பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் இரண்டினோடும் தற்சிறப்புப் பாயிரம் என்ற மற்றொரு வகைப் பாயிரமும் இலக்கண இலக்கியங்களில் காணப்படுகிறது. இதுவரையிலும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத் தாமே புகழ்ந்து தம் நூலில் சிறப்புப்பாயிரம் எழுதிக்கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது. ஆயினும் தற்புகழ்ச்சிக்கு எவ்வகையிலும் இடம் தராது. கடவுள் வணக்கம், அவையடக்கம், நூற்பொருள், நூல் வந்த வழி, நூற்பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே தற்சிறப்புப் பாயிரம் எனப்படுகிறது.களவியலுரைகாரர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பவணந்தியார் ஆகியோர் தற்சிறப்புப் பாயிரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. முதன்முதலாக தற்சிறப்புப் பாயிரத்தின் இலக்கணத்தைக் கூறவந்த “யாப்பருங்கலக் காரிகையின் உரைகாரராகிய குணசாகரர்,
“வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச்
சிறப்பென்னும் பாயிரமாம்”
“தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
எய்த உரைப்பது தற்சிறப் பாகும்” (யாப்பு.குணசாகரருரை.பக்.3-4)
என இவ்விரண்டு நூற்பாக்களை மேற்கோளாகச் சுட்டிக் கூறியுள்ளார்”1 என இ.கி.இராமசாமி குறிப்பிடுகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நூற்பாக்களில் முதல் நூற்பா வணக்கம், அதிகாரம் எனக் கூறுவதையே, இரண்டாவது நூற்பா தெய்வ வணக்கம், செயப்படுபொருள் எனக் கூறுகிறது. சிறப்புப் பாயிரத்தில் பாயிரக் கூறாகக் கூறப்படும் ‘நுதலிய பொருளும்’, தற்சிறப்புப் பாயிரக் கூறாகிய ‘செயப்படுபொருளும்’ ஒரே பண்பைக் கொண்டவை. நூற்பா வழி நின்று பார்க்கும்பொழுது தற்சிறப்புப் பாயிரத்தின் கூறுகளாக கடவுள் வணக்கத்தையும், நுதலிய பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். இப்பாயிர வகை தெய்வ வணக்கம், செயப்படுபொருள் இரண்டினோடு மட்டுமல்லாமல் காலப்போக்கில் நூற்பெயர், ஆக்கியோன் பெயர், நூல் யாப்பு, அவையடக்கம் என்பனவற்றையும் பெற்றிருந்தன என்பது உற்று நோக்கத்தக்கது. யாப்பருங்கலக்காரிகையின்,
‘கந்தம் மடிவுஇல் கடிமலர்ப் பிண்டிக்கண்ணார் நிழற்கீழ் எந்தம் அடிகள் இணைஅடி ஏத்தி 'எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பா இனம் கூறுவன் பல்லவத்தின் சந்தம் மடிய அடியால் மருட்டிய தாழ்குழலே!'
எனும் இத்தற்சிறப்புப் பாயிரத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்டு மற்ற இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள தற்சிறப்புப் பாயிரங்களை ஆராய வேண்டியதன் காரணம் யாப்பருங்கலக் 'காரிகை' (கி.பி.10) காலத்தால் முற்பட்டது. கீழ்க்காணும் இலக்கண நூல்களான,
1. வீரசோழியம் கி.பி. 11
2. நேமிநாதம் கி.பி. 12
3. தண்டி கி.பி. 12
4. நன்னூல் கி.பி. 13
என்ற இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள தற்சிறப்புப் பாயிரக் கூறுகளை யாப்பருங்கலக் காரிகை தற்சிறப்புப் பாயிரக் கூறுகளை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
யாப்பருங்கலக்காரிகை
தமிழ் இலக்கண நூல்களில் இன்று நமக்குக் கிடைக்கும் இலக்கண நூல்களில் பழமையான நூலாகிய தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு எழுந்த யாப்பிலக்கண நூல்களில் யாப்பருங்கலக்காரிகை முதன்மையான இலக்கண நூலாகும். இந்த நூல் யாப்பிலக்கணம் பயில்வோரால் இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்புக்குரியது. இந்நூல், “யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் செய்யப்பட்டுள்ளமையான் யாப்பருங்கலக்காரிகை என்னும் பெயர்த்து”2 என்கிறார் இளங்குமரனார்.
யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இரண்டு நூல்களையும் அமிதசாகரர் என்பவர் இயற்றினார். இவர் அமுதசாகரர் எனவும் அழைக்கப்பட்டார். (அமித-அளவுகடந்த, சாகரர் - கடல் என்னும் பெயர்), ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோன்’ என்கிறது யாப்பருங்கல சிறப்புப்பாயிரம். இந்நூலாசிரியர் பற்றி மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலில் உள்ள கல்வெட்டுப் பாடல் ஒன்றில் அமுதசாகரர் என்றும் மற்றொன்றில் அமிதசாகரர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுக்கள் முதற்குலோத்துங்க சோழனின் 38ஆம் ஆட்சியாண்டிலும், 46ஆம் ஆட்சியாண்டிலும் எழுதப்பட்டவை என்கிறார் இரா. இளங்குமரனார். ஆகவே, அமிதசாகரரின் ஆட்சிக்காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு என்பது கவனிக்கத்தக்கதாகும். இவர் சமண சமயத்தவர் என்பது உறுதியாகிறது. இவரது ஊர் தொண்டை நாட்டிலிருந்த காரிகைக் குளத்தூர் என்னும் சிற்றூராகும். இந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டிருக்கிறது. செய்யுள்கள் அனைத்தும் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளன. (மகடூஉ என்பதற்குப் பெண் எனவும், முன்னிலை என்பதற்கு முன்னிலையாக்கிப் பேசுவது எனவும், காரிகை என்பது பெண் என்னும் பொருள் தரும்). “ஆசிரியன் தன் மாணாக்கியாகிய ஒரு பெண்ணைக் கற்பனையில் நினைத்துக்கொண்டு, பாடும் நிலையில் அமைந்துள்ளது இந்நூல். தாழ்குழலே, ஐயநுண் இடையாய், ஒண் நுதலே, கறைகெழுவேல்கண் நல்லாய், பூங்கொடியே, கள்ளக் கருநெடுங்கண் சுரிமென்குழல் காரிகையே, நறுமென் குழல் தேமொழியே, பூங்குழல் நேரிழையே இவ்வாறு இந்நூல் முழுவதும் ஒரு பெண்ணை முன்னிறுத்திப் பேசுவதால் இந்நூலுக்கு “காரிகை”3 என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது என ச.வே.சு. குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலின் உரையாசிரியர் குணசாகரர். இவர் அமுதசாகரரின் ஆசிரியர் என்பது,
“குணக்கடம் பெயரோன் கொள்கையின் வழாஅத்
துளக்கறு வேள்வித் துகடீர்காட்சி
அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே”4
எனும் யாப்பருங்கலச் சிறப்புப்பாயிரம் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், அமிதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசாகரர் (குணக்கடம்பெயரோன்) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலிற்குப் பலர் உரை எழுதியிருப்பினும், குணசாகரர் உரைதான் மிகப் பழமையானது. இந்நூலாசிரியரும், உரையாசிரியரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் (சமணம்). இருவரும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள்.
யாப்பருங்கலக்காரிகையில் முதல் மூன்று பாடல்கள் தற்சிறப்புப் பாயிரமாகும். முதல் பாடலில் அருகன் வணக்கம், செயப்படு பொருள் பற்றியும், பின்னர் உள்ள இரண்டு பாடல்கள் அவையடக்கம் பற்றியும் குறிப்பிடுகின்றன. “இலக்கண நூல்களில் அவையடக்கம் கூறும் மரபு யாப்பருங்கலக் காரிகையிலிருந்து தான் தொடங்குகிறது எனலாம்”5 என்ற கருத்தினை இ.கி.இராமசாமி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரசோழியம்
அகத்தியம் தமிழில் தோன்றிய முதல் நூலாக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றாலும் அது இதுகாறும் கிடைக்கப் பெறவில்லை. எனவே, நமக்குக் கிடைக்கப் பெற்ற இலக்கண நூல்களில் தொல்காப்பியம் முதல் நூலாக விளங்குகிறது. இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று நிலைகளில் அமைந்தாலும், பொருளதிகார செய்யுளியலில் யாப்பும், உவமவியலில் அணியும் அமைந்துள்ளது. ஆனால், ஐந்திலக்கணங்களையும் கூறும் முதல் நூலாக வீரசோழியம் அமைகின்றது என்று ‘தமிழ் இலக்கண நூல்கள்’ என்ற நூலில் ச.வே.சு. குறிப்பிட்டுள்ளார்.
புத்தமித்திரர் ஒரு சிற்றரசர். இவர் பௌத்த சமயம் சார்ந்தவர். பொன்பற்றியூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர். அவர் காலத்து சோழ அரசன் வீரராசேந்திரன். இவன் காலம் கி.பி. 1060 - 1090. இம்மன்னன் வீரசோழன் என அனைவராலும் அழைக்கப்பட்டான். வீரராசேந்திரன் விரும்பியபடி ஐந்து இலக்கணமும் உள்ளடங்கிய நூல் ஒன்றை இயற்றி, அதனை அவன் பெயரால் வீரசோழியம் எனப் பெயரிட்டதை,
“தேமேவிய தொங்கல் தேர்வீரசோழன் திருப்பெயரால் பூமேல் உரைப்பன வடநூல் மரபும் புகன்று கொண்டே”6 இப்பாயிரம் மூலம் அறியலாகிறது. தமிழில் தோன்றிய இலக்கண நூல்களில் ஒருநூல் இயற்றப் பணித்த அரசன் பெயராலே விளங்கும் முதல் இலக்கண நூல் எனும் சிறப்பு இந்நூலிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்துள்ளமையால் ‘வீரசோழியக்காரிகை’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் சோழர்காலத்தில் தோன்றிய இலக்கண நூலான வீரசோழியம் வடமொழி இலக்கணத்தை ஓரளவிற்குத் தழுவித் தமிழின் ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாகக் கூறியுள்ளது. 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம், தற்போது வழக்கில் இல்லாது போனாலும், அந்நூல் தோன்றிய காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இயற்றி அரங்கேற்றிய காலத்தில் அப்புராணத்தின் முதல் செய்யுளில் வருகின்ற திகடசக்கரம் என்ற சொல்லுக்கு (திகழ்+தசக்கரம்) புணர்ச்சி இலக்கணம் கூறும்படி அவையோர் தடை நிகழ்த்தியபோது, வீரசோழியத்திலிருந்து இலக்கணம் கூறி விளக்கியதை அவையோர் ஒத்துக்கொண்டனர் எனும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது.
