இப்படி ஒரு நூலை ஏன் எழுதினீர்கள் என்று என்னைக் கேட்டால் இதுதான் என் பதில். இஸ்லாமிய சமூகத்தை வகாபி மயமாக்கும் பாசிச செயல்பாடுகளை கண்டும் காணாமல் செல்ல முடியாத மனிதன் என்ற காரணத்தினாலும் சகமனிதன் குறித்த அக்கறையும் மட்டும்தான் என்று சொல்லலாம். நான் பிறந்த சமூக அமைப்பு சாதி, மொழி, இன, பண்பாட்டு வேறுபாடு களை தூக்கிப்பிடிக்கும் கலாச்சார காவலர்களின் கோட்டைக்குள்ளே இருந்து தான் பேசவேண்டியிருக் கிறது.

1960களில் எனது தந்தையார் அசன் சாகிபு நானிருந்த மலையாள மண்ணுக்கு வந்தபோது எந்த மலையாளியும் அல்லது நாயர் சமூகமும் அவரை வரவேற்கவில்லை. ஆனால் மிகவும் துணிச்சலாக அந்த மண்ணில் குடியேறினார். வியாபாரமும், வைத்தியமும், தற்காப்புக் கலையும் அவரின் தூண்களாக இருந்தன. எனது தாயார் பயத்திலும் பீதியிலும் அந்நிய மண்ணில் வாழ்க்கையை துவக்கினாலும் அசாத்திய துணிச்சலையும் போராட்டத்தையும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

பெரும் பாரம்பரியங்கள் நிறைந்த நிலச்சுவந்தார்களான மூதாதையர்களின்  தகர்வுக்கு பின்னான நெருக்கடியுடன் என் பெற்றோர் அடையாளத்தை தொலைக்காமல் இஸ்லாமிய வாழ்வியலைக் கொண்டிருந்தனர். குமரி மாவட்டத்தின் ஆதி முஸ்லிம் குடியிருப்புகளில் முதன்மையான கன்னக்குறிச்சி (இப்போது அங்கே முஸ்லிம் யாருமில்லை) சமூக மதிப்பீடுகள் சார்ந்து அறம் சார்ந்து அழிந்து போயிருக்கக் காரணமான வேறுபாடுகளை சொல்லவேண்டியதில்லை. முஸ்லிம் அடித்தள சமூக அமைப்பில் நாட்டார் இஸ்லாத்தின் தாக்கம் பாரிய அளவில் இருந்தது.

நாட்டார் நம்பிக்கைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள், மரபுகள், நெறிமுறைகள் அதிகமாக இருந்து கொண்டிருந்தது. தொழில் சார்ந்தும் சூழல் சார்ந்தும் முக்குவர். பரவர், வண்ணார், நாடார் மற்றும் தலித் சமூகங்களுடன் மட்டுமே உறவுகள் இருந்தன. ஏழை,பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஊக்குவிப்பு நடந்த காலத்தில் தர்ஹா பண்பாடு சார்ந்த முஸ்லிம்கள் எல்லா புவியியல் நிலங்களுக்கும் புலம்பெயர வேண்டியதாயிற்று. நிலமற்றவர்களாகவே பெரும்பான்மை முஸ்லிம்கள் இருந்தனர். அந்நிய நாடுகளில் வாழ்வாதாரம் தேடி ஒரு சிலரே புலம் பெயர்ந்திருந்தனர். ஆனால் அடித்தள கூலித்தொழில்களை செய்பவர்களாக திகழ்ந்த முஸ்லிம்கள் பெருநாட்களில், கந்தூரிகளில், சியாரங் களில், புனித யாத்திரைகளில் மட்டுமே சந்தோஷம் அடைந்தனர்.

ஷாபர்கள் என்கிற பிச்சைக்காரர்கள், எத்திம் என்கிற அநாதைகள், பக்கீர்கள் என்கிற ஏழைகள் மட்டுமே அடித்தள முஸ்லிம்களிலும் மிக சாதாரண மானவர்களாக திகழ்ந்தார்கள். எங்கள் பகுதிகளில் இறைச்சிக்கடை நடத்துபவர்களும், பாய் முடைதல் தொழில் செய்பவர்களும் இன்னும் நாளாந்தர கூலித்தொழிலாளர்களாக வாழ்ந்தவர்கள் குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் சொந்த வீடு இல்லாமல்தான் இருந்தனர். மாலை வரை உழைத்து அதன் பின்னர் வீட்டில் அடுப்புப் பற்றவைத்து கஞ்சிக்காய்ச்சி உண்ணும் ஏழைகள் நிரம்பி இருந்த சூழல்.

