ஏழு தனித்தனி நாடுகளை உள்ளடக்கியது ஐக்கிய அரபு நாடுகள். இதில் ஒரு நாடுதான் சார்ஜா. துபாயிலிருந்து சார்ஜாவுக்குக் காரில் செல்வதற்கு அரைமணி நேரம் ஆகிறது. சார்ஜாவில் இன்றளவும் நிலவுவது மன்னர் ஆட்சி. மன்னர் தலைமையில் நடைபெறும் சார்ஜா அரசுதான் ஆண்டுதோறும் ‘சார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’யை நடத்துகிறது. இந்த ஆண்டு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட் களுக்கு இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இது முப்பத்தி ஓராவது புத்தகக் கண்காட்சியாகும்.

ஈரோட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘ஈரோடு புத்தகத் திருவிழா’வை அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகவும் உயர்ந்த தரத்தோடும் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாக வைத்து சார்ஜா புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றேன்.

இந்தியாவிலிருந்து சென்று சார்ஜா புத்தகக் கண்காட்சியில் அரங்குகள் அமைத்த புகழ்மிக்க நிறுவனங்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்தாலும் கள ஆய்வை மேற்கொள்வதே எமது நோக்கமாக இருந்தது.

books-from-india_3801982-இல் இதற்கென ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறிய அளவிலான கூடாரத்தில் தொடங்கப் பட்டது சார்ஜா புத்தகக் கண்காட்சி. முதல் கண் காட்சியைத் தொடங்கி வைத்ததும் தற்போது முப்பத்தி ஓராவது புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்ததும் சார்ஜா மன்னர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் குவாசிமி தான். இவர் ஒரு புத்தக ஆர்வலர் என்பதோடு எழுத்தாளரும் கூட. இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் இவரது மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. எகிப்தில் சென்ற ஆண்டு அங்கிருந்த பழம் பெரும் நூலகம் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டது. எரிந்து சாம்பலான பல்லாயிரக்கணக்கான நூல்களின் இழப்பை ஈடு கட்டும் பொருட்டு இந்த ஆண்டு சார்ஜா கண் காட்சியின்போது இவர் பல்லாண்டுகளாக அரிதின் முயன்று சேகரித்துப் பாதுகாத்து வைத்திருந்த அரிதினும் அரிதான 4,000 பழம் பெரும் எகிப்து நூல்களை எரிந்துபோன எகிப்து நூலகத்திற்குக் கொடுத்து அதனைப் புதுப்பிக்க உதவியுள்ளார். அந்த 4,000 நூல்களையும் கண்காட்சியில் பொது மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.

முப்பதாண்டுகளாகப் படிப்படியாக வளர்ந்து தற்போது இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சி விரிவுபட்ட முறையிலும் உலகு தழுவிய நிலையிலும் காணப்பட்டது.

மொத்தம் 62 நாடுகள் பங்கேற்றன. இதில் 24 நாடுகள் இந்த ஆண்டுதான் முதன்முறையாகப் பங்கேற்றுள்ளன. மொத்தம் பங்கேற்ற 62 நாடுகளில் 22 நாடுகள் அரபு நாடுகளாகும். மீதமுள்ள 40 நாடுகள் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகளாகும். மொத்தம் 924 நிறுவனங்கள் இந்த ஆண்டின் கண்காட்சியில் அரங்குகள் அமைத்தன. இதில் 38 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.

சார்ஜா நகரின் நடுவில் அமைந்துள்ள மிகப் பெரும் வர்த்தகக் கண்காட்சிகளெல்லாம் நடை பெறும் பிரம்மாண்டமான நிரந்தர அரங்கில்தான் (நுஒயீடி ஊநவேசந) இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. முதல் மூன்று நாட்களிலேயே 1,35,000 பேர் வந்து சென்றதாகக் கண்காட்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களும் ஆசிரியர் களும் இதனைப் பெரிதும் உற்சாகத்துடன் முழுமை யாகப் பயன்படுத்தினர்.

ஏராளமான பொருட்செலவில் நடைபெறுகிற இக்கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. 10X10 அடி அளவுள்ள அரங்குகள் ஒவ்வொன்றிற்கும் இந்தியத் தொகையில் சுமார் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை வாடகை வசூலிக்கின்றனர். இந்தியாவிலிருந்து பங்கேற்ற நிறுவனங்களுக்கு ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ என்ற நமது அரசு நிறுவனம் ஊக்கத் தொகையும் வழங்கியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட்டும் அங்குத் தனியாகப் பெரிய அரங்கு அமைத்திருந்தது.

