periyar and anna 539‘இந்து’ மதத்தினில் கடவுளுக்குப் பணிசெய்யும் பொருட்டு பெண் குழந்தைகளை கோயில்களில் ‘அர்ப்பணிக்கும்’ பழக்கமானது இடைக்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. அவ்வாறு ‘அர்ப்பணிக்கப்படும்’ பெண்கள் தேவதாசி என்ற பொதுப் பெயருடன் சமூகத்தால் அழைக்கப்படலாயினர். மதத்தின் பெயரால் கடவுளர்களை மணக்கும் பெண்கள் தங்களை கடவுளரின் மனைவிகள் என்றும், தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்றும் கருதிவரலாயினர்.

ஆனால், எதார்த்தத்தில் அவர்கள் பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்களாலும், மற்றவர்களாலும், சீரழிக்கப்பட்டு (molested), தங்களின் உடலினையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை வாழ நிர்பந்திக்கப்பட்டும் வந்தனர் என்பதே வரலாற்று உண்மையாகும். (குடி அரசு. 06.12.1931; Jeevanandam and Rekha Pande. 2017.) எனவே அந்தப் பெண்களின் வாழ்வினை மேம்படுத்தும் பொருட்டு அந்த முறையினை ஒழிக்க 1925-ஆம் ஆண்டினில் தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமானது சிறப்பானதொரு பங்களிப்பினைச் செய்தது. இந்தக் கட்டுரையானது தேவதாசி முறை ஒழிப்பினில் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பினைப் பற்றி உரிய வரலாற்றுத் தரவுகளுடன் விளக்க முற்படுகின்றது.

தேவதாசி முறையும், விபச்சாரமும்

பொதுவாக மக்கள் தங்களின் மீதான சாபத் தீட்டுகளில் இருந்து விடுபடவும், அவரவர்களின் செல்வச் செழிப்பினை உலகிற்கு பறைசாற்றவும், ஆண் குழந்தைகளைப் பெற வேண்டியும், ஆண் குழந்தைகளின் நன்மைக்காகவும், குடும்ப நன்மைக்காகவும், மரணத்திற்குப் பின்னான சொர்க்க வாழ்க்கையின் மீதான மோகத்தாலும், தேவதாசி முறையின் மூலம் எளிய வழியில் பணத்தினை ஈட்டக் கூடிய வாய்ப்பு உள்ளதனாலும், சமூகத்தில் உள்ள பலர் பெண் குழந்தைகளை தேவதாசிகளாக ஆக்க ஆர்வம் கொண்டனர். (குடி அரசு. 30.03.1930.) மேலும், பெண்கள் தேவதாசிகளாக ஆக்கப்படுவதற்கு வறுமையும் ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்துள்ளது. (குடி அரசு. 04.09.1927.) அதுமட்டுமல்லாமல், பெண் வாரிசு இல்லாத வயது மூப்படைந்த தேவதாசிகள் தங்களின் ஆளுமைகளைத் தொடரவும், பாரம்பரியத்தினையும், சொத்தினைத் தொடர்வதற்கும், பெரும்பாலும் இதர சாதிகளிலுள்ள ‘இந்துப்’ பெண்களை விலைக்கு வாங்கி கோயில்களுக்கு ‘அர்ப்பணித்து’ வந்தனர். (The Proceedings of the Madras Legislative Council: Second Session of the Third Legislative Council (PMLC. (October 31-November 5, 1927): 416. அவ்வாறு ‘அர்ப்பணிக்கப்படும்’ சடங்கானது ‘பொட்டுகட்டுதல்’ அல்லது ‘பொட்டுகட்டுச் சடங்கு’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. (ஜீவானந்தம். (ஏப்ரல்-ஜூன், 2020): 241-248)

