தோழர் என்.குணசேகரனின் கட்டுரையை முன்வைத்து...

திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 85ஆவது அமைப்பு தின விழாக் கருத்தரங்கில் “கிராமப்புற இந்தியாவும் கம்யூனிஸ்டுகளும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அந்த உரையின் எழுத்து வடிவத்தை “உங்கள் நூலகம்” பத்திரிகையின் ஜனவரி 2011 இதழ் (கீற்று இணையதளம், ஜனவரி 2011) வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையின் முதல் பகுதியில் மார்க்சியத்தின் தோற்றம், அதன் வரலாறு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவை குறித்துச் சுருக்கமாகப் பேசிவிட்டு, பிற்பகுதியில் திராவிட இயக்கம், தலித் இயக்கம் ஆகியவற்றோடு கம்யூனிஸ்டுகளின் உறவுகள் குறித்த சில மதிப்பீடுகளை வழங்கியிருந்தேன்.

மேற்குறித்த கட்டுரைக்கு எதிர்வினையாக, தோழர் என்.குணசேகரன் “புத்தகம் பேசுது” பத்திரி கையின் ஏப்ரல் 2011 இதழில் “வர்க்க அரசியலில் அடையாள அரசியலின் தளம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எனது கட்டுரைக்கு எதிர்வினை என்ற போதிலும் ஆரோக்கியமான ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதாகவே தோழர் என்.குணசேகரனின் கட்டுரை காட்சியளிக்கிறது. வர்க்க அரசியலுக்கும் அடையாளஅரசியலுக்கும் இடையிலான உறவுகளை மார்க்சிய நிலைப்பாடு களிலிருந்து புரிந்துகொள்வதற்கான முயற்சியாகவே அவரது கட்டுரையைக் கொள்ள வேண்டும்.

people_321இருப்பினும் சில புள்ளிகளில் கட்டுரையாளர் சில ஆட்சேபணைகளையும் தெரிவித்துள்ளார். அவர் எழுப்பியுள்ள ஆட்சேபணைகள் கம்யூனிஸ்டு இயக்கத்தாருக்கு முக்கியமானவை என நாம் கருதுவதால், இக்கட்டுரையில் அந்த விவாதத்தைத் தொடர்கிறோம்.

* * *

எனது கட்டுரையின் இறுதிப் பகுதியில் “அடை யாள அரசியலை நாம் புறக்கணிக்க முடியாது. தமிழ் அடையாளத்தை மேலிருந்தும் கட்டலாம். கீழிருந்தும் கட்டலாம். கம்யூனிஸ்டுகளும் அம்பேத் கரியர்களும் மிகவும் உணர்வுபூர்வமாகத் தமிழ் அடையாளத்தைக் கீழிருந்து கட்டி எழுப்ப வேண்டும்” என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த வரிகளை எடுத்துக்காட்டும் குணசேகரன் “(இது) ஒரு சர்ச்சைக் குரிய கருத்து. வர்க்க அரசியலுக்கும் அடையாள அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்த தெளிவு தேவைப்படுகிறது” என்று கூறுகிறார்.

தொடர்ந்து எழுதும் போது “அடையாள அரசியல் ஒரு குறுகிய சமூகத்தளம் சார்ந்தது. அந்தத் தளத்தில் மட்டும் காலூன்றி நின்றால் வர்க்க அரசியல் தளத்திற்குச் செல்ல முடியாது... வர்க்க வேலைத்திட்டம் இன்றி அடையாள அரசியலைக் கீழ்மட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மேற்கொள்வது கம்யூனிஸ்டு இயக்கத்தைப் பலப்படுத்த உதவாது” என்று கூறுகிறார்.