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வெளிநாடுகளைத் தேர்வு செய்து அவற்றை கௌரவிக்கும் பொருட்டு இக் கண்காட்சியின் கௌரவ விருந்தினராக ஒரு நாட்டையும் கவனத்தைக் கவரும் முக்கிய நாடு என்று ஒரு நாட்டையும் அறிவிக்கின்றனர். இந்த ஆண்டின் கௌரவ விருந்தினர் நாடாக எகிப்தும், கவனத்தைக் கவரும் நாடாக பாகிஸ்தானும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு நாடுகளுக்கு ஏராளமான சலுகைகளும் உரிமைகளும் அந்தந்த ஆண்டுகளில் வழங்கப்படுகின்றன.

புத்தகங்களைக் கொண்டு வருவதில், சிறப்பு அரங்கங்கள் அமைப்பதில், அந்த நாடுகளின் கலை, பண்பாடு, வரலாறு, கல்வி ஆகியவற்றை வெளிப் படுத்தும் ஏராளமான கலைஞர்களை, படைப்பாளி களை அழைத்துவந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்து வதில் இந்த இரண்டு நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வெவ் வேறு நாடுகள் இவ்வாறு இங்கு அறிவிக்கப்படு கின்றன.

உலகப்புகழ் மிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் சார்ஜா கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக அமைப்பாளர்களால் அழைக்கப்படுகின்றனர். புத்தகக் கண்காட்சி ஒரு பக்கம் நடந்துகொண்டே இருந்தாலும் - மக்கள் குடும்பம் குடும்பமாக இக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்லும் பணி இடையறாமல் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் ஆங்காங்கு இலக்கியக் கருத்தரங்கம், கவிதை வாசித்தல், கதை சொல்லுதல், புத்தக விமர்சனம், இலக்கியக் கலந்துரையாடல், சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், சமையல் வகுப்புகள், வாசகர்களிடமும் பிரமுகர் களிடமும் ஊடகங்கள் பேட்டியெடுத்தல், படைப்பாளி- வாசகர் சந்திப்பு, வாசகர்களுக்குப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் கையெழுத்திடுதல் போன்ற நிகழ்வுகளும் அதே சமயத்தில் நடைபெற்றுக் கொண் டிருக்கும். யாருக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ அந்நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கலாம்.

sharja-exhibition_640

உலகெங்கிலுமிருந்து புகழ்மிக்க கலைஞர்கள், படைப்பாளிகளின் பெரும் பட்டாளமே சார்ஜா கண்காட்சியில் வந்து இறங்கியிருந்தது.

இந்தியாவிலிருந்து அருந்ததிராய், அனுபம்கேர், பங்கஜ் மிஸ்ரா, சேது, தீப்திநாவல், நமிதா கோகலே, வில்லியம் டைரிம்பிள், வித்யாஷா, நௌஷாத், அக்பர் கக்கரட்டில், பால் சக்கரியா, பெனியாமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அமைப்பாளர் களால் அழைக்கப்பட்டிருந்தனர். எல்லோருக்கும் வரவேற்பு இருந்தபோதிலும் அருந்ததிராய், அனுபம் கேர் ஆகியோருக்கு எழுச்சிமிக்க வரவேற்பும் எதிர் பார்ப்பும் இருந்தன. அருந்ததிராய் பேசிய கூட்டத் திற்கு 2,000க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கூடிவிட்டனர். முக்கிய நிகழ்வுக்காக அருந்ததிராய் அழைக்கப்பட்டிருப்பினும், இவர் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிருபர்கள் கூட்டமும் அதிகார பூர்வமாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செய்தியாளர் சந்திப்பில் அருந்ததிராய் “மக்களுக்காக எழுதுவதுதான் எழுத்தாளர்களின் கடமை. நான் மக்களின் சார்பில் பேசவில்லை: மாறாக, சமூகத்தைப் பற்றியும் அது எவ்வாறு செயல் படுகிறது என்பதைக் குறித்தும்தான் பேசுகிறேன்” என்று கூறிய வரிகளை எல்லா ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.

குழந்தைகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இக்கண்காட்சியில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெரியவர்களுக்கும் படைப்பாளி களுக்கும் கொடுக்கப்பட்ட அதே அளவுக்கான முக்கியத்துவம் குழந்தைகளுக்கு இக் கண்காட்சியில் அளிக்கப்பட்டிருந்தது. 200க்கும் மேற்பட்ட, வெவ் வேறான குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்வுகள் இங்கு நடத்தப்பட்டன.

