மானுடவியல் அறிஞர் பிலோ இருதயநாத் இந்திய மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி. இந்தியாவிலுள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும், நேரில் சென்று சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளைப்பற்றி அவர்களோடு பழகி, உண்டு, உறங்கி, அறிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவற்றைத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக வடித்துத் தந்தவர் பிலோ இருதயநாத்.

மானுடவியல் அறிஞர் பிலோ இருதயநாத்

philo iruthayanathமைசூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னை சாந்தோமில் கல்வி கற்றார். சென்னை மந்தைவெளியில் உள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தார். பள்ளியில் தமிழாசிரியராக இருபத்தி ஐந்து ஆண்டுகாலம் சிறக்கப் பணிபுரிந்து மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற பெருமையும் பிலோ அவர்களுக்குண்டு. பிலோ இருதயநாத் அவர்களின் தந்தையார் டாக்டர் ஏ. எஃப். மைக்கேல், இவர் ஒரு பொது மருத்துவர், உலக யுத்தத்தின் போது கேப்டனாகப் பணியாற்றியவர். அதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவம் அவருக்குண்டு. இருதயநாத் அவர்களின் தாய் வழிப்பாட்டனாரோ இந்தியாவிற்கு வரும் வெள்ளைக்காரர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சுற்றிக்காட்டும் வழிகாட்டியாக இருந்தவர். தன் முன்னோர்களின் வழிக்காட்டுதலே தன் கள ஆய்வுப் பணிகளுக்கு ஓர் உத்வேகத்தைத் தந்தது என்று பிலோ அவர்கள் குறிப்பிடுவதுண்டு.

ஆய்வும் பணியும்

பிலோ இருதயநாத் அவர்கள் தன் ஆசிரியர் பணிக்கிடையிலும், அக்காலத்து மிதிவண்டியை மட்டும் நம்பி பயணம் மேற்கொண்டு ஆதிவாசிகளைப் பற்றி ஆராய்ந்து சுவைப்பட பல ஆய்வுரைகளை எழுதியவர். இந்தியா முழுவதும் மிதிவண்டியில் சுற்றித் திரிந்தவர் என்பதே இவரின் தனிச்சிறப்பு. பயண நாட்களில் சைக்கிள் கேரியரை மரத்தோடு இணைக்கும் பலகையை மட்டும் போட்டுப் படுத்துறங்கக் கூடியவர் பிலோ இருதயநாத். தமிழகத்தில் உள்ள ஆதிவாசிகளைப் பற்றிய இவரது கட்டுரைகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடனும் விறுவிறுப்புடனும் எழுதப்பட்டவை. ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கறுப்புக் கண்ணாடி, பாக்ஸ் டைப் கேமரா என்று பிலோ அவர்களின் தோற்றம் தனித்துவமானது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தமிழ் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் இருதயநாத்திடம் “காட்டிற்குச் சென்று பழங்குடி மக்களை நேரில் சந்தித்து அவர்கள் வாழ்வினைப் பற்றி சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு எழுதுங்கள்” என்று சொன்ன ஆலோசனையை மனதில் கொண்டு இந்தியாவில் அத்தனைக் காடுகளுக்கும் பயணம் செய்து பழங்குடிகளின், இயற்கையோடு இயைந்த வாழ்வியலை உள்ளது உள்ளபடியே தன் படைப்புகளின் வழியே பதிவுசெய்துள்ளார், பிலோ இருதயநாத் அவர்கள்.

பிலோ இருதயநாத் அவர்களின் படைப்புகள்

பிலோ அவர்கள் இந்தியாவிலுள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கைமுறை பற்றி அறிந்துகொண்டு அவற்றை இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மிக நுட்பமான முறையில் பல கட்டுரைகளாகவும் நூல்களாகவும் தொகுத்தவர். அவற்றில் சில முக்கியமான படைப்புகள் பின்வருமாறு:

ஆதிவாசிகள், காடுகொடுத்த ஏடு, ஏழைகளின் குடும்பக் கலை, மக்கள் வணங்கும் ஆலயம், நீலகிரி படகர்கள், அறிவியல் பூங்கா, கொங்கு மலைவாசிகள், காட்டில் என் பிரயாணம், இமயமலைவாசிகள், காட்டில் கண்ட மர்மம், காட்டில் மலர்ந்த கதைகள், கேரள ஆதிவாசிகள், யார் இந்த நாடோடிகள்? தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு, குறிஞ்சியும் நெய்தலும், கோயிலும் குடிகளும், கோயிலைச் சார்ந்த குடிகள் இவை போன்ற படைப்புகளோடு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களில் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணம் குறித்து பிலோ இருதயநாத் அவர்களின் கருத்து

"பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு அவர் தரும் குறிப்புகள் மிக முக்கியமானவை. அவர் பலமுறை வலியுறுத்தும் ஒரே விசயம் “எங்கே பயணம் செய்ய நினைத்தாலும் தனியே பயணம் செய்யுங்கள், முடிந்தால் துணைக்கு ஒரு நண்பரோடு பயணம் செய்யலாம். ஆனால் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக பயணம் செய்தால் அது எதற்கும் ஒத்து வராது. ஆளுக்கு ஒரு யோசனை பிறக்கும். ஆளுக்கு ஒரு விருப்பம் இருக்கும். உணவு, தூக்கம், பொழுது போக்கு என்று பயணம் விரயமாகிவிடும். அது போலவே நிறைய பார்க்கவேண்டும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். பார்த்த விசயங்களில் ஆழமாகக் கவனம் செலுத்துங்கள்" என்கிறார் பிலோ.

பிலோ அவர்களின் ஆய்வு அனுபவங்கள்

‘கசவா’ என்ற பழங்குடியினரைக் காண்பதற்காக அவர் ஒருமுறை மசினிக்குடி என்ற மைசூருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். அவற்றைப் பற்றி எழுதும் போது அவர் தெரிவிக்கும் விசயங்கள் ஆச்சரியமூட்டுபவை. ‘மசினி’ என்பது மலைவாசிகளின் தெய்வம், அதன் குடில் அவ்விடம் என்பதால், மசினிக்குடி என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள பூர்வீகக் குடிகளில் ‘கசவா’ என்ற மலைவாழ் மக்களே மிகவும் குறைந்த எண்ணிக்கையுடையவர்கள். அவர்களது மொத்த எண்ணிக்கை 423. அவர்கள் மலையடிவாரத்தில் உள்ள சதுப்பு நிலங்களில் வாழ்கிறார்கள். அவர்களது தொழில் யானையின் கழிவைச் சேகரித்து அவற்றை விற்பதுதான். இந்தக் கழிவுப் பொருட்களை வாங்கிச் செல்வதற்குத் தனியே வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லாரியில் வந்து சேகரிக்கப்பட்ட கழிவினை (லத்திகள்) வாங்கிப் போகிறார்கள். அதிபயங்கரமான ஆபத்துகள் நிறைந்த காட்டிற்குள் வழி தெரியாமல் தட்டுத்தடுமாறி பாதையைக் கண்டுபிடித்து கசவர்களைச் சந்தித்து அவர்களது வாழ்வியலை அறிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு யானையைப் பற்றித் தெரிந்த அரிய பல நுட்பங்கள் அனைத்தையும் சேகரித்தும் வந்திருக்கிறார் பிலோ இருதயநாத் அவர்கள்!

பிலோ அவர்கள் காட்டிற்குள் சென்று ஆதிவாசிகளைச் சந்திக்கும் போது, ஒவ்வொரு நாளும் தான் படுப்பதற்குள் அன்று தான் பார்த்த, கேட்ட செய்திகளைத் தன் குறிப்பேட்டில் விரிவாக எழுதிவிடுவார். அதன்பிறகு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் கண்ட தகவல்கள் ஏதாவது சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்று சங்க இலக்கியப் பாடல்களைக் கொண்டு ஆராய்வார். இப்படித் தேடும் போது கிடைத்த பல ஒற்றுமையான செய்திகளைத் தன் கட்டுரையில் பதிவும் செய்துள்ளார். இவை அனைத்துமே பிலோ அவர்களின் ஆய்வு ஈடுபாட்டை நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

தொலைக்காட்சியின் ‘நேஷனல் ஜியோகிராபி’ அலைவரிசையில் காட்டிற்குள் சுற்றித்திரியும் அயலகக் கானுயிர் புகைப்படக் கலைஞரைக் காணும்போது நமக்கு, இப்படி ஒருவர் தமிழ்நாட்டில் இல்லையே எனத் தோன்றும். அந்த எண்ணத்தை மாற்றும் முகமாக ஊடகத் துறை முன்னேற்றம் அடையாத அக்காலத்திலேயே எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லாத நேரத்தில் தன்னுடைய சுய முயற்சியால், பிலோ அவர்கள் காட்டிற்குள் மேற்கொண்ட சாகசப் பயணங்கள் நம்மை இன்றும் மெய்சிலிர்க்க வைப்பவை. கானுயிர் பயணங்களின் முன்னோடித் தமிழன், தமிழ்நாட்டின் பிலோ இருதயநாத் என்று சொன்னால் அது மிகையன்று.

