காதாசப்தசதி பிராகிருத மொழியில் தோன்றிய இலக்கியமாகும்.  ஆந்திர நாட்டை ஆண்ட மன்னன் ஹாலசாதவாகனன் என்பவரால் இது தொகுக்கப் பட்டது.  பிராகிருத மொழிக்கும், தமிழ்மொழிக்கும் மிக நெருங்கிய உறவு இருந்திருக்கிறது என்பர்.  ‘காதா’ என்பதற்கு ‘செய்யுள்’ என்பது பொருளாகும்.  ‘சப்தசதி’ என்றால் ‘எழுநூறு’ என்பது பொருளாகும்.  இதில் உள்ள பாடல்கள் திருக்குறளில் உள்ள பாடல் களின் கருத்துக்களோடும் தொடர்புகளோடும் ஒப்புமை உடையவைகளாகக் காணப்படுகின்றன.  கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.2ஆவது நூற்றாண்டு வரை எழுதப்பட்ட பாடல்களை, கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஹாலன் என்னும் மன்னன் தொகுத்தான் (நா. செய ராமன் அரங்கேறிய ஆய்வுகள், ப.28). திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகிறது.  திருக்குறளின் கருத்தாடல்கள் பிற மொழிகளின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தின என்பது ஆய்விற்குரிய வினாவாகும்.  தமிழகத்தில் இருந்து பிற மாநிலங் களுக்குப் புலம்பெயர்ந்தவர்களாகவும், பிற மாநிலங் களிலிருந்து தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்களாகவும் திருக்குறள் கருத்துக்கள் பரப்பப் பட்டிருக்கலாம்.  வணிகத்தின் பொருட்டு அல்லது அரசியல் காரணங்களின் பொருட்டு ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களால் திருக்குறள் கருத்துக்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.  இக்கருத்துக்கள் காதா சப்தசதியின் பாடல்களை எழுதிய புலவர்களால் கையாளப்பட்டிருக்கலாம்.  திருக்குறளின் தாக்கம் (influence) காதா சப்தசதியில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்குறளும் காதாசப்தசதியும்:

“சென்றவர் விரைந்து சேர வருவார்

நானும் புலப்பேன் நாயகன் என்னை

ஆற்று வித்தே அரவணைப் பானென

கொழுநர் பால்யாம் கொள்ளும் பேராசை

எல்லாம் யாரோ ஒருசிலர்க் கேதான்

பாக்கிய வசத்தால் பலிக்கு மன்றே”

- சிரிதம்மீயன் (1-17)

என்னும் காதாசப்தசதி பாடலில் தலைவி, பிரிந்து சென்ற தலைவன் தன்னைச் சந்திக்க வந்ததும் அவனோடு ‘புலவி’ கொள்ளாமல் ஓடிச் சென்று அணைத்துக் கொள்வேன் என்று கூறுகிறாள்.  புலவி கொள்வதும் தலைவன் தேற்றுவதும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்காது.  பாக்கியம் செய்த பெண்களுக்கே கிடைக்கும்.  இந்தப் பாடலில் உள்ள கருத்து,

புலப்பேன் கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன் கொல் கண்ணன்ன கேளிர் வரின்”         (குறள்.  1267)

என்னும் குறளின் கருத்தைப் பின்பற்றி எழுதப் பட்டுள்ளது. திருக்குறள் தலைவி, பிரிந்து சென்ற கண் போன்ற தலைவன் வந்தால் அவனோடு ‘புலத்தல்’ முடியாது.  தழுவிக் கொள்வேன்; அவனோடு கலந்து கிடப்பேன் என்று கூறுகிறாள்.  காதாசப்தசதியிலும் திருக்குறளிலும் தலைவியர்கள், பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் வரும்போது சினம் கொண்டு புலவி கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.  ஆனால் அவனை நேரில் கண்டதும் புலவியை மறந்து ஓடிச் சென்று தழுவிக் கொள்கின்றனர்.  தலைவியர்கள் தலைவனோடு ‘புலவி’ கொள்ள விரும்புவது என்னும் கருத்து இரு நூல்களிலும் ஒன்று போலவே படைக்கப்பட்டுள்ளது.

“யாதோ ருறுப்பின் மீதே படிந்து

காதலன் கண்கள் கவின்தனைப் பருகும்!

அதனை மறைப்பேன்! ஆயினும் உள்ளம்

அவன்காண் பதனை விழையு மம்ம!”

