"அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் கல்வித்தரம் குறைந்துபோனதாகவும் அதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்ததாக உங்கள்மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?"

ஒரு நபர் விசாரணைக் கமிஷனின் அதிகாரமான குரலைக் கேட்டதும் நான் பயந்து போய் கொஞ்சநேரம் மவுனமாக நின்றுகொண்டிருந்தேன்.

"இப்படி மவுனம் சாதிப்பதால் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திலிருந்து தப்பிவிடலாம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். முதலில் உங்களைப்பற்றி இந்த விசாரணைக் கமிஷனுக்கு சொல்லுங்கள்." கமிஷன் எச்சரிக்கை செய்தது.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் கல்வித்தரம் குறைந்து போய்விட்டதாகவும் அதற்குக் காரணமாக இருந்தவர்களை விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என்றும் கல்வியாளர்கள் அரசுக்கு புகார் கொடுத்திருந்தனர். புகார்மீது விசாரணை நடத்தி அறிக்கை கொடுப்பதற்காக ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ்.அதிகாரியைக் கொண்ட ஒரு நபர் கமிஷனை தமிழ்நாட்டு அரசாங்கம் நியமனம் செய்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் நானும் ஒருவன். கமிஷன் முன்பு ஆஜராகி நின்றபோது என்னைப் பார்த்து விசாரணைக்கமிஷன் அதிகாரி இப்படி அதிகாரமாகக் கேட்டார்.

"அய்யா, என்னுடைய பெயர் திரு.மு.குருமூர்த்தி. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு கல்விஅதிகாரியாக இருந்திருக்கிறேன். நான் கல்வி அதிகாரியாக இருந்தபோது வலைஞர் சேரி என்ற குக்கிராமத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்."

கமிஷன் இடைமறித்தது.

"ஒரு ஆரம்பப்பள்ளியை ஆரம்பித்ததில் கமிஷன் குற்றம் காணவில்லை. வெறும் முப்பந்தைந்து மாணவர்களும் ஒரே ஒரு ஆசிரியரும் இருக்கும்படியாக ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இதனால் அந்தப்பள்ளிக்கூடத்தின் கல்வித்தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கல்வித்தரம் கெட்டுப்போனதற்கு நீங்களும் உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். இதுபோன்றதொரு பள்ளிக்கூடம் வேண்டுமென்று யாராவது உங்களைக்கேட்டார்களா?"

"ஆமாம் அய்யா. வலைஞர் சேரி என்ற கிராமத்தின் இளைஞர் மன்ற செயலாளர் சிவலிங்கம் என்பவர் என்னிடம் வந்து கேட்டார். இரண்டு வருடங்களாக வலைஞர் சேரிக்கு ஒரு தொடக்கப்பள்ளி வேண்டுமென்று மனு கொடுத்ததாகவும் என்னுடைய அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை யென்றும் சொன்னார். என்னுடைய பதவிக்காலத்திலாவது வலைஞர்சேரி கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கைகூப்பி கேட்டுக்கொண்டார்."

"பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும்போது ஒரு அதிகாரி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று மூத்த அதிகாரிகள் உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்கள் இல்லையா?" கமிஷன் நயமாக கேட்டது.

"பக்கத்தில் இருந்து பார்த்தே தெரிந்துகொண்டேன் அய்யா. முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு மனுவை வாங்கிக்கொள்ளவேண்டும். படித்துப்பார்ப்பது போல் பாசாங்கு செய்யவேண்டும். ஆனால் படித்துவிடக்கூடாது. பதில்பேசாமல் தலையை மட்டும் இப்படியும் அப்படியும் ஆட்டவேண்டும். அப்புறம் பக்கத்தில் இருக்கும் பியூனிடம் மனுவைக் கொடுத்துவிடவேண்டும். மனுகொடுப்பவரை உட்காருங்கள் என்று சொல்லிவிடக்கூடாது என்பதெல்லாம் எனக்கு பாலபாடம்.."

