அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இந்திய மக்கள் நாடக மன்றமும் (இப்டா) தொடங்கப்பெற்று முறையே 75 மற்றும் 70 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 1930களில் நிகழ்ந்த இந்த நிறுவனங் களின் உருவாக்கம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். சமகால சமூக அரசியல் யதார்த்தங்களை வெளிப்படுத்துவதில் ஒரு புதிய உணர்வு நிலைக்கு இவை கட்டியம் கூறின. இவை படைப்பு மண்டலத்தில் பண்பு ரீதியான மாற்றத்திற்குக் காரணமான ஒரு புலமைத் தகர்வைக் கொணர்ந்தன.

இதன் விளைவாக, தலைசிறந்த கலை இலக் கியங்கள் சில வெளிவந்தன. குறைந்தபட்சம் சில காலமாவது இவை பண்பாட்டு உயர்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தின. ஒடுக்கப்பட்டோரின் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி, நிலவுடைமை பழமைவாதத்தையும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தையும் எதிர்கொள்கிற பகுத்தறிவு சார்ந்த முற் போக்குப் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன் களம் சமைத்தன. இந்திய முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் பங்களிப்பை வேறுபட்ட இரண்டு வழிகளில் நினைவு கூரலாம். இவ்வியக்கத்தின் சாதனைகளை வரிசைப்படுத்துவதும் பண்பாட்டுப் படைப்புத்திறன் மீது இவ்வியக்கம் ஏற்படுத்திய நேர்முகத் தாக்கத்தினைக் கணக்கிடுவதும் ஒன்று; இவ்வியக்கத்தின் இன்றைய நிலையை விமர்சன பூர்வமாக உள்முக ஆய்வுக்கு உட்படுத்துவதும் அது கடந்த காலத்தோடு கொண்டு உறவுநிலையைத் தேடுவதும் மற்றொன்று.

இக்கட்டுரை இரண்டாவது வழியினைக் கருத்திற் கொள்கிறது. சாத்தியமான எதிர்கால நடைமுறைத் திட்டத்திற்குக் கடந்த அனுபவங்களிலிருந்து பெறத் தக்கவை குறித்துக் கவனம் செலுத்துகின்றது. ஆயின், அது கடந்த காலத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமென்ற தேவையில்லை.

இந்தியப் புலமை வரலாற்றில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம் எழுச்சிமிக்க ஓர் இதிகாசமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அது கடந்த காலத்தின் மங்கிய நிழலாக மாறிவிட்டது. தற்போது அனைத் திந்திய இயக்கம் என்று ஒன்றில்லை. மாறாக, மொழி அடிப்படை சார்ந்த வட்டார அமைப்புகள் முந்தைய அனைத்திந்திய முற்போக்கு இயக்கத்தின் மரபுரிமை நியாயத்தின் மீது சொந்தம் கொண் டாடிச் செயல்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, கடந்த காலத்தில் இருந்ததைப் போல வட்டார இயக்கம், நிலைத்த பண்பாட்டுச் செயல்பாட்டாளர் களின் மீது சொந்தம் கொண்டாடுவதில்லை. அதே போன்று, எல்லோராலும் நன்கறியப்பட்ட பண் பாட்டு ஆளுமைகளின் ஆதரவையும் பெற்றிருக்க வில்லை. ஒரு வகையில் இது முரணுரையாகவே இருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரும்பான்மை யான பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், ‘இடது சாரி மையக்கருத்து நிலை, அரசியல் நிலைப்பாடு’ என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளதையே ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது பெரும்பாலோர் தனித்து நின்று செயல்படுகின்றனர்; அல்லது குறிப் பிட்ட கருத்து நிலையும் அரசியல் நிலைப்பாடுமற்ற சிறுகுழுக்களின் உறுப்பினராக இருந்து செயல்படு கின்றனர்.

அவர்கள் பெரும்பாலான தேசியப் பிரச் சினைகளில் தங்களுக்குள்ள பொதுவான கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் ஒன்றிணைந்து தங்கள் குரலை அவர்கள் உயர்த்துவதில்லை. முற் போக்குப் பண்பாட்டு இயக்கத்தால், இவ்வகையான பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களின் திரளைத் தங்களது குடையின் கீழ்க்கொண்டு வர இயல வில்லை; அவர்களது கருத்துக்களை உரத்துச் சொல்வதற்கு அதனால் களம் சமைத்துத் தர இயலவில்லை. இதன் விளைவாக, பெரும்பான்மை யான பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள் முற் போக்கு இயக்கத்தின் வீச்சிற்கு வெளியேயுள்ள பரப்பிலேயே இருக்கின்றனர். முக்கிய பிரச்சினை களில்கூடப் பண்பாட்டுப் படைப்பாக்கத்தின் வாயிலாகவோ, புலமைசார் உசாவலின் மூலமாகவோ குறுக்கிட்டுச் செயல்படத் திறனற்றுப் போனதன் காரணமாக, முற்போக்கு இயக்கம் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில வட்டாரங் களில் மிக நீடித்த படைப்புச் சாதனைகள் இல்லா மலிருந்தாலும்கூட, முற்போக்கு இயக்கம் சிறந்த ஸ்தாபன இருப்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களில் முற்போக்கு இயக்கம் ஆதிக்கமும் ஓரளவு தாக்கமும் ஆதரவும் உடையதாக விளங்கு கின்றது. இதற்கு மிக முக்கிய காரணம், இயக்கம் இங்கெல்லாம் அறிவு ஜீவிகளை இணைத்துக் கொண்டு தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தி யுள்ளது.

இந்த வட்டாரங்களிலும்கூட, மேற் கிளம்பும் பண்பாட்டு யதார்த்தத்திற்குப் புதுத் திறனுடன் எதிர்வினையாற்ற முடியாததால், இயக்கம் தனது ஆவேசத்தை இழந்திருப்பதாகவே தோன்றுகிறது. இதன் விளைவாக, தலித் சுரண்டல், பாலின ஒடுக்கு முறை, பழங்குடியினர் வெளியேற்றம் முதலான சமூகப் பிரச்சினைகள் பெரிதும் முற்போக்குப் பண்பாட்டு அக்கறைக்குப் புறத்தனவாகவே இருக் கின்றன. இந்த இயக்கம் பழமை நாட்டம் உடை யதாக மாறிவிட்டது. நிகழ்காலத்தோடு வினை யாற்றுவதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதை விட, தனது கடந்தகால சாதனைகளிலிருந்தே தூண்டுதலை எதிர்பார்க்கிறது.

ஒட்டுமொத்தத்தில் முற்போக்கு இயக்கம் மிக வேகமாக மாறிவரும் பண்பாட்டு நிலைமைகளில், தனக்கான இடத்தை வரையறுத்துக் கொள்ளும் திறனற்று வாடுவதாகவே தோன்றுகிறது. மேலும், அது இயக்கம் உருவான காலகட்டத்தின் மரபுரிமை நியாயத்தைப் பற்றிக் கொள்ள முயலுகிறது. இதனை இயக்கத்தின் விமர்சகர்கள், காலவழுவென்றும் சமகால யதார்த்தத்திற்குப் புறம்பான நடவடிக்கை யென்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதன் விளைவாக, நாட்டின் பெரும்பான்மையான வட்டாரங்களில் இயக்கம் திசை வழியறியாது பாலைவனத்தில் தட்டுத் தடுமாறி நிற்கின்றது.

இந்த விவகார நிலைக்கு இரண்டு காரணங் களைக் கூறலாம். ஒன்று, மிக விரைவாக மாறி வரு கின்ற பண்பாட்டுச் சூழலை எதிர்கொள்வதற்குப் போதுமான அறிவுசார் மற்றும் பண்பாட்டு வளங்கள் முற்போக்கு இயக்கத்திடம் இல்லை. இரண்டா வதாக, தாராளவாத, ஜனநாயக இலட்சியங்களில் நம்பிக்கையுடையோரும் பங்கேற்கக்கூடிய விரிந்த பண்பாட்டுச் செயல்பாட்டுத் தளத்தை உருவாக்கு வதில் முற்போக்கு இயக்கம் தோல்வியடைந்து விட்டது. யதார்த்தத்தின் மாறிவரும் வடிவங்களை உசாவுதற்கும் அதனைக் குறுக்கீடு செய்வதற்குமான நிலைப்பாடுகளை வடிவமைப்பதற்கும், முற்போக்கு இயக்கம் பயன்படுத்திய கருத்தாக்க வகையினங்கள் போதுமானவையாக இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கருத்தாக்கங்களின் மரபுரிமை நியாயம்

இடதுசாரி கருத்துநிலையோடு சொந்தக் கடப்பாடுடைய எல்லாப் பண்பாட்டு அமைப்புக் களும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ, முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் மரபுரிமை நியாயத்தின் மீது உரிமை கொண்டாடுகின்றன. மேலும் அவை முற்போக்கு இயக்கம் தொடக்கத்தில் பயன்படுத்திய கருத்தாக்க வகையினங்களை வரு வித்துக் கொண்டுள்ளன. இன்றைய பண்பாட்டுச் செயல்பாட்டிற்கு, இந்தக் கருத்தாக்க வகையினங் களின் தொடர் நீடிப்பு, தூண்டுதலாகவும் தடை யாகவும் விளங்குகின்றன. கடந்தகால சாதனைகள் காரணமாக அவை தூண்டுகோலாக வினையாற்று கின்றன. அதே சமயத்தில் அவற்றின் உள்ளடக்கமும் அர்த்தமும் போதிய அளவில் மாறிவிட்டமையால் அவை தடையாகவும் செயலாற்றுகின்றன. இந்தத் தடைச்சுமை, சாத்தியமான பல்வகைப்பட்ட நடவடிக்கைகளை எதிர்மறையாகப் பாதிக்கின்றது.

முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் உருவாக்க காலகட்டத்தில் தொழிற்பட்ட கருத்தாக்க வகை யினங்கள், அன்றைய காலகட்டத்தில் நிலவிய சமூக அரசியல் நிலைமைகளின் தாக்கம் பெற்றவை; அதன் பணிக்கடமையின் இயல்பிற்கேற்ப உருவாக்கப் பட்டவை. பெரும்பாலான கருத்தாக்கங்களின் உள்ளடக்கமும் அர்த்தமும் போதிய அளவில் மாறிவிட்டனவென்றாலும், இன்றும்கூட, முற் போக்கு இயக்கத்தின் சொற்களஞ்சியத்தில் அவை தொடர்ந்து நீடிக்கின்றன. எல்லா முற்போக்கு சங்கங்களின் கொள்கைப் பிரகடனங்களும் கூட்டாக உருவாக்கப்பட்டவையே. முற்போக்கு இயக்கத்தினர் ஒரே கருத்தாக்கங்களையும் வகையினங்களையும் பகிர்ந்துகொண்டனர். எடுத்துக்காட்டாக முற் போக்கு, வெகுஜனம், வர்க்கப் போராட்டம், ஏகாதிபத்தியம், நிலவுடைமை முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவை அவர்களின் கருத்துநிலை, பண்பாட்டியல், அரசியல் சார்ந்த நோக்குநிலை களுக்காக இணைத்து உருவாக்கப்பட்டன.

இந்தக் கருத்தாக்க வகையினங்களின் பண்பிலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய உணர்வில்லாமலேயே, முற்போக்கு இயக்கத் தின் கருத்தாக்க உலகம், இந்த வகையினங்களையே சுற்றிச் சுழன்று வருகிறது. எடுத்துக்காட்டாக, முற்போக்கு இயக்கத்தின் தொடக்க நிலை உருவாக்கத்தின்போது, ‘முற்போக்கு’ என்பது அதன் மையக் கருத்தாக இருந்தது. அதன் பின்னர் முற்போக்கு இயக்கத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு வரும் ‘முற்போக்கு’ என்பதன் பொருளை வியாக்கி யானம் செய்ய முயன்றனர். முற்போக்கு இயக்கம் முன்னிலைப்படுத்திய ‘முற்போக்கு’ என்பதன் கருத்தை மூன்று வேறுபட்ட மூலாதாரங்களின் வழி வெளிப்படுத்தினர். ஒன்று: எல்லா முற்போக்குச் சங்கங்களினுடைய கொள்கைப் பிரகடனங்கள். இரண்டு: இயக்கத்தின் தொடக்ககால ஒருங்கிணைப் பாளர்களின் அறிக்கைகள், பிரகடனங்கள். மூன்று: இயக்கத்தால் கொண்டு வரப்பட்ட படைப்பாக்கங்கள். கூட்டாக இம்மூலாதாரங்கள் கருக்கொண்டிருந்த ‘முற்போக்கு’ இப்போது நடப்பிலுள்ள அரசியல், சமூக நிலைமைகளில் பண்புரீதியான மாற்றத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய மாற்றங்களைத் தேவை யான சமுதாயக் கூருணர்ச்சியை ஏற்படுத்துவதன் வழி முன்னெடுத்துச் செல்வதே, முற்போக்குப் பண் பாட்டின் பங்கும் பணியுமாகும். இதுவே மக்களை இந்த மாற்றச் செயல்பாட்டில் பங்கெடுக்கச் செய்ய உதவும். அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைப் பிரகடனம் ‘முற்போக்கு’ என்பதன் கோட்பாடு விளக்கத்தைக் குழப்பமற்ற வார்த்தைகளில் பதித்துள்ளது.

“இந்தியாவின் புத்திலக்கியங்கள் இன்று நடப்பிலுள்ள பட்டினி, வறுமை, சமூகத்தின் இழிநிலை, அரசியல் அடிமைத்தனம் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம். இவை யெல்லாம் நம்மை அடங்கிப் போகிற, செயலற்றுப் போகிற, நியாயமற்ற நிலைக்குப் பிடித்துத் தள்ளுகின்றன. இவற்றை நாம் பிற்போக்கானவையென்று நிராகரிக்க வேண்டும். எது நம்மிடம் விமர்சன ஆற்றலை எழுப்புகிறதோ எது தருக்க அறிவின் ஒளியில் நிறுவனங்களையும் மரபு வழக்காறுகளையும் பரிசீலிக்கிறதோ, எது நாம் செயல்படு வதற்கும், நாம் ஒருங்கிணைவதற்கும் பெரு மாறுதல்களைக் கொணர்வதற்கும் உதவு கிறதோ அதனை ‘முற்போக்கு’ என்று ஏற்றுக் கொள்கிறோம்”.

எனவே, நிலவுடைமை மற்றும் காலனிய ஒழுங் கினை முடிவுக்குக் கொண்டுவருகிற சமூக அரசியல் மாற்றத்தினை மெய்யாக்குதலும், பழமைவாதத்தினை மீறுகின்ற உணர்வுநிலைக்குக் கட்டியங்கூறுதலும் ‘முற்போக்கு’ என்று பொருள்படுகிறது. ஆகவே ‘முற்போக்கு’ என்பதன் பொருள் வரலாற்றுச் சார்பான தனித்தன்மை உடையதாக இருந்தது. ஆயின் முற்போக்குப் பண்பாட்டின் நோக்கம் புறவுலக நிலைமைகளை மாற்றுவது என்பதாக வரம்புக்குட்படுத்தப்படவில்லை. அது அதற்கு இணையாக இலக்கியம், அரங்கம் மற்றும் பிற பண்பாட்டுப் படைப்பாக்க வடிவங்களை உயர்த்து வதில் அக்கறை செலுத்தியது. இந்த இலட்சியங் களை அடைவதற்கான பண்பாட்டு உள்ளடக்கங் களை வழங்குகின்ற கடமைப் பொறுப்பும் அதற்கு இருந்தது. 1936ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள், லக்னோவில் நடைபெற்ற, முதல் அனைத் திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் தனது தலைமையுரையில் பிரேம்சந்த், இந்தப் பரிமாணத்தை நோக்கி இவ்வாறு கவன ஈர்ப்புச் செய்தார்:

“எது சிந்தனை நிரம்பியதாக இருக்கிறதோ, எது நம்மிடம் விடுதலையின் எழுச்சியையும் அழகின் எழுச்சியையும் ஏற்படுத்துகிறதோ, எது படைப்பாற்றல் உடையதாக இருக்கிறதோ, எது வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு நல் விளக்கம் தருகிறதோ, அதனையே நாம் முற் போக்கு இலக்கியம் என்று கருதுகிறோம். அது நம் செயல்பாட்டிற்கு வழிகாட்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி நம்மை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடாது. அது அறிவுசார்ந்த துயில் நிலையில் நம்மை ஆழ்த்தக்கூடாது. நாம் அம்மயக்க நிலையிலேயே இருப்போமானால், நாம் செயலற்றுப் போவோம்.”

முற்போக்கும் மரபும்

அரசியல் மற்றும் படைப்பாக்கத்தின் கலவை தான் முற்போக்கு இயக்கத்தை வரையறுக்கிறது; புதிய பண்பாட்டு நடைமுறைகளில் மரபின் இடம் என்ன என்பது பற்றிய தவிர்க்கவியலா வினாக்களை எழுப்புகின்றது. மரபு சார்ந்த படைப்புலகின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குப் பழமைவாதத்திற்கு அதிகாரம் வழங்கியமையால், அது அதன் தாக்கத் தினால் விளைந்த விளைவுகளின் செயலாட்சி வரம்பைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுமாறு இயக்கத்திற்குக் கட்டளையிடுவதாக மாறிவிட்டது. எவ்வாறாயினும், இது மரபுடன் பழமைவாதத்தை அடைப்புக் கோடிட்டுப் பார்க்கிற அபாயத்தில் சிக்க வைக்கிறது. ஆகவே மரபு, பழமைவாதம் என்னும் இரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. பழமை வாதம் ஆக்கபூர்வமான முறையில் விமர்சிக்கப் பட்டது. மரபை நிராகரிப்பதில் போதுமான தயக்கம் காட்டப்பட்டது. பழமைவாதத்தோடு சமரசம் செய்துகொள்ளாத மனப்பாங்கினை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைப் பிரகடனம், மிகத் தெளிவான வார்த்தைகளில் விளக்கியுள்ளது :

“இலக்கியம் மற்றும் நுண்கலைகளைப் பழமைவாதத்தின் மரணப்பிடியிலிருந்து விடுவிப்பதே நமது சங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். அவற்றை மக்களின் இன்ப, துன்பங்களையும் போராட்டத்தையும் பொருள் விளக்கம் செய்கின்ற வகையிலும், மனித இனம் போராடிக் கொண்டிருக்கிற ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டு கின்ற வகையிலும் உருவாக்க வேண்டும்”.

