உலகம் முழுவதும் அறநூல்கள் மக்களை நல்வழிப் படுத்தவே இயற்றப்பட்டன. நாகரிகமும், பண்பாடும், அறிவியலும் வளர்ந்துவிட்ட போதிலும், மனிதர்கள் மனிதர்களாக இருப்பதற்கு மனிதநேயம் வளர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாந்தர் திசையில்லாத மரக்கலமாகத் தவிக்க வேண்டியதுதான்.
“முதலில் மனிதனுக்கு மனிதப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்து அவனை மனிதனாகச் செய்ய வேண்டும். பிறகு அவன் தானாகவே ஞானியாகி விடுவான்” என்றார் சிந்தனையாளர் ரூசோ. அந்த மனிதப் பண்பாட்டை எடுத்துக் கூறும் மாபெரும் பணியை அற இலக்கியங்கள் காலம் காலமாகச் செய்து வருகின்றன.
இறைவன் மனிதனுக்குக் கூறிய மறைகள் பல. அவை சமயத்துக்குச் சமயம் மாறுபடுகின்றன. ஆனால் மனிதனுக்கு மனிதன் கூறிய திருக்குறள் அனைவரையும் ஒன்றுபடுத்துகின்றன. அனைவரும் ஏற்றுப் போற்றும் கருத்துகளை விதைத்துச் சென்றுள்ளது; அவை பயிராகிப் பலனும் தருகின்றன.
“எல்லாப் பொருளும் இதன்பால் உள...” என்று கூறினார் மதுரைத் தமிழ்நாகனார்; அத்துடன் விடவில்லை; “இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்...” என்றும் விரித்துரைக்கிறார். அந்த அளவுக்குத் திருக்குறளில் அறக் கருத்துக்கள் அமைந்துள்ளன. மனிதகுலத்துக்குத் தேவையான வழிகாட்டி நெறிகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளன.
“திருக்குறளை விடவும் சிறந்த அறநெறி இலக்கியம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை” என்று ஜெர்மன் தத்துவஞானி ஆல்பர்ட் சுவிட்சர் பெருமைபடக் கூறியிருப்பதை ஆய்வாளர்களின் கூற்றாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மனிதகுல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காலம் அறிதல். ‘காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்று கூறுவதும் அதனால்தான். காலமும், இடனும் அறிந்து செயல்படுவதன் மூலமே எடுத்த செயல் வெற்றி பெறும், முற்றுப்பெறும் என்பது ஆன்றோர்களின் கருத்தாக இருக்கிறது.
இது பற்றி உரை கூற வந்த பரிமேலழகர், ‘அஃதாவது. வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேற்சேறலுள்ள அரசன், அச்செலவிற்கேற்ற காலத்தினை யறிதல்’ என்று மொழிகின்றார். இச்செய்திகள் அனைத்தும் அரசர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும்.
‘காலம் அறிதல்’ (அதிகாரம் 49) என்ற தலைப்பில் பத்துக் குறட்பாக்களைப் பாடியுள்ளார். இவை காலத்தின் அருமையையும், பெருமையையும் விரித்துரைக்கின்றன. இந்தக் காலத்தையே ‘பொழுது’ என்று தொல்காப்பியம் கூறுகிறது.
நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும் என்று தொல்.பொருளதிகாரம் கூறும். பொழுது என்பது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஓராண்டிற்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது ஆகும். ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளும் சிறுபொழுது எனப்படும்.
இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்பவை பெரும் பொழுது எனவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பவை சிறுபொழுது எனவும் தமிழ் இலக்கணம் காலத்தை வரையறை செய்கிறது.
இவற்றையெல்லாம் அறிந்த திருவள்ளுவர் காலம் அறிந்து செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆங்காங்கு கூறிச் சென்றுள்ளார். காலம் என்பது பொழுதினை மட்டும் குறிக்காமல் உரிய காலம் என்னும் பரந்துபட்டப் பொருளில் குறிப்பிடுகின்றார்.