தோழர் குணசேகரன் இங்குச் சிறிது அவசரப் பட்டிருக்கிறார் எனக் கருதுகிறேன். அல்லது அவரே எடுத்துக்காட்டியுள்ள எனது வரிகளில் தெளிவின்மை தென்பட்டிருக்கலாம். எனவே அவற்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். “தமிழ் அடையாளத்தை மேல் இருந்தும் கட்டலாம், கீழிருந்தும் கட்டலாம்” என்று நான் கூறியிருப்பது வர்க்க அரசியலின் நோக்கிலிருந்துதான். 19-20 ஆம் நூற்றாண்டுகளின் சூழல்களில் தமிழ் அடையாளம் உழைக்கும் வர்க்கத்தின் நோக்கிலிருந்து கட்டியெழுப்பப்படாமல், நிலஉடைமைத் தன்மை கொண்ட வேளாளர் மற்றும் புதிய மத்தியதர வர்க்க நோக்கில் தான் இங்கு உருவாக்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அது முதலாளியத்தன்மை கொண்ட தமிழ் தேசியமாகவும் பரிணமித்துள்ளது. ஆயின் அடையாள அரசியலை உழைக்கும் மக்களின் நோக்கிலிருந்து கட்டியெழுப்புவது கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டமாக அமைய வேண்டும். இதையே எனது கட்டுரையில் மேலிருந்து / கீழிருந்து என்ற சொற்களின் மூலம் குறித்தேன்.

எனது கட்டுரையில் “திராவிட இயக்கம்” என்ற உபதலைப்பில் ஐந்தாவது பாராவில் இதே விஷயத்தை விரிவாகப் பேசியுள்ளேன். “ஒவ்வொரு தேசியத்தின் வரலாற்றினுள்ளும் அதன் முதலாளிகள் தோன்று கிறார்கள் என்ற வரலாறு அடங்கியுள்ளது. படிப் படியாகத் திராவிடக் கட்சிகளின் கொள்கை மற்றும் நடைமுறையின் ஊடாக முதலாளி வர்க்கத் தமிழ் தேசிய உருவாக்கம் நிகழ்ந்தேறியது. அதாவது அடையாள அரசியலைக் கீழ்நோக்கி நகர்த்தத் தவறினால் அது மேட்டிமைச் சக்திகளால் கைப் பற்றப்பட்டுவிடும் என்ற பாடம் கிடைக்கிறது.” இந்த வரிகளிலும் நான் கீழ் நோக்கி / மேட்டிமைச் சக்திகள் என்ற சொற்களின் மூலம் அடையாள அரசியலை வர்க்க நோக்கில் அணுக வேண்டும் என்பதையே முதன்மைப்படுத்திப் பேசியுள்ளேன். போதாத குறைக்கு, திராவிட இயக்கத்தின் தமிழ் அடையாள அரசியலில் முதலாளி வர்க்கம் முன் கையெடுத்துள்ளது என்பதை வெளிப்படையாகவே எழுதியுள்ளேன். பின் எதற்காக, தோழர் குணசேகரன் “வர்க்க வேலைத் திட்டம் இன்றி... அடையாளத் தளத்தில் மட்டும் காலூன்றி நின்று...” என்ற குற்றச் சாட்டுகளை விட்டெறிந்திருக்கிறார் என்பது புரிய வில்லை.

இன்னும் கூடுதலாக, “தோழர்கள் சிங்கார வேலரும் ஜீவாவும் அடையாள இயக்கங்களைப் புறக்கணிக்காத நோக்கையும் போக்கையும் கொண்டு இருந்தனர். அவற்றோடு நெருக்கமான உரையாடல் களையும் அவற்றை இடதுபுறம் திருப்பும் அணுகு முறையையும் கொண்டிருந்தனர். அடையாள இயக்கத்தைக் கீழ்நோக்கி நகர்த்துவதற்கான நாட்டுப் புறப் பண்பாட்டுத் தளத்தை பேராசிரியர் நா.வான மாமலை வழங்கினார். கீழிருந்து தமிழ் அடையாளம் என்பதில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. நிலம், சுற்றுச்சூழல், நீர் ஆதாரங்கள், நாட்டுப்புற மக்கட் பண்பாடு, போர்க்குணம் சார்ந்த தமிழ் அடையாளம் கட்டி எழுப்பப்பட வேண்டும்” என்று எனது கட்டுரை சொல்லிச் செல்லுகிறது. இங்கு நான் எடுத்துக்காட்டும் வரிகள் எல்லாமே தமிழ் அடையாளம் வர்க்க அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். அது உழைக்கும் மக்களின் நோக்கில் இருந்து கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகச் சொல்லப்பட்டவையே. எனது கட்டுரை “வர்க்க வேலைத்திட்டம் இன்றி... அடையாளத்தளத்தில் மட்டும் காலூன்றி நின்று...” எங்கே பேசுகிறது என்பதைத் தோழர் குணசேரகன் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

