இந்தியத் தாய்த் தெய்வங்கள் - என்.என்.பட்டாச்சார்யா (1977)

(N.N.Bhattacharya (1977) The Indian Mother Goddess.

Manohar Book Service, 2, Ansari Road, Daryaganj, New Delhi, 11002)

இந்திய நாட்டின் சமய வாழ்க்கையிலும் சமய வரலாற்றிலும் புறக்கணிக்க இயலாத இடத்தைத் தாய்த் தெய்வங்கள் பெற்றுள்ளன. வைதீக சமய எல்லைக்குள் அடங்கும் சமயங்கள் மட்டுமின்றி இவற்றுக்கு எதிராக உருவான அவைதீக சமயங்களும் கூட தாய்த் தெய்வ வழிபாட்டைக் கொண்டுள்ளன.

mother goddessஇந் நிறுவன சமயங்களுக்கு முன்னோடியாக உருப்பெற்ற தொல்சமயமும் கூட தாய்த்தெய்வ வழிபாட்டைப் பின்பற்றியுள்ளது. இன்றும் கூட நாட்டார் சமய நெறியிலும். நிறுவன சமய நெறியிலும் தாய்த்தெய்வ வழிபாடு செல்வாக்குடன் திகழ்கிறது. ஒன்றிரண்டு அயற்சமயங்கள் மட்டுமே தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு ஆட்படாமல் உள்ளன.

இங்கு அறிமுகம் செய்யப்படும் இந்நூல் இந்தியச் சமயங்களில் இடம் பெற்றுள்ள தாய்த் தெய்வ வழிபாட்டையும் சடங்குகளையும் குறித்த சமய வரலாற்று ஆய்வு நூலாகும்.

நூலாசிரியர்:

இந்நூலின் ஆசிரியரான நரேந்திரநாத் பட்டாச்சார்யா(பி:1934) கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இந்தியாவின் பண்டைய வரலாறு, பண்பாடு, சிற்பங்கள் குறித்த துறையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அங்கு சமயம், சமூகவரலாறு ஆகிய இரு பாடங்களைக் கற்பித்து வந்தார்.

இந்திய பூப்புச் சடங்குகள் ((Indian puberty Rites), அண்டத் தோற்றம் குறித்த இந்தியச் சிந்தனைகள் (ln­dian Cosmogonical Ideas), சாக்த சமய வரலாறு (History Of the Sakta Religion),  பண்டைய இந்தியச் சடங்குகளும் அவற்றின் சமூக உள்ளடக்கமும். (Ancient Indian Rit­uals and their Social Contents), சமணத் தத்துவம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு (Jaina philosophy : Historical Outline), இந்தியக் காம இலக்கியங்களின் வரலாறு (History Of Indian Erotic Iiterature)  என்பன இவர் எழுதிய பிற முக்கிய நூல்களாகும்.

இந்நூலின் அமைப்பு:

இந்நூலின் முதற்பதிப்பு 1970 இல் வெளியாகி உள்ளது. இப்பதிப்பைத் திருத்தம் செய்தும் விரிவுபடுத்தியும் 1977இல் வெளியிட்டுள்ளார்.இவ்விரண்டாம் பதிப்பே இங்கு அறிமுகம் ஆகிறது. அறிமுக உரை உள்ளிட்டு இந் நூலில் ஐந்து இயல்கள் உள்ளன. இவற்றை அடுத்து மூன்று பின் இணைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அறிமுக உரை:

இந் நூலின் அறிமுக உரையானது தாய்த் தெய்வ வழிபாடு என்ற கருத்தாக்கத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி குறித்த அறிமுகமாக அமைந்துள்ளது. இவ்வகையில் இந் நூலின் அறிமுக உரையானது மரபு சார்ந்த ஒன்றாக அமையாமல், நூலின் மையக்கருத்தான தாய்த் தெய்வ வழிபாடு குறித்த பரந்துபட்ட அறிமுகத்தை வாசகனுக்கு அளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. தாய்த்தெய்வம் என்ற கருத்தாக்கம் தொல் சமூகத்தில் (primitive Society) தோன்றியது தொடர்பாகப் பேராசிரியர் இ.ஒ. ஜேம்ஸ் என்பவரின் கூற்றை விரிவான மேற்கோளாகக்காட்டி நூலைத் தொடங்கி உள்ளார். இம் மேற்கோளின் அடிப்படையில் ஒரு மக்கள் சமூகத்தின் பொருளாதார வாழ்க்கை அவர்கள் வழிபடும் கடவுளையும் வழிபாட்டு முறைகளையும் தோற்றுவிக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார். இதன் தொடர்ச்சியாக உணவு தேடி வாழ்ந்த வேட்டைச் சமூக வாழ்க்கை, கால்நடைவளர்ப்பை மேற்கொண்டிருந்த மேய்ச்சல் நிலவாழ்க்கை, உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த வேளாண் சமூக வாழ்க்கை எனப் பல்வேறு வகையான பொருளியல் வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந்த சமூகங்களில் வேறுபாடான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் நிலவியதை அறிமுகம் செய்துள்ளார்.