பிலோ இருதயநாத் தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் குறித்து பல அரிய தகவல்களை எழுதியிருக்கிறார். முக்கியமாக, தமிழ் இலக்கியத்தில் வரும் குறவர்கள் வேறு, நரிக்குறவர் வேறு என்கிறார் பிலோ! நரிக்குறவர்கள் பெரும்பாலும் குஜராத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களே என்று குறிப்பிடுகிறார். குறவர்கள் பேசும் மொழியான “வாக்ரிபோலி” மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது என்றும், அது ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகளின் கலப்பு எனவும் சுட்டிக் காட்டுகிறார் பிலோ இருதயநாத்.

மேலும், நரிக்குறவர்கள் தங்கள் இனத்துக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வர். இனத்தூய்மை பேணுவது அவர்களின் முக்கியமான இயல்பு. தனக்கு விருப்பமில்லா மணவாழ்க்கையிலிருந்து குறவர் இனப் பெண்கள் மண விலக்கு பெறமுடியும். பஞ்சாயத்து கூடி, கருத்து வேறுபாடுகளைக் களையப் பெரியோர் முயற்சி செய்வர், அது சாத்தியமாகா நிலையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக்கோலை எடுத்து மூன்றாக முறித்து அந்த நீரில் போடச் செய்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குள்ளான மணஉறவு முறிந்துவிட்டதாக அர்த்தம்; என்னே! ஒரு எளிய தீர்வு என வியந்துரைக்கிறார் பிலோ!

மேலும், நரிக்குறவர்கள் பெண்குழந்தை பிறந்தால் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தான் பெண்ணுக்கு வரதட்சணைத் தர வேண்டும், திருமணச் செலவையும் ஏற்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருக்கிறது. மேலும், வயதான பெரியோரைப் போற்றுவதும் இச்சமூகத்தின் முக்கியக் கடமையாக இருக்கிறது. நம் சமூகம் மறந்து கொண்டிருக்கின்ற பெண்ணின மதீப்பீடுகளை நரிக்குறவர் சமூகம் இன்றும் கடைப்பிடிப்பது போற்றுதலுக்குரியது. இப்படிப் பழங்குடி வாழ்வியல் சார்ந்த பல நன்னெறிகளைத் தன் ஆய்வின் வழிக் கண்டுரைக்கிறார் பிலோ இருதயநாத் அவர்கள்.

பிலோ இருதயநாத் ஒரு பயணி என்பதாக எடுத்துக்கொண்டால், நாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். ஒரு தனிநபராக காடு மேடெல்லாம் அலைந்து இந்தியாவின் பல பகுதிகளையும் பார்த்திருக்கிறார். அவர் பெரும்பாலும் பார்த்தது காடு வாழ் மக்களையே. இப்போதும் நாம், காட்டுமிராண்டி என்றழைக்கும் மக்களை ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு சகமனிதனாக நினைப்பது என்பதே பெரிய ஆச்சரியம்! இந்நிலையில், அவர்களுடன் பழகி, உண்டு, உறங்கி, குறிப்புகள் எடுத்து அவர்களின் வாழ்வியலை இன்றும், நமக்குச் சொல்லும் படைப்புகளாக வடித்தெடுத்த பெருமை பிலோ அவர்களையே சேரும்! இவரை “ஒரு தனிமனித இயக்கம்” என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

பயணம் ஒரு கலை…. ஏமாந்தால்? என்ற நூலில் பயணத்தின் சவால்கள், சிரமங்கள், ஆபத்துகள், விலங்குகள் என்று அனைத்தையும் விவரிக்கிறார் பிலோ இருதயநாத். இவர் மனிதர்களை நம்பி மட்டுமே பயணிக்கிறார். பயணத்தில் அவர் சந்திக்கும் நாடு வாழ் மனிதர்களில் சிலர் திருடர்களாய் இருக்கிறார்கள். ஆனால் காட்டில் அவரிடம், பரிவுடன் பழகும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர் எச்சரிக்கை செய்வது எல்லாமே நாட்டில் வாழும் மனிதர்களைப் பற்றியும் காட்டில் வாழும் விலங்குகளைப் பற்றியுமே!