“வர்க்க அரசியல் அல்லாத அடையாள அரசியல் என்ற வேலைத்திட்டத்தை திராவிட இயக்கம் உருவாக்கியது” என்று என் கட்டுரையின் ஒரு பகுதி தொடங்குகிறது. ஆனால் இடதுசாரிகளைப் பொறுத்தமட்டில், வர்க்கத் தன்மை கொண்ட அடையாள அரசியலே நமது திட்டமாக இருக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் இதனை எப்படிச் சாதிப்பது?

* * *

தனது கட்டுரையில் தோழர் குணசேகரன் மாவோவின் மிகவும் முக்கியமான “முரண்பாடுகள் பற்றிய” கட்டுரையை நினைவுக்குக் கொண்டு வருகிறார். “மாவோவின் முரண்பாடுகள் வரை யறுப்பில் அடிப்படை முரண்பாடு, மற்ற முரண் பாடுகளின் இயக்கத்தை நிர்ணயிப்பதாக இருக்கிறது. திராவிட இயக்கத்தின் வேலைத்திட்டத்தில் உழைப்புச் சுரண்டல் நிகழும் பொருளாதாரத்தளம் என்ற அடிப்படை முரண்பாடு விடுபடுகிறது... எது எல்லா வற்றுக்கும் அடிப்படை முரண்பாடோ, அது உரிய கவனம் செலுத்தப்படாததாக இருந்தது” என்று தோழர் குணசேகரன் எழுதுகிறார். இங்கு, திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டத்தில் பொருளாதாரத் தளம் விடுபட்டிருக்கிறது என்ற மதிப்பீட்டில் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் மாவோவின் முரண்பாடுகள் பற்றிய கட்டுரை எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ, அந்தக் கட்டுரை எந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசுகிறதோ அதற்கு எதிர்த்திசையில் தோழர் குணசேகரனின் கட்டுரை அமைந்திருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. மாவோவின் கட்டுரை முரண்பாடுகள் என்ற கருத்தாக்கத்தை எந்திரகதியில் பயன்படுத்தக் கூடாது, முரண்பாடுகளுக்கிடையில் ஏராளமாக இயங்கியல் தொழில்படுகிறது, சீனா போன்ற ஒரு கீழை நாட்டில் அக்கோட்பாடு பயன்படுத்தப்படும் போது முரண்பாடுகள் பற்றிய பொதுக் கருத்தாக்கத்தை மட்டுமின்றி அதன் பிரத்தியேக வடிவங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு முரண்பாடு குறிப்பிட்ட ஒரு காலத்தில் முதன்மையானதாக இருந்த போதும் மற்றொரு சூழலில் பிறிதொன்று முதன்மைத்தளத்தை எட்டலாம் என்பது போன்ற விஷயங்களைப் பேசு வதற்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்த விஷயங்கள் மாவோவின் கட்டுரையில் மிக நுட்பமாக, அனுபவ பூர்வமாக, சீன வரலாற்றிலிருந்து பல எடுத்துக் காட்டுகளுடன் பேசப்படுகின்றன. ஆனால் தோழர் குணசேகரனின் கட்டுரை மாவோவின் கட்டுரையின் தொடக்கப் பகுதியில் தரப்பட்டுள்ள முரண்பாடுகள் பற்றிய பொதுக் கருத்தாக்கம் பற்றிய புரிதலைத் தாண்டவில்லை என்பதே நமது கருத்து. மாவோ மிகத் துணிச்சலாக, “(நமது தோழர்களில் பலர்) முரண்பாட்டின் பொதுமைப் பண்பு மிக முக்கியமாக முரண்பாட்டின் பிரத்தியேகப் பண்பில் தான் வாழ்கிறது என்பதைப் புரிந்து கொள் வதில்லை” என்று வருத்தப்படுகிறார். மாவோ ஒரு பொருள்முதல்வாதி என்ற முறையில் பொதுப் பண்பைவிட பிரத்தியேகப் பண்பு அதிக அடிப் படையானது என்பதை வலியுறுத்துகிறார். மிகச் சிக்கலான சமூக முரண்பாடுகள் ஒன்றின்மீது ஒன்றாக ஏறியமர்ந்திருக்கும் சீனச் சமுதாயத்தில் புரட்சிக்கு வழிகாட்டியவர் என்ற முறையில் வர்க்க முரண்பாடு என்ற பொதுவான கருத்தாக்கத்தை மட்டும் முன்னிறுத்தினால் போதாது என்ற பார்வை மாவோவிடம் உள்ளது. மாவோவின் முரண்பாடு களின் பிரத்தியேகத்தன்மை என்ற கருத்தாக்கத்தின் மீது 1960-70களில் ரஷ்ய மார்க்சி யர்கள் எவ்வளவு காத்திரமான தாக்குதல்களைத் தொடுத்தார்கள், தெரியுமா?

