என்னால் எதுவும் முடியும் என்று திடமாக நினைப்பவள் பெண். அவள் நினைப்பது நடக்கிறதோ இல்லையோ அது இரண்டாம் பட்சம். அவளது நினைப்பு பிழைப்பைக்  கெடுப்பதில்லை. முயற்சி செய்வதற்கு முன்பே முடியும் என்று சொல்லிக்கொள்ள திராணி வேண்டுமே. ஆகவேதான் அவளது முயற்சி திருவினையாக்குகிறது.

பாவப்பட்ட ஜென்மம் ஆண்தான். முடியுமா என்னால் என்ற சந்தேகத்தோடு செயல்படுபவன். இந்த சந்தேகம்தான் அவன் பிழைப்பைக்  கெடுப்பது. அத்தோடு நில்லாமல், அவனை குட்டிச்சுவர் ஆக்குவதும், அவனை பாழுங்கிணற்றில் தள்ளுவதும் அவனோடு குடி கொண்டுள்ள இந்த சந்தேகம்தான்.

ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா? இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் தேடி உலக இலக்கியம் முழுதும் அலைந்து திரிந்தாலும் பதில் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் கிடைக்கிறது. பெண் இன்றி ஆண் இல்லை. ஆண் இன்றி பெண் இல்லை. ஜாடிக்கு ஏற்ற மூடி. மூடிக்கு ஏற்ற ஜாடி. ஜாடிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? அது ரகசியம்... பரம ரகசியம். சொல்ல இயலாது.greek artஅந்த ரகசியத்தை போட்டு உடைத்தாள் ஒரு பெண். ஆண்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் போர் -- அவனது பராக்கிரமச் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் போர்-- பெண் நினைத்தால் அந்தப் போரையே நிறுத்திவிட்டு அமைதியை நிலை நாட்ட முடியும். அவளுக்குத்தான் நினைப்பு பிழைப்பை கெடுப்பதில்லையே. அவளால் முடியாதது என்று ஏதும் இல்லையே!

தன்னிடம் இல்லாதது அவளிடம் இருப்பதால் அவளையே எஜமானியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆண் தள்ளப்படுகிறான். அவள் சொல்வதே  சட்டம். அதுவே அரசகட்டளையாகவும் ஆகிறது. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது மூத்தோர் வாக்கு.

பெண் சொல்லைக் கேட்டு மலையையே பிடுங்கி கடலுக்குள் வீசுபவன்தானே ஆண். அந்த தைரியம், பலம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? பெண்ணின் மேல் கொள்ளும் மையல்தான். ஈர்ப்புதான். அங்கங்கே ஹனுமான் உண்டு. அவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. கொடுத்து வைத்த ஜீவன்கள். இருந்து போகட்டும்.

ஜாடிக்குள் இருக்கும் ரகசியத்தை போட்டுடைக்கும் பெண்ணின் பெயர் லைசிஸ்ட்ரட்டா. இவளை லிசிஸ்த்ராத்தி என்றும் லிசிஸ்ட்ரேட்டா என்றும் உச்சரிப்பு விற்பன்னர்கள் கூறுகிறார்கள். நாம் சுருக்கமாக லிஸி என்றுகூட அழைக்கலாம். அழைக்கும்போதே ஜொள்ளு ஒழுகுகிறது அல்லவா! ஒழுகாதா  பின்னே! லிஸியை உருவாக்கியவரே கிண்டலும் கேலியும் நிறைந்த கிரேக்க நாடக கர்த்தா அரிஸ்டோபேன்ஸ் ஆயிற்றே.