வீரசோழியத்தை எழுதியவர் புத்தமித்திரர் என்பதை ‘பைம்பொழில் பொன்பற்றி புத்தமித்திரனே’ என்ற பாயிர வரிகள் மூலம் அறியலாகிறது. இந்நூலின் உரையாசிரியர் புத்தமித்திரரின் மாணவராகிய பெருந்தேவனார்.நூலாசிரியரின் மாணவராக இருப்பதால் உரையாசிரியர் கருத்துக்கள் நூலாசிரியரின் கருத்துக்களோடு இயைந்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும். ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாகிய இருவரும் பௌத்தம் சார்ந்தவர்கள். வடமொழிக்கும், தமிழுக்கும் இலக்கணம் ஒன்றே என்னும் கருத்துடையவர்கள். நூலாசிரியர் பௌத்த சமயத்தவராதலால் “உரையில் பல இடங்களில் புத்தரைப் பற்றிய மேற்கோளும், உதாரணமும் தருகின்றார்.
‘புத்தர் கண்ணனை உய்வித்தார்’ (வீரசோழியம் 41)
‘புத்தரைத் தெய்வமாய் உடையன் பௌத்தன்’ (வீரசோழியம் 54)
என்று பல இடங்களில் உதாரணம் காட்டுகின்றார்”7 என மு.வை. அரவிந்தன் எடுத்துரைத்துள்ளார்.
வீரசோழிய தற்சிறப்புப் பாயிரத்தில் மூன்று பாடல்களும், பாயிரம் எனத் தலைப்பிட்டுப் பதிப்பிக்கப் பட்டிருப்பினும், முதல் பாடலில் புத்தர் வணக்கமும், நூலாசிரியன் பெயரும், இரண்டாவது பாடலில் ஆசிரியரின் அவையடக்கப் பண்பும், மூன்றாவது பாடலில் நுதலிய பொருள், வழி, யாப்பு, நூற்பெயர் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நேமிநாதம்
நேமிநாத நூல் பற்றியும், அதன் ஆசிரியர் பற்றிய செய்திகளும் முன்னரே சிறப்புப் பாயிரம் எனும் இயலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பிற இலக்கண நூல்களிலிருந்து மாறுபட்டு இந்நூலில் அதிகாரம் தோறும் தற்சிறப்புப் பாயிரங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
(நூ 01, நா.25) அவற்றில் தெய்வ வணக்கமும், செயப்படு பொருளும் பேசப்படுகின்றன. இப்பாயிரங்களில் கூறப்பட்டிருக்கும் தெய்வம் அருகதேவன். ஆகவே, இந்நூலாசிரியர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாகிறது. மேலும் சொல்லதிகாரத்திலுள்ள தற்சிறப்புப்பாயிரம் நூல்களில் பரந்து கிடக்கும் சொற்களில் வேண்டுவனவற்றைக் கொண்டு, சொல்லின் திறத்தை ஆராய்ந்து கூறும் நெறி பற்றியும் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தண்டியலங்காரம்
பல்லவர்கள் அரசியல் முறைகள் சாதவாகனரின் அரசியல் முறைகளுடனும், கௌடில்யரின் அர்த்தசாத்திரக் கோட்பாடுகளுடனும் மிக நெருங்கிய தொடர்பு பெற்றிருந்து, பல்லவருடைய பண்பாடுகள் தமிழ் மன்னருடைய பண்பாடுகளுக்கு முரண்பாடாக இருந்தது. அவர்கள் வடமொழியையே போற்றி வளர்த்தனர் என்று கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் நூலில் (ப.190) குறிப்பிட்டிருக்கிறார். மேலும், பல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் (600-900) வடமொழி இலக்கண இலக்கியங்களுக்கு செல்வாக்கிருந்தது. அதன் காரணமாக வடமொழி நூல்கள் பல தோன்றின. அவ்வாறு தோன்றிய வடமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். 12ஆம் நூற்றாண்டில் தண்டியலங்காரம் எனும் அணி இலக்கண நூல் வடமொழியிலுள்ள காவ்யாதர்சம் என்ற நூலின் மொழிபெயர்ப்பாகத் தோன்றியது குறிப்பிடத்தக்கது. காவ்யதர்சம் எனும் வடமொழி நூலினை 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசார்ய தண்டி என்பவர் இயற்றினார்.