பாலியல் தொழிலிற்கும், தேவதாசி முறைக்கும் இடையே ஒரு மெல்லிய வேறுபாடு மட்டுமே இருந்து வந்துள்ளது. பல சமயங்களில் தாசிகள் விபச்சாரத்தினை தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வசதிக்காகவும் மேற்கொண்டிருந்தனர். தேவதாசிகள் தாசிகளாகவும், வேசிகளாகவும் இருக்க சபிக்கப்பட்டவர்கள் என்று குடி அரசு இதழானது குறிப்பிடுகிறது. (குடி அரசு. 21.09.1930.) இந்தவகை சொற் பயன்பாட்டின் மூலம் ‘வேசி’ என்ற சொல்லால் விலைமகளிரினையும், ‘தாசி’ என்ற சொல்லால் தேவதாசிகளையும் குறிப்பதன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரையும், தேவதாசிகளையும் தனித்து அடையாளம் காட்டியது. வேசிகள் மத அங்கீகாரம் அற்றும், தாசிகள் மதம் என்ற நிறுவனத்தின் அங்கீகாரத்துடனும், பாதுகாப்புடனும் விபச்சாரத்தினை மேற்கொண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும். (Jeevanandam and Rekha Pande. 2017.)

தேவதாசிகள் தங்களின் வாழ்க்கைக்காக தங்களையே விற்று வாழ நிர்பந்திக்கப்பட்டு வருவதை நன்குணர்ந்த சுயமரியாதைக்காரர்கள் தேவதாசி முறையினை ‘தொழில்முறை விபச்சாரம்’ என்றே குறிப்பிட்டனர். (Revolt .11.12.1928.) குடி அரசு கட்டுரையானது, பொட்டுகட்டும் சடங்கின் மூலம் தேவதாசிகளானவர்கள் பாலியல் தொழிலாளிகளாகவும், காமக்கிழத்திகளாகவும் தங்களின் அடுத்தகட்ட வாழ்வியல் வழிகளாக தேர்ந்தெடுத்தனர் என்று குறிப்பிடுகின்றது. (குடி அரசு. 30.03.1930.)

திருவிழாக் காலங்களில் அர்ச்சகர்களின் வீடுகளானது விபச்சார மையங்களாக செயல்பட்டு வந்ததுடன் (குடி அரசு. 09.10.1927.), தங்களின் தேவைகளுக்கு எஞ்சிய தாசிகளை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பகிர்ந்தளித்தும் வந்துள்ளனர். (குடி அரசு. 04.09.1927.) அதுமட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் தங்களின் பயணங்களின் போதும் தேவதாசிகளை தங்களுடன் அழைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு செல்ல இயலாத பட்சத்திலும் கூட அர்ச்சகர்கள் தாசிகளை விபச்சாரத்திற்காக பிரத்யேகமாக தேவைப்படுவோர்களுக்காக அனுப்பி வைத்தனர் என்பதனையும் அறிய முடிகிறது. (குடி அரசு. 25.09.1927.) அதுமட்டுமல்லாமல் கோயில் அர்ச்சகர்கள் பக்தர்கள் பூசைக்காகக் கொண்டு வரும் பொருட்களைக் கூட தாசிகளுக்கு என எடுத்து வைப்பதனை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். (குடி அரசு. 05.02.1928.) அதேபோல், கோயில் அறங்காவலர்களும் அவர்களது வாரிசுகளும் அழகே உருவான தேவதாசிப் பெண் மக்களின் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தனர் என்று குடி அரசு இதழானது குறிப்பிடுகிறது. (குடி அரசு. 04.09.1927.)

அதேபோல், கோயில்களில் பக்தர்களை ஈர்க்கவும், கடவுளர்களின் ஆசைகளுக்காகவுமே இத்தொழிலினைச் செய்ய பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார். (குடி அரசு. 04.09.1927.) மதத்தின் மீது நம்பிக்கையும், கடவுளரின் மீது ஆழ்ந்த பக்தியினையும் கொண்ட பக்தர்களும்கூட கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் தொடரும் விபச்சாரத்திற்கு பெரும்பாலும் தங்களது ஆதரவினை அளித்தே வந்தனர். பக்தி என்ற பெயரில் கோயிலிற்கு பக்தர்கள் வருவது என்பது தேவதாசிப் பெண்களை உடலியல் இச்சைகளுக்காகப் பயன்படுத்தவே என்று குடி அரசு இதழானது குறிப்பிட்டு, இந்த நடைமுறையானது சாதாரண குடும்ப பெண்களின் வாழ்விலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்றது. (குடி அரசு. 09.10.1927.)