தோழர் குணசேகரனின் கட்டுரையில் உள்ள “எது எல்லாவற்றிற்கும் அடிப்படை முரண்பாடோ...” என்ற சொற்களை உற்றுக் கவனிப்போம். இது உப நிடதங்களில், அல்லது ஒரு சைவ சித்தாந்தத் தத்துவ நூலில் உள்ள சொற்கள் போல ஒலிக்கவில்லையா! மார்க்சியத்தின் பொருளாதார முரண்பாடு என்ற கருத்தாக்கத்தை மறுக்க வேண்டும் என்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் குணசேகரனின் சொற்கள் பொருளாதார முரண்பாட்டின் அடிப் படைத் தன்மையைத் தீவிரப்படுத்துகின்றன. பொருளாதார முரண்பாடு என்ற கருத்தாக்கத்தை பிரம்மம் போல் கடினப்படுத்துகின்றன. சமூக வாழ்வு என்ற மிகச் சிக்கலான இயங்கியல் தளத்தை கருத்தியல்ரீதியாக இத்தனை கடினப்படுத்துவது நியாயமல்ல. குணசேகரனின் “அடிப்படை முரண்பாடு / மற்ற முரண்பாடுகள்” என்ற எதிர்வுபடுத்துதல் அவற்றை எதிர்வுபடுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்தின் பொருளாதாரமல்லாத முரண்பாடுகளை “மற்ற” என்ற சொல்லின் மூலம் அலட்சியப் படுத்துகிறது. உண்மையில் அவை பொருளாதார மல்லாத முரண்பாடுகள் கூட அல்ல. அந்த முரண் பாடுகளினூடாகத்தான் பொருளாதார முரண் பாடே வாழ்கின்றது, நின்று நிலவுகின்றது, வெளிப்படுகின்றது. பொருளாதார, சாதிய, தேசிய, இன, ஆணாதிக்க, கலாச்சார முரண்பாடுகளை உண்மையிலேயே இயங்கியல் தளத்தில் அர்த்தப்படுத்த நாம் கற்க வேண்டும். அவை தனித்தனியாக அலைவதில்லை. பகுப்பியல் தேவைகளுக்காக வழங்கப்பட்ட மார்க்சியக் கருத் தாக்கங்கள் அதே வடிவில் வாழ்வில் நிலவுவதாகக் கொள்ளக் கூடாது. கருத்தாக்கங்களின் வடிவிலேயே எதார்த்தம் உள்ளது எனக் கருதுவது கருத்து முதல் வாதம்.

