muthambal sathiram

இந்தியாவில் விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் தஞ்சையை நாயக்கர்கள் ஆட்சி செய்து வந்தனர். நாயக்கருக்குச் சொந்தமான வல்லத்தை மதுரை நாயக்கர் சொக்கநாதர் கைப்பற்றியமையால் தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கர் பீஜப்பூர் சுல்த்தானின் உதவியை நாடினார். பீஜப்பூர் சுல்த்தான் அப்துல் ஹலிம், காதர் எக்கல்ஸ் போன்றோரும், படைக்குத் தலைமை தாங்க ஏகோஜியை நியமித்தார். ஏகோஜி மதுரை நாயக்கரை வென்று பின்னர் எதிர்பாராவிதமாக தஞ்சை நாயக்கர் விஜயராகவ நாயக்கரைத் தாக்கி வென்று மராட்டிய அரசை தஞ்சையில் நிறுவினார். அன்று முதல் அதாவது, பொ.ஆ 1676 முதல் 1855 வரை தஞ்சையை மராட்டியர் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் நிர்வாகத்துறை, நீதித் துறை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கல்வி நிலை ஆகியவை சிறப்புடன் விளங்கின. மராட்டியர்கள் தஞ்சாவூரிலும், தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதி களிலும், இராமேஸ்வரம் செல்லும் வழியிலும் சத்திரங்களை ஏற்படுத்தினர். அச்சத்திரங்கள் பெரும்பாலும் மராட்டிய மன்னர்களது மனைவியர் பெயரிலும், காமக்கிழத்தியர் பெயரிலும், கட்டினர். அவ்வாறு கட்டப்பட்ட சத்திரத்தில் சிலவற்றில் கல்வி நிலையங்களாகவும் திகழ்ந்தன. அக்கல்வி நிலையங்களைப் பற்றி இக்கட்டுரை வெளிக் கொணர்கிறது.

மராட்டியர் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய 20 சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை 1.முத்தாம்பாள் சத்திரம் - ஒரத்தநாடு, 2. இலட்சுமி ராசபுரம் சத்திரம் - பள்ளியக்ரஹாரம் (வெண்ணாற்றங்கரைச் சத்திரம்) 3.சக்வாரம்பாள்புரம் சத்திரம் - திருபுவனம், 4. சிரேயஸ் சத்திரம் - தஞ்சாவூர், 5.காஞ்சி வீடு சத்திரம் - தஞ்சாவூர், 6.இராஜாம்பாள்புரச் சத்திரம் - தாராசுரம், 7.யமுனாம்பாள் புரம் சத்திரம் - நீடாமங்கலம், 8.சைதாம்பாள்புரம் சத்திரம் - சூரக்கோட்டை, 9.உமாபாயிசாகேப் சத்திரம்- மகாதேவபட்டணம், 10.மல்லியம் சத்திரம் - மல்லியம், 11.காசாங்குளம் சத்திரம் - பட்டுக்கோட்டை, 12.மோகனாம்பாள் புர சத்திரம் - இராஜாமடம், 13.சுலக்ஷணாம்பாள் புர சத்திரம் - வேலங்குளம் (அம்மணி சத்திரம்), 14.திரௌபதாம்பாள் சத்திரம் - மணல்மேல்குடி, 15.இராசகுமாராம்பாள் சத்திரம்- மீமிசல், 16.பஞ்சநாத மோகனாம்பாள் சத்திரம் - திருவையாறு, 17.நடார் சத்திரம் - நடார், 18.இராமேஸ்வரம் சத்திரம் - இராமேஸ்வரம், 19.சேதுக்கரைச் சத்திரம் - தனுஷ்கோடி, 20.இராஜகுமாரபாயி சத்திரம் - மடிகை (சூரக்கோட்டை அருகில்) போன்றவையாகும். அவற்றில் சில சத்திரங்கள் மட்டுமே கல்வி நிலையங்களாக இருந்திருக்கின்றன. இக்கல்வி நிலையங்களில் தமிழ், தெலுங்கு, மலை யாளம், மராட்டி, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டது. இக்கல்வி நிலையங்களில் மாணவர்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கல்வி கற்றனர். தங்கிப் பயிலக் கூடிய பள்ளிகளும் இருந்திருக்கின்றன. மேலே குறிப்பிட்ட சத்திரங்களில் ஒரத்தநாட்டிலுள்ள முத்தாம்பாள் சத்திரம், நீடாமங்கலத்திலுள்ள யமுனாம்பாள்புரம் சத்திரம், அம்மாசத்திரத்தில் உள்ள இராஜாம்பாள் சத்திரம், சூரக்கோட்டையி லுள்ள சைதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் உள்ள இராஜகுமாராம்பாள்புரம் சத்திரம் போன்றவற்றில் கல்வி நிலையங்கள் இருந்தன. ஆனால், இவற்றுள் நான்கு சத்திரங்களில் மட்டுமே கல்வி நிலையங்கள் இருந்தமைக்கான சான்றுகள் கல்வெட்டுகளிலும், மோடி ஆவணக் குறிப்புகளிலும் கிடைக்கின்றன.