வசலகன் (1-73)

என்று காதாசப்தசதியின் பாடலில் தலைவி, “தலைவன் தன் உடல் உறுப்புக்களின் அழகைக் கண்களால் பருகும் போது நாணத்தால் மறைத்தேன்; ஆனால் உள்ளமோ அவன் என்னைக் காண்பதையே விரும்பு கிறது” என்று கூறுகிறாள்.  தலைவன் பார்ப்பதை விரும்பாதது போல் நடிக்கின்றாள்.  ஆனால் அவள் உள்ளம் அதை விரும்பி நிற்கிறது.  இஃது காதலர் களுக்கிடையே நிகழும் ஒரு நாடகமாகும்.  இதே கருத்து,

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்”            குறள் : 1094

என்னும் குறட்பாவில் படிந்திருப்பதைக் காணலாம்.  தலைவனிடத்துத் தவறில்லாத போதும் தலைவியர் ஊடல் கொள்வர் என்பதை,

“கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று” (குறள் : 1313)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகின்றார்.  இதே கருத்தை,

“கடிமலர்த் தேனீ கடித்திட வீங்கிய

காதலன் இதழினைக் கண்ட பேதை

பொறாமை கொண்ட புளிஞர் கோன்மகள்

அயல்மர நிழலினை யடைந்தனள் விரைந்தே”  (7-34)

என்னும் காதாசப்தசதி பாடல் சுட்டுவதாகக் கூறுவர்.  (மு. நிலாமணி., காதாசப்தசதி - சங்கப்பாடல்கள் ஒப்பு நோக்கு, உரசல்கள் (ப. 35)).  திருக்குறள் தலைவி, தலைவன் பார்க்காதபோது மீண்டும் பார்க்கிறாள்.  ஆனால் காதாசப்தசதி தலைவி அவன் பார்க்கும் போது நாணத்தால் மறைத்துக்கொள்ள விரும்பு கிறாள்.  திருக்குறள் தலைவியும் காதல் எதிர்வினை புரிகின்றாள்.  ஆனால் சப்தசதி தலைவி எதிர்வினை புரியாமல் காதலன் செய்கையை உள்வாங்கி ஏற்றுக் கொள்கிறாள்.   “கண்களால் காதலன் காதலியைப் பார்த்தல்” என்னும் கருத்து இரு நூல்களிலும் ஒன்று போலவே அமைந்திருத்தலைக் காணலாம்.

“இமைநொடி யேனும் இதயத் திருந்து

பிரிந்தா லன்றே பிரிவிடை நினைப்பேன்

நீங்கள் தம்மை நினைத்தலு மரிதே.”

ஹாரகுந்தன் (1-95)

என்னும் காதாசப்தசதி பாடலில் வரும் தலைவி, “என் இதயத்திலிருந்து நொடிப்பொழுது கூடத் தலைவன் பிரிந்திருப்பதில்லை; பிரிந்தால்தானே மறுபடியும் நினைப்பதற்கு” என்று கூறுகிறாள்.  தலைவனை எப் பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பதால் காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்டிருந்தாலும் காதலர்களின் உள்ளமும் செயலும் ஒன்று போலவே இருப்பதைக் காணலாம்.  அஃதே போல் ஆந்திர நாட்டில் தோன்றிய காதாசப்தசதியிலும் தமிழ் நாட்டில் தோன்றிய திருக்குறளிலும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்று போலவே இருப்பதைக் காணலாம்.  ஏனென்றால், இரண்டு மொழிகளுக்கும் மூலமாக இருப்பது திராவிடப்பண்பாடே (Dravidian Culture) ஆகும்.

“புல்வேய் கூரை புயலிற் சிதற

உள்நுழை மழைநீர் ஊற்றில் கரையா

திருக்க நங்கை ஏந்தலின் தவணை

நாள்குறித் திட்ட நற்சுவ ரெழுத்தை

அங்கை மறித்தே அணைத்துக் காத்தாள்”

ஐயசேனன் (2 - 70)

என்ற காதாசப்தசதிப் பாடலின் தலைவி, பிரிந்து சென்ற தலைவன் வரும் நாளைச் சுவரில் குறித்து வைத்துள்ளாள்.  அதிலுள்ள எழுத்துக்களின் மீது மழை நீர் பட்டு அழிந்து போகாமல் கைகளால் காத்தாள் என்ற செய்தியைக் கூறுகிறது.  தலைவன் திரும்பி வரும் நாளைச் சுவரில் குறித்து வைப்பது பண்டைய மக்களின் பழக்கமாகும்.