மாவோவின் முரண்பாடுகள் பற்றிய கட்டுரையின் வழியாகத்தான் லூயி அல்த்தூசர் அவருடைய “மிகைநிர்ணயம்” என்ற கருத் தாக்கத்திற்கு வந்து சேர்ந்தார். ரஷ்யப் புரட்சியின் போதும் சீனப்புரட்சியின் போதும், முதலாளி வர்க்கம் / தொழிலாளி வர்க்கம் என்ற முரண்பாட்டோடு, விவசாயிகளின் பிரச்சினைகள், தேசிய இனப்பிரச்சினை, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடை யிலான முரண்கள், ஆணாதிக்கம், கலாச்சாரச் சிதைவு போன்ற பல முரண்பாடுகள் ஒன்றுபட்டுத் தொழில்பட்டதாலேயே அப்புரட்சிகள் சாத்திய மாயிற்று என்று அல்த்தூசர் எழுதினார். மாவோவும் அவரது கட்டுரைகளில் பல இடங்களில் ஒற்றை முரண்பாடு அல்ல, பலவகையான முரண்பாடுகள் என்ற சொல்லாக்கத்தைப் பயன்படுத்தியிருப்பார். பிரத்தியேகமான பல முரண்பாடுகள் மட்டுமல்ல, அவற்றின் சேர்க்கை, தொகுப்பு, இணைவாக்கம், பரஸ்பர ஊடுருவல், ஒன்று மற்றொன்றாக மாறுவது, முழுமை போன்ற பல, இன்னும் பல சொற்களை மாவோ பயன்படுத்தியிருப்பார்.

பொருளாதார முரண்பாடு தீர்மானகரமானது என்ற மார்க்சியக் கருத்தை மாவோ எழுதும்போதுகூட, தீர்மானிக்கிறது என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர்த்து, “தீர்மானிக்கிறது அல்லது செல்வாக்கு செலுத்துகிறது” என்ற நெகிழ்வான எழுத்து முறையைப் பயன்படுத்துவார், கவனித்திருக்கிறீர்களா? சீனச் சூழலின் சிக்கல்களில் மாவோ எவ்வளவு ஆழமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் இயங்கியலை அவர் எவ்வளவு நுட்பமாகக் கையாண்டார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய தருணங்கள் அவை. எல்லாவற்றிற்கும் மேலாக, சீனப் புரட்சி ஏன் வெற்றி பெற்றது என்பதற்கான கோட்பாட்டுச் சாட்சியங்கள் அவை. மார்க்சியக் கோட்பாடு அது தொழில்படும் சமூகத்தின் சகலவிதமான முரண் பாடுகளையும் சிக்கல்களையும் பிரத்தியட்சமாகத் தனது கருத்தாக்கங்களில் எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு பிரத்தியட்சமாக சமூக முரண்களை எடுத்துரைக்க முடியாதவரை அது மார்க்சியமாகவே இருந்தாலும் சூக்குமமான அல்லது அருவமான கருத்தாக்கம் தான்.

* * *

தோழர் குணசேகரனின் கட்டுரையில் அடை யாள அரசியலை அந்நியப்படுத்தும் பல வரிகள் காணப்படுகின்றன. “அடையாள அரசியல் ஒரு குறுகிய சமூகத்தளம் சார்ந்தது... (அது) மக்களை அடையாளம் சார்ந்து பிரிக்கும் தன்மை (கொண்டது)... அடையாள அரசியல் சார்ந்து, அதன் வழியாக வர்க்க அரசியலுக்குச் செல்வதற்கான பாதை கிடையாது.” இந்த வரிகள் நடப்பிலுள்ள திராவிட அரசியல், தலித் அரசியல் ஆகியவற்றின் குறிப்பிட்ட சில போக்குகளைச் சுட்டிக்காட்டும் அளவிற்குச் சரியானவையாக இருக்கலாம். ஆனால் வர்க்க அரசியல், அடையாள அரசியல் ஆகியவற்றிற் கிடையிலான உரையாடலைச் சாதிக்க விரும்பும் நடைமுறைத் தேவைக்கு உகந்தவை அல்ல. குணசேகரனின் சில சொற்களும்கூட அடையாள அரசியலை அந்நியப்படுத்துகின்றன. “அடையாள உணர்வுகளைப் பயன்படுத்தும் பாங்காக”, “வர்க்க அரசியலுக்கு உள்ளடங்கிய”, “வர்க்க அரசியலுக்குட் பட்ட” போன்ற சொற்பயன்பாடுகள் உரையாடலுக்கு உதவுமா, என்ன? அவரது கட்டுரையின் தலைப்பே “வர்க்க அரசியலில் அடையாள அரசியலின் தளம்” என உள்ளடக்கும் பண்பு கொண்டதாகவே உள்ளது. தோழர் குணசேகரன் என்னைவிட நடை முறை அரசியல் அனுபவம் அதிகம் கொண்ட வராக இருப்பார் என்றே நம்புகிறேன். சமூக அரசியல் சக்திகளை கம்யூனிஸ்டுகள் உள்ளடக்க முயற்சி செய்யக்கூடாது. கிராம்சியின் ஹெகி மொனி (Hegemony) என்ற கருத்தாக்கம் அப்படிச் சொல்லவில்லை.

