இராமச்சந்திரன்.சீ (2005) தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் சென்னை, குடவாயில் பாலசுப்பிரமணியன் (1999) தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு,

Prof P.Maria Lazar (2010) - Tales of Tranquepar

மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில், பழமையின் எச்சங்களுடன் சுற்றுலாத் தலமாகக் காட்சியளிக்கும் கடற்கரையூர் தரங்கம்பாடி. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடங்கிய வட்டம் ஒன்றின் தலைமை யிடமாக இது விளங்குகிறது.

Tharangambadi-fort_640

பதினாறாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் குறிப்பிடத் தக்க துறைமுகங்களுள் ஒன்றாகத் தரங்கம்பாடி விளங்கியுள்ளது. போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், டேனீசியர், ஆங்கிலேயர் எனப்பல அய்ரோப்பிய நாட்டு வணிகர்கள் இங்குத் தங்கி வாணிபம் மேற்கொண்டுள்ளனர்.

வரலாற்றுத் தொன்மை

தரங்கம்பாடிக்கு மிக அருகிலுள்ள ‘பொறையாறு’ என்ற ஊர் குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. பெரியன் என்பவன் இவ்வூரை ஆண்டு வந்துள்ளான்.

‘நாரைகள் இறால் மீனைப் பிடித்து உண்டு மகிழும் கடற்கரையில், நல்லதேரையுடைய பெரியன் என்பவனின் கள்மணம் கமழும் பொறையாறு போன்ற அழகினையுடையேம்’

என்று தலைவி கூற்றாக நற்றிணை (131:6-8) குறிப்பிடுகிறது. அகநானூறு (100:11-12),

‘கைவண் கோமான் புரியுடை நல்தேர்ப் பெரியன்’ என்பவனது புன்னைமரம் அடர்ந்த சோலை சூழ்ந்த பொறையாற்றின் கடல்துறை’          

என்று குறிப்பிடுகிறது. கல்லாடனார் என்ற புலவர் புன்னை மரங்கள் அடர்ந்த செழிப்பான நகர் என்ற பொருளில் ‘புன்னைச் செழுநகர்’ என்று இவ்வூரைக் குறிப்பிட்டு, இவ்வூரை ஆளுவோனாக, ‘பொறையாற்றுக் கிழான்’ என்பவனைக் குறிப்பிடுகிறார் (புறநானூறு:391:17).

மாசிலாமணீஸ்வரர் கோவில் என்ற பெயரிலான சிவன் கோவில் ஒன்று தரங்கம்பாடியில் உள்ளது. இக் கோவிலில் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தியேழாவது ஆட்சியாண்டுக் (கி.பி.1305) கல்வெட்டொன்றுள்ளது. இக்கல்வெட்டில், ‘சடங்கன்பாடியான குலசேரன் பட்டினத்து உடையார் மணிவண்ணீசுரமுடையார்க்கு’ என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. தொடக்கத்தில் சடங்கன்பாடி என்ற பெயரில் தரங்கம்பாடி அழைக்கப் பட்டுவந்ததும், குலசேகரபாண்டியன் தன்பெயருடன் தொடர்புபடுத்தி குலசேகரன்பட்டினம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளான் என்பதும் இக்கல்வெட்டால் அறியக் கிடக்கிறது.

மாற்றம் செய்யப்பட்ட இப்பெயர், வழக்கில் இருந் துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள திருக்கடையூர் கோவிலில் கிடைத்துள்ள கல்வெட்டொன்றில் இக் கோவிலுக்கு வணிகர்கள் சிலர் கொடை வழங்கியது இடம்பெற்றுள்ளது. இவ்வணிகர்களின் ஊராகக் குலசேகரன்பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கோவில் கல்வெட்டொன்றில் ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினெண் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்’ என்ற காப்புரை இடம்பெற்றுள்ளது. இக்காப்புரையில் இடம்பெறும் ‘பதினெண்விஷயம்’ என்ற சொல் வணிகர் குழு ஒன்றைக் குறிப்பதாகும்.

தஞ்சை நாயக்கமன்னனான அச்சுதப்ப நாயக்கரது கல்வெட்டொன்று முற்றுப்பெறாத நிலையில் தரங்கம் பாடி மாசிலாமணீஸ்வரர் கோவிலில் கிடைத்துள்ளது. 1614 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ‘சடங்கன்பாடி’ என்றே தரங்கம்பாடி குறிப்பிடப்பட்டுள்ளது.

விலையின்றி உரிமையாகப் பெறும் பாக்கினை ‘பாக்கு சுவந்திரம்’ என்று சுட்டும் இக்கல்வெட்டு, பாக்கு தொடர்பான எண்ணல் அளவையை ‘அமணத்து’ என்று குறிப்பிடுகிறது. ஓர் அமணம் அல்லது அவணம் இருபதாயிரம் கொட்டைப் பாக்குகளைக் கொண்ட தாகும். தரங்கம்பாடியில் பாக்கு வணிகம் நிகழ்ந்ததை இதனால் அறிய முடிகிறது.