“வாளற்றுப் புற்குஎன்ற கண்ணும் அவர்சென்ற

நாள்ஒற்றித் தேய்ந்த விரல்”   (குறள் : 1261)

என்னும் குறட்பாவில் தலைவி, தலைவன் திரும்பி வரும் நாளைச் சுவரில் கோடுகளாக எழுதி வைத் துள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.  அவ்வாறு கோடு போட்டு, கோடு போட்டு விரல்கள் தேய்ந்து விட்டன என்று தலைவி கூறுகிறாள்.  பிரிவுத் துயரை வெளிப் படுத்த இரண்டு நூல்களும் சுவரில் “கோடுபோடும்” வழக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.  இரண்டு பாடல் களுமே தலைவி கூற்றாக இடம் பெற்றுள்ளன.  பிரிவுத் துயர் ஆண்களைவிட பெண்களுக்கு மிகுதி யாக இருக்கும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தலைவனுக்குக் கடிதம் எழுத முயல்கிறாள் ஒரு தலைவி.  ஆனால் அவளால் முதல் எழுத்தைக் கூட எழுத முடியவில்லை.  எழுதுகோல் நழுவியது.   இதனை,

“வியர்ந்து நடுங்க விரல்வச மிழந்து

நழுவும் கோலினால் எழுதற் கியலா

துள்ளேன் சுவத்திகத் தோரெழுத் தேனும்;

கடிதம் எழுத முடியுமோ தோழி!”

இல்லகன் (3-44)

என்னும் காதாசப்தசதி பாடல் கூறுகிறது.  எழுத்துக் களை எழுதும் எழுதுகோலைப் பயன்படுத்தி, தலைவியின் மனத்துன்பத்தை இப்பாடல் வெளிப் படுத்துகின்றது.  ஆனால் கண்ணுக்கு மை எழுதும் கோலைப் பயன்படுத்திப் பெண்ணின் மன உணர்வு களை வள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.

“எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து”   (குறள் : 1285)

என்ற குறளில் தலைவி தன் மன உணர்வை வெளிப் படுத்துகின்றாள்.  மை தீட்டுதலை ‘எழுதுதல்’ என்பது பழந்தமிழர் வழக்கமாகும்.  கண்ணுக்கு மை தீட்டும் போது, கண்களால் மை தீட்டும் கோலைப் பார்க்க முடியாது.  அதைப் போலவே பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும் பொழுது அவர் செய்த தவறுகளைப் பார்க்கமுடிவதில்லை என்பது தலைவியின் கருத் தாகும்.  காதாசப்தசதியின் தலைவி எழுதும் கோலால் எழுத முடியவில்லை என்கிறாள்.  திருக்குறள் தலைவி கண்ணுக்கு மை எழுதும் கோலைக் கண்ணால் பார்க்க முடியவில்லை என்கிறாள்.  எழுதுதல்என்னும் செயலை அடிப்படையாகக் கொண்டு தத்தமது மன உணர்வுகளை இரு தலைவியர்களும் வெளிப்படுத்துகின்றனர்.

சமூகவியல் பார்வை:

காதல் (Love) செய்திகளை மட்டும் அல்லாமல் சமூகவியல் (Sociology) செய்திகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  காதாசப்த சதியில் சுந்தரன் என்னும் (204) கவிக் கூற்றாக வரும் கீழ்க்கண்ட பாடல் இதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.

“மன்னவர்க் கெண்பதம் மங்கையர்க் கேநிறை

வீரருக் குப்பொறை விவேகிகட் கின்னுரை

மூடருக் கேதகு மோனமிவ் வைந்துமே

நாடுறுங் காலை நல்லெழி லாமே”     சுந்தரன் (3-43)

இதில் மன்னன், பெண், வீரர், அறிஞர், மூடர் ஆகியோரின் இயல்புகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.மன்னன் = எளிதில் காணும்படி இருத்தல் / பெண் = கற்பு / வீரன் = பொறுமை / அறிஞர் = இனிய சொல் / மூடர் =மௌனமாக இருத்தல்.இதே கருத்துக்கள் கீழ்க்கண்ட குறள்களில் காணப்படுகின்றன.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும். (குறள்: 548)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை. (குறள்: 57)

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.    (குறள்: 650)

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.   (குறள்: 403)

மன்னன், பெண்கள், அறிஞர், மூடர் ஆகி யோரைப் பற்றி நான்கு குறட்பாக்களில் வள்ளுவர் கூறும் கருத்துக்கள் ஒரே காதாசப்தசதி பாடலில் இடம்பெற்றுள்ளன.  சமுதாயச் சிந்தனைகள் (Social thoughts) காதாசப்தசதியில் படிந்திருப்பதைக் காணலாம்.

