“வளமோடு வளர்கின்ற காடே” - நம் முன் னோர்க்கு அந்நாளின் வீடு” என்று இயற்கையின் மடியில் தவழ்ந்து வாழ்ந்தவன் மனிதன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங் களைப் பிரித்துச் சூழ்நிலைக்கேற்ப வாழ்ந்த அன்றைய வாழ்க்கை இன்று இல்லை.

ஒரு மரத்தை வெட்டினால் வீட்டுக்கு உத்தரம். பல மரம் வெட்டினால் வீட்டுக்கு வருமானம் என்று என்றைக்கு மனிதனின் பேராசைக் கரங்கள் இயற்கையைக் கூறுபோடத் தொடங்கியதோ அன்றைக்கே மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு இறப்பின் வாடை படரத் துவங்கி விட்டது, என்றால் அதுதான் உண்மையாகும்.

இருப்பதைப் பறிகொடுத்து விட்டு துயரம் வருகிற போது இழந்ததைத் தேடுகிற மனிதனின் குணம் இன்று சுத்தமான காற்று, வியர்வை ஊறும், உடல், ஆரோக்கிய வாழ்வு என்று மறுபடியும் இயற்கையை நேசிக்கத் துவங்கி விட்டதன் அடை யாளம் தான் ஊர்கள் தோறும் உருவாக்கப்படுகிற பசுமைப் பூங்காக்கள்.

மதுரை ஒரு காலத்தில் பசுமையாக இருந்தது. ஊருக்கே கடம்பவனம் என்ற பெயரைத்தாங்கியது. நிறைந்து சுழித்தோடும் நதிகளும், ஓடிக் கொண்டே இருக்கிற ஓடைகளும் கைகளால் எடுத்துப் பருகி வரும் அளவு நிறைந்த நீர் ஊறிய கிணறுகளும் இன்று காணாமல் போய் விட்டன.

மாசு கலந்து காற்று, சுத்த நிலை இல்லாத நீர், உரம் கலந்த உணவுகள், பானையில் வடித்த சோறு மறந்து குக்கர் சோறு உண்ணும் நிலை, கைகள் நீட்டி அரைத்த அம்மிக்கற்கள் ஆம், ஆம் என்று ஓசை எழ குத்தி எடுக்கும் “உலக்கைகளோடு உரல்கள்” எல்லாம் இப்போது இல்லாததன் விளைவுதான் வாயில் நுழையாத பெயர் கொண்ட நோய்கள், பெருகி வரும் மருத்துவமனைகள் தொப்பை கரைக்க விற்பனையாகும் சாதனங்கள்.

மனிதனின் இயற்கை அழிப்புப் பார்வை மாறினால் மட்டுமே மழை பொழியும், மண் குளிரும். இதை உணர்ந்ததால் தான் இன்று பூவோடும் புற்களோடும் மரங்களோடும் ஆங்காங்கே பூங்காக் களை அமைத்து தனது ஆக்சிஜன் தேவையை மனிதன் பூர்த்தி செய்து கொள்கிறான்.

மதுரையைப் போலவே பூங்காக்கள் எல்லா ஊர் களிலும் இப்போது குழந்தைகளைப் போலப் பேணப் பட்டு வருகின்றன. பூங்காக்கள் குளுமைக்காக மட்டுமன்றி மனிதர்கள் கூடிப் பேசுவதற்கும், காதலர்கள் மனம் விட்டுப் பேசுவதற்குமான தளங்கள்.

தமிழகத்தின் பிரதான ஒரு கட்சி 1948-இல் சென்னை ராபின்சன் பூங்காவில் தான் தொடங்கப் பட்டது. 1975-76களில் நாடு முழுவதும் அவசர நிலை (எமர்ஜென்சியாக) அமுல்படுத்தப்பட்ட போது அரங்கக் கூட்டங்களும் மேடை நிகழ்வு களும் தடை செய்யப்பட்டபோது பூங்காக்களில் தான் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர் களும் “காற்று வாங்குவதற்காக” என்று சொல்லி கூட்டம் நடத்தினர்.