எப்போதாவது ஒருமுறை பிரியாணியையோ அல்லது தேங்கா சோறையோ அல்லது நெய்ச்சோறையோ விருந்துகளில் மட்டுமே உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாக இருந்தனர். ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த அவர்கள் மற்ற சமூகத்தவருடன் இணக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருந்தனர். அத்தகைய முஸ்லிம்களின் மொழி நாகரிகம் அல்லாத பாசாங்கு இல்லாத கொச்சை மொழியாக பெண்கள் உடலுழைப்பு சார்ந்த சமூகமாக இருந்த நிலையில் அடித்தளமக்கள் திரள் சமூகமாக இருந்து மேட்டுமை குடிகளை கண்டு பொறாமை கொண்டவர்களாக அவர்களைப் போல் நாம் வாழ வழி இல்லையோ என்ற ஆதங்கம் கொண்டவர் களாக இருந்தனர்.

ஞானியாரப்பாவின் தர்ஹாவில் கந்தூரி காலங்களில் திரளாக திரண்டிருக்கும் பல இடத்து முஸ்லிம்களும் மற்ற சமூகத்தவரும் கொண்டாடும் உற்சவமாக, திருவிழாவாக இருந்த கொண்டாட்டங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை. அப்பாவின் தைக்காவில் கொடுக்கும் நேர்ச்சை சோறை வாங்க கடவபெட்டி களுடன் கால்கடுக்க நீண்ட நெடுவரியில் நிற்கும் எல்லா சமூக மக்களுக்கும் பசிப்பிணி அகற்றிய அமிர்தமாக அந்த நேர்ச்சை திகழ்ந்தது. காட்டுபாவா பள்ளிக்கு செல்லும் மக்களுக்கு நாயர்கள் சம்பாரம் என்ற நீர்பந்தலை அமைத்தும் கலையங்களில் மோர் வைத்தும் யாத்தீரிகர்களின் தாகங்களை தணித்தனர். இப்படி சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த மக்களை காலம் பிரித்ததோ அல்லது எது பிரித்தது?

எனது தந்தையார் சிலம்பம்,களரி, மல்யுத்தம் போன்ற தற்காப்புக் கலைகளை தலித் மக்களுக்கும் ஏனைய சிலருக்கும் பயிற்றுவித்தார். இதனால் அவர் ஆசான் என்று அழைக்கப்பட்டார். எப்போதும் ஆசானை சுற்றி சிஷ்யர்கள் நின்றிருந்தனர். என் உம்மா எல்லோருக்கும் வடித்துப் போட்டே சிரமத்துக்கு உள்ளானார். ஆனால் எங்களுக்கு இப்படி ஒரு பாதுகாப்பு தேவையாயிருந்தது.

பாதுகாப்பு கருதி நாய்களைக் கூட வளர்த்தோம். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என்ற அச்ச உணர்வோடு தான் வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் அதாவது ஆசானின் பிள்ளைகள் நால்வரும் ஆண்களாக இருந்ததால் வாப்பா அதிகமாக கவலையடைந்திருக்கவில்லை. நாயர்கள் எங்களை மேத்தன் என்றும் சாயிபு என்றும் துலுக்கன் என்றும் அழைத்தனர். ஆனால் வெறுப்பின் அரசியல் அவர்களிடையே இல்லாமலிருந்தது.

அனேகமாக சுன்னத் கல்யாணம் எனபடும் கத்னா எனும் வைபவம் எமது வீட்டில் நிகழ்ந்த போது எல்லா மலையாளிகளும் ஆச்சரியமாக எங்களைப் பார்த்தார்கள். பெண்கள் ஒளிவாக நின்று பேசிக்கொண்டார்கள். அது நல்லிணக்கத்தை சொல்லும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அது போல் ஆத்தங்கரைப்பள்ளி வாசலுக்கு நேர்ந்து விடப்பட்ட கிடாவை நாயர்பெண்கள் விசேசமாக கவனித்துக்கொண்டார்கள். அதை நேர்ச்சைக்காக பள்ளிக்கொண்டு சென்றபோதும் பல நாயர்களும் கலந்து கொண்டனர்.

