சமூகச் சீர்கேடுகளை அடையாளப்படுத்தி மறுமலர்ச்சி உலகினைக் கனவுகண்ட கவிஞர் தமிழ் ஒளியின் இலக்கியப் பணியோடு வாழ்க்கையினைப் பதிவு செய்கின்ற வரலாற்று ஆவணம் இந்நூல்.

“இமைதிறந்து பார்! விழியை அகலமாக்கு

என்கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்”

என்று தனது கவிதையை உலகத்துக்கான எழுச்சி ஆக்கமாக வெளிப்படுத்திய ஒரு சமூகக் கவிஞனின் எழுத்துக்களைத் தமிழர்களாகிய நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். அவற்றைக் கறையானுக்கு இரை யாக்காமல் பதிப்பித்து, இலக்கிய உலகிற்கு நல்வரவினை நல்கியதோடு கவிஞரின் கவிதைப் பணியையும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் திரு செ.து.சஞ்சீவி அவர்கள் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

மதிப்பு மிக்க எழுத்துக்களைக் கொண்ட ஒரு இலக்கியக் களஞ்சியத்தைத் தமிழகம் அறியாது இழந்துவிட்ட பெருங்கதையைத் தமிழ் உலகிற்கு உணர்த்தும் பொருட்டும் வரலாற்றுப் பக்கங்களின் இணையில்லாத ஒரு எழுத்தாளனின் பெயர் காணாமல் போகக் கூடாது என்ற உயர்ந்த தமிழ் ஆர்வம் கொண்ட எண்ணமும் இந்நூலில் பதிவு செய்துள்ள எழுத்துக்கள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

கவிஞரின் எழுத்துக்களை இலக்கியப் பாணியில் விவரிக்காமல் மிகவும் உணர்வு பூர்வமாக அடையாளப் படுத்துகிறார். இவரின் கவிதைப் பயன்பாட்டு ஆளுமை என்பது கவனிக்கத்தக்கது. கவிதையாக்கப் பொருளான சமூகம், ஏற்றத்தாழ்வு, வர்க்கப் புரட்சி, பொதுவுடைமை, இலக்கியப் பாடுபொருள் சார்ந்த பா வகை என்ற நிலையிலான புதுமைக் கவிதை களையும் போர்க்குணக் கவிதைகளையும் எடுத்துக் காட்டி அவை எழுதப்பட்ட பின்னணியோடு விளக்கு கிறார்.

முதலில் தமிழ் ஒளி ஆரியத்தை ஒழித்து திராவிடத்தை முன்னிறுத்துகிற நோக்கில் கவிதை படைத்தார். கழகம் சார்ந்து கவிதை படைத்தது தொடக்கம் முதல் 1947 வரை என்று வரையறை செய்து சஞ்சீவி விவரிக்கிறார். பின்னர் கவிஞரின் கவிதைத்தளம் என்பது சமூகத்தை நோக்கி மாறுகின்ற போக்கினையும், அந்நிலையில் பாட்டாளி வர்க்கம் சார்ந்து கவிதைகள் படைக்கப்பட்ட விதத்தினையும், அப்போது முகிழ்த்த குறுங்காவியங்களின் முக்கியத் துவத்தையும் விளக்குகிறார் சஞ்சீவி.

செ.து.சஞ்சீவி யதார்த்த நிலையினைக் காப்பிய மாகப் படைத்த கவிஞரின் சமூகப் பார்வையைக் காப்பியங்களின் உருவாக்கப் பின்னணியாக விளக்கு கிறார். மக்களிடம் தனது கவிதைக்கான நிலையான இடத்தினைப் பெற வேண்டும் என்ற உந்துதல் அவரை எவ்வாறு செயல்பட வைத்தது என்பதையும் அதனால் ஏற்பட்ட துன்பங்களையும் விளக்கி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் ஒளியின் கவிதைகள் இன்றைய வாழ்க்கை நிலையிலும் பேசப்படக்கூடியன. கவிஞரின் சில பதிப்பகத்தாரின் பழமை இலக்கிய மோகத்தால் சமூக இயல்பை அடையாளப்படுத்துகிற புதுமை எழுத்துக்கள் ஒளி பெறாமல் போன அவலநிலையினை ஆதங்கமாக வெளியிடுகிறார் செ.து.சஞ்சீவி. இக்கட்டத்தில் கவிஞரின் உள்ளமும் பணிகளும் முடங்கிப் போன நிகழ்வினை இழப்பாகக் கருதிப் பதிவு செய்கிறார்.