தாய்த்தெய்வங்களும் செழிப்புச் சடங்குகளும்:

பண்டைக் கால உலகச் சமயங்களில் தாய்த் தெய்வ வழிபாட்டுடன் செழிப்புச் சடங்குகள் கொண்டிருந்த தொடர்பு பழமையான ஒன்று. பண்டைய மனிதர்கள் இயற்கை உற்பத்தியையும் மனித இனப்பெருக்கத்தையும் இணைத்தே பார்த்துள்ளார்கள்.இதன் அடிப்படையில் பூமித்தாய் மானுடத் தாயுடன் இணைத்துப் பார்க்கப்பட்டாள். உலகின் பல்வேறு பண்பாடுகளிலும் இது வெளிப்பட்டுள்ளது.

ரோமானியச் சட்டங்களில் மானுடத்தாயும் நிலமும் இணையானதாகவே பார்க்கப்பட்டது. பண்டைய இந்தியாவில் திருமணச் சடங்குகளில் விளைநிலமாகப் பெண் உருவகிக்கப்பட்டாள். திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர் மணமகனிடம் ‘உன் விதையை விதைப்பாயாக’என்று கூறுவார். பெண்களை விளைநிலமாகக் குர்ஆன் குறிப்பிடும்.

மானுடனின் தாயாக நிலத்தையும் நிலத்தின் மகனாக மானுடனையும் வேதப் பாசுரங்கள் குறிப்பிடும்.

நிலத்தையும் பெண்ணையும் இணைத்துப் பார்ப்பதற்கான காரணமாக அமைவது இரண்டின் செயல்பாடும் ஒத்திருப்பதுதான். நிலம் தாவரச் செழிப்பை வழங்க, பெண் மகப்பேறு என்ற மானுடச் செழிப்பை வழங்குகிறாள்.

தொல் சமூகங்களில் செல்வத் திரட்சியானது இரண்டு வழிகளில் ஏற்படும் என்று குறிப்பிடும் இந் நூலாசிரியர் அது குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

(1)வேளாண்மையின் வளர்ச்சி. (2) காட்டு விவங்குகளை வீட்டு விலங்குகளாகப் பழக்குதல். இவற்றுள் வேளாண்மையானது மேய்ச்சல் நில வாழ்க்கையின் இடையீடு இன்றி வளர்ச்சி பெற்றவுடன் தாய் உரிமைக் கூறு சமூகத்தின் உந்து சக்தியாக மாறி விடுகிறது. இதற்குச் சான்றாக பிரைஃபால்ட் (Brriffault) எழுதியுள்ள ‘தாய்கள்' (The Mothers) என்ற நூலில் இருந்து சான்று காட்டியுள்ளார். இச் சான்றுகளின் அடிப்படையில் வட அமெரிக்கா,இந்தோனீசியா,மைக்ரோனீசியா ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழும் பல்வேறு இனக்குழு மக்களிடமும் மேய்ச்சல் சமூக வாழ்க்கை இல்லாமையும் அங்கு நிலவும் வேளாண்மைப் பண்பாடும் தாய்ஆதிக்கக் குணாம்சம் கொண்ட சமூகத்தை அங்கு தொடரச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே நிலை எகிப்திலும் நிலவுவதாகவும் இதற்குக் காரணமாக அமைந்தது நைல் ஆற்றினால் வளம் பெற்ற வயல்களும், கால்நடைச் செல்வம் அங்கு முக்கியத்துவம் பெறாமையும்தான் என்று கூறியுள்ளார்.

இப் பொதுவான மதிப்பீடுகளை அடுத்து இந்தியாவின் பண்டையச் சமூகத்திலும் செமிட்டிக் பண்பாட்டிலும் காணப்பட்ட தாய் வழிச் சமூகம் குறித்த செய்திகளை வெளிப்படுத்தி உள்ளார்.

