இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பேருந்தில் பயணம் செய்த மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி, சில நாட்கள் வரை உயிருக்குப் போராடி இறந்த நிகழ்வு நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அதன் எதிர்வினையாகப் போராட்டம், சமாதானம் என்று நகர்ந்து, சட்டத் திருத்தத்தில் நிறைவுற்றுள்ளது.

தலைநகரில் 16-12-2012 அன்று முன்னிரவில் நடந்த இந்தத் துயரத்துக்குக் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டியும் டில்லியில் உள்ள மக்கள் பிடிவாதமாகப் போராட்டம் நடத்தினர்.

புதுடில்லியில் வன்முறைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிற அதே வேளையில், டில்லியில் 16 வயது சிறுமி ஒருவரும் நடுத்தர வயது பெண்மணி ஒருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யிருக்கின்றனர் என்று செய்திகள் வந்தன.

வடகிழக்கு மாகாணங்களிலும் இதேபோன்று வன்முறைகள்!

இங்கே, தமிழகத்தில், டிசம்பர், 16-ஆம் தேதிக்கு மேல், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரை, சென்னையில் பல பகுதிகள், புதுச்சேரி மாநிலம், தூத்துக்குடி, விழுப்புரம், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாலியல் வன் முறைகள் நடந்ததாகத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. புதுடில்லியில் நடந்த தற்கும் தமிழகத்தில் நிகழும் வன்முறைகளுக்கும் தொடர்பு உண்டா?

வன்முறைகளுக்கு இடையில் தொடர்பு இல்லை. மாறாக, அந்தக் கொடுமையைத் துணிவுடன் காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்கிற ஒரு வலுவான அசைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘புதுடில்லியில் பாதிக்கப்பட்ட பெண், மேட்டுக்குடியைச் சேர்ந்தவள் என்பதால்தான், இத்தனை ஆரவாரம்!’ என்றெல்லாம் இங்கே பொதுப் புத்தியோடு கதையளந்தவர்களும் உண்டு. ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்றால், அவர் எந்தக் குடியைச் சார்ந்தவராக இருந்தால் என்ன? அவருக்கு நீதி கிடைக்க எல்லாத் தரப்பினர்களுமே முன்வரவேண்டும் என்பதுதானே மானுடம்!

அடுத்தடுத்து, தமிழகத்தில் பாலியல் வன்கொடு மைகள் நடந்துவருவதை அறிந்து தமிழக முதல்வர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆவன செய்துள்ளார். அவர் அறிவித்துள்ளபடி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்தான்! ஆனால் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதில், காவல்துறையினர் இந்தச் சட்டத் திருத்தத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.

இதற்கிடையில், பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும், அடியோடு ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிற சமுதாயத்தில், இந்த நோக்கம் ஆழமான கருத்துநிலையாக வேரூன்ற வேண்டும். அதில், அரசு, சட்டம், தண்டனை இவையெல்லாம் தவிர, குடும்பத்தில் மிகப் பெரும் பங்களிப்புக்கு இடம் உண்டு.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியுற்றிருக்கிற இன்றைய சூழலில் பெண்கள் கற்று, தொழில்நுட்ப அறிவில் தேர்ச்சி பெற்று, சமுதாயத்தில் இரண்டறக் கலந்து எத்தனையோ பணிகளைச் செய்துகொண் டிருக்கிற வேளையில், ‘பெண் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தான் சிரிக்கவேண்டும், இப்படித்தான்.... வேண்டும்’ என்றெல்லாம் நீட்டி முழக்குகிற நாம் - ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் மட்டும், நேர் எதிர்நிலை எடுக் கிறோம்; சிறுவயதிலேயே ஒரு கட்டுக்குள் கொண்டு வராமல் தாராள விடுதலை கொடுத்து விடுகிறோம்.

வீட்டைப் பராமரிப்பதிலும் சமையலிலும் உதவி என்பது ஒருபுறமிருக்க - அண்ணனின் அல்லது தம்பியின் துணியைத் துவைக்குமாறு தன் மகளாகிய சிறுமிக்கு அன்பாணையிட்டுப் பழக்குகிற தாய், அதே போன்று அக்காளின் அல்லது தங்கையின் துணியைத் துவைக்க தன் மகனாகிய சிறுவனுக்கு ஆணையிடு வதில்லை. இவ்வாறு ‘தான், தான், தான்தான்’ என்று ஆண்மகன் வளர்ந்துவந்த பிறகு, இருபத்தைந்து வயதுக்குமேல் ‘பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு’ என்றெல்லாம் பரப்புரை செய்வதில் எந்தப் பலனும் விளையப் போவதில்லை. குடும்ப அளவில் இந்நிலை மாறி, பெண்களையும் சமமாக நடத்துகிற உணர் வோடு ஆண்குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

அத்துடன், ‘உலகில் எந்தவொரு பெண்ணும் தனக்கென்று எந்தத் தனியுரிமையையோ, சிறப்புரிமை யையோ கேட்கவில்லை. கேட்பதெல்லாம் அவரது அடிப்படை மனித உரிமையைத்தான்!’ என்பதை நமது சமுதாயம் உணர வேண்டும்.

அந்த வகையில், புதுடில்லி வன்முறை, அறப் போராட்டத்தையொட்டி, தமிழகத்தில் தோன்றி உள்ள ஆக்கபூர்வமான - தீவிரமான - பெண் பாது காப்பு உணர்வை முன்னேற்றிச் செல்லலாமே!

Pin It