எனது பள்ளித்தோழர்களான அரவிந்தன், அஜீத், சதீஷ், சுனில், பிரேமானந்தன், ஹரி போன்ற வர்கள் பெருநாட்களில் எங்களுடன் கலந்து கொண்டனர். நான் பிறந்தது முதல் இருபத்தியைந்து வருடங்கள் இந்த ஊரில் வளர்ந்தேன். இந்த ஊரிலிருந்து தைக்கா இருக்கும் ஊரில் படிக்கும் போதுதான் எனக்கு முஸ்லிம் களின் நட்பு கிடைத்தது. வகாபியம் மெல்ல பரவிக் கொண்டிருந்த வேளையில் எனது நண்பர்கள் பலரும் வகாபிகளாக மாறினார்கள். அவர்கள் தர்ஹா பண்பாட்டை இழிவுபடுத்தினார்கள். படித்த இளை ஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வகாபிகள் ஆனார்கள். மரபுரீதியான பல சடங்குகளையும், பண்பாட்டு நடவடிக்கைகளையும் அவர்கள் தடுக்க முற்பட்டனர்.

இயல்பாக நல்லிணக்க சூழலில் வளர்ந்த நான் வகாபி களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தேன். எனது நண்பர்களுடன் மணிக்கணக்கில் விவாதம் செய்தேன். அதன் பின்னர் இந்துத்துவ அமைப்புகள் எப்படி மற்ற மதத்தவரை வெறுக்க இந்துகளுக்கு சொல்லிக் கொடுத்தது போல் வகாபிசம் மற்ற மதத்தவரை வெறுக்க கற்றுக்கொடுத்தது. இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.

மேலும் புனித நூல்கள் குறித்து அவர்களின் அணுகு முறையிலும் வித்தியாசம் இருந்தது. கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய நாட்டார் கூறுகளையும் அவர்கள் மூடநம்பிக்கை என்று முத்திரை குத்தினார்கள். சமூக ஊடாடத்தையும்,பண்பாட்டு ஊடாட்டத்தையும் புரிய இயலாத அவர்கள் மற்ற மதத்தவரின் பண்பாடுகளை முஸ்லிம்கள் பின்பற்றுவது தவறானது என்று முடிவுகட்டினார்கள்இவ்வாறாக தான் வகாபியம் அன்னியப்பட்டுப் போனது.

2

மனிதகுல வரலாற்றில், மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சிந்தனைகள், பண்பாடு ஆகியவற்றோடு மிகுந்த தொடர்புடையது நாட்டார் வழக்காறுகள் ஆகும். இது வாய்மொழிக்கதைகள், தொழிற் பாடல்கள், காதல் பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, பழமொழிகள், விடுகதைகள், நிகழ்த்துக்கலைகள் என்றவாறு மக்களிட மிருந்து வெளிப்படுகிறது. இவை குறித்த ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

நாட்டார் வழக்காறு களில், இன்று (இன்றைய தலைமுறையினர்) நாம் இழந்தது பல என்றபோதிலும், நம்முள் எந்தவொரு சூழலிலும் நம்முடைய பழமரபு சார்ந்த சிற்சில நம்பிக்கைகள், சடங்குகள் செயல்படுவதை நம்மால் உணரமுடியும். அது நாம் சார்ந்துள்ள இருப்பிடம், சாதி, பால், மதம், மொழி சார்ந்து ஒருவித தொன்மத் தன்மையுடன் வெளிப்படும். இதனை நாம் குலக்குறி என்று கூறலாம்.

இந்தக் குலக்குறி, தொன்மக்கதை, கதைப்பாடல், நிகழ்த்துதல், உருவம், வழிபாட்டுச் சடங்கு முறைகள், பழக்கவழக்கங்கள், அழகியல் சார்ந்த வெளிபாடுகளாக அடையாளம் கொள்கிறது. இத்தன்மை குலதெய்வ வழிபாடாக நீட்சி கொள்கிறது. குலக்குறியின் தோற்றம் குறித்து ஆண்ட்ரூஸ் வாங்க், பிரேசர், வில்கெம் ஸ்மித், ரெட்கிளப் பிரென் போன்ற மேலைநாட்டார் ஆராய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த தெய்வ வழிபாட்டு முறை அதாவது நாட்டார் வழிபாடு என்பது பண்பாடு மரபு சார்ந்த, அதிகாரப்பூர்வமற்ற, நிறுவனமயமாக்கப் படாத தன்மையில் உள்ளது. நாட்டார் வழக்காறுகள் குறித்தும், குலதெய்வ வழிபாடு குறித்தும், நாட்டார் இஸ்லாம் குறித்தும் தே.லூர்து, நா.வானமாமலை, .சிவசுப்பிரமணியன், .கா.பெருமாள், பி.எல்.சாமி, டி,தருமராஜன், .முத்தையா, இத்ரிஸ், எச்.ஜி.ரசூல், சொக்கலிங்கம், .முத்துமோகன், ஹாமீம் முஸ்தபா, எச்.முஜீப் ரஹ்மான் போன்றோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையை மேற்கொள்ளும்போது, இயற்கையின் பல்வேறு ஆற்றல்களையும், அதீத தன்மைகளையும் கண்டு அவற்றை இறைவன் என்று அறிந்து எல்லாம் அவனாக இருப்பதைக் கண்டு நிலம், நீர், காற்று, ஆகாயம், இடி, மழை, மின்னல், சூரியன், சந்திரன் போன்றவற்றை இறைத் தோற்றங்களாக அல்லது இறைவெளிப்பாடாக இருக்கக் கண்டான். இதனை,