கிரேக்க நாடகம் என்று எடுத்துக் கொண்டால் நம் மனக்காதுக்குள்ளே ரீங்கரிப்பவர்கள் ஏஸ்கைலஸ், சோபோகிளிஸ், யூரிபிடீஸ். இவர்கள் வாழ்க்கை அழுவதற்கே என்று தங்கள் நாடகங்களின் மூலம் சொன்னவர்கள். வாய் விட்டு சிரிக்கத்தான் வாழ்க்கை என்று அழுத்தம் திருத்தமாக தங்கள் நாடகங்களின் மூலம் சிரிக்க வைத்து நோய் விட்டுப்போக வைத்தவர்கள் அரிஸ்டோபேன்ஸ், மெனாண்டர். ஆனால் சோக கீதம் இசைத்தவர்களே,வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்களை விட அதிக காலம் வாழ்ந்தார்கள் என்று கிரேக்க இலக்கிய வரலாறு எழுதியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். வாய் விட்டுச் சிரித்தவர்கள் பல காலம் வாழ்ந்து இருக்கிறார்கள். சிரிக்க வைத்தவர்கள்தான் பாவம். அவர்களது நேரம். அவ்வளவுதான்.

அறுபத்து ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தவர் அரிஸ்டோபேன்ஸ் (450-385 கி.மு.) ஐம்பத்து நான்கு நாடகங்கள் இவர் எழுதி இருந்தாலும் படிக்க பார்க்க கிடைப்பது பதினொன்றேதான். எல்லாமே பெலபொனிஷியன் போர் மூண்ட பிறகுதான் அரங்கேற்றப்பட்டவை.

பெலபொனிஷியன் போர் (431-404 கி.மு.) என்பது மனித குல வரலாற்றிலேயே அதிக பிரசித்திபெற்ற ஒன்று. அந்த போரைப் பற்றி எழுதி உலகறியச்  செய்தவர் த்யூஸிடிடீஸ் (471-401 கி.மு.) என்ற கிரேக்க வரலாற்று அறிஞர்தான். கிரேக்க தேசத்தின் இரு பெரும் நகரங்களான ஏதென்ஸ், ஸ்பார்ட்டா இடையே போர். காரணம் ஏதென்ஸின் கடல்சார் வளர்ச்சியைக் கண்டு நடுநடுங்கிப்போன நிலம்சார் ஸ்பார்ட்டாவினால்தான்.

எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை. உனக்கு ஒரு கண்ணாவது போவணும் என்று சொல்லியே கொல்லும் மனித இனம். மனிதர்கள் மனிதர்கள்தானே. எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் இந்தக் கொள்கையிருந்து மாறுபடவாப் போகிறார்கள்! கண் பறிபோகும் முன்பே ஏதென்ஸ் சரணடைந்தது ஸ்பார்ட்டாவிடம். இருபத்தேழு ஆண்டு காலம் நடந்த போர் முடிவுக்கு வந்தது. சரி. அது போகட்டும். நமக்கு அதுவா முக்கியம்?

முக்கியம் லிஸி என்கிற லிசிஸ்ட்ரேட்டாதான். அவளை உருவாக்கி உயிர் கொடுத்து அரிஸ்டோபேன்ஸ்தான். இத்தனை ஆண்டுகள் ஓடியும் - அவள் அரங்கேறிய ஆண்டு 411 கி.மு. - அடேங்கப்பா! கி.மு.வில் ஒரு 411 ... கி.பி.யில் ஒரு 2023. இரண்டும் சேர்த்து 2434. இத்தனை ஆண்டுகளாக அவள் உயிரோடு இருக்கிறாளே! எல்லாம் கொடுப்பினைதான். உலகெங்கும் நடத்தப்படும் நாடகம்தான் லிசிஸ்ட்ரேட்டா.

aristophanesபெலபொனிஷியன் போர் ஆரம்பித்து இருபது ஆண்டுகள் ஓடி விட்டன. போர் நிற்பதாய் தெரியவில்லை. ஏதென்ஸ் போர் வீரர்களும் ஸ்பார்ட்டா போர் வீரர்களும் ஒருவர் மண்டையை மற்றவர் பிளந்து மடிகிறார்கள். தினம் தினம் செத்தவர்கள்  தொகை கூடிக்கொண்டே போகிறது. வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் தவிர மற்ற எல்லா ஆண்களும் போருக்குப் போகிறார்கள். வீட்டிற்கு ஒரு ஆள் அல்ல. வீட்டிலுள்ள ஆண்கள் அனைவருமே கேடயம் வாளோடு போர்க்களம் புகுந்துவிட்டனர். திருமணம் ஆகாதவர்களுக்கு அதிக பிரச்சினை இல்லை. ஆனவர்கள் அடிக்கடி  ஓடிவந்து பிள்ளைகளை பார்த்துவிட்டுச் செல்லும் சாக்கில் மனைவியையும் சின்ன வீட்டையும் கவனித்துவிட்டுச் சென்றார்கள். இப்படி அடிக்கடி வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்களே ஒழிய போர் நிறுத்தம் செய்வதாகத் தெரியவில்லை.