ரிக் வேதகால சமூகம்:

ரிக் வேத கால இந்தியச் சமூகமானது மேய்ச்சல் நில சமூகமாகவும் தந்தை வழிச் சமூகமாகவும் இருந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நூலாசிரியர், மேய்ச்சல் நிலப் போர் வீரர்கள் தங்களால் வெற்றி கொள்ளப்பட்ட பூர்வீகக்குடிகளிடம் வேளாண்மையை ஒப்படைத்துவிட்டனர் என்கிறார். 10,462 செய்யுள்களைக் கொண்ட ரிக் வேதத்தில் 25 செய்யுள்களே வேளாண்மையைக் குறிப்பிடுகின்றன என்ற உண்மையை நூலின் அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதுடன் பிராமணர்களும்,ஷத்திரியர்களும் வேளாண் தொழிலை மேற்கொள்ளக் கூடாது என்று மனு குறிப்பிட்டுள்ள பின் வரும் சுலோகங்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார். அது வருமாறு:

the indian mother goddess‘பிராமணஷத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும் உடல் முயற்சியும் பிறர் தயவை நாடத் தக்கதாயுமுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது.

பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதனைப் பாராட்டவில்லை’( மனு:10: 83 & 84).

மேலும் வேத சமயத்தில் பெண் கடவுளர்கள் சிறப்பிடமின்றி இரண்டாம் நிலையிலேயே காணப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ் விரிவான அறிமுக உரையை அடுத்து வரும் நான்கு இயல்களில் முதல் இயல் தாய்த்தெய்வ வழிபாடு தொடர்பான சில வழிபாட்டு முறைகளைச் சுட்டிக் காட்டுகிறது. இரண்டாவது இயல் தாய்த்தெய்வங்கள் குறித்த இலக்கிய புராண வடிவங்களை உலகளாவிய நிலையில் எடுத்துரைக்கிறது. எஞ்சியுள்ள இரு இயல்களில் மூன்றாவது இயல் தொல்லியல் வழி அறியலாகும் தாய்த் தெய்வங்களையும் நான்காவது இயல் வளர்ச்சியுற்ற நிறுவன சமய நெறிகளில் இடம் பெற்றுள்ள தாய்த்தெய்வங்களையும் அறிமுகம் செய்கின்றன. இறுதியாக மூன்று பின் இணைப்புகள் அறுபத்தி ஒன்று பக்க அளவில் இடம் பெற்று நூலில் இடம்பெறாத பல செய்திகளைக் குறிப்பிட்டுள்ளன. இனி இச் செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம்.

வழிபாட்டு முறைகள்:

வேளாண்மைச் சமூகமாக மக்கள் நிலைத்து வாழத் தொடங்கியபோது நிலமானது தாயாக உருவகிக்கப்பட்டு பூமித்தாய் என்ற கருத்து உருப்பெற்றது. இதன் வெளிப்பாடாக தாய்த் தெய்வமானது தாவரச் செழிப்போடு தொடர்பு படுத்தப் பட்டது.

ஜெர்மனியின் மாநிலங்கள் பலவற்றில் மக்காச் சோள மாதா முக்கியமான ஒன்றாகும். அறுவடை நிகழ்வில் இக் கடவுளுக்கு முக்கிய இடமுண்டு.அறுவடையின் போது இறுதியாக அறுத்த கதிர்கள் அடங்கிய கதிர்க்கட்டை ஒரு பெண்ணாக அடையாளப் படுத்துவர். இதை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் அணியும் ஆடை அதற்கு அணிவிக்கப்படும்.இவ் உருவமானது அறுவடைத்தாய், பெருந்தாய், பூமித்தாய், முதுமைத் தாய் என்ற பெயர்களில் அழைக்கப்படும். ஆட்ட பாட்டத்துடன் இதைப் பண்ணை வீட்டிற்குச் சுமந்து செல்வர்.

