சென்னை முதல் ஈழமீறாகவுள்ள வித்துவான்களுள் சிறந்த நாவலருக்கும் தொண்ட மண்டல வித்துவான்களுக்கும் இடையிலான சைவ சமயக் கருத்து மோதலும் சி.இராமலிங்கம் பாடல் தொகுப்பும்

“நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷீயம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்கும் தெரியும். அந்த லக்ஷீயம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லக்ஷீயம் வைத்ததற்குச் சாக்ஷி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற ஸ்தோத்திரங்களே போதும்... அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கிறார்” (2007 : 100). சி.இராமலிங்கம்

பிற சமயத் தாக்குதல்களிலிருந்து, குறிப்பாகக் கிறித்துவத்தின் மோதல்களிலிருந்து சைவ சமயத்தை மீட்டெடுத்துப் பழைய பெருமைக்குக் கட்டமைக்கும் போக்குகளில் தீவிரமாக உயர்சாதி வர்க்கம் (வேளாளச் சமூகம்) ஈடுபட்டிருந்த சூழலின் நடுவில் வள்ளலார் என்னும் சி.இராமலிங்கம் பாடல் தொகுப்பு முயற்சியும் நடைபெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சைவத்தின் மீதான கிறித்துவத்தின் மோதல்கள் தீவிரமாக இருந்தன. இவற்றை எதிர் கொள்ள, தத்துவார்த்தமான மோதல்களை உயர் சாதி வேளாளர்கள் முன்னெடுத்த நிகழ்வுகள் நடந்தன. இதன் மறுபுறத்தில் சாதி சமய ஆசாரங்களைக் கண்டித்துச் சமயம் கடந்த தேடலை நோக்கிய பயணத்தை இராமலிங்கர் மேற்கொண்டிருந்தார். இயல்பாகவே இராமலிங்கரின் சமயம் கடந்த அத்தேடல் என்பது சமயத்துக்குள் மலிந்துகிடந்த முரண்களைக் கண்டிக்கும்படியாக அமைந்தது. குறிப்பாக அது சைவ சமயத்தின்பாற்பட்டதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அன்றைய நிலையில் சைவ சமயத்தின் வீச்சு விரிந்த அளவில் இருந்தது இதற்கு அடிப்படைக் காரணம்.

சாதீய, சமயச் சார்பான சமூக அமைப்பினைப் பாதுகாக்கும் நோக்கில் கிறித்துவத்தின் மோதல்களை எதிர்கொண்டு உயர்சாதி இந்துக்கள் தீவிரமாகச் செயல்பட்ட நேரத்தில் இராமலிங்கரின் சமயம் கடந்த தேடலிலான பாடல்கள் இயல்பாக அவர் களுக்கு எதிராகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பது; அவரின் தேடல் குறிப்பாக, தீவிர சைவப் பற்றாளர் களிடத்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது; இந்தப் புரிதல் இராமலிங்கருக்கு எதிராகச் செயல் பட வைத்தது. இதன் எதிர்நிலையில் சமூகத் தளத்தில் புதிதாக மேலேழும்பி வந்து சைவத்துக்குள் தங்களது அடையாளத்தை இடைநிலைச் சாதியினர் தேடத் தொடங்கினர். இவர்கள் ஒருவகையில் இராமலிங்கரின் பாடல்களை ஆதரித்துக் கொண்டாடினர். இந்த இரு நிலைப்பட்ட சமூகத்தின் புரிதல் - தேடல் நிகழ்வுகள் இராமலிங்கரின் பாடல் தொகுப்பிலும் எதிரொலித்தது. இதனால் அவரின் பாடல் தொகுப்பில் எதிர்ப்பு X ஆதரவுத் தன்மைகள் இருந்தன. இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த இராமலிங்கரின் பாடல் தொகுப்பின் செயல்பாடுகள் தமிழ்ச் சமய, சமூக வரலாற்றில் மிக முக்கிய கவனத்தைப் பெற்றன. வரலாறு இன்றும் அந்தச் சம்பவத்தை வியப்புடன் பதிவு செய்தும் வைத்துள்ளன. மிக நீண்ட தமிழ்த் தொகுப்பு வரலாற்றில் வெளிப்படையான சமூகம் சார்ந்த போராட்டப் பின்புலத்தில் இராமலிங்கம் என்பவரின் பாடல்கள் மட்டுமே தொகுக்கப்பட்டு இருக்கும் என்பது வரலாற்று உண்மை. இப்படியான புரிதல் பின்புலத்தோடு கீழ்க்காணும் சில சம்பவங் களைத் தொகுத்துப் பார்ப்பதன்வழி இராமலிங்கர் என்பவரின் பாடல் தொகுப்பு வரலாற்றை முழுமை யாகப் பதிவு செய்ய முடியும்.

*      கிறித்துவத்தின் மோதல்களுக்கு எதிராக உயர் சாதியினர் முன்னெடுத்த தத்துவச் சண்டையின் வழி கிறித்துவ X சைவ எதிர்ப்புப் பிரச்சாரங்கள் உருவாயின. இவ்விரண்டிற்கும் எதிர்நிலையில் இராமலிங்கரின் பாடல்கள் வினையாற்றிய தன்மைகள், அவை தொகுப்பு நிலையில் செயலாற்றிய பங்களிப்பு ஆகியன பற்றிய விவாதம்.

*      சைவத்துக்குள் நிலவிய உள்முரண்கள் இராமலிங்கர் பாடல்களின் தொகுப்பிற்குள் எதிர் நிலையாற்றிய தன்மைகள் முக்கியமானதாகும். இவற்றை மிக விரிந்த அளவில் விவாதிப்பது.

