இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான மதுரை, காலவெள்ளத்தில் தாக்குப்பிடித்து நிலைத்திருப்பது பெரிய விஷயம்தான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் மதுரையின் முகமானது பன்முகத்தன்மை உடையது. ஒரு நகரம் என்பது வெறுமனே கட்டடங்களும் தெருக்களும் நிரம்பிய இடமும் வெளியும் சார்ந்தது மட்டுமல்ல. ஆறு தன் பாதையை மாற்றிக்கொள்வது போல, மதுரை போன்ற பழமையான நகரமும், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றியிருந்திருக்க வாய்ப்புண்டு. பழம் பெருமையை மட்டும் முன்னிறுத்திக்கொண்டு புறத்திலிருந்து வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வது என்பது அந்நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

கி.பி.1333-இல் மதுரை நகரில் டில்லி சுல்தானிய அரசு ஏற்பட்டது என்ற தகவல் பரிசீலனைக் குரியது. அன்றைய காலகட்டத்திலிருந்து பல்வேறு அரசியல் மோதல்கள், போர்கள் மதுரையை மையமாக வைத்துத் தொடர்ந்தன. இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என வேற்று மொழியினரின் அதிகாரத்தின் கீழ், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மதுரைக்காரர்கள் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்தது. மதுரையில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவியபோது, துணி நெசவினுக்காகக் குஜராத் பகுதியி லிருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ;ட்ரா மொழிபேசும் மக்கள் இன்று மதுரையெங்கும் பரவியுள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகச் சௌராஷ;ட்ரர் ஒருவர் தான் கடந்த பத்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று விநோதம்தான். ஒப்பீட்டளவில் பல்வேறு மாற்றங்களுடன் நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் மதுரை நகரின் ஆன்மா தனித்துவமானது.

madurai_600

இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் எல்லா விதமான பண்பாட்டு அடையாளங்களும் சிறுக்கப்பட்டு, வேக வேகமாக ஒற்றைத் தன்மைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில், மதுரை நகரம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. எனினும் 1960 முதல் 1980 வரை நவீனத்துவத்தின் ஆளுமை படராத மதுரை நகரானது, வெள்ளந்தியான பெரிய கிராமமாகச் சோம்பிக் கிடந்த நிலையைப் பதிவாக்கிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்ற பதிவு எதிர்காலத்தில் சமூக வரலாறாகிவிடும். அவ்வகையில் 1960இல் தொடங்கி மதுரை நகரத்தின் இயல்புகளை என் சொந்த அனுபவத்தின் மூலம் பதிவு செய்ய முயன்றுள்ளேன்.

மதுரை நகரின் மையமாக உள்ள மீனாட்சி அம்மன் கோவிலை முன்வைத்துச் சதுர வடிவில் விரிந்துசெல்லும் தெருக்கள் நெரிசலாகவும் இறுக்கமாகவும் இன்றளவும் உள்ளன. மாடுகளை வளர்த்துப் பால் வியாபாரம் செய்யும் கோனார் சாதியினர் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பெரு மளவில் குடியிருந்தது இன்றும் தொடர்கின்றது. மீனாட்சி அம்மன் கோவிலும், அங்கு ஆண்டு முழுக்க நடைபெறும் பல்வேறு திருவிழாக்களும் பெரிய அளவில் சாதாரண மக்களை ஈர்க்காத காலகட்டம் இருந்தது. 1930களில் கூட பிறப்பினால் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார் சாதியினரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று வைதீக இந்து சமயம் தடை விதித்திருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பெரிய அளவில் தொடர் பில்லை. வடக்குக் கோபுரத்துக்கு வெளியே இருக்கும் ‘முனியாண்டி’ சாமியை வழிபடும் மக்களில் பலர், பிரமாண்டமான கோவிலுக்குள் நுழைவதில் ஆர்வமற்று இருந்தனர். மதிய வேளையில் கோவில் நடை சாத்தப் பட்டவுடன், வெளிப்பிரகாரத்தில் ஜிலுஜிலூவென வீசும் காற்றில் வயதான ஆண்கள் பலர் படுத்து உறங்கினர். ஓண்டிக் குடித்தனத்து வீடுகளில் பகல்வேளையில் உறங்க வாய்ப்பற்ற முதியவர்களுக்குப் பொழுதைப் போக்கிடவும் உறங்குவதற்கான இடமாகவும் கோவில் விளங்கியது.

மதுரை என்றால் ‘சித்திரைத் திருவிழா’ பலருக்கும் நினைவுக்கு வந்த காலகட்டம் இருந்தது. சித்திரை மாதம் முழுமதி நாளில், மதுரையைச் சுற்றி 25 மைல் தொலைவில் வசிக்கும் மக்களில் பலர் மதுரைக்கு நடந்தும், மாட்டு வண்டி களிலும் வருவது வழக்கமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் மதுரைக்கு வந்தவர்களின் நோக்கம், ஆற்றில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரைத் தரிசிப்பது மட்டுமல்ல. ஒரு வகையில் கொண்டாட்டம் தான். வருடம் முழுக்க வயல்வெளியில் கடுமையாக உழைத்த கிராமத்தினர், அரிசி, கிடாய், சேவல், விறகு, பாத்திரம் என வண்டிகளில் எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் மதுரை நகரின் திறந்த வெளித்திடல்களில் தங்கி, சமைத்துச் சாப்பிடுவதில் உற்சாகமடைந்தனர். விடலைப் பருவத்தினர் மதுரை நகரத்துத் திரையரங்குகளில் தவமிருந்து ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அப்புறம் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட் காட்சி, சுற்றிப் பார்க்கவும், பொருட்களை வாங்கவும் ஊக்க மளித்தது.