எப்போதுமே அடையாள அரசியல் குறுகிய சமூகத்தளம் சார்ந்து இருந்தது என்று மதிப்பிட முடியாது. ஆறுமுக நாவலரின் ஆகமச் சைவம் என்ற மீட்டுருவாக்கம் சைவ வழிபாடுகளில் இடம் பெற்றிருந்த கண்ணகி வழிபாடு, நாட்டுப்புற மக்களின் பங்கேற்பு ஆகியவற்றை வெட்டிக் களைந்து ஒரு மேட்டுக்குடிச் சைவத்தை உருவாக்க முயன்றது. ஆகமச் சைவத்தின் குறுகலான சமூகத்தளத்தைத் தமிழ்நாட்டில் துவங்கிய தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த மீட்டுருவாக்கங்கள் விரிவுபடுத்த முயற்சித்தன. இந்த முயற்சியில் அவை ஓரளவு வெற்றியும் பெற்றன. வள்ளலாரின் பசி/கருணை/அருள் என்னும் கருத்தாக்கங்கள், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்த/நாட்டுப்புற மரபுகள் இணைவாக்கம் ஆகியவை தமிழ் அடையாளம் குறித்த விவாதங்களை அடித்தள மக்களை நோக்கி இட்டு வந்தன. இன்னொரு புறம் பிராமணரல்லாதார் என்ற சொல்லாடல் இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலிருந்து பலதரப்பட்ட சமூகப் பகுதியினரை ஒன்றுபடுத்த முயன்றது. பிராமணரல்லாதார் என்ற சொல்லாடலால் அடித்தள மக்கள் அதிகம் பயன்பெற முடியவில்லை. இருப்பினும் பெரியார் அச்சொல்லாடலைப் பயன்படுத்திய தீவிரம், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, நாத்திகம் ஆகியவற்றில் அவர் காட்டிய உற்சாகம் ஆகியவற்றால் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும் அவரை உற்றுக் கவனித்ததுண்டு.

திராவிட இயக்கத்தின் இரண்டாம் (இளம்) தலைமுறை மொழி, இலக்கிய வழி அரசியலை முன்னிலைப்படுத்தியது. மொழி என்னும் அடையாளத்தளம் மிகவும் விரிந்தது. தமிழ் மொழிவழி மக்களின் மொத்த வரலாற்றையும் அது குறிக்குமாக இருக்கலாம். ஆனால் அண்ணா தலைமையிலான இளம் தலைமுறை தமிழ்ப் பண்பாடு என்ற மிகச் செழுமையான ஆனால் முரண்பட்ட பரப்பிலிருந்து மேட்டுக்குடி சார்ந்த தகவுகளையே முன்னிலைப்படுத்தியது. ஜீவாவின் அணுகுமுறை வேறுபடுவது இந்த இடத்தில் தான். தனித்தமிழ், செந்தமிழ், செம்மொழி என்ற தெரிந் தெடுக்கப்பட்ட அணுகுமுறை மொழிவழிப் பண் பாட்டிலிருந்து மேலும் அடித்தள மக்களை அந்நியப் படுத்தியது. பெரியாரின் கருத்துக்களால் உத்வேகம் பெற்ற தலித் சிந்தனையாளர்கள், தலைவர்கள் உண்டு. ஆனால் வெகுஜன தலித் தளத்தை திராவிட இயக்கத்தின் இளம் தலைமுறையினரும் எம்.ஜி.ஆர். போன்றோருமே அதிகம் கைப்பற்றினர்.