ஞாயிறு, திங்கள், தீச்டர்” (தொல். பொருள். நூற்பா, 85)

ஞாயிறு போற்றுதும்...,திங்களைப் போற்றுதும்...., மாமழைப் போற்றுதும்....,” (சிலம்பு. கடவுள் வாழ்த்து 1 :1 :7)

என்ற பாடல்களின் வழி அறியமுடிகிறது.

இதன் நீட்சி விலங்கு, செடி, சடப் பொருள்களையும் வணங்கச் செய்தது. இந்த நம்பிக்கைகள் தான், ஆற்றங்கரை ஓரங்களில் குடியமர்த்தல், பயிரிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடவும் தூண்டியது. இந் நம்பிக்கையுடையவர்கள் குலக்குறியுடைய மக்கள் என்று மானுடவியலாளர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் மிகப் பரவலாக குலக்குறி வழிபாடு காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழங்குடிகளான புலையர், வளியர், குன்னுவர், தோடர் முதலியவர்களிடத்திலும் பள்ளர், பறையர், நாயக்கர், கவுண்டர் இனத்தவரிடத்திலும் குலக்குறி வழிபாட்டின் எச்சங்கள் காணப்படுகிறது என்று டாக்டர் தே.ஞானசேகரன் கூறுகிறார்இஸ்லாமிய பெருங்கதையாடல் பரப்பிலும் இது போன்ற எச்சங்கள் உள்ளன.

இனக்குழு சமுதாயத்தில் தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகை சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணை தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். இதன் நீட்சியாக நாம் தமிழ்ச்சூழலில் அம்மன் வழிபாட்டைக் கூறலாம். குலதெய்வ வழிபாட்டில் ரேணுகாம்பாள், மாரியம்மாள், பூங்காவனத்தாள், பாளையக்காரி, மகமாயி, பச்சையம்மாள், அங்காளம்மன், கெங்கையம்மன், பொன்னியம்மன், எல்லையம்மன் எனப் பல தெய்வங்களைக் கூற முடியும்.

இங்கு வீட்டு தெய்வம், குலதெய்வம், கிராம தேவதை அல்லது ஊர் காக்கும் தெய்வம் என்றவாறு மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தி வணங்குகின்றனர். அதே போல ஆண் தெய்வங்களான ஐயனார், காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை ஊருக்கு வெளியே வைத்து காவல் காக்கும் தெய்வமாக வணங்குகின்றனர்

ஆனால் நாட்டார் இஸ்லாத்தை பொறுத்தவரை பெண்களும் இறைவனின் தோற்றம் என்ற அடிப்படையில் ஆன்மீகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களை மதிக்கும் தர்ஹா வழிபாடும் கபுறுஸ்தான் அல்லது சியாரங்கள் முக்கியத்துவம் பெற்றனஏழு தாய்மார்கள் என்று சொல்லப்படும் பீமாதாய், ஆத்தரங்கரை தாய் போன்றவர்கள் தமிழ்சூழலில் வலியுல்லாஹ்களாக மதிக்கப்படுகின்றனர்.மேலும் ஊர்க்காவல் செய்தவர்களின் கபுறுகளும் முக்கியத்துவம் பெற்றன.

குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர். அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டும் வணங்கி வந்தனர். பழங்கதை ஒன்றில் ஒன்பது அக்கா தங்கைகள் இறந்த பின் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு ஊரிலும் கிராம தேவதைகளாக இருந்து ஊரைக் காக்கின்றனர். அவர்கள் செல்லி, வில்லி, வைணவி, பூஞ்சோலை, துர்க்கை, புரையாறு, இருச்சம்மா, பொன்னி, கங்கை என்பதாகும். இந்த தொன்மக் கதைகளின் வழி அம்மன் வழிபாட்டில் சாதி, சாதியக்கிளை, உறவுமுறை, குலம் ஆகியவற்றை மிக எளிதில் இனங்காணமுடியும்.

குறிப்பிட்ட சாதி முறையினருக்கும், அவர்கள் வணங்கும் குல தெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தங்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வானாலும் காது குத்தல், குல தெய்வ பொங்கல் வைத்தல், இறந்தவர்களை வர்ணித்தல் மற்றும் பூவாடை வர்ணிப்பு போன்றவற்றை நடத்தி உயிர்ப்புத் தன்மையை மீட்டுருவாக்கம் செய்கின்றனர். குறிப்பாக, புதிய வீடு கட்டுபவர்கள் குடி புகுமுன்னும், வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் போன்ற நிகழ்வுகளில் இதனைக் காணலாம்.

மேலும் இந்த நிகழ்வுகளில் உயிர்ப்பலி கொடுத்தல், சாமியாட்டம் ஆடுதல் போன்றவற்றைக் காணலாம். “நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவை கொலையில் உதித்த தெய்வங்கள். குறிப்பிட்ட தெய்வம் கொலையுண்ட முறைக்கும் அதற்கு உயிர்ப்பலி கொடுக்கும் முறைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டுஎன்கிறார் .சிவ சுப்பிரமணியன். இந்தச் சூழலில், நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது மக்களின் வாழ்வியலின் அடிநாதமாக இருப்பதை உணர முடிகிறது

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை தர்ஹா பண்பாடும் அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்களும் முக்கியமானவைஉயிர்ப்பலி நேர்ச்சை இறைநேசர்களின் பெயரால் இறைவனுக்கு அளிக்கப்படுகிறதுவிளிம்புநிலை அல்லது அடித்தள மட்டத்து முஸ்லிம்களுக்கு பயம், நோய், சுபிட்சம் என்பன போன்ற பல்வேறு காரணங்களுக்காக நேர்ச்சைகள் அளிக்கிறார்கள்.

அதே வேளையில், இன்றைய குலதெய்வ வழிபாடு குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் இன வரைவியல், மானுடவியல், இருத்தலியல், குறியியல் போன்ற கோட்பாடுகளின் வழி நின்று நாட்டார் வழக்காற்றியலை விளக்குவதை காண்கிறோம். இதன் முடிந்த முடிபில் சில சூழலில், நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது (திரௌபதியம்மன், ரேணுகாம்பாள்) வைதிக இந்து சமயத்திற்குள் இழுக்கப்படுதலைக் காணலாம்.

மேலும் இதுபோன்ற (இனவரைவியல், மானுடவியல், இருத்தலியல்) ஆய்வுகளால் நாட்டார் வழக்காறுகள் என்பது அதிகாரம் சார்ந்து, நிறுவனம் சார்ந்து அடையாளப்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது. இந்த வகையில் நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், ஓர் அமைப்பு முறை, சாதி, சாதியக்கிளை சார்ந்து திகழ்கிறது என துணிந்து கூறலாம்இஸ்லாமி யரைப் பொறுத்தவரையில் நவீனவாதிகள், வைதீக வாதிகள், நாட்டார்வாதிகள் என்ற கிளைகளுக்குள் இயங்குவதை காணலாம்.

3

பின் நவீனத்துவம் தொடர்ந்து உரையாடல் நடத்தி வரும் வேளையில் மார்ஜினலிசம், மினிமலிசம் போன்ற சொல்லாடல்கள் கவனம் பெறத் தொடங்கியதுஅடித்தட்டு மக்கள் ஆய்வுகள் (subaltern studies). வரலாற்றெழுத்தியல் (historiography) மையங்களைத் தாண்டி புவியியல், பொருளாதார, பண்பாட்டு, கருத்தியல் மட்டங்களில் விலக்கி வைக்கப்பட்டிருந்த விளிம்புகளை ((peripersy)) கணக்கில் எடுத்துக்கொண்டது

அடித்தள மக்களின் செயல்பாடுகளை அரசியல் நீக்கம் ((de-political) ) செய்து பார்ப்பது வளர்ந்தது. நாட்டார் சமூகங்களுக்கும் (folk society) பழங்குடி, தலித் சமூகங் களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தலித் சமூகத்திற்கும் விளிம்புநிலை மக்களுக்குமான வேறுபாடுகளையும் துல்லியமாக அறிய முடிகிறதுஎனினும் தலித்துக்கள், பழங்குடியினரை அடித்தள மக்களாக இந்திய சூழலில் கணக்கிலெடுப்பது தவறாகாது.

