சமீபத்தில் கதிர்பாரதி, லாவண்யா, செல்வராஜ் ஜெகதீசன் ஆகியோரின் கவிதைத்தொகுதிகளை அடுத்தடுத்து படிக்க நேர்ந்தது.

மூவருமே கவிதையுலகில் இயங்கி வருபவர்கள். இதற்கு முற்பட்ட தொகுதிகள் வழியாக வாசகர்களிடையே நம்பிக்கையூட்டும் கவிஞர் களாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்கள். மூவருடைய கவிதை முயற்சிகளும் புதுமை நாட்டமும் வளர்ச்சியும் நிறைந்தவையாக உள்ளன.

கற்பனை அழகும் எளிமையும் பொருந்திய இவர்களுடைய கவிதை வரிகள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதாக உள்ளன.

காற்றின் வீச்சில் உதிரும் இலை களிடையே எதிர்பாராமல் ஒரு மலரும் சேர்ந்து அலைந்தலைந்து விழுவதுபோல சாதாரணமாக ஒன்றையடுத்து ஒன்றாக வரிகள் விழும்போதே சட்டென்று நம்மை வசீகரிக்கிற ஒரு வரி அற்புதமாக விழுவதை இம்மூவரின் கவிதைகளிலும் நிகழ்கிறது. அந்த வரி நம்மை வேறொரு உலகத்தை நோக்கி நகர்த்திச் சென்றுவிடுகிறது. வாழ்வின் மிக எளிய கணமொன்றில் கிட்டும் மகத்தான தரிசனமே கவிதை வாசிப்பில் கிட்டும் பேரனுபவம்.

Ôஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ கதிர்பாரதியின் இரண்டாவது தொகுதி. அவர் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது முற்றிலும் தளர் வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை.

தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமான தாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின் தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறு படுத்திக் காட்டுவதும் இந்த அம்சமே.

கதிர்பாரதியின் கவிதைகள் புதிய வகையான குறியீடுகளை உருவாக்க விழைகின்றன. எழுதி எழுதிப் பழகிப் போய்விட்ட காற்று, வெப்பம், மலர், மழை, பறவை போன்ற குறியீடுகளைக் கூட முற்றிலும் வேறொரு தளத்தில் முன்வைக்க விரும்புகின்றன.

ஒரு ஊரில் ஒரு கழுகு வசித்துவருகிறது

தன் கூடு தாங்கும் மரத்தைக்கூட கொத்தி

வேரடி மண்ணோடு சாய்த்தும் வருகிறது

கோழிக்குஞ்சின் மாமிசத்துக்கு

தன் கூர் அலகைப் பழக்கிவரும் அது,

புறாக்கள் களைப்புறும் மாடங்களில்

மைனாக்கள் உலவுவது தகாது எனச் சீறிவிட்டு

கோயில் விமானத்தில் போய் உட்கார்ந்துகொண்டு

தன்னிரு இறக்கைகளைக் கோதிக்கொள்கிறது

பதற்றமே சிட்டுக்குருவிக்கு அழகு என்றும் சொல்லி

மகிழ்ச்சியின் வானில் சுற்றித்திரியும்

சிட்டுக்குருவிகளைப் பதற்றத்துக்குள்ளாக்கவே

கத்தியின் நகலான

தன் நகங்களைப் பயன்படுத்தி வருகிறது

அதில் பதறிப் போய்த்தான்

ஒரு சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்தது

அப்போது

கழுகின் நகம் பளபளத்துக்கொண்டது.

இப்படி ஒரு கவிதை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதிகாரத்தில் விளைவுகளை ஒரு காட்சித் தொகுப்பாக முன்வைக்கும் இக்கவிதை தொகுப்பின் முக்கியமான கவிதைகளின் ஒன்றெனச் சொல்லலாம். தன் அதிகாரத்தின் கீழ் தன் வசிப்பிடமான மரம், தன்னைச் சுற்றியுள்ள வானம், மண், மண்ணுக்கும் விண்ணுக்கு மிடையே பறந்து திரியும் புறாக்கள், மைனாக்கள், குருவிகள் என எல்லாவகையான பறவைகளையும் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து ஆட்சியை விரிவாக்கிக் கொள்கிறது கழுகு. முழு அதிகாரமும் வசப்பட்ட பிறகு, கழுகுக்கு நகங்களோ அலகுகளோ தேவைப்பட வில்லை. தன் தோற்றம் அல்லது இருப்பின் வழியாகவே தன் அதிகாரத்தை நிலைநிறுத்தித் தக்கவைத்துக் கொள்கிறது.

 பார்வை ஒன்று மட்டுமே அதற்குப் போது மானதாக இருக்கிறது. கழுகை அஞ்சும் சிட்டுக்குருவிகள் தண்டவாளத்தில் விழுந்து சாகும் காட்சி மனத்தைக் கனக்கவைக்கிறது. வானம் விரிந்த வெளி. அவ்வெளியில் கழுகுக்கு ஓர் இடம், சிட்டுக்குருவிக்கும் ஓர் இடம் என்னும் இயல்பான வாழ்க்கைமுறை ஒரு முடிவை நோக்கி வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் கணமாக அந்த மரணம் அமைந்துவிடுகிறது.

 வானத்தையும் மண்ணையும் வசப்படுத்த நினைக்கும் கழுகின் பேராசைக்கு இன்று சிட்டுக்குருவிகள் பலியாகின்றன. நாளை இந்த அதிகாரப்பரப்பு இன்னும் விரிவாகலாம். அப்போது சிட்டுக்குருவியைவிட இன்னும் சிறியதும் சுதந்திரத்தை விரும்புவதுமான வண்ணத்துப்பூச்சிகளும் மறையக்கூடும். உயிர்த்திருப்பதையே ஒரு துயரமான அனுபவமாகவும் மரணத்துக்கான காத்திருத்தலாகவும் மாற்றிவிடுகிறது அதிகாரம். அது எவ்வளவு பெரிய அவலம்.

கழுகின் அதிகாரத்தைச் சித்தரிக்கும் கதிர்பாரதி ‘அங்கிங்கெனாதபடி ஓடும் அணில்’ என்னும் கவிதையில் அணிலின் சுதந்திரத்தைப் பற்றியும் சித்தரிக்கிறார். பூங்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் தாவிக் குதித்தோடுகிறது அந்த அணில். சரசரவென வாதாம்

மர உச்சிக்கு ஏறுகிறது. அங்கிருந்து குதித்து சிதறிக் கிடக்கும் வாதாம் விதைகளைக் கொறிக்கிறது. அருகில் விளையாடும் சிறுமியைக் குறுகுறுவெனப் பார்க்கிறது. பிறகு அந்தச் சிறுமியைப் போலவே தானும் தாவிப் பார்க்கிறது. வாழைமரத்தில் ஏறி வாழைப்பூவை முகர்ந்து பார்க்கிறது. நெருங்கி உட்கார்ந்திருக்கும் காதலர்களைப் பார்க்கிறது.