பக்தி என்ற பெயரால் இத்தகைய பெண்களைப் பார்க்க கோயில்களுக்கு வரும் பக்தர்கள், தேவதாசிகளுடன் சில உடன்பாடுகளை செய்து கொள்கின்றனர். (குடி அரசு. 09.10.1927.) குறிப்பாக தேவதாசிகளை தன்னகத்தே வைத்துக் கொள்ள திருமணங்கள், பருவமடைதல் மற்றும் இன்னும் பிற விழாக்களுக்கு பிரத்யேகமாக தேவதாசிகளை அழைப்பதனை வாடிக்கையாகக் கொண்டு இருந்தனர். பக்தர்கள் புனிதப் பயணங்கள் மேற்கொள்வது என்பதே தேவதாசிகளைக் காண்பதற்காகவும், தங்களின் காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவுமே என்று இராகவன் அவர்கள் குறிப்பிடுகிறார். (குடி அரசு. 06.12.1931.) மத அடிப்படையிலான பாலியல் தொழிலானது இராமேஸ்வரம், மதுரை, திருச்செந்தூர், சிதம்பரம், ஸ்ரீரங்கம், பழனி, காசி மற்றும் கயா போன்ற இடங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். (குடி அரசு. 23.10.1927.)

சுயமரியாதை இயக்கமும் தேவதாசி ஒழிப்பும், அதற்கான சட்டப் போராட்டமும்

சாதி, மத மற்றும் சடங்குகளின் பெயரால் ‘இந்து’ மதக் கோயில்களில் நடந்துவரும் இளம் பெண்களின் ஒழுக்கக்கேடான வாழ்வினை இந்திய அரசாங்கமானது தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதராசப்பட்டண சட்டசபைக் கூட்டத்தில் முத்துலட்சுமி அவர்கள் வாதிட்டார். (PMLC. (October 31-November 5, 1927): 415.) இந்த நாட்டில் அப்பாவி குழந்தைகளையும், இளம் பெண்களையும் கோயிலில் ‘அர்ப்பணிக்கப்படுவது’ என்பது இந்தியப் பெண்களுக்கான இழுக்காவதுடன், ஆகப் பெரிய தவறாகவும், சமூக நீதிக்கு தீங்காகவும் அமையும். எனவே, இக்கருத்தினை ஏற்கும் எல்லா பெண்கள் அமைப்புகளும் இத்தீர்மானத்தினை ஆதரிக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் வேண்டிக் கொண்டார். இவ்வாறு சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவிற்கான நியாயங்களை முத்துலட்சுமி அவர்கள் ஆணித்தரமாக முன்வைத்திருந்த போதும், அம்மசோதாவிற்கு ஆதரவான தீர்மானங்களைக் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டார் என்றே கூற வேண்டும்.

அடிப்படைவாதிகளும், அவர்கள் பாதுகாக்க நினைத்த தேவதாசி முறையும்

தேவதாசி ஒழிப்பு குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் மீது கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ‘இந்து’ மதச் சடங்குகளில் இடம்பெறக் கூடிய நடனத்தின் முக்கியத்துவத்தை பிரதானப்படுத்தியே பெரும்பாலான அடிப்படைவாதிகளின் வாதங்களானது சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் இருந்து வந்தது. தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்பது ‘இந்துக்களின்’ நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதாகவே அமையும் என்று தேவதாசி முறையினை புனிதமானதாகவும், பாரம்பரியமானதாகவும் கருதிய மறுமலர்ச்சியாளர்களும், அடிப்படைவாதிகளும் வாதிட்டனர். விஜயராகவாச்சாரியார் எனும் அடிப்படைவாதி அவர்கள் தேவதாசி முறையினை புனிதம் என்று குறிப்பிட்டு, அது சமூகத்தில் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று வாதாடியதை குடி அரசு இதழானது பதிவு செய்துள்ளது. (குடி அரசு. 09.10.1927.) தஞ்சாவூரில் 1932-ஆம் ஆண்டு நடைபெற்ற பிராமணர் மாநாடானது குழந்தை திருமணங்களும், ஆச்சாரக் கொள்கைகளும் தொடர வேண்டுமென்றும், தேவதாசி ஒழிப்பு சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் தீர்மானங்களை இயற்றியதுடன் அந்தத் தீர்மானங்கள் வெற்றியடைய தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டதனை அறிய முடிகின்றது. (குடி அரசு. 03.07.1932.)