அணி இலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையும் சிறப்பும் வாய்ந்தது தண்டியலங்காரம். தண்டி என்பவரால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
வடமொழியில் காவ்யதர்சம் என்ற நூலை எழுதியவர் தண்டி என்று குறிப்புகள் உள்ளன. ஆகவே இத்தண்டியலங்கார ஆசிரியரும் அவரும் ஒருவரே என்றும் கூறுவர். ஆனால் வடமொழித் தண்டியரோ கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தமிழ் நூல் எழுதிய தண்டியோ கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு காலப்பகுதிகளில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்கள். பெயர் ஒற்றுமையே இம்மயக்கத்திற்குக் காரணமாகும் எனத் தோன்றுகிறது.
கம்பரின் புதல்வர் அம்பிகாபதியின் குமாரர் தான் தண்டியாசிரியர் என்பதை,
“பூவிரி தண்பொழில் காவிரி நாட்டு
வம்புஅவிழ் தெரியல் அம்பிகாபதி
மேவரு தவத்தினில் பயந்த
தாவரும் சீர்த்தித் தண்டிஎன் பவனே”
இத் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம். இப்பாயிரத்தின் மூலம் தண்டியாசிரியர் முந்து நூலான தொல்காப்பியம் போன்ற நூல்களில் வல்லவர் என்பதும்,
“ஆடகமன்றத்து நாடக நவிற்றும்
வடநூல் உணர்ந்த தமிழ்நூற் புலவன்”8
என இந்நூற்பாயிரம் கூறுவதால் நாட்டியக் கலையில் பேரறிவுடையவர் என்பதும் புலனாகின்றது.
தண்டியலங்காரம் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இயற்றப்பட்டது என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள உதாரணப் பாடல்களால் அறியமுடிகிறது. சான்றாக இம்மன்னர் காலத்தில் சிறந்து விளங்கிய ஒட்டக்கூத்தர் புகழை,
“சென்று செவியளக்கும் செம்மைய வாய்ச் சிந்தையுளே
நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று
மலரிவரும் கூந்தலால் மாதர்நோக்கொன்று
மலரிவரும் கூத்தன் தன் வாக்கு”9
தண்டியாசிரியர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தண்டியலங்காரத்தின் உரையாசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நூல் தோன்றிய காலத்தை அடுத்து உரையும் தோன்றியிருக்கக்கூடும் என ‘சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்’; (ப.61) எனும் நூலில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். தண்டியலங்காரம் காப்பியத்தை பெருங்காப்பியம், காப்பியம் என்று இருவகைப்படுத்தி அவற்றினுடைய இலக்கணத்தை தனித்தனியாக எடுத்துக் கூறுகிறது.
நன்னூல்
நன்னூலின் ஆசிரியர், நூலின் தன்மை குறித்த செய்திகள் சிறப்புப் பாயிரம் ஏற்கனவே விளக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இரண்டிலும் தற்சிறப்புப் பாயிரமும் இடம்பெறுகிறது. பாயிரங்களில் அருகதேவன் பற்றிய செய்திகளையும், செயப்படுபொருள் பற்றியும் நூலாசிரியர் பவணந்தி கூறியுள்ளார். இந்நூலாசிரியர் அருகதேவன் பற்றிக் குறிப்பிட்டுள்ளதால் இவர் அருக சமயத்தவர் என முடிவிற்கு வரவேண்டியுள்ளது.
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தற்சிறப்புப் பாயிர இலக்கண நூல்களில் பெரும்பான்மையாக சமணம் சார்ந்த அருகன் வணக்கமும், சிறுபான்மையாக புத்த வணக்கமும், கலைமகள் வணக்கமும் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
தற்சிறப்புப் பாயிரங்களில் கடவுள் வணக்கம்
தமிழகத்தின் இருண்ட காலம் (கி.பி. 250 கி.பி. 600 களப்பிரர்கள்) என வருணிக்கப்பட்ட காலத்தில் அரச மதங்களாக சமண, பௌத்த சமயங்கள் கோலோச்சியிருந்தன. பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் புறக்கணிப்பிற்கு உள்ளான காலப்பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையை மாற்ற ஆய்வு நிகழ்த்தி வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்களில் மயிலை சீனி. வேங்கடசாமியும் ஒருவர். இவரது ‘சமணமும் தமிழும்’ என்ற நூல் சமணர்களின் இலக்கிய இலக்கண பங்களிப்பு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதலாம்.
தீர்த்தங்கரர்கள் சமணக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதற்காகத் தோன்றுகின்றனர் என்பது சமண சமயக் கொள்கை. ‘தீர்த்தங்கரர்’ என்பதற்கு தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள். இதுவரை 24 தீர்த்தங்கரர் தோன்றியுள்ளார்கள், சமணர்களின் வழிபடு தெய்வங்கள் அருகர் அல்லது 24 தீர்த்தங்கரர்களும் ஆவர். தீர்த்தங்கரர் என்பவர் அருக பதவியை (பேரின்ப நிலையை) அடைந்தவர். ஆகவே தீர்த்தங்கரரை அருகன் என்றும் குறிப்பிடுவர்.