பயிரிடும் தானியங்களாலேயே இத் தாய்த்தெய்வங்களை அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதற்குச் சான்றாக மக்காச்சோளத் தாய், அரிசித்தாய் என்ற பெயர்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். மழையை மையமாகக் கொண்டு நிகழும் சடங்குகளைக் குறித்தும் அவற்றில் பெண்களால் நிகழ்த்தப்படும் நிர்வாண நடனங்கள் குறித்தும் இவ்வியலில் குறிப்பிட்டுள்ளார். இது 'போலச் செய்யும் மந்திரம்' (Imitative Magic) பாற்பட்டது என்று அடையாளப்படுத்தி உள்ளார். இந்திய அளவிலும் உலக அளவிலும் மழைச் சடங்குகள் குறித்த எடுத்துக்காட்டுகள் பலவற்றை அவர் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது போன்று முளைப்பாரி, வாழ்க்கை வட்டச் சடங்குகள் குறித்தும் பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதுடன் அவற்றில் இடம்பெற்றுள்ள தாய்த்தெய்வ வழிபாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

இது போன்று குழந்தைகளைப் பாதுகாத்தல், நகரப்பாதுகாப்பு, விலங்குப் பாதுகாப்பு, நோய்களில் இருந்து பாதுகாத்தல், போரில் துணையாக நிற்றல், மலைகள், குன்றுகள், ஏரிகள், ஆறுகள் இவற்றில் வாழுதல், குருதி வேட்கை கொண்டிருத்தல் என்ற குண இயல்புகளைக் கொண்ட தாய்த் தெய்வங்களையும் இவ்வியல் அறிமுகம் செய்துள்ளது. பழங்குடிகளின் தாய்த்தெய்வங்களின் பெயர்கள் எப்படி மலைகளுடனும் குன்றுகளுடனும் தொடர்புடையனவாய் இருப்பதையும் இவற்றில் சில தெய்வங்கள் வைதீக சமயத் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டமை குறித்தும் சுட்டிக் காட்டியுள்ளார். குன்றுகள் மலைகளின் உச்சிப்பகுதிகள் மனித ஆண்குறியைப் போன்று தோற்றமளிப்பின் அவற்றை இயற்கையாக உருவான சிவனின் பிறப்புறுப்பாகக் கருதி சுயம்புலிங்கம் என்றழைக்கப்பட்டதையும் இது போன்று வடிவமைப்பின் அடிப்படையில் சில மலை உச்சிகள் பெண் தெய்வங்களின் ஸ்தனம்(மார்பகம்) ஆகக் கருதப் படுவதையும் நீர் நிலைகள் சில யோனி(பெண் குறி) ஆகக் கருதப்பட்டு பெயர் பெற்றுள்ளதையும் அவற்றின் பாதுகாவலர்களாகக் கருதப்படுவதையும் எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியப் புராணப் பதிவுகள்:

இவ் இயல் தாய்த்தெய்வ வழிபாடு குறித்த இலக்கிய, புராணப் பதிவுகளின் துணையுடன் எகிப்து, மேற்காசியா, கிரேக்கம், ஆசியா மைனர், மெசபடோமியா, ஈரான் ஆகிய நாடுகளின் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபு குறித்த செய்திகளை எடுத்துரைக்கிறது. இதன் வழி, தாய்த் தெய்வ வழிபாட்டின் தொன்மையும் பரந்துபட்ட அளவில் அது வழக்கில் இருந்தமையும் புலனாகிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய வேத இலக்கியங்களிலும் காவியங்களிலும் பௌத்த சமய இலக்கியங்களிலும் தென் இந்திய இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் இடம் பெற்றுள்ள தாய்த்தெய்வ வழிபாட்டுச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் சான்றுகள்:

பழங்கற்காலம் (Palaeolithic Age)  சார்ந்த தாய்த் தெய்வ உருவங்கள் அகழ்வாய்வுகளின் போது உலகெங்கிலும் கிடைத்துள்ளன. இவை எலும்பு, யானைத் தந்தம், கல், சுடுமண் இவற்றினால் உருவாக்கப்பட்டவை. கிரேக்கர்களின் வீனஸ் என்ற பெண்தெய்வத்தின் பெயரால் தொல்லியலாளர்கள் இவற்றை அழைப்பர். ஹரப்பா , மொகஞ்சதாரோ, அகழ் ஆய்வுகளிலும் வீனஸ் உருவங்கள் கிடைத்துள்ளன. இவ்விரு இடங்களிலும் அகழ்ஆய்வை மேற்கொண்ட மார்ஷல் என்ற ஆங்கிலேயர் சிந்துச் சமவெளிக்கும் மேலை நாட்டிற்கும் இடையே பண்பாட்டுப் பிணைப்பு இருந்துள்ளதாக வலியுறுத்தி உள்ளார்.ஹரப்பாவில் கிடைத்துள்ள வீனஸ் உருவங்களுக்கு இணையானதாக மேலைநாட்டு அகழ்வாய்வுகளில் கிடைத்த வீனஸ் உருவங்களை அவர் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்