தேவதாசி ஒழிப்பின் முன்னெடுப்புகளை அடிப்படைவாதிகளும், உயர்சாதி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மக்களும் கடுமையாக விமர்சித்ததுடன் தேவதாசி முறைமையினில் ஏற்படும் சமூக மாற்றங்களுக்கு எந்தவகையிலும் உதவ முன்வரவில்லை என்பதனை முத்துலட்சுமி அவர்களின் எழுத்துக்களைக் காணும்பொழுது அறிய முடிகின்றது. (Young India. 29.08.1929) எல்லா சாதிகளில் இருந்தும் இளம் பெண்கள் தேவதாசிகளாக ‘அர்ப்பணிக்கப்பட்டு’ வந்திருந்த போதிலும், தேவதாசி முறையினைக் குறித்த விவாதங்கள் எழும்பொழுதெல்லாம் பல்வேறுபட்ட சாதிகளைச் சார்ந்தவர்களும், அப்பெண்களை தங்கள் சாதியினைச் சாராதவர்கள் என்று கூறி கைவிடுவது என்பது வாடிக்கையான நடவடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. (PMLC. (October 31-November 5, 1927): 416.)

சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற செயல்களையும், அவர்கள் ஏற்படுத்தும் தடைகளைக் குறித்தும் மனவேதனை கொண்ட முத்துலட்சுமி அவர்கள், தேவதாசி ஒழிப்பில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான காந்தியடிகளின் ஆதரவினைப் பெற வேண்டி, அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதினார். (Young India. 29.08.1929.) காந்தியடிகள் அவர்களோ முத்துலட்சுமியின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், அவரது திட்டமானது போதுமான தெளிவுடன் உள்ளதாகவும், மதத்தின் தூய்மைக்கும், பொதுச் சமூக நன்மைக்கும் நன்மை பயக்கத்தக்கது ஆகும் என்றும் குறிப்பிட்டார். (Young India. 29.08.1929.) காந்தியடிகள் அவர்கள் முத்துலட்சுமியின் முயற்சியினையும், சட்டசபையில் அவரின் செயல்பாடுகளையும் பாராட்டிய பொழுதும், மேற்குலக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என்ற அறிவுரையையும் வழங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும். (The Hindu. 10.09.1927)

நீதிக்கட்சியைச் சார்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களும் பழமைவாதிகளுக்கு ஆதரவாக நின்று, அந்த மசோதாவினை எதிர்த்து வாக்களித்தது முத்துலட்சுமி போன்றவர்களை வேதனை கொள்ளச் செய்தனர். சோமயாஜுலு என்பவர் எந்தவொரு விவாதமுமின்றி அவசரகதியினில் தேவதாசி ஒழிப்பு மசோதா சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்துவதினைக் குறித்து கவலை கொண்டார். கோட்டி ரெட்டி என்பவரோ மசோதாவினை ஆதரித்தபொழுதும், மசோதாவின் முக்கிய நோக்கம் என்பதை தேவதாசியின் நடனம் மற்றும் கச்சேரிகளைத் தடை செய்வதாகவே அமையும் என்று கருதினார். (திராவிடன். 02.02.1929.)

இவ்வாறு, சட்டசபையில் உள்ள நீதிக்கட்சி உறுப்பினர்கள் தேவதாசி மசோதாவிற்கு எதிராக இவ்வாறு வாக்களித்ததையும், அவர்களின் அணுகுமுறைகளையும் கண்டு சுயமரியாதைக்காரர்கள் வெட்கப்பட்டனர். தந்தை பெரியார் அவர்கள் அதனை ஒரு ‘மானக்கேடான செயல்’ என்று சாடினார். (குடி அரசு. 23.03.1930.) தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகள் மாநாடும் சட்டமன்றத்தில் இச்சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக உள்ள சபை உறுப்பினர்களைக் கண்டித்தது. (Revolt. 11.12.1928.) இந்திராணி அம்மையார் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களால் தேவதாசி ஒழிப்பு மசோதாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட தடைகளைக் குறித்து விருதுநகரில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டினில் கண்டனத்தினைப் பதிவு செய்தார். (குடி அரசு. 09.08.1931.)