ரஞ்சித் குகா, பார்த்தா சாட்டர்ஜி, ஞானேந்திர பாண்டே, தீபேஷ் சக்கரவர்த்தி, காயத்திரி ஸ்பீவாக் போன்றோர்கள் அடித்தளப் ஆய்வுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பின் நவீனத்துவம், பின் மார்க்சியம், பின் காலனியம், ரெட் பெமனிசம் போன்றவை தொடர்ந்து அடித்தள பிரிவை தத்துவ நோக்கிலும் பண்பாட்டு, பொருளாதார நோக்கிலும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் விளிம்புநிலை இஸ்லாம் என்ற கருத்தாக்கம் குறித்து பேச வேண்டியுள்ளது.

கிராம்சி, பூக்கோ, தெரிதா, ஜர்ஹன் ஹெபர்மாஸ், வால்டர் பெஞ்சமின் போன்றோர்கள் ஒடுக்கப்பட்ட உடல்கள் குறித்தும் மேலாண்மை குறித்தும் பேசிய விஷயங்களே விளிம்பு நிலை ஆய்வுகளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இந்த தளமுடைய சபால்டன் ஆய்வு களின் தொடர்ச்சியாகத்தான் விளிம்புநிலை இஸ்லாம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

  பின் கீழ் திசையியல் ((post orientalism) முறையியலாக இது நீட்சியடைகிறதுஅனைத்துவகை ஏகாதிபத்தியங் களையும், மயமாக்கல்களையும் எதிர்த்துக்கொண்டு நாட்டார் இஸ்லாத்தின் (folk islam) கூறுகளை தக்க வைத்துக்கொண்டு வைதீக இஸ்லாத்துக்கும் (orthodox islam) நவீன இஸ்லாத்துக்குமான (modernist islam) உரையாடல்களை விளிம்புநிலை இஸ்லாம் விரும்பு கிறது. விளிம்புநிலை இஸ்லாமும் அடித்தட்டினர் பண்பாடு, அடித்தட்டினர் உடல்,அடித்தட்டினருக்கு எதிராக கட்டமைக்கப்படும் உண்மை ஆகியவற்றையே பிரதானப்படுத்துகிறது.

நாடு, சமூகம், நிறுவனங்கள், மொழி போன்றவை ஆண் உடல்களாக இருப்பதாலும் பண்பாட்டு மேலாண்மை புவியியல், மொழி, இனம், மதம் சார்ந்து பல்வேறு பிரிவுகளில் தகவமைத்துக்கொண்டு இருப்ப தாலும் அடித்தள மக்களை எல்லாவகை மேலாண்மை களில் இருந்தும், ஆண் உடல்களிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சியை விளிம்பு நிலை இஸ்லாம் எடுத்துரைக்கிறதுமூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனை களில் ஏகாதிபத்தியத்தின் பங்கெடுப்பை புரிந்து கொள்ளும் முயற்சிகளிலும் பொது உளவியலில் பாசிச தடங்கள் பதிந்திருப்பதை எடுத்துச் சொல்லுவதிலும் அது உறுதி பூணுகிறது

பண்பாட்டு இஸ்லாம் (cultural islam) தனக்கேயான தன்மையுடன் உரையாடல் செய்து கொண்டிருப்பதைப்போல தாராள இஸ்லாம் (liberal islam)), மதநீக்க இஸ்லாம் (secular islam) போன்றவை வெளிப்படுத்தும் ஜனநாயக தன்மைகள் யாவற்றையும் விமர்சனத்துடன் விளிம்பு நிலை இஸ்லாம் தமது பார்வைகளை வெளிப்படுத்துகிறது. கற்பிதங்களையும், கட்டமைப்புகளையும், நிறுவனங்களையும், அரசிய லையும் எதிர்நோக்கும் அதே வேளை மாற்று உரையாடல் களுக்கான கதையாடல்களை உருவாக்குகிறது.

