சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான தஞ்சை இரண்டாம் சரபோஜி ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கட்டளைப்படி 1799ஆம் ஆண்டு அரியணை ஏறிய ஓர் ஆண்டிலேயே  ஆளுமையை அவர்களிடம் விட்டுவிட்டு, அவர் பெரிதும் பயன்படுத்தியது சரஸ்வதி மஹால் நூல் நிலையமும், தன்வந்திரி மருத்துவமனையும் ஆகும்.

தன்வந்திரி மஹாலில் மருத்துவ ஆய்வுகளுக்கு உறுதுணையாக ஒரு மூலிகைத் தோட்டமும் மருந்து தயாரிக்கும் ஒரு தொழிற்கூடமும் (Pharmaceutical Manufactory) அங்கு இருந்தன.  அங்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் அதன் பெயரும் மருந்து தயாரான காலமும் பதிக்கப்பட்டன.  இந்த மருந்துகள் தன்வந்திரி மஹாலில் ஒரு பகுதியான “ஒளஷதக் கொட்டடி” என்ற இடத்தில் மாத்திரை, லேகியம் மசாலா போன்ற வடிவங்களில் சேமித்து வைக்கப்பட்டு, நோயாளிகள் வந்து மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

தன்வந்திரி மஹாலில் ஆய்வு செய்த மருத்து வர்கள் கொடுத்த மருத்துவக் குறிப்புகளை வைத்துக் கொண்டு, தமிழில் எளிய பாடல்களாக ஆக்கித் தருமாறு மன்னர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த மருந்துகளின் பயன்பாடே நன்கு பரிசோதித்துப் பார்த்து அனுபவம் பெற்றவையாதலால் அனுபவ வைத்திய போகம் என்ற சரபேந்திர வைத்திய முறைகள் எனக் கூறப்பட்டது.

இம்மருத்துவ முறைகள் முன்னோரால் கை கண்டவை என்பதுடன் சரபோஜியாலும் ஆராய்ந் துணர்ந்து ஏற்றுக்கொள்ளப் பெற்றவை என்பதும் குறிக்கத்தக்கதாகும்.

“மேதினிக்கிது கைகண்டதுண்மையே,” (சுவடி 60),

“தாம் கைகண்டதுவே சரபேந்திரர் கருணையினார்

காசினியோர்க்கருளினாரே,” (சுவடி 52),

“நீதி சரபேந்திரனிதை யுணர்ந்தா ராய்ந்து

நிர்ணயித்த முறை யிதுவே” (சிரோ)

முக்கியமா யுலகோருக் குபகாரமதாய்

முதிர் வைத்திய சோதனை செய் தினியாக

சக்ரவர்த் தியிலுமு யர்ந்தசர பேந்திரன்

தம்முள்ளம் நிர்ணயித்த முறையி தாமே.  (சிரோ)

என இவ்வாறு ஒவ்வொரு மருத்துவமுறையும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.  மன்னர் இவ்வகையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தாமே முன்நின்று ஒவ்வொரு மருந்தையும் உறுதி செய் தளித்தமை மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.

தமிழில் மருத்துவப் பாடல்

தம் கால மக்களுக்கேயல்லாமல் பிற்கால மக்களுக்கும் இம்மருந்துகள் பயன்பெற வேண்டு மென்ற பரந்த மனப்பான்மையைக் கொண்ட மன்னர் இவற்றைத் தமிழில் பாடலாக அமைத்த மையை,

“சரபோசி மகரா சேந்திரன் தமிழினா லுரைக்க வென்று”

(சுவடி 60)

என இதைப் புலவர்களும் ஆங்காங்கே குறிக் கின்றனர்.

சித்த மருத்துவம்

மன்னர் சரபோஜியின் மருத்துவ முறைகள் யாவும் பழம்பெரும் சித்த மருத்துவ நூல்களில் உள்ள முறைகளேயாம்.

“துடங்கன் சரபோஜிரா சாதி ராசன்

சுகரகத்தியர் போகர்சட்டை நாதரும் சூதர்

கொங்கணவர் பிருங்கர்கரு வூரரெல் லோரும்

கூறும் வைத்திய நூலை யுணர்ந்தா ராய்ந்து.”

“பொன்னுலகோர் முனிவருல குக்காய் முந்நாள்

போதித்த வைத்தியத்தை யுணர்ந்து ணர்ந்து”

(சுவடி 57)

“சித்தர்பா லுணர்தஞ்சைச் சரபோசி மன்னர்”

(சந்நிரோக சிகிச்சை)

என இவ்வாறு பல பாடல்களிலும் சித்தர் போன்ற நல்லோர் மொழிப் பொருளை மன்னர் சரபோஜி பொன்னே போல் போற்றி ஏற்றுணர்ந்ததைப் புலவர்கள் சுட்டக் காணலாம்.