*      ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபிற்கும் தமிழகத்துப் புலமை மரபிற்கும் இடையில் நிலவிய கருத்து வேறுபாடுகள் இராமலிங்கரின் பாடல் தொகுப்பு முயற்சியில் ஏற்படுத்திய தாக்கங்கள்.

*      மேற்குறிப்பிட்ட கருத்து வேறுபாடுகளை மேற் சாதியினருக்கும் (குறிப்பாகச் சிவாச்சாரியர், சைவ வேளாளர் (சற்சூத்திரர்) இடைநிலைச் சாதியினருக்குமான (சைவத்துக்குள் தமது அடையாளத்தைத் தேடிய கருணீகர், சோழிய வேளாளர், செங்குந்தர், துளுவ வேளாளர், அக முடையார், நாயகர், செட்டியார் முதலானோர்) முரண்களாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இந்த முரண்களின்வழி இராமலிங்கர் பாடல் தொகுப்பிற்குள் செயலாற்றிய தன்மைகள் என்ன? சமயம் கடந்த இராமலிங்கரின் பாடல் களை இந்த இரு எதிர்நிலைப்பட்ட சைவ உலகம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன? என்ற விவாதங்களை முன்னெடுப்பது.

*      சமயப் பாடல் மரபில் எவரொருவரின் பாடல் களும் புலவன் வாழ்ந்த சமகாலத்தில் தொகுக்கப் படாத நிலையில் இராமலிங்கர் பாடல்களை அவரின் சமகாலத்தில் தொகுத்து வெளியிடு வதற்கான சூழலை எது தீர்மானித்தது.

*      இராமலிங்கரைப் பிடிவாதமாக வற்புறுத்திப் பாடல்களைத் தொகுத்தமை, அவரின் அனுமதி யின்றி அருட்பா எனப் பெயரிட்டமை ஆகிய வற்றிற்கான பின்புலம் என்ன? இவை இரண்டிற்கும் இடையில் நின்று சைவ அடையாளத்தைத் தேடிச் செயல்பட்ட தொண்ட மண்டல இடை நிலைச் சாதியினரின் செயல்பாடுகள் எத் தன்மையன? ஆகியவற்றை நோக்கிய விவாதங் களையும் கருதுகோளையும் முன்னெடுத்தல்.

*      இராமலிங்கர் பாடல்களின் முதல் தொகுப்பில் இருந்து இரண்டாம் மூன்றாம் தொகுப்பிற் குள்ளான கால இடைவெளி, அவற்றுள் இடை நிலைச் சாதியினரின் போக்குகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த விவாதங்கள்.

மேற்குறிப்பிட்ட விவாதக் குறிப்புகளுக்கு விரிவான அளவில் விடை காண முயற்சிப்பதன் வழி இராமலிங்கர் பாடல் தொகுப்பு வரலாற்றைத் தமிழ்த் தொகுப்பு மரபிலிருந்து தனித்த ஒன்றாக அடையாளப்படுத்த வாய்ப்புள்ளது.

தமிழ்ச் சமூக வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி நிகழ்வுகள் பின்னைய நூற்றாண்டின் அசைவியக்கம் பலவற்றிற்கு அடித்தள மிட்டுக் கொடுத்தன. அந்நூற்றாண்டின் தமிழ்ப் புலமையாளர்களின் செயல்பாடுகள் என்பது சமயப் பின்புலத்துடனான செயல்பாடாக மட்டுமே இருந்தது. செவ்வியல் நூல்கள் என்று, இன்று நாம் கொண்டாடுகின்ற பெரும்பகுதி நூல்கள் (கீழ்க் கணக்கு நூல்களில் சில சமயம் மற்றும் நீதி சொல்லிக் கீழ்ப்படிதலை வற்புறுத்தும் கண்ணோட்டங்களில் அச்சான வரலாறு வேறானது) அச்சாகாமல் ஓலையில் கிடந்தன. தொல்காப்பியம் எழுத்ததிகார நச்சினார்க்கினியர் உரைப்பகுதியை மட்டும் மழவை மகா லிங்கையர் அச்சிட்டு வெளியிட்டிருந்தார் (1847).

ஆங்கிலேயக் கல்வி மரபை உள்வாங்கிச் செயல் பட்ட சாமுவேல் பிள்ளை என்பவர் தொல்காப்பிய நன்னூல் என்னும் ஒப்பீட்டு நூலை உருவாக்கி வெளியிட்டிருந்தார் (1858). எட்டுத்தொகை, பத்துப்பாட்டு (ஆறுமுக நாவலர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையைச் சமயப் பார்வையில் அச்சாக்கம் செய்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்), காப்பியங்கள் என்னும் எந்தவொரு செவ்வியல் நூலும் அன்றைய நிலையில் அச்சாகி வெளிவரவில்லை. ஆனால், சமயப் பின்புலத்திலான எண்ணற்ற நூல்கள் அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளன. சமய மோதல் களின் விளைவால் பல கண்டன நூல்களும், தத்தம் சமயம் பற்றிய கருத்தியல் நூல்களும் அச்சாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிகழ்வைப் பதிப்பு வரலாற்றில் பார்க்க முடிகிறது. சமயம் கடந்த ஒரு பொது இலக்கியத்தை அன்றைய புலமையுலகம் கண்டுகொள்ளவும் இல்லை; கண்டெடுத்து வெளி யிடவும் இல்லை. இதற்குப் பதினெட்டு, பத்தொன் பதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சூழலில் நிலவிய சமயம் குறித்த செயல்பாடுகள் அடிப்படைக் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலின் நடுவில் இராம லிங்கம் என்னும் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்து அச்சாக்கும் முயற்சிகள் நடந்தன. இராமலிங்கரின் நாற்பத்து நாலாவது வயதில் அதாவது 1867ஆம் ஆண்டு அவர் பாடல்களின் ஒரு பகுதி தொகுக்கப்பட்டு (முதல் நான்கு திரு முறைகள்) முதன்முதலில் நூலாக வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் இராமலிங்கர் சென்னையை விட்டு வெளியேறி சிதம்பரத்திற்கு அருகிலுள்ள கருங்குழியில் தமது பணியை மேற்கொண்டு இருந்தார். சென்னையில் இருந்த காலத்து இராம லிங்கரின் மாணவராக இருந்தவரும் சென்னையில் ஆசிரியர் பணியை மேற்கொண்டிருந்தவருமான இறுக்கம் இரத்தின முதலியார், அவரின் பாடல் களைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். புதுவை வேலுமுதலியார், செல்வராய முதலியார், தொழுவூர் வேலாயுத முதலியார் ஆகியோர் பாடல் தொகுப்பிற்குத் துணையாக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள்.