மதுரையின் மடியில் மையமாகத் திகழ்ந்தது ஜான்சிராணி பூங்கா. கம்பிபோட்டுத் திகழ்ந்த அதில் நாவல் மரங்கள் அய்ந்துக்கு மேல் இருந்து சீசன் தாண்டியும் நவ்வாப்பழங்களைச் சிறுவர் களுக்குத் தந்தன. வாதம் மரம், வேப்பமரம், உட்கார சிமிண்ட் பெஞ்சுகள் தாகந்தணிக்க தொட்டியுடன் கூடிய எதிரில் இருந்த சௌராஷ்டிர செகண்டரி பள்ளி, அருகில் இருந்து வெள்ளியம்பலம், மாணவர் களும் மதிய உணவைச் சாப்பிட, தின்னவரும் அணில்கள், சினேகிதபாவத்தோடு வரலாமா? என்று கேட்பது போல் தத்தி வரும் காக்கைகள், நாகனவாய்ப் (மைனா) புட்கள் என்று கீச்சொலி எழுப்பும் ஜீவராசிகள் எதிரில் உள்ள நியூ சினிமா விற்குப் படம் பார்க்க வருவோர் டிக்கெட் கவுண்டர் திறக்கும் வரை புற்களில் பள்ளி கொண்டு கண் அயர்ந்தனர். பின்புறம் இருந்த குதிரைவண்டி நிலையத்தில் கனைக்கும் அய்ம்பத்துக்கு மேற்பட்ட குதிரைகள், வாசலின் எதிரில் உள்ள ஜான்சி ராணி திடலின் அரசியல் முழக்கங்கள், எல்லாம் இன்று காணாமல் போய் விட்டன. குதிரை வண்டிகள் பயணிகளைச் சுமக்க பழநிக்குப் போய்விட்டன.

இன்று மரமிகுந்த இடங்களில் நகைக்கடைகள், செடிகள் இருந்த இடங்களில் பழைய புத்தகக் கடை, பிற்புறப்பகுதியில் வாகன நிறுத்தங்கள் என்று மாறி “ஜான்சிராணி ஜுவல்லர் காம்ப்ளக்ஸாகி” விட்டது. நவ்வாப்பழம் தின்ற நாக்கு மறுபடிதேடி அழுகிறது. மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழி கேட்டால் “ஜான்சிராணி பார்க் அருகே” என்று இப்போது யாரும் சொல்லுவதில்லை. குடிநீர் பிடிக்க வரும் பெண்களும், நிறைந்து வழிந்த

நியூ சினிமாவும் இன்று காணவில்லை. தியேட்டர் மூடப்பட்டு உள்ளே பூச்சி பொட்டுகள் திரிகின்றன.

மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கும் வடக்கும் சந்திக்கும் இடத்தில் மீனாட்சி பூங்கா இப்போது “பரவாயில்லை” என்று சொல்ல வைக் கிறது. இந்தப் பூங்கா அதன் எதிரில் சென்ட்ரல் மார்க்கெட் ஆக இருந்த பழைய ஜெயிலில் பணிபுரிந்த அலுவலர்கள் இப்பூங்காவில்தான் ஓய்வு எடுப்பார்களாம். ராணி மங்கம்மாள் சிறை வைக்கப்பட்ட அரண்மனை இப்போது பொதுப் பணித்துறை அலுவலகமாகி விட்டது. எப்போதும் ஜனங்களால் சூழப்பட்ட சென்ட்ரல் மார்க்கெட் நெருக்கடி கருதி மாட்டுத்தாவணிக்குப் போய் விட மார்க்கெட் வாகன நிறுத்தங்களால் நிறைந்து மாநகராட்சி வருமானத்தைக் கூடுதலாக்குகிறது. மார்க்கெட் தொடங்கி கோவிலின் புதுமண்டபம் வரை நீண்ட இப்பூங்கா சுற்றுலாப் பயணிகள் ஓய்வு எடுக்கவும், பகுதி மக்கள் பால் வாங்க ஆவின் பூத்தும் ஆகப் பயன்படுகிறது. பூங்கா வாசலில் அரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய வகை செய்த தியாகி வைத்தியநாதய்யர் சிலையாக உயர்ந்து நிற்க பீடத்தின் கீழே கழிவுகளும் சிறுநீர் ஓடையும் ஓட நாற்றம் நீடிக்கிறது. சிறை அலுவலர் களுக்காகக் கட்டப்பட்ட மூன்றடுக்கு கழிப்பறை இப்போது கட்டணக் கழிப்பறைகளாகி பழைமை சிதைந்து போய்விட்டது. தூக்கு மேடை இருந்த இடம் இப்போது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகமாகி விட்டது.