இம்மருந்துகளைத் தயாரிக்க தன்வந்திரி மஹால் மருத்துவமனைக்கு அருகில் இருந்த மூலிகைத் தோட்டத்தில் (Herbal Garden) வளரும் மூலிகைகளைச் சேகரிப்பவர்கள், சரியாக அடை யாளம் காண மற்றும் மருத்துவ நூல்களைப் படிப்பவர்களும் அறிந்துகொள்ள தாவரவியல் குறிப்புகளுடன் (with botanical notes) தொலை நோக்குடன் சரபோஜி மூன்று நூல்களை வெங்கட பெருமாள், வெங்கட நாராயண கோபால், கிருஷ்ண நாயக் ஆகிய சித்திரக்காரர்களைக் கொண்டு, 105 வண்ணச் சித்திரங்களுடன் தயாரித்திருக்கிறார்.  அவை இன்றும் புதிய சித்திரங்களைப் போல் காட்சி அளிக்கின்றன.  அரண்மனையில் இருந்த தன் வந்திரி மஹாலில் சித்தா, ஆயுர்வேதம், யூனானி மருந்துகள் நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.  இதில் ஐரோப்பிய மருத்துவர்கள் உள்பட மற்றைய உள்நாட்டு மருத்துவர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

மன்னர் சரபோஜிக்கு உடற்கூறு பற்றி அறிந்து கொள்ளும் ஆசை 1805ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து, அவர்தம் வாழ்நாள் முழுவதும் நீடித்தது.  என்றாலும் கண்நோய் குறித்து அறிந்து கொள்ளும் ஆசை 1830க்குப் பிறகே தோன்றியது.

நோயாளிகளின் குறிப்பேடும் கண் சித்திரங்களும்

கண் சிகிச்சையை மக்களுக்கு மேற்கொண்ட பொழுது, அவற்றைக் குறித்து குறிப்பேடுகளையும், தற்பொழுது சரஸ்வதி மஹால் நூலகத்தில் காண முடிகிறது.

இவ்வேடுகள் மொத்தம் 44.  இதில் ஒன்று தேவநாகரியிலும், 8 மோடி எழுத்திலும், 38 ஆங்கிலத்திலும் கடுக்காய் மையில் எழுதப்பட்டு உள்ளன.  இவற்றில் 1827இல் ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை மருத்துவம் பெற்ற நோயாளி களைப் பற்றியதாக உள்ளன.  இதில் உள்ள 18 குறிப்பேடுகளில் நோயால் வாடும் கண்ணும், அறுவை சிகிச்சைக்கு முன் உள்ள கண்ணும் என்ற முறையில் இயற்கையான கண்ணை ஒத்த வண்ணச் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.  இக்கால கட்டம் (19ஆம் நூற்றாண்டு) புகைப்பட தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படாத காலம்.  ஆகவே

இச்சித்திரப்படங்கள் நோய்க்குறிகளை ஆய்வு செய்ய பிற்காலத்தவர் அறிந்துகொள்ளும் நிலையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  இது சரபோஜியின் அறிவியலை வளர்க்க எடுத்துக் கொண்ட தொலை நோக்குப் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.  இக்கண் சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்பதைத் தாண்டி, கண்புரை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்து செல்லும்போது, இரண்டு ரூபாய் நன்கொடையாகக் கொடுக்கப் பட்டுள்ளது, இதை, இன்றைய தமிழக அரசு கண்புரை சிகிச்சைக்குப் பிறகு நன்கொடை கொடுப் பதற்கு ஒத்த ஒரு முன்னோடித் திட்டம் எனலாம்.

இதுதவிர, கண்சிகிச்சைக்கு என்று மூன்று மாதங்களுக்கு ஒரு ஐரோப்பிய மருத்துவரை சென்னையிலிருந்து அழைத்து வந்து மருத்துவம் அளித்தார் என்பதற்கு ஒரு விளக்கம் கிடைத் துள்ளது.