சமணம் என்பது துறவு நிலையைக் குறிக்கும். சமணக் கடவுளுக்கு அருகன் என்ற பெயர் உண்டு. புத்தமதம் கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மதப்படி புத்தர் கி.மு. 4ஆம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்திய துணைக்கண்டத்தின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தவர் என பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.
கலைமகளை கல்விக்கடவுளாகவும் எல்லா கலைகளுக்கும் தலைவியாகவும் கருதும் வழக்கம் இருந்து வருகிறது. கலைமகள் சமயங்கடந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இந்து மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம் போன்றவற்றில் கலைமகள் வழிபாடு சமண மதத்தில் காணப்படும் சுருதிதேவி வழிபாடும் ஒன்றெனக் கொள்ளமுடியும். கலைமகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது. பௌத்த மதத்தில் மகாசரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி போன்ற பெயர்களால் வணங்கப்படுவது கவனிக்கத்தக்கது. எனவே தான் டாக்டர் உ.வே.சா. அவர்கள் சரஸ்வதியை கலைமகள் சமயங்கடந்த தெய்வம் எனக் குறிப்பிடுகிறார்.
தற்சிறப்புப் பாயிரப் பாடல்களில் அருக வணக்கம்
யாப்பருங்கலக்காரிகை, நேமிநாதம், நன்னூல் எனும் 3 இலக்கண நூல்களிலுள்ள தற்சிறப்புப் பாயிரங்கள் அருகதேவன் வணக்கம் தொடங்குகின்றது. யாப்பருங்கலக்காரிகையில்,
கந்தம் மடிவுஇல் கடிமலர்ப் பிண்டிக் கண்ணார் நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணைஅடி ஏத்தி....”10
எனும் வரிகள் மூலம் மணம் குன்றாத புதிய மலர்களைக் கொண்டிருக்கும் அசோகமரத்தின் அகன்ற நிழலின் கீழ் வீற்றிருக்கக்கூடிய அருகதேவன் பாதங்களை வணங்கி எழுதப்போவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். நேமிநாதத்தில்,
“பூவின்மேல் வந்தருளும் புங்கவன் தன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி”11
எனக் கூறுவதன் மூலம், ஆயிரத்தெட்டு இதழுடைய நாண்மலர்மேல் எழுந்தருளியிருக்கும் ஆதிநாதன் அடி துதித்து நேமிநாதத்தை இயற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார். நன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களிலும் முதலில் கடவுள் வணக்கம் இடம்பெற்றுள்ளது. எழுத்ததிகாரத்தில்,
“பூமலியசோகின் புனைநிழலமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே”11
(த.சி.பா.எழுத்து)
எனும் வரிகள் பூக்கள் நிறைந்திருக்கக்கூடிய அசோகமரத்தின் நிழலிலே எழுந்தருளியிருக்கக்கூடிய நான்கு திருமுகங்களைக் கொண்ட கடவுளை வணங்கி எழுத்திலக்கணத்தைக் கூறப்போகிறேன் என்கிறார் ஆசிரியர்.
“எல்லா நூலும் மங்கலமொழியை முதலில் கூறவேண்டுமாதலால் பூமலியென்றும், எல்லாச் சமயத்தோராலும் வணங்கப்படும் படைப்பு முதலிய ஐந்தொழிற்குமுரிய எல்லாக் கடவுளாகியும் நின்றானொருவனே எனவும், அருகனை நான்முகனென்றும் கூறினார்”13 என்று சங்கர நமச்சிவாயர் குறிப்பிடுகிறார். இதேபோன்று சொல்லதிகாரத்தில்,
“முச்சகநிழற்று முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே”14 (ந.சி.பா. சொல்)
எனும் இத்தற்சிறப்புப் பாயிரத்தின் வாயிலாக, பூமி, அந்தரம், சுவர்க்கம் என்று கூறக்கூடிய மூன்று உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் நிழலைத் தரக்கூடிய, முழுமதியைப் போன்ற முக்குடையைக் கொண்ட நான்முகனின் (சந்திராதித்யம், நித்யவிநோதம், சகலபாசனம்) குற்றமில்லாத திருவடிகளை வணங்கி சொல்லிலக்கணத்தைச் சொல்லுவேன் என்கிறார். முக்குடை என்பது சமண மதத்தின் சின்னமாகும்.
(அ) “சந்திராதித்யம்:- சந்திரன் தோன்றியதும் உலக உயிர்கள் இன்பம் பெறுவது போன்று, அருகன் தோன்றியவுடன் மூவுலக உயிர்களும் இன்பம் பெறும் என்பது சமய நம்பிக்கையாகும்.
