(சென்ற இதழின் தொடர்ச்சி...)

1967 இலிருந்து 77 வரையிலான பத்தாண்டு கால ஆட்சியில் ஒடுக்கப்பட்டோரின் நலன் காக்கும் அரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு நல்ல பெரும்பான்மை கொண்ட கட்சியாகவும் சட்ட மன்றத்தில் தி.மு.க. விளங்கியது.

ஆயினும் தி.மு.க.வுக்கு எதிரான கருத்து நிலையும் வளரத் தொடங்கியது. செருக்குடன் கூடிய அதிகாரத்தன்மை, ஆளும் கட்சியிடம் வெளிப் படுவதாக மக்களில் ஒருசாரார் எண்ணத் தொடங்கினர். சமூக நீதிக்கான செயல்பாடுகளில் சமச்சீர்தன்மை இன்றி, பின்தங்கிய வகுப்பினரில், உயர்மட்டத்தினரே அதன் பயன்களை நுகர்கிறார்கள் என்ற முணு முணுப்பும் எழத் தொடங்கியது.

mgr with school childrenமிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும் நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற வேண்டு கோள்களும் எழுந்தன. மேலும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோர் மீது, கையூட்டு வாங்குதல், உறவினர்களுக்குச் சலுகை வழங்குதல் ஆகியன நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

உள்ளூர் அளவிலும் மாவட்ட அளவிலும் கட்சி நிர்வாகிகளின் தலையீடு அரசு நிர்வாகத்தில் இடம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி காவல்நிலையங்களில் தலையீடு நிகழ்ந்தது. அரசு ஒப்பந்தங்கள், பதவி நியமனம், அரசு நிர்வாக முடிவுகள் ஆகியனவற்றில் மாவட்டச் செயலாளர்களின் தலையீடு இருந்தது. வீராணம் ஏரியின் தண்ணீரை சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்குக் கொண்டு வரும் திட்டத்தில் சோதித் தறியாத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

***

1975-இல் கொண்டு வரப்பட்ட அவசர நிலையை உறுதிபட எதிர்த்தமைக்காக இந்திரா காந்தியால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. சர்க்காரியா என்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று. தி.மு.க ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க நிறுவப்பட்டது.

எம்.ஜி.ஆரின் தனிக்கட்சி

கட்சியின் வரவு செலவு கணக்குகளைக் கேட்டமையால் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதையடுத்து குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் இளைஞர் களும் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிதிரளலாயினர்.

தன்செல்வாக்கை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கினார். அவர் நடித்த ‘பட்டிக்காடா பட்டணமா’ (1973), ‘உரிமைக்குரல்’ (1974), ‘நேற்று இன்று நாளை’ (1975), ‘மீனவ நண்பன் (1977) என்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி, அடித்தளத் தமிழர்களிடம் அவரது செல்வாக்கை உயர்த்தின. எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதனின் பிம்பத்தை பொதுவெளியில் வளர்ப்பதில் இத்திரைப்படங்கள் துணை நின்றன.

அவர் தி.மு.க.வில் இருந்தபோதே தன்னுடைய பிம்பத்தைக் கட்சியுடன் இணைத்துக்கொள்ள வில்லை. தனித்துவமான நாயகனாகவே தன்னை அவர் வெளிப்படுத்திக் கொண்டதுடன், இயற்கைச் சீற்றங்கள், விபத்துக்களின்போது அவர் வெளிப் படையாக அறிவித்த நன்கொடைகள் வாயிலாகவும் மக்களிடையே தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.

தான் நடித்த படங்கள் வாயிலாக, உயரிய இலட்சியங்கள் கொண்டவராக தம்மை வெளிப் படுத்திக் கொண்டதில் எம்.ஜி.ஆர். வெற்றி யடைந்தார். தாம் எதிர்நோக்கியிருந்த ஒரு தலைவரின் வடிவமாகவே மக்கள் எம்.ஜி.ஆரை நோக்கினர்.

ஏ.பி. மாதூர் என்ற ஆய்வாளர் அ.இ.அ.தி.மு.க குறித்துக் குறிப்பிடும்போது, தமது தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக கேள்விகளுக்கு அப்பாற் பட்ட ஒரு தலைவராக எம்.ஜி.ஆர். விளங்கினார் என்கிறார். மேலும் அவரது சொற்களே சட்ட மாகவும், அவரது விருப்பமே கட்டளையாகவும், அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்பட்டன என்கிறார். அத்துடன் நடிகன் என்ற அவரது பிம்பமானது, ஏழைகளின் நண்பனாக அவரைப் பார்க்கச் செய்து, அவர்களது நாயகனாகக் காட்டியது என்கிறார்.