அறுபதுகளில்கூட வைகை ஆறு மணல் படுகையுடன் மதுரை நகருக்குள் அழகாகக் காட்சியளித்தது. கடும் கோடைக் காலத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஆற்றின் ஓரமாகச் சென்றுகொண்டிருக்கும். ஆற்றின் நடுவில் பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் தென்னங்கீற்றினால் பெரிய பந்தல்கள் போட்டிருப்பார்கள். வி.எஸ்.செல்லம் சோப், சைபால் களிம்பு, கோபால் பல்பொடி, பூச்சிபாக்கு, ஆர்.எஸ்.பதி மருந்து, தென்னைமரக்குடி எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தாருடன், தனிப்பட்ட அமைப்பு களும் சேர்ந்து ஆறு முழுக்கக் கொட்டகைகள் போட்டிருப் பார்கள். அழகர், ஆற்றில் இறங்கிய மறுநாள் இரவில் பத்துவிதமான அலங்காரத்தில் காட்சிதருவார். அதனைக் காண மதுரை நகரத்து மக்கள் புளியோதரை மற்றும் தின் பண்டங்களுடன் இரவு முழுக்கக் குழுமியிருப்பார்கள். ஓடி விளையாடிய குழந்தைகள் கொட்டகைக்குள் ஆனந்தமாக உறங்குவார்கள்.

வைகை ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் பெருகியோடுவது செய்தியாக மாறாத காலகட்டமிருந்தது. ஒரு மாதம்கூட ஆள் இறங்கமுடியாத அளவுக்குச் சீறிப்பாய்ந்து வெள்ளம் சுழித்தோடியது. வெள்ளம் வற்றியபிறகு, ஆயிரக் கணக்கான மக்கள் ஆற்றில் குளிப்பதும் துணிதுவைப்பதும் என மதுரை மக்கள் வாழ்க்கை முழுக்கமுழுக்க ஆற்றைச் சார்ந்திருந்தது. ‘புலவர் நாவில் பொருந்திய வையை என்னும் ‘பொய்யாக் குலக்கொடி’ எனப் பரிபாடலில் போற்றப்படும் வையை, பண்பாட்டின் அடையாளமாக மதுரை நகர மக்களுடன் பின்னிப்பிணைந்திருந்த காலகட்டம் இருந்தது என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது.

மதுரை நகரத்து மக்களுக்கு இயல்பிலே ‘தெனாவட்டு’ அதிகம். பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் நகரத்தில் தொடர்ந்து தலைமுறைகளாக வாழ்ந்து வருவதனால், எது குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளாத மனப்பாங்கு பலருக்கும் உள்ளது. இதனால் எல்லாவற்றையும் ‘பகடி’ செய்வது சாதாரணமாக நடைபெறுகிறது. சுமை தூக்கும் தொழிலாளி, ரிக்ஷாக்காரர், பேருந்து நடத்துநர், எனத் தொடங்கி யார், யாரை வேண்டுமானாலும் கேலி, கிண்டல், லந்து செய்தாலும் யாரும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்; கேலிக்குள்ளாகும் நபரும் மெல்லச் சிரித்துக் கொள்வார்.

“நாங்க எல்லாம் ஊருக்குள்ளே ரொம்பப் பேருக்கு யோசனை சொல்றவிங்க” என்று சொல்வதாக திரைப்பட நடிகர் வடிவேலு சித்திரிக்க முயலும் ‘உதார்’ பேர்வழி, மதுரையின் அடிமட்டத்துக் ‘கச்சா’ ஆள். “ஏய் எங்ககிட்டேயே உன் வேலையைக் காட்டுறீயா?... நாங்க எல்லாம் அரிவாளை எடுத்தோம்... யோ யாருன்னு தெரியாமலே பேசிட்டுப் போறியே... என்னா நீ பாட்டுக்குப் போறே... மாமா நிக்கிறேன் இல்ல... மாமாவைக் கவனிச்சிட்ல போ... மாப்பிள்ளை நாம் விட்ட உதார்ல ஆள் டர்ராயிட்டான்... அவன் பண்ணின வேலைக்குச் சங்கைக் கடித்துத் துப்பினால்...” இப்படியான மதுரை நகரத் தெருப்பேச்சுக்கள் கட்டமைக்கும் புனைவுகள் அளவற்றவை. ‘நாங்க, எங்க’ என்ற சொற்கள் மூலம் சலம்பு கிறவர் உணர்த்த விரும்புவது, தான் ஒரு பெரிய கும்பலின் ஆள் என்று. தெருவோரத்தில் அமர்ந்து இதுபோன்று வீம்பு பேசும் பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. ஒரு காலகட்டத்தில் மதுரை நகரில் ரௌடிகள் வெவ்வேறு பகுதிகளில் ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தனர். பாண்டி என்ற சொல்லுக்கு முன்னால் ஏதோ ஒரு ஒட்டுடன் வலம் வந்த ரௌடிகள் காலப்போக்கில் மறைந்து போயினர். சிலர் மதுரை நகரத் தெருவோரத்தில் குத்துப்பட்டுச் செத்துக் கிடந்தனர். மக்களைப் பயமுறுத்தி வாழும் ரௌடிகளின் காலம் என்பது மிகக்குறுகியது. வெறுமனே ரௌடி என்ற லேபிளுடன் வாழ்ந்த ரௌடிகள் இன்று அரசியல் வேஷம் பூசிக்கொண்டு, ‘அண்ணன்’ ஆதரவில் மதுரை மக்களுக்குத் தந்து கொண்டிருக்கும் தொந்தரவுகள் அளவற்றவை.