கண்காட்சியின் நடு நாயகமாக இருக்கிற முக்கிய இடத்தில் தினசரி மாலை இரண்டு மணிநேரத்திற்கும் மேல் குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு இளம் பெண் அங்கு குதூகலத்துடன் கூடி நிற்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். கதை சொல்வதற் கென்றே தனிப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற பக்குவப்பட்ட பெண்ணாக அவரின் செயல்பாடு நமக்கு உணர்த்தியது. அவ்வாறான ஒரு கதையைச் சொல்லி முடித்த பிறகு அந்தக் கதை வெளியான புத்தகத்திலிருந்து அதைப் படித்துக் காட்டுகிறார். அறநெறியைச் சொல்லும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் குழந்தைகளுக்கு உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

பல போட்டிகளை வாசகர்களுக்குக் கண்காட்சி அமைப்பாளர்கள் அறிவித்திருந்தனர். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கியபோட்டி புகைப்படப் போட்டியாகும். சார்ஜா புத்தகக் காட்சிக்குள்ளிருந்துதான் ஏதாவது ஒரு நிகழ்வை, காட்சியைப் புகைப்படமாக எடுத்து அனுப்பவேண்டும். ஒருவர் அதிகபட்சம் மூன்று படங்கள்தான் அனுப்பலாம். சிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்வதற்கென்று ஒரு குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. மூன்று பரிசுகள் அறிவித்திருந்தனர். ஒவ் வொரு பரிசுக்கும் ஒரு விலையுயர்ந்த கேமராவோடு பெரும் தொகையும் சேர்த்து வழங்கவுள்ளனர். முதல்பரிசு ஒரு சிறந்த கேமரா, ஒரு ஐ பேடு, இவற்றுடன் சேர்த்து இந்தியப் பணத்தில் ரூ 1 இலட்சம். ஆயிரக் கணக்கானோர் இப்போட்டியால் ஈர்க்கப்பட்டு கேமராக்களோடு உள்ளே அலைகின்றனர்.

சார்ஜா கண்காட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் முக்கியமானது பதிப்புத் துறை சம்பந்தமான பயிற்சிப்பட்டறையாகும். இந்தக் கண்காட்சி தொடங்குவதற்கு 3 நாட்கள் முன்பு நவம்பர் 4 ஆம் தேதி இப்பட்டறைக் கண்காட்சி அமைப்பாளர்களாலும் சார்ஜா அரசாலும் நடத்தப் பட்டது. இதில் 46 அரேபியப் பதிப்பாளர்கள் பங்கேற்றனர்.

பதிப்புத்துறையில் உலக அளவில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் வகுப் பெடுத்தனர். இன்று பதிப்புத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அதே சமயத்தில் இத்துறை சந்திக்கும் சவால்கள் குறித்தும் இதில் அலசப்பட்டது. புதிதாக வந்திருக்கும் நவீன மின்னியல் பதிப்பு குறித்தும் பேசப்பட்டது. படிப்படியாகப் பதிப்புத்துறை அடுத்த கட்டமான டிஜிட்டல் பதிப்பிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பதால் அந்த வளர்ச்சியையும் தனதாக்கிக் கொள்ளப் பதிப்புத்துறை தயாராகவேண்டும் என்ற கருத்தும் இந்தப் பயிலரங்கத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

சமையல் புத்தகங்களுக்கு இக்கண்காட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற சமையல்கலை வல்லுநர்கள் இங்கு வர வழைக்கப்பட்டிருந்தனர். அரங்கிற்குள்ளேயே கலை நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதே முக்கியத் துவத்துடன் நல்ல மேடை அமைத்து நேரடி சமையல் வகுப்புகள் பிரசித்தி பெற்றவர்களால் நடத்தப்பட்டன. அடுத்தடுத்த நாளில் வெவ்வேறு நிபுணர்கள் வெவ்வேறு நாட்டுச் சமையலைச் செய்துகாட்டிக் கொண்டிருந்தனர். அதை ஒரு பெரும் கூட்டம் ரசித்தும் ருசித்தும் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தது.

பெரும்பாலானவை இஸ்லாமிய மதம் தொடர்புள்ள புத்தகங்களாக இருப்பினும், அரபு மொழி நூல்கள், அத்தோடு அதன் சார்புள்ள நூல் களாகக் காணப்பட்டாலும் அறிவியல், மொழியியல், அறவியல், இலக்கியம், வரலாறு, உளவியல், சமையல், குழந்தைகள் இலக்கியம் போன்ற துறைசார்ந்த நூல்களும் ஏராளமாக இடம்பெற்றிருந்தன.

200,250 ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப் பட்டுப் பதிப்பிக்கப்பட்ட - இப்போது எங்கு தேடி னாலும் கிடைக்கப்பெறாத- உலக அளவிலான சிறந்த நூல்கள் நூற்றுக்கணக்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல நூல்கள் முதல் பதிப்பு நூல்களாகும். அவை பதிப்புலக வரலாற்றையே நமக்கு எடுத்துச் சொல்வதுபோல் அமைந்திருந்தன.

