குறியல்லாத குறியில் மயங்குதல் அல்லகுறியாகும். தலைவனும் தலைவியும் இந்த இடம், இந்த நேரத்தில் சந்திப்பது என்று இரவுக்குறியில் திட்ட மிட்டிருந்தனர். அப்படித் தலைவன் இரவுக் குறியின் கண் வரும்போது இன்னவாறு ஓசையை உண்டாக்குவேன் என்று குறிப்பிட்டிருந்தான். அவன் வருவதற்கு முன்னரே பறவை முதலியவற்றால் எழுந்த அத்தகைய ஓசையைக் கேட்டுத் தலைவி குறியிடத்துச் சென்று ஏமாந்து திரும்பினாள். பின்னர் அவனே வந்து ஓசை யுண்டாக்கியபோது அது வேறு ஏதோ என்று தலைவி கருதி வந்தாளில்லை. ஆதலால் தலைவன் அவளைச் சந்திக்க முடியாமல் வறிதே மீண்டான். இத்தகைய நிலையே அல்ல குறியாகும். இத்துறையில் தலைவன் கூற்று நிகழ்த்துவதாகச் சங்க இலக்கியத்தில் பல் வேறு பாடல்கள் உள்ளன. இதனை உதவி செய்து பெற நினைத்தல், வாழ்த்தியல் முறையில் கூறுதல், நட்பு முறையில் கூறுதல், வருந்திக் கூறுதல், சாப மிடல் என வகைப்படுத்தலாம்.

உதவி செய்து பெற நினைத்தல்:

தலைவியைச் சந்திப்பதற்குத் தலைவன் சென்றான். ஆனால் அல்லகுறி ஏற்பட்டதன் காரணமாக அவளைச் சந்திக்க இயலவில்லை. அவளைப் பெறுவது அரிது என்ற நிலை ஏற்பட்டபோது, என்ன செய்வது என்று ஆராய்ந்தான். அதனைத் தன் நெஞ்சிடம் “செருந்திப் பூக்களை நிறையச் சூடிக்கொள்பவளும், சிறுமி போல் கடற்கரையில் திரியும் நண்டுகளை விரட்டி விளையாடும் இயல்பினைக் கொண்டவளுமான நம் தலைவியைப் பெறுவது அரிது. எனவே நாம் நம் ஊரை விட்டுவிட்டு இக்கடற்கரைக்கு வந்து, அவள் தந்தையோடு உப்பங்கழிகளை அடுத்து உள்ள களர் நிலங்களில் விளையும் உப்பினை வண்டியில் ஏற்றுதல் முதலிய பணிகளைச் செய்தும், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றும், அவன் மனமறிந்து நடந்தும், பணிவு காட்டியும், சார்ந்தும் இருந்தால் அவன் நம் நேர்மைப் பண்பைக் கண்டு நமக்கு அவளைத் திருமணம் செய்து தருவானா”?1 எனக் கூறி நின்றான். இங்குத் தலைவியின் தந்தைக்குச் சிறுசிறு உதவி களைச் செய்தாவது தலைவியைப் பெற வேண்டும் என்ற தலைவனின் எண்ணம் புலனாகிறது.

வாழ்த்தியல் முறையில் கூறுதல்:

அல்லகுறித் தலைவன் தன் நெஞ்சிடம் நகைச் சுவை நிலையில் வாழ்த்தினான். தலைவியை நீ பெற முடியாது எனப் பலமுறை கூறியும் கேட்க வில்லை. ஆதலால் தன் நெஞ்சை நோக்கிப் “பெறு தற்கு அருமை உடையவளது இன்பத்தை நினைத்து வீணே வருந்தாதே! எனப் பலமுறை கூறியும், அதனைக் கைவிடவில்லை. உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி, தலைவியைப் பார்க்கச் சென்றாய். பின்பு பார்க்க முடியாமல் திரும்பி வந்தாய். அதனால் மிகுந்த வருத்தமுற்று நின்றாய். இதன் காரணமாக நீ மிகவும் வாட்டமுற்றுக் காணப்பெற்றாய். ஆதலால் மீண்டும் கூறுகிறேன், நம் காதலி காவல் மிகுதியில் உள்ளமையால் காணுதற்கு அரியவள்”2 என மொழிந்து நின்றான். இவ்விடத்து, தலைவன் தன் நெஞ்சை நகைச்சுவை நிலையில் வாழ்த்தி, அல்லகுறியால் தலைவியைப் பெறமுடியாத துன்பநிலையை எடுத் துரைக்கிறான்.