பிலோ அவர்கள் தன் பயணத்தில் ஒரு இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூட, ஆதிவாசிகளிடம் அனுமதி கேட்கிறார். ஏனென்றால், “நான், என் அதிகாரத்தை இந்த அப்பாவிகளிடம் காட்ட விரும்பவில்லை” என்றுரைக்கிறார். கள ஆய்வுப் பணியிலும் ஒரு நேர்மையினைக் கடைப்பிடிப்பது பிலோ அவர்களின் தனித்த பண்பாக இருக்கிறது. பொதுவாக பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாடு குறித்துத் தமிழில் அதிக நூல்கள் வெளிவருவதில்லை. அவர்கள் பொருளாதாரரீதியாகவும் பண்பாட்டு நிலையிலும் மிகவும் ஒடுக்கப்பட்டு வருவது குறித்தும் பொதுவெளியில், இன்றுவரை சரியான கவனம் உருவாகவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. பிரிட்டிஷ்காரர்களும், கிறித்தவ மிஷனரிகளும் மட்டுமே பழங்குடி மக்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகே மானுடவியல் ஆய்வாளர்கள் இந்தியாவின் பல்வேறு பழங்குடி மக்கள் குறித்து ஆராயவும் ஆவணப்படுத்தவும் தொடங்கினார்கள்.

‘எட்கர் தர்ஸ்டன்’ தொகுத்த ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்கிற நூலில் தென்னிந்தியச் சாதிகள் மற்றும் பழங்குடி மக்கள் குறித்தும் அதிக தகவல்கள் புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளன. தர்ஸ்டன் அவர்கள் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த ஒரு பிரித்தானியர். ஏழு தொகுதிகளாக வெளியாகியுள்ள இவரின் புத்தகம் தென்னிந்திய மானுடவியலின் ஒரு அடிப்படை நூலாகும். இருப்பினும், ஒரு இந்தியர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், தொடக்கப் பள்ளியாசிரியர், தனது அதீத விருப்பத்தின் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தனி ஒரு ஆளாகத் தேடிச் சென்று ஆராய்ந்து, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பது ஒரு அரும்பெருஞ் சாதனையே! மேலும், தமிழகத்தின் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்த பெருமையும் பிலோ அவர்களுக்குண்டு என்பதும் ஒரு கூடுதல் செய்தி.

தனிமனிதனாய் முயன்று

இப்படி பழங்குடிகளின் வாழ்வியலை உலகுக்கு உணர்த்தியவருள் மிக முக்கியமானவர் அறிஞர் பிலோ இருதயநாத் அவர்கள். ஒரு அரசோ அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையினரோ எடுத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியினை ஒரு தனி மனிதனாய் நின்று பொருட்செலவையும், களைப்பையும், உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாகவும், முயற்சித் திருவினையாக்கும் என்ற நோக்கோடும் முயன்று செய்து முடித்தவர் மானுடவியல் அறிஞர் பிலோ இருதயநாத் அவர்கள். அவரின் நூற்றாண்டு கடந்து போனாலும் அவரின் நினைவும் ஆய்வுப் பணிகளும் என்றும் போற்றப் படவேண்டும். அவரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப் படவேண்டும். பழங்குடிகள் மேல் அவர் பாய்ச்சிய வெளிச்சம் மேலும் மேலும் ஒளி பெற நாம் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவே நாம் பிலோ இருதயநாத் அவர்களின் ஆய்வுப் பணிகளுக்குச் செய்யும் சிறந்த கைமாறாக இருக்கும்.

பார்வை நூல்கள்

1.      பிலோ இருதயநாத் குறிப்புகள் – இணையம்.

2.      யார் இந்த நாடோடிகள்? – பிலோ இருதயநாத்.

3.      பயணம் ஒரு கலை…. ஏமாந்தால்? – பிலோ இருதயநாத்.

4.      காடு கொடுத்த ஏடு - பிலோ இருதயநாத்.

5.      காட்டில் கண்ட மர்மம் – பிலோ இருதயநாத்.

- முனைவர் வே. நிர்மலர் செல்வி, உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை, தலைவர் (பொ.,) கிறித்தவத் தமிழ் இலக்கிய இருக்கை, மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.