***

பொதுவாக, அ.தி.மு.க.வின் பார்வையிலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பார்வையிலும் அரசுப் பணித்துறையானது, பகையுணர்ச்சிக்குரியதாகவே விளங்கியது. கட்சி அல்லது ஆட்சியின் தவறுகள் அதிகாரவர்க்கத்தின் தவறுகளாகவே வெளிப் படுத்தப்பட்டன. அவர்களது ஆற்றல்கள் பொது மக்கள் முன்பு, குறைத்தே மதிப்பிடப்பட்டன. அரசுச் செயலகத்தின் செயல்பாடுகள் மீது குறைந்த அளவிலான நம்பிக்கையே அவருக்கு இருந்தது. கோப்புகளின் மீது அவர் எழுதும் குறிப்புகள் சிக்கலானவையாக இருந்தன. ஆராயவேண்டிய செய்திகளின் எல்லை கடந்த பேரவாவை அவை வெளிப்படுத்தின. தீர்வாகச் செயல்பாடுகளின் மீது பொறுமை குன்றியவராகவே அவர் விளங்கினார்.

***

இதே காலத்தில் பின்தங்கிய சாதியின்கட்சி என்ற அடையாளத்தை தி.மு.க. இழக்கத் தொடங்கியது. திராவிட இயக்கத்திற்குரிய சமூக சீர்திருத்தங்களை அது அறிமுகப்படுத்தியிருந்த போதும், மிகவும் பின்தங்கிய சாதியினர், ஏழைகள், அட்டவணை சாதியினர் ஆகியோரிடம் இருந்து அது விலகி நிற்பது போன்ற தோற்றம் உருவாயிற்று.

ஆனால் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் சாதிய எல்லைகளைக் கடந்து ஏழைகளையும், பெண் களையும் ஈர்த்தது. 1977-இல் அவர் அருப்புக் கோட்டைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டி யிட்ட போது இந்நூலாசிரியர் மாவட்ட ஆட்சி யாளராகப் பணிபுரிந்துள்ளார். தேர்தல் பணியின் பொருட்டு எம்.ஜி.ஆர். அங்கு வரும்போது, அவருடனும், அவரது நெருங்கிய சகாக்களுடனும் கலந்துரையாடும் வாய்ப்பு இந்நூலாசியருக்குக் கிடைத்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகி என்ற அடிப்படையில் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமையும் அவருக்கிருந்தது. இவ்வனு பவங்களின் அடிப்படையில் அவர் பின்வரும் மதிப்பீடுகளை முன்வைத்துள்ளார்.

  • · ஏழைகளின் பக்கம் நின்று அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர் என்ற திரைப் படப் பிம்பத்தில் இருந்து வெளிவரும் முயற்சியில் முதல் இரண்டாண்டுகள் ஈடுபட்டார்.
  • · பின்னர் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்ற பாத்திரத்தை வகிக்க அவர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார்.
  • · கிராமப்புற மக்கள் அவர்மீது அளவு கடந்த மதிப்புக் கொண்டிருந்தார்கள்.
  • · உரியநேரம் கடந்து அவர் பொதுக்கூட்டங் களுக்கு வந்தபோதிலும் 8000இல் இருந்து 10,000 வரையிலான மக்கள் கூட்டம் அவரது வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தது.
  • · அவர் முதலமைச்சரான பின்னர், அம் மாவட்டத்திற்கு வரும்போது ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்.
  • · வறுமையை அனுபவித்தவர் என்ற முறையில் ஏழைகளைக் குறித்து அவர் சிந்தித்தார்.

***

தி.மு.க.வின் பரவலான பத்திரிகைப் பலத்திற்கு முன் அ.தி.மு.கவின். ‘அண்ணா’ நாளேட்டால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொது மேடைப் பேச்சாளி என்ற முறையில் எம்.ஜி.ஆரால் கருணாநிதிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இக்குறைபாடுகளைத் தாம் நடித்த திரைப்படங்களின் வாயிலாக அவர் ஈடுசெய்துகொண்டார்.

