தோழர் பி.தயாளன் எழுதியிருக்கும் ‘விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்’ என்ற நூல் மூன்று கோணங்களில் நோக்கத்தக்கதாக உள்ளது. ஒன்று, இந்திய சுதந்திரப் போராட்டக் காரர்களின் வரலாறாகத் தெரிகிறது. இரண்டு, இந்தியாவைப் பற்றிய தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது. மூன்று, இளைஞர்களுக்குச் சமூக வழி காட்டி நூலாகத் திகழ்கிறது. இந்த மூன்று கோணங்களை உள்ளடக்கியிருப்பதே இந்நூலின் முதல் வெற்றியாகும்.
இந்திய வரலாறுகூட நடந்தவற்றை அப்படியே பதிவு செய்ததாகக் காணப்பெறவில்லை. அதுவும் தணிக்கைக்கு உட்பட்டுத்தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. யார் கையில் கத்திரிக்கோல் கிடைத்ததோ அதற்கு ஏற்ப வெட்டுக்களும் ஒட்டுக்களும் நடந்துள்ளன. இல்லையென்றால் 1857-ஆம் ஆண்டை இன்னும் கட்டி அழுது கொண்டிருப்போமா? ஆளுவோருக்காக ஆளுவோரால் எழுதப்பட்ட வரலாற்றைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு இந்நூல் மக்கள் வரலாற்றைப் பேசுவதாக உள்ளது.
தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் முழக்கமிட்ட பூலித்தேவன் தொடங்கி மூக்கன் ஆச்சாரி வரை 56 பேரின் அரிய வரலாறே இந்நூல். ஒவ்வொருவரைப் பற்றியும் ஒருசில பக்கங்கள்தான் பேசுகின்றன என்றாலும் அவர் களைப் பற்றிய விரிந்த உலகத்தைப் படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.
சேர நாட்டின் ஒரு பகுதியான பூழி நாட்டை ஆட்சி செய்து வந்தவர்களின் பரம்பரையில் வந்த பூலித்தேவன் அனைத்து மதத்தினரையும் ஆதரிப்ப வனாக இருந்துள்ளான். ஆங்கிலேயருக்கு ஒரு நெல்மணி கூடக் கப்பமாகக் கட்டமாட்டேன் என்று எதிர்நின்ற முதல் வீரன். அவன் இவ்வாறு எதிர்த்து நின்றதாலேயே அவன் எதிர்த்து நின்ற ஊர் ‘நெற்கட்டான் செவ்வல்’ என அழைக்கப் பட்டதைத் தோழர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்திய விடுதலைக்கு இந்தியாவில் இருந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தவர்களும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். அப்படிப் பங்காற்றியவர்களுள் ஒருவர் அன்னி பெசன்ட் அம்மையாராவார். சுய சிந்தனையும் மனித சமூக விடுதலையையும் உடையவர்கள் நாடு, மொழி என்பனவற்றையெல்லாம் கடந்துதான் பயணித்துள்ளனர். மூட மத நம்பிக்கைகளைக் கண்டு வெகுண்டெழுந்த அன்னிபெசன்ட் கணவன், குடும்பம் என்பனவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு தான் வெளியே வந்துள்ளார். கல்லடி பட்டவர்களும் சொல்லடி பட்டவர்களும்தான் வரலாற்றில் நிலைபெற்றுள்ளனர். இதில் அன்னிபெசன்டும் விதிவிலக்கன்று. 1893-ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், அரசியல் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். அவரது சொற்பொழிவு நாட்டு மக்களிடம் மிகப் பெரிய எழுச்சியை உண்டாக்கியுள்ளது. எந்த ஊடக வசதியும் இல்லாத காலத்தில் அன்னி பெசன்ட் போன்றவர்களையெல்லாம் மக்களிடம் எப்படிச் சென்று சேர முடிந்தது என்பதை நினைக்கும் போதே வியப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்கு அறிமுகமான பெயர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாராவார். இவரைப் பற்றிய அரிய தகவல்களைத் தோழர் பதிவு