இந்த சமயத்தில்தான் அரிஸ்டோபேன்ஸ்க்கு மண்டையில் ஒரு ஒளிவிளக்கு தோன்றியிருக்க வேண்டும். போரை நிறுத்த வழி ஒன்றைக் கண்டு பிடித்தார். கிண்டலும் கேலியும் அவருக்கு  கை வந்த கலையாகப் போகவே, அவர் லிசிஸ்ட்ரேட்டா என்ற பெரும் கதாபாத்திரத்தை உருவாக்கினார். உலக நாடக வரலாற்றில் அவளுக்கு நிகர் அவளே. ஏன் அப்படின்னு கேட்டா, பெண்கள் வேலை நிறுத்தம் என்ற ஒன்றை ஆரம்பித்து வைத்து,  பெண்கள் ஒன்று சேர்ந்தால்  போரையே நிறுத்திக் காட்டமுடியும் என்றும் நிரூபித்தார்.

எக்காரணம் கொண்டும் போர் கூடாது, எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் அரிஸ்டோபேன்ஸ் சொல்ல வந்த செய்தி. இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டுமே. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நாடகமாக எழுதி, அதை மேடை ஏற்றி (411 கி.மு.) மக்களை சிந்திக்க வைத்தார். தான் படைத்த லிசிஸ்த்ராத்தி மூலம் போர் அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

லிசிஸ்ட்ரேட்டாவை என்ன செய்ய வைத்தார்? முதலில் ஏதென்ஸ் நகரப் பெண்களையும் ஸ்பார்ட்டா நகரப் பெண்களையும் அழைத்து, ஒன்று கூட்டி ஒரு கலந்தாய்வுக் கூட்டம் போட்டாள். “நமக்கு குடும்பம்தான் முக்கியம். கணவர், பிள்ளைகள் என்று சந்தோஷமாக வாழ வேண்டும். அதற்கு ஒரே வழி இருபது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் இந்த பாழாய்ப்போன போரை முடிவுக்கு கொண்டு வருவதுதான். நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால் போரை நிறுத்திவிடலாம். நம்மால் முடியும் என்று நம்பிக்கை கொள்வோம்,” என்று முழங்கினாள்.

இரு தரப்புப் பெண்களும் லிசிஸ்ட்ரேட்டா சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்தனர். ஆர்வம் காட்டினர். “நடு ராத்திரியில் கொஞ்சிக் குலாவ வரும் கணவன்மார்களின் வேண்டுகோளை நிராகரியுங்கள். போரை ஒரேயடியாக நிறுத்திவிட்டு வந்தால்தான் ஒத்துழைக்க முடியும் என்று நிபந்தனை போடுங்கள்,” என்று ஆக வேண்டிய காரியத்தை லிசிஸ்ட்ரேட்டா வலியுறுத்தியபோது, சில இளம் மனைவிகள் மட்டும் தலை சொறிந்தனர்.

“அவுங்க வர்றதே ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைதான். பாவம்! காய்ந்த மாடு கம்பங் கொல்லையிலே விழற மாதிரி விழறாங்க. அந்த கொஞ்ச நேர சுகத்திலேயும் இந்த அம்மா மண்ணை வாரிப் போடும் போல இருக்கே,” என்று நினைத்தார்கள் போலும்.