ஆங்கில மொழியைச் சொல்லித்தரும் நூல்களும் அரபி-ஆங்கிலம் அகராதிகளும் ஏராளமாக விற்பனையாகியுள்ளன. மக்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மன்னர் ஆட்சியில் இக்கண்காட்சி நடை பெற்றாலும் இஸ்லாமிய மதநூல்கள் பெரும் பாலானவையென்றாலும் அங்கு எந்தக் கெடுபிடியும் இல்லை; கண்காணிப்பும் இல்லை. மதச்சார்புத் தோற்றமும் இல்லை. வெளிநாடுகளிலிருந்து புத்தகங்கள் மட்டுமல்ல நிறைய கல்வி சார்ந்த குறுந் தகடுகள், டிவிடிக்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவிலிருந்து சென்று அரங்குகள் அமைத்த வர்கள் கூட கம்ப்யூட்டர் சொல்லித்தரும் டிவிடிக்களை லட்சக்கணக்கில் அங்கு விற்றனர்.

இக்கண்காட்சியின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று புத்தகப் பதிப்புரிமையை விற்பனை செய்வதாகும். வெளிநாடுகளில் வெளியான புத்தகங்களை அரபிமொழியிலோ இன்னபிற மொழிகளிலோ வெளியிட மூலவர்களிடமிருந்து விலை கொடுத்து உரிமை பெறுவது இங்கு ஏராளமாக நடைபெற்றது. அங்கிருந்த அரபிப் புத்தகங்களை அவரவர் நாட்டில் அந்தந்த மொழிகளில் வெளியிடவும் உரிமை படைத்தவர்களிடம் வெளிநாட்டவர் உரிமை பெற்றுச் சென்றுள்ளனர்.

இத்தனை சிறப்புகள் கொண்ட சார்ஜா புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ மறக்க முடியாத நிகழ்வுகள் இருப்பினும் என்னால் என்றென்றும் மறக்கவே முடியாத சம்பவமும் நடைபெற்றது.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மோகன்குமார் என்ற கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் சார்ஜா அரசின் உயர்பொறுப்பில் பல்லாண்டுகளாகப் பணியாற்றுகிறார். அக்கண்காட்சி நடத்தக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களில் இவர் மிகவும் முக்கிய மானவர். அரபு நாட்டவரோடு இரண்டறக் கலந்து விட்ட இந்தியர். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற முதல் புத்தகக் கண்காட்சி தொடங்கி, இந்தக் கண்காட்சி வரை 31 கண்காட்சிகளையும் நடத்தும் பொறுப்பில் இவர் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.

“அவர் மிகமுக்கிய பிரமுகர். அவரைச் சந்திப்பது மிக மிக சிரமம்” என்றார்கள். மிகவும் முயன்று கடைசியாக அவரைச் சந்தித்து விட்டேன். என் கையில் வைத்திருந்த ஈரோடு புத்தகத்திருவிழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய உரையடங்கிய டிவிடியைப் பார்த்தார், மோகன்குமார்.

“நான் ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஒருங் கிணைப்பாளர்” என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “இந்த டிவிடி கலாம் சார் ஈரோட்டில் பேசிய பேச்சின் பதிவு” என்று கூறி அவரிடம் அதனைக் கொடுத்தேன்.

“உங்கள் புத்தகத்திருவிழாவில் கலாம் சார் பேசினாரா...” என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் கேட்டார் அந்தப் பெரிய அதிகாரி. “ஆமாம்” என்று நான் சொன்னதும் அந்த டிவிடியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு என் கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்சமும் அதிகாரத் தோரணையில்லாமல் மிகவும் அன்பாக “கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்களும் எங்கள் நாட்டு அரசாங்கமும் கலாம் சாரை மிக முக்கிய விருந்தினராக இக்கண்காட்சியில் பங்கேற்க வைக்க எவ்வளவோ முயன்று அழைத்தோம். அவர் இசைவு தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு கலாம் சார் சார்ஜா வருவதற்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா?” என்று என்னிடம் கேட்டார்.

அவருக்கு உரிய பதிலைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். திரும்பி வருவதற்கு விமான நிலை யத்தில் நான் அமர்ந்திருந்தபோது அவரே என்னைத் தொலைபேசியில் அழைத்து “சார்... மறந்துவிடா தீர்கள்... அடுத்த ஆண்டு கலாம் சார் சார்ஜாவில்...” என்று மீண்டும் நினைவூட்டினார்.

சார்ஜா புத்தகக் கண்காட்சியின் ஆகச் சிறந்த சிறப்பையும், அத்தகைய சிறப்பைச் செய்தவர் களுக்குக் கிடைக்காத ஒரு சிறப்பு ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குக் கிடைத்திருக்கிற செய்தியையும் நெஞ்சில் சுமந்தவண்ணம் இந்தியா செல்லும் விமானத்திற்குள் நுழைந்தேன்.

Pin It