மரத்தடியில் மல்லாந்து உறங்கும் மனிதர்களையும் பார்க்கிறது. உதிர்ந்து கிடக்கும் மலர்களையும் பார்க்கிறது. எல்லா இடங் களிலும் நின்றுநின்று பார்த்துவிட்டுக் கடந்துபோகும் அணிலைச் சித்தரிக்கும் போக்கில் ஒற்றைக்கணத்தில் புற உலகத்திலிருந்து நம் அக உலகத்துக்குள் அந்த அணில் தாவி விழுந்துவிடுகிறது. நாம் ஒவ்வொரு வரும் அணிலாகிவிடுகிறோம். நம் வாழ்க்கை அணில் வாழ்க்கையாகிவிடுகிறது. அணில் வாழ்க்கை என்பதால் தான் அது கழுகால் அனுமதிக்கப்பட்ட வாழ்க்கை யாகவும் சுதந்திரமான வாழ்க்கையாகவும் இருக்கிறது.

தனிமையின் துயரைச் சித்தரிக்கும் கதிர்பாரதியின் கவிதை பாரதியாரின் ’ஓடி விளையாடு பாப்பா’ என்னும் வரிக்கு எதிர்முனையில் இருக்கிறது.

மாநகர வாழ்வின்

கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன்

சிறகு முளைத்த பந்தை

யாருமற்ற தன் வீட்டின் அறைச்சுவரில்

அடித்து அடித்து விளையாடுகிறான்.

அந்தப் பந்து

அவனுக்கும் தனிமைக்குமாகப்

போய்த் திரும்பி

திரும்பிப் போய்

ஓய்கிற வேளையில்

வந்தே விட்டது

மற்றும் ஓர் இரவு

குழந்தைகள் கூட்டம்கூட்டமாக விளையாடி மகிழ்ந்ததெல்லாம் இன்று இறந்தகாலமாகிவிட்டது. பள்ளியையும் படிப்பறையையும் மறந்து தோப்புகளிலும் குளக்கரையிலும் ஆற்றங்கரையிலும் கோவில் மண்டபங் களிலும் விளையாடிக் களிப்பில் ஆழ்ந்ததெல்லாம் ஒரு காலம். படிப்புக்கென ஒரு நேரத்தை வகுத்துக்கொண்டு எஞ்சிய நேரத்தையெல்லாம் ஆடிக் கழித்து மகிழ்ந்த தெல்லாம் வேறொரு காலம். சுதந்திரமான மானாக துள்ளித் திரிந்த காலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

இன்று எல்லா இடங்களிலும் தனிமை பரவியிருக்கிறது. யாரும் யாருடனும் இல்லாத அவலம். மாநகரத்திலோ அந்த அவலம் இன்னும் அதிகம். எண்ணிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகை மிகுதியான நகரில் யாரும் யாருடனும் இல்லாத தனிமையே மாபெரும் துயரம். பாதுகாப்புக்காக பூட்டப்பட்ட வீடுகளில் தனிமையில் தனக்குத்தானே விளையாடிப் பொழுதைக் கழிக்கும் குழந்தைகளை நினைக்கவே பாவமாக இருக்கிறது. முதுமைத்தனிமையை மட்டுமே இதுவரைப் பேசி வந்த உலகம் குழந்தைத்தனிமையை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது.

பொழுதைப் போக்குவதற்காக ஓர் அறையில் அல்லது ஒரு கூடத்தில் தனிமையில் தனக்குத் தானே சதுரங்கம் ஆடிக்கொள்ளும் முதியவர்களைப் போல, இப்போது அடுக்ககக்குழந்தைகள் பூட்டப்பட்ட அறைக்குள் தனிமையில் ஆடிப் பொழுதைப் போக்கு கின்றன. குழந்தை அடிக்கும் பந்தை மறுமுனையில் ஓர் ஆளாக நின்று வாங்கித் திருப்பி அனுப்புகின்றன சுவர்கள். வீடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் சுவர்கள், தனிமையில் ஆடும் குழந்தைக்கு உயிரில்லாத் துணையாக மறுமுனையில் நின்று ஆடுகின்றன. மாநகரம் முழுதும் கோடிக்கணக்கான சுவர்கள்.

கோடிக் கணக்கான குழந்தைகள். ஒவ்வொரு சுவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு குழந்தை ஆடிக்கொண்டிருக்கிறது. சுவரைவிட்டு வெளியே வந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் பல குழந்தைகளின் துணை கிடைக்கக்கூடும். ஆனால் பாதுகாப்புச்சுவர்களை விட்டுக் கடந்துவரத் தெரியாத பரிதாபத்துக்குரிய குழந்தைகள் அவர்கள். பாதுகாப்பு என்னும் அம்சமே வாழ்வின் மிகப்பெரிய ஆனந்தத்தை குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டதென்னும் உண்மையை உணராத மாநகரம் இன்னும் இன்னும் என சுவர்களைக் கட்டியெழுப்பியபடி இருக்கிறது. கண்டிஷன்ஸ் அப்ளை விதிகளைக் கொண்ட விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு கடன் பெறும் மாநகரவாசி களுக்காக அடுக்ககங்கள் உருவானபடியே உள்ளன.

Ôஉன்னையன்று கேட்பேன்’ என்னும் கவிதை மானுட மனத்தைத் தகவமைப்பதில் ஊடக பிம்பத்துக்கு இருக்கும் ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது. திரைப் படத்தைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு கிராமத்துக்குள் தன்னை ஒரு திரைப்படம் எடுப்பவனாக அறிமுகப் படுத்திக்கொண்டு நுழையும் ஒருவனைப்பற்றிய அயல் நாட்டுப் படமொன்றை இக்கணத்தில் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது. சுருள் இல்லாத படப் பெட்டியை ஓடவிட்டு, அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அப்பெட்டியின் முன்னால் நிறுத்திவைத்து தம்மைப்பற்றிப் பேசச் சொல்வான் அந்த இளைஞன்.