செ.து.சஞ்சீவி மரபு இலக்கியங்களைத் தமிழ்ஒளி புதுக் கண்ணோட்டத்துடன் அணுகிப் புத்திலக்கியம் படைத்த நிலையை மூன்றாம் கட்ட கவிதைப் பணியாக விவரித்துச் செல்கிறார். நூல் முழுவதும் கவிஞரின் புதிய சந்த அமைப்பினையும் பா பயன்பாடுகளையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

செ.து.சஞ்சீவி ‘வாழ்க்கை ஓவியம்’ என்று தலைப்பிட்ட பகுதியில் கவிஞரின் பிறப்புத் தொடங்கி புரட்சிக் கவிஞரின் மாணவனாக இலக்கிய உலகில் பரிணமித்ததையும் தொடர்ந்து இலக்கிய ஆக்கங் களையும் பதிவு செய்கிறார். கவிஞனின் உள்ளம் நிலை கொள்ளாத பாங்கினாலும் வறுமையினாலும் ஏற்பட்ட இன்னல்களையும் உணர்ச்சி பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.

இன்னல்களுக்கிடையில் மலர்ந்த சமூகப் படைப் பாக்கங்கள் மக்களைச் சென்றடையாத அவலநிலை யினையும் கவிஞரின் இறுதிக் கட்ட வாழ்வின் அனுபவங்களையும் அடையாளப்படுத்தியதோடு நிலப்பிரபுத்துவம் சார்ந்த நம் சமூக எண்ணங்கள் தான் கவிஞரை உலகிற்கு அடையாளம் காட்டுவதில் தடையாக இருந்தது எனக் கருத்துரைக்கிறார், செ.து.சஞ்சீவி. இக்கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பொதுவுடைமை சார்ந்து எழுத்துக்களை உருவாக்கி கம்யூனிஸ்டு கட்சியில் பணியாற்றிய கவிஞனின் ஆக்கங்களை இயக்கத்தாரும் அடையாளப் படுத்தத் தவறிவிட்டதைச் சுட்டிக் காட்டுகிறார் செ.து.சஞ்சீவி. அவர் தனிக் கவிதைகள் வெளியிடப் பட்ட இதழ்களையும் அதற்குதவிய கவிஞரின் நட்பு வட்டாரத்தையும் நன்றியோடு அறிமுகப்படுத்து கிறார். வெள்ள அலையில் அடித்துச் செல்லவிருந்த கவிதைகளைப் பாதுகாத்து, எதையும் எதிர்பாராத உன்னதமான நட்பு நிலையைக் கொண்டுள்ள திரு.செ.து.சஞ்சீவி அவர்கள் ‘நான் தமிழ் ஆர்வலன் மட்டுமே’ என்று இயல்பாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கின்ற பாங்கு போற்றத்தக்கது. செ.து.சஞ்சீவி இந்நூல் முழுவதும் கவிஞரின் பல்வேறு கவிதைப் பரிமாணங்களையும் அதன் உருவாக்கப் பின்னணியையும் விளக்கியிருக்கிறார்.

தமிழ் ஒளியின் எழுத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற வலியுறுத்தல் நூல் முழுவதும் பதிந்து காணப்படுகிறது. தமிழ் ஒளியின் புகழ், மறுமலர்ச்சி எண்ணங்கள் ஒளிர வேண்டும் என்பதோடு அறிய முடியாத நிலையில் உள்ள கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் கவிதைப் பணியையும் வாழ்க்கை நிலையினையும் அடையாளங்காட்டி உள்ளார், திரு.செ.து.சஞ்சீவி அவர்கள்.
Pin It