மதுரை திருமலை நாயக்கர் மகால் முன்புறம் உள்ள சேர்மன் துளசிராம் பூங்காவும் மகாலை தென்புறமும் பின்புறமும் அலங்கரிக்கும் புல்வெளி களும் அப்பகுதிகளைப் பசுமை நேசம் பரவ வைக் கிறது. மகாலின் வெளியே பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் இலவசமாய் உட்கார, உள்ளே டிக்கெட் வாங்கிக் கொண்ட காதலர்களும் கேமிரா தூக்கிய வெள்ளைக்காரர்களும் அலைகின்றனர். எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டு அரண்மனையைக் கட்டிய திருமலை மன்னர் உள்ளே நிற்க அனுமதி இல்லாமல் வெட்ட வெளியில் உடைவாளோடு சிலையாக நிற்கிறார்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் ஒரு காலத்தில் மரங்களோடும் குலுங்கும் செடிகொடிகளோடும் அழகை வெளிப்படுத்தி நின்ற தியாகி வைத்திய நாதய்யர் பூங்கா 1966-67களில் நூலகத் துறையால் பெறப்பட்டு பூங்கா இருந்த இடத்தில் மாவட்ட மைய நூலகம் மூன்று மாடிகளோடு நிற்கிறது. தேசபக்தர் ஜார்ஜ் ஜோசப் எதிரில் சிலையாக கழுத்தை மட்டும் காட்டி வருகிறார்.

மதுரையில் கீழ மார்ட் வீதியில் பெரிதாகவும் அழகாகவும் இருந்த ராஜாஜி பூங்காவும் ராஜாஜி திடலும் புகழ் பெற்றவை. பலபேர் மதுரையில் சைக்கிள் பழக இத்திடல் நோக்கித்தான் வரு வார்கள். தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலிய மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இங்கே தான் தொடங்கியது. அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை மாணவர்கள் இங்கே தான் “டைப் அடித்து” வந்து எரித்தனர். பாம்பு மன்னன் கோவை பார்த்தசாரதி இருபது பாம்புகளோடு கண்காட்சி நடத்தியது தான் இத்திடலின் கடைசிக் காட்சி. திலகர் திடலும் ஜான்சிராணி திடலும் கைவிரிக்க இங்கே தான் தலைவர்கள் வந்து பேசுவார்கள்.

இன்று பூங்காவும் திடலும் போய் மதுரையின் கிழக்குப் பகுதியின் பெரிய காய்கறிச் சந்தையாகி விட்டது. காய்கறி முதல் கருவாடுமீன் வரை இங்கே கிடைக்க, தயிர் மார்க்கெட்டில் தயிர் வாங்க நகரம் தாண்டி வாழும் கிராம மக்களே வருகிறார்கள். இன்று மனிதன் கால் பதித்து நடக்க இப்பகுதியில் முடியாத படிக்கு நெரிசல். மதுரையைச் சுற்றி உள்ள எல்லாக் கிராம மக்களையும் இங்கே தான் காணலாம்.

மதுரையின் விரிவாக்கப் பகுதியான கே.கே. நகரின் கிழக்கே தான் வண்டியூர் கண்மாய் உள்ளது. சென்னையில் செம்பரம்பாக்கம் போல விரிந்து பரந்த ஏரி நீர் நிறைந்த காலங்களில் படகுகள் அசைந்து போகப் படகுத் துறைகளில் சிறுவர் கூட்டம் அணிதிரளும். அதன் மேற்குப் புற, வடபுறக் கரைகளின் மரஞ் செடி கொடிகள் மணம் பரப்பும் பூங்கா உள்ளது. சிமிண்ட் தரை பூங்காவைச் சுற்றி இருக்க நூற்றுக்கணக்கானோர் அதிகாலை நடைப் பயிற்சிக்கு வருகிறார்கள். நடையாளர் கழகம் என்ற அமைப்பு மதுரையில் “அறிவாளி”களை அழைத்து வந்து அதிகாலைச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகிறது. பெருகிய உட லோடும் தொப்பையைக் கரைக்கவும் அதிகாலை ஆக்சிஜனை உள்ளிழுக்கவும் நடை பழகும் இவர் களைப் பார்க்கவும் ஒரு கூட்டம் நிற்கிறது. அரசியல் வாதிகள் வரும்போது ஆயுதத்தாங்கிய காவலரும் வருவார்கள். (காவலர் இல்லாவிட்டால்” போட்டு (?) விடுவார்களாம்)