மரபு சார்ந்த செவ்வியல் மரபின் மீதான பழமை நாட்டமும், செவ்வியல் மரபின் வீழ்ச்சியும் அதன் விளைவால் ஏற்பட்ட பின்தங்கிய நிலை குறித்த கூரான விழிப்புணர்வும், மரபு குறித்த மனப் பாங்கில் குழப்பத்தையும் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தியது. பிரேம்சந்த் தொடக்க மாநாட்டின் தலைமையுரையில், கடந்தகாலப் பண்பாட்டு நடை முறைகளின் மலட்டுத்தன்மை, சீர்கேடு, செயலற்ற தன்மைகளுக்கும் முற்போக்கு இயக்கத்தின் இயக்க ஆற்றலுக்குமிடையிலான வேறுபாட்டை ‘மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். கொள்கைப் பிரகடனம் பின்பற்றிய பார்வையானது, செவ்வியல் பண்பாட்டின் தகர்வின் விளைவாகத் தோன்றிய, வாழ்க்கை நடை முறைகளிலிருந்து தப்பித்துச் செல்லக்கூடிய அழிவு மனப்பான்மைக்கு வருத்தம் தெரிவிப்பதாக இருந்தது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் முற்போக்கு இயக்கத்தினர் எவரும் கடந்தகாலப் பழமையைப் பொருத்தமற்றதென்று நிராகரிக்கவில்லை. அதற்கு மாறாக, மரபு வழங்கும் அடிப்படைகளிலிருந்து புதிய வருங்காலத்தைக் கட்ட முடியுமென்பதில் கருத்தொற்றுமை கொண்டிருந்தனர்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்று வாய் உறுப்பினரான அகமதுஅலி மட்டும் இதில் மாறுபட்ட கருத்துடையவராக இருந்தார். அவர் கடந்தகாலக் கலையை, புராணீகமானது, அழிந்து போகக் கூடியது, வலிந்து தடைசெய்யக் கூடிய தென்று சொல்லிக் காயடித்தார். மேலும் விமர்சனம் சார்ந்த எழுத்தாளர்களான முகமது இக்பாலையும் இரவீந்திரநாத் தாகூரையும் ‘கோளாறான நழுவல் வாதிகள்’ என்று கண்டனம் செய்தார். அவர் கடந்த காலத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டு மென்பதில் உறுதியாக நின்றார். முற்போக்கு இயக்கத்தில் தொடக்க காலத்திலிருந்த குறுகிய மனப்பாங்குடைய வறட்டுச் சூத்திரவாதப் போக்கின் பிரதிநிதியாக அகமதுஅலி இருந்தார். ஆனால் 1939ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளை குறுகிய மனப் பாங்கினர், எதிர்மறை மனப்பாங்கினர் என்று குற்றஞ்சாட்டி இயக்கத்தை உடைத்துக் கொண்டு அவர் வெளியேறினார்.

எவ்வாறாயினும், இயக்கம் மரபு பற்றி விமர்சன பூர்வமான ஆனால் ஆக்கபூர்வமான பரிவுசார்ந்த பார்வையைக் கையிலெடுத்தது. இப்போக்கினை சஜ்ஜத் ஜாகீர் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் நமது பழம்பண்பாட்டின் தற்காப்பிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்றார். ஆனால் அதே சமயத்தில் கடந்த காலத்தின் மீதும் புதுப் பண்பாட்டின் மீதும் முறையான விமர்சனப் பார்வையுடையவராக இருந்தார். 1937ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த உருது முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் நிகழ்த்திய உரையில் மௌலானா அப்துல்ஹக் ஆற்றல் வாய்ந்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

“எல்லாப் பொருட்களும் அதற்கு முந்தைய காலகட்டத்தோடு தொடர்புடையன என்னும் கருத்து தரக்குறைவானது, பிற்போக்கான தென்று கூறுவது சரியல்ல. நாம் முன்னேறி விட்டோம் என்பதாலேயே கடந்த காலத் தோடு நமக்குள்ள இணைப்பைத் துண்டித்து விடக்கூடாது. அப்படிச் செய்தால் அது நமது வேர்களை வெட்டுவதற்குச் சமமான தாகும். நாம் கடந்த காலத்தின் வாரிசுகள். வாரிசு என்போர் அவரது கடந்த காலத்தைப் பற்றிய அக்கறையின்றி இருந்தால், அதனைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வற்ற வராக இருந்தால், அவர் என்னதான் புலமை யுடையவராகவும் செயலூக்கம் நிறைந்த வராகவும் புரட்சிகரமானவராகவும் இருந் தாலும் அவரால் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டுவர இயலாது. அவரால் கடந்த காலத்திலிருந்து எதனையும் வருவித்துக் கொண்டு பலனடைய இயலாது. ஆகவே ஒவ்வொரு முற்போக்கு எழுத்தாளரும் கடந்த கால இலக்கியங்களைக் கற்பது கட்டாயச் செயலாகும். அதன்வழி நம்முடைய இலக் கியங்கள் முன்னேற்றச் செயல்பாட்டிற்கு எந்த அளவு தகுதியுடையனவாக இருக்கின்றன, அவற்றுள் எவையெல்லாம் நிராகரிக்கப்பட வேண்டியன, இலக்கியத்தை உயர்நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான வழிமுறைகள் யாவை என்பதைக் கண்டறிதல் வேண்டும்”.

மரபு குறித்த இத்தகைய ஆக்கபூர்வமான மனப்பாங்கு, முற்போக்கு இயக்கத்தின்பால் ஏராளமான தாராளவாத மனப்பான்மைமிக்க அறிவாளிகளை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. இதற்கு எதிர்மறையாக, பிற் காலத்தில் முற்போக்கு இயக்கம், மரபு குறித்து குறுகிய பார்வையைப் பின்பற்றியபோது, ஏராள மான ஆதரவாளர்கள் இயக்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதுவும் ஒரு காரணமானது.

மிகத் தொடக்க காலத்திலிருந்தே முற்போக்கு இயக்கம், மக்களின் பெயரில் பேசியது. மேலும், வெகுஜனம் என்பதை முன்களத்தில் நிறுத்தியது. மக்கள், வெகுஜனம் என்னும் இரண்டு கருத்துநிலை வகையினங்களும், மீண்டும் மீண்டும் இயக்கச் செயல்பாட்டாளர்களால் இயக்கத்தின் தனித்த இயல்பாக முன்னிலைப்படுத்தப்பட்டன. இது வெகுஜனப் பண்பாட்டின் மீள்கொணர்வை உட் கொண்டிருந்தது. அத்துடன் இதன் மறு ஆற்றுப் படுத்தல், மக்களின் பண்பாட்டு அக்கறைகளின் மீது கவனம் செலுத்தியது. ஆனால் ‘மக்கள்’ என்பது எப்படிக் கட்டமைக்கப்படுகிறது? வெகுஜன இடது சாரி மரபில் ‘மக்கள்’ என்பது சமூகத்தில் அதிகார மின்றி விளிம்புநிலைகளில் வாழ்வோரை உட் கொண்டதாகும். இந்தக் கருத்தாக்கத்தின் விளை வால் மேல்தட்டு வர்க்கத்தின் பண்பாட்டுச் சாதனைகள் மக்கள் பண்பாட்டின் கருத்தெல்லையிலிருந்து புறந்தள்ளப்பட்டன. ‘மக்கள்’ என்பது குறித்து இதற்கு மாற்றான பார்வை ஒன்றும் இருக்கிறது. அதன்படி ஒட்டுமொத்த முழுமையான மக்கள் தொகை என்பது ‘மக்கள்’ என்பதைக் கட்டமைக்கும். ஆனால் அது ஒருவகையினதான முழுத்தொகுதி அல்ல; வேறுபட்ட வகையினங்களின் தொகுதி ஆகும்.