உடலே நிலமாகவும், நிலமே உடலாகவும் மேலாண்மை ((hegemony) இயற்கை வடிவமாக இருந்து பண்பாட்டு அமைப்பாகத் திகழ்வதை அடித்தளமக்களின் பார்வையில் கொண்டுசெல்ல வேண்டியதும் முக்கிய மாகயிருக்கிறதுஅரபு மையவாதத்தையும் தேச, தேசீய, காலனீய, உலகமயமாக்கல் நடவடிக்கைகளையும் சர்ச்சைக்கு உட்படுத்தி ஆண் உடல் பற்றிய பிரக்ஞையை முன்னிலைபடுத்த வேண்டியிருக்கிறது. உடல் அரசி யலையும் அடையாள அரசியலையும் மக்கள்திரளில் காட்ட முயலும் ((collective agency) அரசியலாக்கும், நியாயப்படுத்தல்களையும் புரிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது. எனவே விளிம்பு நிலை இஸ்லாத்தின் கோட்பாட்டுத் தளம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

அடித்தள முஸ்லிம்களான கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள், விவசாய கூலிகள், நடைபாதை வியாபாரிகள், தொழில் கூலிகள், அரவாணிகள், நோயுற்றோர், நாடோடிகள், பிச்சைக்காரர்கள் போன்ற பிரிவினர் பற்றிய சமூக,பொருளாதார,அரசியல் ஆய்வுகளுக்கான தேவையை விளிம்பு நிலை இஸ்லாம் பேசுகிறதுவைதீக மரபுகள் நாட்டார் கூறுகளை அங்கீகரித்துக் கொண்டு அடித்தள மக்களோடு நேசம் கொள்வது போன்று அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலை கட்டுடைக்க வேண்டியிருக்கிறது

நாட்டார் இஸ்லாத்தின் தர்ஹா பண்பாடு வெகுஜன இஸ்லாத் தோடு தொடர்புடையதாக இருப்பதால் அடித்தள மக்களையும் ஈர்த்துக்கொள்கிறதுஆனால் தர்ஹா பண்பாடு போற்றும் நிறுவன ஆதிக்கங்களை, அடித்தள மக்கள் மீது செலுத்தும் அதிகாரங்களை சர்ச்சைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.இஸ்லாத்துக்குள் நிலவும் பெருங்கதையாடல்களின் தகர்ப்பை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது

இஸ்லாமிய பெருமரபு களுக்கு சற்றும் தொடர்பில்லாத அடித்தள முஸ்லிம் களின் மொழி, பண்பாடு, கலை, விழாக்கள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், சடங்காச்சாரங்கள் போன்ற தனித்துவமிக்க செயல்பாடுகளை கைவிடாமல் தொடரும் அவர்களின் வாழ்க்கை ஒளிவட்டங்களுக்கு புறம்பாக புனிதமற்றதாக இருப்பதை மையபடுத்தி அதை விவாதிக்கிற சூழலை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.

நிறுவன இஸ்லாத்தின் எந்த ஒரு நிறுவனங்களிலும் இல்லாத அடித்தள முஸ்லிம்கள் மீது வைதீக, நவீன முஸ்லிகள் தொடரும் தத்துவ அறிவு கோட்பாட்டு ஆதாரங் களை (epistemological foundation) பொருள்கொளலி யலை ((hermeneutics) ), நியாயப்படுத்தல்களை ((legitimacy) நிராகரித்து மாற்று அறிவுகோட்பாட்டாதாரங் களை, பொருள்கொளலியலை,நியாயபடுத்தல்களை தத்துவ நிலையிலும், வாழ்வியல் முறைகளிலும் உருவாக்கிக் கொள்ளும் விரிவான தளம் விளிம்பு நிலை இஸ்லாத்துக்கு இருக்கிறது.

அடித்தள மக்களல்லாத பிற முஸ்லிகள் இஸ்லாம் என்ற பேரில் முன்வைக்கும் உண்மைகளை சர்ச்சைக்கு உட்படுத்தவேண்டும். சட்டபூர்வமான உண்மை எவ்வாறு அடித்தட்டினருக்கு எதிராக செயல்படுகிறது என்று விவாதிக்க வேண்டி யிருக்கிறது.இஸ்லாமிய பெருமரபு நம்பிக்கைகளுக்கு புறம்பான இவர்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்யும் நம்பிக்கையின் அரசியலை சொல்ல வேண்டியிருக்கிறது.