முத்தாம்பாள் சத்திரம்

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் அட்சரேகை 10.631477N தீர்க்கரேகை 79.24812க்ஷ்நு-ல் முத்தாம்பாள் சத்திரம் அமைந்துள்ளது. இச்சத்திரம் 16. 01. 1802 ஆம் ஆண்டு துண்மதி புஷ்யசுத்த தியோதசியில் இரண்டாம் சரபோஜி1 மன்னரால் கட்டத் தொடங்கப்பட்டது. சத்திரம் கட்டத் தொடங்கி யதற்கான குறிப்புகள் போன்ஸ்லே வம்ச சரித்திரத் தமிழாக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்தாம் பாள் என்பவள் இரண்டாம் சரபோஜி மன்னர் திருமணத்திற்கு முன்பாகவே வைத்துக்கொண்ட காமக்கிழத்தி2 (வைப்பாட்டி) ஆவார். முத்தாம் பாள் இறக்கும் போது தம் பெயரில் ஓர் அன்னச் சத்திரம் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மன்னரால் அவள் பெயரில் இச்சத்திரம் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சைப்பகுதி ஆங்கில அரசாங்கத்தின் கைவசம் இருந்தமையால் இரண்டாம் சரபோஜி மன்னர் ஆங்கில அரசின் அனுமதியுடன் தென்னமநாடு, புதூர், கண்ணத் தாங்குடி கிழக்கு, வன்னிப்பட்டு3 ஆகிய நான்கு கிராமங்களையும் முத்தாம்பாள் சத்திரத்திற்குக் கொடையாக வழங்கிய செய்தியை அச்சத்திரக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இச்சத்திரம் ஒரு முழுமையான கல்வி நிலையமாகும். இக்கல்வி நிலையத்தில் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். பொ.ஆ 1825 ரெஸி டெண்டு ஜான் ஃபைப் (துhடிn குலகந) என்பவர் முத்தாம்பாள் சத்திரத்திற்குச் சென்று தமிழ், ஆங்கிலம், பார்சி, வேதம், மராட்டி உள்ளிட்ட ஐந்து பள்ளிகளை பார்வையிட்டார். அங்கு மொத்தம் 641 மாணவர்கள் பயின்றனர்.

