என்னை நானே ஒரு முறைக்கு இருமுறைகள் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். முகநூலில் என் தோழன் டாக்டர் நா.ராமச்சந்திரனின் பதிவைப் பார்த்ததும் முதலில் தூக்கிவாரிப்போட்டது. கனவா இல்லை நனவா என்ற கேள்வியை விடவும், தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் மனசுக்குள் தோன்றியது. எனவேதான் கிள்ளிப் பார்த்து இது கனவல்ல, நனவுதான் என்று ஊர்ஜிதம் செய்துகொண்டேன்.
பேராசிரியர் நாவாவுக்கு அவர் புலவர், அண்ணன் முத்துமோகனுக்கு வாத்தியார் சிவம், குமரி மாவட்டத் தோழர்களுக்கோ மணி அண்ணாச்சி. தமிழ் அறிவுலகம் அறிந்த அறிஞர் பேராசிரியர்
ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்குத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் D.Litt என்னும் டாக்டர் பட்டம் வழங்கவிருக்கும் இனிய செய்தியைச் சொல்லி மணி அண்ணாச்சியின் வாழ்வியலை ஒரு கருத்துச் சித்திரமாக டாக்டர் ராமச்சந்திரன் முகநூலில் வரைந்திருந்தார். இந்நிகழ்வு உண்மையில் ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.
சரஸ்வதி, சாந்தி, தாமரை பத்திரிகைகள் தமிழ்ச் சூழலில் உருவாக்கிக் கொண்டிருந்த முற்போக்கு முகாம், ஜீவாவின் பெருமுயற்சியில் தோன்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், உலகத்தமிழ் மாநாடுகள் ஆகிய சூழல்கள் விஞ்ஞான நூல் மொழிபெயர்ப்பாளராகவும், விஞ்ஞான நூலாசிரியாகவும், மார்க்சிய அறிஞராகவும் விளங்கிய பேராசிரியர் நாவாவை நாட்டார் இலக்கியம், சமூக வரலாறு, மானுடவியல், இலக்கியம், பண்பாடு என்னும் புதிய பரப்புகளுக்கு அழைத்துச் சென்றன. பேராசிரியர் நாவா விஞ்ஞான ஆய்வு முறையியலைக் கைக்கொண்ட அறிஞராக மலர்கின்றார். நெல்லை ஆய்வுக்குழு, ‘ஆராய்ச்சி‘ பத்திரிகை என்று தமிழுலகில் புதுப்பாதை சமைக்கின்றார் நாவா. இந்த அத்தியாயம் 1960களில் துவங்கிற்று.
மாணவப் பருவத்திலேயே கம்யூனிச அரசியல் ஆட்கொள்ளவே, கட்சி அரசியலில் நாட்டம் மிகுந்து நின்ற மணி அண்ணாச்சியை நன்கு உணர்ந்து கொண்ட அப்போதைய நெல்லை மாவட்ட கட்சி செயலாளர் தோழர் ப.மாணிக்கம், அவருக்கான இடம் நேரடி அரசியல் அல்ல, மாறாக அறிவுத்துறைதான் ஏற்ற இடம் என்று ஆற்றுப்படுத்தி, பேராசிரியர் நாவாவின் ஆய்வுப் பட்டறைக்கு வழிநடத்திச் சென்றார். அக்கணம் முதல் பேராசிரியர் நாவாவின் தலைமாணாக்கராய் ஆய்வு வாழ்க்கையைத் தன் வாழ்வியலாக மாற்றிக்கொண்டார் மணி அண்ணாச்சி.
தன் வளர்ச்சிக்கு முன் நிபந்தனையாக தன்னைச் சுற்றிலும் வளர்ச்சி இருந்தாக வேண்டும் என்பதில் பேராசிரியர் நாவா உறுதியாக இருந்தார். எனவே மணி அண்ணாச்சியைப் போலவே வெ.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தோதாத்ரி, டாக்டர் தி.சு.நடராசன், எஸ்.எஸ்.தியாகராஜன், ஆ.சுப்ரமணியன், மே.து.ராசுகுமார், பொன்னீலன், கா.சுப்ரமணியன், புலவர் மங்கை, டாக்டர் முத்துமோகன், செந்தீ நடராசன், சி.சொக்கலிங்கம், டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் ஸ்டீபன் ஆகியோரும் பேராசிரியரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே.
பேராசிரியரின் மாணாக்கர்கள் எல்லோருமே அவரவர் துறைகளில் பிரகாசிக்கக் கூடியவர்கள். பேராசிரியர் நாவா குறித்து ஆய்வு செய்த டாக்டர் இரா.காமராசு பேராசிரியர் நாவாவின் மாணாக்கர்கள் நாவா சிந்தனைப் பள்ளியாகப் பரிணமித்து தமிழ் உலகில் வேர்பரப்பி நிற்பதைத் தன் ஆய்வேட்டில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருப்பார்.
மணி அண்ணாச்சியின் படிப்பு புலவர் பட்டயப் படிப்பு. 1967 முதல் 2001 வரை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆனால் அவர் ஈடுபட்ட துறைகள் என்று எடுத்தால், தமிழ் இலக்கியத் துறைக்கு அப்பால் நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, பொருளாயதப் பண்பாடு, தமிழ்ச் சமூக வரலாறு, தமிழ்க் கிறித்தவ வரலாறு என பல துறைகளிலும் காலூன்றி நிற்பவர்.