அ.தி.மு.க. கட்சியின் அமைப்பானது தி.மு.க. வுடன் ஒப்பிடும்போது நெகிழ்ச்சியான தன்மை கொண்டதாகவே இருந்தது. எம்.ஜி.ஆருடன் நெருக்கம் கொண்டிருந்த அமைச்சர்கள் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினர். முதலமைச்சரின் அலுவலகமே முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது. ஜெயலலிதாவின் ஆட்சியிலும் இந்நிலை தொடர்ந்தது.

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடா? ஏழைகளின் முன்னேற்றமா? என்ற பிரச்சினையில் எம்.ஜி.ஆர். ஏழைகளின் முன்னேற்றம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இவ்வகையில் பின்தங்கிய சாதியினரின் நலனைவிட ஏழைகளின் நலனையே முன்நிறுத்தினார்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார நிலையை இணைப்பதாக 1979-இல் அவர் அறிவித்தார். சாதி அமைப்புகள் தெருவில் இறங்கி இதற்கு எதிராகப் போராடியதும் அவர் தம் அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். அத்துடன் பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார்.

உழவர் போராட்டம்

அ.தி.மு.க. ஆட்சியின் போது பின்வரும் வேண்டு கோள்களை முன்வைத்து உழவர் போராட்டங்கள் நிகழலாயின.

  • · நெல் கொள்முதல் விலையை உயர்த்துதல்
  • · வேளாண்மைக்கான மின்கட்டணத்தைக் குறைத்தல்
  • · வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தல்

இவற்றுள் பலவற்றை ஏற்றுக்கொண்டதுடன் பெருவிவசாயிகள், சிறுவிவசாயிகள் எனப் பாகு படுத்தி, போராடியவர்களிடம் பிளவை ஏற்படுத்தினார்.

நலிந்தோர் நலம்

1977இல் இருந்து 1987 வரையிலான காலத்தில் நலிந்தோரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திட்டங்கள் முன்னுரிமை பெற்றன. வேளாண்மை கால்நடை வளர்ப்பு, தொழில் வளர்ச்சி என்பன புறக்கணிப்புக்கு ஆளாயின. பெண்களுக்கும் வறியவர்களுக்கும் உதவும் வகையிலான திட்டங்கள் அறிமுகமாயின.

சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்

1980இல் இருந்து 1985 வரையிலான காலத்தில், தொழில்நுட்பக் கல்வி வழங்குதலை விரிவுபடுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டன. இதை எதிர்கொள்ளும் வகையில், கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் சுயநிதிக் கல்வி நிறுவனங்களை நிறுவ அனுமதி வழங்கின.

பின்னர், கலை அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் விரிவடைந்தன. தொடக்கத்தில் அரசுப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்திருந்த இக்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாக மாறின.

இவை நிறுவுவதற்கான நிலம், மூலதனம், உள் கட்டமைப்பு என்பனவற்றில், தொடக்கத்தில் சிலர் முதலீடு செய்தனர். இவர்களுள் சிலர் அரசியல் வாதிகளாக இருந்தனர். இன்று தமிழ்நாட்டில் 600 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுள் பெரும் பாலானவை முன்னாள், இன்னாள் அரசியல்வாதி களால் நடத்தப்படுபவை. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், செயல்படும் பொறியியல் கல்லூரி களின் எண்ணிக்கையில் 2008-2009ஆம் ஆண்டில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. வழங்கப்படும் கல்வியின் தரம் வாங்கப்படும் கட்டணம் தொடர்பாக சில விமர்சனங்களும் உண்டு.

1980-1981க்கும், 1990-91க்கும் இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை யானது 382இல் இருந்து 624ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் பயில்வோரின் தொகை 1.9 இலட்சத்தில் இருந்து 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகள் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் என்பன தனியார் துறையில் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளன. இவ்வளர்ச்சியானது இரண்டு வகையில் முக்கியத்துவம் கொண்டது.

முதலாவதாக, உயர்கல்வியில் மாநில அரசு முதலீடு செய்வதை விடுவித்துள்ளது. இப்பணத்தை நலத்திட்டங்களில் முதலீடு செய்ய உதவுகிறது.

இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெரும் பாலும் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்களாகவோ, அரசியல்வாதிகளாகவோ உள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் உதவும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகவே இது அமைகிறது.