இரவு முழுக்க மதுரை நகரத் தெருக்களில் ‘வழிப்பறி’ பற்றிய பயமில்லாமல் நடந்து செல்லலாம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதலாகச் சிம்மக்கல், முனிச்சாலை, காளவாசல், தத்தனேரி என நகரமெங்கும் இரவுக் கடைகள் விழித்திருக்கும். எந்தப் பொருளையும் நள்ளிரவு நேரத்திலும் வாங்கலாம். இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை எந்த நகரப் பேருந்தும், புறநகர்ப் பேருந்தும் இயங்காத காலகட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திரை யரங்குகளில் இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கிளம்பியவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்கள். எழுபதுகளில் கவிஞர் சமயவேல், புதிய ஜீவா, காமராஜ், முருகேசன் போன்ற பல நண்பர்களுடன் இரவு முழுக்க மதுரைத் தெருக்களில் நடந்தவாறு பேசிக் கொண்டு, பொழுது புலர்ந்தவுடன் கிளம்புவது எனது வழக்கம். எங்களைப் போன்று பல்வேறு குழுவினர் தெருக்களில் நடந்து கொண்டிருந்தனர். தேநீர், புகைத்தல் எனப் பேச்சுகளும் மறு பேச்சுகளும் காற்றில் மிதக்கும். ‘இராப் பறவை’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மதுரைக்காரர்கள் புரிந்து வைத்திருந்தனர். “சும்பப்பயல்தான் ராத்திரியில் தூங்குவான்” என்று மூத்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு எழுதியிருப்பது தற்செயலானது அல்ல ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாகும்.

எண்பதுகளின் முற்பாதியில் நாவலாசிரியர் ப.சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார், “மதுரை மாதிரி ஒரு ஊர் வராதுங்க. ராத்திரி எந்த நேரம் னாலும் எது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், என்ன வேணும்னாலும் வாங்கலாம்” என்று, இரவு என்பது மனித உயிர்கள் உறங்குவதற்காக என்ற கருத்தினைப் புரட்டிப் போட்டு, இருளின் வழியாகத் தங்கள் இருப்பினைத் தேடிய மதுரைக்காரர்களின் உலகம் வேறுவிதமானது.

‘அந்தி வேளையானால் அசைவ உணவு’ என்ற வாசகங் களுடன் எழுபதுகளில் மதுரையில் பிரபலமான மிலிடரி ஓட்டல் அல்லது சால்னாக் கடை, இன்று தமிழகமெங்கும் மட்டுமல்ல கேரளாவிலும் பரவிவிட்டது. புரோட்டா, ஆட்டிறைச்சி உணவு வகைகளுடன் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும் உணவகங்களுக்கெனத் தனிப்பட்ட வாடிக்கையாளர் இருந்தனர். அதிலும் கீழவாசல், விளக்குத் தூண், முனிச்சாலை, தெற்கு வெளிவீதி, தெற்குவாசல் போன்ற பகுதிகளில் இரவு நேர உணவகங்கள் இன்றும் விNஷசம் தான். மதுரை கீழவாசல், முனிச்சாலை பகுதிகளில் இரவு 9 மணிக்குமேல் தெருவோரம் சௌராஷ;டிராகாரர் களால் தொடங்கப்பட்ட இட்லி, தோசை கடைகளில் வழங்கப் பட்ட உணவுகள் வீட்டுத் தயாரிப்புகள் போலிருந்தன. வகை வகையான சட்டினிகள் சுவையாகப் பலரையும் கவர்ந்தன. பொங்கல், புளியோதரை, தக்காளிச் சாதம் போன்ற உணவு வகைகள் சுவையுடன் சௌராஷ;டிரர் தொடங்கிய ‘அன்ன பூரணி பொங்கல் கடை’ இன்றும் பிரசித்தமாக உள்ளது. பருத்திப்பால், ஜிகர்தண்டா போன்ற பானங்கள் பல்லாண்டு களாகப் பிரபலமாக உள்ளன. தென்னை மரத்தின் குருத்தினை மெல்லிய சீவல்களாகச் சீவி விற்கிறவரும் அதை வாங்கி விருப்பத்துடன் உண்கிறவர்களும் நிரம்ப உள்ளனர். இரவு வேளையில் 2 மணிக்குக் கண் விழிக்கும்போது, பசி யெடுத்தால் சாப்பிடுவதற்குத் தெருவோரத்தில் கடைகள் உண்டு என்பது அற்புதமான விஷயம் தானே.