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
என்னும் ‘காலமறிதல்’ அதிகாரத்தின் முதல் குறட்பாவில் காக்கையையும். கோட்டானையும் உவமையாக்கிக் கூறி காலத்தின் சிறப்பை முன்மொழிகிறார்.
காக்கையை விடக் கோட்டான் வலிமை மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். கோட்டானுக்குப் பகற்பொழுதில் பார்வை தெரியாது என்பதால் அதனைக் காக்கை பகலில் வென்று விடும். அதுபோல வேந்தர்கள் பகையை வெல்ல வேண்டுமானால் தகுந்த காலத்தைத் தோ¢ந்தெடுக்கவேண்டும் என்று குறள் கூறுகிறது.
இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இரண்டாம் உலகப் போரில் சர்வாதிகாரி ஹிட்லரின் தோல்விக்குக் காரணம் காலமல்லாத காலத்தில் - கடுமையான பனிக்காலத்தில் சோவியத் நாட்டின் மேல் படையெடுத்ததுதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். குளிரைத் தாங்கும்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமையால் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் மடிந்ததோடு பெரும் தோல்வியும் ஏற்பட்டது.
செருமானியர்கள் தரப்பில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். உலகத்தையே வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வரப் பேராசைப்பட்ட ஹிட்லர் இறுதியில் தற்கொலை செய்து கொண்டான்.
எவ்வளவு படைபலம் இருந்தபோதிலும் காலமறிந்து செயல்படாவிட்டால் தோல்வியுறுவான் என்பதும், குறைந்த படைவலிமையுடையவனும் காலமறிந்து செயல்பட்டால் வெற்றி பெறுவான் என்பதும், கூகை, காக்கை என்னும் எளிய உவமையின் மூலம் குறள் விளக்குகிறது,
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல், செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும் என்ற கருத்து,
“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு”
என்ற குறட்பாவில் சுட்டப்படுகிறது.
செல்வம் இன்றியமையாதது என்பதை, ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ (247) என்ற குறள் மூலமும், ‘பொருள் செயல்வகை’ என்ற அதிகாரத்தின் மூலம் திருவள்ளுர் விளக்குகிறார். அத்தகைய செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாக இருப்பது ‘காலம்’ என்கிறார்.
யாக்கை நிலையில்லாதது போலவே செல்வமும் நிலையில்லாதது; ‘செல்வோம்’ என்று செல்வதாலேயே இதற்குச் ‘செல்வம்’ எனப்பட்டது என்பர். ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’ என்பர் தமிழ்மக்கள். அத்தகைய செல்வம் யார் மாட்டும் நிரந்தரமாக நில்லாமல் வண்டியின் உருளையைப் போல மாறிமாறி வரும் என்பதை,
“அகமுற யார் மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போலவரும்”
என்கிறது நாலடியார்.
அத்தகைய இன்றியமையாத செல்வத்தை நம்மை விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு எது? ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்று குறள் கூறுகிறது.
“அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்”
என்ற குறளில் காலத்தோடு கருவியையும் சேர்த்துக் கூறுகிறார். ‘ஒரு செயலை செய்து முடித்தற்கான கருவிகளுடனே செய்தற்கான காலமும் அறிந்து செய்வாராயின் செய்தற்கரிய செயல்களும் உளவோ?’ என்று வள்ளுவர் வினவுகிறார்.
“கருவிகளாவன; மூவகை யாற்றலும். நால்வகை உபாயங்களுமாம். அவை உளவாய வழியும் காலம் வேண்டும் என்பதறிவித்தற்கு ‘கருவியான்’ என்றார்” என்று பரிமேலழகர் தம் உரையில் விளக்குகிறார்.
“ஞாலம் கருதினம் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்”
என்ற குறளில் காலத்தோடு இடத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்யும் செயலை காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்தால் உலகத்தையே வெல்லக் கருதினும் கைகூடும் என்பதாம்.
இதனையே ‘இடம் பொருள் ஏவல்’ என்று தமிழ் மரபாகக் கடைபிடித்தனர் பண்டோர். ‘ஞாலம் கருதினும் கைகூடும்’ என்பது கைகூடாதனவும், கைகூடும் என்பதாகும். ‘உலகமே கைகூடும் என்பதால் மற்றவற்றைப் பற்றியும் கூறவேண்டுமோ?’ என்பது இதனால் பெறப்படும் கருத்தாம்.