"நீங்களும் அப்படித்தானே செய்தீர்கள்?"

"அப்படி செய்யவேண்டும் என்றுதான் அய்யா நானும் நினைத்தேன். ஆனால் வலைஞர் சேரி சிவலிங்கம் மனுவை என்னுடைய கையில் கொடுத்துவிட்டு கைகூப்பி சொன்ன விதத்தில் நான் மயங்கிப்போய் விட்டேன்."

"சிவலிங்கம் அப்படி என்ன சொன்னார்?"

"அய்யா, நாங்கள் ஏழைகள். எங்களுக்கு சாதிபலம் இல்லை. அரசியல் பலமும் இல்லை. உங்களுடைய காலத்தில் எங்கள் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க உதவி செய்தால் காலத்திற்கும் உங்களை மறக்கமாட்டோம்." என்று சொன்னார்.

"இதெல்லாம் அதிகாரிகளை மயக்குகிற வார்த்தைகள். நீங்கள் வலைஞர் சேரி சிவலிங்கம் சொன்னதை நம்பி ஏமாந்துபோய் ஒரு தரம் குறைந்த பள்ளிக்கூடத்தை உருவாக்க உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். உங்களுடைய அலுவலகத்தில் எழுத்தர் இருந்திருப்பாரே? அவர் ஏதும் ஆலோசனை ஏதும் கொடுக்கவில்லையா?"

"எழுத்தரின் பேச்சைக்கேட்காமல் அதிகாரி என்ன செய்துவிடமுடியும் அய்யா? கமிஷன் சொன்னதைத்தான் அவரும் சொன்னார். கிராமவாசிகள் அவர்களுடைய ஏழ்மையைச்சொல்லி நம்மை ஏமாற்றப்பார்ப்பார்கள். நாம் அவர்களுடைய வார்த்தைகளில் மயங்கிவிடக்கூடாது. உங்களுக்கு முன்னால் இருந்த அதிகாரி என்ன செய்தார் என்பதை ஃபைலைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதையே நீங்களும் செய்துவிடுங்கள் என்றார்."

"உங்களுடைய அலுவலக எழுத்தர் அனுபவசாலியாக இருக்கவேண்டும். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நீங்கள் அவர் சொன்னபடி செய்தீர்களா?"

"அவர் சொன்னதைத்தான் அய்யா நான் முதலில் செய்தேன். வலைஞர் சேரி கிராமவாசிகள் அவர்களுடைய கிராமத்திற்கு ஒரு ஆரம்பப்பள்ளிக்கூடம் வேண்டும் என்று கொடுத்திருந்த மனுக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு தலையணை பெரிய ஃபைல் இருந்தது. அதை முழுவதுமாக நான் படித்துப் பார்த்தேன். எனக்கு முன்னால் இருந்த அதிகாரி அவருடைய குறிப்பை எழுதியிருந்தார்."

"அதிகாரியின் கைப்படஎழுதிய குறிப்பா அது?" கமிஷன் ஆர்வத்துடன் கேட்டது.

"இல்லை அய்யா. அலுவலக எழுத்தர் எழுதியிருந்தார். அதிகாரி பச்சை மையினால் கையெழுத்துமட்டும் போட்டிருந்தார்."

"ஒரு அதிகாரி செய்யக்கூடிய அதிகபட்ச வேலையை அவர் செய்திருக்கிறார். ஃபைலில் என்ன முடிவு எழுதியிருந்தது?

"வலைஞர் சேரி கிராமத்தில் பள்ளிக்கூடம் துவங்குவதற்கு நிலம் இல்லையென்றும் அதனால் கோப்பை கிடப்பில் போடலாமென்றும் முடிவு எழுதியிருந்தார்."

"ஃபைலை கிடப்பில் போடலாம் என்றால் எதுவரை?" கமிஷன் கேட்டது.

"கோரிக்கை மனுகொடுத்த கிராமவாசிகள் அதை மறந்துபோகும் வரை" கமிஷனுக்கு புரியும்படி நான் சொன்னேன்.