செய்துள்ளார். இவரைப் பெற்ற தாயே இவரை ஒரு தாசிப் பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு ஓடிவிட, அத்தாசிப் பெண்ணால் வளர்க்கப்பட்ட அம்மையார் அப்பெண்ணின் பெயரான ஆச்சிக்கண்ணு என்ற பெயரின் தலைப்பெழுத் தையே தன் பெயருக்குத் தலைப்பெழுத்தாகக் கொண்டார் என்ற செய்தி இந்நூலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி ‘மத மூட நம்பிக் கையே பெண்களின் இழிவுநிலைக்குக் காரணம்’ என்று அவர் ஒரு மேடையில் பேசிக் கொண் டிருந்த பொழுதே ஒரு கும்பல் மேடையேறி அவரது கூந்தலை அறுத்து அவமானப்படுத்தியது எனக் குறிக்கப் பெற்றிருப்பதும் முக்கியமான செய்தியாகும். பூமி உருண்டை என்று உண்மை பேசியதற்காகக் கலிலியோ கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற வரலாற்றுச் செய்தியையும் இங்கு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியாவையும் இந்திய விடுதலையையும் தமக்கானதாகச் சொந்தம் கொண்டாடும் வந்தேறிக் கூட்டம் உண்மையான இந்திய வரலாற்றை மூடி மறைக்க முயற்சி செய்து கொண்டுள்ளது. இந்திய விடுதலை ஒரு இனத்தால் சாத்தியப்படவில்லை; ஒரு மதத்தினரால் சாத்தியப்படவில்லை; ஒரு மொழியினரால் சாத்தியப்படவில்லை; ஒரு நிறத்தினரால் சாத்தியப்படவில்லை. எல்லாத் தரப்பு மக்களின் ஒட்டுமொத்த உழைப்பின் அறு வடையாகும். இந்தியர், இஸ்லாமியர் எனப் பிரிவினையைத் தூண்டிவிடும் கூட்டம் இஸ்லாமியர்களின் இந்திய விடுதலைக்கான பங்களிப்பையும் மறந்துவிடக்கூடாது. இந்திய விடுதலைக்குப் போராடிய மௌலானா சாகிப் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது, அவரது மனைவி இறந்து போய்விடுகிறார். உறவினர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் இந்திய விடுதலையைவிட, மனைவியின் இறப்பு எனக்கு முக்கியமல்ல என வெளிவர மறுத்துவிட்டார். இவரைப் போன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் காணமுடிகிறது.
இஸ்லாமியர்களைப் போன்று தான் கிறிஸ்தவர்களும் இந்நாட்டு விடுதலைக்காக எல்லாவற்றையும் இழந்து பணியாற்றியுள்ளனர். மதுரையில் புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்த அவர் தொழிலைக் கைவிட்டு உள்ளார்; மேலைநாட்டு ஆடை அணிவதைவிட்டு கதராடையையும் காந்தி குல்லாவையும் அணிந்து கொண்டு களம் இறங்கிப் போராடியுள்ளார். மதுரையில் நடந்த ஐரோப்பிய பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது ஜோசப்பின் மனைவி மதுரைத் தெருக்களில் சென்று பொதுமக்களிடம் அரிசியும் பணமும் பெற்று தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார்.
தீரர் சத்தியமூர்த்தி பற்றிய தகவல் ஒன்றும் இந் நூலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. புதுக்கோட்டையை ஆண்ட மார்த்தாண்ட பைரவத் தொண்டை மானுக்கு ஆஸ்திரேலிய மனைவி வழியாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையின் கைக்கு ஆட்சி உரிமை போய்விடக் கூடாது என் பதற்காகப் புதுக்கோட்டை மக்களுக்குத் தீரர் சத்தியமூர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அந்த விழிப்புணர்வின் விளைவு அக்குழந்தைக்கு வாரிசுரிமை செல்லவில்லை என்பதுதான். இத் தகவலைத் தோழர் பி. தயாளன் தெளிவாகச் சுட்டி யுள்ளார்.