(ஆ) நித்யவிநோதம்:- நிலவுலகில் வாழும் மக்கள் தான் தவம் செய்து முக்தியடையும் வாய்பினைப் பெறுவதையே நித்யவிநோதம் என்பர். ஆன்மா அழிவில்லாமல் இருப்பது போன்று அருகன் அருளால் மக்கள் இன்பத்தை எய்துவர் என்பது ஐதீகம்.
(இ) சகலபாசனம்:- கீழுலகிலுள்ள ஏழு நரகங்களில் கணக்கற்ற உயிர்கள் உள்ளன. அவர்களின் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறும் பொருட்டு அருகனின் அருளைப் பெற வைப்பது சகலபாசனம் எனப்படும். படைப்புச் சிற்பங்களில், சிலைகளில் முக்குடை இருந்தால் அது சமண தீர்த்தங்கரர்கள் (அருகன்) என அடையாளமாகக் கொள்ளப்படும்”15 (அகிம்சை யாத்திரை.காம்) என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தற்சிறப்புப் பாயிரப் பாடலில் புத்த வணக்கம்
வீரசோழியத்தில் 3 பாடல்கள் தற்சிறப்புப் பாயிரமாக இடம்பெற்றுள்ளன. அதில் முதல் பாடலில் புத்த வணக்கமும் நூலாசிரியர் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
“மிக்கவன் போதியின் மேதக்கிருந்தவன் மெய்தவத்தால் ஒக்கவன். . . . புத்தமித்திரனே”16 (வீ.சோ.பா.01)
மேற்காணும் இப்பாயிரப் பாடலில் வரும்போது என்பது பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்களும், துறவிகளும் வாழுமிடமாகும். போது என்பதை போதி எனப் பகுத்து போதி + இல் = போதியில் எனும் வார்த்தையானது - பொதியில் என மருவி மாறியது. பிற்காலத்தில் அதுவே மலைக்குப் பெயரானது. இக்கருத்தினை ‘போதியின் மேதக்கிருந்தவன்’ எனும் வரிகளால் அறிய முடிகிறது. வீரசோழியத்தை எழுதியவர் புத்தமித்திரர் என்பதை ‘பைம்பொழிற் பொன் பற்றி புத்தமித்திரனே’ எனும் பாயிர வரிகள் மூலமும், இவர் பொன்பற்றி (புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திற்குட்பட்ட ஊர்) எனும் ஊரினர் என்பதையும் அறியமுடிகிறது.
தற்சிறப்புப் பாயிரத்தில் கலைமகள் வணக்கம்
தண்டியலங்காரத்தின் மூன்று இயல்களுள் முதலாவதாக அமைவது பொதுவணியியல் ஆகும். இப்பொதுவணியியலில் முதலில் தற்சிறப்புப் பாயிரம் இடம்பெற்றுள்ளது. இத்தற்சிறப்புப்பாயிரம் கலைமகளை வாழ்த்துவதாக அமைந்துள்ளது.
“சொல்லின் கிழத்தி மெல்லியல் இணைஅடி
சிந்தை வைத்(து) இயம்புவன் செய்யுட்(கு) அணியே”17
எனும் வரிகள் சொற்களுக்கெல்லாம் தலைவியாக விளங்கக்கூடிய கலைமகள் மென்மையான திருவடிகளைக் கொண்டவள். அவளின் திருவடிகளை மனதில் வைத்துப் போற்றி செய்யுள்களில் அமைந்திருக்கக்கூடிய அணிகளின் இலக்கணத்தை எடுத்துக்காட்டப் போவதாக தண்டியாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இலக்கண நூல்களிலும் சமயமும், வழிபாடும், வழிபாட்டுத் தன்மைகளும், வேறு வேறாக இருப்பினும், நோக்கம் என்பது ஒன்றாகவே இந்நூலாசிரியர்களுக்கு இருந்திருப்பதை அறிய முடிகிறது. தான் இயற்றப் போகும் நூல் எவ்விதத் தடையும் இல்லாமல் சிறப்பாக அமைவதற்கு தாங்கள் வணங்கக்கூடிய தெய்வத்தை துணைக்கழைத்து, மனதில் நிறுத்தி அந்நூலினைப் படைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
தற்சிறப்புப் பாயிரங்களில் செயப்படுபொருள்
யாப்பருங்கலக்காரிகையில் இடம்பெற்றுள்ள தற்சிறப்புப் பாயிரப் பாடலில், முதலில் அந்நூலிலுள்ள செயப்படுபொருளைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
“. . . . . . . . எழுத்து அசை சீர்
பந்தம் அடி தொடை பா இனம் கூறுவர் பல்லவத்தின்
சந்தம் மடிய அடியால் மருட்டிய தாழ்குழலே”18
எனும் காரிகை இடம்பெற்றுள்ள யாப்பருங்கலக் காரிகையில் பெண்ணை முன்னிறுத்திப் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். இளம் தளிர் போன்ற அழகிய நிறத்தினையும், தாழ்ந்த நீண்ட குழலினையுமுடைய பெண்களிடம் அசோக மர நிழலில் வீற்றிருக்கும் அருகனை வணங்கி, எழுத்து என்று கூறக்கூடிய உயிர், மெய், உயிர்மெய், அளபெடை போன்ற எழுத்துக்களையும், அசை எழுத்துக்கள் கூடியதால் உண்டாகும் நேர், நிரையையும், அசைகள் ஒன்றாக இணைந்த சீர் 30 எழுத்துக்களையும், சீர்கள் இணைந்த தளை ஏழினையும், தளைகள் சேர்ந்த அடி ஐந்தினையும், அடிகள் சேர்ந்த தொடை