முத்தாம் பாள் சத்திரத்திற்குக் கொடையாகக் கொடுத்த நிலத்திலிருந்து சத்திரச் செலவினங்களுக்காக பொ.ஆ. 1825-ல் 13,007 கலம் நெல்4 அனுப்பப் பட்டது. வித்தியார்த்திக்குப் (மாணவர்கள்) பாடம் சொல்ல மணிசப்த கண்டமும், அதன் வியாக்கரன மூலமும், மதுரா நாதீய புத்தகமும் சரஸ்வதி மகாலில் இருந்து கொடுத்து வாங்கப்பட்டதை மோடி ஆவணம்5 குறிப்பிடுகின்றது. சத்திரத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் உணவு கொள்ளும் மாணவர்கள் 420 பேர் இருந்தனர். மாணவர்களுக்கு நல்ல உணவும், விடுதியும் வழங்கப் பட்டுள்ளது. பார்சி மொழி ஆசிரியர்க்கும், சமையல் காரர் இராமசாமிக்கும் சம்பளம் கொடுத்த செய்தியை மோடி ஆவணம்6 தெரிவிக்கின்றது. ஆங்கில ஆசிரியர் பைஸனர்-க்கு ரூ 10 இனாம் வழங்கப்பட்ட கணக்கினை மோடி ஆவணம்7 குறிப்பிடுகின்றது. ஆங்கிலப் பள்ளிக்கு சரபோஜி மன்னரால் 31 நூல்கள் சத்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தியை மோடி ஆவணம்8 மூலம் அறிய முடிகிறது. பல மொழிகள் நிறைந்த கல்வி நிலையமாக சத்திரம் திகழ்ந்தது. மேலும், வெளி ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றனர். திருநெல்வேலியிலிருந்து சொக்கலிங்கம் வெள்ளாளன்9 என்பவர் முத்தாம்பாள் சத்திரத்தில் ஆங்கிலப் படிப்பை முடித்து தம் ஊருக்கு விடுமுறைக்குச் செல்லுவதற்கு ரூ 10 இனாமாக வழங்கப்பட்ட செய்தி மோடி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, முத்தாம்பாள் சத்திரம் பல மொழிகள் நிறைந்த பள்ளியாகவும், வேதம் கற்கும் பாடசாலையாகவும் இருந்திருக்கின்றது. அண்மைக் காலம் வரை இங்கு அரசு மேல்நிலைப் பள்ளியும், மூன்றாண்டுகளுக்கு முன்னர் பாரதிதாசன் பல்கலைக் கழகம் மகளிர் உறுப்பு கல்லூரியும் செயல்பட்டு வந்துள்ளது. பொ.ஆ. 1802ல் தொடங்கப்பட்ட இச்சத்திரம் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேல் கல்வி நிலையமாக இருந்து வந்துள்ளது என்பதே இதன் சாராகும்.

யமுனாம்பாள்புரம் சத்திரம்

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் அட்சரேகை 10.769662N தீர்க்கரேகை 79.4164110°E ல் யமுனாம் பாள்புரம் சத்திரம் அமைந்துள்ளது. நீடா மங்கலத்திற்கு யமுனாம்பாள்புரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. யமுனாம்பாள் என்பவள் பிரதாப சிம்மரின் மூன்றாவது மனைவியாவாள்.10 இச்சத்திரம் பொ.ஆ. 1761 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.11 பிரதாபசிம்மர் யமுனாம்பாள் பெயரில் ஓர் ஊரை உண்டாக்கி அங்கு இச்சத்திரத்தைக் கட்டிய செய்தி நீடாமங்கலம், சத்திரத்தில் உள்ள முதல் கல்வெட்டு12 தெரிவிக்கின்றது. இங்கு வேதபாடம் கற்பிக்கும் பள்ளி இருந்திருக்கின்றது. யஜுர் வேத பாடம் கற்பிக்கும் ஆசிரியர் வெங்கு ஜடாவல்லபர் என்பவருக்கு நாள் ஒன்றுக்கு¾ படி அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்ட செய்தியை அறிய முடிகிறது.13 பொ.ஆ. 1880 ஆம் ஆண்டு இச்சத்திரத்தை மாவட்ட ஆட்சியர் வெப்ஸ்டர் ஆணையால் பழுது பார்க்கப்பட்ட செய்தி சத்திரத்தின் இரண்டாவது கல்வெட்டு14 தெரிவிக்கின்றது. இச்சத்திரத்தில் அண்மைக்காலம் வரை அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. தற்பொழுது தமிழ்நாடு அரசு வாணிப நுகர் பொருள் கழகத்தின் அலுவலகமாக இருந்து வருகின்றது.