"அதுதான் சரி. மனு கொடுத்தவர்கள் கொஞ்சகாலத்தில் அலுத்துப்போய்விடுவார்கள். அதன்பிறகு கஷ்டங்கள் பழகிப்போய்விடும். மனு கொடுத்ததையே மறந்து போய்விடுவார்கள். மனுவை பழைய பேப்பர்காரனிடம் போட்டு அரசாங்க வருமானத்தில் சேர்த்துவிடலாம். நீங்கள் அதைத்தானே செய்திருக்கவேண்டும்?"

"ஆமாம் நான் அதைத்தான் செய்திருக்கவேண்டும். ஆனால் வலைஞர் சேரி கிராமத்து இளைஞர் மன்ற செயலாளர் சிவலிங்கம் என்னை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார்."

"நீங்கள் சொல்லுவது நம்பும்படியாக இல்லை. எப்போதும் அதிகாரிதான் கிராமவாசிகளுக்கு சங்கடங்களை உண்டாக்குவார்," கமிஷன் என்னை வித்தியாசமாக பார்த்தது.

"வலைஞர் சேரிக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கை மனுவை முதலமைச்சருக்கும் அனுப்பிவிட்டார். மனுவை விசாரணை செய்யும்படியும், வலைஞர் சேரியில் புதிய ஆரம்பப்பள்ளி தொடங்குவது பற்றி கருத்து தெரிவிக்கும்படியும் முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து எனக்கு கடிதம் வந்தது."

"அப்படியா? உங்களுக்கு அதிலென்ன சங்கடம்? மக்கள் கொடுக்கிற கடிதத்திற்கு என்ன மரியாதையோ அதே மரியாதைதானே முதலமைச்சரிடமிருந்து வரும் கடிதத்திற்கும்.. சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்பது உங்களுக்குத்தெரியாதா?" கமிஷனின் கேள்வி யோசிக்கவைத்தது.

"அய்யா சொன்ன ஆலோசனையை நான் பலமுறை கையாண்டிருக்கிறேன். வலைஞர் சேரிக்கு புதிதாக ஆரம்பப்பள்ளி கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நேரில் போய்ப் பார்த்துவந்து அறிக்கை கொடுக்குமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்திரவு தான் எனக்கு சோதனையாகப்போய்விட்டது" நான் பணிவோடு சொன்னேன்.

"இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு சுற்றுலா மாதிரி போய்வரவேண்டியது தானே? பயணப்படி கிடைக்கும். போகுமிடங்களில் கிராமத்து ஆட்கள் கைகட்டி நிற்பார்கள். அவர்களை ஏவிவிட்டு இளநீர் சாப்பிடலாம்." கமிஷன் மலரும் நினைவுகளில் மூழ்கியது.

"என்னுடைய பதவிக்கு அதற்கெல்லாம் கொடுப்பினையில்லை அய்யா. நான் வலைஞர் சேரி கிராமத்திற்குப் போனபோது கடுமையான வெய்யில் மண்டையைப்பிளந்தது. நிழலுக்காக வலைஞர் சேரி பஞ்சாயத்துத் தலைவர் மரிக்கொழுந்துப் பிள்ளையின் தென்னந்தோப்பில் ஒதுங்கினேன். அங்கே நான் பார்த்த காட்சிதான் ஃபைலின் போக்கையே மாற்றிவிட்டது." நான் கைகூப்பி சொன்னேன்.

என்னுடைய கைகூப்பலில் கமிஷன் சந்தோஷப்பட்டிருக்கவேண்டும்.

"ஒரு தென்னந்தோப்பிற்கும், பள்ளிக்கூடத்திற்கும் என்ன சம்பந்தம். தெளிவாக சொல்லுங்கள்" கமிஷனின் குரலில் அதட்டல் தொனித்தது.