43-ஐயும், தொடை கூடிய பா ஐந்தினையும், பாக்கள் இணைந்ததால் உண்டான இனம் மூன்றினையும் என்று இவ்வெட்டினைப் பற்றி தான் எடுத்துரைக்கப் போவதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
வீரசோழியத்தில் செயப்படுபொருள் என்பதனை ஆசிரியர் ‘நுதலிய பொருள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கண வருணனையும், வடமொழி இலக்கண வருணனையும் வீரசோழியத்தில் இடம் பெற்றிருக்கின்றன. வருணனைக்கு மேலாக ஒப்புமைப் பண்பையும், புத்தமித்திரர் தம் இலக்கணத்தில் கையாண்டுள்ளார். வீரசோழியம் அடிப்படையில் எல்லாத் தமிழ் இலக்கணங்களிலிருந்தும் வேறுபட்டது. வருணனை, ஒப்புமை எனும் இரண்டு பண்புகளையும் தமது இலக்கண நோக்கங்களாகப் புத்தமித்திரர் கொண்டார் என்பதைக் கீழ்க்காணும்,
“நாமே எழுத்து சொல் பொருள் யாப்பு அலங்காரம்
எனும் பாமேவு பஞ்ச அதிகாரமாம் பரப்பைச் சுருக்கி
...வரைப்பன் வடநூல் மரபும் புகன்று கொண்டே”19
எனப் பாயிர வரிகள் உணர்த்துகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் எனும் ஐந்து அதிகாரப் பகுதியிலுள்ள வருணனையைச் சுருக்கி, அதனுள் வடமொழி இலக்கண மரபையும் கூறுவதைப் புத்தமித்திரனார் நோக்கமாகக் கொண்டுள்ளதை இப்பாயிரப் பாடல் மூலம் அறியலாகிறது. ‘நேமிநாதத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இரண்டிலும் செயப்படுபொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில்,
“எல்லாருமுணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து”20
என்கிறார். அதாவது, படிக்கின்ற எல்லாரும் உணரும்படியாக எழுத்தின் முடிபுகளைச் சொல்லால் எடுத்துரைக்கப் போவதாகக் கூறுகிறார்.
“விரித்துரைத்த நூல்களிலும் வேண்வன கொண்டு
எதிர்த்துரைப்பன் சொல்லின் திறம்”21
என்று பரந்து கிடக்கும் பழைய நூல்களிலும் புதியனவாய் நல்லோரால் சொல்லப்பட்டு நடைபெற்று வரும் சொற்களிலும் வேண்டியவற்றினைக் கொண்டு சொல்லினை ஆராய்ந்து வகைப்படுத்திக் கூறுவேன் என்கிறார் ஆசிரியர்.
தண்டியலங்காரம் பொதுவியலில் முதலில் தற்சிறப்புப் பாயிரம் அமையப்பெற்றுள்ளது. இப்பாயிரத்தில் “இயம்புவன் செய்யுட்கு அணியே” என்று கலைமகளை மனதில் நிறுத்தி செய்யுளுக்கு அலங்காரமாகத் திகழக்கூடிய அணிகளின் இலக்கணங்களை இனிதாக எடுத்துரைப்பேன் என்று ஆசிரியர் தான் எடுத்துரைக்கப்போகும் செயப்படுபொருள் குறித்துக் கூறியுள்ளார்.
நன்னூல் எழுத்து, சொல் எனும் இரண்டு அதிகாரங்களிலும் அருகனை வணங்கி எழுத்திலக்கணத்தையும், சொல்லிலக்கணத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக எடுத்துரைப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
தற்சிறப்புப் பாயிரப்பாடல்களில் அவையடக்கம்
நூலாசிரியர் தம் நூலைக் கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர்கள் கூடியுள்ள அவையில், அரங்கேற்றவும் செய்வார்கள். ஒருவர் தம் நூலினை அரங்கேற்றும்போது, அறியாதன கூறினும் அறிஞர் அவற்றை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பணிந்து நிற்பார்கள். இதுவே அவையடக்கம் எனக் கூறப்படுகிறது. தம் நூலில் குற்றம் கூறாதபடி கற்றோரை வழிபட்டு அடக்குகின்ற இந்நிலை ஒரு சிறந்த அரங்கேற்று உத்தியாகும். அவையடக்கம் என்பது ‘அவைக்கு அடங்கி அடக்கம்’, ‘அவையை அடக்கிய அடக்கம்’ என இரண்டாகக் காரிகை ஆசிரியரால் காட்டப்படுகிறது. உயர்ந்த தமிழைத் தாழ்ந்த என் நாவால் கூறினேன் என உரைக்கும் காரிகை, அவைக்கு அடங்கியது. சிறந்த புலவர் முன் நான்மொழிந்த பருப்பொருளும் விழுமியது எனக்கூறும் காரிகை அவையை அடக்கியதாகும் என்று திருஞானசம்பந்தர் தன்னுடைய யாப்பருங்கலக் காரிகை எனும் நூலில் (ப.14) பதிவு செய்துள்ளார்.