தேவதாசிப் பெண்களின் சுயமரியாதை வாழ்வும், சுயமரியாதைக்காரர்களும்

சுயமரியாதைக்காரர்களின் வாதங்களும் இன்னும் பிற சீர்திருத்தவாதிகளின் வாதங்களும் தேவதாசிப் பெண்களின் சுயமரியாதையான வாழ்வினையும், வாழ்வாதாரத்தினையும் மையப்படுத்தியதாகவே இருந்தது. தேவதாசிகளின் வாழ்வு மேம்பட அவர்களுக்கு உரித்தான பொருளாதார வாய்ப்புகள் சட்ட பூர்வமாகக் கிடைக்கப் போராடினர். தேவதாசிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் சட்ட உறுதி செய்யப்பட வேண்டும் என்று யாண்டே என்பவர் குறிப்பிடுகிறார். (Yande. (n.d.): 6.) மைசூர் சமஸ்தான அரசாங்கமானது இப்பிரச்சினைகளின் தன்மைகளை நன்குணர்ந்து தேவதாசிகளுக்காக வழங்கிய மானியங்களை உறுதி செய்யும் விதமாக உரிய சட்ட உறுதியினை வழங்கியதை முத்துலட்சுமி அவர்களும் பதிவு செய்கின்றார். (Muthulakshmi Reddy. 1927: 8.) இந்த நடவடிக்கையானது மைசூர் அரசாங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் உள்ள கடவுளர்களை விபச்சாரத்திலிருந்து விடுவிக்க கூடிய முயற்சி என்று குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் அதனை பாராட்டியதை அறிய முடிகின்றது. (குடி அரசு. 04.09.1927.)

பொதுவாகவே, சமூக மாற்றத்திற்காக சுயமரியாதைக்காரர்கள் பிரச்சாரம் செய்தால் அடிப்படைவாதிகளின் பதில் வாதமானது, ‘இது தேசியத்திற்கு விரோதம்’, ‘சுயராச்சியம் கிடைத்துவிட்டால் பிறகு சட்டம் செய்துகொள்ளலாம்’ என்று சொல்லுவதும், வேறு யாராவது சமூக மாற்றத்திற்கான சட்டம் இயற்ற சட்டசபைக்கு மசோதாக்களாகக் கொண்டுபோனால், ‘சீர்திருத்தங்கள் என்பவைகள் எல்லாம் சட்டங்களின் மூலம் செய்துவிட முடியாது’ என்று கூறி, அவைகள் ‘பிரச்சாரத்தின் மூலம்தான் செய்யவேண்டும், முன்னெடுக்க வேண்டும்’ என்று சொல்லுவதுமான தந்திரங்களினால் மக்களை ஏமாற்றிக் காலம் தள்ளிக் கொண்டு வருகிறார்கள் என்று அடிப்படைவாதிகளின் முகத்திரைகளை தோலுரித்துக் காட்டினார் தந்தை பெரியார். (குடி அரசு. 05.10.1930.)

சட்டபூர்வமாக தேவதாசி முறையை ஒழிப்பதில் காலனிய அரசாங்கத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை சுயமரியாதைக்காரர்கள் புரிந்து வைத்திருந்தனர். தேவதாசி முறையினை ஒழிப்பதைப் பற்றி பொது மக்களின் கருத்தினைக் கேட்க மதராசப்பட்டண அரசாங்கமானது உத்தரவிட்ட போது, அந்த அரசாங்க நடவடிக்கையினை முட்டாள்தனம் என்று சாடிய தந்தை பெரியார் அவர்கள், எந்த ஒரு நாட்டிலாவது உள்ள நாகரிகமுள்ள அரசாங்கங்களோ, அல்லது நாட்டின் சுயமரியாதையினையோ, மக்களுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கருதும் அரசாங்கங்களோ, தேவதாசி முறை எனும் இழிவான கெட்ட பழக்கம், கடவுள் பெயராலும் மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் தொடர அனுமதிக்காது என்று தனது காட்டமான பதிலினைப் பதிவு செய்தார் தந்தை பெரியார். (குடி அரசு. 23.03.1930.)