பொதுவாகவே இராமலிங்கரின் செயல்பாடு களுக்கு ஈழத்துத் தமிழ்ப் புலமையாளர்களிடத்து (சைவ ஆச்சாரமுடைய) எதிர்ப்புகள் இருந்து வந்துள்ளமையைப் புலமையுலகம் நன்கறிந்த ஒன்று. இதற்கு வரலாற்றுப் பின்புலத்தில் அழுத்த மான காரணங்கள் உண்டு. இந்நிலையில் அவரின் பாடல்களைத் தொகுத்ததும், அவை அருட்பா என்னும் பெயரில் வெளிவந்ததையும் ஈழத்துப் புலமையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனால் அருட்பா X மருட்பா போராட்டம் உருவாகி, அப்போராட்டம் கண்டன நூல்களின்வழி தீவிரமாக நடந்தது. அருட்பா அணியில் சைவத்துக்குள் தமது அடையாளத்தைத் தேடிய இடைநிலைச் சாதியினரும் மருட்பா அணியில் பிற சமயத் தாக்குதலுக்கு எதிர்முகம் கொடுத்துச் சைவத்தை இறுக்கமாகக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி வேளாளர்களும் நின்று போராடினர்.

இராமலிங்கர் பாடல்களின் தொகுப்பிற்குள் செயல்பட்ட ஈழ X தொண்ட மண்டல வித்து வான்களின் புலமைச் செயல்பாடுகள் என்பது மிக முக்கியமானது. இதனை ஈழ தொண்ட மண்டல வித்துவான்களின் முரண்பாடாக மட்டும் புரிந்து கொள்ளாமல் உயர்சாதி (வேளாளர்) மற்றும் இடைநிலைச் சாதியினருக்குமான முரண்பாடாகப் புரிந்துகொள்ளவும் வழி உள்ளது.

இராமலிங்கர் பாடல்களின் தொகுப்பிலும் அருட்பா X மருட்பா போராட்டத்தில் அருட்பா அணியிலும் நின்று செயல்பட்டவர்கள் தொண்ட மண்டல இடைநிலைச் சாதியினர் என்பதையும் மருட்பா அணியிலிருந்து இராமலிங்கர் பாடல் தொகுப்பிற்கு எதிராக நின்று செயல்பட்டவர்கள் உயர்சாதி வேளாளர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களின் உள்ளார்ந்த இவ்வகைச் செயல்பாடுகள் சைவ அடையாளத்தை நோக்கியே இருந்தன. இச்செயல்பாடுகள் இராம லிங்கருக்குத் தெரியாத ஒன்றாக இருந்தாலும் வரலாற்றிற்குத் தெரிந்தே இருந்தது.

மேற்சொன்ன கருத்திற்குக் கீழ்வரும் ஒரு தகவலை இணைத்துப் பார்ப்பதன்வழி அவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இராம லிங்கர் பாடல்களின் ஒரு பகுதி தொகுக்கப்பட்டு அருட்பா என்னும் பெயரில் வெளிவந்ததும் அப் பாடல்கள் அருட்பா அல்ல; மருட்பா என்று சொல்லிக் கண்டன நூல்களின்வழி போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் (1868), ஆறுமுக நாவலரின் மாணவரான யாழ்ப்பாணத்துச் சி.வை.தாமோதரம் பிள்ளை தாம் பதிப்பித்து வெளியிட எண்ணிய தொல்காப்பிய நூலிற்கான விளம்பரத்தில் நாவலரைக் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

தொல்காப்பியம் சொல்லதிகாரம், இதனை வடநூற் கடலை நிலைகண்டுணர்ந்த சேனா வரையருரையோடும் இலக்கண இலக்கியங் களில் மகா வல்லவரும் சென்னை முதல் ஈழமீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான் களில் தமக்கிணையில்லாதவருமாகிய ஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலரைக் கொண்டு பல பிரதிகளோடு வழுவறப் பரிசோதித்திருக்கின்றேன் (2010 : 85).

நாவலரை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது அருட்பா குழுவினரை, (நாவலர் இராமலிங்கரின் செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டார் என்னும் கருத்து இவர்களிடம் இருந்ததே இதற்குக் காரணம்) குறிப்பாகத் தமிழக வித்துவான்களை அவமதிப்பதாகக் கருதப்பட்டது. அதனினும், தொண்ட மண்டல வித்துவான்களை அவமதிப்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இராமலிங்கரின் மாணவருள் ஒருவராகிய நரசிங்கபுரம் வீராசாமி செட்டியார் விஞ்ஞாபனப் பத்திரிகை என்னும் நூலின் வழி சி.வை.தா. கூறியவற்றிற்குக் கீழ்வருமாறு கண்டித்தார்.