அறிவியலாளன் ஆர்க்கிமிடிஸ் அரிதின் முயன்று ‘நெம்புகோல் தத்துவ’த்தைக் கண்டுபிடித்தான். அதன் ஆற்றலைக் கேட்டறிந்து மக்கள் வியந்தனர். அப்போது அவன் கூறினான்;
“நான் நிற்பதற்கு ஓர் இடத்தைத் தாருங்கள். உலகமாகிய இந்தப் பூமிப்பந்தை நெம்புகோல் மூலம் புரட்டிக் காட்டுகிறேன்...” என்று அவன் அறைகூவல் விடுத்தான். காலமும், இடமும் வாய்க்கப் பெற்றால் இயலாத செயல் என்று ஏதுமில்லை என்பது இதனால் பெறப்படும்,
“காலம் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்”
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பவர் என்பது இதன் கருத்தாகும்.
அக்கால மன்னர்கள் பகையரசன் கோட்டையை முற்றுகையிட்டு, உள்ளே நீரும், உணவும் செல்லாதவாறு தடுத்துக் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பர். இதனையே ‘ஞாலம் கருதுபவர்’ என்று திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
ஊக்கம் மிகுந்தவன் காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருப்பது, போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காக பின் வாங்குவதைப் போன்றது என்பதை,
“ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து”
என்னும் குறட்பா குறிப்பிடுகிறது.
‘புலி பதுங்குவது பாய்வதற்காகவே’ என்ற உவமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. ஊக்கம் மிகுந்தவன் எனினும் தகுந்த காலம் அமையவில்லை யென்றால் அவனது தோல்வியை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. முடிவுடை மூவேந்தர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்தும், சிலமுறை தோல்வியடைந்ததற்கும், பலமுறை வெற்றியடைந்ததற்கும் இதுவே காரணமாகும்.
“பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்”
அறிவுடையார் பகைவர் தீங்கு செய்த அப்போதே புறத்தில் சினம் கொள்ள மாட்டார். வெல்வதற்கு ஏற்ற காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர் என்று திருவள்ளுவர் இப்பாடல் மூலம் கூறுகிறார்.
எல்லோரும் அறிய வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்தால் பகைமன்னன் அதற்குத் தகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வான் என்பதால் தகுந்த காலம் வரும் வரை சினத்தை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைக்கவேண்டும் என்று குறள் கூறுகிறது.
‘அறியாதவர்’ உடனே புறத்தில் சினத்தை வெளிப்படுத்தி விடுவர் என்றும். ‘அறிவுடையார்’ புறத்தில் சினம் கொள்ள மாட்டார் என்பதால் ‘உள்வேர்ப்பர் ஒள்ளியவர்’ என்கிறார் திருவள்ளுவர்.
“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை”
பகைவரைக் கண்டால் பொறுத்துப் போக வேண்டும். அந்தப் பகைவர்க்கு முடிவு காலம் வரும்போது அவர் தலைகீழாகக் கவிழ்வர் என்தே இதன் கருத்தாம்.
“பகைமை யொழியும் வகை மிகவும் தாழ்கவென்பர் ‘சுமக்க’வென்றும், அங்ஙனம் தாழவே அவர் தம்மைக் காத்தல் இகழ்வாராகலின் தப்பாமற் கெடுவரென்பார் அவர் தலைகீழாம் என்றும் கூறினார். தலைமேற் கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால் அது தன் தலைகீழாக விழுமாகலின் அவ்வியல்பு பெறப்பட்டது” என்பது பரிமேலழகர் உரையாகும்.
‘நாள் செய்வது நல்லோர் செய்யார்’ என்பது பழமொழி. காலம் நாம் எதிர்பாராத பல முடிவுகளைக் கொண்டுவரும் என்பதால் அவசரப்பட வேண்டாம் என்று நமக்கு அறிவுரை பகர்கிறார் திருவள்ளுவர். தாமாக அழிவு அவரைத்தேடி வரும் வரை பொறுத்திருப்பது சாலச்சிறந்தது என்கிறது பொதுமறையான திருக்குறள்.