இரண்டாவதாக கிராமப்புற மக்கள் உயர்கல்வி பெற இது உதவுகிறது. அரசு வேலைவாய்ப்புக் களுக்கான நுழைவாயிலாகக் கல்வி அமைகிறது. இட ஒதுக்கீட்டு முறையானது ஏழைகள், பிற்பட்ட வகுப்பினர் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் சேர துணைநிற்கிறது. கிராம மக்களிடையே கல்வி கற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பானது தம் சாதியப் படிநிலையில் இருந்து உயர்த்திக் கொள்ள கிராமமக்களுக்கு உதவியுள்ளது. மேலும் 1981இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 54.4 விழுக்காடாக இருந்த கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 62.66 ஆக உயர்ந்துள்ளது. ஆயுட்காலம் ஆண்களுக்கு 57.4 விழுக்காடு பெண்களுக்கு 58.4 விழுக்காடு என எட்டியுள்ளது.

நண்பகல் உணவுத்திட்டம்

எம்.ஜி.ஆர். ஆட்சியின் முக்கிய சாதனையாகக் கூறப்படுவது அவர் அறிமுகம் செய்த சத்துணவுத் திட்டமாகும். இத்திட்டத்தை 1982 மார்ச் 26 அன்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் அறிவித்தார். தொடக்கத்தில் முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் என்று இது அழைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசின் நண்பகல் சத்துணவுத் திட்டம் என்று மாற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நண்பகல் சத்துணவுத் திட்டம் என்றாயிற்று. மதிய உணவுத் திட்டத்தின் நோக்கம் குறித்து எம்.ஜி.ஆரின் கூற்று அத்திட்டத்தின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சிறுவயதில் பட்டினியால் தாம் பட்ட அவதியையும், அழுகையின் வாயிலாகவே பசியுணர்வை வெளிப்படுத்தியதாகவும், அண்டை வீட்டுப் பெண் ஒருத்தி வழங்கிய குருணைக் கஞ்சி வாயிலாகவே தாம் உயிர்பிழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்று இரக்கவுணர்வு கொண்ட பெண்கள் தமக்கு வாக்களித்து, தம்மை முதல்வர் ஆக்கியுள்ளதாகவும், அவர்களது கண்ணீரைத் துடைக்கவே தாம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகள் சத்துணவைப் பெற்று, தங்களை வாழ்த்துவது பெருமைக்குரிய நிகழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின்படி 20,747 குழந்தைகள் நல மையங்களின் வாயிலாகவும், 32,470 தொடக்கப் பள்ளிகளின் வாயிலாகவும், 2 முதல் 10 வரையிலான வயதுக் குழந்தைகள் 1982, ஜுலை 1 முதல் 400 கலோரி அளவிலான சத்துணவைப் பெறலாயினர்.

சத்துணவுத் திட்டத்தின் அரசியல் தேவை

1977-இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. தமிழக ஆட்சியைப் பிடித்தது. 1977-இல் இருந்து 1980 வரையிலான காலத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழந்திருந்தது. ஜனதாக் கட்சிக்கும், பின்னர் சரண்சிங்கிற்கும் அ.தி.மு.க. மத்திய ஆட்சியில் ஆதரவு அளித்தது. மத்திய ஆட்சியில் இரண்டு அ.தி.மு.க. கட்சியினர் அமைச்சர் களாகப் பதவி வகித்தனர். சனவரி 1980-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. மிகவும் மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு மறைந்துவிட்டதாகக் கருதிய தி.மு.க. தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை அறிமுகம் செய்யும்படி காங்கிரஸ் கட்சியை வற்புறுத்தலாயிற்று.

ஏற்கனவே அலகாபாத் தொகுதியை இழந் திருந்த இந்திராகாந்திக்கு தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்பான தொகுதி ஒன்றை வழங்குவதாக வாக்களித்த எம்.ஜி.ஆர், மத்திய அரசின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று கருதி தன் வாக்குறுதியில் இருந்து பின் வாங்கியிருந்தார். இதனால் கர்நாடகத்தில் உள்ள சிக்மகளுர் தொகுதியில் போட்டியிட்டு இந்திராகாந்தி வென்றார். இதனால் ஏற்பட்ட மன வேறுபாடு, நீங்காத நிலையில் தி.மு.க.வின் வேண்டு கோளை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியை இந்திராகாந்தி கலைத்தார்.