புன்னைச் செழுநகர் என்று பொறையாற்றைப் புறநானூறு குறிப்பிடுவதன் அடிப்படையில் நகரம் என்ற தகுதியினை இப்பகுதி சங்ககாலத்திலேயே பெற்றிருந்தது புலனாகிறது. குலசேகரன்பட்டினம் என்று இவ்வூரை அழைத்ததும், கல்வெட்டுகளில் இடம்பெறும் வாணிபம் மற்றும் வணிகர்கள் குறித்த செய்திகளும் வாணிப நகர மாக, தரங்கம்பாடி விளங்கியதை வெளிப்படுத்துகின்றன.

தரங்கம்பாடியில் டேனிசியர்

வாணிப நகராக விளங்கிய தரங்கம்பாடியின் வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு, டென்மார்க் நாட்டினர் (டேனிசியர்) இங்குக் குடியேறிக் கோட்டை கட்டிக் கொண்டதாகும். தென்கிழக்கு ஆசிய நாடு களுடன் வாணிபம் செய்யப் பதினேழாம் நூற்றாண்டில் வாணிபக் கழகங்களை அய்ரோப்பிய நாட்டினர் நிறுவினர். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி 1600ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இதுபோன்றே பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனி, டச் கிழக்கிந்தியக் கம்பெனி ஆகியன நிறுவப் பட்டன.

டென்மார்க் நாட்டினர் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றை டென்மார்க்கின் கோபன்ஹேகன் (Copenhagen) என்ற நகரில் கி.பி.1616ஆம் ஆண்டு நிறுவினர். டென்மார்க்கின் மன்னனான நான்காம் கிறிஸ்தியன் என்பவனின் ஆதரவு இந்நிறுவனத்திற்கிருந்தது. இந்தியாவுடன் வாணிபம் நடத்துவதில் இவர் ஆர்வம் காட்டினார்.

1618ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கப்பல் ஒன்று சோழமண்டலக் கடற்கரைப் பகுதிக்குள் வந்தது. நாகப்பட்டினத்தை மையமாகக்கொண்டு இப்பகுதியில் தம் வாணிப நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்கள், மற்றொரு அய்ரோப்பிய நாடு தமக்குப் போட்டியாக வருவதை விரும்பவில்லை. இதனால் இக்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தனர்.

இதே ஆண்டில் ஓவஜெட்டே என்ற அட்மிரல் தலைமையில் இரண்டு போர்க்கப்பல்களும் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூன்று வாணிபக் கப்பல்களும் இலங்கை வந்தன. இலங்கை மன்னனுடன் வாணிப ஒப்பந்தம் செய்துகொண்டு கண்டி நகரில் ஓவஜெட்டே தங்கினான். டென்மார்க் மன்னனின் தூதுவன் என்ற அரசியல் தகுதியையும் அவன் பெற்றிருந்தான்.

1620ஆம் ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள், அவன் தஞ்சாவூர் வந்தான். அப்போதைய தஞ்சை நாயக்க மன்னன் இரகுநாத நாயக்கனை நவம்பர் ஏழாம் நாள் சந்தித்து, தன் நாட்டின் வாணிப நடவடிக்கைகளை அவரது ஆட்சிப்பகுதிக்குள் நடத்த அனுமதி வேண்டினான். இதை இரகுநாத நாயக்கன் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், டென்மார்க் மன்னன் நான்காம் கிறிஸ்தியனுக்கும், நாயக்க மன்னனுக்கும் இடையில் 1620 நவம்பர் 19ஆம் நாள் ஒப்பந்தமொன்று உருவானது. இரகுநாதன் நாயக்கரின் விருப்பப்படி போர்ச்சுகீசிய மொழியில் எழுதப்பட்ட இவ்வொப்பந்தம் பதினைந்து விதிமுறைகளைக் கொண்டதாய் இருந்தது. பதின்மூன்று பதினான்காவது விதிமுறைகளில் பின்வரும் செய்தி இடம்பெற்றிருந்தது.

தரங்கம்பாடி என்றழைக்கப்படும் கிராமமானது டென்மார்க் மன்னனின் சொத்தாக அடுத்த இரண்டாண்டுகள் விளங்கும்... டென்மார்க் மன்னரும் அவரது குடிகளும் அவர்கள் விரும்பும் வகையில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதற்குத் தேவைப்படும் அளவுக்கு சுண்ணாம்பும் கல்லும் நாங்கள் வழங்கு கிறோம்.

