Sparrow1

ரயில் ஒன்று போகிறது
பழைய படத்தின்
பாடலொன்றையும் சுமந்து
இடையில்
சரக்கு ரயில்
வராமல் இருந்தாலோ
வேறு ரயில்கள்
வராமல் இருந்தாலோ
அன்றி
தடங்கல்
ஏதும் இருப்பதில்லை
மேலும்
நிலையம் தோறும்
வேறு வேறு
ரயில்களும்
மாறிக்கொண்டிருக்கும்

2

திரைப்படம்
ஒன்றை காட்டுகிறது
ஒரு துளையின்
பல வர்ணங்கள்
விரித்து பாய்ந்து
இப்போதெல்லாம்
தலைகள்
திரையில் தெரிவதில்லை
என்ற குறையை
தவிர
வேறுபட்ட படங்களுக்கும்
வேறு வேறு
துளைகள்

3

பொம்மை விற்பவன்
பொம்மை விற்பதற்காக
கூவுகிறான்
ஒவ்வொன்றின் பெயரைச்
சொல்லி
வாங்கலையோ என்று
கூவி கூவி போகிறான்
பொம்மைகளை எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது
ஆனால்
சற்று நேரம்
கழிந்து வந்தவர்களுக்கு
பொம்மை விற்பவன்
பற்றியோ
கூவுதல் பற்றியோ
தெரிந்திருக்க
நியாமில்லைதானே

---
4

எப்போதோ சொல்லியிருக்க வேண்டும்
வீட்டின் முகடில்
கூடு கட்டியிருக்கும்
தூக்கணாம் குருவியைப் பற்றி
ஒவ்வொரு முறையும்
குருவி திரும்பி வருவது வரையிலும்
நான்
அச்சத்திலேயே
உழலுகிறேன்
கூட்டில் முட்டையிட்டிருக்கலாம்
அல்லது
குஞ்சுகள் இருக்கலாம்
அவற்றுக்கு என்ன பாதுகாப்பு
இருக்கிறது
குருவி இதை கண்டும்
காணாததும் ஏன்?
அந்த குருவியிடம்
சொல்லி வையுங்கள்
ஒரு வேளை நான்
இல்லாமல் போனால்...

---
5

முற்றத்தில் நின்ற
பேரிக்காய் மரத்திலிருந்து
கனிந்து
விழுந்தது
பேரிக்காய்
மேலும்
விழுந்து கொண்டிருக்கும்
கனிகளை குறித்து
பேரிக்காய் மரத்துக்கு
கவலை ஏதும் இல்லையோ?
அணில்களும் தின்றன
காகங்களும் தின்றன
மிச்சமானதை
எறும்புகளும்
தின்றன
நீங்களும்
நானும்
தின்ன வேண்டும்
என்ற அக்கரை இல்லாமல்
தின்று களைய
அவற்றுக்கு
வேறு என்ன
காரணம் இருக்கக்கூடும்? 

எச்.முஜீப் ரஹ்மான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It