சரபோஜியின் இடது கண்களில் கார்னியாவில் (நிறமிலி இழைமம்) தோன்றிய ஒளி ஊடுருவல் குறைவிற்காக தன்னுடன் காசி யாத்திரைக்கு உடன் வந்த டாக்டர் மெக்லியாய்டுக்கு மன்னர் கடிதம் எழுதுகிறார்.  “தன்னுடைய இடது கண்ணில் தோன்றிய கேட்டிற்கு நாட்டு மருந்துகள் பெரு மளவில் குணமளித்தாலும் சிறிதளவு இன்னும் சீரடையாமலே உள்ளது.  ஆகவே, நான் கேடுற்ற என் கண்ணின் ஒத்த ஆறு சித்திரங்களை அனுப்பி உள்ளேன்.  இதற்கு மருத்துவம் புரிய தகுந்த நூல் களை அனுப்ப வேண்டியது,” என தெரிவித்ததற்கு மெக்லியாய்டு உதவியவைகள் பயனுள்ளதாக அமையவில்லை.  ஆகவே டாக்டர் ஜான்மாக் என்ற உதவி மருத்துவர் சென்னையிலிருந்து இங்கு வந்து மன்னருக்கு மருத்துவம் அளித்தார்.  இத்துடன், மக்களுக்கும் மருத்துவம் புரிந்தார்.  இதற்காக இவருக்கு மூன்று மாதங்களுக்கு ரூ. 4000 கொடுக்கப் பட்டுள்ளது.  இவரே, நமக்குக் கிடைத்திருக்கும் நோயாளிகளின் கண் மருத்துவக் குறிப்பேட்டில் ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும் என அனுமானிக்கத் தோன்றுகிறது.

ராஜா சரபோஜியும் உடல்கூறு ஆர்வமும்

1800இல் சரபோஜி சென்னையில் உள்ளூர் வாசிகளுக்காகத் தொடங்கப்பட்ட மருத்துவ மனைக்கு (Native Hospital) ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.  இந்தக் காலகட்டத்தில் பிசிசியன் ஜெனரல் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் தொடர்பும் ஏற்பட்டது.  தஞ்சை திரும்பிய மன்னர் உடற்கூறு பாடங்களைப் படிக்கத் தொடங்கி இது தொடர்பாக ஜெனரல் ஆண்டர்சனுடன் கடிதப் போக்குவரத்து கொண்டிருந்தார்.  இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில் ஐரோப்பிய உடற்கூறு நூல்களைப் பற்றி “இறைவனால் படைக்கப்பட்ட மனித உடலை விஞ்ஞான அறிவு கொண்டு கெடாது பாதுகாத்து அதன் உதவியால் ஐரோப்பிய உடல்கூறு எழுதப்பட்டுள்ளது என்பது மனிதனின் பேராற்றலைக் குறிக்கிறது,” என்று மன்னர் குறிப்பிட்டார்.  ஆக மொத்தத்தில் சரபோஜி உடற்கூற்றைக் கற்றது விஞ்ஞானத்தை கடவுள் பற்றுடன் உற்று நோக்கியதாகும்.  18ஆம் நூற்றாண்டில் மனித உடலை மேற்புறமாக மட்டும் தொட்டுணராது உடலைக் கூறுபோட்டு கூர்ந்து கருத்தூன்றிப் பார்த்து, அதை நூல் வடிவத்தில் ஒவ்வொரு அடுக்காக, அங்கமாகப் பார்ப்பது என்று மருத்துவ உலகிற்கு ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியது.  இவை சுதேசி மருத்துவத்திற்கு மாறாக சவப் பரிசோதனை என்பது மேலை மருத்துவத்தில் ஒரு பிரிவாகவும் இருந்தது.

ஆக இவைகளைக் கூர்ந்து அறிந்த சரபோஜி 19ஆம் நூற்றாண்டில் இக்குறைபாடுகளைக் களைய தானே எடுத்த முயற்சி என்பது சரித்திர முக்கியத் துவம் வாய்ந்தது.

1805 மே 22ஆம் தேதி ரெசிடெண்ட் பிளாக்பன், சரபோஜிக்கு ஐரோப்பிய மருத்துவத்தைக் கற்பிக்க ரெசிடெண்சி சர்ஜனான வில்லியம் சேமர்வெல் மிச்சேலை நியமித்தார்.  அவருக்கு மன்னர் 1000 பகோடாக்கள் ஊதியமாக வழங்க உத்தரவிட்டார்.  இதைக் குறித்து ரெசிடெண்ட் மதராஸ் கவர்னர் லார்ட் பெண்டிங்குக்கு சர்ஜன் மிச்சேலை மன்னருக்கு மட்டும் ஐரோப்பிய மருத்துவக் கல்வி சொல்லிக் கொடுக்க தனக்கு எண்ணம் ஏற்பட்டதற்கான காரணம் மறைமுகமாக தஞ்சாவூரில் உள்ள சுதேசி மருத்துவர் புரியும் மருத்துவத்திலுள்ள குறைபாடு களைப் புரிந்து கொள்ளவும், மேலை மருத்து வத்தின் மேன்மையை அறிந்து கொள்ளவும் என்று எழுதி, மேலும் இது பெரியம்மைக்குத் தடுப்பு ஊசி குத்துதலுக்கு உள்ள தப்பெண்ணத்தை, மாறான கருத்தை முறியடிக்க உதவும் என்று தெரிவித்தார்.