இராஜாம்பாள்புரம் சத்திரம்

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 40 கி.மீ தொலைவில் தாராசுரம் என்னும் இடத்தில் அட்சரேகை 10.9551470° N தீர்க்கரேகை 79.357604° E-ல் இராஜாம்பாள்புரம் சத்திரம் அமைந்துள்ளது. இச்சத்திரத்திற்கும் தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மஹால் நூலகத்திற்கும் இடை¬யே நொறுங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது. சத்திரத்தி லிருந்து சரசுவதி மஹால் நூலகத்திற்கு பொ.ஆ. 1823-ல் 501 எழுத்தாணிகள் அனுப்பப்பட்ட செய்தியை மோடி ஆவணம்15 தெரிவிக்கின்றது. அச்சத்திரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஸ்துவப் பாதிரி யார் ஒருவர் உரிமம் இல்லாமல் சத்திரத்தைக் கையகப்படுத்தி லூக்ஸ் மழலையர் பள்ளி என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளது. ஆகையால், தமிழக அரசு அரசாணை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அப்பள்ளி மூடப்பட்டுள்ளது.

சைதாம்பாள்புரச் சத்திரம்

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் சூரக்கோட்டை என்னும் இடத்தில் அட்சரேகை 10.728440° N தீர்க்கரேகை 79.197566° E-ல் சைதாம்பாள்புரச் சத்திரம் அமைந்துள்ளது. இரண்டாம் சிவாஜியின் மனைவி சைதாம்பாள் ஆவாள். சந்தான ராஜ கோபாலசுவாமி கோயிலின் வடக்குப் பக்கம் இச்சத்திரம் இருந்துள்ளது.16 இச்சத்திரக் கல்வி நிலையத்தில் வேத பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. அங்கு படித்த மாணவர்களுக்கு வேண்டிய நூல்கள் விபரம் விரிவான உரையுடன் சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு பிறகு திருப்பிக் கொடுத்த செய்தியை மோடி ஆவணம்17 குறிப்பிடுகின்றது. மோடி ஆவணத்தில் எடுத்து வரப்பட்ட நூல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவை யாவன. நைஷதம், அமரம், வடமொழி நிகண்டு போன்ற சமஸ்கிருத நூல்கள். தற்பொழுது இந்தச் சத்திரம் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் கட்டடம் மண்ணால் கட்டப்பட்டமையால் அழிய நேர்ந்துள்ளது.

தஞ்சை மராட்டியர்கள் சுமார் 250 வருடம் தஞ்சையை ஆட்சி செய்துள்ளனர். இக்கால கட்டங்களில் 20க்கும் மேற்பட்ட சத்திரங்களைக் கட்டியுள்ளனர். அவை மனைவியர், காமக் கிழத்தியர் பெயரில் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுள் அதிகமான சத்திரங்கள், தஞ்சாவூரிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந் துள்ளன. பெரும்பாலான சத்திரங்கள் அன்ன சத்திரங்களாக இருக்கும் நிலையில், மராட்டி யர்கள் சத்திரங்களில் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி அவற்றில் கல்விப்பணியினை மேற் கொண்டுள்ளது சிறப்பானதொரு பங்களிப்பாகும்.

சான்றெண் விளக்கம்

1.    செ.இராசு, தஞ்சை மராட்டிய கல்வெட்டுகள், ப. 132

2.    போன்ஸ்லே வம்ச சரித்திரம், ப. 136

3.    செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், ப. 137

4.    கே.எம். வேங்கடராமையா, தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், ப. 274

5.    தஞ்சை மராட்டிய மன்னர் ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் முதல் தொகுதி,      மூட்டை எண் 177 C , ப. 92

6.    மேலது, மூட்டை எண் 943 C, ப. 643

7.    மேலது, மூட்டை எண் 57 C, ப. 464

8.    மேலது, மூட்டை எண் 57 C, ப. 464

9.    மேலது, மூட்டை எண்- 160 C, ப. 407

10.   போன்ஸ்லே வம்ச சரித்திரம், ப. 116

11.   கூயதேடிசந ஆயரேயட, C 235

12.   செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டு, ப. 156

13.   கே.எம். வேங்கடராமையா, தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், ப. 271

14.   செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டு, ப. 156

15.   தஞ்சை மராட்டிய மன்னர் ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் முதல் தொகுதி,      மூட்டை எண் 160 C, ப. 338

16.   செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், ப. 122

17.   முன்னர் குறிப்பிட்ட நூல், மூட்டை எண் 196 C, ப. 578.

Pin It