Punnai-Kayal_360அமுதன் அடிகள் எழுதிய
‘வரலாற்றில் புன்னைக்காயல்’ என்னும் நூலை முன்வைத்து...

நிலமானது அதன் அமைப்புக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் மண்ணில் அந்நியர் தடம் பதிக்கும் நேர்வு என்பது மிகப் பெரும்பாலும் நெய்தல் நிலமான கடற்கரை யாகவே இருக்கும்.  குறிப்பாக, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வான்வழிப் போக்குவரத்து இல்லாத நிலையில் கடல் வழியாகத் தானே பிற நாட்டினர் வந்திருக்க முடியும்!இவ்வாறு ஐரோப்பியர்கள்-குறிப்பாக, போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிறகு ஆங்கிலேயர்கள் என இந்தியாவில் - குறிப்பாக, தமிழகத்தில் நுழைந்த அயல் நாட்டினர், இங்கு தென் தமிழகக் கோடியில் நிலையான கூடாரமிட்டதற்குப் பல காரணங்கள் உண்டு.

தென்கடலோரத்தில் மீன்பிடித்தல், முத்துக் குளித்தல், சங்குக்குளித்தல், சங்கறுத்தல், உப்பு உற்பத்தி, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் எனப் பொருளாதாரச் செழிப்புற்றிருந்தாலும், அவற்றுள் உலகையே கவர்ந்தீர்த்து பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த முத்தின் பெயரால் சில சிற்றூர்கள் முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்டன.

வடக்கில் வேம்பாறு முதலாக, வைப்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு ஆகிய ஏழு ஊர்களையும் ‘ஏழுகடல்துறை’என்று அழைப்பது மரபு.

இந்த ஏழு ஊர்களில் ஒன்றான புன்னைக் காயல் என்னும் ஊரைப் பற்றி எழுதப்பட்டுள்ளதே ‘வரலாற்றில் புன்னைக்காயல்’ என்னும் நூல்.  வேளாங்கண்ணி, தியான இல்லம் வெளியிட்டுள்ள இந்த நூலை எழுதியிருப்பவர் அமுதன் அடிகள்.  தஞ்சாவூர்க் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் குருவாகப் பணியாற்றிவரும் இவர் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்.  இவர் பிறந்த ஊரே புன்னைக்காயல்.  அமுதன் அடிகள் தமது தமிழ்மொழித் திறனையும், கத்தோலிக்கக் கிறித்தவர் என்ற முறையில் தாம் பெற்ற சமயக் கோட்பாட்டுத் தெளிவு, சமய வரலாற்று அறிவு, புன்னைக்காயலில் பிறந்து வளர்ந்தவர் என் பதால் முத்துக்குளித்துறையின் பொருளாதார, சமூக வரலாற்றுப் புலமை ஆகியவற்றையும் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்.

ஏழுகடல் துறைகளுள் ஒன்றான புன்னைக் காயல், இயற்கையாக தாமிரபரணி ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளது.  மேலும், தாமிர பரணி பல கிளைகளாகப் பிரிந்து கடலோடு சேரு மிடத்தில் உருவான தீவு என்பதால், போர்ச்சுக் கீசியர்கள் புன்னைக்காயல் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதி அங்கே முகாமிட்டு, தங்களுக் கென்று ஒரு கோட்டையையும் கட்டினர்.  புன்னைக் காயலுக்கு என்று அதற்கு முன்பு என்னென்ன வரலாற்றுச் சிறப்புகள் இருந்தனவோ அறியோம்.  ஆனால், இந்தப் போர்ச்சுக்கீசியக் குடியேற்றம் தொடங்கியது முதலாக, அங்கே ஏற்பட்ட சமூக மாற்றங்கள் நமக்கு அண்மைக் காலத்தவையும் மிகமிகச் சுவையானவையும் ஆகும்.

போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகிய மூன்று நாட்டினருமே அடுத் தடுத்து முத்துக்குளித்துறைப் பகுதிகளில் ஒன்றான புன்னைக்காயலில் கிறித்தவ மதத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டிருந்தாலும் போர்ச்சுக் கீசியர்கள் தீவிரமாகப் பரப்பியதற்கு ஒரு காரணம் இருந்தது. 