கம்யூனிஸ்டுகள் 304-களிலிருந்தே விவசாயிகள் இயக்கத்தில் நிலப்பிரச்சினையை மையப்படுத்திக் கிராமப்புற தலித்துகளை ஒன்றிணைத்தனர். கிராமப் புறங்களில் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் வெறும் பொருளாதாரப் போராட்டங்களாக இருந்தன எனக் குறுக்கிவிட முடியாது. சர்வதேச அரசியலும் அகில இந்திய அரசியலும் ஒருபுறமிருக்க, அடித் தளங்களில் கம்யூனிஸ்டுகளின் அணிதிரட்டல் சாதி ரீதியான அடக்குமுறைகளைமிகக் காத்திரமாக எதிர் கொண்டன. கம்யூனிஸ்டுகள் ஆயுதம் தாங்கி சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சந்தர்ப்பங் களெல்லாம் உண்டு. கம்யூனிச இயக்கம் தலித்து களை ஆயுதபாணிகளாக்கி, பயிற்சியளித்து சாதிய அடக்குமுறையாளர்களை எதிர்கொள்ளச் செய்து இருக்கிறது. எங்கே வர்க்கம், எங்கே சாதி, எங்கே பொருளாதாரம், எங்கே அடையாளம் என்று பிரித்துப் பெயர் வைக்கப்படாத வடிவில் கிராமப் புற கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் அமைந்து இருந்தன. இந்தியாவில் வேறு எந்த ஒரு அரசியல் இயக்கத்திற்கும் இத்தகைய அனுபவங்கள் கிடையாது; கிடையாது. கிராமப்புற இந்தியாவில் வீரமும் தியாகமும் செறிந்த வரலாற்றை அவர்கள் படைத் திருக்கின்றனர்.

தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றிய 1967க்குப் பிறகு கிராமப்புற மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போன்ற கிராமப்புற “நலத் திட்டங்களை” அக்கட்சி அறிவித்தது. கிராமப்புற மக்களின் ஏழ்மையை மனதில் கொண்டு கம்யூனிஸ்டுகளால் தி.மு.க.வின் நலத்திட்ட அரசியலை எதிர்க்க முடியாமல் போயிற்று. கிராமப்புற தலித்துகள் அரசு மற்றும் ஆளும் கட்சி சார்ந்த மக்கட் கூட்டங்களாக இக்காலங்களில் ஆக்கப்பட்டனர். கிராமப்புற நலவாழ்வுத் திட்டங் களால் தலித்துகள் உருப்படியாகப் பயன்பெற்று விடவும் இல்லை. மாறாக அரசுத் திட்ட ஒதுக் கீடுகள் அனைத்திற்கும் இடைத்தரகர்களாக ஆளும் கட்சிப் பிரமுகர்கள் ஆக்கப்பட்டதால், கிராமப் புறங்களில் இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. கம்யூனிஸ்டுகளால் இடைநிலைச் சாதிகளின் எழுச்சியை அரசியல்ரீதியாக எதிர் கொள்ள முடியாமல் போயிற்று. இடதுசாரிகளின் விவசாயிகள் இயக்கத்தில் சிறுநில விவசாயிகள்/ விவசாயத் தொழிலாளர்கள் என்ற பிரிவு இடை நிலைச் சாதிகள் / தலித்துகள் என்ற பிளவாகவும் வெளிப்பட்டது. இத்தகைய சூழல்களில் தான் 80களுக்குப் பிறகு தலித் இயக்கங்கள் முன்னுக்கு வந்துள்ளன. தலித் இயக்கங்கள் அடையாள வடிவில் முன்னுக்கு வந்துள்ளமைக்குக் காரணம் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கிராமப் புறங்களில் நிகழ்ந்துள்ள புதிய மாற்றங்களை எதிர்கொள்ளும் வேலைத் திட்டம் நம்மிடமும் இல்லாமல் போனதுதான். போராட்டத்திற்கான அரசியல் வேலைத் திட்டம் இல்லாதபோது பெரு மளவில் தற்காப்புத்தன்மை கொண்ட அடையாள இயக்கங்களைத் தலித்துகள் நம்ப வேண்டியுள்ளது.

