சாலமன் பாப்பையா

அன்பர்களே, ஈரோடு புத்தகத் திருவிழா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும்; அல்லது நீங்கள் சென்று பார்த்திருக்கக்கூடும் அங்குப் புத்தகங்கள் வாங்கிப் படித்திருக்கக்கூடும். இது தேசத்தின் திருவிழாவாக மாறவேண்டும். இப்படிப்பட்ட திருவிழாக்களை நாடு முழுக்க கொண்டு வரவேண்டும் எனப் பாரதி விரும்பினான். அவனது கனவுகளை தேசியக் கனவுகளை - நிறைவேற்ற ஈரோட்டுக்காரர்கள் முன்கை எடுத்துள்ளனர். குறிப்பாக, மக்கள் சிந்தனைப் பேரவை இதனைச் சாத்தியமாக்கி யுள்ளது. ஸ்டாலின் குணசேகரன் எடுத்த முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று.

புத்தகப் பதிப்பாளர்கள் சிறந்த நூல்களைப் பதிப்பதோடு நின்றுவிடாமல் இதுபோன்ற ஏற்பாடு களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருவது சிறப்பானது. அதுமட்டுமல்லாமல் ஈரோடு கல்வியாளர்கள், சிந்தனை யாளர்கள், தொழிலதிபர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய சரித்திரத்தை உருவாக்கியுள்ளனர். காலம் இதனைத் தன் வரலாற்றில் குறித்துக் கொண்டுள்ளது. புத்தகத் திருவிழா என்பது வாங்கவும் விற்பதற்கான ஏற்பாடு மட்டுமல்ல; இதுசமுதாயத்திற்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அங்கு மாலையில் ஏற்பாடுசெய்கின்ற இலக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன. இந்நிகழ்ச்சிகளுக்குப் பல்லாயிரம் மக்கள் அலையெனத் திரண்டு வருகின்றனர். எங்களது பட்டிமன்றத்தைக் கேட்பதற்குக்கூடிய கூட்டத்தைப் பார்த்த பொழுது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. ஈரோடு மக்கள் புதிய சரித்திரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

நெல்லை கண்ணன்

erode_bookfair_400கல்வி ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பது அறிஞர்களின் கருத்து. பல நூல் களனைத்தையும் ஓரிடத்தில் சேர்த்து அதனைப் பதிப்பித் தவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநகரத்து மக்களை மட்டும் அல்லாமல் பல இடங்களிலிருந்தும் மாணவர்கள், மாணவிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்து ஒன்று சேர்க்கிற வேலையை மக்கள் சிந்தனைப் பேரவை சிறப்பாகச் செய்து வருகிறது. அறிவை எந்த ஒன்றாலும் அழித்துவிட முடியாது. நூறு குறட்பாக்களை மற்றவர்களுக்குச் சொல்வதால் எனது சிந்தனை குறைந்து போகாது. அவை மேலும் மேலும் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் இது புத்தகத் திருவிழா மட்டுமல்ல, அறிவுத் திருவிழா. இத்திருவிழா ஈரோட்டில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பரவி எல்லா இடங்களிலும் நடக்க வேண்டும். மக்கள் சிந்தனைப் பேரவை இதனைச் சாதிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு உண்டியலைக் கொடுத்து அவர்களுக்குச் சேமிக்கும் பழக்கத்தையும் புத்தகம் வாங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றனர். மாணவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்திற்கு அதிகமாகப் புத்தகங்களைக் கொடுத்து மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது மக்கள் சிந்தனைப் பேரவை. செல்வம் என்பது கல்வி ஒன்றுதான். அதுமட்டுமே அழியாச் செல்வம் என்பதை மக்கள் சிந்தனைப் பேரவை பரப்பி வருகின்றது. இவ்வமைப்பு சாதி மத அரசியல் சார்பு இல்லாமல் இயங்குகிறது. மக்கள் சிந்தனைப் பேரவை என்ற தலைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியவர்கள். சிந்திக்கத் தகுதியுடையவர்கள் என்பதை இப்பெயர் வலியுறுத்துகிறது. சிந்திக்க முடிந்த மனிதன் சிந்திக்க முடியாத போது சமூகம் சீரழிந்து போகிறது. எனவே மனிதர்கள் சிந்திக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இப்பேரவை இயங்குகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவை மக்கள் பணத்தில் ஓர் நூலகத்தைக் கட்டி அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த ஊர்ப்புற நூலகத்தை ஏராளமான மாணவர்களும் மற்றவர் களும் நன்கு பயன்படுத்துகின்றனர். அறிவுப் பணியைத் தொடர்ந்து மக்களிடத்தில் செய்து வருகிறது இப்பேரவை.