 “கீழ்த்திசையில் போர்த்துக்கேயர்கள் கண்டுபிடித்த அல்லது கண்டுபிடிக்கப் போகிற நாடுகள் மீது ஞான அதிகாரம் (Royal Patronage -Padroada Reyal) செலுத்தும் உரிமை திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாஸ் அவர்களால் அன்றைய போர்ச்சுக்கல் அரசர் ஐந்தாம் அல்போன்ஸோவுக்கு 08- 10- 1455 அன்று வெளியிடப்பட்ட ‘உரோமைப் பேராயர்’ (Romanus Pontifex) என்னும் திருத்தூது ஆணையின் மூலம் வழங்கப்பட்டது” (பக். 2) என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதன்படி போர்ச்சுக்கீசிய அரசுக்குக் குறிப்பிட்ட சில உரிமைகளும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

தங்களது ஞான அதிகாரத்துக்கு உட்பட்ட நாடுகளில் திருச்சபையைக் கண்காணிக் கவும், ஆயர்களை நியமிக்கவும் உரிமைபெற்ற போர்ச்சுக்கீசிய அரசு, நற்செய்தியைப் பரப்புதல், கோவில்களை எழுப்பிப் பாதுகாத்தல், பக்த சபை களை நிறுவுதல், மறைபரப்புப் பணியாளர்களைப் பராமரித்தல் ஆகியனவற்றைக் கடமைகளாக ஒப்புக் கொண்டது.

இந்த ஞான அதிகாரமே அரசியல் அதிகாரமாக மாறியது.  முத்துக்குளித்துறையில் வசித்த பரதவர்கள் போர்ச்சுக்கீசிய மன்னரின் குடிமக்களாகவே தங்களைக் கருதி வந்ததுடன், அவருக்கு வரியும் செலுத்தி வந்தனர்.பிற்காலத்தில் டச்சுக்காரர்கள் வருகைக்குப் பின் போர்ச்சுக்கீசியர்களின் அனைத்துத் தளச் செல் வாக்குகளும் மறைந்து போயின.  இதன் விளைவாக, போர்ச்சுக்கீசிய அரசுக்கும் பாப்பிறைக்குமிடையே விரிசல்கள் தோன்றின.இவ்வாறு போர்ச்சுக்கீசியர்கள் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரத்துக்கும் உள்ளான புன்னைக்காயல் ‘ஏழு கடல் துறை’யான ஏழு ஊர்களில் தூத்துக்குடிக்கு அடுத்த இடம் வகிக்கிற அளவுக்குச் சிறப்பானது.

நெய்தல் நிலத்தின் சிறப்புக்குரிய புன்னை மரங்களை நிரம்பக் கொண்டது.  அதனால், அந்த ஊரே மிகுந்த எழிலுடன் காட்சியளித்துள்ளது.புன்னைக்காயல் மக்கள் அனைவருமே பரதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் சிறு வயதி லிருந்தே கடலாடி, கடலோடு வாழ்வதால் அவர்கள் மரபுவழியே மறம் நிறைந்தவர்கள்.

“பரதவர்களின் வீரம் அவர்களது கடல் தொழிலால் அமைந்ததே என்பதில் ஐயமில்லை.  அலை கடலின் ஆழ்பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கவும் வீரம் வேண்டும்; அங்குப் பெரிய மீன்களைத் தூண்டில் எறிந்தோ ஈட்டிகளால் போராடிக் கொன்றோ கரை சேர்க்கவும் மிகுந்த வீரம் வேண்டும்.  ஒரு பரதவர் எறியுளியால் தாக்கியதால் உதிரம் பீறிட்டுப் பெருகிக் கருங்கடலைச் செங்கடலாகக் கலக்கிச் சீறிச் சினந்து, துள்ளிக் குதித்துப் பின் துடுக்கடங்கிப் படகின் ஓரத்தில் உயிரிழந்து ஒதுங்கிய ஒரு பெரிய சுறா மீனைப் பற்றி அகநானூறு (210: 1- 6) கூறும் போது அத்தகைய கொடிய சுறா மீனை எதிர்த்துப் போராடி வெல்லும் வீரம் பரதவர்களுக்கு இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்” (பக் : 9) என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

சீனாவில் குப்ளாய்கான் ஆட்சிக்காலம் தொடங்கி, அந்நாட்டுக்கும் தமிழகத்து முத்துக்குளித்துறைக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.  அதை மெய்ப் பிக்கும் விதமாக நூலாசிரியர் செய்திகளைக் குறிப் பிடும்போது, காயல், புன்னைக்காயல் என்ற சொற்கள் யுவான் பேரரசின் ஆவணங்களில் இடம்பெற்றிருப் பதாகக் கூறுகிறார்.