வரப்போகின்ற வேலை நிறுத்தத்திலிருந்து தங்களை பிய்த்துக்கொண்டு ஓட பலர் சாக்கு போக்குகளைச் சொன்னாலும் லிசிஸ்ட்ரேட்டா யாரையும் விடுவதாக இல்லை. போரை நிறுத்தி கணவனோடு வாழ்ந்து அனுதினமும் சுகம் துய்க்க வேறு வழியே இல்லை என்று சொல்லி, நாம் அனைவருமே கூட்டு சேர்ந்தால்தான் வழி பிறக்கும் என்றும் சொல்லி ‘மனைவிகளின் முதல் செக்ஸ் ஸ்ட்ரைக்’ என்ற ஒன்றை ஆரம்பித்து வைத்தாள்.

போர் வீரர்களுக்கு மனைவிகள் செய்வதெல்லாம் வினோதமாக இருந்தது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு  மாதிரிதான். எல்லோரும் ஒரே மாதிரி அல்ல என்பதை இந்த நாடகத்தைப் படித்தவர்கள் பார்த்தவர்கள் அறிவார்கள். மனம் உடைந்து போன கணவர்கள், வெளியில் புலியாக இருந்தாலும் வீட்டிலே எலியாக மாறவேண்டி இருந்தது. அதுவும் சுண்டெலியாக.

போரை நிறுத்தியே ஆக வேண்டும் போல இருக்கிறதே என்று ஆண்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, பெண்கள் ஒன்று கூடி நாட்டு கஜானாவையே முற்றுகையிடுகிறார்கள். கஜானாவிலிருந்து ஒரு தம்பிடி கூட வெளியே போகாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். ஆஹா! அப்படி போடுடா அரிவாளைன்னானாம்.

பாவம் போர்வீரர்கள். கஜானாவிற்கு  வேறு பூட்டு போட்டுவிட்டால், சாப்பாடு எங்கிருந்து வரும்? இரு வேறு பசியால் வாடிய வீரர்கள் வேற வழியின்றி சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டு வெள்ளைக்கொடி காட்டிக் கொண்டார்கள். காரண காரிய கர்த்தா  லிசிஸ்ட்ரேட்டாதான். மனித உயிர்கள் பலியாவதை நிறுத்திவிட்டாள். இந்த புரட்சிக்காரி செய்த சாகசங்களைப் பற்றிக் கூறுவதே அரிஸ்டோபேன்ஸ் எழுதிய லிசிஸ்ட்ரேட்டா.

போரினால் ஏற்படும் உயிரிழப்புகளையும், அதனால் உயிரிழந்தோரைச் சார்ந்தவர்கள் சந்திக்கும் கொடூரங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறது இந்த நாடகம். கணவர்களின் தார்மீக உரிமையையே பறித்துக்கொண்டு அவர்களை நல்வழிப் படுத்துவதே நாடகத்தின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற பெண்கள் கையில் எடுக்கும் கூர்மையான அஹிம்சை ஆயுதம்தான் செக்ஸ். இதுவும் ஒரு வகையில் செக்ஸ் டார்ச்சர்தானே. ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். இதைச் சொல்ல அரிஸ்டோபேன்ஸ் அமைத்திருக்கும் காட்சிகள் சற்றே நாகரிகமற்றவையாக சிலருக்கு தெரியலாம். உபயோகப்படுத்தியிருக்கும் மொழி ‘நீச பாஷை’ என்று கூட பலர் சொல்ல முன் வரலாம். ஆனால் கடவுளை கடவுள்  என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்! கடவுளைப் பிடிக்காதவர்கள் பலருண்டு அல்லவே! ஏன். உலகின் முதல் மொழியாம் தமிழைக் கற்காமலே, அதன் வளத்தை மட்டும் கேட்டறிந்த அறிஞர்கள் பலர் பொறாமையினாலே தமிழ் ஒரு நீச பாஷை என்று சொல்லவில்லையா? அரிஸ்டோபேன்ஸ் எடுத்துக் கொண்ட  பொருளை வேறு எப்படிச்  சொல்ல முடியும்?