அவர்களின் பண்பாடும், மொழியும், பழக்கவழக்கங்களும் அராஜகமாக, ஒழுக்கமற்றதாக,புனிதமற்றதாக இருக்கிறது எனும் பார்வையை மறுதலித்துக்கொண்டு அவர்களை ஜீவனுள்ளவர்களாக மாற்ற வேண்டிய பணியையும் இது ஆதரிக்கிறது. அடித்தட்டினரின் உணர்வு நிலை முக்கியப்படுத்தவேண்டும். அவர்களது உணர்வு நிலை ஆதிக்கங்களுக்கு, சுரண்டல்களுக்கு அடங்கிப் போத லுடன் தொடர்புடையதாக இருப்பதால் வாழ்வியல் ஆதாரங்களை பெறும் உரிமைகளையும், விடுதலை யையும் விளிம்பு நிலை இஸ்லாம் கோட்பாட்டுரு வாக்கத்திலும் சரி, செயல்திட்டத்திலும் சரி முன்னெடுத்துச் செல்லுகிறதுஇதுவரை அடித்தட்டினரின் விடுதலைக் காக பேசப்பட்ட, செயல்பட்ட விஷயங்கள் யாவும் கோட்பாட்டுப் புனைவாக இருப்பதால அவற்றை சர்ச்சைக்கு உட்படுத்துவதும் இதன் வேலை திட்டமே.

உலகமயமாதலின் (globalaisation) புதுவடிவமாக பொயெதார்த்த காலனியம் ((virtual colonialism ) தகவல் தொடர்புகளை முன்னிறுத்தி காலனீய செயல்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கும் சமயத்தில் நவ முதலாளியம் ((pan capitalism) ஒரே உலகம் ஒரே பண்பாடு என்ற கோஷத்துடன் தமது மேலாண்மையை செய்து கொண்டி ருக்கிறது.

இவ்வகை ஆதிக்கங்களை எதிர்கொள்வது எப்படி செயற்திட்டத்தையும், பிரக்ஞையையும் மாற்று எதிர்நடவடிக்கை முகாம்களிலிருந்து உருவாக்குவதில் முனைப்புடன் செயலாற்றுகிறது.மேனிலை சிந்தனை வரிசை (higher order of thoughts) எனும் கருத்தாக்கம் பொது உளவியலில் படிகளாக எவ்வாறு அடுக்கப் பட்டிருக்கிறது என்றும் அவற்றுக்கு தன்னிலை படிந்து போகும் நிலையையும் எடுத்துரைக்கிறது.

அந்த சிந்தனையின் வெளிச்சத்தில் ஊடக அரசியலை எதிர்கொள்ளும் நடவடிக்கைபற்றி விளிம்புநிலை இஸ்லாம் தீவிரமாக விவாதிக்கிறது. வினைசெய் உயிரிக்கும்,வினைபடு உயிரிக்குமான அரசியல் யுத்தம் நுண்தளத்திலிருந்தும் பெரும்தளத்திலிருந்தும் உருவாவதை தீவிரமாக அலச வேண்டிய சூழலும் தற்போது அமைந்துவிட்டிருக்கிறது.  இன்று உண்மை பன்மீயம் ((real pluralism) என்ற பெயரில் இஸ்லாமியர் பலர் தாராள இஸ்லாத்தில் விளிம்பை பேசவேண்டும் என்ற நிலையை எடுத்திருப்பது முக்கிய சமூக நிகழ்வாகும். சாந்திரா முசாபர்(மலேசியா), முகமது தலாபி (துனிசியா), சூபி மக்சானி(லெபனான்), §மாயூன் கபீர் (இந்தியா), அப்துரஹ்மான் வாஹித்(இந்தோனேஷியா), அப்துல் கரீம் சாரூஸ் (ஈரான்), பரீத் இஸ்ஹாஹ்(தென் ஆப்பிரிக்கா) போன்றோர்கள் உண்மை பன்மீயம் மூலம் இஸ்லாத்தின் வைதீக செயல்பாடை உடைத்துவிடலாம் என்று குரலெழுப்புகிறார்கள்.

இஸ்லாமிய பன்மீயம் என்ற கருத்தாக்கம் கருப்பு இஸ்லாம் இறையியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வாறு விளிம்புநிலை பற்றிய கண்ணோட்டங்கள் உலக முழுவதும் உருவாகியுள்ள சூழலில் கருத்துருவாக்கத் திலும், கோட்பாடாகவும், செயற்திட்டமாகவும் விரிவும் ஆழமும் கொண்டுள்ள விளிம்பு நிலை இஸ்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைப் பதிவுசெய்கிறது.

(விரைவில் வெளிவர இருக்கும் நான் ஏன் வஹாபி அல்ல? என்ற நூலிலிருந்து)

Pin It