“எய்தற் கரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்”
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்பதாம்.
வாய்ப்பினை நழுவ விட்டுவிட்டு வருந்துவதால் பயன் ஏதும் உண்டா? இறந்த காலம் இனிமேல் வாராது அல்லவா! இதனையே மகாகவி பாரதியாரும்,
“சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்”
என்று உலகத்தவர்க்கு உரைக்கிறார்.
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கினைப் போல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்தபோது அதன் குத்தினைப் பால தவறாமல் செய்துமுடிக்க வேண்டும் என்பது இதன் கருத்தாம்.
ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளில் அதன் நீரோட்டத்தை எதிர்த்து மீன்கள் வருமாகலான், அவற்றைப் பிடித்துத் தின்பதற்காக கொக்குகள் காத்திருப்பது வழக்கம். அந்த நேரத்தில் அரவம் இன்றி அமைதியாக இருக்கும் கொக்கு, அம்மீன்கள் வரக் கண்டதும் இலக்குத் தவறாமல் விரைந்து தன் கூரிய அலகுகளால் குத்திப் பிடிக்கும்.
இந்த அழகிய உவமையை மூதுரை என்னும் நீதி நூலிலும் காணலாம். இதனை ஔவையார் இயற்றியுள்ளார்.
“அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணி
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு”
என்னும் பாடலில் இந்த உவமை அடக்கத்தின் சிறப்பினை வலியுறுத்துவதற்காக எடுத்தாளப்பட்டுள்ளது.
‘காலமறிதல்’ என்ற இந்த அதிகாரத்தில் மட்டுமின்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனைக் கூற திருக்குறள் தயங்கவில்லை. ‘செய்ந்நன்றி யறிதல்’ அதிகாரத்திலும் காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விடப் பெரிதாகும் என்பதே அதன் கருத்தாகும்.
காலத்தின் அருமையை உணராதவர்கள் வாழ்க்கையைத் தவற விட்டவர்கள் என்றே கூறலாம். ஓர் நொடி தாமதத்தால் தொடர் வண்டியைத் தவறவிட்டவர்கள், ஒரு மணி நேரத் தாமதத்தால் தேர்வையே தவறவிட்டவர்கள், ஒரு நாள் தாமதத்தால் வேலை வாய்ப்பையே தவறவிட்டவர்கள் - இவர்கள் எல்லாம் வாழ்க்கையைத் தவறவிட்டவர்களே என்பதை இதன் மூலம் அறியலாம்.
“திருக்குறள் அறமுதல் நாற்பொருளையும் மூன்றனுள் அடக்கிச் செந்தேனை ஒழுக விட்டாற் போல இனிய ஓசையோடு பெரிய மலையைத் தன்னகத்து அடக்கிக் காட்டும் கண்ணாடி போல சில சொல்லில் பல பொருளும் சிறந்து விளங்கச் செய்யப்பெற்றது. சுருங்கச் சொல்லல் முதலிய பத்தழகும் விளங்க, வேதங்கள் அருளிச் செய்த இறைவனே வாய்விண்டு துதி செய்யும்படியாக, உலகம் உவப்பத் தோன்றியது” என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாராட்டியுள்ளார்.
“வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்திற் கொருநீதி?”
என்று ‘மனோன்மணீயம்’ பேரா.சுந்தரம்பிள்ளை புகழ்பாடுகிறார்.
அத்தகைய திருக்குறளில் எல்லாம் இருக்கிறது என்பதால்தான், ‘அணுவைத் துணைத்தேழ் கடலைப் புகட்டி / குறுகத் தரித்த குறள்’ என்று ஔவை பாடியுள்ளார். அதில் ஒரு சிறு பகுதியாகிய ‘திருக்குறளில் காலம்’ என்பதை இதுகாறும் விளக்கியுள்ளோம்.
- உதைய மு.வீரையன்