அரிஸ்டோபேன்ஸ் முதுகுத்தண்டு நிமிர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே! இல்லையென்றால் கிண்டலும் கேலியும் நிறைந்த வசனங்களை உபயோகித்திருக்க முடியுமா? ஆபாசமானது எதையும் நாசூக்காக சொல்லத் தெரிந்தவர் ஆயிற்றே. அதன் அர்த்தத்தை கண்டு பிடித்த அந்தக் கால வாசகர்களும் நாடக விரும்பிகளும் வயிறு வெடிக்கச் சிரித்திருக்கின்றனர். ஆங்கிலத்திலும், வேறு பல உலக மொழிகளிலும் இந்த நாடகம் பலரால் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்கூறும் நல்லுலகில் கிடைக்கிறதா என்பதைத் தோண்டித்தான் பார்க்க வேண்டும்.

மக்களை சிரிக்க வைத்துப் பார்த்து சந்தோஷம் அடைந்த அரிஸ்டோபேன்ஸ் அரசியல் நையாண்டியை இந்த நாடகத்தோடு நிறுத்திக் கொண்டார். அதனால் ஆவப்போவது ஒன்றுமில்லை என்று நினைத்தாரோ என்னவோ! நாய் வாலை நிமிர்த்தும் முயற்சி இது என்று கைவிட்டு விட்டாரோ!

நாடகத்தைப் பார்த்து சிரித்துவிட்டு வீட்டுக்குப் போய் சிந்தித்த சில அரசியல்வாதிகள் பொருள் உணர்ந்தனர். போரை நிறுத்த ஒரு வழி சொன்னவருக்கு பரிசு கொடுத்து பாராட்டாமல், பிரயோகப் படுத்தப்பட்டிருக்கும் ஆபாச வார்த்தைகளை விட அரசியல் நையாண்டியே அதிகமாக காணப்படுகிறது என்று குற்றம் சுமத்தினர். அரிஸ்டோபேன்ஸ் நீதி மன்றம் ஏற வேண்டி இருந்தது. பொது மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவால் அரிஸ்டோபேன்ஸ் உயிர் தப்பினாராம்.

1910-ஆம் ஆண்டு லிசிஸ்ட்ரேட்டா நாடகம் லண்டன் லிட்டில் தியேட்டர் கம்பெனியால் நடிக்கப்பட்டது, பலான காட்சிகளுக்கெல்லாம் கல்தா கொடுத்துவிட்டு.  இருந்தும் மக்கள் முன்னால் நடிக்கப் படவேண்டிய நாடகம் அல்ல இது என்று தடை செய்யப்பட்டிருக்கிறது. 1934-ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் நடிக்கப்பட்டது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தடை விதித்திருக்கிறது.

கிரேக்க நாட்டில் மட்டுமே வெட்டப்படாமல் வெட்கப்படாமல் நடிக்கப்பட்ட இந்த நாடகத்திற்கு, 1942-இல் ஆப்பு வைத்து விட்டது  ஹிட்லரின் ஆட்சி. கிரேக்க நாடு அந்த புண்ணியவானின் ஆட்சியின் கீழ் வந்ததே காரணம். இன்றோ ஆங்கில மொழியாக்கத்தில் தடையின்றி பார்க்கப்படுகிறது. படிக்கப்படுகிறது. எல்லாம் கலி காலம்தான்.

மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்களுக்கு ஓவியம் தீட்டிய ஆப்ரே வின்சென்ட் பீர்ட்ச்லி 1896-ஆம் ஆண்டு இந்த கிரேக்க நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு பலான ஓவியங்கள் பல வரைந்து கொடுத்தார் என்கிறது ஒரு செய்தி. அதே ஆண்டு அது கிடைத்தற்கரிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் பின் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழ்ந்த அந்த ஓவியர் (காச நோயினால் பாதிக்கப்பட்டு இருபத்து ஆறு வயதிலேயே இறந்தவர்) இறப்பதற்கு சற்று முன்னர் தனது புத்தக வெளியீட்டாளருக்கு பிரதிகள் அனைத்தும் எரிக்கப் படவேண்டும் என்று ஒரு விண்ணப்பக்  கடிதம் எழுதியிருந்தாராம். நடக்கிற காரியமா அது!

- ராஜ்ஜா