kudiarasu 20 11 1938அதேவேளையினில், தேவதாசி முறைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் மத்தியிலும் போதிய அளவிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சுயமரியாதை இயக்கத்தினர் பாடுபட்டனர். மக்களின் அறியாமையைப் போக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுவதன் அவசியத்தை நீலாவதி அம்மையார் அவர்கள் “இன்னும் பெண் பாவம் ஏற்பது நன்றோ?” என்ற கட்டுரையினில் எடுத்துரைக்கிறார். (குடி அரசு. 14.02.1932.) தேவதாசி முறையை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட தந்தை பெரியார் அவர்கள் மதராசப்பட்டண மாகாணத்தின் செயலாளருக்கு தேவதாசி ஒழிப்பு தொடர்பின் அவசியம் தொடர்பாக கடிதங்களை எழுதினார். (குடி அரசு. 30.03.1930.) முத்துலட்சுமி அவர்கள் முன்மொழிந்துள்ள தேவதாசி ஒழிப்பு சட்ட மசோதாவானது விபச்சாரத்தினை மட்டும் தடுக்கக்கூடிய முயற்சியாக கருத முடியாது என்றும், அது விபச்சாரத்திற்கான வாயிலினையே அடைக்கக் கூடியது ஆகும் என்றும் கூறி அம்மசோதாவிற்கான ஆதரவினைத் தெரிவித்தார் தந்தை பெரியார். (குடி அரசு. 30.03.1930.)

தேவதாசிகளில் குறிப்பிட்ட சதவீதமானவர்கள் முத்துலட்சுமி அவர்களின் முயற்சிகளைப் பாராட்டியதுடன் இக்கொடிய பழக்கத்தினை ஒழிக்க தேவதாசி சமூகத்தைச் சார்ந்த இதர பெண்களையும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தனர். (குடி அரசு. 17.06.1928.) சுயமரியாதைக்காரர்கள் தேவதாசி ஒழிப்பு மசோதாவினை ஆதரிக்க வேண்டிதன் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்தினர். (குடி அரசு. 30.03.1930.) பெண்களை ‘அர்ப்பணிக்கும்’ சடங்குகளை எந்தவொரு கோயில்களிலும், பிற வழிபாட்டுத் தலங்களிலும் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கும், ‘இந்து’ சமய அறநிலையத் துறைக்கும், கோயில் வாரியங்களுக்கும், அறங்காவலர்களுக்கும் பெண்கள் சமூக மாநாடுகளின் மூலம் தங்களது வேண்டுகோளினை விடுத்தனர். (Revolt. 24.11.1929.) அதேபோல், பல மக்கள் இயக்கங்களும் தேவதாசி ஒழிப்பு மசோதாவினை வரவேற்று தீர்மானங்களை தங்களது மாநாடுகளில் இயற்றினர். (குடி அரசு. 30.03.1930.)