தமக்குத் தாமே வரலாற்றை எழுதிக் கொள்ளும் தமிழக அரசியல் சூழலில் விடுதலைக்காகக் கிராமங்கள் தோறும் சென்று தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்தவர், கதர் துணிகளை மூட்டை மூட்டையாகச் சுமந்து சென்று ஊர் ஊராக விற்பனை செய்தவர், மது ஒழிப்பிற்காகக் கள்ளுக்கடை, சாராயக்கடை முன்பு தலைமை யேற்றுப் போராட்டம் நடத்தியவர், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்ற குறிப்புகளை யெல்லாம் கொடுத்து யார் இவர்? என்று கேட்டால் இன்றைய தலைமுறையினரில் ஒருவருக்குக் கூடத் தெரியாதவராகத்தான் இவர் இருப்பார். அப்படிப் பட்டவர்தான் ஓமாந்தூரார் எனப்பெறும் இராம சாமி ரெட்டியாராவார். தமக்குப் பாராட்டுக் கூட்டமோ வெற்றிவிழாவோ நடத்த வேண்டாம் என்று தடை போட்ட அவர், ‘மக்களுடைய நன்மைக்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய மனிதர்களுக்கும் நமக்கு வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டுவதற்கு அல்ல’ எனத் தம் அமைச்சரவைக்கும் உத்தரவு போட்ட முதல்வர் ஓமாந்தூரார் ஆவார். மணல் கொள்ளையிலும் மலைக் கொள்ளையிலும் ஈடுபடுபவர்களுக்கு இந்த வரலாறு தெரியுமா? என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.
இப்படி ஒவ்வொருவரைப் பற்றியும் கிடைத்தற்கரிய குறிப்புகளைத் தோழர், நூல் முழுக்கக் கொடுத்துக் கொண்டே சென்றிருப்பது பாராட்டத் தக்கதாகும்.
இவை போன்ற, ஆங்கிலேயருக்கும் தீரன் சின்னமலைக்கும் 1801-ஆம் ஆண்டு முதல் போர் நடந்தது, ‘இந்து பிரகாஷ்’ என்ற இதழ் 1862-ஆம் ஆண்டு வெளிவந்தது, அன்னிபெசன்ட் அம்மையார் ‘தி லிங்க்’ என்ற இதழைத் தொடங்கியது, தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் ‘சுதேச மித்திரன்’, 1908-இல் திருநெல்வேலியில் தேசாபி மான சங்கம் நிறுவப்பட்டது, என்பன போன்ற தகவல்கள் பக்கத்துக்குப் பக்கம் நிறைந்து கிடக்கின்றன. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்துவிடாமல் மேற்சுட்டியவை போன்ற தகவல்களையும் கொடுத்துக் கொண்டே செல்வது படிப்போருக்கும் கூடுதல் தகவல்களைத் தருவதாக உள்ளது.
56 பேரைப் பற்றித் தோழர் குறிப்பிட்டுச் சென்றிருப்பது வெறும் அறிமுகத்திற்காக மட்டுமன்று. தன் நாட்டைப் பற்றித் தெரியாத யாரும் நாட்டுப்பற்று உடையவர்களாக இருக்க முடியாது. தம் மொழியைப் பற்றித் தெரியாத யாரும் மொழிப் பற்று உடையவர்களாக இருக்க முடியாது. இப்படிப் பட்ட இளம் தலைமுறை உருவாகிவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் தோழர் இந்நூலை ஆக்கியுள்ளார். இளைய சமூகத்தினருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி நூலாகும். இந்நூலை வாசிப்போர், இந்நூலில் சுட்டிக்காட்டப் பெற்றிருக்கும் ஒவ்வொரு வரைப் பற்றியும் தனித்தனியாகத் தெரிந்துகொள்வதற்கு முயல்வர் என்பதில் ஐயமில்லை.
இறுதியாக, தான் கொடுத்திருக்கும் தகவல்கள் எல்லாம் சரியானவையே என்பதற்கு ஆதாரமாகக் குறிப்புக்கு உதவிய நூல்களின் பட்டியலைக் கொடுத்திருப்பதற்குப் பாராட்டுக்கள்.