மதுரை போன்ற பழைய நகரத்தின் முகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் உணவகங்கள் தான். நெல்பேட்டை சோயா ஹோட்டல், டி.எம்.கோர்ட் மெட்ராஸ் ஹோட்டல், டவுன்ஹால்ரோடு சுல்த்தானியா ஹோட்டல், ரயில்நிலையம் எதிரில் அன்னபூரணி ஹோட்டல், காலேஜ்ஹவுஸ் ஹோட்டல், ஸ்ரீராம் மெஸ், விளக்குத்தூண் அருளானந்தம் ஹோட்டல், சித்திரக்காரத்தெரு தேரியப்பன் ஹோட்டல், நேதாஜிரோடு மாடர்ன் ரெஸ்டாரண்ட்... என நகரமெங்கும் பரவியிருந்த உணவகங்களில் சில இன்று மறைந்துவிட்டன. இஸ்லாமியர் நடத்திய உணவகங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்படுவதாகப் பேச்சு நிலவினாலும், அந்த உணவகங்களுக்கு விருப்பத்துடன் போகின்றவர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. டி.எம்.கோர்ட் என அழைக்கப்படும் இடத்தில் - இன்றைய தெற்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடம் - இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் நான்கு பேர் சேர்ந்து சாப்பிடும் வகையில் சிறிய அறைகள் தள்ளு கதவுடன் இருந்தன. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சம்சாவைப் புதினா சட்னியைத் தொட்டுத் தின்று, தேநீர் குடித்தனர். பன்பட்டர் ஜாம், சமோசா போன்ற உணவுகள் அந்த உணவகத்தில் பிரபலம். தேநீரைக் குடித்துவிட்டு ஒரு மணிநேரம்கூட அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப் போம்;;;. உணவக உரிமையாளர் எதுவும் சொல்லமாட்டார். போரடித்தால் இன்னொருசெட் சம்சா, தேநீர் எனப் பேச்சு நீளும். வித்தியாசமான உணவு, பேச்சு என இடமளித்த மெட்ராஸ் ஹோட்டல் மறைந்து போனது வருத்தமானதுதான்.

சைவ உணவிற்கு காக்காத் தோப்புத் தெருவில் இருக்கும் ஸ்ரீராம் மெஸ், அசைவ உணவிற்கு அருளானந்தம் ஹோட்டல், தேரியப்பன் ஹோட்டல் இன்றும் பிரபலமாக விளங்குகின்றன. ‘விருதுநகர் மண்பானைச் சமையல்’ என்ற வாசகங்களைத் தாங்கிய பெயர்ப்பலகையுடன் அசைவ உணவகங்கள் விளங்கின. விருதுநகர் நாடார் சமையல் அசைவ உணவிற்கு இன்றும் பேர் போனது.

பெரிய பித்தளை டம்ளர் டபரா காபி, தவளைவடை, பஜ்ஜி, கேசரி என விளங்கிய கீழ அனுமந்தராய கோயில் தெருவில் இருந்த ‘கோமதி விலாஸ் உணவகம்’ சுவைக்குப் பிரபலமானது. சின்னக்கடை என்றாலும் மாலை வேளைகளில் கூட்டம் மொய்க்கும்.

கீழவெளிவீதி, அம்சவள்ளி அசைவ உணவகம் பிரியாணிக்குப் பிரபலமானது. இஸ்மாயில்புரம் தெருக்களில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அந்தப் பிரியாணி என்றால் மிகவும் இஷ;டம். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாகியும் அந்தக் கடைக்கு எனச் சுவைப் பிரியர்கள் கூட்டம் தனியாக இன்றும் உள்ளது. அயிரை மீன் குழம்பு, விரால் மீன் குழம்பு, மட்டன் சுக்கா, கோலா உருண்டை, தலைக்கறி எனச் சிறப்பு வகைகளுடன் மதுரைக்கெனத் தனித்த சுவையுடன் அசைவ விரும்பிகளுக்கு உணவகங்கள் வழங்கிக் கொண்டிருக் கின்றன.

மதுரைத் தெருக்கள் ஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என அடுத்தடுத்து விரிந்துகொண்டே யிருக்கின்றன. நான்கு திசைகளிலும் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைவிட்டு அலைபோலத் தெருக்கள் விலகிப் போகுமாறு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெருவிலும் ஒரே வகைப்பட்ட பொருட்கள் கிடைப்பது பல நூற்றாண்டு களாக மதுரையில் வழக்கினில் உள்ளது. சுண்ணாம்பு விற்கும் சுண்ணாம்புக்காரத் தெரு, வைக்கோல் விற்கும் வைக்கோல் காரத்தெரு, தென்னோலை விற்கும் தென்னோலைக்காரத் தெரு என நீளும் தெருக்களின் பெயர்கள் தனித்த ஆய்விற் குரியன. துணிமணிகள் விற்கும் விளக்குத்தூண், ஆயிரக் கணக்கான நகைக்கடைகள் இருக்கும் தெற்காவணிமூலவீதி, மின்பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விற்பனையாகும் மேலமாசிவீதி, வாகனங்களின் உதிரிப் பொருட்கள் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் அடங்கிய வடக்குவெளிவீதி, பலசரக்குக்கடைகள் நிரம்பிய கீழமாசி வீதி என இன்றளவும் தனித்து விளங்குகிறது.

மதுரை நகரத்தின் அடையாளமாக மேலவெளி வீதியில் அமைந்துள்ள விக்டோரியா ஹால் பழமை கசியப் பிரகாசிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட அந்த அரங்கில் பகல்வேளையில் நூலகமும் மாலை வேளையில் திரையரங்கமாகவும் செயல்பட்டது. இன்று அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியில் நூலகம் செயற்படுகிறது. மேலைநாடுகளில் தயாரிக்கப்பட்ட செவ்வியலான ஆங்கிலப் படங்கள் மட்டும் ரீகல் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப் பட்டன. எழுபதுகளில் கல்லூரியில் பணியாற்றிய ஆங்கிலப் பேராசிரியர்கள், “அந்தத் திரையரங்கத்துக்குப் போய் ஆங்கிலப் படங்களைப் பாருங்கள். ஆங்கில அறிவு வளரும்” என ஆலோசனை கூறினர். கல்லூரி மாணவர்கள் கூட்டம், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு விருப்பத்துடன் கூடியிருந்தது.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ படத்தை இரு ஆண்டுகள் திரையிட்ட சிந்தாமணி திரையரங்கு இன்று மௌனத்தில் உறைந்திருக்கிறது. ஆசியாவிலே மிகப்பெரிய திரையரங்கு எனப் பெருமையுடன் பேசப்பட்ட ‘தங்கம் டாக்கீஸ்’ வெற்றுக் கட்டடமாக நிற்கிறது. கீழ்த்தளத்தில் மூன்றாம் வகுப்பு எனப்படும் ரூ.1.15 டிக்கெட் மட்டும் 1500 எண்ணிக்கையில் தரப்பட்டது. அந்த திரையரங்கில் ஒரு படம் நூறு நாட்கள் ஓடினால் பெரிய விஷயம் என ரசிகர்கள் பேசிக்கொள்வார்கள். மழைக்காலத்தில் இரவு இரண்டாம் ஆட்டம் தங்கம் டாக்கீஸில் மாடிக்குப் போனால், சிலர் இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். பிரமாண்ட தியேட்டரில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆட்கள் இருப்பது, ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்தும். முதலாகக் கட்டப்பட்ட வீடு அமைப்பி;ல் இருந்த மதுரையின் இம்பீரியல் தியேட்டரில் ரிக்ஷாக்காரர்களும் குதிரை வண்டிக்காரர்களும், சுமை தூக்குபவர்களும் எனக் கூட்டம் நிரம்பி வழியும்.