இவ்வுடன்படிக்கை ஏற்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களை, தஞ்சை நாயக்கமன்னரிடம் இருந்து குத்தகையாகப் பெற்றனர். இக்கிராமங்களும் தரங்கம் பாடி ஊரும் டேனிசியரின் நிர்வாகத்திற்குள் இருந்தன.

தஞ்சை நாயக்கர் ஆட்சியை அடுத்து மராத்தியர் ஆட்சி தஞ்சைப்பகுதியில் உருவானது. மராத்தியர் ஆட்சியிலும், இப்பகுதிகள் டேனிசியர் பொறுப்பிலேயே இருந்தன. ஆண்டுதோறும் குத்தகைப் பணம் மட்டும் செலுத்தி வந்தனர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மன்னர்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போது தஞ்சை மராத்திய மன்னர்களும் தம் சுயேச்சைத் தன்மையை இழந்தனர். மன்னர் பெற வேண்டிய வருவாய் வரையறுக்கப்பட்டது. இவ்வகையில் தோஃபா என்ற பெயரில் டேனியர்கள் செலுத்தி வந்த இரண்டாயிரம் சக்கரம் பணம் மராத்தி மன்னரின் வருவாய் இனத்தில் சேர்க்கப்பட்டது.

டேனிஸ்பர்க் கோட்டை

இரகுநாத நாயக்கருடன் 1620இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 1620-21ஆம் ஆண்டுகளில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கோட்டை ஒன்றைக் கட்டியது. டேன்ஸ்பர்க் என்று பெயரிடப்பட்ட இக்கோட்டையைப் பாதுகாக்க நென்றிக்ஹஸ் என்பவர் தளபதியாக நியமிக்கப்பட்டார். முப்பத்தாறு பீரங்கிகள் இக்கோட்டையில் நிறுவப் பட்டன. இக்கோட்டையைக் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் (1999:299) பின்வருமாறு விவரித்துள்ளார்.

நான்கு மூலைகளிலும் கொத்தளம் கொண்ட அமைப்போடு கற்களால் கட்டப் பெற்ற புற அரண் கொண்ட சுவர்களோடு கோட்டை அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வரண்களைச் சுற்றிலும் அகழி அமைத்தனர். அகழியைக் கடந்து உள்ளே செல்ல இழுவைப் பாலத்தையும் அமைத்தனர். மூன்று புறமும் சிப்பாய்கள் தங்குமிடம் (Barracks) கிடங்குகள் (Ware House) சமையலறை, மற்றும் சிறை அறைகளை அமைத்து, கிழக்கே இரண்டு அடுக்கு மாளிகையை உரு வாக்கினர். வளைந்த உட்கூரை பெற்றுத்திகழும் பூமிக்கு அடியில் அமைந்த தளத்தில், இராணுவத் தளவாடக் கிடங்கு, வணிகக் கிடங்கு ஆகிய வற்றையும், மேல்தளத்தில் தேவாலயம், கவர்னரின் தங்குமிடம், தலைமை வணிகர், மற்றும் காப்டனின் தங்குமிடங்கள் ஆகியவற்றையும் அமைத்தனர். இவற்றிற்குக் கடலும், ஆறும் காப்பாக அமைந்தன.

தரங்கம்பாடி என்னும் அவ்வூருக்கு எந்தவித மதிலரண்களும் இல்லாமல் இருந்தன. ஊரின் எல்லைகளைக் குறிக்கும் இடங்களிலும், சுங்கத் தீர்வை வசூலிக்கப் பெறும் இடத்திலும் நாயக்க மன்னரின் இலச்சினை பெரிக்கப் பெற்ற வழவழப்பான கற்கள் இருந்தன. டேனிஸ் பர்க் கோட்டையில் நிலையாகத் தங்கிக்கொண்டு ஆண்டுதோறும் நாயக்க மன்னருக்குப் பகுதி அளிப்பதற்கு உரிய அனுமதியை கி.பி.1624இல் இரகுநாத நாயக்கர் வழங்கினர். கி.பி.1646இல் கோட்டைக்கு 300 மீட்டர்கள் மேற்காகத் தஞ்சை செல்லும் நெடுவழியில் பெரிய கத்தோலிக்க தேவாலயம் எழுப்பப் பெற்றது. கி.பி.1650இல் தரங்கம்பாடி நகரமாக வளர்ச்சி பெற்றது.