நீர் (சி.வை.தா.) தினவர்த்தமானி பத்திரிகையிற் பிரசுரஞ்செய்து வந்ததற்கு இத்தமிழ்நாட்டுப் பிரபுக்களும் வித்துவான்களும் மிகவதிசயப் படுகின்றார்கள். ஏனெனின், எத்தேசத்தாரும் எத் தீபாந்தரவாசிகளும் தமிழ்த் தேசங்களிற் சிறந்த தொண்ட மண்டல வாசிகளோடு பயின்று வருகின்றதனால் நாகரிகம், கல்வி கேள்வி முதலியவற்றிற் பெருமை பெற்று விளங்கி வருகின்றார்கள். ஆதலால் தொண்ட மண்டல வித்துவான்களே சிறந்தவர்கள் என்றும், தொண்ட மண்டலத்திற் சான்றோரும் வித்துவான்களும் மிகுதியென்பதற்குத் தொண்ட நன்னாடு சான்றோருடைத்தென்றும், காலைப் பல கலை நூல் கற்போம் என்றும் ஒளவையார் முதலிய மகான்மாக்கள் புகழ்ந் திருக்கின்றார்கள். இதனை மதுரைக் கடைச் சங்கத்தார் சரிதையினாலும் திருக்குறள் வரலாற்றினாலும் ஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் அச்சிட்டு வருதற்கு வேண்டிய புத்தக உதவி செய்து வருகின்றதினாலும் தொண்ட மண்டல வித்துவான்கள் பெருமையுணர்ந்தீர் இல்லைபோலும் (2010 : 85).

இவ்வாறு சி.வை.தா.வைக் கண்டித்த வீராசாமி செட்டியார் தமிழக வித்துவான்களுள் சிறந்தவர் என்று நாவலரைச் சொன்னதற்கும் தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டுக்குக் குணகடலும் கன்னியா குமரியும் குடகமும் திருவேங்கடமும் எல்லை யெனச் சான்றோராட்சியாய் வழங்குகின்ற தமிழ்நாட்டுள் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் வையையாற்றின் தெற்கும் மருத யாற்றின் வடக்கும் செந்தமிழ் நாடென்றும், இதனைச் சூழ்ந்திருக்கின்ற (தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புனனாடு) என்னும் பன்னிரண்டுங் கொடுந் தமிழ் நாடென்றுந் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றவற்றுள் ஒன்றினுஞ் சேராத யாழ்ப் பாண மென்னும் ஈழத்தீவை இத்தமிழ்நாட்டுக்கு எல்லையென எழுதி வந்தது கொடிமுடியும் வழக்கும், மடைமாறும் வழக்கும் போற் புதுமையினும் புதுமையாக விருக்கின்றது. (மேலது: 85, 86)

தமிழக எல்லைப் பகுதிக்கு உட்படாத ஆறுமுக நாவலரைத் தமிழக வித்துவான்களுள் சிறந்தவர் என்று சி.வை.தா. சொன்னது அறியாமைச் செயல் என்று அவரைக் கண்டித்தும் நாவலரின் புலமையைக் கிண்டல் செய்தும் தொண்ட மண்டல வித்துவான் களைச் சிறப்பித்தும் செட்டியார் கூறியுள்ளார். செட்டியார் கண்டனத்தை எழுதி வெளியிடுவதற்குக் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளையும், தொழுவூர் வேலாயுத முதலியாரும் துணையாக இருந்தனர் (2001 : 42). இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாகச் சிவபாதநேசப் பிள்ளை என்பவர் நல்லறிவுச் சுடர் கொளுத்தல் என்னும் கண்டன நூலை எழுதி வெளியிட்டுள்ளார் (2010 : 685). ஆறுமுக நாவலரின் புலமைச் சிறப்பு பற்றியும் தமிழக எல்லை பற்றியும் விளக்கம் கூறும் வகையில் அக்கண்டன நூல் அமைந்திருக்கின்றது.

நாவலர் குறித்துச் சி.வை.தா. குறிப்பிட்டிருந்த கருத்திற்கு அன்றைய நிலையில் தொண்ட மண்டல வித்துவான்களிடமிருந்து மட்டுமே எதிர்ப்புகள் வந்தன. இவர்கள் இராமலிங்கர் பாடல் தொகுப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் என்பதை மனங் கொள்ள வேண்டும். இந்த ஈழ X தொண்ட மண்டல வித்துவான்களின் செயல்பாட்டிற்குப் பின்னாலிருந்து இயக்கியது சைவ சமயம் பற்றிய கருத்தியல் போராட்டம் என்பது வரலாற்று உண்மை.

இந்து சமயத்தின் தலைமை அந்தணருக்குரிய தென்றால், சைவ சமயத்தின் தலைமை வேளாளருக்கே உரியதென்பது அவர்கள் (வேளாளரின்) கொள் கையாக இருந்தது (2010 : 68). இந்தப் பின்புலத்தோடு மட்டுமே சைவ சமயமும் அது சார்ந்த மடங்களும் செயல்பட்டன. சமூக தளத்தில் புதிதாக மேலெழும்பி வந்து சைவ சமயத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடத் தொடங்கிய இடைநிலைச் சாதியினருக்கு இப்போக்கு எதிராகத் தெரிந்தது. இதன் விளைவு, மடங்களின் தலைமைப் பீடத்தில் இருந்துகொண்டு சைவ சமயத்துக்குள் அதிகாரமுடையவர்களாகச் செயல்பட்ட உயர்சாதியினருக்கு இணையாக நிறுவனங்களை அமைத்துச் செயல்பட்ட இராம லிங்கரிடம் அவர்களை இட்டுச் சென்றது. (இராம லிங்கர் உருவாக்கிய அமைப்புகள் மேற்சொன்னதிலும் வேறுபட்ட ஒன்றாகும்) சைவ சமயத்திற்குள் தமக்குரிய அடையாளத்தைத் தேடிய இவர்கள் இராமலிங்கரின் செயல்பாடுகளையும் பாடல் களையும் அதற்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.