அவனுடைய பொய்மையைப்பற்றி எதுவுமே அறியாத கிராமத்தினர் கடவுளின் முன்னால் நிற்க நேர்ந்ததைப்போல நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க ஒவ்வொருவரும் தன் மனத்தைத் திறந்து பேசத் தொடங்குவார்கள். மின்ஊடகத்தின் வலிமை கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. ஊடகத்துடன் மானுடன் உருவாக்கிக்கொள்ள விழையும் உறவு வியப்பூட்டக் கூடியது. அந்த உறவுப்பின்னலின் சிக்கலை கதிர் பாரதியின் இந்தக் கவிதை வாசகர்களுக்கு உணர வைக்கிறது என்றே சொல்லலாம்.

 உன்னையன்று கேட்பேன் என்பது ஒரு பாடல். அப்பாடலுக்கு வாயசைத்து நடிக்கிறாள் ஒரு நடிகை. அந்த நடிகையின் முகவசீகரம் பார்வையாளனை அந்த வரிக்குப் பதில் சொல்லத் தூண்டுகிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம்.

சக மனிதர்களின் கேள்விகளையும் உறவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்கிறவர்களாகவே பல நேரங்களில் நாம் இருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பிம்பம் முன்வைக்கும் பாவனைக் கேள்விக்கு மனமுருக, உயிருருக பதில்களை நம் ஆழ்மனம் மறுநொடியே முன்வைத்துச் செல்வதில் வேகம் காட்டுகிறோம். ஆச்சரியமான இந்த முரண் மிகப்பெரிய சமூக ஆய்வுக்குரியது.

“அலறி ஓடும் மவ்னம்’ கவிதை அதிர்ச்சியும் துயரும் கலந்த ஒரு சித்தரிப்பு.

இருபது நிமிடங்கள் நகர்வதற்கு முன்பு

தூக்கிலிட்டுக்கொண்டவளின் பொருட்டு

அறையை அறைந்தறைந்து கலங்குகிறது

அலறும் செல்பேசி.

நேற்றைய ஊடலை நேர்செய்வதற்கான

காதலன் முத்தம் தேங்கி நிற்கிற

அந்த செல்பேசிக்குள் சாபமென நுழைகிறது

அவன் அனுப்பிய அந்தரங்கக் குறுஞ்செய்தி

இனிப்புப்பண்டங்களின் மீது ஊர்கிற எறும்புகள்

தற்கொலையின் கசப்பைச் சுமந்து தள்ளாடுகின்றன

திரும்ப இயலாத அகாலத்துக்குள்

சிக்கிக்கொண்டு திணறுகிற அந்த அறையை

காற்று திறக்க அலறிக்கொண்டு ஓடுகிறது

விக்கித்து நின்ற மவ்னம்

கதிர்பாரதியின் கூறுமுறையில் உள்ள கருணை யில்லாத விலகல் தொனி இக்கவிதையை செதுக்கி வைத்த சிற்பமாக்கிவிடுகிறது. தூக்கில் தொங்கி மரணமடைந்துவிட்டவளிடமிருந்து நேரிடையாகத் தொடங்கிவிடுகிறது கவிதை. செல்பேசி அலறுகிறது. எடுக்க ஆளில்லை. ஒருமுனையில் உயிரற்ற உடலாக சொற்களை உதறிக் கடந்து சென்றுவிட்ட ஒருத்தி.

மறுமுனையில் சொற்களையும் முத்தங்களையும் ஆறுதல்களையும் கொட்டுவதற்குத் தயாராக உள்ள ஒருவன். அவனுடைய மன்றாடல்களாக அலறுகிறது செல்பேசி. திறந்துவைக்கப்பட்ட இனிப்புப்பண்டம் அழுத்தமான ஒரு படிமம். உண்டு மகிழவென வாங்கிவந்த இனிப்பு தின்னப்படாமலேயே எறும்பு களுக்கு உணவாகிவிடுகிறது. கலந்து மகிழவென தொடங்கிய வாழ்க்கை வாழப்படாமலேயே மரணத்தில் முடிந்துபோகிறது. அதைப்பற்றி அதிகம் பேசிவிடக் கூடாது என்பதில் கதிர்பாரதி காட்டும் எச்சரிக்கை யுணர்வு மிக முக்கியமானது. அந்தத் தருணத்தை மிக விரைவாகக் கடக்க நினைப்பவர்போல அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறார்.

இறந்து தொங்கும் உடல், அலறித் துடிக்கும் செல்பேசி, எறும்புகள் உண்ணும் இனிப்பு என ஒவ்வொன்றாகக் காட்டி நகரும் கவிதை இறுதியில் அரூபநிலையில் அங்கு தேங்கியிருக்கும் மௌனத்தின் நிலையைக் காட்டி நிறைவெய்துகிறது. ஓர் உயிருள்ள ஆகிருதியாக மௌனம் அக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கிவிடுகிறது. துன்பம் கொள்கிறது. துயரத்தின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கிறது. இறுதியாக காற்றின் கருணையால் திறந்த கதவின் வழியாக வெளியேறிவிடுகிறது.

அந்த மௌனம் ஏன் அலறியடித்துக்கொண்டு ஓடவேண்டும் என ஒருகணம் நினைத்துப் பார்க்கும்போது கவிதையின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது. அந்த மௌனம் அந்த அறையில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அந்தக் காதலர்கள் சிரித்து மகிழ்ந்ததையும் முத்தமிட்டுக் கொண்டதையும் பேசிக் களித்ததையும் ஒரு சாட்சியாக எப்போதும் பார்த்து வந்திருக்கிறது. இயல்பில்லாத முறையில் நிகழ்ந்துவிட்ட மரணத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எதையும் தடுக்க முடியாமல் ஒரு சாட்சியாக நின்று பார்க்க நேர்ந்த துக்கத்தின் வேதனையிலிருந்தும் அதனால் தப்பிக்க முடியவில்லை. அந்த அலறலுக்கான காரணம் அதுதான். ஒருபுறம் செல்பேசியின் அலறல். மறுபுறம் அனைத்துக்கும் சாட்சியான மௌனத்தின் அலறல். ஓர் அலறலில் தொடங்கும் கவிதை இன்னொரு அலறலில் முடிவடைகிறது. வாசிப்பின் முடிவில் துயரத்தை நோக்கித் தள்ளும் அனுபவமே இதை கவிதை யாக்குகிறது.