சரபோஜி உடல்கூறு கல்வியை மிச்சேலிடம் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே. மிச்சேல் மலபார் 7ஆவது ரெசிடெண்டுக்கு மாற்றப்பட்டார், இது சரபோஜிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தாலும், தன்னுடைய கல்வியை நிறுத்தாது தொடர்ந்து உடற்கூறு மற்றும் ஐரோப்பிய மருத்துவத்தைக் கற்க மருத்துவ நூல்கள், அறுவை சிகிச்சைக்கான கருவிகள், பல நிறமுள்ள உடல்கூறு படங்கள், எலும்பு மற்றும் எலும்புக் கூடுகளைத் தன்னுடைய தஞ்சாவூர், மதராஸ் நண்பர்களிடம் பெற தன் நேரத்தைச் செலவழித்தார்.  இந்நிலையில் தரங்கம் பாடி மிஷனுக்கு தலைவரான சி.எஸ். ஜான் ஓர் ஆயத்தப்படுத்தப்பட்ட குழந்தையின் பிரேதத்தை (Prepared body for dissection) சவப் பரிசோதனை செய்ய இரத்த நாளங்களை மன்னர் ஆராய அனுப்பி வைத்தார்.  இது சரித்திர பூர்வமாக 1805 முதல் முறை யாக இந்தியாவில் உடல்கூறு கல்வி கற்க ஆயத்தப் படுத்தப்பட்டு செய்யப்பட்ட சவப் பரிசோதனை யாகும்.  (Raja Sarefoji II Science Medicine & Enlightment in Tanjore, p. 29)

இது கல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவர், மதுசூதன் குப்தா (1836) செய்த ஆயத்தப்படுத்தப் பட்ட முதல் சவப் பரிசோதனை என்று வரலாறு பூர்வமாக அறியப்பட்டதற்கு பல ஆண்டுகளுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இக் காலம் மைக்ராஸ்கோப் தொழில்நுட்பங்களும், பாக்டீரீயாலஜிக்கான பரிசோதனைகளும் முன்னேற்ற மடையாத காலம்.  இறந்தபின் செய்யப்படும் சவப் பரிசோதனை ஒன்றே, என்ன நோயினால் இறந்தார் என்பதை அறிந்திட உதவிய காலம்.  அதுவும் உடலைக் கூறு போட்டு நோயை அறிந்து கொள் வதை இந்திய சமூகம் முழுமையாக ஆழமாக விருப்பமில்லாது அருவருக்கத்தக்கதாக நினைத்த காலம்.

சவப் பரிசோதனைக் கூடத்திற்கும், உடற்கூறு துறைக்கான கல்வி கற்கும் சவப்பரிசோதனை இடங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களே கம்பெனி சர்ஜன்களுக்கு உதவியாகப் பணியாற்றினர்.  ஆக, சுதேசி வைத்தியர்கள் சவப் பரிசோதனை செய்யாததால் உடல் பாகங்களைப் பற்றி கூர்மை அறிவு இல்லாது மருத்துவ அறிவு, அதிலும் குறிப்பாக அறுவை மருத்துவம் இந்தியாவில் மேம்பாடு அடையாது இருந்தது என்பது வெளிப் படையான உண்மை.  இதைத் தகர்க்கும் வித மாகவே 1836இல் பிராமண ஆசிரியர் மதுசூதன் குப்தாவும் கல்கத்தாவைச் சேர்ந்த அவருடைய மூன்று நண்பர்களும், சவப் பரிசோதனையை முதன் முதலில் செய்தமையை ஐரோப்பிய கலாச் சாரம் இந்தியாவில் நுழைந்துவிட்டது என்று காலனி அரசு கல்கத்தாவில் குண்டு போட்டுக் கொண்டாடியது.  ஆனாலும், சரபோஜி செய்த சவப் பரிசோதனை நிகழ்ச்சி அலுவலகத் தொடர் பின்றி, இந்திய வரலாற்றில் இடம் பிடிக்காது போய்விட்டது.