விஜயராகவ நாயக்கரின் இறுதிக் காலத்தில் தஞ்சை நாயக்க அரசுக்கு ஏற்பட்ட நலிவும் சோதனைகளும் டேன்ஸ்பர்க் கோட்டைக்குச் சாதகமாய் அமைந்ததாலும், தங்களுக்கென 50 சதுரமைல் பரப்பளவுள்ள சோழ நாட்டுப் பகுதியின் உரிமை கிடைத்ததாலும் டேன்ஸ்பர்க் கோட்டையும், தரங்கம்பாடி நகரமும் வலிமை பெற்ற பாது காப்புடைய நகரமாக மரின. இதனால் விஜய ராகவ நாயக்கரின் இறுதிக் காலத்திலும், தஞ்சை மராட்டியர்களின் தொடக்க காலத்திலும் தரங்கம்பாடி முழுவதற்கும் கோட்டைச் சுவர் எழுப்பப் பெற்றதோடு அதன் வெளிப்புறத்தே அகழியும் தோண்டப் பெற்றது. அவ்வகழி ஆற்றோடும் இணைக்கப் பெற்றது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தரங்கம்பாடியும் டேனிஷ்பர்க் கோட்டையும் நீர் சூழ்ந்த பேரரண் பெற்ற நகரமாக விளங்கலாயிற்று.

ஜான் ஓலேஃபஸன் என்பவர் 1623 மே மாதம் பீரங்கிச் சிப்பாயாக, தரங்கம்பாடிக்கு வந்தார். ஒன்றரை ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்துள்ளார். டேனீஷ்பர்க் கோட்டையைக் கட்டியதில் நம்மவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பின்வருமாறு எழுதியுள்ளார்:

Tales-of-Tranquebar_325டேனிஸ் போர்க் என்று பெயர் பெற்ற தரங்கம் பாடிக் கோட்டை மாளிகை மிகவும் அழகான கட்டடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லிலான இந்தக் கட்டடத்தை இந்தியக் கொத்தனார்கள் கட்டி னார்கள். இவர்கள் நம் ஐரோப்பியக் கட்டுமான வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும், தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ் கிறார்கள். இந்தக் கோட்டையின் நடுவில் எழிலான ஒரு “சர்ச்சு” ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதை இந்தியக் கொத்தனார்கள் கட்டினார்கள். நாம் கொடுத்த டேனிஷ் வரைபடத்தினைப் பின் பற்றி இவர்கள் கட்டியிருக்கிறார்கள்” (பால சுப்பிரமணியன் 1999:353).

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் 2001-2002 ஆண்டுகளில் டேனிஷ்பர்க் கோட்டையின் வட பகுதிச் சுவரைச் செப்பனிட்டனர். அப்போது கோட்டையின் அடித்தளம் எவ்வாறு அமைக்கப் பட்டிருந்தது என்பதையறிய ஆய்வு மேற்கொண்டனர். இவ் ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் வருமாறு:

‘இயற்கை மண் ஆகிய கடல் மண் மீது செங்கற் கட்டடமும் செங்கல் துண்டுகளைக் கொண்டு தரையும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேலே முப்பது செ.மீட்டர் தடிமண் அளவுக்கு, தவிட்டு மண் எனப்படும் மணலும் பரப்பப்பட்டிருந்தன. அதற்கு மேலே சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவரில் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவரில் மேற்பகுதியில் செங்கல்தளம் பரவப் பட்டிருந்தது. மழை பெய்தால் தண்ணீர் வெளியே சென்றுவிடும் வகையில் அது அமைக்கப் பட்டிருந்தது. கோட்டைச் சுவரின் அடித் தளத்தில் இரண்டு முறை கற்கள் பதிக்கப்பட்டு அதன் மீது சுவர் எழுப்பப்பட்டிருந்ததும் அதன் உறுதித்தன்மைக்குச் சான்றாக விளங்குகிறது’ (யூதரன்.கி.2006:38).

இவ்வளவு வலுவானதாய் அமைக்கப்பட்டிருந்தாலும் கடல் அரிப்பு அதிகரித்து வருவது, கோட்டைக்கு அச் சுறுத்தலாகவே உள்ளது.

டேனிஷ் நாணயங்கள்

தஞ்சை நாயக்கமன்னர்களான இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோரின் அனுமதி பெற்று தம் நாட்டு நாணயங்களை டேனிசியர் தரங்கம்பாடியில் அச்சிட்டனர். டென்மார்க் மன்னர்களான நான்காம் கிறிஸ்டியன், மூன்றாம் பிரடிரிக், அய்ந்தாம் கிறிஸ்டியன் ஆகியோரின் பெயர் பெரிக்கப்பட்ட காசுகளும் டேன்ஸ்பர்க் என்று கோட்டையின் பெயர் பெரிக்கப் பட்ட காசுகளும் இங்கு வெளியாயின. சில காசுகளில் டேன்ஸ்பர்க் கோட்டையின் வரைபடமும் இடம் பெற்றிருந்தது.

நாணயம் அச்சிடப்பட்ட ஆண்டும், இலை, பூ, யானை, சிங்கம், சிலுவை, பறவை, மீன், குதிரை, குதிரை வீரன், போன்ற உருவங்களும் சில நாணயங்களில் இடம் பெற்றுள்ளன (குடவாயில் பால சுப்பிரமணியன் 1999:299-300).