இக்கண்காட்சி ஈரோட்டோடு முடிந்து போகாமல் பல இடங்களுக்கும் செல்ல வேண்டும். பல வெளிநாட்டுக் காரர்களும் ஈரோட்டிற்கு வருமளவிற்குப் புத்தகக் கண்காட்சி வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழருவி மணியன்

புத்தகத்தின் பயனைத் தமிழன் உணர்ந்துகொண்டது போல் வேறு யாரும் உணர்ந்துகொள்ளவில்லை என நான் எண்ணுகிறேன். புத்தகத்திற்கு நூல் என ஏன் பெயர் வைத்தான் என எண்ணிப் பார்க்கின்றேன். தச்சன் மரத்தின் கோணலைச் சரிபார்க்க நூலை வைத்திருப்பான். அந் நூலைக் கொண்டு மரத்தின் கோணலைச் சரிசெய்வான். அதுபோல் மனிதனின் மனத்தின் கோணலைச் சரிபார்த்து நெறிப்படுத்துவதால் புத்தகத்திற்குத் தமிழில் நூலெனத் தமிழன் பெயர் வைத்திருக்கிறான்.

இயேசு நாதர் பிறப்பதற்கு முன்பே உலகத்தில் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். அவர்கள் மக்களிடம் பேசினார்களே தவிர நூல்கள் எதனையும் ஆக்கவில்லை. சாக்ரடீசும் நூல் எதையும் எழுதவில்லை. ஆனால் பிளாட்டோ ஒரு நிறுவனத்தை நிறுவிப் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைச் சேகரித்தார். அந்தப் புத்தகங்களின் மூலம் தன் அறிவை விரிவு செய்துகொண்டு சமூகத்தின் அறிவையும் விரிவு செய்தார். எனவே பிளாட்டோவின் காலம் தொடங்கி இன்றுவரை புத்தகங்கள் மக்களுக்குப் பயன்பட்டு வந்துள்ளன.

லெனினை ஒரு சிலையாக வடிக்க வேண்டும் என விரும்பிய சர்ச்சிலின் நெருங்கிய உறவினர் கிளார்ட் ஷெரிடன் என்பவர் லெனினைச் சந்தித்து, “உங்களைச் சிலையாக வடிக்க விரும்புகிறேன். அன்பு கூர்ந்து சிலையாக வடிக்கும் வரை உதவமுடியுமா?” என்று கேட்டார். ஆனால் லெனின் “என்னால் ஒரு நிமிடத்தைக் கூட வீணாகச் செலவழிக்க முடியாது. எனவே நான் என் வேலையைச் செய்கிறேன். அச்சமயத்தில் நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள்” எனச் சொல்லிவிட்டு நூலைப் படிக்கத் தொடங்கிவிட்டாராம். செய்தியின் மூலம் லெனின் புத்தகத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

பகத்சிங் சிறைச்சாலையில் இருந்த பொழுது தூக்குமேடைக்குச் செல்ல சிறைக்காவலர்கள் பகத்சிங்கை அழைத்த போது அவர் நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அவர் படித்துக் கொண்டிருந்த நூல் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூல். சிறைக் காவலர்களிடம் “சிறிது நேரம் பொறுங்கள்; இந்நூலை முடித்துவிடுகிறேன்” என்றாராம். இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போகப் போ கிறது என்ற போதிலும் நூலைப் படித்துக் கொண்டிருந்தார் என்பதன் மூலம் புத்தகத்தின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஜவஹர்லால் நேரு அவர்களும் தமது இறுதிக் காலம் வரை நூல் படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். உலகத்தின் பல இலக்கியங் களையும் அரசியல் நூல்களையும் படித்தவர். தோழர் ஜீவா அவர்கள் சிறிய ஓலைக் குடிசையில் கடைசி வரை வாழ்ந்தார். அவர் தமக்கென்று எந்தச் சொத்தையும் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஒழுகும் குடிசையிலும் அவர் சேர்த்து வைத்திருத்த சொத்து புத்தகங்கள்.