“தெய்வத் துணையிலா துய்வது மரிதே

செய்தவை கூடச் சிதைத லுறுமே

மனித முயற்சி மணற்சுவர் போல

மூலத் தோடே முடிதலு முண்டே” ரோலதேவன் (3-45)

என்ற சப்தசதி பாடல் “மணலால் செய்த சுவர் இடிவதுபோல் மனித முயற்சிகள் சில சமயம் சூழ் நிலை உதவியின்றி அடிப்படையுடனே அழிவுறும்” (மு.கு.ஜகந்நாதராஜா (மொ.ஆ.), காதாசப்தசதி, ப.  168) என்பதை எடுத்துரைக்கிறது.  வள்ளுவரும் விதியின் வலிமையை,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்”         (குறள் : 380)

என்ற குறளில் குறிப்பிடுகிறார்.  இரு நூல்களிலும் விதியின் வலிமை மிகுத்துப் பேசப்படுவதற்குக் காரணம் சமண சமயத்தின் தாக்கமாக இருக்கலாம்.  ‘ரோலதேவனும்’, ‘வள்ளுவரும்’ சமணசமயத்தின் வழி இக்கருத்தைப் பெற்றிருக்கலாம்.  ஹாலன் என்னும் கவிக் கூற்றாக வரும், 

“திருவெனப் படுவது கைப்பட இருத்தல்

நட்பெனப் படுவது நடலையி லுதவல்

அழகெனப் படுவது அருங்குணச் சிறப்பே

அறிவெனப் படுவது அறத்தொடு நிற்றல்”ஹாலன் (3-51)

என்ற சப்தசதி பாடலில் பொதிந்துள்ள கருத்து, திருக்குறளின் கருத்துக்களை அடியொற்றி எழுதப் பட்டுள்ளது.  நட்பு = துன்புறும் போது உதவுதல்; அறிவு = அறத்தோடு நிற்றல்.  உடுக்கை இழந்தவனுக்குக் கை உதவுவது போல நண்பர்கள் (குறள் : 778) இருத்தல் வேண்டும் என்றும், அரத்தைப்போலக் கூரிய அறிவு இருந்தாலும், மக்கட் பண்பும் இருத்தல் வேண்டும் (குறள் : 997) என்றும் வள்ளுவர் கூறு கின்றார்.  நட்பு மற்றும் அறிவு குறித்து வள்ளுவரும் ஹாலனும் கூறும் கருத்துக்கள் ஒற்றுமை உடையவை களாய்க் காணப்படுகின்றன.  நனவில் நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என்று சிக்மன் பிராய்டு குறிப்பிடுகின்றார்.  காதாசப்த சதியின் தலைவியால் கனவு காணமுடியவில்லை.  ஏனென்றால் அவளால் உறங்கமுடியவில்லை.; காரணம் தலைவனை நினைத்துக் கொண்டே இருப்பதால்.  இதனை,

“கனவி லேனும் காதலர்க் காணும்

பேறு பெற்றோர் சீருற் றோரே!

காதல னின்றிக் கண்படை கொள்ளார்க்

கேது கனவுகள்? இழந்தனம் யாமே”

- மலய சேகரன் (4-97)

என்னும் காதாசப்தசதிப் பாடல் உணர்த்துகிறது.  ஆனால் திருக்குறளில் தலைவி வேறுவகையான துன்பத்திற்கு உள்ளாகின்றாள்.  நனவில் வந்து தலைவன் தலைவியோடு சேர்ந்து இன்பம் நல்க வில்லை.  அதனால் தலைவி தலைவனைக் கனவில் கண்டு இன்பம் நுகர்வதால்தான் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றாள்.  இதனை,

“நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டுஎன் உயிர்”           (குறள் : 1213)

என்ற குறள் சுட்டுகிறது.  சப்தசதியின் தலைவி தலைவனைக் கனவில் காணாமல் துன்புறுகிறாள், குறள் தலைவி, கனவில் தலைவனைக் கண்டு துன்புறுகிறாள்.