மதுரை அண்ணாநகர் வீட்டு வசதிவாரிய பூங்காவில் அதிகாலை நடைப் பயிற்சி நடக்க சிறுவர்கள் விளையாட்டுக் கருவிகளில் ஏறி விளையாடுகிறார்கள்.

மதுரையின் சுற்றுலாச் சிறப்பு தல்லாகுளம் ராஜாஜி பார்க்கில் தான் வெளிப்படுகிறது. கிழக்கே புகழ் பெற்ற காந்தி மியூசியம், மேற்கே கமிஷனர் வீடு, எதிரில் மிகப்பெரிய தமுக்கம் மைதானம், வெள்ளைக்கார நாகரிகத்தின் மிச்சமான யூனியன் கிளப், (பணக்காரர்கள் மட்டும் உள்ளே பத்திரமாக பில்லியர்ட்ஸ் விளையாடுகிறார்கள்) மாநகராட்சி நீச்சல் குளம் மாணவர்களுக்கு நீச்சல் சொல்லித் தருகிறது.

பூங்காவின் நுழைவில் பீரங்கி சிற்பங்கள் உள்ளன. பின்புற முருகன் கோவிலில் எப்போதும் மணிச்சத்தம். பாதுகாக்கப்படும் பூங்கா என்பதால் களை இழக்காத மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், கூண்டிலடைக்கப்பட்ட காதல் பறவைகள் வெளியே புல்வெளிகளில் மனிதக் காதலர்கள், விளையாட்டுக் கருவிகளில் விளையாடும் சிறுவர் சிறுமியரும் பெரியவர்களும் என்று எப்போதும் கூட்டம் இருக்கும். மாலை நான்கு மணிக்கு மேல் வெளியே குதிரைச் சவாரி உண்டு. காசு இருந்தால் வாங்கித் தின்ன தேங்காய், மாங்காய் பட்டாணி சுண்டல், ஜிகர்தண்டா என்று தீனிவகைகள், சித்திரைத் திருவிழா நாட்களில் இப்பகுதியில் ஆட்சித் தலைவர்கள் வண்டி கூடப்போக முடியா நெரிசல் நிலவும். மதுரை வரும் பக்கத்து கிராம மாணவர்களின் சுற்றுலாப் பயணத்திட்டத்தில் இப்பூங்காவும் இருக்கும். மதுரைக்குப் புகழும் மாநகராட்சிக்கு வருமானமும் இதனால் வருகிறது. மதுரையின் கடல் இல்லாத மெரினா இது.

தல்லாகுளம் பாண்டியன் ஹோட்டல் தென் புறம் இரண்டு சாலைகளுக்கும் இடைப்பட்ட பூங்கா மாலையில் மட்டும் பெரியவர்களால் நிரம்பும். முன்புறம் அம்பேத்கர் சிலை நிற்க இருபுறமும் வாகனங்கள் ஓயாது விரைகின்றன.

மதுரை தேவி தியேட்டர் சாலையில் தோழர் ஐ.வி.சுப்பையா சந்தை ஒட்டியவாறு தியாகி பத்மாசினி பூங்கா இருந்தது. கம்யூனிஸ்ட் தோழர்கள் இங்கே விவாதம் நடத்துவார்கள். தற்போது திலகர் திடல் சந்தையின் கோடவுன் ஆகமாறி விட்டது.