எங்கும் வெற்றிலை எச்சில் உறையுடன் கொச்சை நாற்றத்துடன் விளங்கிய அத்திரையரங்கில் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். கஞ்சா புகை வீச்சமும் மூத்திரக் கவிச்சியும் கமழும் அந்தத் திரையரங்கினுக்கென நிரந்தரப் பார்வை யாளர்கள் இருந்தனர். விளக்குத்தூண் சிடி சினிமா, முனிச் சாலை தினமணி டாக்கீஸ், ஜான்சிராணி பூங்கா நியூசினிமா, மேலமாசிவீதி சந்திரா டாக்கீஸ், வி.பி. சதுக்கம் தேவி டாக்கீஸ் எனக் கொடிகட்டிப் பறந்த திரையரங்குகள் மறைந்து போய்விட்டன. சென்ட்ரல், கல்பனா, மீனாட்சி போன்ற பழைய திரையங்குகள் இன்றும் தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பது பெரிய சங்கதி தான். திருமணமான இளம்தம்பதியர் முதன் முதலாகத் திரையரங்கு சென்று திரைப்படம் பார்த்தல் என விரியும் தமிழர் வாழ்க்கையில், இன்று தொலைக்காட்சி வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய போது, சினிமா ரசிகர்மன்றங்கள் எனத் தெருவுக்குத்தெரு தோற்றுவிக்கப்பட்டு மோதல்கள் உருவான காலகட்டம் கொதிப்பாக இருந்தது. தனது அபிமானத்திற்குரிய நடிகர் நடித்த திரைப்படத்தை வெளியான முதல்நாள் முதல் காட்சியில் பார்ப்பது என்ற வெறியுடன் திரையரங்க வாசலில் பதினெட்டு மணி நேரங்கள் வெயிலிலும் மழையிலும் பனியிலும் காத்துக் கிடந்த ரசிகர்களை ‘எது’ பிடித்து ஆட்டியது என்பது முக்கியமான கேள்வி.

மதுரை பால நாடக சபா, மதுரை பால விநோதினி சபா என்ற பெயர்களுடன் நாடகக் கம்பெனிகள் போன நூற்றாண்டில் வெவ்வேறு ஊர்களில் தொடங்கப்பட்டது விநோதம். சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிவைத்த நாடகங்கள் இன்றளவும் மதுரை, புதுக்கோட்டை, ராமநாத புரம் மாவட்டங்களால் நடத்தப்பெறுகின்றன. ஒப்பனக்காரத் தெரு என அழைக்கப்படும் நாடக நடிகர் சங்கத் தெருவைச் சுற்றிலும் நாடக நடிகையர், இசைக் கலைஞர்கள் இன்றளவும் வாழ்ந்துவருகின்றனர். வள்ளித்திருமணம், பவளக்கொடி, மதுரைவீரன், அரிச்சந்திரா மயானகாண்டம் போன்ற நாடகங்கள் கிராமப்புறத் திருவிழாக்களால் இரவு 11 மணிக்குத் தொடங்கி விடியவிடிய நடத்தப்படுகின்றன. ராஜபார்ட், ஸ்திரிபார்ட், பபூன், காமிக்பெண் என்ற முதன்மைப் பாத்திரங்களுடன் நடத்தப்படும் நாடகக் கலைஞர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து நாடகம் நிகழுகின்ற ஊரில் கூடிப் பின்னர் நடிக்கத் தொடங்குகின்றனர்.

ஒரு கிராமத்தில் ‘வள்ளித் திருமணம்’ நாடகம் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பட்டாலும், நாடக நடிகையர் வேறுவேறு என்ற நிலையில், குறிப்பிட்டவர்கள் எப்படி நடிக்கின்றனர் என்பதுதான் முக்கியம். இத்தகைய நாடகங் களுக்கு இன்று இளைய தலைமுறையினரிடம் வரவேற் பில்லை. திருவிழாவில் ‘வள்ளித் திருமணம்’ நடத்தினால் தான் நன்கு மழை பெய்து, ஊர் செழிக்கும் என்பது கிராமத் தினரிடையே ஐதீகமாக உள்ளது. எனினும் திரைப்படப் பாடல் ஒலிக்க, அக்காட்சியை மேடையில் நடனக் கலைஞர்கள் ஆடிக்காட்டும் ‘ஆடல் பாடல் காட்சி’ இன்று மதுரையில் பிரபலமாக உள்ளது. நீளமான தலைமுடியுடன், ஜிப்பா அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் மதுரை நாடக நடிகர் சங்க வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ‘ராஜபார்ட்’ நடிகரின் கண்களின் முன்னால் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கிறது. மின்னொளியில் இரவு முழுக்கப் பாடி, தர்ச்சித்துப் பெற்ற கை தட்டல்கள் அவரைக் கனவுலகிற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை சந்தை, நாயடி சந்தை என இரு சந்தைகள் உள்ளன என்பது பலருக்கு வியப்பைத் தரும். பொதுவாகச் சந்தை எனப்படுவது, வாரத்தில் ஒருநாள் பல்வேறு வியாபாரிகள் கூடி, ஒரே இடத்தில் நடத்தப்படுவது. அன்றைய நாளில் மக்களும் திரண்டுபோய் தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்குவது வழக்கம். மதுரை திலகர் திடலில் நிரந்தரமாகக் காட்சியளிக்கும் சந்தை முன்னர் ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்கள் மட்டும் நடைபெற்றன. பிற நாட்களில் அந்தத்திடலில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்று எல்லா நாட்களிலும் சந்தை உண்டு. பழைய புதிய பொருட்கள் எது வேண்டுமானாலும் அங்குக் கிடைக்கும். வாகனங்களின் இஞ்சின்கள், இசைத்தட்டுகள், மேசை, Nஷh-கேஸ்கள், தாரா வாத்து, செல்ல நாய்க்குட்டிகள், பச்சிலை மருந்துகள், மரக் கதவுகள், இரும்புக் குழாய்கள், இயந்திர உதிரிப் பாகங்கள், சுத்தியல், ஸ்பானர் போன்ற கருவிகள், மண் பானைகள், கணினி... என எது வேண்டுமானாலும் அங்குப் பேரம் பேசி வாங்கலாம். பந்தயப்புறா, வண்ண மீன்கள், கின்னிக்கோழி, வான்கோழி... எனப் பட்டியல் நீளும். மிகக்குறுகலான சந்துகளுடன் அடைகளமாகப் பொருள் குவிந்து கிடக்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தையைச் சும்மா சுற்றி வந்தாலே மனம் நிறைவாக இருக்கும். பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களும் புதிய பொருட்களும் விலை சல்லிசாகக் கிடைக்கும் என்பதற்காக அடிக்கடி சந்தைக்குப் போய்ச் சுற்றிப் பார்க்கும் வழக்கமுடையவர்கள் மதுரையில் கணிசமாக உண்டு.

எழுபதுகளில் பரபரப்புடன் இயங்கிய மதுரைத் தெருக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். மீனாட்சியம்மன் கோவில் வெறுமனே வழிபாட்டுத் தலமாக அப்பொழுது இருந்தது. சுற்றுலா மையமாக மாறாத காலகட்டம் அது. ஐயப்பன் வழிபாடு பிரபலமாக இல்லை ; ஆதிபராசக்தி வழிபாடு அறிமுகமாகாதநிலை. எனவே பெருங்கொண்ட கும்பல் கறுப்பு ஆடை அல்லது செவ்வாடைகளுடன் கோயிலில் மொய்க்காத நிலை. எப்பொழுது வேண்டுமானாலும் கோவிலுக்குப் போய் அம்மனைப் பரபரப்பின்றித் தரிசிக்கலாம். அதுவும் சுவாமி சந்நிதியில் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும். பொற்றாமரைக் குளக் கரையில் கல்லூரி மாணவர் கூட்டம், இளம் திருமணத் தம்பதியர், அபூர்வமாகக் காதல்ஜோடி ஓய்வாகக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். கோவிலுக்கு முன்னால் இருக்கும் தெருவில் நகரப் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. இன்று கோவிலுக்கு அருகில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தடை போடப்பட்டிருக்கிறது. எல்லாக் காலத்திலும் மக்கள் கூட்டம் பொங்கி வழிகின்றது. ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மெட்டல் டிடேக்டர், ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய காவலர் என எல்லாப் பக்தர்களும் கண்காணிக்கப்படு கின்றனர். மன அமைதி பெறவும், தனது மனத்துயரத்தை அம்மனிடம் சொல்லி மன ஆறுதல் பெறவும் கோவிலுக்குப் போனது என்பது பழங்கதையாகிவிட்டது. அம்மன் சிலை உட்பட கோவிலே, போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளை நம்பித்தான் உள்ளது.

மதுரையின் சிறப்புகளில் ஒன்று புதுமண்டபம். நூற்றுக் கணக்கான தையல் கலைஞர்களை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமெனில் புதுமண்டபம்தான் செல்ல வேண்டும். மதுரையை நாயக்கமன்னர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்க எழில் மிகு கட்டடம் இன்று முழுக்க வணிக அங்காடியாகி விட்டது. கலை, தொன்மை என்ற கலை ஆர்வலர்களின் முயற்சி வெற்றி பெறும் போது, அக்கட்டடம் மீண்டும் புத்துயிர் பெறும்.

பெரிய பெரிய வெண்ணிறத் தூண்களுடன் திரைப்படக் காட்சிகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ‘நாயக்கர் மஹால்’ என்று அழைக்கப்படும் சிதிலமான அரண்மனையின் எச்சமான கட்டடம் இன்றும் பழங்காலக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலவாசல், கீழவாசல், தெற்குவாசல், வடக்கு வாசல் என நான்கு வாசல்களால் இன்றளவும் குறிப்பிடப்படும் பெயர் முன்னர் மதுரையைச் சுற்றிப் பெரிய கோட்டைச் சுவர்கள் இருந்ததைக் காட்டு கின்றன. மேலவாசல் பகுதியில் இன்றளவும் கோட்டைச் சுவரின் மிச்சம் விறைத்துநின்று பழமையின் தடமாய்க் காட்சியளிக்கின்றது.