‘அவைக்கு அடங்கும்’ அவையடக்கம் பற்றி,
“தேன்ஆர் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவி
கானார் மலயத்(து) அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ்நூல்
யானா? நடத்துகின்றேன் என்(று) எனக்கே நகைதருமால்
ஆனாஅறிவின் அவர்கட்கு என்னாம் கொல் என்ஆதரவே”22
எனும் வரிகள் மூலம் அறியலாம். அதாவது, வேப்ப மாலையை அணிந்த பாண்டியன் கேட்க, பொதிய மலையில் எழுந்தருளியிருக்கின்ற அகத்திய முனிவரால் அருளிச் செய்யப்பட்ட அழிவில்லாத முத்தமிழுள், இயற்றமிழின் கூறாகிய யாப்பிலக்கண நூலை, அவாவின் காரணமாக என் நாவால் சொல்லத் தொடங்கினேன். இது அறிவிலியாகிய எனக்கே நகையினைத் தருகின்றபோது, குறைவிலாத அறிவினை உடையவருக்கு யாதாகுமோ என்று நூலின் பெருந்தன்மையையும், ஆசிரியரது பெருந்தன்மையையும், தனது உள்ளக் குறையையும் உணர்த்தும் இக்காரிகை அவையடக்கத்தை உணர்த்துகின்றது.
‘அவையை அடக்கும்’ அவையடக்கம் பற்றி,
“சுருக்கம் இல் கேள்வித் துகள் தீர்! புலவர் முன் யான் மொழிந்த
பருப்பொருள் தானும் விழுப்பொருள் ஆம்...”23
என்ற வரிகள், குற்றம் தீர்ந்த அளவில்லாத நூற் கேள்வியையுடைய புலவருக்கு முன் யான் கூறிய சிறப்பில்லாத பிண்டப் பொருளும், சிறந்த நுண்பொருளாகும் என்று புலவரின் சிறப்புணர்த்தியதால் இக்காரிகை அவையடக்கத்தை உணர்த்துகிறது.
வீரசோழியத்தில் ஆசிரியரின் அவையடக்கத்தை
“ஆயும்குணத்த அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும்பு வளிக்கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயுமுளையோ வெனிற்கருடன் சென்ற நீள்விசும்பி
லீயும்பறக்கு மிதற்கென்கொலோ சொல்லுமேந்திழையே”24
அனைவராலும் ஆராய்ந்து அறிவதற்குரிய சிறந்த குணங்களையுடைய அவலோகிதன் என்பவனிடம் அகத்தியன் தமிழ்கேட்டு அதனை உலகுக்குணர்த்தினான். கருடன் பறந்த நீண்ட வானத்தில் ஈயும் பறக்கும் என்ன செய்ய இயலும் என்று ஆசிரியரின் அடக்கத்தை எடுத்துக் கூறுகின்றது இப்பாயிர வரிகள்.
அடிக்குறிப்புகள்
1. ...இ.கி.இராமசாமி, தமிழில் பாயிரங்கள், ப.
2. ...இரா.இளங்குமரன், இலக்கண வரலாறு. ப.224
3. ...ச.வே.சு. இலக்கண நூல்கள் முழுவதும், ப.159
4. ....யாப்பருங்கலம், பாயிரம்
5. ...இ.கி. இராமசாமி, தமிழில் பாயிரங்கள், ப.66
6. ....வீரசோழியம், பாயிரம். 03
7. ...மு.வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், ப.609
8. .....தண்டியலங்காரம் சி.பாயிரம்
9. ...யாப்பருங்கலக்காரிகை, தற்சிறப்புப் பாயிரம், பா.வரி.
10. ....யாப்பருங்கலக்காரிகை, பா.வரி.1-2
11. ....நேமிநாதம், பா.வரி.1-2
12. ....நன்னூல், தற்.சி.பா.எழுத்து
13. சங்கர நமச்சிவாயருரை, நன்னூல், ப.30
14. “ “ தற்.சி.பா.சொல்
15. அகிம்சை யாத்திரை.காம்
16. ...வீரசோழியம், பாயிரம். 01
17. ....தண்டியலங்காரம், தற்.சி.பா.
18. ...யாப்பருங்கலக்காரிகை பாயிரம்
19. ....வீரசோழியம் பாயிரம் 03
20. ....நேமிநாதம், பாயிரம் எழுத்து
21. மேலது. பாயிரம் சொல்
22. .....யாப்பருங்கலக்காரிகை, காரிகை 02
23. ....வீரசோழியம், பாயிரம் 02.
24. மேலது, பாயிரம் 03
- முனைவர் தி.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, அரசு கலை அறிவியல் கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர்