அவனைப் பற்றி நம்மால் இயன்ற அளவு தெரிந்து கொள்வது நல்லதுதான். பல அதிர்ச்சிகளால் நிலைகுலைந்து நிலை நின்றுவிட்ட ஒரு பிறவியாய், மிக எளிதில் அழிந்துவிடக் கூடிய நொய்மையும், கண்ணுக்குப் புலனாகாத ஒரு திடமுமாய் அவன் காணப்பட்டான். சிசுப் பருவத்திலேயே அவன் ஆரம்ப உறவுகளின் சிறு சூழலுக்குள்ளேயே இன்னது எனக் கண்டு கொள்ள முடியாத, ஆனால், உலகின் கொடூரமான அநீதங்களை துயரங்களை அறிந்து கொண்டானோ என்றும், மனிதர்க்கிடையேயுள்ள பேதங்கள் மற்றும் மனிதனுக்குச் சகமனிதன் மீதுள்ள அக்கறையின்மையே அவ்வதிர்ச்சிக்குக் காரணமோ என்றும், இல்லை, இது கருவிலேயே கூடியிருந்திருக்குமோ என்றும்,அல்லது இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு சீரிய, அதிசய பிரக்ஞை மட்டுமேதானோ என்றும், பலவாறாகச் சிந்திக்கும் படியாகத்தான் அவன் இருந்தான்.

இனி நம் கதைக்கு வருவோம்.

அன்று வழக்கமான ஒரு நேரத்தில், இல்லை, அன்று மாலை தொடங்குவதற்கு வழக்கத்தைவிடச் சற்று முன்னமேயே வீட்டைவிட்டு வெளியே கால் வைக்கத் தொடங்கினேன். எப்படியோ அன்று அந்நடை தொடங்கியதுமுதல் முடியும்வரை அது ஒரு வழக்கமான அனுபவமாக இல்லை.

16-19 வயதுள்ள ஒருசிறுவன், அல்லது இளைஞன். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலையில் சூழலின் தன்மைக்கு மாறாக நண்பர்களைவிட்டுத் தனிமைப்பட்டுப் போன நேரம். சொல்லப் போனால் ஏற்கனவே இருந்து கலகலப்பற்ற இருளும் மவுனமுமான தனிமை போலுமுள்ள ஒரு நிலையை கூடுதலாக்க வந்ததே போலிருந்தது அந்தத் துயரம். அந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவனைச் சூழ்ந்திருந்த மவுனம் அவனது நா புழங்கியிருந்த சொற்ப சொற்களாலேயே அளக்கப்பட்டிருந்தது. மேலண்ணத்தில் ஒட்டியிருந்த நா பேச்சு என்பதையே மறந்து கீழ்த்தாடையின் ஈரக் கசிவினுள் புதைந்து தேங்கி பாசி படிந்து களிம்பேறி தன் பயன்பாட்டை மறந்தே போய்விட்ட ஓர் உறுப்பாய் உறங்கிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது. அப்போதுதான் அவன் தன் தோணி நண்பர்களைக் கண்டடைந்தான்.

எல்லாவற்றின் மீதும் ஒரு புதிய ஒளி படர்ந்திருந்தது. ஒளியை மட்டுமே உள்ளீடாகக் கொண்ட ஒளியாலாகிய ஒரு பிரம்மாண்டமான பாத்திரத்தைக் கண்ணெதிரே காண்பது போலிருந்தது. வழக்கத்தை விடச் சற்று முன்னே, மாலை வேளை இன்னும் தொடங்கா திருக்கையிலேயே நான் என் நடையை தொடங்கி விட்டதனாலும், பிற்பகல் வெயில் இன்னும் இறங்காமலிருந்ததனாலும் அப்படித் தோன்றியிருக்கலாம்.

பிரதான சாலையில் சீரான அடியெடுப்பில் மூளை எதையும் பதிவு கொள்ளாத நிலையில் நடந்து சென்று, சடாரென்று விரிந்த களமாய்த் தெரியும் இரயில் நிலையத்தருகே பிரியும் பல பாதைகளின் சந்திப்பைக் கடந்து கடற்கரைச் சாலையைத் தாண்டினால் கடலோரம் கடலலைகளைப் பார்த்தபடி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தோணி வந்துவிடும். வேலையாட்கள் அன்றைய வேலையை முடித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். வெளியேயிருந்தே தோணியின் மேல்தளத்திற்குச் செல்கிற மர ஏணியில் ஏறி ஒரு பலகையில் அமர்வேன். ஓரப்பலகைகள் எல்லாமே முதுகு சாய்ப்பதற்குத் தோதாக இருக்கும்.குனிந்து பார்த்தால் நிலவறை போன்ற தோணியின் உள்வயிறு ஒரு பெரிய காலிக் குடுவையைப் போல நேரம் செல்லச் செல்ல இருட்டுடன் காணப்படும்.

கடற்காற்று கொந்தளிக்கும் அலைகளிலிருந்து இடையறாது வந்தபடியே இருக்கும். அதன் ஆவேசத் தழுவலை அனுபவித்தபடியே நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்வார்கள். பேச்சு எப்போது தொடங்கியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. பொதுவான அரட்டையிலிருந்து ஆழமான விசாரணைகள் வரை அது போகும். அரசியல், உள்ளூர் விவகாரங்கள், வம்புகள், இலக்கியம், கலாரசனை, வரலாறு, தத்துவம், சொந்த வாழ்க்கையின் அந்தரங்கமான அனுபவங்கள், சிக்கல்கள் தவிர எல்லாமும் அன்றாடச் செய்திகள் போலவும் அடுத்தவீட்டுப் பிரச்சனைகள் போலவும் உலவும். இரவு பதினோரு மணிவரை. சிலவேளை அதைத் தாண்டியும் கூட அது போகும். அதற்கேற்ப தங்கள் வீடுகளில் கண்டிப்புப்படுத்த இயலாத நிலையில் தண்ணீர் தெளிக்கப்பட்ட பிறவிகளாய் உள்ள இளைஞர்களே பெரும்பாலுமாய் இருப்பார்கள். சமயங்களில் மிக முக்கியமான கலைஞர்கள் சிந்தனையாளர்களின் சந்திப்புகூட அங்கே நிகழ்வதுண்டு. திடீரென்று ஒருநாள் வட மாவட்டம் ஒன்றில் வேலை கிடைத்துப் போய்விட்ட எபியும்(எபனேசர் பி எட்) கடுமையான சி பி அய் விசாரணை மற்றும் எச்சரிக்கைக்குப் பிறகு சென்னை செக்ரட்டேரியட் சென்றுவிட்ட சுதந்திரராஜ் பி ஏ வும்தான் அர்ப்பணிப்பும் தீவிரமும் கொண்ட இயக்கத் தோழர்கள் மற்றும் தலைமறைவாய் வாழும் அன்றைய போராளிகள் சிலரை அங்கே அழைத்து வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த அரசியல் பேச்சுக்களில் ஆவேசமான ஈடுபாடு காட்டாத எனது மவுனத்தை யாருமே ஒரு தொந்தரவாக உணர்ந்ததில்லை. கடலிலிருந்து விவரிக்க வொண்ணாத அழகுடன் முழுநிலா எழும்பிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லோருக்குமே கவிதையுணர்ச்சி பொங்கிக் கொண்டிருக்கும். மனம் மிக மிக மெலிதாகித் தங்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையின் நிச்சயமின்மையால் பீதி கலந்த துக்கம் கொண்டுவிடும். தாங்கள் கேள்வியுற்ற துரதிருஷ்டமிக்க சோகக் கதைகள் பலவற்றை அவர்கள் பரிமாறிக் கொள்வார்கள். நிலா தொடர வெகுநேரம் அத்தோணியில் தங்கிவிட்டு விருப்பமின்றியே கலைவார்கள். அதுபோன்ற நாட்களிலெல்லாம் ஆல்பியின் தற்கொலை தவறாமல் நினைவுக்கு வரும். இறந்த வீட்டின் சந்தடி சாக்கில் அவனது டைரியை அபேஸ் பண்ணிக்கொண்டுவந்து படித்த நண்பர்கள் மூலம் தான் கதை தெரிந்தது. மனித வரலாற்றுக் கதைகளிலேயே மிகச் சோகமான கதைகளுள் ஒன்று அது. ஆல்பி வேலையில்லாத இளைஞன் என்றாலும் நல்ல வசதியான வீட்டுப் பையன். அழகிய ஒரு பெண்ணைப் பெற்று வைத்திருந்த அவனது அத்தை பிழைப்பிற்கே அல்லாடும் பரம ஏழை என்றில்லாவிட்டாலும், ஒரு ஏழைதான். அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி அவன் வந்துபோய்க் கொண்டிருந்தான். பாசம் மிக்க அத்தையின் ஆட்சேபணையில்லாத, அனுசரணையான சூழலில் காதல். ஒருநாள், தாயும் மகளும் சேர்ந்து ஒரு முன் திட்டத்துடனேயே இந்தக் காதலை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததில்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் ஆல்பி.

அந்த இடத்தை நோக்கித்தான் இத் தோணிக்கதைகளின் அனுபவம் ஒன்றும் பெற்றிராத எனது ஆரம்ப நாட்கள் ஒன்றில், அதன் வெறுமையுடன் நடந்துகொண்டிருந்தேன். ஒரே நீளமாய் நீண்டு சென்ற கடைவீதிச்சாலை முடிந்து பெரும் பரபரப்பாக, ஹோவென்று அகண்டு கிடக்கும் விரிந்த வானத்தின் கீழே நிலம் கையறு நிலையில் பளீரிடுகிற அந்த இரயில் நிலையத்தருகே வந்துவிட்டதும் பிரக்ஞையில் பீதியுண்டாகும் படியான ஒரு மாறுதல் ஏற்பட்டு நின்றது. என் கால்கள் தம்மையறியாமலேயே ஒதுங்கி இரயில் நிலையத்தின் உயரமான வாய்க்கால்மீது போடப்பட்ட குறுகிய நடைபாதையிலேறி நடந்தன. அந்தப் பிரதேசத்தில் அப்போது என்னை நானே கூசி ஒடுங்கிக் கொண்டவனாய்க் காணப்பட்டேன்.

நகரத்தில் அப்போது பரபரப்பான ஒரு துயரச் சேதி எங்கும் அதிர்ந்தபடி இருந்தது. புறநகர் மற்றும் நகரின் அங்கங்கே குடிசைகள் குடிசைகளாய் இருந்த பல பகுதிகளிலும் மர்மமான முறையில் திடீர் திடீரென்று தீப்பிடித்து குடிசைகள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தன. யாரோ ஒரு ஒற்றை மனிதனின் செயல்தான் இது என்றும், அவன் பாஸ்பரஸ் ஒரு சாணியுருண்டையில் பொதிந்து, போகிற போக்கில் ஒரு குடிசையின் கூரைமீது எறிந்து விடுகிறான் என்றும், அச்சாணியுருண்டை உலர்ந்து காய்ந்த உடன் பாஸ்பரஸ் தன் வேலையைக் காட்ட, உடனே குடிசைகள் தீப்பற்றி எரியத் தொடங்குகின்றன என்றும், அந்த மனிதனைப் போலிஸ் தீவிரமாய்த் தேடிக் கொண்டிருக்கிறதென்றும் பேசிக் கொண்டார்கள்.

அப்போது எனக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது, உடல் பதறுவதுபோல் தோன்றியது. என்னைத்தான் போலிஸ் தேடுவதுபோலும் அது சரிதான் என்பது போலும் அச்சம் ஆட்டியது.

Pin It