தொகுதி முழுதும் இப்படிப்பட்ட நுண் சித்தரிப்பு களைக் கொண்ட பல கவிதைகள் உள்ளன. கதிர்பாரதி வரிகளில் விவரித்திருக்கும் உலகுக்கு இணையாக இன்னொரு உலகத்தை வாசகனுக்குள் உருவாக்கும் ஆற்றல் கதிர்பாரதியின் கவிதைகளுக்கு இருக்கின்றன. ஒருவகையில் கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத் துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்ற மளிக்கிறது.

 இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள் விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றமளிக்கிறது. கணம்தோறும் மாறிமாறித் தோற்றமளிக்கும் காட்சிகள் வாசகனின் மனவுலகில் விரிந்துவிரிந்து கற்பனைகளைத் தூண்டியபடி இருக்கின்றன. இந்தக் கற்பனைகளே கதிர்பாரதியின் கவிதைகள் வழங்கும் செல்வம் அல்லது கொடை.

நீர்க்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து அறிதலின் தீ என்னும் தலைப்பில் லாவண்யா சுந்தரராஜனின் மூன்றாவது தொகுதி வெளிவந்திருக்கிறது. நான் கவனித்த வகையில் தொடர்ச்சியாக சீராகவும் சிறப்பாகவும் எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர் லாவண்யா சுந்தரராஜன். முந்தைய தொகுதிகளில் காணப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய திசையில் புதிய வடிவத்தோடு பயணம் செய்பவையாக காணப் படுகின்றன இக்கவிதைகள். கவிதை முயற்சியில் லாவண்யாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையே இது சுட்டிக்காட்டுகிறது.

தொகுப்பின் முக்கியமான கவிதைகளில் ஒன்று நீர்ப்பாறை. நீர்ப்பாறை என்னும் சொல்லிணைவில் வசீகரம் நிறைந்திருக்கிறது. நீரில் இருக்கும் பாறையா அல்லது நீராக இருக்கும் பாறையா என்றொரு பொருள் மயக்கம் அச்சொல்லை மனசுக்கு நெருக்கமுள்ளதாக மாற்றுகிறது.

ஆதியில் அவள் பாறையென்றிருந்தாள்

நீலக்கடல் அலைந்து அலைந்து நித்தம் அவளை

கெஞ்சிக்கொண்டிருந்தது

சிறிதும் இரக்கமில்லை கடல்மீது

பெருமிதம் கொண்டிருந்தாள்

கவலையற்ற கடல்

மெல்ல தின்னத் தொடங்கியது பாறையை

மேனி மெலிந்தாள்

கரடுமுரடுகள் குறைந்தன

கொடியிடையாள்

கடலாலே அழகியானோம்

என்றே மகிழ்ந்திருந்தாள்

மெல்ல

கூழாங்கல்லாகி

தன்னைத் தொலைத்திருந்தாள்

கடலடியில்

ஒரு பெண்ணின் மொத்த வாழ்நாள் அனுபவத்தையும் பாறை தேய்ந்து கூழாங்கல்லாகும் உருமாற்றத்துடன் இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது கவிதை. தன்னைச் சுற்றி நிகழ்வன அனைத்தும் நன்மைக்கே என்ற எண்ணத்தில் மகிழ்ந்திருக்கும் பாறை என்றோ ஒருநாள் தான் ஒரு கூழாங்கல்லாக சிறுத்துப் போயிருப்பதை அறிந்துகொள்கிறது. அறிந்துகொள்ளும் அனுபவமே “அறிதலின் தீ”.

“வெறுமனே நோக்குதல்” என்னும் கவிதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சி கவித்துவம் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு யானையும் ஒரு நாரையும் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இக்காட்சிச்சித்திரத்தைப் படித்ததுமே, அக்காட்சி மனத்தை நிறைத்துவிடுகிறது. மிகக்குறைந்த வண்ணக்கலவையால் தீட்டப்பட்ட மிகச்சிறந்த ஓவியமெனத் தோற்றமளிக்கிறது கவிதை. “பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்’ என்று சுட்டிய சத்திமுத்தப் புலவரைப்போல அகப்பை வாய் நாரை என்று குறிப்பிடுகிறார் லாவண்யா சுந்தர ராஜன்.

சிறுகுன்றை எப்போதும்

சுமந்து திரியும்

கருஎருது எச்சிலொழுக

அமர்ந்திருந்தது யானையென

அகப்பை வாயைக்

கொண்ட நாரை

குச்சிக்காலால் தவம் செய்து

நெருங்கிவிட முயன்றாலும்

தன் முன்னிருக்கும்

சிறு உருவைப்பற்றி

எந்தவித சலனமுமற்றிருக்கும்

பிரம்மாண்டத்தை ஏறிட்டுப்

பார்ப்பதைத் தவிர

வேறென்ன செய்யமுடியும்

அச்சிறு நாரையால்

முதுகுத்திமிலுடன் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறது ஓர் எருது. அதன் அருகில் நெருங்கிச் சென்று அண்ணாந்து பார்க்கிறது ஒரு நாரை. நாரையின் இருப்பை எருது உணர்ந்துகொண்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எருதுவிடம் நாரை என்ன எதிர்பார்க்கிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் எருதுவின் இருப்பைக் கண்டதும் நாரையின் உள்ளத்தில் ஏதோ ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி பொங்குகிறது. எருதுவின் தோற்றத்தை ஒரு விஸ்வ ரூபமாக உணரும் நாரை, அதை ஏறிட்டுப் பார்ப்பதன் வழியாகவே தன் மனத்தை மகிழ்ச்சியால் நிரப்பிக் கொள்ள முயற்சி செய்கிறது.

ஒரு வெட்டவெளி. வெட்டவெளியில் தன் மகிழ்ச்சியைக் கண்டடைந்து திளைக்கும் எருது, எருதுவின் இருப்பில் தன் மகிழ்ச்சியைக் கண்டடையும் நாரை என மூன்று புள்ளிகள் நமக்கு இக்கவிதை வழியாகக் கிடைக்கின்றன. மகிழ்ச்சியின் பாதையென இப்புள்ளிகள் வழியாக நம்மால் ஒரு கோட்டை இழுத்துக்கொள்ள முடியும். நாரையைப் பார்த்து மகிழக்கூடிய இன்னொரு உயிர், அதைப் பார்த்து மகிழக்கூடிய மற்றொரு உயிர் என நம் கற்பனையில் அந்தக் கோட்டை இன்னும் நீட்டித்துக்கொண்டே செல்லலாம். அதற்கான சாத்தியங்களோடு உள்ளது கவிதை. எனினும் கவிதையின் இறுதியில் லாவண்யா கொடுத்திருக்கும் சமர்ப்பணக்குறிப்பு, கவிதையின் விரிவைத் தடுத்துவிடுவதுபோல உள்ளது.

மௌன ஊற்று என்னும் கவிதையில் வசீகரமான ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மௌனத்தை ஊற்று நீராக்கி

நிறைத்திருந்த கிணறு

விடாது பொழியும் நிலவை

சலசலத்து பிரதிபலிக்கிறது

கழுத்திறுகப் பிணைக்கப்பட்டிருந்த

காயம் பட்ட குடம்

தன் விருப்பத்தோடோ இல்லாமலோ

முகர்ந்தெடுத்த நீரில்

கூட வந்த துளி நிலவைச்

சலனமின்றி எடுத்துச் சென்றது.

ஒரே கணத்தில் மூன்று இடங்களில் தெரியும் நிலவின் இருப்பைக் கண்டடையும் மகிழ்ச்சி இந்தக் கவிதையில் பொங்கி வழிகிறது. வானத்தில் ஒரு நிலா. கிணற்றுக்குள் ஒரு நிலா. குடத்துக்குள் ஒரு நிலா. குடத்திலிருக்கும் தண்ணீரைக் கைநிறைய அள்ளி யெடுத்தால், அதிலும் ஒரு நிலா தெரியக்கூடும். அந்த நிலாவைக் குனிந்து பார்க்கும் கண்களிலும் ஒரு நிலா தெரியக்கூடும். நிலா எங்கெங்கும் நீக்கமற நிறைந்து விடுகிறது.

ஒரு புனைகதையின் அழகோடு உள்ள சிறுமி வளர்க்கும் வெயில் கவிதை லாவண்யா சுந்தர ராஜனுக்குப் பெருமை சேர்க்கும் கவிதை. ஒருவேளை, எதிர்காலத்தில் அவர் இக்கவிதையின் வழியாகவே நினைக்கப்படவும் கூடும். கவிதையில் ஒரு சிறுமி இடம் பெற்றிருக்கிறாள். வீட்டுக்குள்ளேயே விளையாடி மகிழ்கிறவள் அவள். ஒருநாள் ஜன்னலோரமாக விளையாடிக்கொண்டிருக்கும்போது அங்கே வெயில் வந்து படர்கிறது. அதன் வசீகரத்தில் மனம் பறிகொடுத்து விடுகிறாள் சிறுமி.

அகல்விளக்கை இரு கைகளுக்கு இடையில் வைத்து காற்றில் சுடர் அணைந்துவிடாமல் எச்சரிக்கையுணர்வோடு எடுத்துச் செல்வதுபோல வெயிலை கைக்குள் மறைத்துப் பொத்தி எடுத்துக் கொள்கிறாள் சிறுமி. ஏதாவது ஒரு இடத்தில் அதை வைத்துப் பாதுகாக்கவேண்டுமே என மறைவிடம் தேடி வீடு முழுதும் சுற்றிச்சுற்றி வருகிறாள். அவள் கைக்குள் மறைந்திருந்தாலும் விரலிடுக்கின் வழியாகக் கசியும் வெளிச்சத்தால் அந்த வீடே ஒளி பொருந்தியதாக மாறுகிறது.

பொம்மைக்குள் ஒளித்துவைக்கலாமா, புத்தகப்பைக்குள் ஒளித்துவைக்கலாமா என ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து, அடுத்த கணமே அது பொருத்த மல்ல எனத் தவிர்த்துவிடுகிறாள். ஆடைகள் வைக்கு மிடம், அலங்காரப்பொருட்கள் இருக்குமிடம், குளியலறை என எந்த இடமுமே அவளுக்குப் பொருத்த மானதாகத் தோன்றவில்லை. கடைசியில் ஒரு வழியாக அடுக்களை அடுப்புக்குள் கொண்டு சென்று வைக்கிறாள். ஜன்னலில் தொடங்கும் கவிதை அடுக்களையில் வந்து முடிகிறது.

அடுக்களையை, பாதுகாப்பான ஒன்றாகத் தேர்ந்தெடுத்த சிறுமியின் செய்கைக்குப் பின்னணியாக இருந்த விசை என்ன என்பது புரியாத புதிர். தன்னைப் போலவே வெயிலுக்கும் அதுவே பாதுகாப்பான இடமென அவள் ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பது அடுத்த புதிர்.

முதுகுப்பாரம் என்னும் இன்னொரு கவிதையிலும் அடுக்களை இடம்பெறுகிறது.

சொந்த அடுக்களையற்றவள்

முதுகில் அடுப்பைக் கட்டிக்கொண்டு

பாதையற்று அலைகிறாள்

காலம்காலமாய்

அடுப்பின் பாரத்திலிருந்து பெண்ணை விடுவிப்பது என்பதே இச்சமூகத்தின் மிகப்பெரிய சவால். பாதை என ஒன்று இருந்தாலாவது அல்லது தெரிந்தாலாவது அந்த இடத்துக்குச் சென்று அங்கே அவள் அந்தப் பாரத்தை இறக்கிவைத்துவிடலாம். செல்லும் திசை எது என்னும் தெளிவற்ற நிலையில் அவள் காலம் காலமாக அலைந்து கொண்டே இருக்கிறாள்.

துடைப்போவியம், மலைப்பெண் ஆகிய இரண்டு கவிதைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல வெளிப்பட்டுள்ளன. ஒரு கவிதையில், கார் கண்ணாடியில் படிந்த பனிப்புகையை விரலால் தொட்டுக் கிறுக்கிய வரிகளின் தொகுப்பைத் தள்ளி நின்று உற்றுப் பார்க்கும்போது அணில், பூனை, யானை, முயல் என ஒவ்வொரு உருவமாக நினைவூட்டியபடியே வந்து இறுதியில் ‘அத்தனை உருவங்களும் என்னைப் போலவோ என் கவிதைகளைப் போலவோ அவ்வப் போது அர்த்தமும் அநர்த்தமும் கொண்டதாயிருக்கின்றன’ என்ற எண்ணத்துடன் முற்றுப் பெறுகிறது.