எழுபதுகளில் கூட ரீகல் திரையரங்கு முன்புறம், தெற்கு வாசல் மார்க்கெட் போன்ற இடங்களில் குதிரை வண்டிகள் நிறுத்துவதற்கான கூடங்களும், குதிரைகள் தண்ணீர் குடிப் பதற்கான நீளக் கல்தொட்டிகளும் இருந்தன. மதுரைக்குள் நகரப் பேருந்துகள் இயங்கினாலும், ஊருக்குள் சிறிய சந்துகள், தெருக்களில் செல்வதற்குச் சைக்கிள் ரிக்ஷாக் களும், குதிரை வண்டிகளும் பயன்பட்டன. குதிரை வண்டி ஜட்கா என அழைக்கப்பட்டது. ஏழெட்டுப்பேர் திணிக்கப்பட்ட குதிரை வண்டிக்குள், ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டும், உச்சந்தலையினால் வண்டிக் கூரையில் மோதிக் கொண்டும் பயணிப்பது சுவாரசியமான அனுபவம்தான். வண்டி வேகமாக ஓடுவதற்காக, ஓடும் வண்டியின் சக்கர ஆரக்காலில் சாட்டைக் கம்பை விட்டுச் சடசடவெனச் சப்தம் எழுப்புவது குழந்தைகளுக்குக் குதூகலத்தைத் தரும். இரண்டு அல்லது மூவரை ஏற்றிக்கொண்டு உச்சி வெயிலில் ரிக்ஷா பெடலை மிதிக்கும் ரிக்ஷாக்காரரின் உடலுழைப்பு மிகக் கடினமானது. ரிக்ஷாக்களும் ஜட்காக்களும் பரவலாக நிரம்பியிருந்த மதுரைத் தெருக்களில், இன்று ஆட்டோக்கள் பறந்து கொண்டிருக்கின்றன. உச்சமாக Nஷர்-ஆட்டோக்கள்.

எண்பதுகளின் தொடக்கத்தில் நாவலாசிரியர் ப.சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, நாற்பதுகளில் மதுரையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விலை மகளிர் ஸ்தலங்களைப்பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய நாவலான ‘புயலிலே ஒரு தோணி’யில் இடம்பெற்றுள்ள தாசி, விபச்சாரம் நடைபெறும் இடங்கள் பற்றிய சித்திரிப்புகள் யதார்த்தம் என்றும் கூறினார். தாசிகளுடனான உறவு பற்றிய பிரேமையுடன் வாழ்ந்த அன்றைய ஆண்மேலாதிக்கச் சமூகத்தில், பொருட்பெண்டிருக்கான உறவு செழிப்புடன் விளங்கியது. மீனாட்சி ஆட்சி செய்த மதுரைப்பட்டணத்தில், மீனாட்சியம்மாள் கோவிலுக்கருகில் இருந்த சில தெருக்கள் - குறுக்குச் சந்துக்கள் - முழுக்க விபச்சாரம் நடைபெற்றது. “டாபர் மாமாக்கள்” என அழைக்கப்படும் தரகர்களின் மூலம் தாசித்தொழில் பரவலாக நடைபெற்றது. இத்தகைய உறவு களினால் சொத்துக்களைத் தொலைத்த ஆண்களும், சீரழிந்து போன குடும்பங்களின் எண்ணிக்கையும் அளவற்றது.

இளமைக் காலத்தில் உடலை மூலதனமாக்கிப் பொருளீட்டும் பெண்கள் பின்னர் பாலியல் நோயினால் அவதிப்பட்டுச் சரியான மருந்து மின்றி இறந்தவர் எண்ணிக்கை அதிகம். இத்தகைய சமூக அவலம், எழுபதுகளிலும், மதுரை லாட்ஜுகளில் கொடிகட்டிப் பறந்தது. ‘தங்கும் விடுதி-விலைப்பெண்-தரகர்’ என்ற முக்கோணத்தில் பழமையான பரத்தைமைத் தொழில் நடந்தேறியது. ரீகல் டாக்கீஸ் எதிர்ப்புறம், டி.பி.கே.ரோடு, டவுன்ஹால்ரோடு போன்ற பகுதிகளில் இரவு எட்டு மணி யளவில் ‘மாமாக்கள்’ ஆள்தேடி அலைந்தனர். ‘காலேஜ் கேர்ள்ஸ், குடும்பப் பெண், பிராமின்ஸ்’ போன்ற சொற்களைத் தூண்டிலாகப் பயன்படுத்தி வீசப்பட்டதில் பலர் மாட்டியிருக்க வாய்ப்புண்டு. நான்கைந்து நண்பர்கள் சந்தித்தால் ‘டாஸ்மாக்’ போய் மது குடித்;துப் போதையில் மிதப்பது போல, அறுபது களில் நண்பர்கள் கூட்டம் லாட்ஜுகளில் ‘பறவைகள் பலவிதம்’ எனப்பாடிக் களித்தனர். ஒப்பீட்டளவில் ஆண்-பெண் பாலியல் உறவைப் பொறுத்தவரையில் இன்றைய இளைஞர்கள் உத்தமர்கள் என்று நற்சான்று தரலாம்.