இந்தப் பிந்தைய கருத்தாக்கத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாட்டுச் சாதனைகள் என்பவை தாம் பாரம்பரியத்தைக் கட்டமைக்கும். அந்தப் பண்பாடு ஒரு வேளை மேலாதிக்கச் செயல்பாடு கொண்ட ஆதிக்கவர்க்கத்தினரின் பண்பாடாகவும் இருக்கலாம். ‘பாட்டாளி வர்க்கப் பண்பாட்டின் சேமிப்புத் தொகுதியிலிருந்து, நாம் செவ்வியல் பாரம்பரியத்தை நீக்கிவிட்டால், பாட்டாளி வர்க்கப் பண்பாடு மிக வறிதாகிப் போய்விடும்’ என்று லெனின் வாதிட்டார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் ‘செவ்வியல் மரபு’ குறித்து, இதே விதமான கருத்துடையவராகவே இருந்தார். தேசிய பண் பாட்டுப் பாரம்பரியத்திலிருந்து, மரபு சார்ந்த பண்பாட்டுக் கலை வடிவங்களான கூடியாட்டம், கதகளி, பரதநாட்டியம் முதலானவை நீக்கப் பட்டால், ஏழையர் பண்பாடு எங்ஙனம் இருக்கு மென்று இ.எம்.எஸ்.ஆச்சரியப்பட்டார்.

இன்னும் சொல்லப்போனால், மேட்டிமைச் சார்பு, மக்கள் சார்பு என்னும் வேறுபாடு வருகிற போது, முற்போக்கு இயக்கம் இதுநாள் வரையிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகப் பிரிவினரையே பண் பாட்டு அமைப்பின் மையப் பொருளாகக் கொண்டது. சான்றாக, முல்க்ராஜ் ஆனந்தின் நாவல்களான தீண்டாதான், கூலி அல்லது மலையாளத்தில் தகழி சிவசங்கரன்பிள்ளை எழுதிய தோட்டியின் மகன் (தோட்டியுடெமகன்) இரண்டு படிகள் (ரண்டிடங்ஙழி) ஆகிய நாவல்கள் நாட்டுப்புற மக்கள் மற்றும் பழங்குடியினர் பண்பாட்டுச் செயல்பாடுகளை மீள்கொணரும் முயற்சிகளாக அமைந்தன. மிக முக்கியமாக, பெருங்குடிமக்கள் மீதிருந்த குவி மையம் விளிம்புநிலையினரை நோக்கி மடை மாற்றம் செய்யப்பட்ட போது வர்க்கப் போராட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இலக் கியம் மற்றும் பிற பண்பாட்டு உற்பத்தி சாதனங் களில் வர்க்கப் போராட்டம் கச்சா வடிவிலேயே கருப்பொருளாக இடம்பெற்றது. பெரும்பாலான படைப்பாளிகள், விவசாயிகள் மீதான முதலாளித் துவ அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதற்கு வர்க்கப் போராட்டத்தை இயந்திரத்தனமாகவே கையாண்டனர். இது வெறும் பாடுபொருள் மடை மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை; ஒரு புதிய பண்பாட்டு உணர்வு நலனின் வெளிப்பாட்டையும் குறித்தது.

பண்பாடும் அரசியலும்

பண்பாட்டிற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவுநிலை குறித்த கருத்தாக்கத்தின் நோக்கு நிலையில், முற்போக்கு இயக்கம் ஓர் அடிப்படை மாற்றத் தையே கொணர்ந்தது. பண்பாட்டு வடிவங்களி லிருந்து அரசியலை நீக்குவதற்கு மாறாக முற்போக்கு இயக்கம் அரசியலைப் பண்பாட்டின் மைய அரங் கிற்குக் கொண்டு வந்தது. ஐரோப்பிய எழுத்தாளர் களான மக்ஸீம் கோர்க்கி, ஆந்ரேஎகைட், ஈ.எம்.பாஸ்டர், ஆந்ரே மால்ராக்ஸ் முதலானோர், பாசிஸம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் தன்மையில் பொதிந்துள்ள ஆபத்துகளை நோக்கிச் செல்லு மாறு முற்போக்கு இயக்கத்தைத் தூண்டிவிட்டனர். அவர்கள் அரசியலின் செயலாட்சி வரம்பினைக் கணக்கிலெடுத்த போது, அரசியலைக் கட்டளை வடிவினதாகவே ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அரசியலை வெறுமனே கலையியற் பரப்பின்மீது மேல் வந்து அழுத்துகின்ற ஒன்றாகக் கருதவில்லை. மாறாக, அது தன்விருப்பாற்றலுடன் கலையியல் பரப்புக்குள் அத்துமீறிப் புகவேண்டும்; ஊடுருவ வேண்டும்; வலிந்து ஏற்கச் செய்ய வேண்டும் என்று கருதினர்.

இந்தியாவிலுள்ள முற்போக்குப் பண்பாட்டு இயக்கங்கள், அரசியலுக்கும் பண்பாட்டிற்கும் இடையிலான உறவுநிலை குறித்து இதே விதமான பார்வையையே கொண்டிருந்தன. நடப்பிலிருக்கிற அரசியல் நிலைமைகள் ஏகாதிபத்தியத்தால் கட்டுப் படுத்தப்படுகின்றன. இதனால் பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கு இடர்ப்பாடு நேருகின்றது. எனவே மாற்று அரசியலை உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறதென்பதை முற்போக்குப் பண் பாட்டு இயக்கங்கள் அங்கீகரித்தன. அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் வரைவு கொள்கைப் பிரகடனம் இவ்வாறு பரிந்துரை செய்தது : ‘இந்தியாவின் புத்திலக்கியம், இன்று சமூகத்தில் நிலவுகின்ற பட்டினி, வறுமை, சமூக இழிநிலை, அரசியல் ஒடுக்குமுறை ஆகிய அடிப் படைப் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்’.

திருத்தப்பட்ட வரைவுக் கொள்கைப் பிரகடனம் இதனை வேறு வார்த்தைகளில் வடி வமைத்து இங்ஙனம் கூறியது: ‘இந்தியாவின் புத்திலக்கியம் நமது வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளை நுவல்பொருளாகக் கொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். பட்டினி, வறுமை, சமூக இழிநிலை, அடிமைத்தனம் என் பவையே அந்த அடிப்படைப் பிரச்சினைகளாகும்.’ அப்போது நடப்பிலிருந்த இந்தியச் சூழலில் மொழிபெயர்ப்போமானால், அது காலனிய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு, இவற்றின் செயல் விளைவால் சமத்துவ சமூகத்தை நிர்மாணித்தல் என்று பொருள்படும். எவ்வாறாயினும் முற்போக்கு இயக்கம், பண்பாட்டின் பங்கினைக் கருவித்தன்மை இயல்புடையதாகவே கருதியது. முன்னேற்றமான காலனிய எதிர்ப்பு மற்றும் நிலவுடைமை எதிர்ப்பு உணர்வுநிலையினை சமூகத்தில் ஏற்படுத்துவதே முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.

முல்க்ராஜ் ஆனந்தின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘வருங்காலத்திற்குள் தகர்த்துச் செல்கின்ற, வாழ்க்கையின் புதிய பாய்ச்சல்களை மறுக்கின்ற ஏகாதிபத்தியம், அதனோடு ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரன் பாசிஸம், இவற்றின் பழைய அத்தை நிலவுடைமைத்துவம், இதைப் போன்ற பிற அத்தைமார்கள் ஆகிய அனைத்திற்கும் எதிரான உலக மக்களின் போராட்டத்திற்கு ஊக்க மளிப்பதே முற்போக்கு இயக்கத்தின் நோக்க மாகும். இதன் விளைவாக, எல்லாப் பண்பாட்டு வடிவங்களும் இந்தக் குறியிலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான இயக்கத்தின் கட்டளையை ஏற்றுச் செயல்பட்டன. இவ்வாறாக இயக்கம், அரசியல் அதிகாரங்களால் கட்டளையிடப்பட்ட பண்பாட்டுச் செயல் குறித்த பார்வையை உருவாக்கிக் கொண்டது. இந்த மரபுரிமைக்கொடை இயக்கத்தின் இன்றைய நிலையின்மீதும் வலுவான தாக்கம் செலுத்தி யிருப்பதாகவே தோன்றுகிறது.

முற்போக்கு இயக்கத்தின் குறியிலக்கைத் தீர் மானித்த சமூகச் சூழல்களும், முற்போக்கு இயக்கம் கையிலெடுத்த கருத்தாக்க வகையினங்களின் அர்த்தங்களும், அவற்றின் செயல்பாடுகளும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடிப்படை மாற்றங்களுக்கு உள்ளாகின. காலனியம் புதுக்காலனியமாக உருவெடுத்தது; நிலவுடைமை, முதலாளித்துவத்திற்கு வழிவிட்டது. தாராளவாதம் மற்றும் உலகமயமாக்கலின் செயல் திட்டங்களைத் தழுவிக் கொண்ட அரசு முன்னேறிய முதலாளித் துவத்தின் நலன்களையும் பிம்பத்தையும் பிரதி பலிக்கத்தக்க வகையில் புதிய பண்பாட்டுத் தொகுதியைத் தோற்றுவித்துள்ளது. ஏகாதிபத்திய அடிமைப்படுத்தலின் பண்பாட்டு உருவகமாக, சந்தை உருவெடுத்துள்ளது. வெகுஜன சமூகவுணர்வு நிலையின் மீது வகுப்புவாதத்தின் தாக்கம் அதிகரித் துள்ளமை, மற்றொரு வளர்ச்சிப் போக்காகும். இதன் விளைவாக, ஒருபுறம் நடுத்தர வர்க்கத்தின் பண்பாட்டு உணர்வுநலன் முதலாளித்துவத் தனிப் பண்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம், நடுத்தர வர்க்கத்தின் சமூக, கருத்துநிலைப் பார்வைகள் வகுப்புவாதத்தால் வண்ணப்படுத்தப் பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில், முற்போக்குப் பண்பாட்டுச் செயல்பாடுகளின் நிலைபேறு, மிகத் தீவிரமான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து இயக்கத்தை விடுவிப்பதற்குக் கோட்பாட்டுச் சட்டக மாற்றம் தேவைப்படுகிறது. அதுதான் புதிய செயல்திட்டங் களுடனும் கொள்கை அடியெடுப்புகளுடனும் நம்மை முன் நடத்திச் செல்லும்.