இரண்டாவது கவிதையில் தொலைவில் தெரியும் ஒரு மலைத்தொடரை விலகி நின்று பார்க்கப்பார்க்க சிங்கம், முயல், மான்கொம்பு, சுயம்புலிங்கம், சயனப்பெருமாள் எனப் பற்பல உருவங்களை நினைவூட்டியபடியே வந்து இறுதியில் அந்தி கவியும் தருணத்தில் அனைத்துமே ஒரு பெண்ணாகத் தெரிகிறது. இரவு கவியக்கவிய அந்தக் கற்பனைப்பெண் புரண்டு படுக்கும் ஓசை கூட கேட்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. கற்பனையின் ஊடாக நம்மால் செல்லமுடிந்த தொலைவின் சித்திரமாகவும் சாட்சியாகவும் இக்கவிதைகள் உள்ளன.

சற்றே தேவதச்சனின் சாயலைக் கொண்டதாக இருந்தாலும் சலனம் கவிதை இத்தொகுப்புக்கு ஓர் அழகைச் சேர்க்கிறது.

விட்டுவிட்டு

சொட்டிக்கொண்டிருந்த குழாயை

இறுக மூடியபின்னர்

நின்று போயின

நீர்த்துளிகள்

என்னவோ செய்கிறது

சொட்டாத குழாயின் நிசப்தம்

இந்தக் கவிதையின் திசைக்கு எதிர்த்திசையை தன் இயங்குதளமாகக் கொண்ட கவிதை உறங்காத வீடு. இங்கு இடைவிடாமல் ஒலித்தபடியே இருக்கும் சப்தங்கள் என்னவோ செய்கின்றன. ஒரு வீட்டுக்குள் மின்விசிறியில் சத்தம் கேட்கிறது. குளிரூட்டியின் இரைச்சல் கேட்கிறது. இன்னும் ஏதேதோ சத்தங்கள் கேட்கின்றன. எல்லாச் சத்தங்களையும் கேட்டபடி வீட்டுக்குள் உலவும் மனிதர்கள் சத்தம் போடுவதே இல்லை. அவர்களிடையே பேச்சே இல்லை. பேச்சே இல்லை என்பதால் அவர்களுடைய இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் வேறுபாடே இல்லாமல் போகிறது. உறங்காத வீடாக உறைந்துபோகிறது.

இறுதியில் வீடு என்றால் என்ன என்கிற கேள்வி மட்டுமே எஞ்சி நிற்கிறது. வீடு என்பது மேசை, நாற்காலி, மின்விசிறி, குளிரூட்டி என அடுக்கி வைக்கப்படும் பொருட்களுக்கான இடமல்ல. அது உயிருள்ள மனிதர்களுக்கான இடம். ஒருவரை ஒருவர் தம் அன்பால் நிறைத்துக்கொள்பவர்களே மனிதர்கள். வீடு அப்படிப்பட்டவர்களால் மட்டுமே பொலிவுறுகிறது. அத்தகு வீடு உறங்கும்போதும் பொலிவுடன் காணப் படும். அப்படி அமையாத வீடு சப்தங்களால் நிறைந்து உறங்காத வீடாகவே எஞ்சியிருக்கும்.

ஒரு புறக்காட்சியில் மானுட வாழ்வின் சாரத்துக்கு இசைவான அம்சத்தைக் கண்டடைவதை ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும். கவிதைக்குள் அந்த அனுபவத்தைப் பொருத்தமான சொற்களால் கட்டியெழுப்பும்போது, அது மகத்தான அனுபவமாக உருமாறிவிடும். பிறகு, கச்சிதமாகச் செதுக்கியெடுக்கப் பட்ட ஒரு கோவில் சிற்பம்போல மொழிக்குள் அந்த அனுபவம் நிலைத்திருக்கத் தொடங்கிவிடும். எழுத்துப் பயணத்தில் இந்தத் தேடலின் விசையால் உந்தப்படாத கவிஞர்களே இல்லை. அந்தரங்கம் தொகுதியின் வழியாக தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் செல்வராஜ் ஜெகதீசன். சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை அவருடைய ஐந்தாவது தொகுதியாக வெளிவந்துள்ளது. அவருடைய தேடல் பயணம் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

விட்டு விடுதலையாகி

வீழ்ந்து கிடந்த

சிட்டுக் குருவியின்

சிறகொன்றில்

தத்திக்கொண்டிருக்கிறது

ஒரு ஈ

வீழ்ந்துகிடக்கும் சிறகையும் பறப்பதற்கு முன்பாக தத்திக்கொண்டிருக்கும் ஈயையும் இணைத்திருக்கும் காட்சி மிகச்சிறந்த படிமம். ஒருபுறம் மரணம். ஒருபுறம் உயிரின் சலனம். மரணங்களும் பிறப்புகளும் கண்ணி களாக மாறிமாறி இணைந்து நீளும் மானுட வாழ்க்கைச் சங்கிலியின் தோற்றம் ஒருகணம் அக்காட்சியில் மின்னி மறைகிறது. Òஓரில் நெய்தல் கறங்க ஓரில் ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப...” என வியக்கும் பக்குடுக்கை நன்கணியாரின் வரிகள் மனத்தில் எழுகின்றன. சிறகு மரணத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இல்லை. அதற்கும் மேலாக, நேற்றைய வரையிலான வாழ் வனுபவத்தின் அடையாளமாக இருக்கிறது. அந்த அனுபவத்தின் மீது தத்தித்தத்தி நடை பழகுகிறது இன்றைய ஈ. இந்த ஈயின் சிறகுகளும் என்றோ ஒருநாள் உதிர்ந்துவிழக்கூடும். அன்று புதிதாக ஊரத் தொடங்கும் ஏதோ ஓர் எறும்பு அதன்மீது ஊர்ந்து செல்லக்கூடும். எண்ணங்கள் இப்படி விரிந்துவிரிந்து படிமம் மனத்துக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிடுகிறது. மாபெரும் படிமங்களே மாபெரும் கவிஞர்கள் ஒரு மொழிக்குத் தேடிவைத்துவிட்டுச் செல்லும் சொத்து.

செல்வராஜ் ஜெகதீசன் இந்தக் கவிதையை இன்னும் சில வரிகளோடு நீட்டிச் சொல்ல முனையும்போது, கவிதையின் வலிமை குன்றிவிடுகிறது.

இப்படி ஒரு தொடக்கம்

எந்த ஒரு

நாளுக்கும்

கவிதைக்கும்

இல்லாமல் போகக்

கடவதாக

என்னும் பிற்பகுதி வரிகள் எவ்விதத்திலும் மேற்சொன்ன முற்பகுதி வரிகளோடு பொருந்திப் போகவில்லை. அது மட்டுமல்ல, சிறுகச்சிறுகக் கட்டி யெழுப்பிய படிமத்தின் அழகைக் குலைப்பதாகவும் அமைந்துபோய்விடுகிறது.

கவிதையம்சம் பொருந்திய ஒரு காட்சியின் சித்தரிப்பைத் தொடர்ந்து கவிதைக்கு சிறிதும் பொருந்தாத சில வரிகளை ஏதோ ஒரு வேகத்தில் கட்டுப்பாடின்றி எழுதிவிடுகிறார் செல்வராஜ் ஜெகதீசன். அதிசயம் என்னும் கவிதை இன்னொரு எடுத்துக்காட்டு.

நடந்துகொண்டிருந்தோம்

‘என்ன அதிசயம் பார்’

என்றான் மகன்

அடுக்கக மாடியன்றிலிருந்து

மூக்கு நுனியில்

விழுந்த நீர்த்துளியைக் காட்டி

எளியதொரு அழகான சித்தரிப்பு. கபடற்ற குழந்தைமையின் பார்வையை முன்வைக்கும் சித்தரிப்பு. தரையில் மட்டுமே தண்ணீரைப் பார்த்துப் பழகிய குழந்தையின் மனம், வானத்திலிருந்து விழும் தண்ணீர்த் துளியை முதன்முதலாகப் பார்த்து அதிசயமென குதித்தாடி முகம் மலர்கிறது. அதிசயமெனக் கண்டடைந்து தேடித்தேடி சேகரித்துக்கொண்ட அறிதல்களே மெல்லமெல்ல அனுபவங்களாக மாற்றமடைகின்றன.

சித்தரிப்பை வாசித்த கணத்திலேயே, ஒரு நடையில் ஒரு குழந்தை எதைஎதையெல்லாம் பார்த்து அதிசயப் படக்கூடும் என்று நம் மனம் அசைபோடத் தொடங்கி விடுகிறது. உண்மையில் நம் பால்யத்திலிருந்தே அந்தப் பட்டியலை நம் மனம் உருவாக்கிக்கொள்கிறது. இன்றைய அதிசயங்களிலிருந்து நேற்றைய அதிசயங்களை நோக்கி மனம் ஓர் உள்முகப்பயணத்தில் ஈடுபடுகிறது. அகத்தையும் புறத்தையும் இணைக்கிறது அந்தத் தருணம். ஆனால் செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை அத்துடன் நிறுத்தாமல் மேலும் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

நமக்குத்தான்

அதிசயம் என்றால்

என்னென்னமோ வேண்டியிருக்கிறது

என்ற வரிகளைப் படித்ததுமே பறக்கத் தொடங்கிய

ஒரு பறவையை இழுத்துப் பிடித்து கழுத்தைச் சுற்றிக் கட்டிப் போட்டதுபோல இருக்கிறது. கவிதை ஒருபோதும் புலம்பல் அல்ல. அது கண்டடையும் களம். இப்படிப்பட்ட பிசகுகளைக் கடந்துதான் ஜெகதீசனின் தொகுப்பில் நல்ல கவிதைகளைத் தேடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது.

இன்னுமொரு முறை என்றொரு கவிதையில் செல்வராஜ் ஜெகதீசன் சித்தரிக்கும் காட்சி சுவாரசிய மானது. இத்தொகுப்பில் நல்ல கவிதைகளில் ஒன்றாக இதைச் சொல்லலாம். புதுமஞ்சள் தாலியோடு கணவனின் காதோரம் ஏதோ கிசுகிசுத்தபடி போய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான் கவிதையின் விவரணையாளன். அவன் ஏற்கனவே அந்தப் பெண்ணை தன் நண்பனின் காதலியாக அறிந்தவன்.

அவளுடைய பெயரின் முதலெழுத்தையும் தன் பெயரின் முதலெழுத்தையும் தீக்கம்பி கொண்டு தன் இடதுகை மணிக்கட்டில் எழுதிக் காதலித்தவன் அவன். எங்கோ திசைமாறி ஏதோ ஒரு பேருந்தில் நடத்துநராக பிழைப்பை இன்றும் ஓட்டிக்கொண் டிருக்கிறான் அவன். இருவருக்கும் இடையிலான காதல் வீட்டாருக்குத் தெரிந்து உதைபட்ட நாளில் இன்னு மொரு முறை அவ்வெழுத்துகளின் மேல் தீக்கம்பியால் அழுத்தி எழுதிக்கொண்டவன். நண்பனின் செய்கையைத் தடுக்க முடியாமல் மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான் கவிதையின் விவரணையாளன். அப்பெண்ணைப் பார்த்த கணத்தில் விவரணை யாளனின் ஆழ்மனத்திலிருந்து எல்லா நினைவுகளும் பொங்கி எழுகின்றன. இன்னுமொரு முறை என்னும் வரியில் உள்ள அழுத்தம் மிகவும் முக்கியமானது.

இந்தக் காதல் நிலைக்காது அல்லது தொடராது எனத் தெரிந்த பின்னரும் இன்னுமொரு முறை தீக்கம்பியால் எழுதிக்கொள்வதன் மூலம் அவன் எதைத் தெரிவிக்க விரும்புகிறான். தன் காதலியை தன்னிடமிருந்து பிரித்துச் சென்றாலும் தன் நெஞ்சிலுள்ள காதலைப் பிரித்தெடுக்க முடியாது என்கிறானா? ஒரு வடுபோல தன் காதலை தன் மனம் நிரந்தரமாக சுமந்தலையும் என்கிறானா? காதலின் அழிவின்மையைச் சுட்டும் அடையாளமா அது? இந்தச் சித்தரிப்பில் தீக்கம்பியால் எழுதிக் கொண்டது ஓர் ஆணாக இருக்கிறான். இன்னொரு சித்தரிப்பில் அது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். பிரித்தெடுத்துச் சென்ற சக்திகளிடம் அந்த வடு ஒரு செய்தியை அமைதியாகச் சொன்னபடி இருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த உலகம் ஏற்கனவே அறிந்த செய்திதான் அது. ஆயினும் அதே செய்தியை இன்னுமொரு முறை இந்த உலகுக்கு அழுத்தமாக சொல்கிறது அந்த வடு.

இன்னொரு நல்ல கவிதை ஒரு கொலை அல்லது மரணம். அதுவும் ஒரு சித்தரிப்பையே முன்வைக்கிறது. சட்டென்று கண்டடையப்பட்ட ஒரு காட்சியாக அது விரிகிறது.