நட்பு முறையில் கூறுதல்

அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சிடம் தனக்கும், நெஞ்சுக்கும் உள்ள நட்பு முறையைக் கூறினான். தலைவியைப் பெற முடியாது என்ற நிலையை அறிந்த தலைவன் தன் நெஞ்சை நோக்கி “நம் தலைவி பெறுவதற்கு அரியவள். அவளைத் தழுவுதல் இயலாத காரியம். இதனை அறிந்தும் தலைவியை நினைக்கிறாய். இருந்தபோதிலும் உனக்குத் துணையாக யான் வருகிறேன். அதனால் நீ விடும் தூது நிலைபெறுவதாக! நம் நட்பும் சிறந்து நிற்க”3. அதுமட்டுமன்றி, “யான் உனக்கு உறவினனும், உள்ளம் ஒன்றுபட்ட நண்பனும் ஆவேன். ஆதலால் யான் கூறுவதனைக் கேட்டுப் போற்றுக”4. எனவும் மொழிந்தான். இவ்விடத்து அல்லகுறித் தலைவன் தனக்கும் - நெஞ்சுக்கும் இருக்கின்ற உறவு முறை யையும், தலைவி கிடைத்தற்கு அரியவள் என்ற செய்தியையும் எடுத்து மொழிகிற நிலை புலப்படு கிறது.

வருந்திக் கூறுதல்:

அல்லகுறிப்பட்ட தலைவன் ஒருவன் தலைவியைப் பார்க்க முடியாமையால் ஏற்பட்ட வருத்த மிகுதியைத் தன் நெஞ்சிடம், “வல்வில் ஓரிக்கு உரிமையான கொல்லி மலையில் உள்ள கொல்லிப் பாவை போன்ற நம் தலைவியால் நீ மயங்கித் துன்புற்று வருந்துகிறாய். அவள் பருத்த தோள்கள் உன் அணைப்பிற்கு அரியவையாகும்”5 அது மட்டுமன்றி “வறுமை மிக்க ஒருவன் இவ்வுலக இன்பங்களை அடைய விரும்பியதைப் போன்று நீயும் அடைதற்கு அரிய ஒன்றையே விரும்பியிருக்கின்றாய்; நம் தலைவி நல்லவள் என்று அறிந்ததைப் போன்று, நாம் விரும்பும் போதெல்லாம் பெறுவதற்கு அரியவள் என்பதனை நீ அறியவில்லையே”6 என வருந்தி உரைத்தான்.

மற்றொரு தலைவன் தன் நெஞ்சிடம், நம் தலைவி வேலினையும், களிறு பொருந்திய சேனையையும் உடைய பொறையன் என்பானுக்குரிய கொல்லி மலையில் வாழும் பாவை போன்ற மடமைத் தன்மை பொருந்திய மாமை நிறத்தவள். இத்தகையவள் நேற்று நல்லிருட்டு வேளையில் வந்து, காவிரிப் பேராற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவளைப் போன்று என்னைத் தழுவித் தீராத காமநோயைத் தீர்த்து வைத்தாள். ஆனால் இன்று அத்தகைய நிலையைப் பெறவில்லை என வருந்திப் புலம்பினான். இதனை,

நெடுஞ்சுழிநீத்தம் மண்ணுநள் போல

நடுங்கு அஞர் தீரமுயங்கி, நெருநல்

ஆகம் அடைந்தோளே-வென்வேற்

கன்று கெழு தானைப் பொறையன் கொல்லி

ஒளிறுநீர் அடுக்கத்து வியல் அகம் பொற்பக்

கடவுள் எழுதிய பாவையின்

மடவது மாண்ட மாஅயோளே7

என்னும் பாடலின் வழி அறிய முடிகின்றது.