"பெரியவர்களும் சிறியவர்களும் அங்கே மும்முரமாக கீற்று முடைந்து கொண்டிருந்தார்கள். அந்த பெரிய தோப்பில் நான் நிழலுக்கு ஒதுங்கிய தென்னை மரத்திற்கு 2525 என்ற எண் கொடுத்திருந்தார்கள். தென்னந்தோப்பிற்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏரியில் சிறுவர்கள் தூண்டில்போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள் ஏரிக்கரையில் இருந்த பூக்கொல்லையில் சிறுமிகள் பூ எடுத்துக்கொண்டு இருந்தார்கள். .சிவலிங்கம் கொடுத்திருந்த மனுவில் கூட இதையெல்லாம் எழுதியிருந்தார்." நான் மூச்சிறைக்க சொல்லி முடித்தேன்.


"ஓகோ!...படிக்க வழியில்லாத சிறுபிள்ளைகள் வேலைக்குப்போவதைப் பார்த்ததும் உங்களுக்கு இரக்கம் வந்துவிட்டது. ஏமாந்து போய் புதிய பள்ளிக்கூடம் திறக்க அனுமதிக்கலாம் என்று முதலைமைச்சரின் அலுவலகத்திற்கு பதில் எழுதிப்போட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது." கமிஷன் அனுதாபப்பட்டது.

"பள்ளிக்குப்போகும் வயதுப்பிள்ளைகள் வேலைக்குப் போவதை கண்ணால் பார்த்தவுடன் நான் வேறு என்ன செய்யமுடியும் அய்யா?"


"கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்; என்று நீங்கள் படித்ததில்லையா?" கமிஷனின் குரலில் சன்னமான கோபம் தெரிந்தது.

"நான் அதை மறக்கவில்லை அய்யா. தீர விசாரிப்பதற்காக வலைஞர் சேரி கிரமத்துக்குள் போனேன். அங்கு இருந்த கோயிலுக்கு பெரியவர்களை அழைத்து கூட்டம் போட்டுப்பேசினேன். சிறு குழந்தைகள் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து செல்ல பயப்படுவதால் பள்ளிக்கூடம் போகவில்லை என்றும், கீற்றுமுடையவும், பூ எடுக்கவும் பெற்றோருடன் போய்விடுவதாகவும் என்னிடம் சொன்னார்கள். சிவலிங்கம் மனுவில் சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தது. கோயில் மண்டபத்திலேயே புதிய வகுப்பை ஆரம்பிக்கலாம் என்றும், கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏரி புறம்போக்கில் பள்ளிக்கட்டிடம் கட்டிக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன். ஏற்கனவே வலஞர் சேரி பிள்ளைகளில் வெறும் நாற்பதுபேர் மூன்றுகிலோமீட்டர் நடந்து சென்று ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்கள். அவர்களைக்கொண்டு புதிய பள்ளி துவங்கலாம் என்று சிபாரிசு செய்து முதலமைச்சர் அலுவலகத்திற்கு பதில் எழுதினேன்."

"வெறும் நாற்பது பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பது அரசுக்கு கூடுதல் செலவில்லையா?" கமிஷனின் கேள்வியில் அரசுப்பணத்தை காப்பாற்றும் அக்கறை தெரிந்தது.

"முட்டையை சிரைக்கும் வேலைக்கெல்லாம் அரசுப்பணம் போய்க்கொண்டிருப்பது கமிஷனுக்கு தெரியாமலா இருக்கும்?" சொல்லவந்த நான் வாயை அடக்கிக்கொண்டேன்.

"இல்லை அய்யா. கிராமத்து மக்கள்தொகை விவரம் என்னிடம் இருந்தது. பள்ளிக்கூடம் போகாமல் சுற்றித்திரியும் பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டேன். அடுத்த ஆண்டிலேயே முப்பது பிள்ளைகள் பள்ளியில் சேருவார்கள் என்று நான் கணக்குப்போட்டேன்."

என்னுடைய பதிலால் கமிஷன் திருப்தியடையவில்லை.

