ராஜ பக்ஷே 2012இல் பச்சிளம் பாலகன் பாலசுந்தரத்தை பிஸ்கட் தின்னக் கொடுத்துக் கொன்றது போன்ற கொடூர சம்பவம் 1801 இலேயே அரங்கேறியது.  மருதுபாண்டியர் உறவினர் என்று கருதப்பட்ட பால்மணம் மாறாத சிறுவர்களெல்லாம் அன்று தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வரலாறுகளெல்லாம் Indian Council Historical Research எனும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. இந்திய வரலாற்றுக் கழகம் இந்திய விடுதலைப் போர்களின் சம்பவங்களை அதன் உண்மைப் போக்கிலேயே பதிவு செய்யும் படியும் உண்மை யான வரலாற்றையே மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில்  திரு.கே.இராஜையன் போன்றவர்களால் நீதி மன்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

1800-1801இல் சிவகங்கையில் நடந்த விடு தலைப் போரே முதல் விடுதலைப்போர் என் பதை இந்திய வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டதோடு 1851இல் நடந்த போர் குறித்தும் பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளனர்.

வரலாறு என்பது வடக்கிலிருந்து வரவில்லை.  ரத்தம் தோய்ந்த இந்திய விடுதலைப் போர் நெல்லைச் சீமையில் தொடங்கி சிவ கங்கையில் எழுதப்பட்டு பிறகுதான் டெல்லி சென்றது. உண்மையான சம்பவங்கள் உள்ளது உள்ள படியே எழுதப்படவேண்டும்: அதுதான் உண்மை யான இறையாண்மைக்கு அடையாளம்.

ஆதாரநூல்கள்

1) முதல் விடுதலைப்போர் 1800-1801 கே. ராஜய்யன்.

2) A Struggle For Freedom in the Red Soil of South. (N. BALAKRISHNAN)

Pin It