அடுத்து,வேதகாலத்திலும் வேதகாலத்துற்குப் பிந்தைய காலத்திலும் குப்தர் காலத்திலும் நிலவிய தாய்த்தெய்வ வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. கஜலட்சுமி, மகிஷமர்த்தினி, துர்கா, உமா, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தாய்த்தெயவங்களை மையமாகக் கொண்ட செய்திகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேத சமயத்தில் மட்டுமின்றி புத்த சமண சமயங்களிலும் தாய்த் தெய்வங்கள் செல்வாக்குடன் இருந்தமையையும் சான்றுகளுடன் விளக்கி உள்ளார். இறுதி இயலில் வளர்ச்சியடைந்த சமயங்களான கிறித்தவம், தாவோயிசம், பௌத்தம், வைணவம், சைவம், தாந்திரிக சாக்தம் ஆகிய சமயங்களில் இடம் பெற்றிருந்த தாய்த்தெய்வங்கள் தொடர்பான செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்த் தெய்வமும் கிறித்தவமும்:

கோவில்களையும் புண்ணியத் தலங்களையும் தாய்த்தெய்வங்களுடன் அடையாளப் படுத்துவது தொன்மையான ஒன்று. மேற்கு ஆசியாவிலும் இந்தியாவிலும் கோவிலானது தாய்த்தெய்வமாகவும் தெய்வம் வீற்றிருக்கும் அறையானது தாயின் கருப்பையாகவும் பார்க்கப்படுகிறது.( தமிழ் நாட்டில் கருவறை என்றும். வடமொழியில் கர்ப்பகிரஹம் என்றும் அழைக்கப்படுவது நோக்கத் தக்கது). கிறித்தவத்தில் தேவாலயமானது சமய நிகழ்ச்சிகள் நிகழும் இடமாகவும் மக்கள் திரளும் அல்லது சந்திக்கும் இடமாகவும் (Congregation) மனித உடலாகவும் கருதப்படுகிறது. தொடக்க காலக் கிறித்தவசமயச் சிந்தனையாளர்கள் கிறித்துவின் மணவாட்டியாகப் பார்த்துள்ளார்கள் இருப்பினும் இதில் கருத்துமாறுபாடும் உண்டு. தேவாலயத்தை இரண்டாம் ஏவாளாகவும் இரண்டாம் ஆதாமான கிறித்துவால் ஆன்மீகத் தாயாக தோற்றுவிக்கப் பட்டவளாகவும் இறையியலாளர்கள் சிலர் கருதியுள்ளாரகள். வேறு சிலர் தெய்வீகத் தன்மை பெறாத கன்னியாகவும் அதே நேரத்தில் அன்பான தாயாகவும், கிறித்துவின் உடலுடன் இணைந்த ஒன்றாகவும் தேவாலயத்தைக் கருதியுள்ளார்கள்.

ஆனால் பொது மக்கள் உணர்வில் பாரம்பரியமான தாய்த் தெய்வ வழிபாட்டுடன் இணைத்துப் பார்க்கும் கருத்துநிலை செல்வாக்குப் பெற்றிருந்ததால் கன்னிமேரி வழிபாட்டு மரபு பரவலானது. அதே நேரத்தில் இதற்கு எதிரான கருத்து நிலையும் தொடக்ககாலக் கிறித்தவ சமய எழுத்தாளர்களால் இவ்வாறு முன்வைக்கப்பட்டது: "மரியாளின் உடல், மாசற்றது. ஆனால் அவர் கடவுள் அல்லர்.அவரைப் ‘போற்றலாம்' ஆனால் அவரை வழிபடக் கூடாது.’

ரோம் நாட்டில் தேவாலயங்களை மேரிக்கு அர்ப்பணிப்பதில் இருந்து மேரி வழிபாடு பரவலானது. அதே போழ்து கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளித்தது. இறுதியில் மீட்புக்கான வழிகாட்டியாகவும், விண்ணுலகின் அரசியாகவும் அவரைப் போற்றும் மரபு உருப்பெற்றது. மாசற்ற கன்னி, கடவுளின் தாய், கதிரவனை ஆடையாகவும், காலடியில் நிலவையும், பன்னிரண்டு விண்மீன்களைக் கொண்ட கிரீடத்தையும் கொண்டவராக இவர் காட்சியளிக்கலானார். ஏடன் தோட்டத்தின் லில்லிமலர், இரண்டாம் ஏவாள், வெற்றியின் அரசி என்றெல்லாம் போற்றப்படலானார். இவரை மையமாகக் கொண்டு திருவிழாக்களும் உருவாயின.