தஞ்சை நாயக்கர் மரபையடுத்து வந்த மராத்திய மரபினரும் தரங்கம்பாடி நாணயச்சாலை செயல்பட அனுமதி வழங்கினர்.

ESCOT Pagoda என்ற பெயரில் டேனிசியர்கள் நாணயங்களை வெளியிட்டனர். 1800-ஆம் ஆண்டு ஓலை ஆவணம் ஒன்றில் ‘புதுயிசக்காட்டு விராகன்’ என்று இந்நாணயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆ.கி.கம்பெனி ஆட்சி நிலை பெற்ற பின் அவர்கள் நாணயங்களும் தரங்கம்பாடிப் பகுதியில் புழங்கியுள்ளன. மக்கள் இந்நாணயங்களை ‘சென்னப்பட்டணம் கும்பினி ரூபாய்’, ‘மதராசி ரூபாய்’ என்றழைத்ததை தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் வாயிலாக அறியமுடிகிறது (இராமச்சந்திரன்.சீ 2005:13).

டேனிசியரின் வணிகம்

தொடக்கத்தில் அரிசி, பாக்கு, துணி, வெடியுப்பு ஆகியனவற்றை ஏற்றுமதி செய்த டேனிசியர்கள், கப்பல்களை வாடகைக்கு விட்டு ஆதாயம் தேடலாயினர். அடிமை வாணிகத்திலும் கடற்கொள்ளையிலும் கூட ஈடுபட்டனர்.

நிர்வாகமுறை

டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாக ஆளுநர் ஒருவர் தரங்கம்பாடியில் நியமிக்கப்பட்டார். டேனிசியர்கள் தான் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். டேனிஷ்பர்க் கோட்டையில் இவர் தங்கியிருந்தார்.

டேனிசியர்களுக்கும் நம்மவர்களுக்கும் இடையே இணைப்பாளர்களாக மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர். துபாஷி என்ற பெயரில் இவர்கள் அழைக்கப்பட்டனர். ‘த்விபாஷி’ என்ற சொல்லுக்கு இரு மொழியறிந்தவர் என்று பொருள். இச்சொல்லே, துபாஷி எனப்பட்டது. இதுவே, ‘துபாஷ்’ துபாஷி என்ற பதவிப்பெயருக்கான மூலச்சொல்லாகும். டேனிஷ் மொழியறிந்த தமிழர்கள் துபாஷ் ஆகப் பணியாற்றியுள்ளனர். காலிங்கராய பிள்ளை என்பவர் துபாஷியாக 1620இல் பணியாற்றி யுள்ளார். இவரது வீட்டில், கப்பல் செய்வது குறித்துக் கூறும் கப்பல் சாஸ்திரம் என்ற ஓலைச் சுவடி இருந்துள்ளது. தினமாரக்கா துபாஷி என்று இச்சுவடி இவரைக் குறிப்பிடுகிறது. டென்மார்க் என்பதே தினமாரக்கா என்றாகியுள்ளது.

டேனிசியர்கள் தரங்கம்பாடியில் கருப்பர் நீதி மன்றம் (BLACK COURT)  என்ற ஒன்றை 1781இல் நிறுவினர். இந்நீதி மன்றம் செவ்வாய்க் கிழமையும், சனிக்கிழமையும் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் பன்னிரண்டு மணி வரை செயல்பட்டது. இப்பகுதி மக்களின் பழக்கவழக்கம், மரபு ஆகியனவற்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் உரக்க வாசிக்கப்பட்டது. இதன் பின்னரே டேனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது (மரியலாசர் 2010:74). (ஆனால் இன்று)?

ஆங்கிலஆட்சி

மராத்தியரிடம் இருந்து 1799ஆம் ஆண்டில் ஆ.கி. கம்பெனி தஞ்சைப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றியது. தரங்கம்பாடியையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதாயம் கிட்டாத நிலையில் 1845ஆம் ஆண்டில் இப்பகுதியின் மீதான தம் உரிமையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் டேனிசியர் விற்றுவிட்டனர். இதன் பின்னர் இங்கு நிகழ்ந்த சமூக நிகழ்வுகள், உருவான ஆளுமைகள் குறித்துப் பேராசிரியர் மரியலாசர் (2010) தமது நூலில் பதிவு செய்துள்ளார். அவற்றுள் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மையமாகக் கொண்ட இரு செய்திகள் வருமாறு:

