ஆம் ஒரு ஜவுளி நிறுவனம் ஒரு மயிலைக் கொன்றது
அந்த இரவில் யாரும் அதைப் பார்க்கவில்லை
கனவில் மட்டும் யாருக்கும் ஒலித்தது அதன் அகவல்தான்
அவர்கள் தமது பேராலயத்தை விரிவாக்க எண்ணி
ஒரு தெருவை விலைக்கு வாங்கினர் பிறகு வீடுகளை
மீனாட்சியம்மை எதிரில் அவளின் பரந்த இதயம்போல்
விரிந்த மைதானத்தில் ஓர் அரச மரம்
அதன் வயோதிகமே அதன் சாபமாக இருக்கக்கூடும்
ஆனால் அது அனுமதித்திருக்கிறது ஓரே ஒரு மயிலை
நிச்சயம் அந்த மயிலும் ஒரு அரச இலைதான்
எனவே அவர்கள் அந்த மைதானத்தை வளைத்துப்போட்டார்கள்
பிறகு அரச மரத்தினை வெட்டத் துவங்கினார்கள்
அரச மரம் விழும்போது அது அந்தியாகியிருந்தது
அது வனமாக இருக்கும்போது ஒரு மயில் போராடியது
அவர்கள் அதன் தோகையைப் பிய்த்து எறிந்தவர்
அது ஆண்மகனின் ஆண்மையை அழிப்பதற்கு
ஒத்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
பிறகு கழுத்தை நெருக்கிக் கொன்றனர்
அதன் இரத்தம் தரையில் பரவியபோது இரவாகிவிட்டிருந்தது
ஆடைகளின் பேராலாயத்தின்
கட்டிடம் அரச மரத்தை விட இப்போது உயர்ந்திருக்கிறது
பல கிளைகள் அழிக்கப்பட்டு
பல தளங்கள் உருவாக்கப்பட்டன
பல இலைகள் கழிக்கப்பட்டு
பல அறைகள் உருவாக்கப்பட்டன
என்றாலும்
அந்த பேரழிவுமிக்க ஆலயத்தின்
உள்ளே எப்போதும் ஓர் அகவல் ஒலித்துக்கொண்டிருப்பதும்
கட்டிடத்தின் எல்லா தளங்களும் நீலநிறமாகிக்கொண்டிருப்பதும்
ஜவுளி நிறுவனத்திற்கு அல்லாதவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம்
எனவே ஒரு மயில்
அந்த நிறுவனத்தை இப்போது கொன்றுகொண்டிருப்பது
நிச்சயம் பகலில்தான்.

 

துயரம் கொண்டவனிடத்தில் தாமரை எப்போதும் பூத்திருக்கும்

நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள்
எனவே அங்கே குளம் தோன்றுகிறது
தனிமையின் எல்லா காரணங்களும் உங்களுக்குத் தெரியும்
ஆகவே அங்கே தாமரைகள் பூக்கின்றன
எல்லா கணங்களிலும் உள்ள தனிமையை நீங்கள் உணர்ந்தவர்கள்
எனவே உங்களை நோக்கி
ஒரே ஒரு தாமரை அதுவும் சிவப்பு நிறத்தில் நகர்கிறது.
நீங்கள் தனிமையை ஆராதிக்கிறீர்கள்
ஆகவே அது உங்கள் தேகத்தைத் தீண்டுகிறது
இப்பிரபஞ்சத்தில்
நீங்களும் அந்தத் தாமரை மட்டும்தான்
என்று தோன்றுகிறது உங்களுக்கு
எனவே உங்களுக்குத் தனிமை என்பது இப்போது
இல்லை ஆகவே செம்மையான தாமரை பிரிந்து நகரத்துவங்கியது
அது குளத்தின் மையத்தை அடைந்தபோது
அதனிடம் அதன் செந்நிறம் இல்லை
நம்மால் பறிக்க முடியாத
ஒரு சிகப்புத் தாமரை
தளிமையுள்ளவன் மனதில் எப்போதும் பூத்திருப்பதை
எப்போதும் நாம் காணமுடிவதில்லை
எனவே எங்கே மனம் இல்லையோ அங்கு குளம் உருவாவதில்லை
எனவே எங்கே துயரம் இல்லையோ அங்கு தாமரை பூப்பதில்லை

 

உண்மையில் நான் என்பது ரத்த மலரே

எனது வன்மம் எனது பாசம் எனது ரௌத்ரம் எனது மௌனம்
எனது காமம் எனது தனிமை எனது சிரிப்பு எனது
உன்மத்தம் எனது பொறாமை எனது வஞ்சகம்
எனது பொய் எனதேயெனதான குணங்களை வீசுகிறேன்
ஒரு வாள்
அது சட்டென மூழ்கிறது ஓடும் நதியில்
அங்கு சட்டென பிறக்கிறது
ஒரு ரத்த மலர்
அது ஆற்றில் திரிந்தபடியே
தேடுகிறது
எனதே எனதேயான இன்னாருவனின் கைகளை.

 

பாலி என்பது புத்தனின் முகம்

என் பிரதேசத்தின் மலைகள் வறண்டிருக்கின்றன
எனவே அது புத்தனின் தலையாக இருக்கிறது
எனது சமவெளி காய்ந்து கிடக்கிறது
எனவே அது புத்தனின் நெற்றியாக இருக்கிறது
எனது காடுகள் கரிந்து கிடக்கின்றன
எனவே அது புத்தனின் புருவங்களாக இருக்கின்றன
எனது குளங்கள் நீரற்று வெறுமையாக இருக்கின்றன
எனவே அது புத்தனின் கண்களாக இருக்கின்றன
எனது மண்மேடுகள் நெகிழ்ந்துபோய் இருக்கின்றன
எனவே அது அவனின் மூக்காக இருக்கிறது
எனது ஆறு சத்தமிடுவதில்லை
எனவே அது புத்தனின் வாயாக இருக்கிறது
எனது பறவைகள் மௌனமாக இருக்கின்றன
எனவே புத்தன் எதையும் போதிப்பதில்லை
எனவே என் பிரதேசம்
வெறுமையாகப் பார்க்கும் பைத்தியமாக இருக்கிறது
எனவே இங்கு புத்தன் வாழ்கிறான்
மேலும் புத்தன் என்பது வேறு எதுவும் இல்லை
எம் வறண்ட நிலத்தில் வாழும்
எம் வறண்ட மனிதனின்
வறண்ட மனோநிலைதான்.

(என்னைப் போலவே பாலி நிலத்தைப் பிரிந்து வாடும் ஸ்ரீநேசனுக்கு)