நல்ல புத்தகங்களே நேருவை, லெனினை, பகத்சிங்கை, பாரதியை, தத்துவ ஞானிகளாக சிறந்த மனிதர்களாக உருவாக்கின. நல்ல புத்தகங்களே நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். எனவே தான் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ‘இந்தச் சமுதாயத்தை மேன்மைப்படுத்த வேண்டும்; அறியாமை இருள் அழிந்த சமுதாயத்தில் தான் சிறப்பும் மேன்மையும் வந்து சேரும்’ என்பதை உணர்ந்துகொண்டதால் தான் அவர் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்துகிறார். இவரது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள். இப்பணிக்கு நான் தலைவணங்குகிறேன்.

நடிகர் சிவக்குமார்

பழனியில் தை பூசத் திருவிழா, மதுரையில் கள்ளழகர் திருவிழா, திருப்பதியில் கருடஉற்சவத் திருவிழா, ஈரோட்டில் புத்தகத் திருவிழா. பெரியார் பிறந்த பூமியில் ஒரு மனிதன் - தனிமனிதன் பிரம்மாண்டமாய் இப்புத்தகக் கண்காட்சியை நடத்திக் கொண்டுள்ளார். ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற சிறந்த புத்தகத்தை எழுதியது அவர் வாழ்க்கையில் செய்த சிறந்த பணி. தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி பல மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனைவிட ஈரோட்டு புத்தகத் திருவிழா சிறந்துள்ளது.

நான் நடிகன், ஓவியன். என்னை ஒரு பேச்சாளனாக ஆக்கியது இந்தப் புத்தகத் திருவிழா. நான் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து இங்கு வந்துகொண்டுள்ளேன். இப்புத்தகத் திருவிழாவிற்கு வரும் மக்கள் பண்பாடு மிக்கவர்களாக உள்ளனர். மாலையில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் அவர்கள் கண்ணியமாக நடந்துகொள்வதை நான் பார்த்திருக்கிறேன். இப்புத்தகத் திருவிழாவினை மக்கள் சிந்தனை பேரவை சிறப்பாக நடத்திக் கொண்டுள்ளது.

பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்

ஈரோடு புத்தகத் திருவிழா 2005 ஆம் ஆண்டில் தொடங்கியபோது நான் கலந்து கொண்டேன். முதலில் இக்கண்காட்சி எத்தகைய அளவில் வெற்றி பெறும் என எண்ணினேன். ஆனால் இன்று இப்புத்தகக் கண்காட்சி சிறப்பாக வளர்ந்து வந்துள்ளதைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. ஈரோடு மக்கள் இன்று படிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதை நடத்துகிறவர்களின் முயற்சி பாராட்டப் பட வேண்டும். இங்கு உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து அவர்களை இத்திருவிழாவோடு இணைத்துள்ளனர்.

மாலையில் நல்ல கருத்தரங்குகள் வைத்து நல்ல கருத்துக்களை வழங்குகின்றனர். அதைக் கேட்க மக்கள் கூட்டம் கூடுகின்றது. ஈரோடு புத்தகக் கண்காட்சி வட இந்தியப் பதிப்பகங்களும் கலந்துகொள்ளும் அளவில் வளரவேண்டும். இன்று பள்ளிகளும், கல்லூரிகளும் வளர்ந்து கொண்டுள்ளன. இதனால் புத்தகங்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின்றன. இப்பணி மேலும் சிறக்க வேண்டும். ஏற்பாட்டாளர் களுக்கு எனது வாழ்த்துக்கள்.

திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

மக்கள் சிந்தனைப் பேரவை முன்னின்று நடத்துகிற புத்தகத் திருவிழா ஈரோடு மாநகரில் அறிவுக் களஞ்சிய மாகத் திகழ்கின்றது. ஈரோடு மாநகர மக்களும், அருகிலிருப் பவர்களும் புத்தகங்களை வந்து வாங்குவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை முன்னின்று நடத்துகிற ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பல பணிகளுக்கு மத்தியில் இதனை நடத்துகிறார். மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும், மாணவர்கள் அறிவைப் பெறவேண்டும் என்பதை உணர்ந்து இதனை நடத்துகிறார்.