தரங்கம்பாடி அருகிலுள்ள பொறையரில் இயங்கி வரும் தவசிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் வீரப்பபிள்ளை (1906-1963) என்பவர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் 1922ஆம் ஆண்டில் கார் ஒன்றை, பொறையார் ராஜாபகதூர் நாடாரிடமிருந்து விலைக்கு வாங்கி அதனை வாடகை வண்டியாக இயக்கினார். அதன் உரிமையாளரும் ஓட்டுநரும் அவரேதான். இதன் தொடர்ச்சியாகப் பொறையாறு மயிலாடுதுறை இடையே எட்டணா கட்டணத்தில் (அய்ம்பது காசு) பேருந்துப் போக்கு வரத்தைத் தொடங்கினார். இதன் வளர்ச்சி நிலையாக கிட்டத்தட்ட அய்ம்பத்திநான்கு வழித்தடங்களில் அவரது ‘சக்தி விலாஸ்’ பேருந்துகள் இயங்கலாயின (மரியலாசர் 2010:12-15).

***

பொறையாறைச் சேர்ந்த இராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் (1865-1912) என்பவரது முயற்சியில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி இடையே 1926 இல் இரயில் போக்குவரத்து தொடங்கியது. இம்முயற்சியை மேற்கொண்ட இவர் 1912இலேயே இறந்து போனாலும் இப்பகுதி மக்கள் அவரை மறக்கவில்லை. இரயில் போக்குவரத்தின் தொடக்க நாளன்று அவரது படம் மாலையணிவிக்கப்பட்டு இரயில் எஞ்சினின் முகப்பில் இடம்பெற்றது. அவரது பணியை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூண் ஒன்றும் தரங்கம்பாடி பழைய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது (மேலது:27).

தரங்கம்பாடிக்கும் மயிலாடுதுறைக்கும் இடை யிலான இரயில் பயணநேரம் ஒன்றரைமணி நேரமாக இருந்தது. இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில், மாயவரம் டவுண் (மயிலாடுதுறை நகரம்) மன்னம் பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தில்லை யாடி, பொறையாறு என ஏழு இரயில் நிலையங்கள் இருந்தன.

தொடக்கத்தில் பயணிகளுக்காக ஆறு முறையும் சரக்குகளுக்காக நான்கு முறையும் இரயில்கள் இயங்கின. தரங்கம்பாடியில் இருந்து உப்பு, அரிசி, கருவாடு, மீன், குடிசைத்தொழிலில் உற்பத்தியான பொருட்கள் மயிலாடுதுறைக்குச் சென்றன. மயிலாடுதுறையில் இருந்து, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், இருசக்கர நான்குசக்கர வாகனங்களுக்கும், விவசாயத்தில் பயன்படும் நீர் இறைக்கும் எந்திரங்களுக்கான உதிரிப்பாகங்கள் ஆகியன தரங்கம்பாடிக்கு வந்தன.

படிப்படியாக இரயில் போக்குவரத்து குறைந்து 1986 ஆம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இது நிகழும் முன்னர், மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இரயில் முற்பகல் பதினொன்று மணிக்குத் தரங்கம்பாடி வந்து சேர்ந்து மாலை மூன்றரை மணியளவில் திரும்பிச் செல்லும். பொறையாறு இரயில் நிலையத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றவுடன் இரயில்நிலையம் இல்லாத ஒரு பகுதியில் நிற்கும். இரயில் ஓட்டுநர், கார்டு, பயணச்சீட்டுப் பரிசோதகர் ஆகியோர் இறங்கிச் சென்று இரயில் பாதையை அடுத்துள்ள முதலியார் சிற்றுண்டிச் சாலையில் தேநீர் பருகிவிட்டுச் செல்வர். இதன் பொருட்டுப் பத்து நிமிடங்கள் வரை இரயில் நிற்கும்! (மேலது 27-28).

சமுதாயம் குறித்த செய்திகள்

தரங்கம்பாடிப் பகுதியில் கிடைத்த பழைய ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, தொல்லியல் ஆய்வாளர், சி.இராமச்சந்திரன், ‘தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள்’ என்ற தலைப்பில் 2005ஆம் ஆண்டில் நூலாக வெளி யிட்டுள்ளார். இந்நூலில் 110 ஓலை ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. 1845ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதப் பட்ட ஓலைகள் டேனிசியர் ஆட்சிக் காலத்தையும் அதன் பின்னர் எழுதப்பட்டவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தையும் சேர்ந்தவை. இவ்வோலைகளின் உள்ளடக்கம் குறித்து,

‘இவை கடன்கொடுத்தல் வாங்குதல், பண்ணைக் கூலி ஒப்பந்தம், பொருட்களை விற்றல் வாங்குதல் போன்ற தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களாகும்.  அரசியல் வரலாற்று முதன்மையேதும் இவற்றில் இல்லை. ஆயினும் கி.பி.19ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த சமுதாய நடைமுறைகள், பத்திரப் பதிவு மொழிநடை, சொல் வழக்குகள் போன்ற வற்றை ஆய்வு செய்ய இவை பயன்படும்’.