பண்பாட்டுக் குறுக்கிடலும் பண்பாட்டில் குறுக்கிடலும்

இந்தத் திருப்புக்கட்டத்தில் இரண்டு முதன்மை யான கடமைப் பொறுப்புகளைப் பொதிந்துள்ள பண்பாட்டுச் செயலாக்கம் அவசியமாகிறது. முதலாவது, எதிர் மேலாதிக்கத்தை முன்னெடுக்கக் கூடிய பண்பாட்டுக் குறுக்கிடல் வேண்டும். நோபல் பரிசு ஏற்புரையின்போது ஹெரால்டு பின்டர் (2005 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாடகாசிரியர்) குறிப்பிட்டதைப் போன்று ‘அடக்குமுறையினுடைய மூடப்பட்ட கதவுக்குள் நுழைய வேண்டும்’. இரண்டாவதாக, தடையற்ற - தொடர்ச்சியான - பண்பாட்டுக் குறுக்கிடுதல்கள் வாயிலாக வெகுஜன விமர்சன உணர்வுநிலையினை உருவாக்க வேண்டும். முற்போக்குப் பண்பாட்டு இயக்கம், மேற்கிளம்பும் பண்பாட்டுப் போராட்டங்களுக்குத் தலைமையேற்க முடியும் என்று நம்புமானால், இந்த இரட்டைக் கடமைப் பொறுப்புகளைக் கையிலெடுக்க வேண்டும். வரம்புக்குட்பட்ட ஸ்தாபன வலிமையும் போதாமை மிக்க கருத்தாக்கக் கருவியும் கொண்ட முற்போக்கு இயக்கம் நடப்பு முறைகளிலிருந்து கருத்தாக்க மற்றும் செயல்திட்டப் புறப்பாடுகளை உருவாக்கா விட்டால், இத்தகைய கடமைப் பொறுப்புகளைத் தலைமேற்கொள்வது ஐயத்திற்குரியதாகவே தோன்று கிறது. இதனை நாம் இரண்டு நடைமுறை யதார்த்தங் களிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, கடந்த ஐம்பது ஆண்டுகளில் புறவய நிலைமை களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இரண்டாவது பண்பாட்டுச் செயல்பாட்டாளர்கள், இந்த மாற்றங் களைப் படைப்பாக்க முயற்சிகளோடு தொடர்பு படுத்தத் திறனற்றுப் போனமை அல்லது கவன மின்றி இருந்தமை. பொருளிலும் உள்ளடக்கத் திலும் போதிய அளவில் மாற்றங்களுக்குள்ளான போதிலும் இதே கருத்தாக்க வகையினங்களை முற்போக்கு இயக்கம் முன்னிலைப்படுத்துமானால், அது தொடர்ந்து தேக்கநிலையிலேயே இருக்கும்.

முற்போக்குப் பண்பாட்டு இயக்கம், இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டு அவற்றின் முன்னணி அமைப்பாகச் செயல் பட்டு வருகிறது. இந்த உறவுநிலையின் பாதிப்பால், பண்பாட்டு அமைப்புக்கள் அரசியல் அதிகாரத் திற்குக் கீழடங்கியவையாக இருக்கின்றன. மேலும், அவற்றின் தன்னிச்சையான முயற்சிகளையெடுக்கும் சுதந்திரம், எதிர்நிலையில் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. முரண்பாடாக, பண்பாட்டு மண்டலத்தின் மீது, அரசியல் அதிகாரம் செலுத்துவது ஒரு தவறான பொருத்தமாகவே இருக்கிறது. மேலும், பண்பாட்டுப் போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கற்பிக்கப் படவில்லை. அண்மைக் காலங்களில் இடதுசாரி அரசியல் நிலைப்பாடுகளில் பண்பாட்டுப் போராட்டங்கள் அழுத்தமாகவே கணக்கிலெடுக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில் முற்போக்குப் பண் பாட்டு இயக்கம் அரசியல் அதிகாரத்தின் கீழடங்கி யிருப்பது, அதன் சுதந்திரமான பண்பை எதிராகப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, இடதுசாரி அனுதாபமும் தாராளமனப்பான்மையும் மிக்க பெருந்திரளான எழுத்தாளர்கள், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களின் ஆதரவை முற்போக்குப் பண்பாட்டு இயக்கம் இழக்க நேரிட்டது. நிராலா, சுமித்ரானந்தன் பந்த், ஹரிவன்ஷ்ராய் பச்சன், ரகுவீர்சஹாய், நிர்மல்ராய் முதலான எண்ணற்ற இந்தி எழுத்தாளர்கள் இந்த வழியைப் பின்பற்றினர். மலையாளத்தில் ஒரு சிலரைத் தவிர பெரும் பாலான எழுத்தாளர்கள் முற்போக்கு இயக்கத்தின் மீது அனுதாபமுடையவர்களாக இருந்தனர். அவர் களுள் எம்.பி.பால், பேராசிரியர் முண்டசேரி (விமர்சகர்கள்), ஞானபீடவிருதுக் கவிஞர் ஜி.சங்கர குறுப்பு, தகழி சிவசங்கரன்பிள்ளை, கேசவதேவ் (புனைகதையாசிரியர்கள்), மகாகவி வள்ளத்தோள் நாராயணமேனோன் ஆகியோர் குறிப்பிடத்தக்க சிலராவர். ஆயின், வெகுவிரைவில் அவர்கள் எல்லோரும் இயக்கத்துடனான தங்கள் தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர் அல்லது பகைமை யுணர்வு கொண்டனர்.

இன்றைக்கு இருக்கக்கூடிய கருத்துநிலை மற்றும் பண்பாட்டுச்சூழல் என்பது 1930களிலிருந்த சூழலி லிருந்து பண்புரீதியான வேறுபாடு கொண்டது. ஏகாதிபத்தியத்தின் செயல்பாட்டுத்தன்மை மாறி யுள்ளது. ஏகாதிபத்தியம் அதன் தாக்கத்தை விரி வாக்கம் செய்வதற்குரிய புதிய கருத்துநிலை மற்றும் அறிவுசார் கருவியைத் தேடிப் பெற்றுள்ளது. முதலாளித்துவம் எங்கும் படர்ந்து பரவும் வகையில் உருவெடுத்துள்ளது. அதே போன்று அதன் கருத்து நிலையும் மிகப் பெரிய அளவில் அதிசக்தி வாய்ந்த தாக உருவெடுத்துள்ளது. அதேபோன்று அதன் கருத்துநிலையும் மிகப்பெரிய அளவில் அதிசக்தி வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. வர்க்கப் போ ராட்டம் புதிய வடிவங்களைப் புனைந்து கொண்டு உள்ளது. மேலும் எல்லா வர்க்கங்களும் உருகி மிதக்கும் நீர்மநிலையில் உள்ளன. வகுப்புவாதம் புதிய நிலைப்பாடுகளை வளர்த்துக்கொண்டுள்ளது. இதன் விளைவாக, முற்போக்குப் பண்பாட்டு இயக்கம் அதன் உருவாக்கக் கட்டத்தில் மரபுரிமையாகப் பெற்ற வகையினங்கள், கருத்தாக்கங்கள் குறித்த விமர்சனபூர்வ பரிசீலனை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்றைய தேக்கநிலையை வென்றெடுக்காமல், இயக்கம் உயிர்ப்புடன் இருக்க இயலாது என்ற நிலை உருவாகியுள்ளது. சில வட்டார இயக்கங்கள், புதிய சவாலை எதிர்கொள் வதற்காகத் தம்மைத்தாமே உள்ளாய்வு செய்வதை மேற்கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது. இது கேரளத்திலும், தமிழகத்திலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த இரண்டு வட்டாரங்களும் நடப்பிலிருக்கிற பண்பாட்டுச் செயற்பாடுகளை விமர்சனபூர்வ நுண்ணாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியில் கொள்கை உருவாக்கங்களையும், செயல்திட்டத் தந்திரங் களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஐக்கிய முன்னணியின் எழுச்சியும் வீழ்ச்சியும்

முற்போக்குப் பண்பாட்டு இயக்கம், அதன் மூலவர்களால் ஒரு பரந்த மேடைத் தளமாகவே உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள அறிவுஜீவிகள், பெருந் தொகுதியான எழுத்தாளர்கள் - அவர்களது நிலைப்பாடுகளில் என்னவிதமான வேறு பாடு இருந்தாலும், அவர்களது தத்துவம் மதம், பண்பாட்டு நம்பிக்கைகளில் என்ன விதமான முரண்பாடுகள் இருந்தாலும் - பொது வேலைத் திட்டங்களுக்காக ஒன்று சேர வேண்டும். அதன் மூலம் நமது பழம் பண்பாட்டைத் தற்காத்து, நமது பழமையை முறையான விமர்சனத்திற்குட்படுத்தி அதன் வழி புதிய பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும்.