ஒரு அதிகாலையில்

அரைமணிநேரம் பயணித்து

சர்வீஸ§க்குக் கொடுத்த வண்டியின்

சஸ்பென்சன் பகுதியில்

செத்துப் போயிருந்தது ஒரு பூனை

சிதறிய ரத்தக்கறைகளோடு

ஒரு சிறிய தொகையில் பின்

சுத்தம் செய்யப்பட்டது

எப்போது எப்படி

என்றெதுவும் அறியாமல்

நிகழ்ந்த

ஒரு கொலை அல்லது

ஒரு மரணம்

ஒரு மரணத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் ஒருபோதும் வரையறுக்கப்பட முடியாதவை. அது விலங்கு களின் மரணமாக இருந்தாலும் சரி, மனித மரணமாக இருந்தாலும் சரி. தூங்குகையில் வாங்குகிற மூச்சு சுழிமாறிப் போகக்கூடிய சாத்தியப்பாடுகள் மிகுதி. மரணம் தீராத ஒரு புதிர். எளியதொரு காட்சியிலிருந்து கவிதை அந்தப் புதிரை நோக்கி சட்டெனத் தாவி விடுகிறது.

அம்மாவைப்பற்றிச் சொல்லும் “நிற்கும் பிம்பம்” என்னும் கவிதையும் இப்படி ஒரு புதிர்த்தன்மையைக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. வாழ்நாள் முழுதும் உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் மட்டுமே பார்த்த தன் அம்மாவை, அவள் மரணத்துக்குப் பிறகு வந்த கனவுகளில் நின்ற கோலத்தில் காட்சியளிக் கிறாள். அதைப் பார்த்து பதற்றம் கொள்கிறான் ஒருவன். நின்ற கோலத்தில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்னும் புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கிறான். இறுதியில் விடை வேண்டி அவளையே தஞ்சமடை கிறான்.

நவீன வாழ்வில் மறைந்திருக்கும் குரூரத்தைச் சித்தரிக்கிறது “சாசனமாய் ஒரு கவிதை” என்னும் கவிதை. தன் மகனுக்குப் பிடிக்கக்கூடும் என ஒருநாள் எங்கிருந்தோ ஒரு நாய்க்குட்டியைத் தேடிக் கொண்டுவருகிறான் ஒருவன். அவனுக்கும் அந்தக் குட்டியை மிகவும் பிடித்து விடுகிறது. அந்தப் பையனோடு ஒட்டி உறவாடியபடி வளர்கிறது நாய்க்குட்டி. அவனுடன் சேர்ந்து அவன் தம்பியும் நாயுடன் விளையாடி மகிழ்கிறான்.

வீடு மாறும்போதும் அந்த நாயை தம்மோடு அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்கள். ஏறத்தாழ பத்தாண்டு காலம் அவர்களோடு வாழ்கிறது அந்த நாய். நாய் முதுமையடைந்துவிடுகிறது. பிள்ளைகளும் வளர்ந்து விடுகிறார்கள். விளையாடுவதற்கு நாய் தேவைப்படாத உலகத்துக்குள் அவர்கள் தம்மைப் பொருத்திக்கொள்கிறார்கள். முதுமை பெற்று, வீட்டின் மூலையில் இடத்தை அடைத்தபடி சுருண்டு படுத்துக் கிடக்கிறது நாய்.

அதன் பயனின்மையை உணர்ந்த குடும்பத்தினர் அடுக்ககத்தின் ஆறாவது மாடிக் குடியிருப்பிலிருந்து குப்பைகளை வீசும் குழாய் வழியே அதைத் தள்ளி விடுகிறார்கள். ஒளியிழந்த கண்களில் ஏக்கமும் குழப்பமும் வெளிப்பட முதுமையடைந்த அந்த நாய் மறைந்துபோகிறது. பிரிந்துபோன நாயின் இருப்புக்குச் சாட்சியாக மனிதன் கவிதை எழுதிவைக்கிறான். குரூரத்தை ஒரு கவிதை வழியாகக் கடந்து செல்ல நினைக்கும் மானுட அற்பத்தனத்தை சித்திரமாக முன்வைக்கிறது கவிதை.

“சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” என்னும் தலைப்புக் கவிதையும் ஒரு சித்தரிப்பின் வழியாக ஒரு புதிரைநோக்கித் தாவிச் செல்லும் கவிதை. நாற்புறச் சாலைச் சந்திப்பில் நின்றிருக்கும் சமிக்ஞைக் கம்பங்களில் மாறிமாறி ஒளிரும் சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை விளக்குகள் இடைவிடாது ஒளிர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாகனங்களைக் கட்டுப்படுத்தி அனுப்பியபடி இருக்கின்றன.

ஓடும் வாகனங்கள் ஒருபுறம். சலனமே இல்லாமல் நின்றிருக்கும் வண்ணவிளக்குகள் இன்னொரு புறம். வண்ண விளக்குகளை நவீன வாழ்க்கையில் கிடைத்த ஒரு வரமென்றே சொல்லவேண்டும். இருளடர்ந்த பாதைகள் வழியாக அச்சத்தோடு பயணம் செய்த பழைய காலம்போல இன்றைய பயணம் இல்லை. இன்றைய நவீனப் பயணம் வசதியாக இருக்கிறது. தடுமாற்றமின்றி தெளிவாக இருக்கிறது. அதே சமயத்தில் பழகிய தடமென்பதால் சலிப்பாகவும் இருக்கிறது என்பது உண்மை. வண்ண விளக்குகள் பல கோணங்களில் எண்ணங்களை இழுத்துச் செல்கின்றன. எண்ணங்களையும் கற்பனைகளையும் விரிவடையச் செய்யும் சக்தி கொண்டதே நல்ல கவிதை.

கடற்கரையில் அலைகள் ஒதுக்கும் வண்ண மயமான கிளிஞ்சல்களுக்காக கரையோரமாக நடந்து கொண்டே இருக்கும் சிறுமியைப்போல, தினசரி வாழ்க்கையில் கவித்துவக் கணங்களைத் தேடித்தேடி காலமெல்லாம் அலைகிறவனாக இருக்கிறான் கவிஞன். பல தருணங்களில் ஏமாற்றமே எஞ்சினாலும் ஒரு சில தருணங்களில் அவன் கண்கள் வசீகரமான கிளிஞ்சல்களைக் கண்டடைகின்றன. அவன் அலைதலுக்கு அவையே பொருள் தருகின்றன. அத்தகு அபூர்வமான சில தருணங் களை செல்வராஜ் ஜெகதீசனுடைய இத்தொகுதியில் பார்க்கமுடிகிறது.

Pin It