ஆய்வு என்பதை அறைக்குள் நடத்தி முடிக்கும் உலகில் தன் ஆய்வுகளை பேராசிரியர் நாவா வழியில் தீவிரமான களப்பணிகளில் பட்டை தீட்டிக் கொண்டுவருபவர். அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் மிகப் பரந்துபட்ட அறிவுத் தேர்ச்சியும், மிக விரிந்துபட்ட களக் கண்டுபிடிப்புகளும் ஊடாடி நிற்பதைக் காணலாம். அவர் எழுதியுள்ள இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் அனைத்திலும் நுண்மான் நுழைபுலம் இயல்பாகவே இசைந்து நிற்கும். அறிவார்ந்த விவாதங்கள் நிரம்பி நிற்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் சார்பு அடிநாதமாய் இசைந்திருக்கும்.
‘என் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்ற தமிழ் மரபைத் தன் மரபாக்கிக் கொண்டவர் மணி அண்ணாச்சி. பட்டங்களையோ, பதவிகளையோ தேடிப் போனவரும் இல்லை. சில நேரங்களில் தேடி வந்த கௌரவங்களைக் கூட கண்ணியமாக மறுதலித்தவர். ஓரிடத்தில் பாராட்டுப் பத்திரமும், பணமுடிப்பும் கிட்டியபோது, பணமுடிப்பைப் பக்குவமாக அந்த இயக்கத்துக்கே கொடுத்துவிட்டு வெறும் கையோடு வந்தவர்.
எந்தப் படாடோபமும் இல்லாமல் ஆய்வுப் பணியைச் செய்கிறார் என்று சொல்லி நிறுத்த முடியாது. பேராசிரியர் நாவாவைப் போன்றே தன்னைச் சுற்றிலும் பக்கக் கன்றுகளைக் காலந்தோறும் வளர்த்து வருபவர். என்னுடைய ஆசான் என்று உரிமை கொண்டாடும் அறிவுப் பிள்ளைகள் அவருக்கு ஏராளம் உண்டு நம் தமிழகத்தில்.
தான் தொட்ட துறைகளில் துறைபோகிய அறிஞராக வளர்ந்து நின்ற நிலையில் 2012ல் திருச்சி மாநாட்டில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். அறிவுத் துறையில் சாதனைகள் செய்த அவர் பெருமன்ற அமைப்பிலும் ஆற்றலோடு இயங்கத் தொடங்கிய வேளையில் அவருடைய வேகத்துக்கு தடை போட்டதுபோல ஒரு விபத்து நேரிட்டது. ஆனாலும் தனக்கு நேரிட்ட எதிர்மறையை நேர்மறையாக்கிக் கொண்டு அறிவுலகத்துக்கு அன்றாடம் பங்களிப்புகளைச் செய்து கொண்டேயிருக்கிறார்.
அவருடைய ஒரு கட்டுரையைப் படித்தாலோ, அவருடைய ஒரு உரையை நீங்கள் செவிமடுத்தாலோ, அவரிடம் நீங்கள் ஓய்வாக உரையாடினாலோ, உங்களை அறியாமலேயே அவர் பரப்பும் அறிவுச் சூழலில் நீங்கள் ஆகர்ஷிக்கப்பட்டு விடுவீர்கள். அவரிடமிருந்து நீங்கள் விடைபெற்று வெளியே வரும்போது குறைந்தது ஒரு புதிய விஷயமாவது உங்கள் சிந்தனையில் சிறைப்பட்டிருக்கும். அவர் பேச்சினூடே வெளிப்படும் ஏதேனும் நகைச்சுவை உங்கள் உதடுகளில் புன்முறுவலைப் பூக்க வைக்கும்.
இத்தகைய அறிஞருக்கு இன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிக்கிறது. இது தமிழுக்கு மிகவும் மகிழ்வான தருணம். பேராசிரியர் நாவா வாழ்ந்த காலத்தில் அவருடைய பேராளுமையைக் கண்டு கொள்ளவில்லை. அவர் மறைவுக்குப் பின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்த பின்னரும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் கண்டுகொள்ள மறுத்தன.
ஆனால் இன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்யும் செயற்கரிய செயலால் உண்மையில் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறது. எனவேதான் இது தமிழுக்கு மிகவும் மகிழ்வான தருணம் என்று குறிப்பிட்டேன்.
தமிழ்ப் பல்கலைக் கழகம் மணி அண்ணாச்சிக்கு டாக்டர் பட்டம்தான் கொடுக்கப் போகிறது. ஆனால் முகநூல் பக்கங்களிலும், பத்திரிகைகளிலும் மணி அண்ணாச்சிக்குக் கிடைத்து வரும் புகழாரங்களைப் பார்க்கும்போது, அண்ணாச்சிக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது போன்ற உணர்வு நெஞ்சத்தை நிறைக்கிறது.
அன்பான மணி அண்ணாச்சிக்கு நெஞ்சம் நிறைந்த நல்வணக்கங்களும், நல்வாழ்த்துக்களும்!
- எஸ்.கே.கங்கா