இரண்டாயிரமாண்டுப் பழமையான நகரம் பண்பாட்டு ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மதுரை நகரம். தமிழ்த் திரைப்படங்களில் அண்மைக்காலமாக மதுரை என்றால் நீளமானஅரிவாள், டாடா சுமோ கார்கள், வெட்டி வீழ்த்தும் ரவுடித்தனம், பொறுக்கித்தனம், மதுகுடித்து விட்டுச் சலம்புதல், அடிதடி எனப் புனையப்படுவது அபத்த மானது. மீட்டர் வட்டி, கந்துவட்டி, டிஜிட்டல்வட்டி, டிஸ்கோ வட்டி, ரன்னிங் வட்டி எனப்பல்வேறு வட்டிகள் மூலம் கொள்ளையடிக்கும் ஆதிக்க சாதியினரின் வெற்றுச் சவடால் ஒருபுறம் வலுவாக உள்ளது. கக்கூஸ் காண்டிராக்ட், சைக்கிள் ஸ்டாண்ட் காண்டிராக்ட், பார் காண்டிராக்ட் என எடுத்து நடத்தும் சிலரின் பொறுக்கித்தனத்தினால் மதுரை வாசிகள் பாதிக்கப்படுகின்றனர். ‘ஆ..ஊ.’ என்றால் சின்ன விஷயத்துக்காகக்கூட ஆயுதத்தைத்; தூக்குவது மதுரையில் சிறிய அளவில் உள்ளது.

மதுரைக்கு வெளியே 30 மைல் தொலைவில் வாழ்ந்து, விவசாயம் பொய்த்ததினால் மதுரைக்குக் கூலியாட்களாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. இத்தகையோர், லாரிகளில் லோடுமேன்கள், மார்க்கெட்டுகளில் சுமை தூக்குபவர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், தெரு வோரத்தில் கடை வைத்துச் சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் என உருமாறுகின்றனர். மதுரைக்குப் புறத்தே யுள்ள பகுதிகளில் ஓட்டு வீடுகள் அல்லது குடிசைகளில் வாழ்கின்ற பலர் அன்றாடச் செலவுக்குக்கூடக் கந்து வட்டிக் காரர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஒருமுறை அவர்களின் பிடியில் சிக்கிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். லோக்கல் அரசியல்வாதிகள், சண்டியர்களிடம் தற்செயலாகத் தொடர்புகொள்ளும் சிலர் பிரியாணி, பிராந்தி, சிலநூறு ரூபாய்த்தாள்கள் மீது ஆசைப்பட்டு தெருச் சண்டியராக மாறுவதுடன், தங்களை வீரமிக்கவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக ‘ஏப்பை சாப்பை’களைப் போட்டுப் பொது இடங்களில் அடிக்கின்றனர். இத்தகையோர் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களுக்கும் மதுரையைப் பூர்வீகமாகக் கருதிப் பெருமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

மதுரைக்காரர்கள் இயல்பிலே எல்லோருடனும் எளிதில் கலந்து உரையாடும் தன்மையினர். பிறருடன் பேசும்போது எடுத்தெறிந்து பேசுவது போல இருப்பினும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். வெளியே வீராப்பாகப் பேசினாலும், பிறருடன் அனுசரித்துப் போக வேண்டுமென்ற எண்ணமுடையவர்கள். மதுரை நகரம் முழுக்க வியாபாரத்துடன் தொடர்புடையது; தொழிற்சாலைகள் எண்ணிக்கை மிகக்குறைவு. எனவே பொதுப்புத்தியில் சக மனிதர்களுடன் ஒத்திசைந்து வாழ்வது சரியானது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. பல்வேறு சாதியினர் வெவ்வேறு பகுதிகளில் கணிசமாகச் சேர்ந்து வாழும்நிலை இருப்பினும் சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ மதுரையில் இல்லை என்று சொல்ல முடியும். அண்மைக் காலமாக ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிய அடையாளத்தை வெளிச்சம்போட்டுக் காட்ட ‘பிளக்ஸ் போர்டு’ மூலம் முயலுகின்றனர் என்றாலும், மதுரையில் சாதிய வெறுப்பு, மத வெறுப்பு என்பது பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை.

வரலாறு என்பதே புனைவுதான். அதிலும் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் என விவரிக்கும் போதே, அதில் எந்த அளவு உண்மை கலந்திருக்கும் என மனம் யோசிப்பது இயல்பு. பல்வேறுபட்ட பிரிவினர் பல மைல் தொலைவில் ‘மதுரை’ என்ற அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலத்துக்கெனத் தனித்த முத்திரையை உறுதியுடன் குறிக்கமுடியுமா என்பது கேள்விக ;குரியது. எனினும் பொதுப்புத்தியில் ‘மதுரை’ என்ற சொல் உருவாக்கும் புனைவுகள் அளவற்று விரிகின்றன. அக் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கின்றவர் தன்னை மதுரைக் காரராகக் கருதுவது முக்கியமானது. எட்டுவயதுச் சிறுவர், சிறுமி கூட ஐம்பது வயதானவரை ‘அண்ணே’ என்று அழைப்பது மதுரை மண்ணுக்கே உரித்தானது. பொதுவாகப் பெண்கள் பிற ஆண்களை உரிமையுடன் ‘அண்ணே’ என்று அழைக் கின்றனர். அதுபோல ஆண்கள் ‘தங்கச்சி, அக்கா’ என்று சொல்கின்றனர். ‘அக்கா, தங்கச்சி, தம்பி, அண்ணன்’ என்ற உறவுச் சொற்களின் மூலம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகுவது மதுரைக்காரர்களின் தனித்துவம். இச்சொற்களின் மூலம் சகமனிதர்கள் மீதான ப்ரியமும் நேசமும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளிப்படுவது அற்புத மானது அல்லவா? அதுதான் மண்ணின் மணம்.

Pin It