பின் இணைப்பு:

இந்நூலில் இடம் பெற்றுள்ள மூன்று பின் இணைப்புகளில் முதலாவது பின் இணைப்பு வட்டார அளவிலான தாய்த் தெய்வங்களை அறிமுகம் செய்துள்ளது. பெண் ஆதிக்கம் மிகுந்த சமூகங்களை இரண்டாவது பின் இணைப்பு எடுத்துரைக்கிறது. இம் முயற்சியில், பொருளியல், மானுடவியல், சமூகவியல், வரலாறு, தத்துவம் ஆகிய அறிவுத்துறைகளின் பங்களிப்பு இடம் பெற்றுள்ளது.

பின் இணைப்பாக இவ்வியலின் இறுதியில் இந்தியாவின் சமய தத்துவச் சிந்தனைகளில் இடம் பெறும் வேதமரபு சார்ந்த சிந்தனையும் வேதமரபு சாராத சாங்கியத் தத்துவச்சிந்தனையும் இந்தியத் தாய்வழிச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், ஆராய்ந்துள்ளார்.

மூன்றாவது பின் இணைப்பு செழிப்புச்சடங்குகள் குறித்தும் தாந்திரிகம் என்ற தத்துவச் சிந்தனைக்கு அவை அடிப்படையாக அமைவது குறித்தும் ஆராய்கிறது.

நூலின் சிறப்பு:

இந்திய உபகண்டத்தை மையமாகக்கொண்டு எழுதப்பட்டமையால் இந் நூல் பரந்துபட்ட களத்தைத் தன் ஆய்வுக்களமாகக் கொண்டுள்ளது. இந்திய நாட்டின் நிர்வாக அமைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் நிகழ்த்தும் பண்பாட்டு ஆய்வுகள் முழுமையானதாக அமைவதில்லை. தாய்த்தெய்வங்கள் என்ற வகைமை இந்தியா முழுமையும் காணப்படினும் அவை ஒரே படிநிலையில் உள்ளவை அல்ல. எழுத்து வடிவத்திலுள்ள புராணங்களின் (Myth)வழி அறியலாகும் தாய்த்தெய்வங்கள் மட்டுமே இந்நூலில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் பழமரபுக் கதைகள் (Legend) வழி அறியவேண்டிய வட்டாரத்தன்மை கொண்ட தாய்த் தெய்வங்கள் மிகுதியாக உள்ளன. இவை அதன் எண்ணிக்கை அளவில் மிகுந்தவை. இவற்றை ஒதுக்கிவிட்டு இந்தியாவின் தாய்த் தெய்வங்களை அடையாளப் படுத்த முடியாது.

இருப்பினும் இந்நூல் பின் வரும் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளது.

(1) பொதுவாக இத்தகைய ஆய்வுகளில் வைதீக(வேத) சமயத் தாக்கமே தூக்கலாக இருக்கும். ஆனால் இந்நூல் இந்தியாவில் தோன்றிய அவைதீக சமயங்களையும் இந்தியாவில் பரவிய அயல்நாட்டுச் சமயங்களையும் ஆய்வுக்குட்படுத்தி உள்ளது

(2) மரபுவழி நிற்கும் அறிஞர்களுடன் நின்று விடாமல் ஜே.டி.பெர்னால், ஜார்ஜ் தாம்சன், பிரிப்ஃபால்ட், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா போன்றோரின் ஆய்வுச் சிந்தனைகளையும் பயன்படுத்தி உள்ளார்.

இதனால் மாநில அளவில் அல்லது ஒரு வட்டார அளவில் தாய்த்தெய்வங்களை ஆய்வு செய்யப் புகுவோருக்கு சரியான சிந்தனைப் போக்கை இவை உருவாக்கும்.

மொத்தத்தில் இந்நூலானது தாய்த் தெய்வங்கள் குறித்த அறிமுக நூலாகவும் ஆய்வு மேற்கொள்ள விழைவோருக்கு அறிமுக நூலாகவும் விளங்கும் தன்மையது.

ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It