தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளுமையான ஜெயகாந்தனின் மறைவையொட்டி அவரின் மதிப்பார்ந்த எழுத்துலகப் பெருமைகளை நெகிழ்வான மனதோடு இம்மாத ‘உங்கள் நூலகம்’பகிர்ந்துகொள்கிறது.

‘ஜனசக்தி’யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வளர்த்தெடுத்த இலக்கியப் பெருமதி ஜெயகாந்தன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறுவயதைக் கழித்தபோது தோழர் ஜீவாவால் இனங்காணப்பட்டு படைப்பாளியாகப் பரிணமித்தவர். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை முதன்முதலில் எழுத்தாக்கி அவர்களுக்கும் இலக்கிய அந்தஸ்தை வழங்கியவர். இலக்கிய எழுத்தாளரெனும் வர்க்கத்தினர் வறியவர்களாகவும் மதிப்பிழந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வந்தநிலையில் அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறையினருக்கு நிகராக தமிழுலகம் கொண்டாடிய முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

தமிழகத்தில் ஜெயகாந்தனை வாசித்த பின்பே எண்ணற்ற இலக்கியவாதிகள் உருவானார்கள் என்பதே வரலாறு. வாரஇதழ்களுக்காக வாசகர்களை கடைவாசலில் காத்திருக்க வைத்த உக்கிரமான படைப்பாளி. தமிழ்ப்

படைப்புலகம் கண்டிராத பல கதாபாத்திரங்களை தன் கதைகளில் உலவவிட்டு உயிரோட்டம் பெறச்செய்த மகத்தான எழுத்துக்கலைஞன். ஆளுமை எனும் சொல்லுக்கு முழுமுதல் அடையாளமும் அவரே. அவரின் எழுத்தும், பேச்சும், செயல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தனித்துவமிக்கவை.

எவர்க்கும் எதற்கும் அஞ்சாது தமிழ் எழுத்துலகில் தனித்துக் கோலோச்சி நின்ற மகா கலைஞன். கட்டற்ற மனநிலையில் வாழ்க்கையைக் கொண்டாட்ட அனுபவமாக மாற்றிப்பார்க்க முனைந்த ஜெயகாந்தனின் நினைவுகளை இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வாயிலாக மீட்டெடுப்பதன் வழி உங்கள் நூலகம் பெருமிதம் கொள்கிறது.

Pin It