இத்தகைய பார்வையே, இயக்கத்தைக் குறுகிய மனப்பான்மை பண்பற்றதாக, அரசியல் பார்வை களின் வேறுபாடுகளைக் கணக்கிலெடுக்காது எல்லா முற்போக்குச் சிந்தனையாளர்களையும் ஈர்க்கும் தன்மையுடையதாக, வளர்க்க உதவியது. ‘இது தான் மிகமிக முக்கியமானது’. முல்க்ராஜ்ஆனந்த் இப்படி எழுதினார் : ‘நாம் வேறுபட்ட வர்க்கம், மதக் கோட்பாடு, சமூக அந்தஸ்து உடையவர் களாக இருந்தாலும், வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் நாம் வேறுபட்ட அணுகுமுறை களைக் கொண்டவர்களாக இருந்தாலும், அவற்றை யெல்லாம் மறந்து, நமது நாகரிகத்தைக் காப்பதற் காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இத்தகைய விரிந்து பரந்த மேடையின் உருவாக்கம் தான் பெரும் படைப்பாளர்திரளின் ஆதரவையும், பங்கேற்பையும் இயக்கத்திற்கு ஈட்டித் தந்தது. அந்தப் படைப்பாளர்திரள், ஒரு வேளை மார்க்சியக் கருத்துகளை வழங்காமல் கூட இருந்திருக்கலாம். யாரெல்லாம் ஐக்கிய முன்னணிக்குள் ஈர்க்கப் பட்டார்களோ, அவர்கள் பண்பாட்டுப் படைப்பு என்பது சமூகப் பயனுடையதாகவும் முற்போக்குத் தன்மையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பண் பாட்டுப் படைப்பு இலக்கியமாக இருக்கலாம், நாடகமாக இருக்கலாம் அல்லது இசையாக இருக்கலாம். ஆனால், அது சமூகப்பயன், முற் போக்கு என்கிற இரட்டை நியதிகளைப் பிரதி பலித்தல் வேண்டும்.

சான்றாக, முல்க்ராஜ்ஆனந்தின் தீண்டாதான், கூலி என்னும் நாவல்கள், இந்தி எழுத்தாளர் யஷ்பாலின் ராஜதுரோகி நாவல், மலையாளத்தில் தகழி சிவசங்கரன்பிள்ளையின் தோட்டியின் மகன், இரண்டுபடிகள், கேசவ தேவின் சாக்கடையிலிருந்து (ஓடையிலிருந்து) என்னும் நாவல்கள் ஆகியன புதிய வாசிப்பு அனுபவத்தை வழங்கியதைக் குறிப்பிடலாம். இதற்கு அவற்றின் மாறுபட்ட கருப்பொருள் மட்டும் காரணமல்ல, அவற்றின் சமூக, அரசியல் முற்போக்குத் தன்மையும் காரணமாகும். இதே விதமாக நாடக அரங்கில் மலையாள நாடக ஆசிரியர் கே.தாமோதரனின், ‘குத்தகைபாக்கி’ (பாட்டபாக்கி) நாடகம், அதன் கருப்பொருளால் மட்டும் வெற்றி பெறவில்லை. அது கிராமத்து மக்கள் திரளின் முன்னர், அவர்கள் எதிர்காலத்தில் அடையக்கூடிய விடுதலை எழுச்சி பற்றிய பார் வையை வழங்கியதும் காரணமாகும். ஐக்கிய முன்னணி அதிக படைப்பு உற்பத்தியும் தாக்கமும் செலுத்திய காலகட்டம் 1944-48 ஆகும். இக்கால கட்டத்தில் இயக்கம், உழைக்கும் மக்களின் பொரு ளாதார அரசியல் போராட்டங்களைத் தமது பண்பாட்டு முன்னேற்றப் போராட்டத்துடன் தொடர்புப்படுத்த முயன்றது. இதன் விளைவாக, இயக்கம் பண்பாட்டுப் பங்கேற்பாளர்களான வெகுஜனத் திரளின் ஆதரவை ஈட்டியது.

இயக்கம் தனது வளையத்திற்குள் எண்ணற்ற முதன்மையான எழுத்தாளர்களையும் அரங்கச் செயற்பாட்டாளர்களையும் ஈர்ப்பதில் வெற்றி கண்டது. எவ்வாறாயினும், 1948 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இடதுசாரிகளும் தாராள வாதப் பிரிவினருக்கும் இடையில் கருத்து வேறு பாடுகள் தோன்றின. அத்துடன் இடதுசாரிகள் இயக்கத்தைக் கைவிட்டனர். இது இயக்கத்தின் தகர்வுக்கு இட்டுச் சென்றது. இயக்கம் கைவிடப் பட்டதற்கான முக்கிய காரணமாகத் தாராளவாதப் பிரிவினர் பின்வரும் கருத்தை மேற்கோள் காட்டினர். இடதுசாரிகள் ‘பெரிய அண்ணன்’ மனோபாவத் துடன் நடந்து கொண்டனர். அத்துடன் கட்டுப் பாட்டை இயக்கத்திற்குள் திணிக்க முயன்றனர். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் இந்த வாதத்தை நிரா கரித்து, வேறொரு மாற்று விளக்கத்தை முன் வைத்தார். அதன்படி, ஐக்கிய முன்னணி உள் முரண்பாட்டில் சிக்கித் தவித்தது. தாராளவாத உறுப்பினர்கள் சமூக முன்னேற்றம்தான் பண் பாட்டுச் செயல்பாட்டியத்தின் குறியிலக்கு என்னும் இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமூக முன்னேற்றத்தை உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ்தான் அடைய முடியுமென்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

நம்பூதிரிபாட்டின் கருத்துப்படி, கருத்து முரண்பாட்டின் விளைவாகத்தான் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டதேயன்றி, கம்யூனிஸ்ட் உறுப்பினர் களின் குறுகிய மனப்பான்மையின் காரணமாக அல்ல. காரணம் எதுவாக இருந்தாலும், விளைவு முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்திற்குப் பேரிடராக அமைந்தது. இயக்கத்திலிருந்த தாராளவாதப் பிரிவினர் இயக்கத்தை விட்டு விலகினர். அவர் களுள் சிலர் இயக்கத்தின்மீது பகைமை பாராட்டத் தொடங்கினர். சிலர் இயக்கத்தைக் கண்டனம் செய்யவும் தொடங்கினர். கம்யூனிஸ்டுகள் அவர்கள் பங்கிற்கு ஐக்கிய முன்னணி பற்றிக் கருத்து வழங்கினர். அத்துடன் தனிச்சால் ஓட்டத் தொடங்கினர். இதன் பின்தொடர்ச்சியாக முற்போக்கு இயக்கம், மக்களது பண்பாட்டுப் போராட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. 1970களில் ஏறக்குறைய இயக்கம் தனது அமைப்பு வலிமையை இழந்து விட்டது.

இயக்கத்தின் இந்தத் தோல்வி அதனை நிரந்தர மான கைவிடுகைக்கு இழுத்துச் செல்லவில்லை. இந்தச் சூழலில் நம்பூதிரிபாட் மூன்று பொருத்த மான கேள்விகளை எழுப்பினார். முதலாவதாக, தொழிலாளர்-உழவர் அமைப்புகளில் வேலை செய்யக்கூடியவர்களுக்கும், அவற்றுக்கு வெளியே இருப்பவர்களுக்கும் இடையில் ஒரு ஐக்கிய முன்னணியைப் போலியாகக் கட்டுவது தேவையா? இரண்டாவதாக, மேற்சுட்டிய கேள்விக்கு உடன் பாடாக ‘ஆம்’ எனப் பதில் வருமானால், கூட்டணியைப் பாதுகாக்கின்ற பொறுப்பு, தொழிலாளர் - உழவர் அமைப்புகளுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு இல்லையா? மூன்றாவதாக, ஏற்கெனவே ஐக்கிய முன்னணி தகர்ந்துவிட்டதனால், அதை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? நம்பூதிரிபாட்டின் வாதம் என்ன வெனில், வர்க்க எதிரியை எதிர்ப்பதற்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு நிறைய நண்பர்களை ஒன்றாகத் திரட்டுகின்ற அரசியல் நிலைப்பாடு, பண்பாட்டுத் துறையிலும் பின்பற்றப் படல் வேண்டும் என்பதேயாகும். அவர் ஐக்கிய முன்னணி என்கிற கருத்தைப் புதுப்பிப்பதாக இந்த ஆலோசனையை 1971இல் வழங்கினார். இயக்கத்தைப் புதுப்பிப்பதற்கு 1948க்கு முந்தைய காலகட்டத்தி லிருந்து படிப்பினைகள் பெற வேண்டுமென்பது நிரூபணமாகியுள்ளது.