கிறித்துவத்தோடு உறழ்ந்து சைவ சமயத்தை வரையறுத்த நாவலர் அதனை ஆகம அடிப்படை வாதமாகக் கட்டமைத்தார். கிறித்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட இந்து அறிவாளர்கள் மிகப் பெரும்பான்மையோர் முன்னேற்றமான மாற்றங்களுக்கு எதிராகவே இருந்தனர் என்பதோடு நடைமுறையில் நெகிழ்வான பாங்கினைக் கொண்டிருந்த இந்து சமயத்தைக் கறாராக வரையறுக்க முயன்றனர் (2010 : 35).

மேற்குறித்த முயற்சியை முன்னெடுத்ததில் ஈழத்து உயர்சாதித் தமிழ்ப் புலமையாளர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாகும். (ஈழத்தில் பெரும்பான்மையராக இருந்த சிங்கள பௌத்தர் களோடு அரச அதிகாரத்துடன் தங்கள் சமயத்தைக் கிறித்துவர்களும் பரப்ப, தமிழர்களுக்கு - சைவர் களுக்கு ஏற்பட்ட பண்பாட்டு நெருக்கடி இதற்குக் காரணமாகலாம்). அவற்றுள் நாவலரின் பங்களிப்பு செம்பாதிக்கும் மேற்பட்டது. இந்தப் பின்புலத் தோடுதான் நாவலர் - வள்ளலார் முரண்களை, அதாவது ஈழ - தொண்ட மண்டல வித்துவான் களின் முரண்களையும் அவற்றுள் உள்ளிருந்து செயல்பட்ட உயர்சாதி - இடைநிலைச்சாதி முரண்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதலோடு இராமலிங்கர் பாடல்களின் தொகுப்பு வரலாற்றில் அதற்கான ஆதாரங்கள் சிலவற்றைக் காண்போம்.

பொதுவாக, தாம் பாடிய பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டுமென்கிற எண்ணம் இராமலிங்கருக்கு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. அவரது மாணவர்களுக்கும் ஆதரவாளர் களுக்குமே பாடல்களைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கின்றது. (இவர்கள் அனைவரும் தொண்ட மண்டல வித்து வான்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) இவற்றைக் கீழ்வரும் இராமலிங்கரின் கடிதப் பகுதி உறுதி செய்கிறது.

நான் சென்னப்பட்டணம் விட்டு இவ்விடம் வந்தநாள் தொடங்கி நாளதுவரையில் பாடிய பாடல்கள் பல. அவைகளை முழுவதும் எழுதி வைக்க வேண்டுமென்கிற லக்ஷீயம் எனக்கு இல்லாமையால் அப்படி அப்படிச் சிதறிக் கிடக்கின்றன (1971 : 301).

இது, சென்னையிலிருந்து பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதற்காகத் தம்மிடம் அனுமதி கேட்ட தனது மாணவர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு 1860 ஆம் ஆண்டு இராமலிங்கர் எழுதிய கடிதப் பகுதியாகும். 1857 இல் இராம லிங்கர் சென்னையைவிட்டு வெளியேறிய நாள் முதல் அவரது பாடல்களைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர் இறுக்கம் இரத்தின முதலியார். இவரின் முயற்சி 1867 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இராமலிங்கரின் பாடல் களில் ஒரு பகுதி தொகுக்கப்பட்டு அருட்பா என்னும் பெயரில் வெளிவந்தது. 1858 - 1867க்குமான பத்தாண்டு கால இடைவெளியில் பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதில் பல கடிதப் பரிமாற்றங்கள் இராமலிங்கருக்கும் முதலியாருக்கும் இடையில் நடைபெற்றுள்ளன.

கடித வழியாக அனுமதி கேட்டு வந்த இரத்தின முதலியார், இராமலிங்கரின் அனுமதி கிடைக்காத நிலையில் தாம் உண்ணாவிரதமிருந்து அனுமதி பெற்றிருக்கிறார். இருவருக்கும் நடந்துள்ள கடிதப் பரிமாற்றங்களின்வழி இராமலிங்கருக்குப் பாடல் களைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்கிற எண்ணம் அவரது ஆதரவாளர்களின் வற்புறுத்தலால் ஏற்பட்டுள்ளது என்பதாகவே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஊரன் அடிகள் எழுதிய இராம லிங்கரின் வரலாற்று நூலில் இந்த வகையான கடிதப் பகுதிகளைப் பதிவு செய்துள்ளார் (1971 : 302)

1860இல் முதலியார் உண்ணாவிரதமிருந்து அனுமதியைப் பெற்ற பின்னும் இராமலிங்கரின் முழு அனுமதி 1865 வரை கிடைக்கப் பெறவில்லை. இதனைக் கீழ்வரும் கடிதப் பகுதியைக் கொண்டு அறியமுடிகிறது.

கடிதத்திற் குறித்த விஷயம் எனக்கத்துணை அவசிய மின்றாயினும் தங்கள் கருத்தின்படி இறைவனுள்ளிருந்து பாடுவித்தவைகளை மாத்திரம் தாங்களாயினும், செல்வராய முதலியாராயினும் தாங்கள் வரைந்தபடி செய்து கொள்ளலாம். இனி எழுதுவதற்குச் சமயமின்று. ஆகலின் இங்ஙனம் அமைதி செய்தாம் (1971 : 303)

இப்படியாகத் தொகுப்பு முயற்சிகள் நடை பெற்று முடிந்து 1866இல் பாடல்களை அச்சாக்கும் வேலைகள் தொடங்கப் பெற்றுள்ளன. பாடல் களைத் தொகுக்கும் பணியை இரத்தின முதலியார் மேற்கொண்டாலும், இராமலிங்கரின் பாடல் களைத் திருமுறைகளாகப் பகுப்பது, அவற்றுள் எந்தப் பாடல்களை எந்தெந்தத் திருமுறைகளில் இடம்பெறச் செய்வது, எவற்றை முதலில் அச்சிடுவது, தொகுப்பிற்குப் பெயரிடுவது என்பதான முக்கிய பணிகளைத் தொழுவூர் வேலாயுத முதலியார் மேற்கொண்டுள்ளார்.

சில நேரங்களில் பாடல் தொகுப்புப் பணிகள் இராமலிங்கரின் கவனத்திற்கு வராமலும் நடை பெற்றுள்ளன. இதைக் கீழ்வரும் கடிதப் பகுதி உறுதி செய்கிறது.

ஒற்றியூர் பாடல்களையும் மற்றவைகளையும் அச்சிடத் தொடங்குகிறதாய்க் கேள்விப் படுகிறேன். அவைகளைத் தற்காலம் நிறுத்தி வைத்தால் நான் அவ்விடம் (சென்னை) வந்தவுடன் இவ்விடத்திலிருக்கின்ற இன்னுஞ் சில பாடல்களையுஞ் சேர்த்து அச்சிட்டுக் கொள்ளலாம். பின்பு தங்களிஷ்டம். நமது சிநேகிதர் வேலு முதலியாரவர்களுக்கு இதைத் தெரியப்படுத்துவீர்களாக (2010 : 303).

இவ்வாறாக நூல் அச்சாக்கப் பணிகள் முடிவுற்றதும் நூலிற்குப் பெயரிடுவதிலும் இராம லிங்கருக்கு உடன்பாடில்லாத சம்பவங்கள் நடந்து உள்ளன. நூலின் தலைப்பில் இராமலிங்கசாமி அருளிச் செய்த என்று பெயரிட்டதற்கும் அவர் உடன்படவில்லை.

இராமலிங்கசாமி யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலின் இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும் (1971 : 303).

ஆனால், அருட்பா என்று பெயரிட்டதற்கு அவரிடமிருந்து எந்த மறுப்புச் செய்தியும் வெளி வந்ததாக ஆதாரம் இல்லை. பின்னாளைய போராட்டத்திற்கு இப்பெயரும் ஒரு காரணமாக அமைந்ததை நினைவில் கொள்ள வேண்டும். பகட்டுத் தனமான ஆடம்பர விளம்பரத்திற்கு விருப்பமில்லாத இராமலிங்கரின் பாடல்கள் ஒரு பகுதி தொகுக்கப்பட்டு 1867 பிப்ரவரி மாதம் வெளியாயிற்று.

இராமலிங்கர் பாடல்களின் முதல் தொகுப்பு (நான்கு திருமுறைகள்) வெளியான பதின்மூன்று ஆண்டுகள் கழித்து 1880இல் இரண்டாம் தொகுப்பு (ஐந்தாம் திருமுறை) வெளிவந்தது. (இந்தக் காலப் பகுதியிலும் சங்க நூல்களில் ஒரு நூல்கூட அச்சாகி வெளிவரவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது) 1867இல் முதல் பகுதி வெளியான ஆண்டிற்கும் 1880 இல் இரண்டாம் பகுதி வெளியானதற்குமான பதின்மூன்றாண்டுக் கால இடைவெளியில் பல வரலாற்றுத்துவமிக்க நிகழ்வுகள் நடந்து முடிந்து இருந்தன. இந்தக் காலப் பகுதியில் சத்திய தரும சாலை (1867), சன்மார்க்க போதினி என்ற கல்வி நிலையம் (1867) (இதில் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆசிரியராக இருந்தார்), 1596 அடிகளைக் கொண்ட அருட்பெருஞ்சோதி அகவல் (1872) முதலானவற்றை இராமலிங்கர் வழங்கியிருந்தார். இவை மட்டுமல்ல இராமலிங்கர் மறைவு (1874), அருட்பா தொகுப்பதற்கு எதிரான மருட்பா போராட்டம், இப்போராட்டம் முன்னெழுந்ததற்கு காரணமாகச் சொல்லப்பட்ட நாவலரின் மறைவு (1879) என்பதான பல நிகழ்வுகளும் அந்த இடை வெளியில் நடந்து முடிந்திருந்தன. இன்னொரு முக்கியமான அம்சம் இராமலிங்கர் நிறுவிய சன்மார்க்க போதினி என்னும் கல்விச் சாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய தொழுவூர் வேலாயுத முதலியார் அங்கிருந்து விலகி மாநிலக் கல்லூரியில் வந்து, ஆசிரியர் பணியை மேற்கொண்ட நிகழ்வும் இக்காலப் பகுதியில் நடந்து முடிந்திருந்தன.

இராமலிங்கர் பாடல்களைத் தொகுத்து வெளி யிடுவதில் அக்கறையுடன் செயல்பட்ட வேலாயுத முதலியார் இராமலிங்கர் நிறுவிய கல்விச் சாலையில் இருந்து விலகி வெளியேறி வந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவமானது. இந்த விலகளின் பின்னால் உள்ள அரசியலைக் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இராமலிங்கர் பாடல்கள் அருட்பா இல்லை மருட்பா என்ற போராட்ட முன்னெடுப்பு அவரது ஏனைய பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதில் தயக்கத்தை ஏற்படுத்தின. எனவேதான் இராம லிங்கர் மறைந்து (1874) நான்காண்டுகள் கழிந்தும் நாவலர் மறைந்து (1879) ஓராண்டு கழிந்தும் ஐந்தாம் திருமுறையை வெளியிடுகின்றனர் (1880). மயிலை.சி.சோமசுந்தர செட்டியார் வெளியிடக் கேட்டுக் கொண்டதன் விளைவாக வேலாயுத முதலியார் இத்தொகுப்பை அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்.

முதல் இரண்டு பகுதியில் வெளிவராத ஏனைய பாடல்கள் (ஆறாம் திருமுறை) இரண்டாம் பகுதி (ஐந்தாம் திருமுறை) வெளியான ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ளன. முதல் இரண்டு தொகுப்பு களை வெளியிட ஆர்வம் காட்டிய வேலாயுத முதலியார் மூன்றாம் தொகுப்பை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. முதலிரண்டு தொகுப்பிற்கு ஆதரவளித்தவர்களும் பொருளுதவி செய்த சோம சுந்தரம் செட்டியார் அவர்களும் மூன்றாம் தொகுப்பை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. ஆக முதலிரண்டு தொகுப்பை வெளியிட்டுக் கொண்டாடிய இவர்கள் மூன்றாம் தொகுப்பை வெளியிடாமல் பின்வாங்கியுள்ளனர். இச்சம்பவம் மிக முக்கியமானது.

சைவத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடிய இடைநிலைச் சாதியினர் சைவ சமயத்துக்குள் மேலாண்மை செலுத்திய உயர்சாதியினரை எதிர்க்கத் தொடங்கினர். இதன் ஒரு வடிவமாக இராம லிங்கரின் செயல்பாடுகள் மற்றும் அவரது பாடல் தொகுப்பையும் அதற்குள் இணைத்துக்கொள்ள முயன்றனர். ஒரு வகையில் இராமலிங்கர் பாடல்கள் அனைத்தும் அவரது காலமுறைப்படியே தொகுத் தளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு தொகுப்புகளில் வெளிவராத எஞ்சிய பாடல்கள் இராமலிங்கர் கருங்குழியில் வாழ்ந்த காலத்தில் பாடிய பாடல்களாகும்.

நான்கு வருணங்களும், நால்வகை ஆசிரமங் களும் (பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம்) ஆசாரங்களும் (சாதி, மத, குல, ஒழுக்கங்கள்) சொன்ன சாத்திர சரிதங்கள் எல்லாமே பிள்ளை விளையாட்டு என்றும், மேல் வருணம், தோல் வருணம் கண்டு அறிவார் இல்லை என்றும் 1870-களின் தொடக்கத்தில் துணிந்து எழுதியவர் இராம லிங்கர். இதோடு அவர் விடவில்லை. இது வரை வந்த நூல்களில் இந்திரசாலம் என்ற நூலை மட்டும் ஜாலம் என்று கூறுவார்கள்; ஆனால், வேதம், ஆகமம், புராணம், இதி காசம் முதலான அனைத்து நூல்களுமே ஜாலம்தான் என்று மறுத்தார். இவை எல்லாம் பொய் என்றார் (2007 : 109)

மேற்கண்ட கொள்கையிலான பாடல்கள் அனைத்தும் இரண்டு தொகுப்புகளில் வெளி வராதவையாகும். இராமலிங்கரின் சாதி மதங் கடந்த பாடல்களே ஆறாம் திருமுறையில் அடங்குவனவாகும்.

இறுதிக்காலங்களில் சாதி மதம் கடந்து சென்று இராமலிங்கர் பாடிய பாடல்கள் சாதீய சமயச் சார்பான சமூக அமைப்பினைப் பாது காக்கும் நோக்கில் செயல்பட்ட தீவிர சைவப் பற்றுடைய உயர்சாதியினருக்கும் சைவத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடிய இடைநிலைச் சாதி யினருக்கும் எதிராகத் தெரிந்தது. இதன் விளைவு இராமலிங்கரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் அவரது ஆதரவாளர்களாலேயே மௌனப்படுத்தப்பட்டன. இந்த ஆதரவாளர்கள் அனைவரும் உயர் சாதியினர் புறக்கணித்த இடைநிலைச் சாதியினர்; குறிப்பாகத் தொண்ட மண்டல வித்துவான்கள். சைவத்துக்குள் தமக்கான இடத்தை அடைவதே இடைநிலைச் சாதியினரின் நோக்கமேயன்றி சைவத்தைப் புறக்கணிப்பதல்ல. முதல் இரண்டு தொகுப்புகளுக்குப் பொருளுதவி தந்து ஆதரவு அளித்தவர்களும் வேலாயுத முதலியாரும் ஆறாம் திருமுறையைத் தொகுத்து வெளியிடாமல் பின் வாங்கியதை இவ்வாறாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. இதே கால கட்டத்தில் முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய நூலை இரண்டாம் பதிப்பாக வேலாயுத முதலியார் அச்சிட்டு வெளி யிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான புறக்கணிப்பிற்குப் பின்பு, முதல் தொகுப்பு நூல் வெளியான ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழித்து 1885 இல் இறுதித் தொகுப்பு (ஆறாம் திருமுறைப் பாடல்கள்) வெளியிடப் பட்டது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் இராமலிங்கர் பாடலின் முதற்கட்டத் தொகுப்பு முயற்சியில் நடைபெற்ற சம்பவங்களாகும். இம்மூன்று தொகுப்பு நூலை அடிப்படையாகக் கொண்டு விடுபட்ட சில பாடல்களைச் சேர்த்தும் சில பாடல்களை நீக்கியும் பொன்னேரி சுந்தரம் பிள்ளை (பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியார் பொருளுதவியுடன்) (1892 - 6955), ச.மு.கந்தசாமிப் பிள்ளை (புதுக்கோட்டை தி.நா.முத்தையா செட்டியார் பொருளுதவியுடன்) (1924 - 6725), ஆ.பாலகிருஷ்ண பிள்ளை (1930 - 1958 - 5970), ஊரன் அடிகள் (1972 - 5818) ஆகியோர் இராமலிங்கரின் ஆறு திருமுறைப் பாடல்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பித்துள்ளனர். (அடைப்புக் குறிக்குள் பதிப்பாண்டும் பதிப்பாசிரியர்கள் கொண்ட பாடல்களின் எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டு உள்ளன) இப்பதிப்புகளைப்பற்றி விவாதிப்பது இங்கு நோக்கமல்ல. ஆனால், இப்பதிப்புகளுக்குப் பின்னாலும் பல சமூகப் பின்னணியிலான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. அவற்றை வேறொரு வடிவில் முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