ஆரம்பத்தில் உடல்கூறு கல்வி அளித்த மிச்சேல் தன் மாணவ மன்னருக்கு மருத்துவ நூல் களாக வில்லியம் குல்லன் எழுதிய “Practice of Physic” போன்ற 7 நூல்களை அனுப்பி வைத்தார்.  இதுபோலவே, ஆயத்தப்படுத்திய குழந்தை உடலை அனுப்பிய ஜான், ஒரு செயற்கை கண்ணையும் அனுப்பி வைத்தார்.  இதுவும் கூறுபோட்டு கற்கும் விதமாக அமைந்திருந்தது.  இதன்மூலம், கிட்டப் பார்வை, தூரப்பார்வையைக் கற்க உதவியாக மரத்தினாலும், தந்தத்தினாலும் இது வடிவமைக்கப் பட்டிருந்தது.  மிச்சேலின் பரிந்துரைப்படி, வீடில் அண்ட் கம்பெனி (Weddle & company) மூலம் 47 பக்கோடாக்களுக்கு மருந்து ஏற்ற ஊசி (syringes), பிளாஸ்டர் மற்றும் அறுவைக்கான கருவிகளை வைக்க பெட்டிகள் சரபோஜியினால் வாங்கப் பட்டது.  (Raja Sarefoji II, p. 29)

தன் மதராஸ் நண்பர் சர்ஜன் ஆண்டர் சன்னிடமிருந்து Anatomy of Human Body என்ற வண்ணப்படங்களுடன் கூடிய சார்லஸ் பெல்லின் நூல் பெறப்பட்டது.  இதைக் கண்ணுற்ற மன்னர் சுதேச மருத்துவ நூல்கள் மிக மிகக் குறைந்த படங்களுடனே மனதிற்கு திருப்தி அளிப்பதாக இல்லாததாகவே உள்ளது.  மேலும் இவர்கள் சமஸ்கிருதத்திலும், மற்ற மொழிகளிலும் எழுதி உள்ளார்கள், எளிதில் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை.  ஆகவே ஆங்கிலத்திலும் உள்ளவைகளை, முக்கியமாக உடல்கூறை, சுதேச மொழியில் மொழி பெயர்த்து, தம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்கு பாதிரியார் ஜான் கால்கூப் (John Kohlhopp) தமிழிலும், சஞ்சி லக்ஷ்மண் (Sanji Lakshman) என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் பழைய அலுவலர் மராத்தியிலும் சில ஐரோப்பிய நூல்களை மொழிபெயர்த்தனர்.

மற்றொரு முறை சர்ஜன் ஆண்டர்சன் அரிதாக தயாரிக்கப்பட்ட மனித உடலை அனுப்பினார்.  இதுவும் மன்னருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

1805க்குப் பிறகு, குல்லன் எழுதிய “First Lines of the Practice of Physic” போன்ற பல நூல்கள் கற்றுணர்ந்தார்.  1850இல் திருவாங்கூர் அரசர், உத்திரம் திருநாளிலும் மனித எலும்புக் கூடு, தந்தத்தில் இருந்தது என்று வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது.  ஆனால், இதற்கு 40 ஆண்டு களுக்கு முன்னரே ஒரு விலை உயர்ந்த மர எலும்புக் கூடு இங்கிலாந்திலிருந்து சரபோஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இது ஆரம்பத்தில் தந்தத்தினால் செய்ய, சரபோஜி 1805இல் டாரின் (Torin) என் பவரிடம் கேட்டுக் கொண்டபோது, இது மிகவும் கடினமான ஒன்று, மேலும் இதற்கான செலவு 2700 பவுண்டைத் தாண்டும் என்று கூறி, பிறகு கலை நயமிக்க உட்கார செய்யப்படும் வீட்டுப் பொருட் களுக்குப் பயன்படும், ஹோலி எனும் மரத்தால் 240 பவுண்டில் தயாரிக்கப்பட்டு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் உள்ள பேராசிரியர்களிடம் காண்பித்து, சீதோஷ்ண நிலையினாலோ அல்லது வெள்ளை எறும்புகளினாலோ கேடுறாது ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து, 1808 பிப்ரவரி லேடி டங்தாஸ் என்ற கப்பலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த மனித எலும்பு ஒத்த மர பொம்மை கேரளாவில் திருவனந்தபுரத்தில் Natural History Gallery of Public Museum -த்தில் தற்பொழுது காணக் கிடைக்கிறது.

Pin It