devadevan_214பொற்கனா நிகழ்த்திய பொற்கனாவோ
அன்று நான் கண்ட காட்சி? 
உழைப்பின் அழுக்கேறிய
இரு கைகளும் இணைந்து
திறந்த குழாய்நீரின் கீழ் நின்றன 

பத்து விரல்களும்
இரண்டு உள்ளங் கைகளில்!
இரண்டு உள்ளங்கைகளும்
இரண்டு கைகளில்!
இரண்டு கைகளும்
இரண்டு தோள்களில்!
எல்லாம் ஓர் ஒற்றை மனிதனில்
இணைந்து கொண்டியங்கிய காட்சி! 

ஒருமித்து நின்ற எல்லா விரல்களும்
அப்படி ஒரு மென்மையுடன்
ஒன்றை ஒன்று தீண்டித் தடவி
யாருக்கு யார்மீது
ஏன் எதற்கென்றில்லாத்
தன்னியல்பான
அன்பும் அக்கறையும் ஒளிர
மவுனமானதொரு இசை இயக்கும்
உன்னதமானதொரு நடன நிகழ்வை
நிகழ்த்திக் கொண்டிருந்தன
தாங்கள் நிகழ்த்துவதையும்
பார்க்கப்படுவதையும் அறியாமலேயே


திருப்பரப்பு

தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய்
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். 

முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து 

போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள்நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியான இடத்திற்கு
என்றது பேருந்து.
இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.

ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரஉயரமான மரங்களும் விண்ணும்
உரக்க உரக்கக் கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும்
சொர்க்கத்திற்கு என்று! 

எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற
ஓர்ஒற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்து சேர்ந்தார்
யாருமில்லை என்பதுபோல்
புத்தம் புதியதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ? 

அவ்விடுதியை மையம்கொண்டே
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்ந்திருந்தது கண்டு திடுக்குற்றோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம். 

விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்து மகிழ்ந்துகொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை.
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய்ப் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ? 

சூழ்ந்துள்ள ரப்பர் தோட்டங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்துக் களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!
எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்க்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும்
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்
பெருங்கருணை 


பெருமரம்

நாம் அறிந்திலமோ,
அந்தப் பிரமாண்டமான மரத்தை? 
ஒன்பதுபேர் சேர்ந்து
கட்டிப்பிடிக்க இயலாத போதும்
பத்து பேரும் சேர்ந்தால்
கட்டிப் பிடித்திட இயலும் பான்மையால்
நாளும் அது இந்த
நற்கனி ஈந்து கொண்டிருக்கிறது. 

தாவரம் மனிதனைப் பார்த்துக் கேட்டது

நான் எனது
நன்றியையும் மகிழ்ச்சியையும் அன்பையும்
பிரார்த்தனையையும் வெளிப்படுத்தும் விதம்
இம்மலர்கள்.
இவற்றைக் கொய்து
நீ உன்னை வெளிப்படுத்துவதென்ன, பாசாங்கு?


முழுநிலவு தோன்றி

முழுநிலவு தோன்றி
வழிமறித்ததென்ன? 

கனிந்த புன்னகையும்
கனக்கும் நெஞ்சமுமாய்
எத்தகைய பின்புலத்தினின்றும்
வந்து அவன்முன் நின்றது அது? 

எத்தகைய பெருங்கருணை
இந்தப் பெருஞ்சுடர் முற்றுப் புள்ளியினை
அவன் முன்னே நிறுத்தியது? 

எத்தகைய முடிவும் தொடக்கமுமான
பெருநிறைவு, சாந்தி
இந்த முழுநிலவு? 

இனி இவ்வுலகில்
போரும் சச்சரவும்
இருக்கவே இருக்காதென
உறுதியாய் நம்பலாமா?
இப்பேரண்டத்தின் ஒத்திசைவே
மானுடர் நம் உதிரத்திலும் ஒலிக்க
இனி ஆடலும் பாடலும்
அக்கறையுமே நம் வாழ்க்கையென
உறுதியாய் நம்பலாமா? 

இது ஒரு திடீர் உற்பவமில்லையா?
யுக யுகாந்திரங்களாய்
எத்தனை எத்தனை கவியுள்ளங்களிடம்
இடையறாது தன் இதயம் திறந்து நிற்கிறாள்
இம் முழுநிலா? 

எத்தகைய அழியா மடமைமுன்
அலறி அழும் பெருங்குரல்!
இன்மையும் அழகுமாய்ப் பொலியும் பாத்திரங்களிலெல்லாம்
அமுது நிரப்பி அமுதால் தழுவும் அருள்! 

Pin It