வட்டார இயக்கங்களின் புத்தெழுச்சி

நம்பூதிரிபாட் விவாதத்திற்கு முன்வைத்த கருத்து முளைவிடுவதற்குச் சில காலமானது. ஐக்கிய முன்னணி என்னும் கருத்து, அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையாக உருவாகிவிட்டாலும், பண்பாட்டுத் தளத்தில் அதன் முந்தைய பரிசோதனை, ஏராளமான வடுக்களைத் தந்து சென்றுள்ளது. நிறைய பேர் அதன் மீது சந்தேகப்படத் தொடங்கியுள்ளனர்; சிலர் பகைமையுணர்வு பாராட்டுகின்றனர். ஆகவே முற்போக்கு இயக்கங்களை மீட்டுயிர்ப்பு செய் வதிலும், மறுகூட்டுத்தொகுதியாக்குவதிலும் ஏராள மான இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்; அவர்கள் நவீன, பின்னை நவீன மனப்பாங்குகளின் தாக்கத்தை உட்படுத்தியபோது, அது எதிர் நிலையில் முற்போக்குப் பண்பாட்டின் சமூக அக்கறைக்கு ஆதரவான நிலையை உருவாக்கியது. அதே நேரத்தில் சமூகத்தில் புதிய அழகியல் உணர்வுநலனின் எழுச்சியையும் ஏற்படுத்தியது. முற்போக்குப் பண்பாட்டின் வெற்றிகரமான மறு எழுச்சி என்பது, இந்தப் புதிய சூழலைக் கையாளும் திறமை சார்ந்தே இருக்கிறது. இந்தச் சூழலில்தான் முற்போக்குப் பண்பாட்டு இயக்கங்களின் மீட்டு யிர்ப்பு, மறு கூட்டுத் தொகுதியாக்கம் பற்றிய முயற்சிகள் தொடங்கியுள்ளன. இத்தகைய முயற்சி களில் கேரளம், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், வங்காளம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

கேரளத்தில் முற்போக்கு இயக்கம், 1985ஆம் ஆண்டு ‘புரோகமன கலா சாஹித்ய சங்கம்’ (முற்போக்கு கலையிலக்கிய சங்கம்) என்று மறுதோற்றுவிப்பும் மறுபெயரிடலும் பெற்றது. 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தனது கடந்த கால அனுபவத்தை விரிவான விமர்சன உள்ளாய்வுக்கு உட்படுத்தியதன் உச்ச வளர்ச்சியில், இம்மறு உருவாக்கத்தைப் பெற்றது. இந்தச் செயல் பாட்டில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் செயலூக்க மான பங்கு வகித்தார். கடந்த கால அனுபவத்தைப் பற்றிய மதிப்பீடு என்பது, புறவயநிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நவீனத்துவம் மற்றும் பின்னை நவீனத்துவத்தின் சவால்கள், முற்போக்கு இயக்கம் செய்த தவறுகள் ஆகியவற்றை உள்ளடக்கி யதாக இருந்தது. இந்த உள்முக ஆய்வின் விளைவாகத் தோன்றிய கருத்துக்கள், 1985ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘எழுத்தாளர்களும் காலத்தின் சவால்களும்’ என்னும் சிறுபிரசுரத்திலும், 1991 ஆம் ஆண்டில் பெரும்பாவூரில் நடந்த எழுத்தாளர் சங்க மாநாட்டு அறிக்கையிலும் முறைப்படி தொகுத்தளிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள், மாறியநிலைமைகளைக் கையாள்வதற்குப் பின்பற்ற வேண்டிய புதிய பார்வைகளையும் புதிய செயல் பாட்டு வடிவங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டி யுள்ளன.

எவ்வாறாயினும், இவை இன்றைய யுகம் இயக்கத்திற்கு முன்னால் ஒரு ‘இராஜபாதையைத்’ திறந்து வைத்திருக்கிறது, என்று அலங்காரமாகச் சொன்னதைத் தவிர, புதிய வடிவங்கள் எப்படி யிருக்க வேண்டுமென்று தெளிவாக வரையறுத்துச் சொல்லவில்லை. இருந்த போதிலும் பெரும்பாவூர் மாநாட்டில் ஏற்றுக்கொண்ட அறிக்கையும், ஒற்றப் பாலம் மாநாட்டுப் பண்பாட்டுச் செயல்திட்ட அறிக்கையும், ஆரோக்கியமான ஒரு புறப்பாட்டை அடையாளங்காட்டின. அவை எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இயக்கத்தின் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான விமர்சன மதிப்பீட்டை மேற்கொண்டிருந்தன. இயக்கம் கடந்த காலத்தில் செயல்பாட்டில் வைத் திருந்த கொள்கையின் பலவீனங்களையும் இயக்கம் குறியிலக்காக முன்னிறுத்திய யதார்த்தவாதத்தின் எல்லைகளையும் அவை அடிக்கோடிட்டுக் காட்டின.

இந்த ஆவணங்கள் மூன்று முக்கிய களங்களில் சுயவிமர்சனப் பார்வையை மேற்கொண்டன. ஒன்று, உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையிலான உறவுநிலையின் இயல்பு; இரண்டு பண்பாட்டிற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு நிலை; மூன்று, படைப்பாளர்களின் சமூக அக்கறை. முதலாவதாக, உருவம் உள்ளடக்கம் குறித்துத் தொடக்கத்தில் நடந்த விவாதத்தில் கம்யூனிஸ்டுகள் உருவத்தின் முதன்மையை மறுத்து, முற்போக்கு உள்ளடக்கத்திற்குச் சார்பான நிலையெடுத்தமையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினர். உள்ளடக்கத்திற்கு முதன்மை வழங்கியது இயந்திரத்தனமான பார்வையென்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக, உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையிலான உறவுநிலை, இயக்கவியல் பார்வையில் அணுகப் படவேண்டுமென்று விவாதிக்கப்பட்டது. இரண்டா வதாக, கலைஞர்கள் பெரும்பாலும் அரசியலி லிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவேண்டு மென்ற பழமைவாதப் பார்வையை எதிர்த்து, கலைஞர்களின் அரசியல் அக்கறையை ஒத்துக் கொண்டனர். அரசியலற்ற பண்பாட்டுச் செயல் பாட்டினால் எந்தவிதப் பயனுமில்லை என்கிற நிலைப்பாட்டை இயக்கம் ஏற்றுக்கொண்டது. அதேவிதமாக முன்னால் வாதத்திற்குள்ளாக்கப் பட்ட, படைப்பாளர்களின் சமூக அக்கறை மட்டுமே ஒரு பண்பாட்டுப் படைப்பை முற்போக்கானதாக, தலைசிறந்ததாக உருவாக்கிவிட முடியாது என்கிற கருத்தை ஏற்றுக்கொண்டனர். கலை இலக்கியப் படைப்புக்களின் தரம் கூட சமூக அக்கறையை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டுமென்பது தேவையில்லை என்கிற கருத்தும் உணரப்பட்டது. அமைப்பு ரீதியாகவும் மாற்றம் தேவையென் பதையும் அவர்கள் உணர்ந்தனர். ஆகவே கலை, பண்பாட்டு ஆர்வமுடைய அனைவரும் சுதந்திர மாகப் பங்கேற்கக்கூடிய ஒரு திறவை அமைப்பு, முன்மொழியப்பட்டது. இதனால் அதன் தளம் விரிவடைந்தது.

1948க்கு முன்பிருந்த ஐக்கிய முன்னணி செயல் திட்டம் இப்போது திரும்பத் தண்டவாளங்களில் ஏறிவிட்டதாகவே தோன்றுகிறது. முழுமையாக என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அப்போது ஜனநாயக மையவாதம் கட்சியிலும் அதன் முன்னணி அமைப்புகளிலும் ஆழமாக வேரூன்றியிருந்தது. இதன் விளைவாக, ‘பரந்த தாராளவாத இடது சாரித் தன்மையை’ இயக்கத்திற்குள் ஈர்க்க வேண்டு மானால் எதிர்ப்பைப் பொருட்படுத்தாத வகையில் சிரத்தையுடன் செயலாற்ற வேண்டும். இல்லை யெனில், அது மிகத் தொலைதூரத்ததாக மாறி விடும். முற்போக்கு கலை இலக்கிய சங்கம் (புரோக மன கலா சாஹித்ய சங்கம்) அதன் புதிய பிம்பத்தை முன்னிறுத்தும் வகையில், அமைப்புரீதியான, படைப்பாக்கரீதியான, அறிவுப்புலமைரீதியான, சமூகரீதியான பரிமாணங்களை உள்ளடக்கிய குறிக் கோள் தன்மையுடைய விரிவான செயல் திட்டத்தை உருவாக்கியது. செயல்பாடுகளின் மைய நீக்கம், நாட்டார்ப் பண்பாட்டை முன்னெடுத்தல், செவ்வியல் பண்பாட்டு வடிவங்களை ஊக்குவித்தல், பெண் களின் பங்கேற்பை உறுதிப்படுத்துதல் முதலான வற்றுக்குப் புதிய செயல்திட்டத்தில் அழுத்தம் தரப்பட்டது.