பொன்னகரம் பிராட்வேயில் வெள்ளி வீதியார் பள்ளியை ஒட்டி இருந்த தியாகி பர்வதவர்த்தினி பூங்கா முக்கோண வடிவமானது. பராமரிப்பில்லாமல் மரங்கள் பட்டுப் போய் முதியோர்களின் புகலிட மாகி விட்டது. சில சமயங்களில் நாய்களும் உள்ளே திரியும்.

சேர்மன் முத்தராமய்யர் சாலையில் தியாகி ஜார்ஜ் ஜோசப் பூங்கா உள்ளது. பராமரிப்பில்லாமல் இருந்து இப்போது தண்ணீர்த் தொட்டியாகி பகுதி மக்களின் தாகம் தீர்க்கிறது.

மதுரை தலைமை அஞ்சலகம் குட்ஷெட் தெரு முனையில் இருந்த பூங்கா வணிகத் தலங் களாக மாறிவிட்டது. குதிரைகளுக்கும் மாடு களுக்கும் இங்கே லாடம் அடித்த காலமும் உண்டு. பூங்கா இருந்ததன் மிச்சமாக எல்.ஐ.சி. மேல்புறம் சாலையோரம் பூங்கா உள்ளது.

காய்ந்த மரங்கள் காக்கைகளைச் சுமக்கின்றன. மதுரை சுப்பிரமணியபுரம் பூங்கா காய்கறி மார்க் கெட் கூச்சலில் காணாமல் போய்விட்டது.

ஜெய்ஹிந்த்புரம் பூங்கா எழிலோடு திகழ்ந் தாலும் வழியில் உள்ள தேங்காய், பழக்கடைகளைத் தாண்டி உள்ளே போகத்திறமை வேண்டும். பெத்தானியாபுரம் சாலைப் பூங்கா ஒர்க்ஷாப் பரபரப்பில் காணாமற் போய்விட்டது. மதுரையின் சத்தியசாயி நகரில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் தொடங்கப்பட்ட பூங்காவும், பின்புறம் கூ.ஏ.ளு. நகர் பூங்காவும் பசுமைமாறாது காட்சி தருகின்றன. ரயில்வேகேட் அருகே இருந்த கோவலன் பொட்டல் பார்க் ஒரு கட்சியின் பிடியில் உள்ளது. உள்ளே சிரம் வெட்டப்பட்ட கோவலன் (கண்ணகியின் கணவன் தான்) தலை உருண்டைக் கல்லாகக் கிடக்க கோவலனுக்குக் கோவில் சிறியதாக உள்ளது. அகழ் ஆய்வு நடந்ததன் அடையாளம் காணலாம்.

மதுரையின் வடக்கே சிங்கராயர் காலனியின் உள்ளே உள்ள பூங்கா அப்பகுதி மக்களின் ஆரோக் கியம் பேணும் அக்கறைக்கு அடையாளம். மதுரை மாநகராட்சிக் கட்டடத்தின் உள்ளே உள்ள புல்வெளிகளான பூங்காக்கள் எப்போதும் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களால் நிரம்பி வழியும். ஆட்சிப்பணி, காவல்பணி, அரசுத்தேர்வு எழுதுகிறவர்கள் தங்களைத் தயார் செய்ய இங்கே காலையிலேயே வந்துவிடுவார்கள். கலந்துரை யாடியும், எழுதியதைப் படித்தும் மாணவர்களும் வேலை தேடுகிறவர்களும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்க்கும் போது படிக்காதவனுக்கும்கூடப் படிக்கிற ஆசை வரும். ஆண்டு தோறும் தேர்வு செய்யப் படுகிற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப் 1 தேர்வாளர் களில் இங்குப் படிப்பவர்களும் இருக்கிறார்கள்.

மாநகராட்சியின் வாசலில் அடுத்த வாசலாக உள்ள “எக்கோ பார்க்” ஆட்சியாளர் உதயசந்திரன் கருத்தில் உதித்தது. எல்லா ஆட்சித்தலைவர்களும் தொடர்ந்து அக்கறை செலுத்துவதால் இப்பூங்கா மெருகு கலையாமல் இருக்கிறது. புற்களால் ஆன குன்றுகள், உருவங்களை எடுத்துக்காட்டும் செடிகள், வண்ண விளக்குகள், நீரூற்று, சிறுவர் விளையாட்டுச் சாதனங்கள் என்று திகழும் இதனை மூலிகை வனம் என்றே கூறலாம். உள்ளே நுழையத்தான் கட்டணம், காதலர்களின் சொர்க்கமாகவும், குழந்தை களின் குதூகல விளையாட்டு அரங்கமாகவும் திகழும் இதனைக் காண உள்ளூர்வாசிகளோடு வெளிநாட்டவரும் வருகிறார்கள்.

மாநகராட்சி பின்புறம் உள்ள மற்றோர் பூங்காவில் மாநகராட்சிக்கு வருகிற மக்களும் பணியாளர்களும் உட்கார்ந்து பேசுவார்கள். மாலையில் கிழக்குப் பகுதி வாயில் மூலம் மக்கள் வருவார்கள். நன்கு பராமரிக்கப்படுகிற மூலிகைப் பூங்காவாகும் என்பதில் அய்யமில்லை.

மதுரை எச்.எம்.எஸ். காலனியில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள பூங்கா அப்பகுதி மக்களின் நெடுநாள் கனவுக் கூட்டம் இன்று மாலை நேரங்களில் மட்டும் நிரம்பி நிற்கிறது.

மதுரை காமராஜர் சாலையில் காந்திப் பொட்டல் உள்ளது. நமது தேசப் பிதா மதுரை வந்த போது இங்கு தான் மேடை போட்டுப் பேசி னாராம். அதன் நினைவாக அவரது சிலை ஒரு சிறு பையன் நிற்பது போல் நிறுவப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி அமைக்கப்பட்ட பூங்கா இன்று புற்களெல்லாம் கருகி நெடுஞ்சாலையின் தூசிகளும் காகிதங்களும் நிறைந்து அலங்கோலமாக உள்ளது. நீர் காணாமலும் பராமரிப்பில்லாமலும் குப்பை போலத் தோன்றும். இந்தப் புல்வெளியை எவரும் பராமரிக்க முன் வருவதில்லை. காந்தி இழந்து காட்சி தரும் காந்தி எதிரில் உள்ள திரையரங்குக்கு வரும் திரண்ட மக்களைப் பார்த்துக் கொண் டிருக்கிறார். அக்டோபர் 2-இல் மட்டும் மாலை போடப்படுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள “எக்கோ பார்க்” வெள்ளை மயில்களும், மந்தியோடு கொஞ்சும் வானரங்களும் பறவைகளும் நிறைந்து கண்கொள்ளாக் காட்சி யாகிறது. இதில் உள்ள குடைவரை சமணர் சிற்பங்கள் காலங்கடந்தும் வரலாற்றையும் தொன்மையையும் பறை சாற்றுகிறது.

மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்கா பசுமை நிறைந்த அப்பகுதியின் மழைப்பொழிவுக்கு நானே காரணம் என்பதைப் போலப் புல்வெளிகளும் தேன்மலர்களும் மரங்களும் சூழ்ந்து அப்பகுதிக்கு அழகு தருகிறது. மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு வேலி போடப்பட்ட இப்பூங்காவைச் சுற்றி அதிகாலை ஆக்சிஜனை நுகர நடைப்பயிற்சிக்கு மக்கள் வருகின்றனர்.

மதுரை எல்லீஸ் நகர் எல்லீஸ்துரை என்ற பழைய ஆட்சித்தலைவரின் பெயரில் திகழும் வீட்டு வசதி வாரியப் பகுதியாகும். அடர்ந்த மரங்களும் ஆரண்யம் போன்ற தோற்றமும் கொண்ட இப் பகுதியில் ஸ்டேடியம் பூங்கா உள்ளது. குடியிருப் போர் கூடிப் பேசவும், மாணவர்கள் விளையாடவும் பயன்படும் இப்பூங்காவிலும் அதிகாலை நடை பழகுதல் நிகழ்கிறது. மதுரைக் கூவமான கிருதமால் சாக்கடை இப்பகுதியில் ஓடுவதால் உற்பத்தியாகிற கொசுக்களும் அதிகாலையிலேயே வந்து விடுகின்றன. நடப்பவர்களின் உடலில் ஒட்டித் தாங்களும் நடை பழகுகின்றன.

மதுரை சோமசுந்தரபுரம் காலனி (எஸ்.எஸ். காலனி) ராம் நகரில் பூங்கா விளையாட்டுக் கூடமாக உள்ளது சிறுவர்கள் ஓடி விளையாடும் இதன் அருகே உள்ள நூலகம் தான் ஒரே பொழுது போக்கு.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஒரு காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. மரங்களும் கொடிகளும் பொற்றாமரைக் குளத்தின் நீரலைகளும் குளிர்ச்சி தரக் கொலுவீற்றிருக்கும் மீனாட்சியம்மன் திருக்கோயில் இன்று மத்திய, மாநில உளவுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்ட நீண்ட நெடிய மதில் சுவர்களைச் சுற்றிலும் அண்மைக் காலமாகத் தான் புல்வெளிகள் உண்டாக்கப்பட்டு காணாமற்போன கடம்ப மரக்கன்றுகளை மறு படியும் ஊன்றிப் பூங்காக்களை நான்கு திசை களிலும் கடம்பவனத் தோற்றம் கொள்ளச் செய்து வருகின்றனர் கோவில் நிர்வாகிகள்.

உள்ளூர்வாசிகளுக்கே அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அதிகாலை சித்திரை வீதி நடைப்பயிற்சி சுற்ற அனுமதிக்கப்படும் போது சுற்றுலாப் பயணிகள் கம்பிகளுக்கு வெளியில் நின்று பூங்காக்களைக் கண்டுகளிக்கின்றனர்.

மதுரைக்குக் கிழக்கே நாற்பது ஏக்கர் பரப்பள விலான மாரியம்மன் தெப்பக்குளம் உலகப்புகழ் பெற்றது. மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் திசைகள் தோறும் செண்பகம், கோங்கு, மருது, அசோகம், வேம்பு, மகிழம், புங்கன், இலுப்பை, தென்னை என்று ஒன்பது மரங்கள் வீதம் மாறு பட்ட மரங்கள் வானளாவ வளர்ந்துள்ளன. மூலிகை மணம் பரப்பும் மலர்க்கொடிகளும் செடி களும் அடர்ந்து நடைபாதையில் சிமிண்ட் இருக்கை களில் அமர்ந்து காற்று வாங்குகின்றனர். நீர் ததும்பும் காலங்களில் படகுகளில் தான் பயணிக்க முடியும். தெப்பக்குளத்தின் வெளியில் அமைந்த பேவர் பிளாக் நடைபாதையில் தினமும் ஆயிரக் கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்ள சுற்றிலும் ‘மூலிகை சூப்’களும், முடக்கத்தான் தோசைகளையும் விற்பனை செய்து பகுதியின் சிறு வியாபாரிகள் வணிகம் செய்து காசு பார்க்கின்றனர்.

மரங்களை வளர்த்தால் மழை வளம் கூடும். மண்ணின் ஈரப்பசை மரங்களை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் வளர்க்கும். மரங்கள் பெருக உயிர் வளி (ஆக்சிஜன்) பரவும். இதை உணர்ந்து தான் நமது மூதாதையர்கள் தோப்புக்களையும் பூங்காக்களையும் உயிராக நேசித்தனர். இயற்கைக்கு மதிப்பளிக்க ஆலயங்களில் தலவிருட்சங்கள் உரு வாக்கி வணங்க வைத்தனர்.

பசுமையும் இயற்கையும் மானிடரின் வாழ் வுடன் பின்னிப்பிணைந்தவை. இயற்கையைப் பிரிந்தாலும் பிரித்தாலும் வாழ்க்கை நோயாளி களின் வாழ்விடமாகிவிடும்.

இதை உணர்ந்தால் தானோ என்னவோ மலை களைச் சுற்றுவதை கிரிவலமாக்கியது போல பூங்காக் களையும் அதிகாலையில் சுற்றி வந்து தொப்பை குறைக்கவும், உடலை நோயற்ற தன்மைக்குக் கொண்டு வரவும் முயற்சிக்கின்றனர். அரசியல்வாதிகளைத் தவிர மற்ற அனைவரும்.

Pin It