இந்த அண்டத்தின் மேற்பரப்பில் விரிந்திருக் கின்ற மிகப்பெரும் ஆகாயத்தை, சகல வசதிகளோடும் அனுபவிக்கின்ற உரிமை பறவையினங்களுக்கு உண்டு என்பதை அறிவீர்கள். அதே அண்டத்தின் கீழ்ப்பரப்பில் படர்ந்திருக்கிற பெரும்பங்கு கடல் நீரின் ஆழிப்பேரலைச் சீற்றங்களுக்கு நடுவேயும் துள்ளித் திரிகின்ற சுதந்திரம் ஒவ்வொரு மீனுக்கும் உண்டு என்பதையும் அறிவீர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழும் மனிதயினம், காதல் பறவைகள், வண்ண மீன்கள் என்கிற பெயரில் வெறும் நான்கடி இரும்புக் கூண்டுக்குள்ளும், கண்ணாடிப் பெட்டிக்குள்ளும் அடைத்து வைத்து சுகங்காணுகின்ற மனநிலை சக்திஜோதியின் கவிதைகளில் துளியும் தென்படவில்லை. அதுதான் அவரது இருத்தலின் அடையாளத்தைக் குறிப்பிட்ட நிலத்தில் காட்டுகிறது.

“மண் கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி

தங்கள் உலகை

மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன சில பறவைகள்”

“உயிரின் வாதையை படபடக்கும் சிறகுகள்

அறிவதில்லை

ஒருபோதும் கூண்டுப் பறவையை

பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை”

பருந்துகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்கூட்டியே தகுந்த வழிமுறைகளைப் பறவைகள் கற்றுத் தேர்ந்திருக்கும். ஆனால் கூண்டுப் பறவைகளுக்கு, பூனையின் அச்சத்திலிருந்து விடுபடுதல் என்பது தினம் தினம் நரக வேதனை அளிக்கும் மிகக் கொடுமையான தண்டனையாகும். அதைப் பறவையினம், விலங்கினம் என்ற குறியீடு மூலம் சுட்டியிருப்பது சக்திஜோதியின் சொற்களின் பலமாகக் கருதலாம்.

கூண்டுப் பறவைக்கும் காதல் இருக்கலாம். ஆனால் முழுமையான காதல்? அதை இன்னொரு கவிதையில்,

“உன் அருகாமையிலிருக்கும்

பெண்ணின் விருப்பத்தை

நீ அறிய ஆவல் கொண்டிருப்பது போல

விருப்பம் என்ற சொல்லை

நீ சொல்வதற்கு தயங்கியவனாயிருப்பதை

ஆவலுடன் பார்க்கிறேன்

யாரோ

புறாக்களை கூடு திறந்து பறக்க விடுகின்றனர்.”

-என்னும் போது சிறை மீண்ட மகிழ்ச்சியின் மன நிலையை எல்லோருக்கும் அளிக்கிறார் சக்திஜோதி.

“ஒரு புன்னகை

அதற்கு ஈடான ஒரு சொல்

அல்லது

அருகாமையை உணர வைக்கும்

ஏதேனும் ஒன்று”

உயிரினங்களுக்குத் துணை என்பது எவ்வளவு அத்தியாவசியமானதாய் இருக்கிறது. அந்த ஏக்கத்தை அடையும் பொருட்டுத் தானே அது எல்லோரையும் உயிர்ப்புடன் செயல்பட வைக்கிறது. துணை என்பது காதலாக உருமாறுவதும், அதுவே ஆசுவாசமளிக்கும் இன்பத்தைத் தருவதும், அந்த இன்பம் பெறக் காத் திருக்கும் தருணம், காற்றில் மிதக்கும் துயரமாகக் கண்களில் காதல் வழிவதும் சகஜமாகிறது.

“குளத்தின் ஆழம்

ஒருபோதும்

தீர்ந்துவிடாத தாகத்தைத் தருகிறது”

இவ்விடத்தில் கடல் என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அது மிதமிஞ்சிய கற்பனாவாதமாகவும், மாயப் பிம்பமாகவும் உரு மாறிட வாய்ப்புண்டு. அதனால்தான் குளம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உயிரினங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லையை நிர்ணயிக்கிறார். குளத்தின் ஆழத்தைப் பொருத்து நீர் வற்றுவதைப் போல இதயத்தில் ஈரமும் ஆழமும் கொண்ட காதல் ஒரு போதும் தீர்ந்துவிடாத அன்பைத் தந்துகொண்டே இருக்கும். அது ஆழத்தை மட்டுமல்ல தாகத்தைப் பொருத்தும் கூடவும் செய்யும். குறையவும் செய்யும்.

இந்தத் தொகுப்பின் என்னுரையில் ஒரு வரி. நதி, மலை, மரங்கள், பறவைகள் என்று தட்டையாக எழுதுவது கவிதையில் அமைந்து விடுகிற விபத்து தான் என்று சக்திஜோதி கூறுவது, கவிதைகளில் தனது முன்னோடிகளின் கருத்தை, இயங்குதளத்தை அப்படியே ஏற்பது போலாகும். இருப்பினும் அகமும் புறமும் பாதிப்பதை எழுதுகிறேன் என சமாதானமடைவது ஒரு விமர்சனத்திற்குத் தரப் படும் பதிலாகவே அது அமைந்துவிடுகிறது. உண் மையில் தட்டையாக எழுதுவது விபத்தல்ல. மெனக் கெடலற்று அவசரமாக எழுதப்படும் போதே அந்த விபத்து நேர்ந்துவிடுகிறது. இப்படியாக கவிதை களில் அவசரம் காட்டாது கவனம் சிதறாது நிதான மாக சொற்களைக் கோத்திருப்பது, கவிதையில் அவர் தேர்ந்திருப்பதை உணர முடிகிறது.

“நீலநிறப் பூக்கள் பூத்திருந்த பூங்காவில்

அமைந்திருந்த நிழற்குடை

காதல்கள் இணைந்ததையும்

காதல்கள் பிரிந்ததையும்

உணர்ந்திருக்கிறது”

“பறவையின் நிழல்

ஆகாயத்திலிருந்து விழும்போது

அவளைவிட்டு வெகுதொலைவு சென்றிருந்தான்”

பிரிவின் வலியைத் தாங்குவதும், சகிப்பதும், சமாளிப்பதும் வாழ்வின் ஒரு செயலென உணர்த்திச் செல்கின்றன சில கவிதைகள். முடிந்துபோன கதைகளுக்குள்ளும் உயிர்த்துக் கொண்டிருக்கும் ஜீவனை, அடுத்த காலத்திற்கும் கொண்டு சேர்க்கும் நேசம் சக்திஜோதிக்கு வாய்த்திருப்பது சிறப்பு. மேலும் நினைவுகளைப் பத்திரப்படுத்தி அவற்றை ஒரே நூலிழையில் தொடர்ந்து படரவிடுவதும் அவருக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

விளையாட்டுத் தந்திரம், மீண்டெழுதல், சமையலறை உலகிலிருந்து - போன்ற கவிதைகளில் பெண்ணைச் சிறுமைப்படுத்துகின்ற ஆணாதிக்கச் செயல்பாட்டை மிகத் துல்லியமாய் எடுத்துரைக் கிறார். பரிணாமம் என்கிற கவிதையில், ஆணினம் பெண் மீது செலுத்துகின்ற மயக்கச் சொல்லாடல் களிலிருந்து நான் பெண் என்பதையும் மறந்தேன். ஆதிசக்தி என்பதையும் மறந்தேன் என்று சுய பரிசோதனை செய்து கொள்கிறார். இதை வாசித்துக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் கூறிய, ‘ஆண் பார்வையில் சொல்லப் பட்ட அடுக்குகளைப் பொசுக்குவோம். ஆயுதக் குவியலென ஆகிவிட்ட அழகுப் பூச்சுகளை மறுத் தழிப்போம். சுத்தம், மலர்ச்சி, பிரியம், புத்திக்கூர்மை, சமூக அக்கறையால் அலங்கரிக்கும் பெண்ணின் இயல்பான அழகை மட்டும் ஆராதிப்போம்’ என்ற வரிகள்தான் நினைவிற்கு வந்தன.

இத்தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கவிதையாக, ‘மணல் இல்லாத ஆறு’ கவிதையைச் சொல்லலாம். ஏனென்றால் இக்கவிதை வாசகனான எனக்கு ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கலாம் அல்லது என் ஆற்றங்கரையில் மணலே இல்லாதது நெருங்கிய உறவைப் பறிகொடுத்த சோகமாகக் கூட இருக்கலாம்.

“லாரிகள் சுமக்கும் மணல்களில்

சிறுநத்தைகள் சுருண்டு மடிகின்றன”

என்னும்போது மணல் பற்றிய அபிப்பிராயங்களை தன் சந்ததிகளுக்கும் சொல்ல வேண்டுமென்ற பரிதவிப்பும் சுருண்டு மடிவது சகித்துக் கொள்ள முடிவதாயில்லை.

ப்ரியங்களின்

அடர்த்தியான வண்ணங்களை

எதனாலும் மாற்ற முடியாமல்

தவிக்கிறது

இந்தப் பிறவி...

இந்தப் பிறவி சக்திஜோதிக்கானது. இந்த ஆகாயமும் அவருக்கானதே.
Pin It