இதன் பின்னர் மே 1980-இல் நிகழ்ந்த சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 162 தொகுதி களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டதில் 69 தொகுதி களிலேயே வெற்றி பெறமுடிந்தது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க.வுக்கு 24 உறுப்பினர்கள் இருந்தனர். அ.தி.மு.கவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. இத்தகைய அரசியல் சூழலில் தன்னுடைய வாக்கு வங்கியைக் குறிப்பாக கிராமப்புற நலிந்த பிரிவினரிடம் வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

***

1971 ஆவது ஆண்டில் கருணாநிதி மது விற்பனையை அனுமதித்தார். எம்.ஜி.ஆர் அதை விரும்பவில்லை. 1974-இல் மீண்டும் மதுவிலக்கைக் கருணாநிதி அறிமுகம் செய்தார். 1981 இல் எம்.ஜி.ஆர் மதுவிலக்கை ரத்து செய்து மது விற்பனையை அனுமதித்தார். மது உற்பத்தியாளர்களுடன் அரசு கூட்டணி வைத்திருப்பதாகக் கூறி தி.மு.க. இதை எதிர்த்தது. மக்களிடையே குறிப்பாகக் கிராமப்புற பெண்களிடம், மது விற்பனை அறிமுகம் செய்யப் பட்டதற்கு எதிரான கருத்து உருவானது.

மாநில அரசின் வருவாயில் மதுவிற்பனை முக்கிய இடத்தைப் பெற்றுவிட்ட நிலையில் மது விலக்கை நடைமுறைப்படுத்த இயலாத சூழல் உருவாகி விட்டது. மற்றொரு பக்கம் மது விற்பனை மீதான தடை நீக்கத்தை கிராமப்புறப் பெண்கள் விரும்பவில்லை.

இச்சிக்கலை எதிர்கொள்ளும் வழிமுறையாக, சத்துணவுத் திட்டம் அமைந்தது. மது விற்பனை அனுமதி வருவாய் ஈட்டித் தர, அவ்வருவாயின் ஒரு பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படும் சத்துணவுத் திட்டம் வாக்கு வங்கியை தக்கவைக்க உதவியது. இவ்வுண்மையை அவரை அடுத்து வந்த ஜெய லலிதாவும் உணர்ந்திருந்தார்.

***

சத்துணவுத் திட்டத்தின் தேவையை வலியுறுத்தும் வகையில் வேறு சில உண்மைகளும் இருந்தன. பன்னாட்டு வளர்ச்சித் தொடர்பான அமெரிக்க அமைப்பு (ஹிஷிகிமிஞி) தமிழ்நாட்டு மக்களின் சத்துணவில் இடம் பெறும் சத்துக்கள் குறித்த விரிவான ஆய்வை 1960-இன் இறுதியில் மேற்கொண்டது. இந்தியாவின் முக்கிய மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தனி மனிதனுக்கான கலோரி அளவு குறைவாக உள்ளதாக இவ் ஆய்வு வெளிப்படுத்தியது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும், வளர் இளமைப் பருவத் தினரிடமும் (13க்கும் 17க்கும் இடைப்பட்ட வயதினர்) இப்பற்றாக்குறை அதிக அளவில் காணப் படுவதாக இவ் ஆய்வு சுட்டிக் காட்டியது.

உலக வங்கியின் அறிக்கை ஒன்று சத்துணவுப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப் படுவதாகக் குறிப்பிட்டது.

அத்துடன் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சத்துணவுத் திட்டம் தொடர்பாக சில மதிப்பீடுகளையும் வைத்தது.

இச் செய்திகளுடன் உலக அரங்கில் இது போல் உருவான திட்டங்கள் குறித்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் செயல்படும் இதனையத்த திட்டங் களையும் நூலாசிரியர் அறிமுகம் செய்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர், காந்தியவாதி, பகுத்தறிவுவாதி, இறை மறுப்பாளர் என்ற அடையாளங்களைக் கொண்ட கே.திரவியம் அரசின் தலைமைச் செயலாளராக இருந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் விரிவாக இந்நூல் குறிப்பிடுகிறது.

கடந்த 35 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுவது குறித்த கல்விப் புல இதழ்களின் மதிப்பீட்டையும் இத்திட்டம் செயல்படும் முறை குறித்த நுணுக்கமான செய்திகளையும் இந்நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

சமூக நலத்திட்டம் ஒன்றின் பின்னால் இடம் பெற்றுள்ள அரசியல் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வை மேற்கொள்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

- தொடரும்

Pin It