“1408 முதல் 1433 வரை சீனாவின் மிங் பேரரசுக்கும் காயல் பகுதிக்குமிடையில் வாணிகத் தொடர்புகளும் அரசு முறைத் தொடர்புகளும் இருந்தன.  காயல் தூதர்கள் சீனா சென்று பேரரசரைச் சந்தித்து அன்பளிப்புகள் வழங்குவதும் சீனப் பேரரசர் அவர்களுக்கு விருந்தோடு அன்பளிப்புகள் வழங்கு வதும் நடைபெற்று வந்தன.” (பக் : 14) என்று புன்னைக்காயலுக்கும் சீனாவுக்குமான உறவை அமுதன் அடிகள் குறிப்பிடுகிறார்.

அரேபியத் துறைமுகங்களிலிருந்து குதிரை களும் வாணிகப் பொருட்களும் காயல் பகுதியில் இறக்குமதியாகின்றன என்று மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார்.
புன்னைக்காயல் உள்ளிட்ட முத்துக்குளித்தல் பகுதியில், முத்துக்கள் அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால், அப்பகுதி மக்கள் மற்ற பகுதி மக்களை விட பொருளாதாரத்தில் மேம்பட்டு விளங்கினர்.

இங்கு இஸ்லாமியர்கள் குத்தகைக்காரர்களான தால் பரதவர்கள் தினக்கூலிக்கு வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு இந்த இரு இனத்தவருக்கிடையே பகை மூண்டது.  இந்நிலையில், பரதவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு தேடி கிறித்தவ மதத்தில் இணைந்த நேர்வுகள் காலவாரியாக நூலில் குறிக்கப்பட்டுள்ளன.

பின்னர் 16ஆம் நூற்றாண்டில் புனித சவேரியார் புன்னைக்காயலுக்கு வந்தது, பரதவ மக்களைக் கிறித்தவர்களாக்கியது உள்ளிட்ட தகவல்கள் துல்லிய மாக நூலில் பதிவு பெற்றுள்ளன.இந்த ஊர் மக்களிடையே சவேரியார் எவ்வாறு சமூக ஒழுங்கை நிலைநாட்டினார் என்பதையும், அங்கு எழுந்த வர்க்கப் பிரிவினையைப் பற்றியும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

மேலும் நூலாசிரியர் அமுதன் அடிகள் இந்தியா விலும், வெளிநாடுகளிலும் பல தொல்சுவடிகள் காப்பகங்கள், நூலகங்களுக்குச் சென்று ஆவணங் களைத் திரட்டி, கால வரிசைப்படி நிரல்படுத்தி, எழுதியுள்ள இந்நூலில் பின்வரும் தகவல்கள் சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளன:

* முத்துக்குளித்துறையில் அரசியல், இன மோதல்கள்,
* பரதவ மக்கள் வாழும் ஊர்களில் ‘பட்டங்கட்டி’ என்றழைக்கப்படும் சாதித்தலைவர் என்னும் பதவியின் அதிகாரம்
* பரதவ மக்களின் வர்க்கப் பிரச்சினை, அவர்கள் பின்பற்றிவரும் பண்பாடு, சடங்குகள்,
* பரதவர்கள் சந்தித்த தாக்குதல்கள், எதிர்ப்புணர்வு,
* கிறித்தவ மதத்தால் அவர்கள் பெற்ற பாது காப்பு,
* போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கி லேயர்களால் முத்துக்குளித்துறையில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்,
* புன்னைக்காயலில் எழுப்பப்பட்டுள்ள கோவில்கள்,
* பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் திருவிழாக்கள்,
* துறவியரின் அருந் தொண்டுகள்,
* இந்தியாவில் தமிழ் எழுத்தில் அச்சிடப்பட்ட முதல் நான்கு நூல்கள்.

வரலாற்று நிகழ்வுகளுக்கான காலத்தை முடிவு செய்கையில், மிகக் கூர்மையாகச் சான்றுகளைக் கையாண்டு, துல்லியமான மையத்தை எட்டுகிறார் நூலாசிரியர்.

‘வரலாற்றில் புன்னைக்காயல்’ என்னும் இந் நூலில் புன்னைக்காயல் என்னும் ஊரின் சமூக வரலாறு, அரசியல் வரலாறு, சமய வரலாறு அக மண்ணில் எப்படி எழுந்து, புற மண்ணில் ஊடாடி, எவ்வெவற்றைச் செழுமைப்படுத்தின என்று நூலா சிரியர் அமுதன் அடிகள் புலப்படுத்துகிறார்.

மிகச் செறிவான தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் வரலாற்றாய்வு நூலுக்கான இலக்கணத்தைக் கொண்டது.

வரலாற்றில் புன்னைக்காயல்
ஆசிரியர் : அமுதன் அடிகள்
வெளியீடு : தியான இல்லம்
வேளாங்கண்ணி - 611 111
விலை : ரூ.150/-

Pin It