“பிறதீப் போல்வ தறவே இல்லை!

காதல் தீயின் கணக்கே வேறாம்!

காய்ந்த மனத்தில் ஓய்ந்தே போகும்!

ஈர நெஞ்சில் சீருடன் பற்றும்”

ராமதேவன் (5-30)

என்ற காதா சப்தசதியின் பாடல் காதல் தீயின் முரண்பாட்டை அழகியலோடு விவரிக்கிறது. காய்ந்திருத்தல் = தீ பற்றும், காய்ந்திருத்தலால் (சினந்திருந்தால்) = காதல் தீ பற்றாது, ஈரமாக இருந்தால் = தீ பற்றாது, ஈரமிருந்தால் = காதல் தீ பற்றும் (அன்பு) இதே போலவே காதல் தீயின் வியப்பான இயல்புகளை வள்ளுவர் காட்டுகிறார்.  இத்தீ விட்டு நீங்கினால் சுடும்; அருகில் நெருங்கிச் சென்றால் குளிர்ச்சியைத் தரும்.  காதல் தீ = விலகினால் சுடும்; காதல் தீ = நெருங்கினால் குளிரும்.  இதே கருத்தை,

“நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்” (குறள் : 1104)

என்ற குறள் உணர்த்துகிறது.  திருக்குறளுக்கும் காதா சப்தசதிக்கும் இடையே கருத்தொற்றுமையும் கால ஒற்றுமையும் காணப்படுகின்றது.  திருக்குறள் இறுக்க மான செறிவான அறவியல் விதிகளைப் பின்பற்றுகிறது.  காதாசப்தசதி நெகிழ்ச்சியான விதி முறைகளைப் பின்பற்றுகிறது.  திருக்குறள் பெரும்பாலும் அக உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.  ஆனால் காதாசப்தசதி மனிதர்களின் புற உணர்வுகளையும், உடல் வேட்கையையும் எடுத்து இயம்புகிறது.  திருக்குறளில் செவ்வியல் (Classical) தன்மை மிகுந் துள்ளது.  காதாசப்தசதியில் நாட்டுப்புறவியல் (Folklore) தன்மை மிகுந்துள்ளது.  காதாசப்தசதியில் ஒழுக்கமீறல்கள் கூடக் கவிதையாகப் பாடப்பட்டுள்ளன.  ஆனால் திருக்குறள் கடுமையான ஒழுக்க விதி களையே அறிவுறுத்துகிறது.  காதாசப்தசதியில் உள்ள பாடல்களைப் பல்வேறு புலவர்கள் எழுதி யுள்ளனர்.  இப்பாடல்களை ‘ஹாலன்’ என்னும் மன்னன் காதாசப்தசதியாகத் தொகுத்து வழங்கி யுள்ளார்.  ஆனால் திருக்குறளில் உள்ள 1330 குறட் பாக்களையும் திருவள்ளுவர் ஒருவரே எழுதியுள்ளார்.  காதாசப்தசதியில் பால் பகுப்பும் அதிகாரப் பகுப்பும் இல்லை.  ஆனால் திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பால் பகுப்பும் 133 அதிகாரப் பகுப்பும் இடம் பெற்றுள்ளன.  திருக்குறளின் தாக்கம் (influence) காதாசப்தசதியில் வெள்ளிடை மலையாய் விளங்கு வதைக் காணலாம்.

துணை நூல்கள்

1.மு.கு.ஜகந்நாதராஜா (மொ.ஆ.), காதாசப்தசதி, விசுவ சாந்தி பதிப்பகம், ராஜபாளையம், முதல் பதிப்பு, 1981.

2.க.ப.அறவாணன், திருக்குறள் தெளிவுரை, தமிழ்க் கோட்டம், சென்னை, முதல்பதிப்பு, சென்னை.  2007

3.நா.செயராமன், அரங்கேறிய ஆய்வுகள், குமரன் பதிப்பகம், மதுரை, முதல் பதிப்பு, 1985.

4.மு. நிலாமணி, ‘காதாசப்தசதி - சங்கப்பாடல்கள் ஒப்புநோக்கு’, உரசல்கள், ப.ச. ஏசுதாசன் & க. பூரணச்சந்திரன்.  (ப.ஆ.) துறை வெளியீடு, திருச்சி, முதல்பதிப்பு, 1988. 

Pin It