சாபமிடல்

அல்லகுறிப்பட்ட தலைவனுக்குத் தலைவியைப் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் அவளைப் பார்க்க வேண்டும் என நெஞ்சு வருந்தியது. அங்ஙனம், வருந்திய நெஞ்சிற்குத் தலைவன் சாபமிடுகிறான். அவன் தன்நெஞ்சிடம், “நெஞ்சே! சிறகுகள் இழந்த நாரை ஒன்று மேற்குக் கடற்கரையில் அமர்ந்து கொண்டு அயிரை மீனை உண்ண ஆசைப்பட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தது. இச் செயல் தொலைவில் இருப்பவளும், காண்பதற்கு அரியவளுமாகிய தலைவியை அடைய ஆசைப்பட்டு வருந்தும் தன் மைக்கு ஒத்ததாகும். ஆதலால் நீ வருந்துவதற்குரிய தீவினையைப் பெறுவாய்”8 எனச் சாபமிட்டான்.

மற்றொரு அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சைப் பார்த்து, “நம் தலைவியை விரும்பிக் கலக்கமுற்ற நேரத்தில் இவள் பெறுதற்கரியவள் என்று கருதாமல் நாள்தோறும் அரிய வழியில் நடந்து வரச் செய்து தீராத துன்பப்படுத்தி விட்டாய். கிடைத்தற்கரியவளாகிய அவளை ஓயாமல் நினைத்து தீராத துன்பத்தை எனக்குச் சேர்த்துள்ளாய். ஆதலால் உன்னுடைய மார்பில் குட்டுவன் வேற்படை பாய்ந்து அழுந்தி உனது செருக்கு அழிந்து போவதாக”9. அதுமட்டுமன்றி “நீ நடுங்கி வேறு துணையின்றி வாடுவாயாக”10 எனச் சாபமிட்டுக் கடிகிறான்.

பிறிதொரு அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நோக்கி, நம் தலைவி அடைவதற்கு அரியவள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக் கிறாய். அவளை நாம் நெருங்க இயலாது என் பதனையும் யான் கூறியிருக்கிறேன். ஆயினும் என் கூற்றைக் கேட்காமல் நாள்தோறும் குறுமகளது நல்ல மார்பை விரும்புகின்றாய். உன் விருப்பத்தை நிறைவேற்ற கடுங்காவலை உடைய இரவில் வந்தும் அவளைப் பெறமுடியவில்லை. அதனால் மிகவும் துன்பமுற்று, உலகோர் இகழ்ந்து சிரிக்க, அடங்காத காமத்தால்அரிய துன்பத்தை எனக்குத் தந்துவிட்டாய். ஆதலால் நீயும் மாய்ந்து போக எனச் சாபமிடுகிறான். இதனை, 

மாய்கதில் வாழிய நெஞ்சே! நாளும்

மெல்இயற் குறுமகள் நல்அகம் நசைஇ

அரவு இரைதேரும் அஞ்சவரு சிறுநெறி

இரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்

புல்லென் கண்ணை புலம்புகொண்டு உலகத்து

உள்ளோர்க்கு எல்லாம் பெருநகையாக

காமம் கைம்மிக உறுதர

ஆனா அரும்படர் தலைத்தந் தோயே11

என்னும் அடிகள் உணர்த்தும்.

இதிலிருந்து அல்லகுறியினால் தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், அவள் நினைவால் வருந்துவதை அறிந்துகொள்ளமுடிகிறது.

சான்றெண் விளக்கம்:

1.    அகநானூறு. 280

2.    மேலது. 372

3.    மேலது. 338

4.    மேலது. 342

5.    குறுந்தொகை. 100

6.    மேலது. 120

7.    அகநானூறு. 62;10- 16

8.    குறுந்தொகை. 128

9.    அகநானூறு. 212

10.   மேலது. 322

11.   அகநானூறு. 258;8- 15.

Pin It