தொகுப்பாகச் சில கருத்துகள்

சைவ சமய எதிர்ப்பு X ஆதரவு என்னும் தன்மை களிலும் அச்சு ஊடக வளர்ச்சியின் பின்புலத்திலும் தொகுக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் தொகுப்பு இராமலிங்கர் பாடல் தொகுப்பாகத் தான் இருக்கும்.

கிறித்துவப் பரப்பலுக்கு எதிராக உயர்சாதி வேளாளர்கள் முன்னெடுத்த போராட்டம், சைவத் துக்குள் தனக்கான இடத்தைத் தேடத் தொடங்கிய உயர்சாதியினருக்கு எதிராக எழுந்த இடைநிலைச் சாதியினரின் (அது வெளிப்படையாக இல்லாமல் ஈழ X தொண்டமண்டல வித்துவான்களின் போராட்டமாக இருந்தது) போராட்டம் ஆகிய வற்றின் பின்புலத்தில் இராமலிங்கரின் பாடல் தொகுப்பு முயற்சியில் எதிர்ப்பு X ஆதரவு என்னும் தன்மைகள் தீவிரமாக இருந்தன. இதன் மறுவடிவ மாகவே அருட்பா X மருட்பா போராட்டம் உருவெடுத்தது எனலாம்.

இன்னொரு முக்கியமான நிகழ்வு சைவத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடத் தொடங்கிய இடை நிலைச் சாதியினர் இராமலிங்கரைத் துணைக்கு இட்டுக் கொண்டனர் எனலாம். இந்த நோக்கத்தை மனதில் நிறுத்தியபடி மட்டுமே அவரது பாடல் களைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். பாடல் களை மட்டுமே தொகுத்து வெளியிட்டுக் கொள்ள ஆர்வம் காட்டினரேயன்றி, அவரது கொள்கை களையோ கோட்பாடுகளையோ அவர் நிறுவிய நிறுவனங்களையோ மக்களிடத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடத்து இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருப்பின் அவரது ஆறாம் திருமுறைப் பாடல்களை வெளி யிடாமல் பின்வாங்கியிருக்க மாட்டார்கள். இவர் களது நோக்கம் சைவத்துக்குள் தமக்கான இடத்தைப் பெறுவதேயன்றி சைவத்தைப் புறக்கணிப்பதல்ல. இராமலிங்கரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் சமயத்தைக் கடந்து சமரசத்தைக் காட்டும் பாடல்கள் என்பதால் மட்டுமே புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இராமலிங்கர் பாடல்கள் தீவிர சைவப் பின்னணியிலும் - சைவத்துக்குள் அகப்புற சாதிய எதிர்ப்புப் பின்னணியில் எதிர்ப்பு X ஆதரவு என்னும் தன்மைகளிலும் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மாற்று வடிவமாக எழுந்ததே அருட்பா X மருட்பா போர் என்று சொல்லலாம். இப்போரில் அருட்பா அணியினர் (இடைநிலைச் சாதியினர்) வென்றனரா? மருட்பா அணியினர் (உயர்சாதி வேளாளர்கள்) வென்றனரா? என்றால் சைவம் வென்றது. பின்னாளில் இராமலிங்கரின் பாடல் களைத் தொகுத்து, மருட்பா அணியினர்களுக்கு எதிராகப் போராடிய அருட்பா அணியினரே இராமலிங்கரைக் கொண்டு போய் சைவ சமயத்துக்குள் கரைத்துவிட்ட நிகழ்வுகள் இதற்குச் சான்று. இந்த வரலாற்றுச் சோகத்தை இராமலிங்கர் பாடல்கள் தொகுப்பின்வழி நாம் புரிந்துகொள்ளும் செய்தியாகும்.

துணைநின்ற நூல்கள்

1.     ராஜ் கௌதமன் - கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக.! சி.இராமலிங்கம்       (1823 - 1874) தமிழினி, இரண்டாம் பதிப்பு, 2007.

2.     சரவணன். ப. - அருட்பா X மருட்பா, தமிழினி, முதல் பதிப்பு, 2001.

3.     சரவணன். ப. (ப.ஆ.) - அருட்பா X மருட்பா கண்டனத் திரட்டு, காலச்சுவடு, முதல் பதிப்பு, 2010

4.     வேங்கடசாமி. மயிலை சீனி. - 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு, 2003.

5.     பரமசிவம்.தொ.-சமயங்களின் அரசியல், பரிசல் வெளியீட்டகம், முதல் பதிப்பு, 2005.

6.     ஊரன் அடிகள் - இராமலிங்க அடிகள் வரலாறு, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், முதல் பதிப்பு, 1971.

Pin It