1930-இல் நடந்த மாதர்கள் மாநாடானது இந்திய பாராளுமன்றத்தில் பொட்டுகட்டும் சடங்குகளுக்கு எதிராக ஜெயக்கர் என்பவர் கேள்வி எழுப்பியதையும், மதராசப்பட்டண சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அவர்கள் கொண்டுவந்த மசோதாவினையும் வரவேற்று பாராட்டியது. (குடி அரசு. 18.05.1930.) செங்குந்தர்கள் அமைப்பானது தேவதாசி முறையினை ஒழிக்க சட்டசபையானது வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. (குடி அரசு. 06.11.1927.) இரண்டாவது சுயமரியாதை மாநாடானது இளம் பெண்களை ‘அர்ப்பணிப்பதையும்’, அவர்களின் நடனம் மற்றும் இசைக் கச்சேரிகளின் மூலம் பலர் ஆதாயமடைவதையும் கண்டித்தது. தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகள் மாநாடும் தேவதாசி முறையினை ஒழிக்க வேண்டுமென்று தீர்மானத்தினை நிறைவேற்றியது. (Revolt. 11.12.1928.) திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடானது முத்துலட்சுமி அவர்களின் முயற்சிகளைப் பாராட்டியதுடன் சத்தியமூர்த்தி மற்றும் இன்னும் பிற அடிப்படைவாதிகளின் தேவதாசி ஒழிப்பிற்கு எதிரான மனநிலைமையினையும், அவர்களின் அறியாமையினையும் கண்டித்தது. (குடி அரசு. 11.12.1927.) திருவாரூரில் மார்ச் மாதம் 5-ஆம் தேதி 1930-இல் நடைபெற்ற பொட்டுத்தடை மசோதாவுக்கான ஆதரவு கூட்டமானது முத்துலட்சுமி அவர்கள் கொண்டுவரும் தேவதாசி ஒழிப்பு சட்டத்தினை ஆதரித்ததுடன், மதத்தின் பெயரால் இளம் பெண்களை கோயிலிற்கு ‘அர்ப்பணிக்கும்’ தீய பழக்கத்தினை கண்டித்தது. (குடி அரசு. 13.04.1930.)

சிதம்பரத்தில் நடைபெற்ற இசை வேளாளர்களின் இளைஞர் மாநாடானது பிறப்பு மற்றும் வேலைகளின் அடிப்படையில் ஒருவரின் தகுதியினை நிர்ணயிக்கப்படக் கூடாது என்ற தீர்மானத்தினை இயற்றியதுடன், இளைஞர்களுக்கு இலவச கல்வி கொடுப்பதுடன், பொட்டுகட்டுச் சடங்குகளையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றது. (குடி அரசு.04.11.1928.) நாகப்பட்டினத்தில் 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற இசை வேளாளர் மாநாடானது கோயில்களுக்கு பெண்களை ‘அர்ப்பணிப்பது’ என்பது ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல் என்று கண்டித்தது. (குடி அரசு. 30.03.1930.)

முடிவுரை

இவ்வாறாக இருந்த சமூகச் சூழலில், இந்தியப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், மத நம்பிக்கை எனும் பெயர்களில் தேவதாசி முறை சமூகத்தினில் தொடர வேண்டும் என்று அடிப்படைவாதத்தினை முன்வைத்தவர்களுக்கு மறுமொழியாக இனி அர்ச்சகர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சாதியினைச் சார்ந்தோர், அவர்களது சகோதரிகளை இனி கோயிலில் ஆடவும் பாடவும், இன்னும் பிற சடங்குகளைச் செய்யவும் ‘அர்ப்பணித்து’ வேண்டிய ‘புண்ணியங்களை’ தேடிக்கொள்ளட்டும் என்று முத்துலட்சுமி அவர்கள் சட்டமன்றத்தினில் வாதிட்டு, சுயமரியாதைக்காரர்களின் முழு ஒத்துழைப்புடன், தனக்கு கிடைத்த எல்லாவகையான வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தேவதாசி முறை எனும் சமூக அவலத்திற்கு எதிரான சமூகப் போரில் முத்துலட்சுமி அவர்கள் தேவதாசி ஒழிப்பு மசோதாவினை சட்டமன்றத்தினில் வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் ’இந்து’ மதத்தின் பேரால் இளம் பெண் குழந்தைகள் தேவதாசி என்ற பெயரில் சீரழிக்கப்பட்டு வந்த சமூக நடைமுறையானது மதராசப்பட்டணத்தில் இருந்து அழித்து ஒழிக்கப்பட்டது.