என்று நூலின் முன்னுரையில் சி.இராமச்சந்திரன் (2005:5) குறிப்பிட்டுள்ளார். அவரது அவதானிப்பு முற்றிலும் சரியானது என்பதை இந்நூலைப் படிப்பவர் உணர்வர். இந்நூலில் இருந்து சில எடுத்துக்காட்டுகளை இனிக் காண்போம்.

எழுதப்படும் செய்தியின் அடிப்படையில் ஓலை ஆவணங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. செங்கல் சூளைக்காரருக்கும் அதை வாங்குவோருக்கும் இடையே நிகழும் ஒப்பந்தம் ‘செங்கல் ஒப்பந்தச் சீட்டு’ எனப் பட்டது. இந்நூலில் இரண்டு செங்கல் ஒப்பந்தச் சீட்டுகள் இடம்பெற்றுள்ளன (பக்கம் 24, 28). தாம் வழங்கும் செங்கல், ஓரத்தில் கறுப்பு இல்லாமலும், விரிசல் இல்லாமலும் ஈரம் இல்லாமலும் இருக்குமென்று செங்கல் சூளைக்காரர் உறுதிமொழி அளித்துள்ளார்.

தம்மையும் தம் குடும்பத்தையும், நிலக்கிழாரிடம் ஒத்தியாக வைத்துக் கொண்டு பெறும் கடனுக்காக, எழுதிக் கொடுக்கும் சீட்டு ஆள் ஒத்திக் கடன் சீட்டு எனப்பட்டது. 1871ஆம் ஆண்டில் சின்ன சாம்பான் மகன் காத்தான் என்பவர், காட்டுச்சேரி திருமுடிச் செட்டியாரிடம் அய்ந்து ரூபாயும் தொண்ணூறு கலம் நெல்லும் பெற்றுக் கொண்டு ஆள் ஒத்திக் கடன் சீட்டு எழுதிக் கொடுத் துள்ளார். (மேலது 59).

சாத்தாங்குடியைச் சேர்ந்த அப்பாசாமி செட்டி யாருக்குப் பள்ளபாலன் என்பவர் 1858இல் ஆறு ரூபாய் பெற்றுக் கொண்டு, தானும் தன் மனைவியும் பண்ணை ஆள் ஆகப் பணிபுரிவதாக ஒப்புக் கொண்டு பண்ணை ஆள் ஒத்திச் சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார் (மேலது 63).

சாத்தங்குடி மாணிக்கம் என்பவர் தன் திருமணச் செலவிற்காகப் பதினைந்து ரூபாயும் இரண்டுகலன் நெல்லும் பெற்றுக் கொண்டு, நெல்லின் கிரையத் தொகை மூன்று ரூபாய் என்று நிர்ணயித்து, மொத்தம் பதினெட்டு ரூபாய்க்குத் தன்னையும் தன் மனைவியையும் ஒத்தியாக வைத்து, பண்ணை ஆள் ஒத்திச் சீட்டை எழுதிக் கொடுத்துள்ளார். இதில் பிணையாளியாக அவரது தகப்பனாரும் குறிப்பிடப்பட்டுள்ளார் (மேலது 70-71).

மேய்ச்சலுக்காகக் கால்நடைகளைப் பெற்றுக் கொள்வோர் ‘உடன்படிக்கை’ எழுதிக்கொடுத்தே அவற்றைப் பெற்றுள்ளனர் (மேலது 78) குத்தகையாக நிலத்தைப் பெறுவோர் குத்தகைச் சீட்டு எழுதிக் கொடுத்துள்ளனர் (மேலது 79).

துடராச்சீட்டு (தொடராச்சீட்டு) என்ற பெயரில் 1836ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சீட்டு ஒன்றும் இந் நூலில் இடம்பெற்றுள்ளது. காட்டுச்சேரி ராமனாதன் செட்டி என்பவர், திருக்காளாச்சேரி முட்டை முழுங்கி பேத்தியான ஈசுவர அம்முனி என்பவளை வைப்பாட்டி யாக வைத்திருந்தார். இருவருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டுப் பிரியும்போது அப்பெண் எழுதிக் கொடுத்த சீட்டு வருமாறு:

....எழுதிக் கொடுத்த துடராச் சீட்டு என்ன வென்றால் நான் தம்மிடத்தில் சில நாள் வைப் பாட்டியாய் இருந்தபடியாலே, இப்ப எனக்கும் தமக்கும் ஒத்துக்கொள்ளாததாலே, என் மனறாசி யாகி சாட்சிகள் முன்னுக்கு நான் தீத்து ரொக்கம் வாங்கிக் கொண்டது கும்பினி ரூபாய் பதினைந்தும் சேலை விலைக்கு ரூ இரண்டும் ஆக ரூபாய் பதினேழு ரொக்கம் பத்திக் கொண்டு நான் விலகிப் போற படியினாலே, இனிமேல் தமக்கும், யெனக்கும் யாதொரு வியாச்சியமும் இல்லை யென்றுயிந்த துடராச் சீட்டில் சாட்சிகள் முன்னுக்கு என் மனராசியாக யென் கையப்பம் வைத்துக் கொடுத்தேன் (மேலது: 84).