ஆண்டுதோறும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுள்ளது. மாலையில் கருத்தரங்கங்கள் நடத்துவதன் மூலம் மக்களின் அறிவுப் புரட்சிக்கு வித்திடுகிறார். இந்த விதைகளெல்லாம் வீழ்ந்து இருக் கின்றன. வீசுகிற தென்றல் காற்றிலும், மழையிலும் இவை முளைத்து விருட்சங்களாக மலரும். அதற்கான அடித்தளமாக இக்கண்காட்சி திகழ்கின்றது.

திரு.த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

புத்தகத் திருவிழா நான்காவது ஆண்டாக நடை பெற்று வருகின்றது. புத்தகத் திருவிழா என்ற வார்த்தை சரியானதாகப் படவில்லை; இதைப் பண்பாட்டுத் திருவிழா என அழைக்கலாம். தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தவும், உயர்த்தவும் செழுமைப்படுத்தவும் இது நடைபெற்று வருகின்றது. புத்தகங்கள் நல்ல நண்பர்கள், சோகங்களைக் குறைக்கவும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் ஒரு மனிதனைச் செழுமைப் படுத்துகின்றன. புத்தகங்கள் ஒரு பிரச்சினையின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டுகின்றன.

அதிகாரியான எனக்கு கொங்கு மண்ணில் பிறந்து, பாண்டிய நாட்டிற்குச் செல்லும் பொழுது அம்மக்களைப் பற்றி அறிந்துகொள்ளப் புத்தகங்கள் எனக்கு உதவுகின்றன. அம்மக்களோடு ஒன்றிணைந்துகொள்வதற்கு புத்தகங்கள் எனக்கு உதவின. புலவர்கள் மதுரை மாநகரில் நான்மாடக் கூடலில் கூடி அனல்வாதம் புனல்வாதம் நடத்தினர். இதன் மூலம் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்தனர். அதுபோல் கொங்கு மண்ணில் தமிழ்ச் சங்கம் அமைத்து விவாதித் துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே ஈரோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. புத்தகங்கள் மக்களின் பண்பாட்டைச் செம்மைப்படுத்துகின்றன. புத்தகங்கள் மனிதனை நேசிக்கக் கற்றுக் கொடுக்கின்றன.

திரு. வீரபாண்டியன்

ஆலயத்திற்குப் போகிறோம்; அங்கு ஆண்டவனை வணங்குகிறோம். அருள் கிடைக்கிறது. புத்தகத் திரு விழாவிற்குப் போகிறோம். புத்தகங்களால் நமக்கு அறிவு கிடைக்கிறது. பொருளாதாரத்தால் வாழ்க்கை வளம் பெறும், புத்தகத் திருவிழா ஓர் அறிவுப் புரட்சி, சென்னையில் நடைபெறுகிறது. பல இடங்களில் இருந்து வருகின்றனர். சென்னையில் வாய்ப்புகளும், வசதிகளும் அதிகம். இங்கு அத்தகைய வசதிகள் குறைவு. இருப்பினும் சிறப்பாக நடத்துகின்றனர். சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழா அடுத்து இத்திருவிழாதான் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது. அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து இதனைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

ரமேஷ் பிரபா

தரமானது எப்பொழுதும் நிலைத்து நிற்கும். வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்பது உண்மையில்லை. இன்று புத்தகங்கள் படிப்பவர், வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சென்னையில் இருக்கும் அனைத்து வாய்ப்புகளும் மற்ற மாவட்டங்களிலும் கிடைக்க வேண்டும் என்பது எனது அவா. அவ்வகையில் ஈரோட்டில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இணையாக ஈரோடு புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.

இக்கண்காட்சியின் சிறப்பு, அனைவரையும் ஒருங் கிணைத்தல். அதனைச் சிறப்பாக நடத்திக் கொண்டுள்ளார் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்.

இங்கு மாலையில் நடைபெறும் சொற்பொழிவில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து அறிஞர்களும் விரும்புகின்றனர். அவ்வகையில் இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஒரு வருடம் புத்தகம் வாங்கிய பின் அடுத்த ஆண்டில் புத்தகம் வாங்குபவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழும். ஆனால் இங்கு ஒவ்வோர் ஆண்டும் புத்தகம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குச் சிறப்பான ஏற்பாடுகளும், அனைவருக்கும் இதனைக் கொண்டு சென்றதுமே இதற்குக் காரணம். புத்தகக் கண்காட்சிகளைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தும் வகையில் மக்கள் சிந்தனைப் பேரவை வளர்ந்துசெல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

Pin It