"இல்லை. மிஸ்டர் குருமூர்த்தி, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் வலைஞர் சேரி பள்ளிக்கூடம் தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது குறைந்தது நூறு பிள்ளைகளாவது அந்தப்பள்ளிக்கூடத்தில் படிக்கவேண்டும் இல்லையா? வெறும் முப்பத்தைந்து மாணவர்கள் அல்லவா அந்தப்பள்ளிக்கூடத்தில் இப்போது படிக்கிறார்கள்?"

" பத்துவருடங்கள் ஆகியும் வலைஞர் சேரி பள்ளிக்கூடத்தில் இரண்டு அறைகள்தான் இருக்கின்றன. இரண்டு ஆசிரியைகள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் அரசாங்கத்திற்கு புள்ளிவிவரம் சேகரிக்கவும், அதிகாரிகள் இடும் பணிக்காகவும் பள்ளிக்கு வரமாட்டார் என்பதையும் உங்களுடைய கேள்வியில் சேர்த்துக்கொள்ளுங்கள் அய்யா."

"மிஸ்டர், அதெல்லாம் நிர்வாக விஷயம். இந்தக்கமிஷன் அதிலெல்லாம் தலையிடவிரும்பவில்லை," கமிஷன் கோபப்பட்டது.

இதையெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தால் கமிஷனுக்கு ஆயுள்நீட்டிப்பு கிடைக்காது என்பதும், இப்போது அனுபவிக்கும் ஆள், அம்பு, சேனை சுகமெல்லாம் ஓய்ந்துபோய்விடும் என்பதும் எனக்குத் தெரியாதா என்ன?

"இரண்டுவருடங்களுக்கு முன்னால் தென்னந்தோப்பு முதலாளி வலைஞர் சேரியில் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்த விஷயத்தை நான் சொல்லிவிடுகிறேன். ஐந்து பஸ்களில் ஐநூறு மாணவர்களை அள்ளிக்கொண்டுவந்து அங்கே பள்ளிக்கூடம் நடக்கிறது இப்போது. ஒருகாலத்தில் பூவை விற்று பணமாக்க வேண்டியிருந்தது அவருக்கு. இப்போது நேரடியாக பணமாகவே விளைகிறது அந்த நிலத்தில். சுற்று வட்டாரத்து கிராமத்து மக்கள் கடன்வாங்கியாவது அவர்களுடைய பிள்ளைகளை 'வலைஞர் சேரி பாரதமாதா மெட்ரிக்குலேஷன்' பள்ளியில் சேர்த்துவிட துடிக்கிறார்கள். அரைப்பவன் அரைத்தால் அடுப்புச்சாம்பலும் மருந்தாகிப்போகும் என்ற சொலவடை வலைஞர் சேரியில் உண்மையாகிப்போயிருக்கிறது."

"அப்படியானால் வலைஞர்சேரி பள்ளிக்கூடத்தின் கல்வித்தரம் குறந்துபோனதற்கு யார்தான் காரணம்?" கமிஷன் இறுதியாகக் கேட்டது.

"அய்யா, வலைஞர் சேரி பள்ளிக்கூடத்தின் கல்வித்தரம் ஏன் குறைந்துபோனது என்பதற்கு நீங்கள் என்னை விசாரணை செய்து பயனில்லை. அதற்கு சரியான பதில் அளிப்பதற்கு வேறு ஒருவர் இருக்கிறார்."

கமிஷன் ஆர்வமுடன் கேட்டது:"யார் அவர்? சொல்லுங்கள். அவருக்கும் உடனே சம்மன் அனுப்பவேண்டும்."

நான் அமைதியாகச்சொன்னேன். "வலைஞர் சேரி கிராமத்தின் இப்போதைய பஞ்சாயத்துத்தலைவர்... தென்னந்தோப்பு உரிமையாளர்... பாரதமாதா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூடத்தின் முதலாளி... பெயர் மரிக்கொழுந்துப்பிள்ளை."


-மு.குருமூர்த்தி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It