இவ்வாறாக, தமிழ்நாட்டில் திராவிட அடை யாள அரசியலும் தலித் அடையாள அரசியலும் மிகச் சிக்கலான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. தமிழ் அடையாள அரசியலின் சமூகத்தளம் இவ் வரலாற்றில் குறுகி இருந்த காலங்களும் உண்டு. விரிந்த காலங்களும் உண்டு. இன்று திராவிட அரசியல் முழுச் சிதைவை எட்டிவரும் நிலையில் தமிழ் அடையாளத்தைக் கையிலெடுப்பதில் இடது சாரிகள் முனைப்புக் காட்ட வேண்டும். அது மேலே கூறியுள்ளது போல், சமூக அடித்தள நிலைப் பாடுகளிலிருந்து கட்டப்பட வேண்டும்.

தலித் அடையாளத்தைப் பொறுத்தமட்டில் அது ஒடுக்கப்பட்ட சாதிகளை மையப்படுத்தி அமைவதனால், அதன் சமூகத்தளம் விரிவடை வதில் பல சிக்கல்கள் உண்டு. இடைநிலைச் சாதி களும் ஆளுகைச் சாதிகளும் தலித் இயக்கங்களின் சமூகத் தளம் விரிவடைவதை அனுமதிப்பது கிடையாது. எனவே தலித் இயக்கங்களின் சமூகத் தளம் விரிவடையாமலிருப்பதற்கு அந்த இயக்கங் களே காரணமல்ல. இந்தச் சாதி சமூகம் தான் காரணம். அயோத்திதாசரும் அம்பேத்கரும் தலித் அரசியலின் சமூகத்தளம் விரிவடைய வேண்டுமென்பதற்காகப் பல முயற்சிகள் செய்துள்ளனர். ஆனால் இந்தச் சாதிச் சமூகம் அம்முயற்சிகளைத் தோற்கடித்திருக்கிறது.

நமது காலத்தில் பலவகையான அடையாளங்கள் அரசியல் அரங்கினுள் நுழைகின்றன. வேகமான முதலாளிமயமாக்கல் சூழல்களில் பலவகைச் சமூக முரண்பாடுகள் முற்றி முறுகி வருவதை அவை குறிக் கின்றன. முதலாளியச் சிந்தனைகள் தாராளவாத நிலையில் பன்மீயம் பேசுவதன் மூலம் அம்முரண் பாடுகளை மேலும் தீவிரமடையாமல் சமாளிக்க முயலும். ஆயின் மார்க்சியக் கோட்பாடு பிரத்தியட்சமாக அவற்றை எடுத்துரைக்கும் விசாலம் கொண்டதாகச் செழுமை பெற வேண்டும். ஓர் ஒற்றை முரண்பாடாக அவற்றைக் குறைக்காத முறையியல் நமக்கு வேண்டும். லெனின், மாவோ ஆகியோர் அவரவர் நாடுகளின் பலவகைப்பட்ட பிரச்சினைகளை - இரண்டு மிகப் பழைய சமூகங்களில் பல காலமாகத் தீர்க்கப்படாமல் குவிந்திருந்த பிரச்சினைகளை - தொகுத்துக் கையாண்டதைப் போன்ற வழிமுறைகள் குறித்து நாம் தொடர்ந்து யோசிக்க வேண்டும். முடிவடையாத சனநாயகப் புரட்சியைத் தீவிரப்படுத்துவதே அதே சமூகச் சக்திகளை சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் செல்வதற்கும் உதவும்.

வர்க்க அரசியலுக்கும் அடையாள அரசியலுக்கும் இடையிலான எல்லாப் பிரச்சினைகளையும் நான் இக்கட்டுரையில் பேசிவிட்டதாகக் கருதவில்லை. இன்னும் பல பிரச்சினைகளை விரிவாக நாம் பேச வேண்டியுள்ளது. இப்பிரச்சினைகளைப் பேசத் தூண்டுதலாக இருந்த தோழர் குணசேகரனின் கட்டுரைக்கு நன்றி கூறவேண்டும். 

Pin It