புதிய செயல்திட்டம் பல்வேறு சீர் திருத்த நடவடிக்கைகளின் தொகுதியாக இருந்தது; இடதுசாரி முகமுடைய இயக்கத்திற்குத் தேவை யான திசைவழி, மைய நோக்கம் என்பனவற்றில் குறைபாடுடையதாக இருந்தது. இயக்கத்தின் உருவாக்க காலகட்டத்தில், அதன் மையமாக இருந்த வர்க்கம், வர்க்கப் போராட்டம், முற்போக்கு, ஏகாதிபத்தியம் முதலான கருத்தாக்க வகையினங்கள், புதிய செயல்திட்டத்தில் முனைப்பாக இடம்பெற வில்லை. இவற்றுள் சில, பொதுஅறிக்கையில் தென்பட்டன. ஆயின், இந்தக் கருத்தாக்க வகை யினங்களின் மாறுபட்ட பண்பு மற்றும் புதிய செயல்திட்டத்தோடு இவற்றுக்குள்ள இயல்வகைத் தொடர்பு என்பன போதுமான அளவில் விளக்கப் படவில்லை. இதன் விளைவாகப் புதிய செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பெரும்பான்மை யானவை நடைமுறைப்படுத்தும் நிலையிலேயே தடுமாறின. ஆகவே அவை விருப்பத்திற்குரிய சிந்தனையாகவே எஞ்சி நின்றன. இயக்கத்தின் உருவாக்க காலகட்டத்திலிருந்தே செல்வாக்குப் பெற்ற வர்க்கம், வர்க்கப் போராட்டம், முற்போக்கு போன்ற கருத்தாக்க வகையினங்களின் கூட்டுத் தொகுதியுடன், போதுமான அளவிற்கு உரை யாடாததே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.

பெரும்பாவூர், ஒற்றப்பாலம் மாநாட்டு ஆவணங்கள், கொல்லம் மாநாட்டு அறிக்கையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. அடிப்படையில் அது முந்தியவற்றின் மறுஅறிக்கையாகவே இருந்தது. ஆனால், அது அவற்றை அரசியல்ரீதியாகக் கை யாண்டது. அத்துடன் செயல்திட்டத்தை விரிவு படுத்தியது. எவ்வாறாயினும், இந்த முயற்சிகள் எவையும் கடந்தகாலத்திலிருந்து அடிப்படையான புறப்பாட்டைச் சுட்டிக்காட்டவில்லை. இதன் விளைவாக, அவர்களுக்கு ஆதரவான வெகுஜன கிளர்ச்சி எதனையும் உருவாக்கமுடியவில்லை. ஆகவே, கேரளத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கம், மந்த கதியிலேயே இருக்கிறது. கேரளத்தின் கதையே தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் உண்மையாகியிருக்கிறது. அங்கும் இயக்கம், அதன் மறுசெயல்பாட்டிற்கு முயன்று கொண்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில், இயக்கம் மிக மோச மான நிலையிலிருக்கிறது. ஏறக்குறைய அங்கு வழக்கொழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

முற்போக்கு இயக்கம், புதிய அமைப்புரீதியான செயல்திட்டம் சார்ந்த படிநிலைகள் வாயிலாக மறுஎழுச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவை பெரும்பான்மையான வட்டாரங் களில் தாக்கம் ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை. எனவே, இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏராளமான எதிர்பார்ப்புகளுடனும் ஆதிக்கத்துடனும் கணிச மான ஆதரவுடனும் தொடங்கப்பட்ட இயக்கம், தற்போது தளர்நிலைக்கு வரக் காரணம் யாது? ஏராளமான காரணங்களுள், இரண்டு நம்பத் தக்கதாகத் தோன்றுகின்றன. ஒன்று, 1948க்குப் பிந்தைய காலகட்டத்தில் பண்பாட்டிற்கும் அரசிய லுக்கும் இடையிலான உறவுநிலையில், பண்பாடு அரசியலுக்குக் கீழடங்கியதாகப் படியிறக்கம் செய்யப்பட்டது. மேலும், பண்பாடு அரசியல்சக்தி களின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டது. அரசியல் சக்திகள் பண்பாட்டுப் போராட்டங்களுக்குக் கொள் கை ரீதியாகவும் நடைமுறையின் எந்த விதமான முக்கிய பங்கும் வழங்கவில்லை. கொள்கை ரீதியாகப் பண்பாடு பக்க நிகழ்வாகவே கருதப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பண்பாட்டுப் போராட்டங்கள் இரண்டாம் நிலையினவாகக் கீழ்நிலைக்குத் தள்ளப் பட்டன. இதன் விளைவாக, அரசியலுக்கும் பண் பாட்டிற்கும் இடையிலான உறவுநிலையைப் படைப்புத்தன்மையுடனும் இயக்கவியல் தன்மை யுடனும் பார்ப்பது தவிர்க்கப்பட்டது. இது படைப் பாக்கத்திறனை மட்டும் எதிர்நிலையில் பாதிக்க வில்லை; சுதந்திரமான சிந்தனையாளர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. அவர் களைச் சென்றடையக் கூடிய சமீபத்திய முயற்சி யென்பது, வெறும் கருத்துநிலை சார்ந்த மழுங் கடிப்பிலேயே முடிவடையும்.

இரண்டாவதாக, முற்போக்கு இயக்கம் அதன் உருவாக்க காலகட்டத்தில் முன்மொழிந்த பாதை யினையும் மூலக்கோட்பாடுகளையும் பின்பற்றுவது. இயக்கப் பண்பாட்டுப் படைப்பு சார்ந்து இரண்டு உள்தொடர்புடைய நிலைப்பாடுகளைப் பின் பற்றியது. ஒன்று, பண்பாட்டின் கருவிப் பயன்பாட்டுத் தன்மை, இரண்டு, அரசியல் அணி திரட்டலுக்கான பண்பாட்டுக் குறுக்கிடல். முதலாவதாக இலக்கியம், பாடல்கள், ஓவியங்கள், நாடகங்கள் முதலான வேறுபட்ட பண்பாட்டுச் செயல் வடிவங்கள் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்த வகைக்குள் அடங்கக்கூடிய தொடக்ககால இடதுசாரி இலக்கியங்களில் பெரும்பகுதியானவை, வர்க்கப் போராட்டங்களுக்குக் காரணமான நில வுடைமை மற்றும் முதலாளித்துவ சுரண்டலையே குவி மையப்படுத்தின. அவற்றுள் பெரும்பான்மை யான படைப்புக்கள் கச்சாத் தன்மையில் அமைந்தவை; மனித வாழ்க்கையின் மென்மையான உணர்வுகளைச் சீரிய முறையில் படம் பிடித்துக் காட்டத் தவறியவை. இதன் விளைவாக, அவர்களால் பொது மக்களிடம் மட்டுமல்லாது, இடதுசாரி சிந்தனையுடையவர் களிடத்தும்கூடப் பாதிப்பை ஏற்படுத்த இயல வில்லை.

பண்பாட்டுக் குறுக்கிடலில் சாதியியம், சமயச் சார்பான மூடநம்பிக்கைகள் முதலான தனித்த வழக்கங்கள் சார்ந்த செயலாட்சி வரம்புக் குள்ளேயே பண்பாடு பயன்படுத்தப்பட்டது. இந்த வழக்கங்கள் குறித்த விமர்சனம் தனித்த பண்பாட்டு வடிவங்களின் வாயிலாக வழங்கப்பட்டன. இந்த வகையான பண்பாட்டுக் குறுக்கிடல்கள், பண் பாட்டிற்குள் குறுக்கீடு செய்யவில்லை. ஆகவே, அது பண்பாட்டு உணர்வுநிலையை உருமாற்று வதற்கு உதவிடவில்லை. குறுக்கிடல்கள், பண்பாடு சார்ந்து மட்டும் நிகழாமல் பண்பாட்டிற்குள்ளும் நிகழ்கின்றபோதுதான் மாற்றத்தைச் சாத்தியப் படுத்த முடியும். பண்பாட்டு யதார்த்தத்திற்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையில், இயக்க வியல் சார்ந்த உறவுநிலை இருக்கிறபோதுதான், இது சாத்தியமாகும். முற்போக்குப் பண்பாடு, உண்மையிலேயே முற்போக்காக இருக்கிற போது தான் இத்தகைய உறவுநிலையைக் கொணர முடியும்.

12 & 13, மே, 2012 - இல் கோயம் புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் (50ஆவது ஆண்டு) பொன்விழா மாநாட்டில் ஆற்றிய உரையின் மூலம் : Progressive Cultural Movement in India : A Critical Appraisal, Social Scientist, Vol.39 / Nos. 11-12 / Nov - Dec.2011, PP 14-25.

தமிழில் : பா.ஆனந்தகுமார்

Pin It