தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத்தொகைப் பாக்களை இயற்றிய புலவர்களின் பெயர்களின் அடிப்படையில் பழந்தமிழகத்தின் சில சமூக, வரலாற்றுக் கூறுகள் இங்கு அணுகப்படுகின்றன.  கணிசமான எண்ணிக்கையிலான புலவர்களின் பெயர்கள் அவர்கள் இயற்றிய பாடல்களிலுள்ள சில சொற்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.  அவை பெரும்பாலும் உதிரிப்பாடல்கள். இவர்கள் ஒரு, இருபாக்களை இயற்றியவர்.  என்றால், தொடக்கத்தில் பெயர் குறிக்கப் படாமல் பாடல் இயற்றும் முறை வழக்கில் இருந்து வந்ததா?

அப்படியென்றால், இவ்வகைப் பாடல்களைக் காலத்தால் முந்தியவை எனலாமா? அப்பெயர்கள் ஒரு சொற்கூறு, இருசொற் கூறுகளைக் கொண்டுள்ளன.  பொருள் பொதிந்த ஒரு phoneme மட்டும் கொண்ட ஒரு சொற்புலவர் பெயர்கள் இல்லை.  ஆர் என்ற விகுதி பின்னாட்களில் இணைக்கப்பட்டது.  சில புலவர்களின் பெயர்கள் இ, உ, ஒ என்ற விகுதியுடன் அமைந்துள்ளன. 

ஊர்ப்பெயரின் முன்னொட்டோடு பல புலவர்கள் இருந்துள்ளனர். 38 புலவர்கள் மதுரையினை ஊராகக் கொண்டுள்ளனர்.  மதுரையினை முன்னொட்டாகக் கொண்டு ஒரு கூறு பெயருடைய அய்வர் இருந்துள்ளனர்.  காட்டு: மதுரை வேளாசான், மதுரைக் கண்ணன்.  மதுரை + பெரு மருதன் என்ற இருகூறு பெயருடைய புலவரும் இருந் துள்ளார்.   பெரு, இள, என்ற பெயரடைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மதுரை பெருமருதன் என்ற பெயர் அப்புலவரின் சிறப்பினை உணர்த்தும். 

அதே வேளை மதுரை பெருமருதனிளநாகன் என்ற பெயர் பெரு, இள என்ற இரு எதிரெதிரான பெயரடைகளைப் பெற்றுச் சிறப்புறுகிறது.  இதனை மதுரையின் பெரு மருதனின் மகன் இளநாகன் என்று கொள்ளலாம்.  அதே போன்று மதுரை பூதனிளநாகன் என்ற பெயரினை மதுரைப் பூதனின் மகன் இளநாகன் என்று கொள்ளலாம்.  ஆனால், மதுரை பெருங்கொல்லன் என்பதில் மதுரையில் உள்ள புகழ்மிக்க கொல்லன் அல்லது கொல்லர் குழுவின் தலைவன் (guild chief) என்று கருதவேண்டியுள்ளது.  மதுரை கொல்லன்புல்லன், மதுரைக்கொல்லன் வெண்ணாகன், போன்றோரும் தலைவர்களாக இருந்திருக்கக்கூடும்.  மதுரைக் கூத்தன், மதுரைத் தமிழ்க்கூத்தன், என்பதில் தொழில் பெயரே தன் பெயராக அமைந்துள்ளன. 

இதனைக் கூத்திற்குத் தரப் பட்ட முக்கியத்துவம் என்று கருதவேண்டியுள்ளது.   மதுரைக் கூத்தன் நாகந்தேவன் என்பதில் கூத்திற்கும், கூத்து நிகழ்த்துபவர்க்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  இவ்விரு கூற்றுகளின் அடிப்படையில் கூத்தின் பெயரினைத் தன்பெயராகக் கொண்டவரின் பாடலைக் காலத்தால் முந்தியது என்றும் கூத்தின் பெயரோடு தன்பெயரினையும் கொண்டவரின் பாடல் காலத்தால் பிந்தியது என்றும் கொள்ளலாம். 

மதுரை கள்ளிற்கடையத்தார் வெண்ணாகன், மதுரை ஓலைக்கடையத்தார் கன்னம்புகுந்தாராயத்தன் போன்றோரின் பாடல் ஒருதலைமுறை முந்தியது என்றும் மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன் என்பவரின் பாடல் ஒருதலைமுறை காலத்தால் பிந்தியது என்றும் கொள்ளலாம்.  மகன் என்ற சொற்கூறினைக் கொண்ட பெயர்கள் பொது வாக காலத்தால் பிந்தியதாக இருக்க வாய்ப்புள்ளது.  இந்த மகன்கள் பெரும்பாலும் கிழார்களின் புதல்வர்களாக இருந்துள்ளனர்.  எ.கா. மதுரை மருதங்கிழான் மகன் இளம்போத்தன். 

மலையன், மள்ளன் போன்ற பெயர்கள் இனக்குழுப் பெயர்களாகலாம். காமக்கணி நப்பாலத்தனார் என்ற பெயரில் மதுரையில் இருவரும், மாறோகத்தில் ஒருவரும் இருந்துள்ளனர். 

காவிரிபுகும் பட்டினம் என்ற பெயரினை முன்னொட்டாகப் பெற்று அய்ந்து புலவர்கள் இருந்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் பொன்வணிகராவார்.  கச்சிப்பேடு, கச்சிபேற்றிலிருந்து மூன்று புலவர் பாக்கள் இயற்றியுள்ளனர்.   அவரில் ஒருவர் பெருந்தச்சர்; ரிதொருவர் இளந்தச்சர்.  

அஞ்சில், அரிசில், ஆடுதுறை, ஆர்க்காடு, ஆலங்குடி போன்ற ஊர்ப்பெயர்களை ஏற்றுவந்த புலவர்களும் உண்டு.  இவற்றில் இல் (அரிசில்), காடு (ஆர்க்காடு), துறை (ஆடுதுறை), தலை (இரும்பிடத்தலை) என்ற பின்னொட்டுகளுடன் முடியும் ஊர்ப்பெயர்கள் அவ் விடங்கள் அமைந்துள்ள topography யையோ ecology யையோ சிறப்பாகச் சுட்டுவன எனலாம்.  குடி என்ற பின்னொட்டுடன் முடியும் ஊர் சமூகப்படி நிலையில் இரண்டாம் நிலையில் உள்ள மக்களைச் சுட்டுகிறது எனலாம். 

ஊர்ப்பெயரினால் 40 புலவர்கள் சுட்டப்பட்டுள்ளனர்.  அவை: அல்லூர், ஆலந்தூர், ஆவூர், நல்லூர், குன்றூர், பெருங்குன்றூர், இருந்தையூர், இளம்புல்லூர், உமட்டூர், உவர்க்கண்ணூர், உறையூர், ஐயூர், ஒக்கூர், ஒல்லையூர், கடம்பனூர், கடலூர், கடியலூர், கயத்தூர், கருவூர், காட்டூர், குமட்டூர், குறுங்கோழியூர், கூடலூர், கோட்டியூர், கோவூர், கோளியூர், ஆயலூர், செல்லூர், துறையூர், நல்லாவூர், நல்லூர், நன்பணூர், கம்பூர், புல்லாற்றூர், மருங்கூர், மாடலூர், முள்ளயூர், விரிச்சியூர், விரியூர், முரஞ்சியூர்.   இடைக்காலத்து தமிழர் வரலாற்றில் ஊர் என்ற வாழிடங்கள் நிலவுடைமையாளர்களின் இருப்பிடம் என்பது அறியப்பட்ட ஒன்று.

இவை நிலவளமும், நீர் வளமும் கொண்ட வேளாண் உற்பத்தி ஊர்களாகும். புலவர்களை உற்பத்தி செய்த இவ்வூர்களைத் தமிழகத்தின் அக்காலத்திய உற்பத்தி அலகுகள் எனலாம்.  அழுத்த மான அச்சில் காட்டப்பட்டுள்ள பெயர்களில் இன்றும் ஊர்கள் அமைந்துள்ளன.  இவை தமிழக வரலாற்றின் அறுபடாத தொடர்ச்சியினைக் காட்டும்.

இல் என்ற பின்னொட்டுடன் சில ஊர்ப்பெயர்கள் இருந்துள்ளன.  அவற்றின் பெயரால் சில புலவர்களும் சுட்டப்பட்டுள்ளனர்.  அவை: அரிசில், கிடங்கில், பொதும்பில், பொருந்தில்.  இல் என்று முடியும் இவ்வூர்ப் பெயர்கள் ஒருவகையான சமூகக் கட்டமைப்பினைக் குறிக் கிறதோ என்று கருதவேண்டியுள்ளது; ஊர் இருக்கை களின் ஒருவகையோ என்றும் கருதவேண்டியுள்ளது.

இடைக்காலத் தமிழக வரலாற்றில் குடி என்ற ஊரமைப்பு பெரும்பாலும் உழுகுடிகள் வாழும் இடங் களாகும்.  இவ்வூர்கள் நிலவுடைமையாளர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோர் வசிக்கும் ஊர் இருக்கைகள் எனலாம்.  வெள்ளாக்குடி, சிறைக்குடி, குறுங்குடி, கள்ளிக்குடி, உகாய்க்குடி, இறங்குடி, ஆலங்குடி போன்ற ஊர்களை இவ்வாறு கருதவேண்டியுள்ளது. 

கள்ளிக்குடி என்பதனை கள்ளர் இனக்குழுச்சமூகம் வாழ்ந்த இடமாகக் கருத வாய்ப்புள்ளது.  கள்ளர் இனச்சமூகம் வாழ்ந்த பகுதி களைக் குறிக்க கள்ளப்பால் என்ற சொல் பிற்காலத்திய கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளன.  சிறைக்குடி என் பதனை நீர்நிலைகளையும், அணைக்கட்டுகளையும் காக்கும் குழுவினைச் சுட்டும் எனலாம். சிறை என்ற சொல் நீர்த்தேக்கத்தினைக் குறிக்கும். சிறைகாத்த அய்யனார் என்றொரு ஊர்க்கடவுள் தமிழகத்தில் உண்டு.

மங்கலம் என்ற முன்னொட்டினை ஏற்று இரு புலவர்கள் பாடல் இயற்றியுள்ளனர்.  அவர்: கிள்ளிமங்கலங் கிழார், கிள்ளிமங்கலங்கிழார் சேரகோவணார். கொடி மங்கலம் என்ற முன்னொட்டினைப் பெற்று ஒருவர் பாடல் இயற்றியுள்ளார். மங்கலம் என்பது பிராமணர் குடியிருப்பு என்பது அறிந்த ஒன்றே. 

கபிலர், பரணர் போன்ற பெயர்கள் எவ்வித சமூக முக்கியத்துவத்தினையும் வெளிப்படுத்தவில்லை; அவர்களின் பாடல்கள் அவற்றினை வெளிப்படுத்தலாம்.  வெண் என்ற முன்னொட்டினைப் பெற்ற புலவர் பெயர்கள் சமூகம் தொடர்பான சில குறிப்புகளைத் தரலாம். 

வெண் என்ற சொல்லின் மாற்றான வெள் வேறு மாதிரியான பொருளைத் தரக்கூடும். வெண்கண்ணன், வெண் கொற்றன், வெண்பூதன், வெண்பூதியார் போன்ற புலவர்களோடு வெள்ளைமனார் என்ற புலவரையும் ஒப்பிட வேண்டும்.  வெண்பூதி, வெண்மணி என்ற புலவர் பெயர்களை முள்ளியூர்ப்பூதி என்ற புலவர் பெயருடன் பொருத்திப் பார்த்தால் வெண் என்பதும் வெண்மணி என்பதும் ஊர்ப்பெயரினைச் சுட்டும் எனலாம். 

ஆலி, அதிமந்தி உறையன், கயமன், பதுமன் போன்ற பெயர்களில் இருந்து சமூகக்குறிப்புகளைப் பெறமுடியவில்லை; பேயனார், உருத்திரனார், இறை யனார், சாத்தனார், போன்ற பெயர்கள் சமய நம்பிக் கைகளை வெளிப்படுத்துகின்றன.  அவற்றுடனான நல் என்ற முன்னொட்டு சமய நம்பிக்கையின் வலுத்தன்மையினை வெளிப்படுத்தும். 

குறமகள் இளவெயினி, கடுவன் இளவெயினி கடுவன் மள்ளன், போன்ற பெயர்கள் அவர்களின் சமூக அந்தஸ்தினைச் சுட்டுவதாகக் கருதலாம்.  கடுவன் என்ற முன்னொட்டினைப் பெற்ற புலவர்கள் அவர்களின் குலக்குறி விலங்கின் பெயரால் (ஆண் பன்றியோ, ஆண் குரங்கோ) சுட்டப்பட்டனர் எனலாம்.  பெண்விலங்குகள், பெண்பறவைகள் குலக்குறிகளாகத் தெரிவு செய்யப்பட வில்லை. 

கண்ணன், பெருங்கண்ணன் போன்ற பெயர்கள் பின்னாட்களில் சுட்டப்படுகிற பெருமாள், பெத்தபெருமாள் என்ற கடவுளர்களோடு ஏன் ஒப்பிடப்படக்கூடாது? பல் கண்ணன் என்ற பெயர் ஆயிரம் கண்களைப் பெற்ற இந்திரனை ஏன் சுட்டக்கூடாது எனலாம். 

இள, பெரு, கடு, நல் போன்ற அடைகள் பல பெயர் களோடு முன்னொட்டுகளாக விளங்கி வந்துள்ளன. இவற்றுடன் இளம்பூதன், இளநாகன், இளந்தேவன், இளந்தச்சன் போன்ற பெயர்களைச் சமூகக்கூறுகளுக்குள் இணைத்துக் காணவேண்டும்.  மதுரை இளங்கௌசிகன் என்பதற்கும், மதுரை இளங்கண்ணிகௌசிகன் என்பதற்கு மான வேறுபாட்டினைக் காணவேண்டும். 

கௌசிகன் என்பதனை கோத்திரம் என்று கருதினால், இளங்கண்ணி என்பதனை அக்கோத்திரத்தின் ஒருகிளை என்றுகருத இடமளிக்கிறது.  போத்தன், இளம்போத்தன் என்பதனையும் இவ்வாறு கருதலாம்.  எருமை வெளியன், எருமை இள வெயினி என்ற பெயர்கள் மந்தைப் பொருளியலோடு தொடர்புடையன எனலாம்.  இளவெயினி என்பதனை மந்தைக் கூட்டத்தின்  இளந்தலைமுறையினர் எனலாம்.

அறிவுசார் கருப்பொருளைத் தாங்கிய புலவர், ஆசிரியர், கல்வி, மேதாவி என்ற பெயர்களில் சில புலவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். அடை நெடுங்கல்வியார், இருந்தையூர்க் கொற்றன் புலவன், உழுதினைம்புலவர் போன்ற பெயர்கள் இவ்வாறு அமைந்துள்ளன.  சில புலவர்கள் தம் ஊர்ப்பெயரினை முன்னொட்டாகப் பெற்றுள்ளனர்.  மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன், மதுரை பாலாசிரியன் சேந்தன் கொற்றன், மதுரை இளம் பாலாசிரியன் சேந்தன் கூத்தன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். 

கணியன் பூங்குன்றன், மதுரைக் கணக் காயன் போன்ற பெயர்கள் கணிதக்கல்வியோடு தொடர் புடையன என்பதனை உணர்த்தும். கல்வியோடும், நீதி யோடும், அறிவோடும் தொடர்புடைய காவிதி என்ற பெயரில் சில புலவர்கள் இருந்துள்ளனர்.  இளம் புல்லூர்க் காவிதி என்ற புலவர் இளம்புல்லூர் என்ற ஊருக்கான நீதியரசராக இருந்திருக்கக்கூடும் எனலாம்.  கிடங்கில் குலபதி நக்கனார் என்ற பெயரில் ஒரு புலவர் பாடல் இயற்றியுள்ளார்.  குலபதி ஆசிரியரைச் சுட்டும் சொல்.