முனைவர். ச.ஜீவானந்தம்

குறிப்புதவி நூல்கள்

இதழ்கள்

குடி அரசு

திராவிடன்

பகுத்தறிவு

புரட்சி

விடுதலை

Justice

Revolt

The Hindu

Young India

தமிழ் நூல்கள்

  • ஆனைமுத்து, வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1-6. சென்னை: பெரியார் ஈ.வெ. இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, 2009.
  • இராமாமிர்தத்தம்மாள், மூவலூர். தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர். ஈரோடு: உண்மைவிளக்கம் பதிப்பகம், 1939.
  • கல்யாணசுந்தரம், திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள். சைவ சித்தாந்தக் கழகம், 1982.
  • சர்மா, R.B.  பொட்டுக்கட்டும் வழக்கம் இக்காலத்திற்குப் பொருந்துமா? Madras: C.Muniswamy Mudaliar and Sons, (n.d.).
  • பெரியார், தந்தை. பெண் ஏன் அடிமையானாள்?. சென்னை: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 2004.
  • ஜீவசுந்தரி, பா. மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும். சென்னை: புலம் வெளியீடு, 2016.
  • ஜீவானந்தம், ச. “இந்திய மரபில் தேவதாசி முறைகள்” தமிழியல் 99. (ஜனவரி, 2018): 55-69.
  • ..., “தேவதாசியும் அவர்களின் சடங்கு முறைகளும்: ஓர் வரலாற்றுப் பார்வை”. நவீனத் தமிழாய்வு பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டு ஆய்விதழ் 8, no . 2. (ஏப்ரல்-ஜூன், 2020): 241-248.
  • ..., “தேவதாசி முறையும் அவற்றில் காணப்படும் சாதிய உட்கூறுகளும்”. சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் 3, பகுதி 3. (2021): 89-96.

ஆங்கில நூல்கள்

  • Geetha, V and S.V. Rajadurai. Revolt: A Radical Weekly from Colonial Madras. Chennai: Periyar Dravidar Kazhagam, (n.d.).
  • Jeevanandam, S and Rekha Pande. Devadasis in South India: A Journey from Sacred to Profane Spaces. Delhi: Kalpaz Publications, 2017.
  • Kersenboom, Saskia C. “Devadasi Murai.” Sangeet Natak, no. 96. (April-June, 1990): 44-54.
  • Knight Jr, Douglas M. Balasaraswathi: Her Art and Life. Chennai: Tranquebar Press, 2010.
  • Muthulakshmi Reddy, S. Why Should the Devadasi Institution in the Hindu Temples be Abolished?. Madras: Central Co-operative Printing Works, Ltd, 1927.
  • …..., “Motion Regarding Dedication of Girls to Temples”. The Proceedings of the Madras Legislative Council: Second Session of the Third Legislative Council XXXVIII. (November 4 and 5, 1927).
  • …..., Why Should the Devadasi Institution in the Hindu Temples be Abolished?. Madras: Central Co-operative Printing Works, Ltd, 1927.
  • …..., “The Presidential Address of Dr. (Mrs.) S. Muthulakshmi Reddy. Delivered at the Seventh Andhra Provincial Women’s Conference held at Ellore”. November 4-5, 1933.
  • Ramachandram, M. The Devadasi. Conjeeveram: S.K.B. Press, 1900.
  • Ramachendrar, C. Collection of the Decisions of the High Courts and the Privy Council on the Law of Succession, Maintenance and C (Applicable to Dancing Girls and their issues, Prostitutes not belonging to Dancing Girls’ Community, Illegitimate Sons and Bastards and Illatom Affiliation up to December 1891.). Madras: Scottish Press, 1892: i.
  • Ramasamy, Periyar E.V. Women Enslaved. New Delhi: Critical Quest, 2009.
  • The Collected Works of Mahatma Gandhi (June- October1929). Vol. 41. New Delhi: Ministry of Information and Broadcasting Division, 1970.
  • The Proceedings of the Madras Legislative Council: Second Session of the Third Legislative Council XXXVIII. (November 4 and 5, 1927).
  • The Proceedings of the Madras Legislative Council: Second Session of the Third Legislative Council. Vol. XXXVIII. October 31-November 5, 1927).
  • Yande, D.S. Dedication of Girls to Gods: Plea for Prohibition by Law by Naik-Maratha Mandal. Bombay: V.P. Vengurlekar, (n.d.).