***

தஞ்சை நாயக்கர் ஆட்சியில் நாயக்க மன்னரது உறவினர்களும் நெருக்கமானவர்களும் பாளையக்காரர் களாக நியமிக்கப்பட்டனர். இவர்களும் இவர்களது படை வீரர்களும் குடிகாரர்களாகவும் பெண்பித்தர் களாகவும் இருந்தனர். தரங்கம்பாடிப் பகுதியில் இவர்கள் மேற்கொண்ட இழி செயல்களை, ராமசாமி என்ற மெய்கண்டான் என்பவர் 1995ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் இடம் பெற்ற செய்தியை மரியலாசர் (2010:72-73) தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் பெண் குழந்தைகள் முதற் பூப் படைந்தவுடன், தம் வீரர்களை அனுப்பி வலுக்கட்டாய மாகத் தூக்கி வரும்படி பாளையக்காரர்கள் கட்டளை இடுவர். அவ்வாறு கவர்ந்து வரப்பட்ட சிறுமிகள் அவராலும் அவரைச் சார்ந்தவர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாவர். பின்னர் அச்சிறுமிகளைக் கொன்று விடுவர் அல்லது டச்சுநாட்டு வணிகர்களுக்கு அடிமை யாக விற்று விடுவர்.

இத்தகைய கொடுமையில் இருந்து தம் பெண் குழந்தைகளை விடுவித்துக்கொள்ள இயலாத நிலையில் கௌரவக் கொலையை மக்கள் மேற்கொண்டனர். தம் வீட்டில் சிறுமியருத்தி பூப்பெய்தியவுடன், தம் வீட்டிற்குள் குழி ஒன்றைத் தோண்டுவர். அக்குழிக்குள் எண்ணெய் விளக்கொன்றை வைத்து அதை ஏற்றி வைக்கும்படி அச்சிறுமியிடம் கூறுவர். அச்சிறுமி குழிக்குள் இறங்கி அவ்விளக்கை ஏற்றும்போது குழிக்குள் மண்ணைத் தள்ளி உயிருடன் புதைத்து விடுவர்.

பிறகு சேலையன்றில் பூக்களைக் கொட்டி பொட்டலமாகக் கட்டுவர். அச்சிறுமியைப் புதைத்த இடத்திற்கு மேல் அப்பொட்டலத்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிடுவர்.

இதனையடுத்து எண்ணெய் விளக்குகளை ஏற்றிக் கற்பூரம் கொளுத்துவர். தாம்பாளம் ஒன்றில் பழங்கள், மலர்கள், தேங்காய், சந்தனம், குங்குமம், சாம்பிராணி ஆகியனவற்றை வைப்பர். அச்சிறுமியை உயிருடன் புதைத்த இடத்தில் அத்தாம்பாளத்தை வைத்து தெய்வமாக அச்சிறுமியை வழிபடுவர்.

இதன்பின் நாள்தோறும் மாலை நேரத்தில் அந்த இடத்தில் விளக்கேற்றுவர். அச்சிறுமி இறந்த நாளை ஆரவாரத்துடன் பக்தி உணர்வு மேலோங்க வழிபடுவர். அச்சிறுமியைக் குறித்துப் பாளையக்காரரின் படைவீரர்கள் விசாரித்தால், அம்மைநோயால் அச்சிறுமி இறந்து போனதாகக் கூறிவிடுவர்.

இவ்வாறு பெற்றோரால் கௌரவக் கொலை செய்யப்பட்ட சிறுமிகளைப் பூவாடைக்காரி என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். 1620இல் டேனியர் களின் கட்டுப்பாட்டில் இப்பகுதி வந்தபின் பூவாடைக் காரி உருவாவது நின்றுபோனது.

கிறித்தவத்தின் நுழைவாயில்

தரங்கம்பாடியின் வரலாற்றில், கிறித்தவம் குறிப்பாக, சீர்திருத்தக் கிறித்தவம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இங்கே அறிமுகமான சீர்திருத்தக் கிறித்தவம் பின்னர் தமிழ்நாட்டின் ஏனைய பகுதி களுக்குப் பரவியது. இதனால் ‘கிறித்தவத்தின் நுழை வாயில்’ என்று தரங்கம்பாடியை அழைப்பர். இது தொடர்பான செய்திகளை இனிவரும் இதழ்களில் காண்போம்.

தொடரும்...

Pin It