கிழாரும் மகன்களும்

புலவர் பெயர்களை ஒருசொற்பெயர்கள், இரு சொற் பெயர்கள், பலசொற்பெயர்கள் என்று பகுக்கலாம்.  ஊரின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் புலவர்கள் அறியப்பட்டுள்ளனர். சிலர் தந்தையின் பெயரினை முன்னொட்டாகப் பெற்றுள்ளனர்.

கிழார் என்னும் தமிழ்ச்சொல் நிலவுடைமையாளரையும், கூட்டத்தலைவரையும் சுட்டும். செல்வவளம் பெற்ற இக் கிழார்கள் பாக்கள் இயற்றியுள்ளனர்.  ஆனால், அவர்கள் அவர்களின் ஊரின் பெயரிலேயே அறியப்பட்டுள்ளனர்.  இவற்றுள் குன்றூர், பெருங்குன்றூர், இடைக்குன்றூர், நெய்தற்காய் துய்த்த ஆவூர் போன்ற பெயர்கள் இடைக் காலத் தமிழகத்தின் சில புவியியல் கூறுகளை வெளிப் படுத்துகின்றன எனலாம். 

கிழார்களும், கிழார்களின் மகன்களும் புலவர்களாக அமைந்திருந்தது தொடர்ந்து இருதலைமுறைகளாகப் புலவர் பரம்பரை அதாவது மேட்டுக்குடிக் குடும்பத்தினர் கல்வி பயின்றனர் என்பதனைக் காட்டும்.  இக்கிழார்களும், மகன்களும் பெரும்பாலும் மதுரையினை ஊராகக் கொண்டுள்ளனர்.  சிலர் குமரன் என்ற பெயரில் சுட்டப் பட்டுள்ளனர்.  இது மகன் என்பதன் நேரிடையான சமஸ்க்ருதச் சொல்.

பின்னிணைப்பு

பின்னிணைப்பு 1

மகன்

அண்டர்மகன் குறுவழுதியார், ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார், ஆவூர்கிழார் மகனார் கண்ணனார், உமட்டுர்கிழார் மகனார் பரங் கொற்றனார், எருமை வெளியனார் மகனார் கடலனார், காட்டுர்கிழார் மகனார் கண்ணனார், கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சேரகோவணார், காவிரிபுகும் பட்டினத்து பொன்வணிகனார் மகனார் நப்பூதனார், கோழியூர்கிழார் மகனார் செழியனார், செயலூர்கிழார் மகனார் பெரும் பூதங்கொற்றனார், நாமலார் மகன் இளங்கண்ணன், பொதும்பில்கிழார் மகனார் வெண்கண்ணியார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மதுரை கடையத் தார் மகன் வெண்ணாகனார்.  மதுரை மருதங்கிழார் மகன் சொகுத்தனார், மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார், மதுரை மருதங்கிழார் மகன் இளப் போத்தன்.

பின்னிணைப்பு 2

குமரன்

வேம்பற்றூர்க் குமரன், வண்ணக்கன் சோருமருங் குமரன், சல்லியங்குமரன், கற்றங்குமரன், எழூஉப்பன்றி நாகன்குமரன், உறையூர் சல்லியங்குமரன் (இதில் சல்லியன் என்ற பெயர் மகாபாரதத்தில் ஒரு பாத்திரத்தினை நினை வூட்டும்)

பின்னிணைப்பு 3

கிழார்

அரிசில் கிழார், ஆலத்தூர் கிழார், ஆவூர் மூலங் கிழார், உகாய்க்குடி கிழார், ஐய்யூர் மூலங்கிழார், கயத்தூர் காரிகிழார், குறுங்கோழியூர் கிழார், கூடலூர் கிழார், கோவூர்கிழார், செல்லூர் கிழார், நல்லாவூர்க் கிழார், நொச்சி நியமங்கிழார், புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார், பெருங்குன்றூர் கிழார், பொதும்பில் கிழார், மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார், மாடலூர் கிழார், கிள்ளிமங்கலங்கிழார்.

இக்கட்டுரை எழுதுவதற்கான தரவுகளான செம் மொழிப் புலவர்பெயர்களின் அட்டவணையினைத் தந்து உதவிய முனைவர் ந.இராணி அவர்களுக்கு நன்றி சொல்வது கடப்பாடாகும்.

Pin It